தமிழ் மக்களின் தனி நாகரிகத்தையும், நல்வாழ்வு நெறியையும், பழம் பெருமையையும், தமிழ் மொழியின் தனிச் சிறப்பையும், ஆற்றலையும், ஏற்றத்தையும் உலக மெங்கும் பரப்பிய ஒப்புயர்வற்ற சிறப்பு தனிநாயகம் அடிகளுக்கே உரியது! தமிழ் இலக்கியத்தின் தொன்மை யினையும் தன்னிகரற்ற தன்மையினையும் வெளிப் படுத்தியதோடு அதை உலகளாவிய நிலையில் பரப்ப முற்பட்டவர் தனிநாயகம் அடிகள்! ‘தமிழியல்’ எனும் ஆராய்ச்சித் துறையை உருவாக்கி வளர்த்து, அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி, தமிழாராய்ச்சி யினை உலகளாவியதாக்கியவர்!

dhayalan yalpannam 350தமிழ் மக்களின் தனி நாகரிகத்தையும், நல்வாழ்வு நெறியையும், பழம் பெருமையையும், தமிழ் மொழியின் தனிச் சிறப்பையும், ஆற்றலையும், ஏற்றத்தையும் உலக மெங்கும் பரப்பிய ஒப்புயர்வற்ற சிறப்பு தனிநாயகம் அடிகளுக்கே உரியது! தமிழ் இலக்கியத்தின் தொன்மையினையும் தன்னிகரற்ற தன்மையினையும் வெளிப் படுத்தியதோடு அதை உலகளாவிய நிலையில் பரப்ப முற்பட்டவர் தனிநாயகம் அடிகள்! ‘தமிழியல்’ எனும் ஆராய்ச்சித் துறையை உருவாக்கி வளர்த்து, அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி, தமிழாராய்ச்சி யினை உலகளாவியதாக்கியவர்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த ஊர்காவற் துறையைச் சேர்ந்த கரம்பன் என்னும் ஊரில் ஹென்றி ஸ்தானிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை-செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை இணையரின் மூத்த மகனாக 02.08.1913 அன்று  பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சேவியர்.

ஊர்காவற்துறை புனித அந்தோணியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பள்ளியிறுதி வகுப்பில் பயிலும் போது, லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ (Resurrection) என்னும் நூலை அவர் படித்தார். “அந்நூலைப் படித்ததால்தான், என் வாழ்க்கையானது சமயச் சேவையாலும் கல்விச் சேவையாலும் உருவாகியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் இவ்வுலகில் ஒருமுறைதான் வாழ முடியும். எனவே, நான் இறக்கும் முன் என்னால் இயன்ற அளவு அனைத்து நற்செயல்களையும் செய்தல் வேண்டும். ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் வாழப் போவதில்லை” என்ற ட்ரம்மன்ட் (Drummond) என்னும் அறிஞரின் எழுத்துகள் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள புனித பத்திரிசியார் கல்லூரியில் 1923 முதல் 1930 வரை பயின்றார். பின்னர், கொழும்பு நகரிலுள்ள புனித பெர்நாட் குருத்துவக் கல்லூரியில் (St.Bernard Seminary) சேர்ந்து ‘மெய்யியல்’ பிரிவைப் பாடமாக எடுத்துப் படித்து முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.

ரோம் நாட்டிற்குச் சென்று உர்பன் குருமடத்தில் மாணவராகி, உர்பன் பல்கலைக்கழகத்தில் ‘சமயவியல்’ படித்தார். ஆங்கிலத்திலும், இலத்தீனிலும் புலமை பெற்றிருந்த சேவியர், ரோமில் இத்தாலிய மொழி யினைத் திறம்படப் பயின்றதோடு, ஆங்கிலம், தமிழ், ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளையும் பயின்றார். ஹீப்ரு, சமஸ்கிருதம், ரஷ்யன், மலாய், சிங்களம், இலத்தீன் உட்பட 14 மொழிகளில் புலமை பெற்றவராக விளங்கினார்.

ரோமில் பயிலும் போது, “என் தமிழ்ப்பற்று மிகுந்ததே அன்றி குறைந்துவிடவில்லை. ‘வீரமாமுனிவர் கழகம்’ என்னும் அமைப்பை ரோம் நகரில் நிறுவி தமிழைப் பயின்று வந்தோம். வத்திக்கான் வானொலி நிலையத்திலிருந்து தமிழில் ஒலிபரப்பும் வாய்ப்பும் பெற்றோம். அங்ஙனம் ஒலிபரப்பும் தோறும் ‘தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம் பரவும் வகையில் செய்தோம்’ எனக் கருதி களிப்புற்றோம்” எனத் தமது தமிழார்வம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ரோமில் கத்தோலிக்க சமயக் குருவாக 1938 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் பணியில் சேர்ந்தார்.

தனிநாயகம் அடிகள் ‘தொன்மையியல்’ துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அதனால், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஆப்பிரிக்க ஆயரான புனித சைபீரியன் (St.Cyprian) என்பவரின் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து ‘கார்த்தஜினியன் குருமார்’ (The(TheCarthaginian) என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரோமில் முனைவர் பட்டம் பெற்ற தனிநாயகம் அடிகள் 1939 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர், தூத்துக்குடி மறை மாவட்டத்தில் 1940 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள புனித தெரசாள்  உயர்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு முதலிய பாடங்களைக் கற்பித்தார். வடக்கன்குளத்தில், பண்டிதர் குருசாமி சுப்பிரமணியம் ஐயரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமது பெயரைத் தமிழ்ப் பெயராகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்னும் மிகுந்த ஆர்வத்தினால் ‘சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம்’ என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பும் கருத்து வளமும் அடிகளை ஈர்த்துக் கொண்டன. தொடர்ந்து தமிழ் பயின்று முதுகலைப் பட்டம் பெற, 1945 ஆம் ஆண்டு தமிழகம் வந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். அங்கு, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், பேராசிரியர். அருணாசலம்பிள்ளை, பூவராகன்பிள்ளை, பேராசிரியர். வ.சுப.மாணிக்கம், பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் முதலிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கியம் பயின்றார்.

தேவாரம், திருவாசகம் முதலிய சைவசமய இலக்கியங்களையும், சங்க இலக்கியங்களையும் ஆர்வமுடன் கற்றறிந்தார். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றபின், அடிகள் தொடர்ந்து கற்று தமிழ் இலக்கியத்தில் 1949ஆம் ஆண்டு இலக்கிய முதுகலைப் பட்டமும் (எம்.லிட்) பெற்றார். மேலும், பேராசிரியர் அ.சிதம்பரநாதனாரை வழிகாட்டியாகக் கொண்டு ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் பொருள் பற்றி ஆய்வும் மேற்கொண்டார். அவரது ஆய்வோடு, ‘நேச்சர் இன் ஏன்சியன்ட் தமிழ் பொயட்ரி’ (Nature in(Nature inAncient Tamil Poetry) என்னும் நூலாக 1952 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தால் வெளியிடப் பட்டது. இந்நூலைத் திறனாய்வு செய்த பேராசிரியர் கமில் சுவலபில், “பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் விட இந்நூல் பலவகையிலும் விஞ்சி நிற்கின்றது” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

தூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு ‘தமிழ் இலக்கியக் கழகம்’ என்னும் அமைப்பினை அடிகள் நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், பெரு, மெக்சிகோ, ஈகுவடார், போர்ச்சுக்கல், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, ஸ்காண்டிநேவியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா போன்ற நாடு களுக்கு 1950 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற் கொண்டு தமிழ் மொழியின் வளம், தமிழ் இலக்கியங் களின் சிறப்புகள் குறித்துச் சொற்பொழிவுகளாற்றினார். பின்னர் 1952 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய அடிகள், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

கொழும்பில் ‘தமிழ்ப் பண்பாட்டுக்கழகம்’ என்னும் அமைப்பை நிறுவினார். இலங்கையில் ‘தமிழ்ப் பண்பாடு’ அன்றும், இன்றும், இனியும்’  என்ற பொருளில் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவு நூல் வடிவம் பெற்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இலங்கையில், தமிழ் அரியாசனத்திலிருந்து தூக்கி வீசப்படுவது நடந்தேறிக் கொண்டிருந்தது. உலக வாழ்வைத் துறந்த தனிநாயகம் அடிகள், தமிழைத் துறக்க முடியாதவராகக் கலக்கமடைந்தார்.

1956 ஆம் ஆண்டு, இலங்கைப் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பணடாரநாயக்காவை, தூதுக் குழுவினருடன் சென்று சந்தித்துத் தமிழ் மொழியின் உரிமைக்காக வாதாடினார். மேலும், தனிச்சிங்கள மொழிச் சட்டம் தமிழ் மக்களைப் பாதிக்கும் கொடுங்கோன்மைச் சட்டம் என்று அறிவு பூர்வமாக எடுத்துரைத்தார்.

சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளால் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியும் என்று தகுந்த ஆதாரங்களுடன் பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து முதலான நாடுகளின் முன்னுதாரணங் களுடன் எடுத்துரைத்தார். ஆனால், பிரதமர் பண்டார நாயக்கா அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் “வாள் முனையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதையே நான் விரும்புகின்றேன்” (Father, I will rather(Father, I will ratherdecide it on the point of sword) என்று பிரதமர் பண்டார நாயக்கா ஆணித்தரமாக அறிவித்தார். அவரது பதில் தனிநாயகம் அடிகளாருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மொழிப் பிரச்சினை என்பது அரசியல் எல்லைகளை விட விரிந்து பரந்தது. அது தத்துவப் பிரச்சினை; குடியாட்சியமைப்புமுறைக் கோட்பாட்டுப் பிரச்சினை; அக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் பிரச்சினை; அது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை; சமூகவியல் - மனித இயக்கவியல் பிரச்சினை என்று தனிநாயகம் அடிகள் மொழிப்பிரச்சினையின் பல பரிமாணங்களை விளக்கினார். எனவே, மொழிப்பிரச்சினையைப் பற்றிச் சிந்திப்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் உரியதல்ல. அரசியல் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், சட்ட வல்லுநர்கள், சமூகவியல் அறிஞர்கள் ஆகியோருக்கும் அது உரியது என்றார் அடிகள்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 05.06.1956 அன்று கொண்டுவரப்பட்ட ‘தனிச் சிங்கள சட்ட மசோதா’வை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலை மையில், கோப்பாய் கோமான் வன்னிய சிங்கம், இரும்பு மனிதன் நாகநாதன் முதலியோர் உட்படத் தமிழ் மக்கள் கொழும்பில் உள்ள பாராளுமன்றத்துக்கு முன்னால் சத்தியாகிரகம் மேற்கொண்டனர். சிங்களக் காடையர்களின் வெறியாட்டம் தாண்டவமாடியது. தமிழின மக்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களக் காடையர்கள் மத்தியில் வீரத்துறவியான தனிநாயகம் அடிகள் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்டினார்!

Òமொழி உரிமையைப் பறிப்பது நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் என்பதால் மொழிகளின் உரிமைகளையும் பன்னாட்டுச் சட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் அவசரப் பட்டுச் சட்டம் எதுவும் இலங்கை அரசு கொண்டு வருவது முறையும் நீதியும் ஆகாது. பெரும்பான்மை மக்களின் மொழியே ஆட்சி மொழி என்பது சிங்கள மேலாண்மைக்கும் சிங்கள ஆட்சிக்கும் வழிவகுக்கும். ஒரு தேசம் ஒரு மொழி என்று பலமொழி பல தேசியம் உள்ள நாட்டில் பேசுவது ஒற்றுமையையும் அமைதியையும் குலைப்பது ஆகும். மொழிச் சிக்கல் என்பது வெறும் மொழிச் சிக்கல் மட்டும் அல்ல. அது மெய்ம்மை, சட்டம், அறிவியல், சமூகவியல், மனித வாழ்வியல் தொடர்பானது. அரசியல் ஒருமைப்பாடும் பண்பாட்டுச் சுதந்திரமும் வேண்டும். ஸ்விட்சர்லாந்தில் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், உரோமன்சு ஆகியன சம மதிப்புள்ள ஆட்சி மொழிகளாக உள்ளன. எனவே இலங்கையில் சிங்களமும் தமிழும் சம மதிப்புடன் தேசிய மொழிகளாகவும் ஆட்சி மொழிகளாகவும் அறிவிக்கப் பட வேண்டும்” என்று வாதாடினார் அடிகள்.

“மக்களின் அடிப்படை உரிமைகளாகிய மத உரிமை, மொழி உரிமை, பண்பாட்டுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை முதலிய துறைகளில் சிறுபான்மையோரைத் தாக்கும் விதத்தில் பெரும்பான்மையோருக்குச் சட்டம் வகுக்க உரிமை இல்லை. சிங்கள மக்கள் தமக்கு அரசியல் மொழியாகச் சிங்கள மொழியை அமைக்க முழு

உரிமை உண்டு. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் மொழி யாது என்பதைப் பற்றி முடிவு செய்யத் தமிழ் மக்களுக்கே உரிமை உண்டு” என அடிகள் தமது Ôநம் மொழி உரிமைகள்’ என்னும் நூலில் எடுத்துரைத் துள்ளார்.

இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள மொழி ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்த 1961 ஆம் ஆண்டு, இலங்கை அரசு தீவிரம் காட்டியது. அதை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. தனிநாயகம் அடிகள், சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தேடும் வகையில், தமிழ் மொழிக்குள்ள உரிமைகளையும், சிங்கள மக்கள் நல்வாழ்வுக்குத் தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். சத்தியாகிரகப் போராட்டத்திற்கு நிதி வசூல் செய்து உதவினார்.

தமிழா! “தமிழை இழந்து நம் ஒப்பற்ற இலக்கியங் களையும் பண்பாட்டினையும் இழப்பதா! தமிழை இழந்து நம் செல்வச் சமய நூல்களையும், வழிபாட்டுப் பாடல்களையும் இழப்பதா! தமிழை இழந்து நம் கவின்கலைகளை இழப்பதா! தமிழை இழந்து பண்பாடின்றி புறக்கணிக்கப்பட்ட கீழ் வகுப்பினராக நம் சொந்த நாட்டில் வாழ்வதா! தன்னலம் கருதித் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பதா? பெரும்பான்மை யோரின் அடிமைகளாக வாழ்வதா - அல்லது சாவதா - இன்றேல் சம உரிமைகளுடன் தனி இனமாக மானத் துடனும் புகழுடனும் சேர்ந்து இயங்குவதா? அம் மான நிலையை அடைய விடாது முயல்க!” எனத் தமிழர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார் தனிநாயகம் அடிகள்.

மலேயா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராக 1961ஆம் ஆண்டு பணி ஏற்றார். 1969 ஆம் ஆண்டு வரை இங்குப் பணி புரிந்தார். 1970-71 ஆம் ஆண்டுகளில் பாரீசு பல்கலைக் கழகத்தில் வருகை தரு பேராசிரியராகவும், 1971-72 ஆம் ஆண்டுகளில் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராகவும் அடிகள் பணியாற்றினார்.

புதுடெல்லியில் 26 ஆவது கீழைத்தேயவியல் மாநாடு 1964 ஆம் ஆண்டு நடைபெற்றது. மலேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தனிநாயகம் அடிகள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் கலந்து கொண்ட தமிழறிஞர் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியனும் இணைந்து, மாநாட்டில்  கலந்து கொண்ட தமிழியல் அறிஞர்களுக்கான ஒரு சிறப்புக் கூட்டத்தைப் புது டெல்லியில் 07.01.1964 அன்று கூட்டினார். இக் கூட்டத்திற்கு 15 நாடுகளைச் சேர்ந்த 60 தமிழியல் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் ‘அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் இணைச் செயலாளர்களாகப் பேராசிரியர் கமில் சுவலபில், தனிநாயகம் அடிகள் முதலியோர் தேர்வு செய்யப் பட்டனர். பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தனிநாயகம் அடிகள் மலேசியாவில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகளும், 40 பார்வை யாளர்களும் கலந்து கொண்டு 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளித்தனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிரந்தரமான தமிழாராய்ச்சி நிறுவனம் ஒன்று அமைத்து உலகத் தமிழாராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிகளின் கனவு அம்மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது.

‘நம் மொழியுரிமைகள்’ என்னும் பிரசுரத்தில் தனிநாயகம் அடிகள், “சைவம், வைணவம், இசுலாம், கத்தோலிக்கம், புராட்டஸ்தந்து என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மையும், கொழும்புத் தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத முறைகள் ஆகும். தமிழ் இனத்திற்கு ஒற்றுமையும், உறுதியும் ஏற்படுவதற்கு நம் எழுத்தறிஞர்களும், மேடைக் கலைஞர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். நமக்குப் பதிய பாடல்கள் வேண்டும். சின்னங்கள் வேண்டும். சிலைகள் வேண்டும். நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும். பல்கலைக் கழகங்கள் வேண்டும்” எனத் தமிழர், தமிழ் மொழி வளர்ச்சிக்கான வழியைச் சுட்டிக் காட்டுகிறார் தனிநாயகம் அடிகள். 

“பல வெளிநாட்டு அறிஞர்களும் தமிழ் பற்றி ஆராயவும், ஆய்வுக் கட்டுரைகள் எழுதவும் அடிகளாரின் ஆங்கில இதழான ‘Tamil Culture’’ தூண்டுதலாகவும், கட்டுரைகளை வெளியிடக் கருவியாகவும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று அமுதன் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

“உலக மக்கள் அனைவரும் தமிழ்ப்பண்பாட்டின் மேம்பாட்டையும் சிறப்பையும் தமிழ் இலக்கியத்தின் இனிமையையும் அறிய வேண்டும் என்பதற்காக அடிகள் தமிழ்ப்பண்பாடு ‘Tamil Culture’ என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை உருவாக்கி, அதன் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றினார். உலகில் உள்ள பல பல்கலைக் கழகங்களுக்கு இந்த இதழை அனுப்பித் தமிழின் புகழ் மணக்கப்பாடுபட்டார்” எனப் போற்றிப் புகழ்ந்துள்ளார் பேராசிரியர் சு.வித்தியானந்தன்.

“தமிழ்ப் பண்பாடு, மொழி, வரலாறு, இலக்கியம் ஆகியவை இந்த ஆய்விதழில் பொருளாக வரும். உண்மையை நிலைநிறுத்த இவற்றைப் பற்றிய விளக்கங் களை உலகில் உள்ள பலரையும் சென்றடையச் செய்வது கடமை. மறைந்து கிடக்கும் இவ்வுயர்வுகளை மற்றவர் களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாத தன்மையாகும். எனவே, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்தொண்டைச் செய்வதற்காக இவ்விதழ் வருகிறது” என ‘Tamil Culture’ இதழ் வெளியீடு குறித்து அறிவித்தார் அடிகள்.

“உலக நாகரிகத்துக்குத் தமிழ்ப்பண்பாடு தந்துள்ள கொடையைப் பண்பாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தமிழர்களுக்கும் தமிழின்பால் ஈடுபாடு கொண்டுள்ள பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகப்பெரும் கடமையாகும்”  என்றார் அடிகள்.

“தமிழ்ச் சமூகவியல் உலகச் சமூகவியலுக்கும், தமிழ் வரலாறு உலக வரலாற்றுக்கும், தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்கும், தமிழ் இசை உலக இசைக்கும், தமிழ் மனித நேயம் உலக மனிதநேயத்துக்கும், வளம் சேர்த்து உலகப் பல்கலைக்கழகங்களில் தனக்குரிய இடத்தைப் பெறவேண்டுமாயின் அதற்குரிய ஆய்வுகள் தமிழ் மண்ணில் இடம் பெற்றாக வேண்டும். தமிழ் மண்ணில் மலரும் தமிழ் ஆர்வமே உலக அளவில் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும். வெளிநாட்டு அறிஞர்களின் ஆய்வுக்குத் தேவையான ஆதாரங்களைத் தமிழ்நாட்டு அறிஞர்களே தேடிக்குவிக்க வேண்டும்” என அடிகள் வலியுறுத்தி யுள்ளார்.

“இவற்றைப் புதுமைக் காலச் சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய மொழியாகவும், மக்களாட்சியில் குடிமக்கள் தகுதியோடிருக்க உதவும் சரியான கருவி யாகவும் தமிழ்  விளங்க வேண்டும் என்றால் நம் பள்ளி களிலும் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுவிப்பதிலும் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.”

“தாய் மொழி கற்பித்தலில் மறுபயிற்சி அளித்தாக வேண்டும். இளம் உள்ளங்களில் நுண்பொருள் தொடர் பான வரையறைகளையும் (Definition), இலக்கணச் சொற்றொடர்களையும் மனனம் செய்ய மாணவர்களை வற்புறுத்துவதால் அவர்கள் உள்ளத்தில் மொழித் தொடர்பான பாடங்கள் என்றாலே அவர்களுக்கு வெறுப்பு உண்டாகும் என்பது திண்ணம். சாதாரண உரைநடையே படிக்கத் தெரியாத இளம் சிறார்களுக்கு இப்படிச் செய்வதன் மூலம் விரக்தி மனப்பாங்கை நாம் உண்டு பண்ணுகிறோம். மொழியின் மேல் ஆர்வத் தையும். விருப்பத்தையும் அவர்கள் இதயத்தில் தோற்று விக்க எளிமையான சுவையுள்ள நூல்களை வெளியிட வேண்டும். விளக்கவுரைகள் தெளிவாகவும், எழுத்துப் பிழைகள் இல்லாமலும் நூல்கள் வெளியிடப்பட வேண்டும். தமிழ் மொழியைக் கற்பிக்கின்றவர்கள் பண்புள்ளவர்களாக, அதிக நூல்களைப் படித்தவர்களாக. பக்குவம் அடைந்தவர்களாக விளங்க வேண்டும்” எனத் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தியுள்ளார் அடிகள்.

‘தமிழ்த்தூது’ ‘ஒன்றே உலகம்’ ‘திருவள்ளுவர்’ ‘நம் மொழி உரிமைகள்’ ‘தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்’ ‘உலக ஒழுக்கவியலில் திருக்குறள்’ முதலிய தமிழ் நூல்களையும், ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ (Nature in Ancient Tamil Poetry),, ‘பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்’ (Ancient Tamil(Ancient TamilEducation) Aspects of Tamil Humanism, Indian Thoughtsin ancient Tamil Literature ஆகிய ஆங்கில நூல் களையும், ‘தமிழியல் நூல்கள் ஆய்வடங்கல்’ (A reference(A referenceGuide to Tamil Studies) ‘வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி’ (Tamil Studies Abroad)‘தமிழ்ப்பண்பாடும் நாகரிகமும்’ (Tamil Culture and civilization) ஆகிய மூன்று நூல்களையும் தொகுத்து அளித்து உள்ளார்.

தனிநாயகம் அடிகளார் பல உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்பயணங்களின் போது ஹார்வர்ட் பல்கலைக்கழகம், பாரிஸ் நூலகம், வத்திக்கான் நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று தமிழில் அச்சேறிய முதல் நூல்களைக் கண்டுபிடித்தார். இந்திய மொழிகளுள் முதல் அச்சுவாகனம் ஏறிய மொழி தமிழே! என உலகுக்கு அறிவித்தார். ‘தம்பிரான் வணக்கம்’ (1578), ‘கார்த்தில்லா’ (CARTILHA) என்ற சிறிய தமிழ்நூல் லிஸ்பன் நகரில் 1554 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் அச்சேறியது.

‘கிறீத்தியானி வணக்கம்’ என்ற தமிழ் நூல் கொச்சியில் நவம்பர் 14ஆம் நாள் 1579 ஆம் ஆண்டில் அச்சேற்றப்பட்டது. ‘அடியார் வரலாறு’ (FLOS(FLOSSANCTORUM) என்ற தமிழ் நூல் தூத்துக்குடியில் 1586 ஆம் ஆண்டு அச்சேறியது. தமிழ்மொழியில் அச்சேறிய முதல் தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து தமிழ்மொழியின் பெருமையைப் பறைசாற்றிய பெருமை அடிகளையே சாரும்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தனிநாயகம் அடிகளாரின் சிலை, அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் செ. அரங்கநாயகத்தால் திறந்து வைக்கப்பட்டது. இவரது மறைவுக்குப்பின் 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அடிகளின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி கலாநிதிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கை யாழ்ப்பாணம்

அருகில் நெடுந்தீவு மக்கள் தனிநாயகம் அடிகளாருக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர்.

‘தமிழியல்’ ஆய்வை உலக அளவில் அறிவுத் துறையாக உயர்த்திடவும், உலகத்தின் பல நாடுகளில் உள்ள தமிழர்களின் மத்தியில் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்திடவும், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்படவும், பிறநாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கிடைக்கப் பெறவும், பிறநாட்டு நூலகங்களில் தமிழ் நூல்கள் பேணப்படவும், அரிய தமிழ் நூல்களைத் தேடி எடுத்து மீண்டும் தமிழ் உலகுக்கு அறிமுகப் படுத்திடவும் அயராது பாடுபட்ட தனிநாயகம் அடிகள் தமது 67ஆவது வயதில் 01.09.1980 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Pin It