சமூகப் பொதுவெளியில் செயல்படும் நிறுவனங்கள், புதிது புதிதாக உருப்பெறும் சமூக நிகழ்வுகளைத் தமதாக்கிக் கொள்வது இயல்பு. சைவ சமயம் எனும் நிறுவனம், ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவான அச்சுக் கருவியை எவ்வாறெல்லாம் தனதாக்கிக் கொண்டது என்பது சுவையான வரலாறு. சமயங்கள் தம்முள் உள்வாங்கிக் கொண்டுள்ள நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைப் பொதுவெளியில் பரப்புரை செய்ய வேண்டியது அவற்றின் அடிப்படைத் தேவை. அதற்கு நவீன கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்ற புரிதல் அவசியம். ஒலி வாங்கிகள், இணையங்கள், அச்சு மரபுகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்த விவரணத் தொகுப்பும் உரையாடலும் தேவை. அச்சு மரபை அடிப்படையாகக் கொண்ட அச்சுப் பண்பாடு குறித்த ஆய்வு மற்றும் ஆய்விற்கான அடிப்படை மூலங்களின் தொகுப்பு என இரு தளங்களில் உள்ள செய்திகள் இவ்வகை ஆய்வின் அடிப்படைகளாகும். இந்தப் பின்புலத்தில், சைவமரபு சார்ந்த அச்சுப் பண்பாட்டை ஆவணப்படுத்தி, உரையாடலுக்குட்படுத்துவது பற்றி இந்நூல் முன்னிறுத்தும் சில பரிமாணங்களைப் பின்கண்டவாறு தொகுக்கலாம்.
- காலனியம் நிலைபேறு கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில், காலனியத்தின் சமயமாக இருந்த கிறித்தவம் சார்ந்த அச்சுச் செயல்பாடுகள் விரிவாக முன்னெடுக்கப் பட்டன. கிறித்துவத்தின் இவ்வகையான நிலைபாட்டை எதிர்கொள்ள சைவ மரபு மேற்கொண்ட அச்சு மரபு சார்ந்த செயல்பாடுகள் குறித்து உரையாடுவது அவசியம். இத்தன்மை தமிழ்ச் சூழலில், அச்சுப் பண்பாடு, சமயம் சார்ந்து தொழிற்பட்டதைப் புரிந்துகொள்ள உதவும். இதனைத் தமிழகம், ஈழம் என்று வேறுபடுத்திக் காண்பது அவசியம்.
- சமயம் சார்ந்த ஆய்வுகள் என்பவை, சமயம் எனும் நிறுவனத்தின் செயல்பாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாறாக சமய மரபில் நிகழும் செயல்களை சமூக வரலாறு, பண்பாட்டு மானிடவியல் ஆகிய பிற துறைகள் சார்ந்து ஆய்வு செய்வதும் அவசியம். பக்தியின் அடிப்படைகளான நம்பிக்கை, சடங்கு, வழிபாடு ஆகியவை சமயம் சார்ந்த ஆய்வுகளாக நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாய்வுகளும் அகநிலை (Subjective) சார்ந்தே அமைகின்றன. புறநிலை (Objective) சார்ந்த ஆய்வுகள் மிகக் குறைவாகும். இந்நூல் சைவம் எனும் நிறுவனம் தனது இருப்பை, அச்சு எனும் பௌதீகக் கருவி சார்ந்து நிகழ்த்தும் முறையியலைப் பதிவு செய்வதைக் காண்கிறோம். இசை மரபு, கட்டிடக்கலை மரபு, காண்பிய மரபுகள் ஆகிய பலவற்றிலும் சமயம் சார்ந்து நிகழும் செயல்களைப் பௌதீக மரபு சார்ந்த தர்க்க வரலாற்று முறைமைகளில் புரிந்து கொள்வது அவசியம். இதில் இவ்வாய்வு அச்சு மரபு சார்ந்த அச்சுப் பண்பாட்டை பௌதீக புறநிலை மரபாக, சைவம் சார்ந்தவற்றை உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
- சைவக் கருத்துப் பரப்புரை செய்வதற்கு அச்சு மரபுகள் உள் வாங்கப்படுகின்றன. இவ்வாறு உள்வாங்கும்போது ஓலை மரபில் இருந்த பல்வேறு கூறுகள், அச்சு மரபிற்குள்ளும் தொடர்கின்றதா? அல்லது நவீன வசதி கருதி புதிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றனவா? என்ற உரையாடல் அவசியம். அந்த வகையில் எப்போதும் பிரதிகளை தன்னோடு வைத்திருத்தல், மனனம் செய்ய எளிதாகப் பயன்படுத்தல், புனிதமாகக் கட்டமைக்கத் தேவைப்படும் வடிவங்கள், அச்சுருக்கள் மற்றும் தாள் பயன்படுத்துதலில் மேற்கொள்ளப்படும் முறைமைகள் ஆகிய பிற குறித்தும் அறிவது அவசியமாகும். இந்நூல் அந்த நோக்கில் மிக விரிவான தரவுகளை முன்னிறுத்தி ஆய்வு செய்திருப்பதைக் காணலாம்.
- மேல் கணக்கு, கீழ்க்கணக்கு, திருமுறைகள், பிரபந்தங்கள், சாத்திரங்கள், திரட்டுகள் எனும் வளமான தொகுப்பு மரபுகள் தமிழில் செயல்பட்டு வந்திருப்பதைக் காண்கிறோம். சைவம் எனும் நிறுவனம், அச்சு சார்ந்து தமது பரப்புரையை மேற்கொள்ளும் போது பல்வேறு தொகுப்பு மரபுகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அவை பெரும்பாலும் திரட்டுக்களாக அமைகின்றன. சைவ அச்சுப் பண்பாட்டில் மேற்குறித்த தன்மைகள் எவ்வாறு தொழிற்பட்டுள்ளன என்பதை இந்நூல் பேசுகிறது. இத்தன்மை வெவ்வேறு சமயங்களில் தொழிற் பட்டுள்ளதை / தொழிற்படுவதை ஒப்பீட்டு நோக்கில் பதிவு செய்வது அவசியம். இவ்வகையில் சைவ மரபு மேற்கொண்ட நவீன தொகுப்பு மரபுகள் அச்சுவழி நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு கூறுகளை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
- கி. பி. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சமய நிறுவனங்களாக ‘மடம்’ எனும் அமைப்புகள் உருவாயின. இவை நவீன வளர்ச்சிகளை தமது நிறுவனம் சார்ந்த செயல்களுக்கு எவ்வாறு உள்வாங்கின? என்ற உரையாடல் அவசியம். அவ்வகையில் தமிழில் உருவான சைவ மடங்கள், அச்சு சார்ந்து எவ்வாறு செயல்பட்டன என்பது தொடர்பான விரிவான விவரணங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன (இரண்டாம் பகுதி). இதன்மூலம் மடங்கள் நிகழ்த்திய சைவ அச்சுப் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
- அச்சு மரபு உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அச்சிடப்பட்டவற்றைப் பட்டியலாக உருவாக்கிடும் பண்பு உருவானது. சைவ மரபு சார்ந்து உருவான நூல்களின் அரிய பதிவாக இந்நூல் செய்துள்ள அட்டவணைப் படுத்தம் (cataloguing) அமைந்துள்ளது. இதில் நம்பகத் தன்மை வலுவாக இருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அமைந்த அச்சுத் தரவுகள், இந்நூல் உருவாக்கத்திற்கு அடிப்படைகளாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
***
காலனியம், கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு முதல் சமயப் பரப்புரை செய்து, கிறித்தவ சமயத்தை ஆசிய நாடுகளில் நிலைபேறு கொள்ளச் செய்வதற்கு தொண்டூழியர்கள் (Missionaries) பலர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, வணிக நோக்கில் ஐரோப்பியர் வந்தனர். அவர்களது சமயம் கிறித்தவம். வணிகர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் தொண்டூழியர்கள் சமயப் பரப்புரை செய்வது இலகுவாயிற்று. இதன்மூலம் சைவத்திற்கும் கிறித்துவத்திற்குமான முரண் பல்பரிமாணங்களில் செயல்பட்டது. இதனைக் கீழ்க்காணும் குறிப்பு உறுதிப் படுத்துகிறது.
“அசற் சமயங்களாகிய கிறித்தவர்கள் இக்காலத்திலே நமது சைவ சமயிகளைத் தம்மதத்திற்குப் புகுவிக்க முயன்று கோட்டங்கள்தோறும் பள்ளிக் கூடங்களைத் தாபித்துத் தம்முடைய துன்மார்க்க நூலாகிய விவிலிய நூலையே சிறுவர்களுக்குப் பெரும்பாலும் கற்பித்துச், சிவ நிந்தை, சிவ சாத்திர நிந்தை, திருநீறணியாமை, எச்சிற் கலப்பு முதலிய துராசாரங்களையே அவர்களுக்குப் பயிற்றலானும், அவர்க்கும் பிறர்க்கும் அடிக்கடி துர்ப்போதனைச் செய்து திரிதலானும், அநியாயமாகிய தூஷணங்களைப் பொதிந்த சிறுபுத்தகங்களை வெளிப்படுத்தலானும், பிறவற்றானும் பெருங்கேடு செய்வார் ஆயினார்கள். ” (தி. செல்வ மனோகரன் (பதி), சிவசங்கர பண்டிதம். கிறிஸ்துமத கண்டனம்: 2016:141. )
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, நாவலரின் நெருங்கிய நண்பரான சிவ சங்கர பண்டிதரின் மேல்காணும் குறிப்பில், பள்ளிக்கூடம் திறக்கப்படுதல், சிறு புத்தகங்கள் அச்சிடுதல் எனும் இரு குறிப்புகள் முக்கியமானவை. இவ்விரு பணிகள் அச்சுப் பண்பாட்டோடு நேரடித் தொடர்புடையவை. இவ்வகையில் சமயம் சார்ந்த உரையாடல்களில் அச்சு நூல்கள் பெறும் இடத்தை அறிய முடிகிறது. இந்நூலில் காணக் கிடக்கும் கீழ்க்கண்ட கண்டன நூல்கள் சைவர்களால் அச்சிடப்பட்டவை. கண்டன நூல் சார்ந்த அச்சுப் பண்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை செயல்பட்டதைக் காண்கிறோம். இதனை உறுதிப்படுத்த இவ்வாய்வு உதவுகிறது. இந்நூலில் பதிவாகியுள்ள கண்டன நூல்கள் வருமாறு:
சைவ தூஷண பரிகாரம் (1884), சைவ பூஷண சந்திரிகா (1900), பூதிருந்திராக்க தூஷண கண்டநம் (1901), புத்த மத கண்டனம் (1903), உச்சிர தண்டமும் தாந்திரிக துண்ட கண்ட கண்டனமும் (1910), சிவாகம தூஷண பரிஹாரம் (1911), தூஷணா நாவுக்கோர் சூட்டுக்கோல் (1918), சைவ பூஷண சந்திரிகை (1929), தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் (தடை) (1932) ஆகியவை சைவத்திற்கு எதிராக எழுதப்பட்டவைகளை மறுப்பதற்காக எழுதப்பட்ட கண்டன நூல்கள். இந்நூல்களை நா. கதிரைவேற் பிள்ளை மற்றும் செந்திநாதையர் ஆகியோர் பெரும்பகுதி எழுதினர். இவ்வகையில் சமய முரண்கள் அச்சுவழி வெளிப்பட்டதைக் காண முடிகிறது. ஆறுமுக நாவலர் (1823-1879) காலம் முதல் இவ்வகையான நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தன. இந்நிகழ்வு குறித்த சான்றாதாரங்களை அறியும் வகையில் இந்நூல் அமைகிறது. இவ்வகையில் சைவ சமய மரபு சார்ந்த அச்சுப் பண்பாட்டில் எவ்வகையான அச்சு நிகழ்வுகள் நடந்தேறின என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மேல்குறித்த கண்டன நூல்கள். இவ்வகையில் பல்வேறு பரிமாணங்களில் சைவ அச்சு மரபு செயல்பட்டதைக் காணலாம்.
***
சமயங்கள் குறித்த ஆய்வு என்பது பக்தனின் உணர்ச்சி சார்ந்து, அச்சமயத்தில் உள்ள பல்வேறு பிரதிகளைப் பற்றிப் பேசுவதாகவே அமைகிறது. சமய மரபு சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளை சமயப் பிரதிகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்ற உரையாடல் ஒருபுறம்; பிறிதொருபுறம் இவற்றை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் நிகழ்த்துவது என்பது குறித்த விவரணங்கள். இத்தன்மைகளே சமய ஆய்வில் பெரும்பகுதியாக உள்ளன. மாறாக இச்சமயமரபு வரலாற்றுப்போக்கில் உருப்பெற்றமை, இச்சமய நூல் உருவாக்க முறைகள் ஆகியவை தொடர்பான உரையாடல்கள் மிகுதியாக நிகழவில்லை. சைவ அறிவுப் பாரம்பரியம் குறித்துப் பேரா. கா. சிவத்தம்பி அவர்களின் பதிவு பின்வருமாறு.
“திராவிட இனவுணர்வு, தமிழக வரலாற்றுத் தொன்மையுணர்வு ஆகியன காரணமாக வளர்ந்த அறிவியக்கம் தமிழர்க்கும் பாரம்பரிய இந்து மதத்திற்குமுள்ள உறவினை எடுத்து விளக்க முனைந்தபொழுது, தமிழகத்து இந்து மதப் பாரம்பரியம் ஆரிய பிராமண வழிவரும் வைதீக நெறிப்பட்டது அல்லவென்றும் அது தமிழர்க்கே உரித்தான தனிமத நெறியன்றினைச் சார்ந்தது என்றும் அந்த மதச் சிந்தனை நெறியைச் சைவ சித்தாந்தத்தில் காணலாம் என்று வற்புறுத்திற்று. தமிழ், தமிழ்நாடு தனித்துவம் பற்றிய அறிவு வாதத்திற்குச் சைவ சித்தாந்தம் மிக முக்கியமான பண்பாட்டு அம்சமாக அமைந்தது. ” (தனித் தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி: 1979, 34)
சமய மரபு என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் அடையாளமாக சில வேளைகளில் அமைவதைக் காண்கிறோம். அவ்வகையான மரபை கண்டறிவதற்கு, அப்பிரதி தொடர்பான ‘வழிபாட்டுத் தன்மை சார்ந்த அணுகுமுறை’ மட்டும் போதாது; மாறாக அப்பிரதி, நவீன வளர்ச்சிகளை உள்வாங்கி, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்த உரையாடலும் அவசியம். இந்நூல் அப்பின்புலத்தில் பதிப்பிக்கப்படும் முறைமைகள் குறித்தும் பேசுகிறது. அச்சுப் பண்பாட்டு மரபில் பதிப்பு என்பது முதன்மையான கூறாகும். அதனை பின்வருமாறு இவ்வாய்வு பதிவு செய்கிறது.
சுத்தப் பாடப் பதிப்பு, பொருண்மைத் தொடர்பான தரவுகளுடன் உருவான பதிப்பு, அச்சு வடிவப் பதிப்பு, எளிய பதிப்பு, உண்மை ஞான விளக்க உரைப் பதிப்பு, குறியீட்டுப் பதிப்பு, விரிவுரைப் பதிப்பு, சஞ்சிகைப் பதிப்பு, அகராதிப் பதிப்பு, தல யாத்திரைப் பதிப்பு, விழா மற்றும் குறைந்த விலைப்பதிப்பு என பதினோரு வகையான வெளியீட்டு முறைகளை அறிய முடிகிறது. இம்முறைமைகள், சைவ சமயம் எனும் நிறுவனத்தின் அடையாளமாக அமையும். பிரதிகளை எவ்வாறு அச்சுப் பண்பாடு எதிர் கொண்டது என்பதை உணர்த்துகிறது. இதில் காணும் ஒவ்வொரு முறையும் ஒரு வகையான அறிவுச் செயல்பாடாக அமைகிறது. சைவப் பாரம்பரியத்தின் அறிவு மரபை புரிந்து கொள்ள இவ்வகைச் செயல்கள் உதவுகின்றன. இவ்வாறு இப்பிரதிகளை அணுகும் போது, அவை பல்பரிமாணங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம்.
***
சமயம் என்பது கணப்பொழுதும் பக்தனின் உணர்வு நிலையோடு இணைந்திருப்பது ஆகும். தான் வேறு - தான் சார்ந்து இருக்கும் சமயம் வேறு என்று தனித்துப் பார்க்கும் மரபு பக்தர்களுக்கு இல்லை. இந்தப் பின்புலத்தில் தங்களின் சமயம் சார்ந்த பிரதிகளை எப்போதும் தன்னுடன் எடுத்துச் செல்வதை விரும்புகின்றனர். சமயம் சார்ந்த பாடல்களை மனனம் செய்வதும் சதா அவற்றை முணுமுணுப்பதும், சிலவேளை வாய்விட்டுப் பாடுவதும் உண்டு. இவ்வகையான தன்மைகளை அச்சு வழி மரபில் கைக்கொள்வதற்கென அச்சு வடிவத்தில் பல்வேறு பிரதிகளை உருவாக்குகிறார்கள். இவ்வகை மரபு கிறித்தவம் பைபிள் பிரதியை உருவாக்கும் முறை, இஸ்லாம் குர்ரான் பிரதியை உருவாக்கும் முறை ஆகியவற்றின் செல்வாக்கிலிருந்து வருவதாகும். பைபிள் கருத்துக்களைப் பரப்ப பல்வேறு துண்டுப் பிரசுரங்களையும், சிறு குறு நூல்களையும் அச்சிட்டு வழங்கி வருகின்றனர். இதற்கென உலகம் தழுவிய அமைப்புகளை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, அச்சு வெகுவாகப் புழக்கத்திற்கு வந்த போதே உருவாக்கினர். இதனைப் பைபிள் துண்டுப் பிரசுரக் கழகம் (Bible Tract Society) என அழைப்பர். சென்னை நகரில் செயல்பட்ட அமைப்பு ‘சென்னைக் கிறித்தவ துண்டுப்பிரசுரக் கழகம் (Madras Christian Tract Society) ஆகும். இந்த முறையில் சைவ சமயத்தினரும் கையடக்கப் பதிப்புகள், பையடக்கப் பதிப்புகள், சிறு வெளியீடுகள் ஆகியவற்றை வெளியிட்டமை தொடர்பான ஆவணப்படுத்தும் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதனை வெளியிடும் அமைப்பை இந்து துண்டறிக்கை வெளியிடும் கழகம் (Hindu Tract Society) என்று அழைத்துக் கொண்டனர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கையடக்கப் பதிப்பு ஒன்றில் (1940), 245 சிறு நூல்களின் பட்டியல் உள்ளதையும் அதில் நீதி கூறும் அட்டைகள், திருக்குறள் நீதி கூறும் அட்டைகள், திருவுருவப் படங்கள், சமயப் பொன்மொழிகள் இடம் பெற்றிருப்பதை இந்நூல் கவனப்படுத்தியுள்ளது. (பார்க்க: இந்நூல் ப. 221-222) இவ்வகையில், சைவம் அச்சுப் பண்பாடு, நவீன வடிவங்களையும் உள்வாங்கிக் கொண்டதை அறிய முடிகிறது. இம்மரபுகள் இன்றைக்கும் சிறிய அளவில் தொடரவே செய்கின்றன. சமயம் சார்ந்த செயல்பாட்டில் சமயப் பிரதிகள் எந்தெந்த முறைகளில் வெளிப்படுத்தப்பட்டன என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
தமிழின் செவ்விலக்கியத் தொகுப்பு மரபு, அற இலக்கியத் தொகுப்பு மரபு ஆகியவை வளமானவை. அவற்றில் செயல்பட்டுள்ள புலமை சார்ந்த வினைப்பாடுகள் பெரிதும் வியந்து பேசத்தக்கவை. இம்மரபின் தொடர்ச்சியாகப் பக்தி இலக்கியத் தொகுப்பு மரபும் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். சைவம் இவ்வகையான செயல்பாட்டில் வளமாகவே தொழிற் பட்டிருப்பதைக் காண்கிறோம். பாடல்கள் தோத்திர மரபாகி, அவை பன்னிரு திருமுறைகளாக வடிவம் பெற்றுள்ளன. இதன் வழி உருப்பெறும் சாத்திரங்கள் - மெய்கண்ட சாத்திரங்களாக வடிவம் பெற்றுள்ளன. செவ்விலக்கியம் மற்றும் அற இலக்கியம் சார்ந்த தொகுப்பு மரபுகளிலிருந்து சைவத் தொகுப்பு மரபு கால வளர்ச்சியோடு வளர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
பன்னிரு திருமுறை, புராண நூல்கள், பிரபந்த வகைமை நூல்கள், திரட்டுகள் என்ற வகையில் அமைந்துள்ள சைவத் தொகுப்பு மரபு, நிறுவனமாகச் செயல்பட்ட சைவத்தின் பல்பரிமாணங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. தமிழகத்தில் செயல்பட்ட வேறு எந்த சமய அமைப்புகளும் மேற்கொள்ளாத முறையியலை சைவம் மேற்கொண்டிருப்பதைக் காண்கிறோம். இதன்மூலம் நடைமுறைச் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் சைவப் பிரதிகளை எந்தெந்த பாங்கில் தொகுத்து அச்சிடுவது என்பதை சைவம் வளமாகச் செய்துள்ளது. இதனை இந்நூல் கீழ்க்காணும் வகையில் பதிவு செய்துள்ளது. “சைவ சமயத்தைக் கடைபிடிக்கின்றவர்கள் என்ன செய்யணும், செய்யக் கூடாது என்பதைக் கற்றுத் தரக் கூடியவை இந்நூல்கள். கிறித்தவம் வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் சைவ சமயத்தை நிலை நிறுத்துவதற்கான பணிகள் இத்தொகுப்பில் உள்ள நூல்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைச் சிவாலய தரிசன விதி, கண்டன நூல்கள், சைவ ஒழுக்கங்கள், சைவ உணவு, வினா - விடை, சைவ சங்கங்கள் போன்ற பொருண்மை கொண்ட நூல்களைத் தொகுத்து நோக்கும் போது சைவ சமயத்திற்கான இயங்கியலைப் புரிந்து கொள்ள முடியும்”. (ப. 286-87).
சைவ சமயம் தொடர்பான அச்சுப் பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு, சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால் கொள்ளத் திட்டமிடும்போது, அச்சமயம் அச்சுப் பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது. தமிழின் வளமான தொல் மரபை, குறிப்பாகத் தொகுப்பு மரபை, அச்சு வழி எவ்வாறெல்லாம் முன்னெடுப்பது என்பதை சைவம் திட்டமிட்ட முறைசார்ந்து நடைமுறைப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். இச் செயல்பாடுகள் ஈழத்தில்தான், தமிழ்நாட்டை விட வீரியமாக நடைமுறைப் படுத்தப்பட்டதாகக் கருதலாம்.
***
நிலவுடைமைப் பண்பாட்டோடு நேரடித் தொடர்பு உடையவர்களாக வேளாளர் சமூகத்தினர் இருந்தனர். நிலவுடைமையாளர்களான இவர்களிடம் தான் சைவ சமயம் கால்கொண்டிருந்தது. இவர்கள் சைவ சமயத்தை வலுவான நிறுவனமாகக் கட்டமைக்க மடங்களை ஏற்படுத்தினர். இம்மடங்கள் கோயில் நிர்வாகங்களைத் தனதாக்கிக் கொண்டன. வளமான செல்வம் இதன் மூலம் மடங்களுக்குக் கிட்டியது. தமிழகம் முழுவதும் உருவாகிய சைவ மடங்கள் இவ்வகையில் சைவ வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் உதவின. இதில் இவர்கள் மேற்கொண்ட அச்சுச் செயல்பாடு முக்கியமானது.
சைவ மடங்கள், ஓலைச் சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாத்தன. ‘பண்டாரம்’ என்று அழைக்கப்படும் ஓலைச்சுவடி நூலகத்தை மடங்கள் உருவாக்கின. இந்நூலகப் பண்பு இல்லையேல் நமது சுவடிகளின் அழிவு மிகுதிப்பட்டிருக்கும். தனி நபர்களை விட இவ்வகையான நிறுவனம் சார்ந்த ஓலைச் சுவடிகளே நமக்குப் பல தமிழ்நூல்களை அச்சிட உதவியது. திருவாவடுதுறை ஆதீனம் சேகரித்த சுவடிகளின் எண்ணிக்கை அதிகம். தருமபுரம் ஆதீனமும் இவ்வகையான சேகரிப்பை செய்தது. இம் மடங்களில் சேகரிக்கப்பட்ட சைவ ஓலைப் பிரதிகளால் தான், இன்று வளமான சைவப் பிரதிகள் அச்சு வடிவில் நமக்குக் கிடைத்தன. பல்வேறு மடங்களில் கிடைத்த சுவடிகளை ஒப்பிட்டு தரமான பதிப்பை உருவாக்க முடிந்தது. இவ்வகையில் சைவ அச்சுப் பண்பாட்டு வரலாற்றில் சைவ மடங்களுக்கான பங்களிப்பு முதன்மையானது. இது குறித்து தனியாக விரித்து எழுதும் தேவையுண்டு.
***
தமிழ் அச்சுப் பண்பாட்டை வரன்முறையாக அறிவதற்குத் தமிழில் அச்சிடப்பட்ட நூல்களின் அட்டவணை மற்றும் ஓலைச் சுவடிகளின் அட்டவணை ஆகியவை அடிப்படைத் தரவுகளாக அமைகின்றன. இவ்வகையான பட்டியல்களின் பட்டியல் ஒன்றை பேரா. கமில் சுவலபில் கொடுத்துள்ளார். (Tamil Literature Leiden / Kölh. 1975: 18-20.) இதில் 22 பட்டியல் நூல்கள் தொடர்பான குறிப்புகள் உள்ளன. இந்த நூலில் உருவாக்கப்பட்டுள்ள பட்டியல், நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறை 85, சைவ சித்தாந்த நூல்கள் 113, புராண நூல்கள் 170, பிரபந்த வகைமை நூல்கள் 73, திரட்டுகள் 43, பிற சைவ நூல்கள் 137, கையடக்கப் பதிப்புகள் 165, பையடக்கப் பதிப்புகள் 39, சிறு வெளியீடுகள் 155 ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளவை. மொத்தம் 980 சைவ நூல்கள் குறித்த அனைத்து விவரணங்களும் பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளன.
பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தமிழில் அச்சிடப்பட்ட நூல்களை அறிய, அச்சிட்ட தமிழ் நூல் பட்டியல்களே உதவுகின்றன. இதன் மூலம் தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாற்றை அறிய முடியும். (பார்க்க. வீ. அரசு. தமிழ் அச்சுப் பண்பாட்டு வரலாறு. ‘உங்கள் நூலகம்’ இதழ் தொடர் கட்டுரைகள் 2010, 1-10) இந்த வகையில் 1800 - 1950 ஆண்டுகளில் வெளிவந்த சைவ நூல்கள் (980) அனைத்தையும் இந்நூல் அட்டவணைப் படுத்தியுள்ளது. இதன் மூலம் சைவ அச்சுப் பண்பாடு குறித்த அடிப்படையான தரவுகள் இந்நூலில் ஆவணமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணம் சார்ந்தே சைவ அச்சுப் பண்பாட்டு வரலாற்றை இந்நூல் பேசுகிறது. இத்தன்மை இந்நூலின் விதந்து பேசத்தக்க ஒன்று. சைவ அச்சுப் பண்பாடு, துல்லியமான தரவுகள் வழி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இந்நூலின் பெறுமதியாக அமைகிறது.
***
தமிழகத்தில் உள்ள பல்வேறு சைவ மடங்கள் (குறிப்பாக திருவாவடுதுறை மடம்), மறைமலை அடிகள் நூலகம், ரோஜா முத்தையா நூலகம், பிரெஞ்சிந்திய ஆய்வு நூலகம் ஆகியவற்றில் பல ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து, அதன் வழிப் பெறப்பட்ட தரவுகளை ஆவணப்படுத்தி, தமது அச்சுப் பண்பாடு குறித்த முனைவர் பட்ட ஆய்வை திரு. கு. கலைவாணன் முடித்தார். அந்த ஆய்வு இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சைவ புலமைப் பாரம்பரியம் குறித்த அரிய ஆவணமாக இந்நூல் அமைகிறது. வரலாற்றில் இவ்வாய்வு பேசப்படும். தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, தமிழ்ச் சமூக வரலாறு, தமிழக சமயங்களின் வரலாறு, தமிழ்த் தத்துவ மரபுகளின் வரலாறு எனப் பல்வேறு துறை சார்ந்த தேடலில் ஈடுபடுவோருக்கு இந்நூல் அரிய ஆவணமாக அமையும். கலைவாணனின் உழைப்பு முறைமையை நான் அறிவேன். அவரது உழைப்பு வளமாகவே வெளிப்பட்டுள்ளது. தமிழ்ச் சைவப் புலமை மரபை எம்போன்றோர் அறிவதற்கு கலைவாணன் நூல் அடிப்படையாக அமைகிறது.
- வீ.அரசு