The Federation of American Societies for Experimental Biology (FASEB) தன்னுடைய டிசம்பர் 2009 இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆண்களின் இனப்பெருக்கத்திறனை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் இப்போது சாத்தியமாகி உள்ளதாக தெரிவிக்கிறது. 1960ல் இருந்து பெண்களுக்கு மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த கருத்தடை மாத்திரைகள் இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்குமாம். ஆண்களுக்கான விந்தகங்களில் ஆண்மை ஊக்க ஹார்மோன்கள் எங்கு, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் விளைவு இது. இந்த ஆய்வுகளின் பயனாக ஆண்களின் இனப்பெருக்கத் திறனை வேண்டும்போது திறந்து மூட முடியும்.

அனைத்து ஆய்வுகளும் இப்போது எலிகளில் நடத்தப்பட்டிருந்தாலும், மனிதர்கள் உட்பட்ட பாலூட்டிகளுக்கு இந்த முடிவுகள் பொருந்தக்கூடியதே. ஆண்களுக்கான கருத்தடை மருந்துகள் மாத்திரைகள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சம். விந்தணு எண்ணிக்கை குறைபாடு காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இந்த ஆய்வுகள் பயன்படுவதாக டாக்டர் மைக்கேல் வெல்ஷ் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். இவர் இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் இயங்கும் தி குவீன் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இனப்பெருக்க உயிரியல் துறை விஞ்ஞானியாவார்.

இந்த ஆய்விற்கு பயன்படுத்திய எலிகளை டாக்டர் வெல்ஷ் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரித்துக்கொண்டனர். முதல் குழுவைச்சேர்ந்த எலிகள் இயல்பானவை. இரண்டாவது குழுவைச்சேர்ந்த எலிகளின் விந்தகங்களில் peritubular myoid எனப்படும் தசையொத்த பொருளில் இருந்து ஜீன்கள் அகற்றப்பட்டிருந்தன. இந்த ஜீன்கள் ஆண்மை ஊக்க ஏற்பிகளை இயங்கச்செய்யக்கூடியவை. இதன்காரணமாக இரண்டாவது குழுவைச் சேர்ந்த எலிகளுக்கு விந்து உற்பத்தி குறைந்து இனப்பெருக்கம் தடைப்பட்டது.

1960ல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் புழக்கத்திற்கு வந்தன. அப்போதே, ஆண்களுக்கும் இதுபோன்ற மாத்திரைகள் வேண்டும் என்று பெண்கள் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டது. கடினமான முயற்சிக்குப்பிறகு பெண்களின் ஆவல் இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை உருவாக்குவது மட்டுமே இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தாலும்கூட, ஆண்மைக்குறைவின் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த ஆய்வுகள் பயன்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/11/091130112419.htm

தகவல்: மு.குருமூர்த்தி

 

Pin It