சொற்களின் வழியே தான் இந்த மொழி தன் கிளைகளை பரப்பிக் கொண்டிருக்கிறது. மொழியின் வழியில் தான் மனிதன் தன் சிந்தனையை வெளிப்படுத்துகிறான். முறைப்படுத்துகிறான். மொழி.... மானுட குல வழி.

ஐயா நாஞ்சில் நாடன் சொல்வார்கள்..

"நம்ம மொழில ஒரு லட்சம் வார்த்தைக்கு மேல கிடக்கு... நாம தான் பத்தாயிரத்துக்குள்ளயே சுழண்டுகிட்டு இருக்கோம்னு..."

இந்தியாவில் மட்டும் 19000 மொழிகள் இருக்கிறது. அதில் எழுத்து உள்ள மொழி 100 க்கும் குறைவு. உலகம் முழுக்க எழுத்து உள்ள மொழி 150 க்கும் குறைவு. அதில் 2000 வருடங்களை கடந்த இலக்கணம் இலக்கியம் எழுத்து உள்ள மொழி ஆறே ஆறு தான். கிரேக்கம் லத்தீன் ஹீப்ரு சமஸ்கிருதம் சீனம் தமிழ். இதில் முதல் மூன்று இப்போது பேசப்படுவது இல்லை. அடுத்த ஒன்றை மனிதர்கள் பேசுவதில்லை. அடுத்து...2000 வருடமாக பேசுவது எழுதுவது இலக்கியம் சமைப்பது என்று இருப்பது சீனம்.

சரி.. அடுத்து...? சொல்கிறேன்..!valparaiஎல்லாவற்றுக்கும் மேலே எந்த மொழியும் தொட முடியாத உயரத்தில் 3500 வருடங்களாக பேசவும் எழுதவும்.... இலக்கியம் இலக்கணம் எழுத்து என்று போட்டு தாக்கிக் கொண்டு இருப்பது தமிழ் மட்டுமே. சங்க இலக்கியத்தில் இருந்து சொந்த இலக்கியம் வரை... காலம் நெடுக தன் மொழி கோடுகளில் எழுத்து காடுகள் நிரம்பி கிடப்பது இங்கு தான். எந்த கொம்பனும் எழுதாத திருக்குறளுக்கு குரல் கொடுத்தது தமிழ் தான். காந்திக்கு வழிகாட்டி டால்ஸ்டாய் என்கிறார். டால்ஸ்டாய்க்கு வழி காட்டியது திருக்குறள் என்கிறார். (நன்றி பாரதி கிருஷ்ணகுமார்)

ஆக... தமிழ் மொழியில் சிறப்பு பேச பேச தீராது. ஒரு மொழிக்கு தான் எத்தனை எத்தனை பேச்சுமுறை.

கோயமுத்தூருக்கு ஒரு நடை... தனிப்பட்ட சொற்கள். நெல்லைக்கு ஒரு பாணி. கன்னியாகுமரிக்கு தனி. சென்னைக்கு தனி. மதுரை மொழி தனி. சேலத்துக்கு தனி. தகடூர் என்ற தர்மபுரிக்கு தனி. இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நடை.. ஒரு சொற்கட்டு. ஒரு வழக்கு முறை. அப்படி வால்பாறையை ஊன்றி கவனித்தால் அதில் ஒரு வாழ்வு முறை இருக்கிறது. எல்லா ஊரும் வரலாறும் இலக்கியமும் ஆகும் போது வால்பாறை ஆக கூடாதா என்ன. அண்ணன் ஆரா (ராஜு ஆறுமுகம்) அவர்களின் "கூப்புக்காடு" அப்படி ஒரு முயற்சி தான். என்னுடைய "சிப்ஸ் உதிர் காலம்" கூட அந்த மாதிரி ஒரு முயற்சி தான். ஆனால் இன்னமும் சொல்ல பெரும் வாழ்வு அங்கே பொதிந்து கிடக்கிறது. அதன் வழியே நீளும் சிந்தனையில் வால்பாறையின் மொழி... பேசப்படும் சொற்கள் என்று யோசிக்க சேமிக்க பாதுகாக்க நிறைய இருக்கிறது.

பழனி நெல்லை கோவை ஈரோடு சிலோன் என்று வால்பாறைக்குள் வந்து குடியேறிய /குடியேற்றப்பட்ட மக்களின் எல்லா தரப்பு மொழி நடையும் கலந்து ஒரு தனித்த மொழியாக மாறி இருக்கிறது. மொழி ஒரு மொட்டு போல. அதன் மலர்தல் தினம் தினம் ஊருக்கு ஊர் இடத்துக்கு இடம் தகுந்தாற் போல வேறு வேறு உச்சரிப்புகளில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.

அப்படி வால்பாறையில்...

ஓணானை ஒடக்கான் என்போம்... ஓரத்தை ஒந்தி என்போம். எஸ்டேட் வரைபடங்களில் குறுக்குகளும் ஒந்திகளும் தான் அதிகம் இருக்கும். இரண்டிலும் நடந்த ஓடிய விளையாடிய அனுபவம் இங்கே பலருக்கும் இருக்கும்.

குழந்தைகள் காப்பகத்தை புள்ள காம்ரா என்று சொல்வார்கள். புள்ளப்பாடி என்ற இன்னொரு பெயரும் உண்டு. சிறுவர்களாகிய நாங்கள் புள்பாடி என்போம். "இந்தா.. புள்ளய புள்ளகாம்ரால விட்டுட்டு வர நேரமாகிருச்சு" என்று தாய்மார்கள் ஒரு இழுவை இழுத்து சொல்வது வழக்கம்.

போ பையா... என்பதை பே பையா என்று தான் எங்கள் தோழிகள் சொல்வார்கள். மெதுவா போ வை பைய போ என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்.

சமையலறைக்கு குசினி என்று தான் பெயர். குசேனி (cuisine) என்ற ஆங்கில சொல்லில் இருந்து வந்து மருவியது. உதகமண்டலம் ஊட்டகமெண்ட் ஆனது மாதிரி. இந்த சொல் சிலோனில் புழக்கத்தில் இருக்கும் சொல்... என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

எஸ்டேட் அலுவலகங்கள் இருக்கும் இடத்தை பெரட்டு என்று தான் சொல்வோம். மஸ்டர் என்ற ஆங்கில சொல் கூட புழக்கத்தில் இருக்கிறது. தலைவர்கள் உள்பட மக்கள் கூடுமிடும்.. என்று இப்போது பொருள் தெரிகிறது. அப்போது மஸ்டர்க்கு பெரட்டுக்களம் தான். அலுவலகம் இல்லாத நேரத்தில் பெரட்டுக்களத்தில் குண்டு கில்லி ஏன் கிரிக்கெட் கூட விளையாடி இருக்கிறோம்.

ஒரே எஸ்டேட் பெயரில் இரண்டு மூன்று கிளை எஸ்டேட்கள் இருக்கும். அதற்கு மேல் பிரட்டு... கீழ் பிரட்டு என்றும் சொல்வதுண்டு.

மைதானத்தை மட்டம் என்போம். புற்கள் நிறைந்த மேட்டு பகுதிகளை பில்லுமேடு என்போம். அந்தப் பக்கம் மாடுகள் மேயும். இந்தப் பக்கம் சிறுவர்கள் நாங்களும் மேய்வோம்- விளையாடுவோம்.

வரிசை வீடுகளுக்கு பாடிகள் என்று பெயர். கீப்பாடி (கீழ்பாடி)... மேப்பாடி (மேல்பாடி)... மட்டத்துப்பாடி... கண்ணாடிப்பாடி... புதுப்பாடி... கடைப்பாடி...தகரப்பாடி என்று பாடிகள் இருக்கும் இடத்தின் தவமைப்பை பொறுத்து அழைக்கப்பட்டிருக்கிறது. நான் பிறந்த மேல் பாடியும் எனக்கு பரிச்சயம். நான் வளர்ந்த கீழ்பாடியும் எனக்கு பரிச்சயம்.

காய்ந்த சின்ன மூங்கில்களை ஈத்தை என்று தான் சொல்வோம். ஒரு எஸ்டேட்டுக்கு ஈத்தை ஆறு (ஈட்டியார்) என்றே பெயர் இருக்கிறது.

இங்கிலீஸ்காரன் விட்டு போன பலவற்றியில் அவன் மொழியின் சில சொற்களும் வெகு இயல்பாகவே புழக்கத்தில் இருக்கிறது.

வெட் ஆஃப்- ஐ வெட்டாப்பு என்று போகிற போக்கில் சொல்லி போவார்கள். ஒர்க்ஸ் கமிட்டி... ஒர்ஸ்கமிட்டி ஆகும். பாத்ரூம் என்ற ஆங்கில சொல் பேச்சு வழக்கில் வாத்ரூம் என்று மாறி போனது. நான் சிறுவயதில் அது என்ன வாத்து ரூம்.. என்று யோசித்திருக்கிறேன். டியாபீஸ்.... டீமேக்கர் என்ற சொல் கேட்கும் போதே பிரமிப்பாக இருக்கும். தேநீர் தயாரிப்பு கூடம்.. அலுவலகம்... நிபுணர்.

பங்களோவை பங்களா என்றாக்கி போகிற போக்கில் துரை பங்களா என்பார்கள். மேனேஜர் பங்களோ. கேண்டீனை கிளப்புக்கடை என்பார்கள்.

தேநீருக்கு சூடாக பலகாரம் கடித்து கொள்தல் தினசரி காலை பத்து மணி செயல்பாடு. பலகாரத்தை கடி என்று தான் சொல்வார்கள். மச்சானோடு கேன்டீன் போகும் போதெல்லாம்.. ரெண்டு டீ சொல்லிட்டு ரெண்டு கடி என்று சொல்லி தான் காசு கொடுப்பார். அந்த கடி போண்டாவாக இருக்கலாம். வடையாக இருக்கலாம். ஏதாவது ஒரு பலகாரம்.

சர்க்கரை போடாமல் வரட்டீ போட்டு வெல்லம் கடித்துக் கொண்டே குடிப்பதை கடுச்சாங்காப்பி என்பார்கள். பெரும்பாலும் வீடுகளில் சர்க்கரை பற்றாக்குறை நாளில் இது நடக்கும்.

சீலிங்கை பரண் என்பார்கள். குசினி பரணில் விறகு சேமிக்கப்பட்டிருக்கும். ஒரு முறை தெரிந்த அண்ணா ஒருவர் குசினியில் காதலியோடு பேசிக்கொண்டிருக்க.. அதே நேரம் காதலியின் அப்பா வந்து விட.. பரபரவென பரண் ஏறி... அவர் போகும் வரை பரணில் ஒளிந்து கொண்டிருந்தார். பரண் அரணாகவும். ஹாஹ்.

பெரிய வீட்டு மேற்கூரையில் வண்ண வண்ண ஜிகினா பேப்பரை ஒட்டி அழகு கூட்டுவார்கள்.

செலவு காசு என்ற சொல்... அட்வான்ஸ் என்று தான் நினைக்கிறேன். வேலை நேரத்துக்கு முன்போ பின்போ (கிட்டத்தட்ட ஓவர் டைம்) எடுக்கும் இலைக்கு தனியாக தரும் காசு இலை காசு.

விஷேச வீடுகளில் மாலை நேரத்தில் டீ பார்ட்டி நடக்கும். இந்த பார்ட்டி என்ற சொல் வெகு இயல்பாக புழக்கத்தில் இருக்கும்.

அங்கன இங்கன... அங்குட்டு இங்குட்டு என்று சொல்லும் அதே நேரம் மலையாள வாசம் கலந்திருக்கும் சில சொற்களும் உண்டு.

சாவுக்கு துட்டி தான். ஒரு துட்டிக்கு போய்ட்டு வந்தேன் என்று தான் சொல்வார்கள்.

பேரு போட்டுட்டு வருகிறேன் என்பது அவர் வேலை செய்தார் என்பதற்கான அட்டனென்ஸ் பதிவு.

சால் பிடிப்பது என்றால்.. தேயிலையின் வரிசைப்படி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு நேர்கோட்டை பிடித்தபடியே செல்வது. அதற்கு கையிலிருக்கும் ஈத்தை அளவுகோலாக உதவும். குறுக்கே செல்வது குறுக்கு சால். தேயிலை காடுகள் பவுண்டரி நிறைந்தவை. ஆக இந்த பவுண்டரி என்ற ஆங்கில சொல் ஒரு தமிழ் சொல்லை போலவே இயல்பாக வரும். என்ன ஒன்று பவுண்டர் ஆக வரும். அஞ்சாம் நம்பர் பவுண்டர்ல யானை நிக்குது என்பதெல்லாம் இயல்பிலும் இயல்பு.

நாலு தேயிலை கொத்துக்கு இடையில் ஓர் இடைவெளி இருந்தால்... அது வெட்டுச்சால்.

கான் என்ற சொல் நீரோடையை குறிக்கும். கேனல் என்ற ஆங்கில சொல்லின் மறுவல் தான் கான் ஆகி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தேயிலை மரத்தை வெட்டி கத்தரித்து விடுவது அதன் பராமரிப்பிற்கான செயல்பாடு. அதற்கு கவாத்து என்று பெயர். அந்த மாதிரி காடுகளை காவாத்துக்காடு என்பார்கள்.

பே சிலிப்- க்கு பிரதி என்று தான் பெயர். பத்தாம் தேதி சம்பளத்துக்கு 8, 9 களில் பிரதி கிழித்து பெர்மனென்ட் டெம்ப்ரவரி என்று தனித்தனியாக பிரித்து பட்டுவாடா செய்த அனுபவம் எனக்கு உண்டு.

என்ன சுகமில்லையா என்று தான் கேட்பார்கள். உடம்பு சரி இல்லை... நாட்வெல்.. நாட் குட்... எல்லாவற்றுக்குமே சுகமில்லையா என்ற சொல் தான். பக்கத்து வீட்டுக்காரன் மட்டுமல்ல.. ஊருக்குள்ள எவன் ஆஸ்பத்திரில அட்மிட் ஆனாலும்.. அடுத்தடுத்து போய் பார்த்துட்டு வர்ற கூட்டு சமூக உறவு வால்பாறையில் இருந்தது. மானுட தத்துவத்தை எளிய மனிதர்கள்தான் தூக்கி நிறுத்துகிறார்கள் என்பதற்கான உதாரணம் அன்றைய வால்பாறை சொந்தங்கள்.

இந்த கால் ரோடே வந்து கீழே இறங்கி குறுக்கு வழில வந்துட்டா பம்பாஸ் வந்தரலாம் என்று அத்தை சாப்பாடு கொண்டு வருவதற்கான வழி சொல்லும். கால் ரோடு- ஒத்தையடி பாதை. பம்பாஸ்- பம்ப் ஹவுஸ்.

றாத்தல் என்றால் நிறுவை செய்வது. கைக்காசு.... டெம்ப்ரவரி ஆட்கள் உள்பட ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலை செய்வோருக்கு வேலை முடிந்ததும் கையோடு கொடுக்கப்படும் காசு.

தேயிலை மாறின் சிறு சிறு குச்சிகளில் இலைகள் காய்ந்து மொத்தமாக கிடக்கும் போது அதற்கு சப்பல் என்ற சொல் முறுமுறுப்பு சேர்க்கிறது.

வேலை முடிவதை கை விட்டாச்சு என்று தான் சொல்வார்கள். இன்னைக்கு ஒரு மணிக்கே கை விட்டாச்சு. நாலு மணிக்கே கை விட்டாச்சு என்ற வாக்கியத்தில் வேலை முடிந்த திருப்தி புன்னகை அரும்பி இருக்கும்.

ஊதாங்குழல் ஊதி ஊதி எரியும் விறகடுப்பின் முன்னே குளிருக்கு அமர்ந்த நாட்கள் நினைவில் எரிகின்றன. அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருக்கும். கண்களில் அனல் வீசும் இரு நெருப்பு. குசினியின் கீழ் கதவு மூடி இருக்க... திறந்திருக்கும் மேல் கதவு வழியே.... வெளியே தூரம் கிட்ட என்று எங்கும் இருள் பொங்கிய நடுக்கம். நினைவில் ஓர் ஓவியம் ஆகி விட்ட காட்சிகளை ஊதாங்குழல் என்ற சொல் கலைத்து பார்க்கிறது.

நீள் சதுர பெட்டி மாதிரி இருக்கும் ஒவ்வொரு பாடியின் கடைசி பக்கங்களையும் கோடிப்பக்கம் என்று சொல்வோம். இரவு நேரங்களில் உச்சா போகும் கோடிப்பக்கங்கள் தனியாக இருக்கையில் பயப்படுத்தவும் செய்யும். உங்க லைன் கோடி பக்கத்துல பேய் இருக்கு என்று மாற்றி மாற்றி சொல்லிக்கொண்ட காலங்கள் இன்று நினைத்தால் அழகிய பூதங்களாக பிராண்டுகின்றன.

நான் இப்போது கூட பாலிதீன் கவர்களை மைக்கா என்று சொல்லி விடுவது உண்டு. கேட்போர் சட்டென என்னை பார்ப்பார்கள். இங்கு வந்த புதிதில் எனக்குள்ளது என்று சொன்னதை கேட்டு சிரித்தவர்கள் உண்டு. என்னுடையது என்னோடது என்பது தான் எனக்குள்ளது. அங்கேயே நின்னு என்று தான் அங்கே பெரும்பாலும் சொல்வோம். நில்லுக்கு நின்னு. வெடியை வேட்டு என்று தான் சொல்வோம். இப்போது கூட பேச்சு வழக்கில் வேட்டு வெடிக்கலயா என்று கேட்டு விடுகிறேன்.

வால்பாறையில் புழங்கும் சொற்களை சேகரிப்பதற்கான ஓர் ஆரம்பமாக இருக்கட்டும் என்று பதிந்திருக்கிறேன். தொடர்ந்து கிடைக்கும் சொற்களை எல்லாம் சேர்த்துக் கொண்டே போகலாம்.

வால்பாறை சொந்தங்களின் சொற்களில் கற்கண்டு உணர்ந்த மனம் இனித்து கிடக்கிறது.

- கவிஜி

Pin It