கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மத்திய பிரதேசத்திலுள்ள உஜெயின் நகரில் இரண்டு நாள் அகில இந்தியக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. இந்திய சமூக அறிவியல் கழகம் அந்தக் கருத்தரங்கிற்கு நிதியுதவி அளித்தது. இந்திய மாநிலங்களில் புதிய உள்ளாட்சியின் செயல்பாடுகள் ஒரு அரசாங்கமாக எப்படி இருக்கின்றன என்பதை இந்திய அளவில் தலைசிறந்த ஆய்வாளர்களை அழைத்து ஆய்வு அறிக்கையாகச் சமர்ப்பிக்க வைத்தனர். இதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது. இந்த ஆய்வுக் கருத்தரங்கை மத்தியப்பிரதேச சமூகவியல் ஆய்வு நிறுவனம் முன்னின்று நடத்தியது. இந்த ஆய்வினை 60% இளைய ஆராய்ச்சியாளர்களை வைத்து நடத்தியது ஒரு சிறப்பான செயலாக இருந்தது. எந்த மாநிலத்திலிருந்தும் உயர் அதிகாரிகளை அழைக்காமல் நடத்தப்பட்டது, இந்த நிகழ்வின் அடுத்த முக்கிய அம்சம். இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களிலிருந்தும் ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்வில் இந்திய அரசின் முன்னாள் பஞ்சாயத்துத் துறைச் செயலாளர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகள் பஞ்சாயத்துத் துறையில் செயலாளராக இருந்த காரணத்தால் தரவுகளில் எதாவது தவறு என்றால் அதை அவர் சரி செய்யக்கூடும் என்ற நிலையில் அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த நிகழ்வில் முக்கிய உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. 2015ஆம் ஆண்டு மத்திய அரசு தயாரித்த அதிகாரப் பரவல் அறிக்கைக்கு வழிகாட்டியாக இருந்தேன் என்பதனால். அகில இந்தியாவிலும் இந்த உள்ளாட்சிகளின் செயல்பாடுகளை மத்திய அரசு உருவாக்கிய பல்வேறு அறிக்கைகளிலிருந்தும், உலக அளவிலும், இந்திய அளவிலும் ஆய்வு நிறுவனங்கள் இதுவரை நடத்திய ஆய்வுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை வைத்தும் என் உரையைத் தயார் செய்து துவக்க விழாவில் உரை நிகழ்த்தினேன். அந்த நீண்ட நெடிய ஆங்கில உரையின் தமிழாக்கம்தான் இந்தக் கட்டுரை.

இன்றைய உள்ளாட்சிகள் அரசமைப்புச் சாசனத்தால் அரசாங்கமாக்கப்பட்டுள்ளன. இதை எந்த மாநில அரசும் மறுக்கவில்லை. காரணம், அரசமைப்புச் சாசனத்தில் பகுதி IX, IXAயில் உள்ளாட்சி அரசாங்கமாகச் சேர்க்கப்பட்டுவிட்டது என்பதால். அது நிலைத்த தன்மையைப் பெற்று மத்திய மாநில அரசுகள் போல் உருவாக்கம் பெற்றுவிட்டது. இதன் அடிப்படை என்பது இதுவரை மத்திய மாநில அரசுகளால், தன் திட்டங்களால் தொட முடியாத சாதாரண விளிம்புநிலை மக்களைப் பொருளாதார நிலையில் மேம்படுத்துவதையும், புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கிட வேண்டும் என்பதையும் அடிப்படையாக்கி, இந்தச் செயல்பாடுகளை மக்களின் பங்களிப்போடு செய்திட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.

இந்த முப்பது ஆண்டு காலத்தில் கேரள மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் உள்ளாட்சியை வலுப்படுத்த பெரு நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது ஒரு பெரும் சோகச் செய்தி. இதைச் சாதனையாகக் கூறும் காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆளும் மாநிலங்களிலேயே நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் ஒரு பெரும் முரண். உள்ளாட்சியை வலுப்படுத்தினால் அதனால் பலனடையப்போவது ஏழை, எளிய மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும்தான். அவர்களுக்காகவே கட்சிகளை நடத்துபவர்கள் கூட உள்ளாட்சியை வலுப்படுத்தப் போராடவில்லை என்பதுதான் இந்தியப் புதிர்.

இன்றைய மத்திய மாநில அரசாங்கங்களால் பெருமளவில் மேம்பாடு அடைந்த, அடைந்து கொண்டிக்கும் சமூகங்கள் உள்ளாட்சி வளர்வதற்குத் தடையாக இருந்து வருகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒரு கூட்டமைப்பாக கூட்டணி அமைத்துக்கொண்டு உள்ளாட்சி வலுவடைந்து விடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். உள்ளாட்சி வலுவடைந்து விட்டால் புதிய தலைமை உருவாகி தங்களுக்குப் போட்டி வந்துவிடும் என்று மக்கள் பிரதிநிதிகள் கருதுகின்றனர். 'உள்ளாட்சி வலுப்பெற்றால் மக்களை நம்மால் மேய்க்க முடியாது, அவர்கள் அச்சமற்று இயங்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று அதிகாரிகள் எண்ணுகின்றனர்.

உள்ளாட்சி அரசாங்கமாக வலுவடைய மத்திய, மாநில அரசுகள் உதவிடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்து இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அது வலுவடையாது. அரசமைப்புச் சாசனமும், மாநில உள்ளாட்சிச் சட்டமும் தந்துள்ள அதிகாரங்களை மக்கள் கையிலெடுக்க துணிவும் தெளிவும் வேண்டும். காரணம், மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் இன்று விரும்புவதில்லை, மாறாக, எந்தச் சூழலையும் பயன்படுத்தி தங்கள் கட்சிகளை வலுப்படுத்தி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தவிர, மக்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும், மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று எவரும் எண்ணுவதில்லை. அதன் விளைவுதான், இன்று மக்கள் அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும் அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். உள்ளாட்சி அரசாங்கமாக அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது இந்தியாவில் ஒரு புரட்சிகரச் செயல்பாடுதான். ஆனால் அரசமைப்புச் சாசனம் தந்த அதிகாரத்தை மக்களால் எடுக்க முடியவில்லையே?

இந்தப் புதிய உள்ளாட்சிச் சட்டத்திற்கு எதிராக உள்ள மாநில அரசின் பல சட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சிகள் சுதந்திரமாக இயங்க முடியும். இதற்காக ஒரு நிபுணர் குழுவை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்து அந்தச் சட்டங்களைக் கண்டுபிடித்து திருத்தம் செய்ய வேண்டும் என வல்லுநர்களும், ஒன்றிய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைப் பெரும்பாலான மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன. இன்னும்கூட இதைப்பற்றிய சிந்தனையற்று இருப்பதுதான் நாம் பார்க்கும் எதார்த்தம்.

அடுத்து, இந்தச் சட்டத்தால் பயனடையப் போகும் ஏழை எளிய மக்களிடம், பெண்களிடம், தாழ்த்தப்பட்ட மக்களிடம் இந்தப் புதிய சட்டத்தால் கிடைக்கப்போகும் நன்மைகளை எவரும் கொண்டு சேர்க்கவில்லை. மாறாக, இந்த உள்ளாட்சி அதிகாரமற்றது என்ற பிம்பத்தைக் கட்டமைத்து மக்களை அதன் மீது நம்பிக்கை இழக்க வைத்து விட்டது - இன்றைய மத்திய மாநில அரசுகளால் பயனடையும் ஒரு சமூகக் கூட்டம். அத்துடன் மக்கள் எவ்வாறு அரசுடன் இணைய வேண்டும், அவர்கள் எவ்வாறு கிராமசபையைத் தங்கள் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஆழ்ந்த விழிப்புணர்வை, நம் ஊடகங்களின் மூலம் உருவாக்கி இருக்க வேண்டும். அந்தச் செயல்பாடு முற்றிலுமாக எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை. இதற்கு ஒரே ஒரு மாநிலம் விதிவிலக்கு. கிராம சபைக்காக கிராமம் கிராமமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் சென்று விழிப்புணர்வு உருவாக்கியது ஒரு மாநிலம். அதுதான் கேரளா. அதற்கும் மத்திய அரசு நிதி உதவியது. வேறு எந்த மாநிலத்திலும் அந்த விழிப்புணர்வு உருவாக்கப்படவில்லை.

அடுத்து, அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்ட மாநிலத் தேர்தல் ஆணையம், எப்படி இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துகிறதோ அதேபோல் ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் இடைவெளி இல்லாமல் தேர்தல் நடத்தி சுதந்திரமாக உள்ளாட்சியை உருவாக்கிட வேண்டும். ஆனால் இந்த அமைப்புகளை ஊனமுற்றவையாக மாநில அரசுகள் உருவாக்கி வைத்து, உள்ளாட்சிக்கான தேர்தல் நடத்துவதற்கே, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று ஒவ்வொரு முறையும் உத்தரவு பெற்று தேர்தல் நடத்திடும் சூழலுக்கு மாநில அரசுகள் மாநில தேர்தல் ஆணையங்களை வைத்திருப்பது மக்களாட்சியை ஊனப்படுத்தும் ஒரு செயல். இதை எந்த அரசியல் கட்சியும் பொதுவெளியிலோ, பாராளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ விவாதிப்பதில்லை என்பது ஒரு பெரிய அரசியல் அறியாமை மற்றும் ஒரு சதி என்றே கூறவேண்டும்.

உள்ளாட்சி என்பது கிராமப்புற உள்ளாட்சி மட்டுமல்ல, நகர்ப்புற உள்ளாட்சியும் சேர்ந்தது தான். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் மாவட்டத்தில் உள்ளாட்சி அரசாங்கம். குறைந்தபட்சம் கிராமப்புற உள்ளாட்சியாவது ஏதோ ஒரு நிலையில் மக்களுடன் இணைந்து ஒரு சில பணிகளையாவது செய்கின்றன. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சியை, ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள்போல் ஆக்கி, அதிகாரிகள் கையில் விட்டு வைத்துள்ளது இந்திய மக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய சோக நிகழ்வு. கிராமப்புற உள்ளாட்சிக்கு ஓர் அமைச்சகம் மத்திய அரசாங்கத்தில் இயங்குகிறது. ஏதாவது ஒரு நிலையில் அது பஞ்சாயத்தை வலுப்படுத்த ஒரு சில முன்னெடுப்புகளையாவது செய்கிறது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சிக்கு அமைச்சகம் கிடையாது, அனைத்தும் சுமார்ட் சிட்டி, கட்டுமானப்பணிகள் என்ற அடிப்படையில், நகர உள்ளாட்சி அமைப்புகளை எந்தவித வலுவும் அற்றதாக ஆக்கி, அதிகாரிகள் கையில் விட்டுவிட்டனர். இந்தியாவில் மாநிலம் கேரள மாநிலம் மட்டும்தான் உள்ளாட்சிக்கு ஒரே அமைச்சகத்தை உருவாக்கி நகர்ப்புற உள்ளாட்சியையும், கிராமப்புற உள்ளாட்சியையும் ஒரு அரசாங்கமாக செயல்பட தொடர்ந்து தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

உள்ளாட்சி என்பது அரசாங்கமாக உருவாக்கப்பட்ட பின், உள்ளாட்சியை நடத்த முறையாகத் தயாரிக்கப்பட்ட நிர்வாகக் கையேடுதான் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வழிகாட்டும் சாசனம். கேரளத்தைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் அப்படி ஒரு கையேடு அரசாங்கத்தால் தயாரிக்கப்படவில்லை; மாறாக, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அவர்கள் கூறுவதன் அடிப்படையில் நிர்வாகத்தை நடத்தும்படி ஆக்கி வைத்துவிட்டனர். ஒட்டுமொத்த உள்ளாட்சியையும் அதிகாரிகளின் கைப்பாவையாக ஆக்கி வைத்திருப்பது இந்திய மக்களாட்சியில் ஒரு முரணான செயல். இதைப் பற்றியும் எந்த விவாதமும் எந்தப் பொது இடத்திலும் இல்லை என்பது ஒரு மக்களாட்சிச் சோக நிகழ்வு.

அடுத்து, உள்ளாட்சித் தலைவர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆளுகைக்கான, நிர்வாகத்திற்கான, தலைமைத்துவப் பயிற்சியைத் தரவேண்டும். இது ஒரு நிபுணத்துவச் செயல்பாடு. அதற்கு வலுவான கட்டமைப்புடன், தரமான பயிற்றுநர்களுடன் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட வேண்டும். அதை முறையாக நடத்தியதும் நடத்துவதும் கேரள மாநிலம் மட்டுமே. கேரளத்தில் மட்டும்தான் கிராமப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் ஒரே பயிற்சி நிறுவனம் பயிற்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களில் பயிற்சி எப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசு கொண்டு வந்த திட்டங்களை எப்படி அரசு அதிகாரிகளின் வழிகாட்டுதலில் நிறைவேற்றிட வேண்டும் என்பதை மையப்படுத்தித்தான் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதே தவிர, தலைமைத்துவப் பயிற்சியோ, ஆளுகைக்கான பயிற்சியோ எதையும் தரவில்லை என்பதைத்தான் அத்தனை ஆய்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.

அரசமைப்புச் சாசனம், உள்ளாட்சி அரசாங்கம் மக்களின் மேம்பாட்டிற்கு அவர்களின் கனவுகளுக்கு, தேவைகளுக்கு வடிவம் கொடுக்க ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு திட்டம் அவர்களின் பங்களிப்போடு கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இன்றுவரை, அதுவும் கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தவில்லை. இது ஒரு அரசமைப்புச் சாசன விதி மீறல். அரசமைப்புச் சாசனத்தை அவமானப்படுத்தும் ஒரு நிகழ்வு. இதையும் எவரும் கண்டு கொள்வதில்லை. இந்திய நாட்டின் பன்முகத்தன்மை, வித்தியாசங்கள், வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கியிருக்கின்ற சவால்களுக்குத் தீர்வு காணத்தான் மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு திட்டத்தை உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் நடந்ததோ மாநிலம் முழுமைக்கும் திட்டம் என்ற பெயரில் ஒரே விதமான கட்டுமானப்பணிகளை உருவாக்கி, திட்டமிடுதலுக்கே அவமானம் ஏற்படுத்தியதுதான்.

ஒரு அரசாங்கமாக உருவாக்கப்பட்ட உள்ளாட்சிகள் நிதி உருவாக்க அதிகாரங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதியினை உள்ளாட்சிகள் உருவாக்க வேண்டும். பொதுவாக, நிதிப்பகிர்வில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. இன்று ஜி.எஸ்.டி.யில் உள்ளாட்சிக்குத் தரவேண்டிய பகிர்வு செய்யப்படவில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சிக்கு நிதி உருவாக்கும் அதிகாரத்தைத் தந்து உள்ளாட்சியை நிதி உருவாக்கச் செய்ய வேண்டும். அதேபோல், நிதியைப் பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும். இவையெல்லாம் இன்று நடக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இன்று உள்ளாட்சிகளை மத்திய, மாநில அரசு தரும் நிதியினைச் செலவிடும் அமைப்பாக வைத்துள்ளது. இந்த அரசாங்கத்தின் மதிப்பை இழக்கச் செய்வதாகும். இந்தச் செயல்பாட்டில் தமிழ்நாடு குறைந்தபட்சமாக இந்தப் பணியை ஓரளவு செய்கின்றன என்பது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி. இந்தியா முழுமைக்கும் பார்த்தால், இது மத்திய, மாநில அரசுகள் தரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஓர் அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டதே தவிர, உள்ளாட்சி அரசாங்கமாக மலரவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

அரசமைப்புச் சாசனத்தால் உருவாக்கப்பட்ட கிராமசபை லோக்சபாவுக்கு நிகரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், கிராமசபையை வலுவடையவிடாமல் ஒரு வடையிலும் ஒரு குவளை தேநீரிலும் மக்களைக் கரைய வைத்து கிராமசபை உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சபையை முடித்து விடுகின்றனர். யானை தன் வலி அறியாமல் பாகன் வைத்திருக்கின்ற ஒரு குச்சியில் செயல்பட வைத்துள்ளதுபோல் நம் ஊர்களில் கிராமசபையை மக்களுக்குச் சென்றுவிடாமல் பாதுகாத்து வைத்துவிட்டது ஒரு கூட்டம். கிராமசபைதான் மக்களின் மக்களாட்சித் திறனை வளர்க்கும் அற்புதமான கருவி. அதைப் பிடிப்பதன் மூலம் மக்கள் தங்களுக்கான குறைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல, அது ஒரு மக்களாட்சிக்கான நாற்றங்கால். கிராமசபையின் கேள்வி கேட்பது, விவாதிப்பது, கருத்து பரிமாறிக்கொள்வது, என மக்களாட்சிக்கான பயிற்சி நடைபெறும் இடம். சாதாரண மக்கள் இதனைப் பயன்படுத்தி தங்களின் சுயமரியாதையை மீட்கும் இடம் கிராமசபை. அங்குதான் சமத்துவம் பழகும் பக்குவத்தை மக்கள் பெறுகின்றனர்.

இன்றைய சூழலில் கிராமப்புற மக்கள் பல புதுமையான பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். காரணம், உலகமயமான பொருளாதாரத்தால். மக்கள் தேவைக்கு வாழ்வதைவிட ஆசைக்கு வாழ சந்தை கற்றுக் கொடுத்துவிட்டது. அதன் விளைவு, மக்களிடமிருந்த சேமிப்பு மனோபாவம் மாறி செலவழிக்கும் மனோபாவத்திற்கு வந்துவிட்டனர். பொருள்களை வாங்கிக் குவித்து, கடனில் மூழ்குகின்றனர். எல்லை இல்லாத அளவுக்குக் குப்பை உருவாக்குகின்றனர். நுகர்வோராக மாறிய பின் பொதுச்சிந்தனையற்று சுயநலச் சிந்தனை மேலோங்கி செயல்படத் தொடங்கி ஆரம்பித்து எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற தன்மையில் செயல்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. அது மட்டுமல்ல, கிராமத்தில் கிராமிய வாழ்வை சமூகமாக வாழாமல் நகர வாழ்வை வாழ்வது ஒரு நகை முரண். கிராமம் அதன் அடிப்படை குணங்களை இழந்து வருகின்றது - இன்றைய நுகர்வுக் கலாசாரத்தால். அடுத்துப் பொருளாதாரம் குவிக்கப்படும் சூழலில் அதிகாரம் மட்டும் எப்படி பரவலாக்கப்படும். இரண்டும் ஒன்றாகத்தானே பயணிக்கும். அதிகாரம் பரவலாக்கப்படுவது விளிம்புநிலை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் உதவிடும் நிலையில்தான் தலித்துக்களுக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டில் அந்த மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று பார்த்தால், இவர்களின் பிரச்சினைகள் பேசப்பட்டன. ஆனால் அதிகாரப் பரவல் சந்தைக்கு சாதகமாகச் செயல்பட்டு வருவதைத்தான் ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அடுத்து, புதிய உள்ளாட்சிகள் மூலம் புதியக் தலைமை அடித்தட்டு மக்களிடமிருந்து உருவாகிக் கொண்டிருப்பது சமூகத்திற்கு நன்மை பயக்கும்தான். ஆனால் இன்று தங்களிடம் உள்ள இன்று மக்களை மேய்க்கும் அதிகாரம் எங்கும் போய்விடக் கூடாது என எண்ணிச் செயல்படும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சியால் உருவாகும் புதிய தலைமைக்கு எல்லையற்ற சவால்களைத் தந்து செயல்படுவது ஒரு கலாசாரமாகவே உருவாகிவிட்டது.

மத்திய, மாநில அரசாங்கங்களால் தீர்க்க முடியாத அடிப்படைப் பிரச்சினைகளை உள்ளாட்சிகள் தீர்க்கும், தீர்க்க முடியும் என்பதும் எதிர்பார்ப்பு. மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கொள்கைகளை உருவாக்கலாம், நிதி ஒதுக்கலாம். ஆனால் மக்களின் உள்ளார்ந்த தேவைகளை உள்ளாட்சிகள் மட்டும்தான் தீர்க்க முடியும். அதுவும் மக்களின் பங்களிப்புடன். இந்த முடிவுக்கு மத்திய, மாநில அரசுகள் வந்ததால்தான் புதிய உள்ளாட்சி அரசாங்கமாக உருவாக்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு எங்கு சாத்தியப்பட்டது என்று ஆய்வு செய்தால், நமக்குக் கிடைக்கும் தரவுகளின்படி நல்ல தலைமை உள்ள இடத்தில் என்றுதான் பதில் கிடைத்துள்ளது. எங்கு நல்ல திறமையான தலைமை உருவானதோ அங்கு அது நடைபெற்றுள்ளது. மற்ற இடங்களில் உள்ளாட்சித் தலைவர்களும் மக்களுடன் இருப்பதற்குப் பதிலாக மக்களைப் புறக்கணித்து, அதிகாரிகளுடன் கைகோத்து புதிய கூட்டணி ஏற்படுத்தி மக்களை மேய்க்க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கற்றுக் கொண்டுவிட்டனர் என்பது நாம் பார்க்கும் கள நிகழ்வு. உள்ளாட்சியில் சாதனை படைத்த தலைவர்கள் என்பவர்கள் மாற்றுத் தலைமை கொண்டவர்கள். அவர்கள் மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள். அவர்கள் மேய்க்கும் தரகுத் தலைவர்கள் அல்லர். தங்களை மக்களோடு இணைத்துக் கொண்டவர்கள்.

உள்ளாட்சியில் சமூக மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்கும், விளிம்புநிலை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கும் உள்ள வாய்ப்பு இருப்பதை எங்கெல்லாம் நல்ல தலைமையும், ஒற்றுமையாக சமூகமாக வாழும் பண்பு கொண்ட மக்களும் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் நிரூபித்திருக்கிறார்கள். அந்த நிலையில்தான் இன்றைய சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு உள்ளாட்சியில்தான் இருக்கிறது என்று நம்மை அழுத்தமாகக் கூற வைக்கிறது. அதே நேரத்தில் அங்கு உருவாகும் தலைமை என்பது மிக முக்கியப் பங்கு அதில் வகிக்கிறது. அப்படிப்பட்ட வழிகாட்டும் தலைமைப் பயிற்சிதான் உள்ளாட்சித் தலைவர்களுக்கும் தேவைப்படுகிறது. அந்தப் பயிற்சியைத்தான் பயிற்சி நிலையங்கள் கொடுக்க வேண்டும். அதற்குப் பயிற்சி நிலையங்களைத் தயார் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி வலுப்படுவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது என்பதும், சிறப்பாகச் செயல்படுவது கிராமங்களில் உருவாகும் தலைமையையும், மக்களின் சமூகப்பார்வையையும் பொருத்தது என்பதும்தான் இதுவரை நாம் ஆய்வில் கண்ட உண்மைகள். அதே நேரத்தில், இன்றுள்ள சூழலில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களை ஒன்றிணைப்பதும், உள்ளாட்சியை வலுப்படுத்துவதும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்களுடன் செயல்படுவதும்தான் ஒரே வழி. இன்று நாம் போராடும் வேலை உறுதி அளிப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் அனைத்தும் மக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பெற்றவைதான். அவற்றை யாரும் தட்டில் வைத்து மக்களுக்குத் தரவில்லை. இதை நாம் புரிந்துகொண்டு உள்ளாட்சியில் உள்ள வாய்ப்புகளைப் பிடித்துச் செயல்பட மக்களைத் தயார் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் மத்திய அரசு செய்த ஆய்வுகளில், உலக வங்கி மற்றும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஆய்வு செய்து கொண்டு வந்த ஆய்வு அறிக்கைகளிலிருந்து திரட்டப்பட்ட கருத்துக்கள்தான் என்பதைக் கூறி, என் உரையை நிறைவு செய்தேன். இந்த இரண்டு நாள் நிகழ்வில் மக்களைத் திரட்டுவதிலும், மக்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளாட்சி வலிமை பெறும் என்ற பெரும் செய்தியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது.

- க.பழனித்துரை, பேராசிரியர், காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)