கருநாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் நிலையில், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் ஆணைய உத்தரவை செயல்படுத்த கருநாடக அரசுக்கு நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.
வழக்கம் போல் கருநாடக அரசு தங்களுக்கே தண்ணீர் இல்லை என்று தன்பாட்டுக்கு ஒரு கணக்கைச் சொல்லி வந்தது. ஆனால் உண்மைத் தகவல் அறியாமலா ஆணையம் 5000 கனஅடி நீரை 15 நாள்களுக்கு திறக்க உத்தரவிட்டு இருக்கும்? ஆனாலும் கருநாடக அரசு தண்ணீர் தராமல் இழுத்தடிக்க மேலும் முயற்சிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
காவிரியில் நீர் செல்லும் நாள்களை விட, வறண்ட காவிரியை காணும் நாள்களே கூடுதல்.
எப்பொழுது தொடங்கியது காவிரிச் சிக்கல்? பல நிகழ்வுகள் இதற்கு சுட்டிக் காட்டப்பட்டாலும், மற்ற தென்னிந்திய ஆறுகளுக்கு வராத சிக்கல் காவிரிக்கு மட்டும் வந்ததுள்ளது. எப்போது பார்ப்பன, நிலவுடைமை ஏகபோக அதிகாரம் முறிக்கப்பட்டதோ, உழுவோருக்கு நிலம் சொந்தம் ஆனதோ அதுமுதல் இச்சிக்கல் இருந்து வருகின்றது.
1970களில் கலைஞர் ஆட்சியில் தான் ஏழைகளுக்கு எல்லாம் நிலம் சொந்தமானது. அப்போது தொடங்கிய காவிரிச் சிக்கல் இன்று வரை நீடிக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் நில உரிமை பெற்றபின், இப்பகுதியின் நீர் உரிமை பறிபோனது.
ஒரு ஆற்றின் முதல் உரிமை அதன் கடைமடைப் பகுதிக்குத் தான் என்பது உலகளாவிய விதி. அதை மதித்து பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு நீர்ப் பங்கீடு செய்கிறது இந்திய ஒன்றியம்.
அதே வேளையில் உள்நாட்டின் உள்ளேயே இருக்கும் டெல்டா பகுதியின் உரிமையை ஏன் மதிப்பதில்லை?
நீர்ப் பங்கீட்டில் கருநாடகம் சிக்கல் ஏற்படுத்துகிறது என்பதை விட, காவிரி ஆற்றில் உரிமை கோருவதையே சிக்கல் ஆக்கிவிட்டது அது.
தமிழ்நாட்டிற்கு 160 டிஎம்சி தண்ணீரைக் கருநாடகம் கொடுக்க வேண்டும். ஆனால் தங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் தான் இருக்கிறது என்று நாடகம் ஆடுகிறது அது.
தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், டில்லி காவிரி ஒழுங்காற்றுக் குழு, ஆணையம் என்று ஒவ்வொரு முறையும் போராடி நீரைப் பெற்று வருகிறார். சிலவேளைகளில் நீதிமன்றத்தையும் நாட வேண்டியுள்ளது.
இரண்டு மாநிலங்கள் இப்படி நீருக்காகப் போராடிக் கொண்டு இருப்பது தீர்வை நோக்கிச் செல்லாது.
இரு மாநிலங்களிலும் இருப்பவர்கள் விவசாயிகள். நீர் அவர்களுக்கு ஆதாரம்.
நிரந்தரத் தீர்வு இன்னமும் கானல் நீராக அல்லவா இருக்கிறது! ஆனாலும் தீர்வு கண்டாக வேண்டும்! அதற்காகத் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது!
- மதிவாணன்