periyar 281தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின் போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப்பனர்களின் தாசானுதாசராய் இருந்தவருமான திரு. முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் ஐயங்காரும் மற்றும் நிர்வாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி ஆர்.சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் நிர்வாக சபையில் ராஜீனாமா செய்து விட்டார்கள்.

காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில் கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆள்கள்தான் அதில் இருக்க முடிந்தது.

அதாவது சட்டசபை மந்திரி முதலிய ஸ்தானங்களுக்கு அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது.

இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும் படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப் பட்ட ஆள்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலேயே காங்கிரசை பார்ப்பனர்கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜீனாமா கொடுத்து ஓடுகின்ற ஆள்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகு வீரத்துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர்மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரஸ்தாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன வென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகமும் தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்றுவதுமேதான் இந்த பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசீய லட்சியம் என்பதையும் அதற்கு வழி இருந்தால் தான் பூரண சுயேச்சையில் கலந்திருப்பார்கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களை குலாம் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒரு சமயம் ஜெயிலுக்கு போக வேண்டிய தாயிருந்தால் இராஜினாமா கொடுத்து விட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்பதையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.03.1930)

Pin It