கீற்றில் தேட...

கொரோனா எனும் தொற்று நோய் உலகெங்கிலும் மனிதர்கள் வழியாகப் பரவி அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட வல்லரசுகளையே ஆட்டிப் படைக்கிறது. மனிதர்களைக் காவு கொள்கிறது. இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதாக தமிழக ஊடகங்களிலும் ஏடுகளிலும் செய்திகள் வெளிவருகின்றன. இந்தியாவிலும் கொரோனா எனும் தொற்றுநோய் அனைத்து தேசிய இனங்களிடையிலும் (அனைத்து மாநிலங்களிலும்) பரவி வருகிறது. இதனால் 20. 3. 2020 ல் ஒன்றிய அரசு ஊடரங்கு அறிவிப்பு அறிவித்தது. மாநில அரசுகளும் அறிவித்தன. அதன் பின் மாநில அரசுகள் நடந்து கொள்ளும் விதம் வெறும் சமூக விலகல், ஊடரங்கு மூலம் மக்களை வீட்டிலிருக்க சொல்லியிருப்பதுதான். இதனால் ஏழை எளிய அன்றாடங்காய்ச்சிகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அலைகுடிகள், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்போர், பிச்சைக்காரர்கள் அனைத்து மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள் .

போதுமான துயர்தணிப்பு உதவிகள், பண உதவிகள், குடிநீர் , உணவின்றி பட்டினிச் சாவு பெருகி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது . இயற்கை எழிலுடன் அமைந்துள்ள அழகர்கோவிலில் குரங்குகள் அதிகம். மனிதர்கள் செல்வது தடைப்பட்டதால் ஏராளமான குரங்குகள் உணவின்றி இறந்து போகின்றன. இயற்கை மட்டும் மனிதர்களின்றித் தற்காத்துக்கொண்டு புத்துயிர் பெற்று வருகிறது. ஆறுகள், ஏரிகள், அருவிகள், கடல், இயற்கைப் பேரருவிகள் தூய்மை அடைந்து வருகின்றன. புகையற்ற நஞ்சில்லாக் காற்றும் கிடைக்கிறது. விலங்குகள் சுதந்திரமாக உலகெங்கிலும் நகருக்குள் நடை போடுகின்றன.

இந்தியா பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த காலம், அதற்கு முன்னர் டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பின் காலம் முதற்கொண்டே தொற்று நோய்கள் மக்களையும், படையெடுத்து வந்தவர்களையும் பாதித்துள்ளன. ஏராளமான மாந்த உயிர்கள் பறிபோயுள்ளன. போர்ச்சுகீசியர்கள் 1510இல் நுழைந்து வணிகம் தொடங்கிய போதிருந்தே இந்தியாவில் தொற்றுநோய் இறப்புகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்ந்தன. காசநோய், மலேரியா, காலரா, பெரியம்மை, இன்புளுவென்சா, டைபாய்டு போன்ற நோய்கள் அதிகம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் இல்லாத நோய்கள் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு வந்து, அவர்கள் ஏராளமாய் இறந்து போனார்கள். இந்நாட்டில் 19ஆம் நூற்றாண்டில் பெரியம்மை, காலரா வெகுவாக மக்களை பாதித்தன. ஊட்டச்சத்து இல்லாமை, அறியாமை, மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றால் இறப்பு எண்ணிக்கை கூடியது . காலராவைப் பொறுத்த அளவில் நோய் பரவலானதற்கும் ஏழை எளிய மக்கள் மடிந்ததற்கும் பிரித்தானியக் காலனி அரசே காரணம். தானியங்களைக் கொள்ளையடித்துச் சென்றதால் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே நோயும் ஏற்பட்டது . மேலும் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவில் அதிகாரம் செய்ய வந்த பிரித்தானியருக்கும் காலரா முதலான நோய்கள் வந்தன.

தமிழகத்தை பொறுத்த வரை அம்மை நோய் மாரியம்மனின் கோபத்தால் வருவதாக இன்றளவும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் . மாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்து கொண்டு மா விளக்கு ஏற்றுவது , மதுரை மாரியம்மன் கோவிலில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாரியம்மன் கோவில்களில் நடைபெறுகிறது. காலனியாதிக்கக் காலத்திலும் சாதியப் பாகுபாடு என்பது மதக் கொள்கையாக இருந்தது. இதனால் ஒடுக்குண்ட மக்கள் மற்றவர்களைக் காட்டிலும் தொற்றுநோய்களால் கூடுதலாகத் துயருற்றனர்.

பம்பாய் (இன்றய மும்பை) மாகாணத்தில் 19ஆம் நூற்றாண்டுக் கடைசியில் பபோனிக் பிளேக் எனும் தொற்றுநோய் பரவியது. இதன் காரணமாக 1897ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் சட்டம் (Epidemics Act, 1897) கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தின்படி, தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இச்சட்டத்தை மதிக்காமல் நடப்பவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188இன் படி தண்டிக்கப்படுவார்கள். இந்தச் சட்டம் 123 ஆண்டு காலமாக இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. காலனி ஆதிக்கக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் 123 ஆண்டுகளுக்குப் பின்னும் அப்படியே உள்ளது. திருத்தங்களோ புதிய சட்டமோ இயற்றப்படவில்லை அன்றைய கால கட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் தனது கேசரி பத்திரிகையில் இச்சட்டம் குறித்துக் கட்டுரை எழுதியதற்காக அன்றைய அரசால் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பழமையான 1897 தொற்று நோய்கள் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் இப்போது இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் முழு அடைப்பை அறிவித்துள்ளன. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டற்ற அதிகாரங்கள் வழங்கும் இந்தச் சட்டத்தில் (1) மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிவகை ஏதுமில்லை; (2) நோயாளிகளின் உரிமைகளும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களுக்கான சிகிச்சை, மருந்து, உணவு, ஊட்டச்சத்து, பாதுகாப்பான தனிமை, சிகிச்சை முடிந்த பிறகான பேணுகை ஆகியவற்றுக்கான சட்ட வழிவகை ஏதுமில்லை. (3) தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நோக்குடன் நோயாளிகள் அல்லாதோரைத் தடுத்து வைக்கும் போது அவர்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்படவில்லை, ஆக, இந்த மூன்று பிரிவினருக்குமான உரிமைகளை அங்கீகரிக்காமல் அரசுக்கு மட்டும் கட்டற்ற அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் சனநாயகத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் புறம்பானது. தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு இது உதவாது.

எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நல்வாழ்வுப் பணியாளர்கள், நோயுற்றவர்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் பாதிப்புற்றவர்கள் ஆகிய மூன்று தரப்பினரின் உரிமைகளையும் அங்கீகரித்துக் காக்கும் வகையில் ஒரு புதிய ”தொற்றுநோய்கள் சட்டம், 2020” இந்திய அரசும், மாநில அரசும் இயற்ற வேண்டும்.

மேலும், நல்வாழ்வுக்கான உரிமையை (Right to Health) அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்க்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவையும் உள்ளது. கல்வியுரிமைச் சட்டம் போல் நல்வாழ்வுரிமைச் சட்டமும் இயற்ற வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நல்வாழ்வு என்பது நோய்வாய்ப்படும் போது மருந்து உட்கொள்வது அல்லது சிகிச்சை பெறுவது என்று மட்டும் புரிந்து கொள்ளப்படுமானால் அது முழுமையற்ற புரிதல் ஆகும். ஊட்டந்தரும் நல்ல உணவும் நல்ல நீரும் நல்ல காற்றும் மாசற்ற சூழலும் இல்லாமல் நல்வாழ்வு என்பது மெய்ப்படாது. இத்தகைய நல்வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொரு சேமநல அரசின் கடமையும் ஆகும். வேண்டும் கொரோனாவை ஒட்டி உலகெங்கும் இந்தப் புரிதல் வளர்ந்து வருகிறது.

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு”

என்பது குறள்நெறி. நோய்த் தீர்ப்பதை விடவும் நோய்த் தடுப்பே மேல் (Prevention is better than cure) என்பது நல்வாழ்வின் முதற்கட்டளை.

      இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாம் அட்டவணையின் படி நல்வாழ்வு என்பது மாநில அதிகாரமாகும். கொரோனாவைச் சாக்கிட்டு மாநில உரிமைகளில் குறுக்கிடுவதும், பிரதமர் பெயரால் தனியாக நிதி திரட்டுவதும் நமக்கு வரவிருக்கும் ஆபத்துகளின் முன்னறிவிப்பே ஆகும். ஜனநாயகமும் தன்னாட்சியும் இல்லையேல் நல்வாழ்வுரிமை என்பது ஏட்டுச்சுரைக்காய் ஆகி விடும். நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த நல்வாழ்வுக் கட்டமைப்புக்கு ஏற்கெனவே வேட்டு வைத்துக் கொண்டிருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நீட் போலவே தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) சட்டமும் மாநில உரிமைக்கும் சமூக நீதிக்கும் எதிரான ஒன்று. இந்த சட்டத்தையும் நீக்கக் கோரி நாம் போராட வேண்டிய தேவை உள்ளது.

ஆக, தமிழக மக்களின் நல்வாழ்வுக்குக் கேடு செய்யும் ஏற்பாடுகளை எதிர்த்தும், புதிய தொற்றுநோய்கள் சட்டம், நல்வாழ்வுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்காகவும் போராட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஜனநாயக ஆற்றல்கள், தமிழ்த் தேசிய ஆற்றல்கள், பிற மக்கள் நல இயக்கங்கள் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்.

நா.கதிர்வேல், வழக்கறிஞர்