bartholom 350பைபிள் என்பதற்குப் புத்தகம் என்னும் பொருள் கிரேக்க மொழியில் உண்டு. இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டு நிலை. விவிலியம் பின்னர் உருவாக்கப்பட்ட சொல் ‘பைபிள்’, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரண்டு - பகுப்புகளை உடையது. பழைய ஏற்பாடு யூதர்களின் வேதநூல்; இதன் பெரும் பகுதி ஹிப்ரு மொழியிலும் சில பகுதிகள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டிருந்தன.

கிரேக்க சாம்ராஜ்யத்தின் பெரு வேந்தனான மகா அலெக்சாண்டரின் படையெடுப்பிற்குப் பின்னர் பைபிள் பரவலாக அறியும்படி ஆகும் சூழ்நிலை உருவானது. இக்காலத்திலும் இந்நூல் கிரேக்க மொழியில் பெயர்க்கப்படவில்லை. இதனால் யூதர்கள் ஹிப்ரு மொழியிலேயே தங்கள் வேதத்தைப் படித்தனர்.

பழைய ஏற்பாடு உருப்பெற்ற காலத்தில் புதிய ஏற்பாடு வழக்கில் இல்லை. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலோ மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ புதிய ஏற்பாடு உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர். இக்காலத்தில் - ரோமானிய நாட்டின் பொது மொழியாக கிரேக்க மொழி இருந்தது.

இரண்டு ஏற்பாடுகளைக் குறித்து ஆராய்ந்தவர்கள் பழைய ஏற்பாடு கிறிஸ்துவிற்கு முன்னரும் புதிய ஏற்பாடு கிறிஸ்துவிற்குப் பின்னரும் தொகுக்கப்பட்டன என்று கருதுகின்றனர். இந்தக் கருத்து கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் விவாதிக்கப்பட்டது. இக்காலத்தில் இந்த இரண்டு நூற்களும் “வேதங்கள்” என்னும் பெருமையைப் பெற ஆரம்பித்துவிட்டன.

கி.பி.400க்கு முன்பே லத்தீன் ஆர்மீனியன் உட்பட சில மொழிகளில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. இதே காலத்தில் லத்தீன் மொழியில் முழு வேதமும் வந்தது.

தமிழில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தஞ்சாவூர் தரங்கம்பாடியில் அச்சு இயந்திரம் வந்தது முக்கியமான காரணம்.

அய்ரோப்பாவில், 15 ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் அறிமுகமாகி விட்டது, - ஆரம்பகால இயேசுசபைப் பணியாளர்களே தமிழகத்தில் அச்சு இயந்திரம் மூலம் பைபிளை அச்சிட முயற்சி செய்தனர். இவர்களில் கொன் சால் வெஸ் (Con Sal Vez) என்பவரை முக்கியமாகக் கூறுகின்றனர். இந்தக் காரியம் முதலில் கேரளத்தில்தான் நடந்தது.

மயிலை சீனி.வேங்கடசாமி ‘கிறிஸ்தவமும் தமிழும்’ என்ற தன் நூலில் தமிழில் வந்த முதல் கிறிஸ்தவ நூல் Flos sectorum என்னும் தலைப்பில் அமைந்த நூல் என்கிறார். சபாபதி குலேந்திரன் இந்தத் தகவலை மறுக்கிறார். இவர் தமிழில் வந்த முதல் கிறிஸ்தவ நூல் “Doctrina Christan on Lingna malabar Tamil” என்னும் தலைப்பில் அமைந்தது. இந்த நூலின் முகப்பில் உள்ள தலைப்பு போர்ச்சுக்கீசிய மொழியில் அமைந்தது; பத்து கற்பனைகளின் சுருக்கம் இந்த நூல்; இது வினாவிடை அமைப்பில் அமைந்தது என்கிறார் சபாபதி.

தமிழ்மொழியில் 1715இல்தான் முதன்முதலில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இதிலிருந்து 1949 வரையிலும் எட்டு மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன. ஹாலந்து நாட்டினர், யாழ்ப்பாணத்தைப் பிடித்தபோது சமயப்பரப்புதலுக்காகச் சிலர் இலங்கை வந்தனர். அவர்களில் பல்தேயுஸ் என்பவர் ஒருவர். இவர் மத்தேயு சுவிசேசத்தைத் தமிழில் மொழிபெயர்த்து ஏட்டில் எழுதி வைத்தார். பின்னர் இந்த நூலின் திருத்திய வடிவம் 1741 இல் அச்சில் வந்தது. இதே வடிவம் மறுபடியும் திருத்தப்பட்டு 1759இல் வந்தது. அப்போது இந்த நூல் இனாமாகக் கொடுக்கப்பட்டது.

ஜெர்மன் நாட்டினரான சீகன்பால்கு (Barthalomew ziegenbalg 1682 - 1719) தரங்கம்பாடிக்கு 27 வயதில் வந்தார். தமிழகத்தில் தமிழ் புத்தகங்கள் பரவலாக அச்சிடும் சூழலை உருவாக்கியவர் இவரே. சீகன்பால்கு 1713 இல் தரங்கம்பாடியில் அச்சு இயந்திர நிலையத்தையும் காகிதப்பட்டறையையும் ஆரம்பித்தார்.

இவர் புதிய ஏற்பாட்டை 1708 அக்டோபரில் மொழிபெயர்க்க ஆரம்பித்து 1711 மார்ச்சில் முடித்தார். 1715இல் முழுநூலும் அச்சு வடிவில் வந்தது. சீகன்பால்கு 37 வருடங்கள்தான் உயிர் வாழ்ந்தார். வாழ்நாளில் பெரும் பகுதியை பைபிளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் செலவழித்திருக்கிறார். இவரது உரைநடைக்கு ஒரு மாதிரி கீழ்வருமாறு:

நான் யென்னுடைய உடைமைக

ளெல்லாத்தையும் பிச்சைக்

குக் குடுத்தாலும் யென்னு

டைய சரீரத்தை வெந்துபோக

யட்புக் குடுத்தாலும்

யெனக்கு சினேகமில்லாது

போனால் யெனக்கு பிறை

யோசனமொன்னு மில்லை”

பழைய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு 1727 இல் வந்தது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 1740 இல் வந்தது. எபிரேயம், கிரேக்கம் என்னும் இரண்டு மொழிகளுடனும் பைபிள் தொடர்புடையது. பைபிளில் வரும் கடவுளைக் குறித்த எபிரேயக், கிரேக்கச் சொற்களைத் தமிழில் கொண்டுவருவது மொழி பெயர்ப்பாளர்களுக்கு அப்போது சவாலாக இருந்தது. தம்புரான் (16 நூற்) சர்வேஸ்வரன் (18 நூற்) வேதம், வேதாகமம் (19 நூற்) என்னும் சொற்கள் கிறிஸ்தவ மக்களிடம் பரவலானதற்கு இந்த மொழிபெயர்ப்பே காரணம் என்கின்றனர்.

பைபிளை மொழிபெயர்த்தவர்களில்  பப்ரீசியூஸ் (Johann phillipp fabricius) என்பவருக்கு முக்கிய இடம் உண்டு.

ஜெர்மனியரான பப்ரிசியூஸ் (1740 - 1791) முப்பது வயதில் தஞ்சை தரங்கம்பாடிக்கு வந்தார். இவர் பைபிளின் பழைய புதிய ஏற்பாடுகளின் சில பகுதிகளை ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளின் துணையுடன் மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்ப்புகளை லூத்திரன் சபையினர் இன்னும் ஒத்துக்கொள்ளுகின்றனர். கிறிஸ்தவர்களிடம் தனியான ஒரு தமிழ் வழங்குகிறது. இப்படி ஒரு நடையை அறிமுகப்படுத்தியவர் இவரே.

இவரது உரைநடைக்கு மாதிரி பின்வருமாறு:

“மெத்தனவுள்ளவர்கள் பாக்கிய

வான்கள். அதேனென்றால்

அவர்கள் பூமியைச் சுதந்தரித்

துக் கொள்ளுவார்கள்.

துயரப்படுபவர்கள் பாக்கிய

வான்கள்; அதென்னென்றால்

அவர்கள் தேற்றப் படுவார்கள்”

பைபிளின் நல்ல மொழி பெயர்ப்பைத் தமிழில் தந்த இவரின் இறுதிக்காலம் துயரத்தில் கழிந்தது. இவர் மிஷன் கருவூலப் பொறுப்பில் இருந்தபோது இவரைச் சிலர் ஏமாற்றிவிட்டனர். அதனால் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதிக் காலத்தில் மிகவும் துன்பமுற்றார்.

ஜெர்மானியரான இரெனியுஸ் (Charles Theophilus Edward Rhenius 1790 - 1838) திருநெல்வேலிக்கு தன் 30 வயதில் வந்தார். இறுதிவரை இங்கேயே இருந்தார். இவர் இராமானுஜக் கவிராயரிடம் தமிழ் கற்றவர்; இவர் சமூக சேவகரும் கூட. சென்னை வேதாகமச் சங்கம் பைபிளை மறுபடியும் மொழிமாற்றம் செய்வதற்கு ஒரு குழு அமைத்தபோது அதில் இரெனியுஸ் பெரும் பங்காற்றினார்.

பைபிளின் புதிய ஏற்பாடு 1833இல் வந்தது. 1840 இல் பழைய புதிய ஏற்பாடுகள் வந்தன. இதன் திருத்திய பதிப்பு 1844 இல் வந்தது. இந்த மொழி பெயர்ப்புகளுக்கு இரெனியுஸ் ஆற்றிய பணி மிக அதிகம். இவர் தமிழ் பதங்களைப் பிரித்தெழுதுதல், ஒருமைப் பன்மையைச் சரியானபடி எழுதுதல் போன்றவற்றில் மிகவும் கவனம் செலுத்தினர்.

எ.கா

ரோமர் - உரோமர்

விதைகள் விழுந்தது - விழுந்தன

பறவைகள் பட்சித்தது - பட்சித்தன

இவர் பைபிளில் பலரும் அறிந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். ஒருவகையில் தமிழ் உரைநடையில் இவரது பங்கு அதிகம். இவர் மாற்றிய சொற்களில் சில:

வெளிச்சம் - ஒளி

வானராஜ்யம் - பரலோகராஜ்யம்

வெளிப்படுத்திய வயணம் - காண்பித்த பிரகாரம்

கிண்கிணி - கைத்தாளம்

திட அஸ்திபாரம் - உறுதி

இந்தலோகம் - இவ்வுலகம்

19 ஆம் நூற்றாண்டில் பைபிளுக்கு ஐந்துக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருந்தன. இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் குறையுடையன என்ற எண்ணம் அப்போது பரவலாக இருந்தது. இதை மாற்றும் முயற்சியை யாழ்ப்பாணம் சமயப்பரப்புநர்கள் செய்ய ஆரம்பித்தனர். இவ்வேலை 1840 இல் ஆரம்பமானது, இந்த வேலைக்குச் சன்மானமாக 800 பவுன் தொகையை லண்டன் மிஷன் கொடுத்தது.

இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த பைபிள் மொழி பெயர்ப்பின் பொறுப்பை பெட்கிவெல் பாதிரியார் (Peter Percival) ஏற்றுக்கொண்டார். இவருக்கு யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் உதவியாக இருந்தார் என்கிறார் சுத்தானந்த பாரதியார். ஒருவகையில் அப்போது இந்த மொழிபெயர்ப்பு பலரின் பாராட்டைப் பெற்றது. 

முந்தைய மொழிபெயர்ப்புகளில் இருந்த வேதிகை, காணிக்கை, பாவநிவாரணப் பலி, பாக்கியவான்கள் என்னும் சொற்களை பெர்சிவல் பாதிரியார் வேதிகை, நிவேதனம், நைவேத்தியம், வாழ்வுடையவர்கள் என மாற்றினார். இவரது மொழிபெயர்ப்பில் 2994 சமஸ்கிருதச் சொற்கள் இருந்தன.

இதன் பிறகு பைபிளைத் திருத்தும் பணி 1853, 1858, 1861 ஆகிய ஆண்டுகளில் நடந்தது.

இதுவரை பைபிளை மொழிபெயர்த்தவர்கள் எல்லோருமே ஜெர்மனி, ஆங்கிலம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதனால் சில குழப்பங்கள் வந்தன. அதனால் தமிழறிந்த கிறிஸ்தவ அறிஞர்களை மொழிபெயர்ப்புக் குழுவில் சேர்த்துக் கொள்ள ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

இப்படியான ஆலோசனையில் தேர்வானவர் முத்தையாபிள்ளை முக்கியமானவர். இவர் இரட்சண்ய யாத்ரீகம் எழுதிய எச்.எ. கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் சங்கர நாராயண பிள்ளையின் மகன் ஆவார். இவர் சமஸ்கிருதமும் படித்தவர். இவரைக் கால்டுவெல் பாராட்டியிருக்கிறார்.

முத்தையாபிள்ளை தமிழ் மரபுக்கு ஏற்ப மொழிபெயர்த்திருக்கிறார். இவர் குழுவின் மொழிபெயர்ப்பு 1871 இல் வெளிவந்தது. இதை ஐக்கிய மொழிபெயர்ப்பு என்றனர். இதையும் லூத்திரன் சபை எதிர்த்தது.

இதனால் பழைய மொழிபெயர்ப்புகள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டன. 1927இல் வந்த இந்த மொழிபெயர்ப்பில் பட்டுக்கோட்டை துரைசாமிப் பிள்ளையின் பங்கு அதிகம். இவர் “நனவோ நிலவோ” என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். இந்த மொழி பெயர்ப்பிலும் திருப்தி இல்லாததால் மறுபடியும் திருத்திய பதிப்பு 1949இல் வந்தது. சிலருக்கு இதிலும் திருப்தி ஏற்படவில்லை. ஆனால் மாறுதல் தொடருகிறது.

(இந்தக் கட்டுரை சபாபதி குலேந்திரன் எழுதிய கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு என்ற நூலின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேலும் Bible Translation (1947) மயிலை சீனி.வேங்கடசாமியின் கிறிஸ்தவமும் தமிழும் (1942) ரா.பி.சேதுப்பிள்ளையின் கிறித்தவத் தமிழ்க் கொடை (1946) வேதத்திருப்புதல் வரலாறு (1926) ஆகிய நூற்களும் உதவின)

Pin It