நாட்டுப்புற விளையாட்டுகள் என்பது தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் விளையாட்டுகள் ஆகும். இவ்விளையாட்டுகளில் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளும், அவர்தம் வாழ்வியலும், பழக்க வழக்கங்களும் பொதிந்திருக்கும். காரணம் விளையாட்டுக்கள் என்பவை பண்பாட்டின் அடையாளமாக அமைபவை ஆகும். இவை சமூகத்தின் ஒழுக்க நெறியினை வளர்க்கின்றது. தலைமை ஏற்கும் தனித்துவப் பண்பினைத் தருகின்றது. அத்தகைய நாட்டுப்புற விளையாட்டுக்கள் நிலத்திற்கு நிலம் மாறுபடுகின்றது. அவ்வவ் பகுதி மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ப இவ்விளையாட்டுக்கள் தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கும். அம்மக்களின் சூழலியல் சார்ந்து அவர்களின் உடலினை உறுதிசெய்யும் பாங்குடன் அமையும் மொத்தத்தில் சமூகக் கட்டமைப்புக்கு உட்பட்டும், செய்யும் தொழில், உழைப்பின் தன்மை, வாழும் பகுதியின் தட்ப வெட்ப நிலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றைச் சார்ந்தே இவ்விளையாட்டுகள் தோற்றம் பெற்றுள்ளது. வளர்ந்துள்ளன. இவ்விளையாட்டுகள் இவ்விளையாட்டுகள் மனிதனின் உடலினை எவ்வாறு உறுதியும் செய்யும் வகையில் அமைகின்றன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.உடல் வலிமையும் மன வலிமையும்
உடலும் மனமும் ஒரு சேர வலிமையாகத் திகழ வேண்டுமெனில் உடற்பயிற்சி அவசியம். மரத்திற்கு ஆணிவேர் முக்கியமாக இருப்பது போல் மனிதனுக்கு உடற்பயிற்சி முக்கியமானது ஆகும். உடல் உரமும் உள்ள உறுதியும் கொண்ட இளைஞருக்குத்தான் சங்க காலத்தில் தன்னுடைய மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளனர் தந்தையர். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாது என்பதாலேயே முன்னோர்கள் இவ்வுடற்பயிற்சியினை விளையாட்டாக்கினர். இந்த விளையாட்டுக்களின் வழி உடல் வலிமையும் மன வலிமையும் அதிகரிக்கும். உடற்கல்வியும், உடற்பயிற்சியும், விளையாட்டுக்களும் வெவ்வேறல்ல. ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகும்.
புறநானூற்றுப் புலவன் ஒருவன் முதுமைக் காலத்தில் தனது இளமைக் கால நினைவுகளை எண்ணி, யாக்கை நிலையாமை குறித்துப் பாடுகிறார். இதனை,
”இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே” 1
என்ற பாடல் குறிப்பிடுகின்றது. இதில் மகளிர் ஈர மண்ணில் செய்த பாவைக்குப் பூமாலையிட்டுப் பின் குளத்தில் விளையாடிக் குளித்தனர். அப்போது அவர்களோடு அவனும் விளையாடினான். அவர்களின் மதிப்பைப் பெறுவதற்காக அத்துறையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மருதமரத்தில் நீரோரமாகச் சாய்ந்திருந்த கிளையில் ஏறி, கரையில் உள்ளவர் வியக்கும்படி நீரலை பெரிதாகிக் கரையில் படும்படியும், விரிவான, ஆழமான குட்டையில் ‘துடும்’ என்னும் ஓசை உண்டாகும்படி நீரில் பாய்ந்து, மூழ்கி, ஆழத்திலிருந்த மண்ணை எடுத்துக்கொண்டு மேலே வந்து கொடுத்தான். அத்தகைய தனது இளமையானது இப்போது எங்கே போய்விட்டது? என்று இரங்குகிறான். இதில் பாவை விளையாட்டு, தண்ணீரில் மூழ்குதல், மூச்சு அடக்கி மூழ்குதல் போன்ற விளையாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. யாக்கை நிலையாமையைக் குறிக்க எண்ணிய புலவருக்கு இவ்விளையாட்டுக்கள் நினைவு வந்தது என்றால் அதுதான் உடலும், விளையாட்டும் இணைபிரியாதது என்பது தெளிவாகின்றது.
விளையாட்டு என்பது வெறும் உடல்நலத்திற்கானது மட்டுமன்று. விளையாடுதல் என்பது உடலின் உறுதியும், உயரமும், நல்ல உடல் தோற்றத்தையும் வடிவத்தையும் பெறமுடியும் என்பதற்காக மட்டும் ஏற்பட்டதன்று. நோயின்றியும் ஆரோக்கியமான வாழ்வும் வாழ்வதற்காகவும் ஏற்பட்டதாகும். இவ்விளையாட்டுக்கள் உடலுக்கு வேண்டிய சரியான இயக்கத்தையும் சுறுசுறுப்பையும் அளிக்கின்றது. உடல் ஆரோக்கியம் சிதைந்தால் உயிர் உடலில் இருக்காது என்பதை அனைவரும் மறந்துவிடுகின்றனர். உடல் பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. அதனால் திருமூலர்,
”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”2
என்று குறிப்பிட்டுள்ளார்.
”உடலினை உறுதி செய்” 3 என்றார் பாரதியார். நல்ல உறக்கத்தையும், சீரான இரத்த ஓட்டத்தையும், இரத்தத்தை நன்கு சுத்திகரிப்பும் செய்கின்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நல்ல நோயற்ற வாழ்வினை வழங்குகின்றது. உடலின் செயல்திறனைச் சீராக்கி உடலில் உள்ள குறைபாடுகளைக் களைகின்றது. வெற்றியோ? தோல்வியோ? எல்லாவற்றையும் சமமாக நினைக்கும் மனப்பக்குவத்தை வழங்குகின்றது. உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். கண் பார்வை இழந்தவர்களால் விளையாட இயலாது. பார்வைத் திறன் உள்ளவர்களே அனைத்து வகையான விளையாட்டுக்களையும் விளையாட முடியும். கண்ணாமூச்சி, தொட்டுவிளையாடுதல் போன்ற விளையாட்டுக்களில் கண்கள் துணியால் கட்டப்படுகின்றன. அல்லது கைகளால் பொத்தப்படுகின்றன. இவ்விளையாட்டுக்களின் அடிப்படை கண்டுபிடித்தல், கண்களை மூடுதல், கண்களைக் கட்டிவிடுதல் என்பவை கண்களுக்குரிய முக்கிய இயக்கங்களாகும். இதன் வழி கண்களில் செயல்திறன் உயர்கின்றது.
விளையாட்டுக்களில் மிக முக்கிய பங்காற்றுவதும் மிகுதியான விளையாட்டுக்களில் பங்குபெறுவதும் கைகள் தான். கைகளின் இயக்கத்தினால்தான் மிகுதியான விளையாட்டுக்கள் விளையாடப்பெறுகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தாய்மார்கள் குழந்தைகளுக்கு ”கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு” என்று சிறு வயதிலேயே விளையாடக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
சிறுமியர்களும் பெண்களும் விளையாடும் ”தட்டாங்கல்” என்னும் விளையாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாகக் கருதப்பெறுகின்றது. கற்களைக் கீழே வீசுதல், ஒரு கல்லை மட்டும் மேலே எடுத்தல், பிறிதொரு கல்லை அசையாமல் எடுத்தல், மேலேவிட்ட கல் கீழே விழுவதற்கு முன், கீழே இருக்கும் கற்களைக் கையில் எடுத்தல், கல்லைச் சொடுக்குதல் என இவ்விளையாட்டு முழுமையும் கைக்கும் மனத்தின் கவனத்திற்கும் வேலை கொடுக்கின்றது. இதனால் கைகளின் இயக்கம் வேகமெடுப்பதொடு மனதினை ஒருநிலைப் படுத்துதல் என்னும் உயரிய பண்பினைக் கற்றுக்கொடுக்கின்றது. கட்டிப்பிடித்தல், கைகோத்தல், கொட்டுதல், சுத்துதல் எனப் பல விளையாட்டுக்களில் கைககளின் இயக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஓடுவதும், தாண்டுவதும், குதிப்பதும், உதைப்பதும், ஊஞ்சலில் ஆடுவதும் கால்களுக்கு வளர்ச்சியையும், வலிமையையும் கொடுக்கும். இழுப்பது, தொங்குதல், தள்ளுதல், பந்தினைக் கையால் தடுத்தல், பந்தைத் துடுப்பால் அடித்தல், படகினைத் துடுப்பால் தள்ளுதல் போன்றவை கைகளுக்கு வலிமையும் பயிற்சியும் அளிக்கும். கயிற்றாட்டம், கயிற்றாட்ட ஓட்டம் போன்ற சிறுமியர் விளையாடும் விளையாட்டுக்களால் உடல் முழுவதும் நன்கு இயங்கி உடல் வளர்ச்சியை அளிக்கின்றது. ஈட்டி எறிதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களால் கண்பார்வைத் திறன் அதிகரிக்கின்றது. வட்டு எறிதல், குண்டு வீசுதல், எடை தூக்குதல் போன்ற ஆட்டங்களால் கைகளும் தோள்களும், மார்பும் விரிவடைகின்றது. கால்களிலும், தொடைகளிலும் உள்ள தசைகள் பலம் பெறுகின்றன. ஓட்டமும், நீச்சலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்கின்றது. உயரம் தாண்டுவதின் வழி கால், இடுப்பு முதலிய உறுப்புகள் விரைந்து செயல்படுகின்றது.
காது கேட்கும் திறன் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் இதனைக் கண்கட்டி விளையாட்டில் முக்கியக் கூறாகக் கொண்டுள்ளனர். துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு இருக்கும் போது பிறர் ஓடுவதையும், ஒளிவதையும் கவனிப்பதற்குக் காதுதான் முக்கிய உறுப்பாகச் செயல்படுகின்றது. ஓடுபவர்களின் காலடி ஓசைகள், பெண் குழந்தைகளின் கொலுசின் ஓசை, சிரிப்பு, ஓடுபவர்களின் திசை ஆகியவற்றை அறிந்துகொள்ள காதுகள் உதவுகின்றன. இதன்வழி காதின் இயக்கம் நன்கு செயல்பட வழிவகை செய்கின்றது.
சிறுவர்களும், ஆண்களும் விளையாடும் கோலிக் குண்டு விளையாட்டில் கைகளின் இயக்கமும் சிந்தனையும் செம்மையுறுகின்றது. இவ்விளையாட்டில் குண்டினை அடிப்பதற்கு விரல்கள் நன்கு வளைந்து கொடுக்க வேண்டும். தான் அடிக்கப்போகும் குண்டின் தூரம், அதன் இருப்பிடம் ஆகியவற்றைக் கவனித்து அடிக்கவேண்டும். இதன்வழி கைகளுக்கும், விரல்களுக்கும், மனத்திற்கும் பயிற்சி கிடைக்கின்றது. அஃதொடு அல்லாமல் தோற்றவர் தனது முட்டிக் கைகொண்டு அந்தக் கோலிக் குண்டினைத் தள்ளிவிட வேண்டும் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
வழுக்கப் பனை விளையாட்டு வெற்றி பெற நல்ல உடல் பலம் பெற்றவர்களால் மட்டுமே சாத்தியம். பலம் நிறைந்த சதை குறைவாக உள்ளவர்கள் இதில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். இவ்விளையாட்டினால் கை, கால்களில் உள்ள தசைகள் அதிக பலம் பெறும். உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் வலுவாகும். உடலில் உள்ளே உள்ள இதயம், நுரையீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்றவையும் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டத்தினைச் சீராக்குகின்றது. மனத்திடமும், நம்பிக்கையும் தடைகளைக் கடந்து வெற்றி பெறுகின்ற எண்ணத்தினையும் இவ்விளையாட்டு தருகின்றது. இன்றைய இளைஞர் இவ்விளையாட்டினை விளையாடுவது மிகுந்த சிரமம். காரணம் இன்றைய வாழ்க்கை முறை வாழும் இளைஞர்களுக்கு உடலில் பலம் இருக்காது.
சாதித் தொழிலும் விளையாட்டுக்களும்
பல்வேறு சாதிகள் தொடர்ச்சியாக ஒரே விதமான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. அத்தகைய சில சாதிகளின் தொழில்கள் அச்சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளால் விளையாட்டுக்களாகவும் விளையாடுகின்றனர். இது அவர்களின் வாழ்வியலோடு பொருந்தியும் செல்கிறது. அவ்வகையில் ஏர் ஓட்டுதல், குள்ளப்புட்டி செய்தல் (இது சிம்புக் குறவர்களின் தொழில்), மீன் பிடித்தல், எலி அணி பிடித்தல், சிண்டுவில் கட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் இவ்வகையில் அமைவனவாகும். இவ்விளையாட்டுகள் அவர்களின் தொழில் சார்ந்து அமைந்தாலும் பிற்கால வாழ்க்கையில் அவர்களின் உடலினைத் தயார் செய்யவும், தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.
இவ்வாறு விளையாட்டுகள் மனிதர்களின் உடலினையும் உள்ளத்தினையும் உறுதிசெய்வதாக அமைகின்றது. அவர்களின் பிற்கால நிறைவாழ்விற்கு உடலினைத் தயார்செய்கிறது.
சான்றெண் விளக்கம்
1. புறநானூறு., 243
2. திருமந்திரம்.,
3. பாரதியார் கவிதைகள்., புதிய ஆத்திச்சூடி
துணைநூற் பட்டியல்
1. இராமநாதன். ஆறு., நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1982
2. காந்தி. க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113, 2003
3. சக்திவேல், சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108, 2001
4. தேவநேயன். ஞா., தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், கழக வெளியீடு, சென்னை, 1962
5. பாலசுப்பிரமணியன், இரா., தமிழர் நாட்டு விளையாட்டுக்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1980
கட்டுரையாளர்கள்:
கி.செந்தில்குமார், பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், யாதவர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை - 14
&
முனைவர் எ.பால்சாமி, இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், யாதவர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை – 14.