ஓர் அறுபடாத தொடர்ச்சிகொண்ட தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பொருளியல் செல் நெறிகளை ஆய்வியல் பூர்வமாக ஆசிரியர்களும், மாணவர்களும் அறிந்துகொள்வதற்கு மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ்.சரவணமுத்து, கல்லூரி முதல்வர் முனைவர் கே.தியாகேசன் அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரி நிர்வாகத்தின் பொருட்செலவில் ஒருநாள் சிறப்பு ஆய்வுச் சொற்பொழிவிற்கு 28-1-2012 சனிக்கிழமை யன்று கல்லூரியின் வேலாயுதம் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் சொற்பொழிவாற்றினர்.

காலையில் கல்லூரி முதல்வர் தலைமையில் நிகழ்ந்த தொடக்கவிழாவில் முனைவர் எஸ்.சரவண முத்து அனைவரையும் வரவேற்றார்.  முனைவர் ந.முத்து மோகன் மையக்கருத்துரையினை இயங்கியல் கோட் பாட்டின் பின்னணியில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு என்ற தலைப்பில் வழங்கினார்.  மேலாண்மையியல் ஆய்வில் ‘படைக்கும் உத்தி’ என்ற தலைப்பில் பேரா.என்.பஞ்சநாதன் உரை யாற்றினார்.  தத்துவ வறட்சி மற்றும் சிந்தனை வறட்சியினால் தமிழக மாணவர்கள் உயர்கல்வியில் சந்திக்க நேரிடும் சிக்கல்களை பேரா.எஸ்.ராஜேந்திரன் ‘உயர்கல்வியில் கவலைகளும் தீர்க்கும் வழிகளும்’ என்ற தலைப்பில் வாதங்களுடன் பேசினார். 

முனைவர் சு.ராஜவேலு ‘அண்மைக்காலத்திய கல்வெட்டுக் கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்றினைப் புதிதாக எழுதுவதற்கு எவ்வாறு பயன்படுகின்றன’ என்ற தலைப்பிலும், முனைவர் பக்தவத்சல பாரதி ‘பண்டைக்காலத் தமிழ்ச் சமூகத்தின் மானிடவியல் கூறுகள்’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.  மாலையில் கல்லூரி முதல்வர் தலைமையில் நிறைவுரை யாற்றிய பேரா.கி.செம்பியன் மாணவர்கள் ஆய்வுப் பண்புகளை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.  முனைவர் ச.மயில்வாகனன் நன்றி தெரிவித்த துடன் சிறப்புரைகள் நிறைவுற்றன. 

இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் பயன்பெற்றனர்.  சிறப்புரைகளுக்கான அறிஞர்களைக் கல்லூரியின் வரலாற்றுத்துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் கி.இரா.சங்கரன் ஒழுங்கு செய்திருந்தார்.

Pin It