பொதுவாக நாம் சாதியச் சமூகங்களில் பார்க்கும் பொழுது சாதியை மேல்சாதி, கீழ்சாதி, தீண்டத்தகாத சாதி, கலப்புச்சாதி என பலவாறு பிரித்து வகைப்படுத்துவர். இதைத் தவிர இன்னும் நாம் சமூகத்தில் புழங்கும் சில சொற்கள் கூட சாதியோடு தொடர்பில் இருப்பதும் பலரும் அறியாமல் இருக்கலாம். பொதுவாக நம் சமூகத்தில் புழங்கும் வசைச் சொற்கள் யாவும் பெண்களை (உடலுறுப்பை) இழிவுபடுத்தல் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரை மையப்படுத்தியே புழங்குவதைக் காணமுடியும். குறிப்பாக பெண்களை மிகவும் இழிவாகப் பேசும் தேவடியாள், வேசியர், தாசி, தேவதாசிஞ் உள்ளிட்ட சொற்களும் உண்டு.
சண்டாளர்: சண்டாளர் என்ற இச்சொல் தாழ்ந்த சாதியரைக் கூடத் தீட்டுப்படுத்துபவன் என்ற பொருளில் ஒரு குறிப்பிட்ட சாதியாரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சாதிகள் எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதியாக கருதப்படுபவர்கள் சாண்டாளர்கள். மனு இவர்களை சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்கிறது. மேலும் இவர்கள் ஊரின் குடியிருப்புக்கு வெளியே இருக்கவேண்டும். அவர்கள் முழுமையாக உள்ள பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது. நாய்களும், கழுதைகளும் மட்டுமே இவர்களுடைய செல்வம். நோயாளிகளின் மேலாடையே அவர்களுடைய உடை. உடைந்த பானைகளே அவர்கள் உண்ணும் கலம். துருப்பிடித்த நகையே அவர்களின் அணிகலன். தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்தல் மற்றும் சமுதாய, சமயப் பொறுப்பினை உணர்ந்த எந்த மனிதனும் அவர்களோடு எத்தகைய உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது.
கேப்மாரி: ஆந்திராவிலிருந்து தென்னார்க்காடு மாவட்டத்தில் குடியேறி களவுத் தொழிலில் ஈடுபடுவோரைக் குறிக்கும் சொல். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருவள்ளூரே இவர்களின் தலைமையிடமாக இருந்துள்ளது. எனினும் பரங்கிப்பேட்டைக்கு அருகேயுள்ள மாரியாங்குப்பத்திலும் பிரெஞ்சுப் பகுதியில் உள்ள குனிசம்பேட்டையிலும் பரவலாக வாழ்கின்றனர். தொங்க தாசரிகளைப் போலவே புகைவண்டிகள், திருவிழாக் கூட்டங்கள் ஆகிய இடங்களில் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர். வீட்டில் தெலுங்கைப் பேசும் இவர்கள் தங்களை அழகிரி கேப்புமாரிகள் என அழைத்துக் கொள்கின்றனர். 1911இல் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலான போது இவர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள். இன்றும் தமிழக அரசின் சீர்மரபினர் பட்டியலில் இவர்களது பெயரும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
லம்பாடி: நிலையற்று திரிந்து வித்தைகள் செய்வித்து பிழைக்கும் நாடோடிச் சமூகம். இவர்கள் லம்பாடி, பிரிஞ்சாரி, அல்லது பஞ்சாரி, பைய்பாரி, சுகாலி அல்லது சுக்காலி போன்ற பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றனர். வடஆற்காடு மாவட்டக் கையேடு, பஞ்சாரிகள் இந்தியாவின் மேற்கு தெற்குப் பகுதிகளில் அதாவது காஷ்மீர் முதல் சென்னை மாநிலம் வரை சுமைகளை தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடும் ஒரு வகுப்பார் என்கிறது. பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த லம்பாடிகளே வடக்கேயிருந்து முதன்முதலாக தெற்கே முகலாயப் படையினரோடு கூட அவர்களுக்கான உணவுப் பொருட்களைச் சுமந்து வரும் பொறுப்பினை ஏற்று வந்தவர்கள். 1813இல் காப்டன் ஜெ. பிரிக்ஸ் இவர்களைப் பற்றி எழுதும்போது, தக்காணத்தில் கலங்கள் செல்லக் கூடிய ஆறுகளோ, சக்கரம் பூட்டிய வண்டிகள் செல்லக் கூடிய சாலைகளோ இல்லாத காரணத்தால் பஞ்சாரிகள் உடைமையான பொதி எருதுகளின் உதவியாலேயே பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது இவர்களின் பொறுப்பாகவே இருந்தது.
மொண்டி: மொண்டி என்பவர்கள் தங்களைத் தங்களாகவே கல்லால் அடித்து வருத்திக் கொள்பவர்கள். மொண்டிகள் தமிழ் பேசுபவர்கள். தெலுங்கு பேசும் பந்தர்களை ஒத்தவர்கள். பந்த என்பது பிடிவாதமும் தந்திரமும் மிக்கவனைக் குறிக்கும் சொல். இந்த இரவலர்கள் சில நேரங்களில் தங்களுடன் கல்லினைக் கொண்டு செல்வார்கள். பிச்சை ஏதும் இடவில்லையாயின் கல்லினைக் கொண்டு தங்கள் மண்டையினை உடைத்துக் கொள்ளப் போவதாக அச்சுறுத்துவர்கள். நன்கு வளர்ந்தவர்களாகவும் உடல் வலிமை வாய்ந்தவர்களாகவும் காணப்படும் இவர்கள் மிகவும் குறைந்த உடையணிந்து, கிட்டத்தட்ட பிறந்த மேனியராகவே திரிவர். இவர்கள் தலைமுடி சலங்கையினைக் கட்டிக் கொள்வதால் சிக்குடையதாக நீண்டு தொங்கும். கூடவே கையில் கத்தியினை ஏந்தியபடி இடத்தோளில் ஒரு கல்லினையும் சுமந்தபடி திரிவர்.
படவா: நாவிதர் சமூகத்தினரின் உட்பிரிவுகளில் ஒன்று. சாதியப் படிநிலைகளில் உயர் சாதியினராகக் கருதப்படுபவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சிகையை மழித்து சுத்தம் செய்பவர்களின் பெயர்.
முட்டாள்: கோயில் திருவிழாவில் சப்பரம் தூக்க மட்டுமே தனியே சிலர் உண்டு. அவர்கள் கோவிலிலேயே உண்டு உறங்குவர். நகரும் சப்பரத்தை முட்டுக் கொடுத்து நிறுத்துவது மட்டுமே இவர்களது வேலை. இவர்களைத்தான் முட்டு+ஆள் = முட்டாள் எனக் கூறுவர். இன்னும் சொல்லப் போனால் கேரளத்தின் மலபார் மற்றும் திருவாங்கூர் பகுதியில் வாழும் மாரார் எனும் சேவைச் சாதியினர் (நாவிதர்) காலப்போக்கில் கோயில் பணியாளர்களாக (முரசடித்தல் போன்ற) மாறி தங்களை சாதிப் படிநிலையில் உயர்ந்த பிரிவினராக்கிக் கொண்டவர்களே முட்டாள்கள் (சப்பரம் தூக்கிகள்).
மடையன்: ஏரி மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பிய காலங்களில் கரை உடைவதைத் தவிர்க்க நீர் வெளியேறும் பகுதியான மடையைத் திறப்பவர்களே மடையர்கள். வெள்ளக் காலத்தில் உயிரைப் பயணம் வைத்து மடை திறக்கவென்று தனியே ஆட்கள் இருப்பார்கள். நீர் நிலைகள் உருவாக்கப்பட்டு பாசன முறைகளை கண்காணித்து முறைப்படுத்தி ஊழியம் செய்வதற்காகவே சாதிரீதியாக சிலர் நியமிக்கப்பட்டனர். இவர்களே பிற்காலத்தில் ஒரு சாதியாக மாறினர்.
தேவதாசி: இந்துக்களின் தொன்மையான நூல்களில் தாசிகள் பற்றி ஏழு வகையாகப் பாகுப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. ஒன்று, தாதா - தன்னைத் தானே ஒரு கோயிலுக்கு அடிமைப்படுத்திக் கொள்பவள். இரண்டு, விக்ரித - ஒரு கோயிலுக்குத் தன்னைத்தானே விற்றுக் கொள்பவள். மூன்று, பக்ரிட்ய - தன் குடும்ப நலங்கருதித் தன்னைத் தானே கோயிலுக்கு அடிமைப்படுத்திக் கொள்பவள். நான்கு, பக்தா - பக்தி காரணமாக ஒரு கோயிலினைச் சென்று சேர்பவள். ஐந்து, கிரிட - ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டுக் கோயிலுக்கு உரிமையாக்கப்பட்டவள். ஆறு, அலங்கார - தன் தொழிலில் நன்கு பயிற்சி பெற்ற ஒருத்தியை நன்கு அலங்கரித்து அரசர்களாலோ செல்வர்களாலோ கோயில்களுக்கு வழங்கப்படுபவள். ஏழு, ருத்ர கணிகை அல்லது கோபிகை - கோயிலிலிருந்து முறையாக ஊதியம் பெற்றுக் கொண்டு கோயிலில் ஆடிப் பாடுகின்றவள்.
பரதேசி: 1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கையில் மலையாள இரவலர்களுள் ஒரு பிரிவினர் எனப் பதியப்பட்டுள்ளது. வேற்று நாட்டவர் எனப் பொருள்படுவதாக, இது கொச்சியினைச் சேர்ந்த வெள்ளை யூதர்களைக் குறிப்பதற்குரியதான தொடர்புடைய சொல்லாக சர்க்கார் கணக்குகளிலும் அரசுப் பட்டயங்களிலும் இடம் பெற்றுள்ளது.
வேசியர்: பேசியர் என்ற வடசொல்லின் திரிந்த வடிவம். பரத்தையரைக் குறிக்கும் சொல். இதனையே நாட்டியக்காரியை குறிக்கவும் பயன்படுத்துவர்.
தீண்டா: கணிசன்களின் ஒர் உட்பிரிவு. தீண்டாக் குருப்பு என்பது தொடாத ஆசிரியன் எனப் பொருள்படும். இது காவுதியரான அம்பட்டன் சாதியருக்குரிய மற்றொரு பெயராகும்.
மடவன்: 1901இல் திருவாங்கூர் மாநிலக் கணக்கெடுப்பில் நாயர்களின் உட்பிரிவான புலிக்கப் பணிக்கர்களுக்குரிய பெயராக பதியப்பட்டுள்ளது.
கோமணாண்டி: கோவணம் தவிர உடம்பில் வேறு எந்த உடையும் தரித்துக் கொள்ளாமல் திரியும் ஆண்டிகளின் உட்பிரிவினருக்கான பெயர்.
நாதாரி: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பன்றி மேய்க்கும் தொழிலில் ஈடுபடும் போயர்களைக் குறிப்பது.
தாசி: பிராமணர் அல்லாத பணிப் பெண்ணுக்கு உரிய பெயர்.
கோமாளி: ஒட்டேக்களின் புறமணக் கட்டுப்பாடு உடைய ஒரு குலத்தின் பெயர்.
பன்னாடை: வேட்டுவன்களின் ஒர் உட்பிரிவு.
சாவு: மாலரின் உட்பிரிவு
மொள்ளமாறி, முடிச்சவிழ்க்கி இரண்டு பெயர்களும் சிறுதொழில் புரிந்து வந்த சாதியப் பெயர்கள்தான். அதேபோல் நிலமற்றவர்களை ‘புறம்போக்கு’ என்று ஏசுவதையும் காணலாம். இத்தகைய வசைச் சொற்களில் சாதி, பெண்ணடிமை மட்டுமல்ல, சமயம், மொழி மற்றும் தொழில் சார்ந்த பாகுபாடுகளை சுட்டுபவையும் உண்டு. சமூகத்தில் இன்று வசைச் சொற்களாக உபயோகப்படுத்தப்படுபவை பெரும்பாலும் பெண்களை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரையும், நிலமற்றவர்களையும், உடலுழைப்பு பிரிவினரை சிறுமைப்படுத்தவும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவுமே உருவாக்கப்பட்டுள்ளது.