art 450பந்தைக் கொண்டு பல்வேறு வகையான விளை யாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. கால்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, பூப்பந்து, மட்டைப் பந்து என்பன பந்தைக் கொண்டு ஆடும் விளையாட்டு வகைகளாக உள்ளன. பந்து விளையாட்டுத் தமிழர் களிடம் பாரம்பரியமாக இருந்துவரும் ஒரு விளையாட்டு வகையாகக் காணப்படுகின்றது. இக்காலத்தில் பந்து விளையாட்டை ஆண் பெண் இருபாலரும் ஆடு கின்றனர். பழங்காலத்தில் இந்த விளையாட்டை மகளிர் மட்டுமே ஆடியுள்ளனர்.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் நாயகி வசந்தவல்லி தெருவில் பந்தாடிக்கொண்டிருந்த காட்சியைத் திரிகூடராசப்பக் கவிராயர்,

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு

 தோள்வளை நின்றாடப்   புனை

பாடக முன்சிறு பாதமும் அங்கொரு

 பாவனை கொண்டாட  நய

நாடகம் ஆடிய தோகை மயிலென

 நன்னகர் வீதியிலே  அணி

ஆடகவல்லி வசந்த ஒய்யாரி

அடர்ந்துபந்து ஆடினளே!

என அழகியல் உணர்வுகளுடன் பதிவு செய்திருக்கிறார். ‘சூடகம் அணியப் பெற்றிருக்கும் முன்கைகளிலே அணிந்துள்ள வெள்ளிய வளையல்கள் தம் அருகே தோன்றக் கண்டு, தோள் வளைகளும் மேலெழுந்தாடின. காலில் புனைந்துள்ள பாடகமும், சிறுபாதச் சிலம்பும் மேலும் கீழுமாக எழுந்தாடி அவை அங்கொரு பாவனை கொண்டவை போல ஆடிக்கொண்டிருந்தன. நன்மை விளங்கும் நகரமாகிய திருக்குற்றாலத்து வீதியிலே, அழகிய பொன்கொடி போன்ற ஒயிலினளான வசந்தவல்லியானவள், நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு தோகை மயிலினைப் போலவே, ஒய்யாரமாகத் துள்ளித் துள்ளிப் பந்தாடிக் கொண்டிருந்தனள்’ என்பது கவிஞரின் வரிகளுக்குப் பொருளாகும்.

கவிராயரின் பாடலடிகள் வசந்தவல்லி பந்தாடி யதைக் காட்சியாகக் கண்முன் நிறுத்துகின்றன. வசந்த வல்லியைப் போன்று சங்க காலப் பெண்ணொருத்தியும் தெருவில் பந்தாடிக்கொண்டிருக்கும் காட்சியைப் பழம் புலவரொருவர் பதிவுசெய்திருக்கிறார். இளம் பெண் ணொருத்தித் தோழியுடன் தெருவில் பந்தாடிக் கொண்டிருக்கிறாள்; அப்பொழுது அந்தத் தெரு வழியாக வரும் ஆடவனொருவன், பந்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிடுகிறான். பின்னொருநாள் அந்த ஆடவனைச் சந்திக்க வேண்டிய சூழல் அந்தப் பெண்ணுக்கு அமைந்துவிடுகின்றது. வேறொரு

நாளில் அந்தச் சந்திப்பு பற்றித் தோழியிடம் இவ்வாறு விவரித்துக் கூறுகிறாள் அந்தப் பெண்.

“தோழி நான் ஒரு செய்தி சொல்கிறேன் கேள். தெருவில் நாம் விளையாடக் கட்டிய மணல் வீட்டைக் காலால் உதைத்துச் சிதைத்து அழித்தது மட்டுமின்றி, தலையில் வைத்திருந்த பூவையும் இழுத்து அறுத்து,

நாம் விளையாடிய பந்தையும் பறித்துக்கொண்டு விளை யாடாத வகையில் நம்மைத் துன்புறுத்திச் சென்றானே ஒருத்தன் (‘சிறு பட்டி’ என்று சொல்லியிருப்பாள்), அவன், நானும் அம்மாவும் வீட்டிலிருந்தபொழுது ஒருநாள் வந்து, வாசலில் நின்று குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். எனது அம்மாவும் யாரோ குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள், கொண்டுபோய் கொடுத்துவிட்டு வா என்று சொன்னாள். வந்தவன் அவனென்று தெரியாமல் நானும் தண்ணீரைச் செம்பில் எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்றேன். தண்ணீரைக் கொடுக்கலாம் என்று செம்பை நீட்டியவுடன் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டான் அவன். நானும் என்ன செய்வதென்று தெரியாமல் அம்மா! என்று அஞ்சி அலறிவிட்டேன். வீட்டினுள் இருந்த அம்மாவும் அலறி ஓடி வந்து என்ன என்ன என்று கேட்டாள்.

நடந்ததை மறைத்து, ஒன்றும் இல்லை அம்மா ‘தண்ணீர் குடிக்கும் போது விக்கிவிட்டது’ என்று பொய்யாகச் சொல்லிச் சமாளித்தேன். அம்மாவும் அதை உண்மையென நினைத்துக்கொண்டு ‘மெதுவாகக் குடிக்கச் சொல்லக் கூடாதா!’ என்று சொல்லியவாறே அவன் தலையில் தட்டிவிட்டாள். அப்பொழுது என் அம்மா அறியாத வகையில் அந்தத் திருட்டுப் பையன் என்னைக் கடைக் கண்ணாலேயே குறும்பாகப் பார்த்துச் சிரித்தான். அச்சிரிப்பு என்னை நாணச்செய்துவிட்டது. இத்தகைய ஒரு மகிழ்ச்சி தரும் சந்திப்பு இன்று நடந்தது”.

பருவ வயதை அடைந்த பெண்ணொருத்திக் காதலுற்ற செய்தியைக் காதல் மொழியில் கற்பனைத் திறத்துடன் தோழியிடம் சொல்லுவதாக அமைந்த அந்தப் பாடல் சங்கத் தொகை நூலான கலித் தொகையில் (52) அமைந்துள்ளது. பாடலைப் பாடியவர் ‘கபிலர்’ என்னும் சங்கப் புலவர் ஆவார். பந்து விளை யாட்டு பெண்களுக்குரியது என்ற செய்தியை இப்பாடல் வழியாகப் பெறமுடிகின்றது.

சங்க காலத்திலிருந்த பந்து, நூலால் செய்யப் பெற்றிருந்ததைப் பெரும்பாணாற்றுப்படைவழி அறிய முடிகின்றது. இந்நூலின் ஓரிடத்தில் நீர்ப்பெற்று துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு விவரித்துக் கூறப் படுகின்றது. அந்நகரப் பெண்களின் இயல்பைச் சுட்டு மிடத்தில் ‘கால்களில் அணிந்திருந்த பொன்சிலம்புகள் ஒலிக்க நூலால் கட்டப்பட்ட பந்தினை வைத்து ஆடிக்கொண்டிருந்தனர்’ (தமனியப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை, வான் தோய் மாடத்து வரிப் பந்து அசைஇக், 332, 333) என்றொரு செய்தி வருகின்றது. பெண்கள் கால்சிலம்பு ஒலிக்கப் பந்தாடி யுள்ளனர் என்பதை இப்பாடலடிகள் சுட்டிநிற்கின்றன.

வண்ண வண்ண நூல்களால் செய்யப்பெற்ற பந்து வகைகளும் (வரி அணி பந்து; நற். 305) அக்காலத்தில் இருந்துள்ளன. இப்படி பெண்கள் பந்தாடிய செய்தியும், பந்து வகைகள் பற்றியும் சங்க இலக்கியப் பாடல்களில் பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கயமனார் எனும் சங்கப் புலவர் விளையாடப் பெறும் பந்தை ‘ஆடுபந்து’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பாடல் நற்றிணைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது. ஆடவனொருவன் திருமணம் செய்து கொள்வதற்காகத் தனது காதலியை உறவினருக்குத் தெரியாமல் அழைத்துக்கொண்டு போகிறான். வழியில் ஓரிடத்தில், உடன் வரும் நண்பனிடம் காதலியின் இயல்பை இவ்வாறு எடுத்துக்கூறுகிறான்:

அந்தோ! தானே அளியள் தாயே

நொந்துஅழி அவலமொடு என்ஆ குவள் கொல்

பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள்

கோடுமுற்று யானை காடுடன் நிறைதர

நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்

செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்

ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி

அம்சில் ஓதி இவள்உறும்

பஞ்சி மெல்அடி நடைபயிற் றும்மே (நற். 324)

‘தலைவி பொன்னைப் போல் மேனியை உடையவள். அதனால் அவள் தாய் அவளை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தாள். அத்தகைய மென்மையும் இளமை நலனும் வாய்ந்தவள்; என்மேலுள்ள காதலால் மட்டுமே உடன்வந்திருக்கிறாள். நாம் வந்திருக்கும் இம்மலையில், முற்றிய தந்தங்களை உடைய யானைகள் நிரம்ப உள்ளதால், வேல்படையை உடைய இவளுடைய தந்தையின் இல்லத்தில் பந்தைக் காலால் உருட்டி ஓடியாடி விளையாடுவதுபோல், இங்கு யானைகளுக்குப் பயந்து அங்குமிங்குமாக ஓடி ஓடிக் களைத்து மென்மை யாக கால்கள் நோக மெல்ல நடக்கின்றாள். இதை அறிந்தால் அவள் தாய் துன்பத்தால் மனம் நொந்து போவாள்’ என்று வருந்திக் கூறுகிறான் அந்த ஆடவன்.

சங்க காலப் பெண்கள் கால் பந்தாட்டத்தை ஆடி யுள்ளனர் என்ற குறிப்பு இப்பாடலில் வெளிப்படு கின்றது. இல்லறம் புகுந்த ஆடவனொருவன் பொரு ளுக்காக மனைவியை விட்டுப் பிரிய முற்படுகிறான். மனைவிக்குக் கணவன் பிரிந்து செல்வதில் மனம் விரும்பவில்லை. உடனிருக்கும் தோழி ஆடவன் பிரிந்து செல்ல அனுமதிக்கிறாள். தோழியின் அச்செயலை அறிந்த அந்த ஆடவனின் மனைவியானவள், அவளை நோக்கி, ‘ஆடவர் பொருளுக்குப் பிரிதல் அவர்தம் பண்பு; எனவே நீ செய்தது நன்று’ என்று கூறுகிறாள். இப்பொருளமைய உள்ள பாடல் நற்றிணையின் 24ஆம் பாடல். இந்தப் பாடலில் விளையாடப்பெறாமலிருக்கும் பந்தை ‘ஆட்டொழி பந்து’ என்று அழைத்திருக்கிறார் சங்கப் புலவரொருவர்.

மார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு

உடும்புஅடைந் தன்ன நெடும்பொரி விளவின்

ஆட்டொழி பந்தின் கோட்டுமூக்கு இறுபு

கம்பலத்து அன்ன பைம்பயிர்த் தாஅம்

வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆரிடைச்

சேறும் நாமெனச் சொல்லச் சேயிழை

நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே

செயல்படு மனத்தர் செய்பொருட்கு

அகல்வர் ஆடவர் அதுஅதன் பண்பே (நற். 24)

‘தோழி! நிலம் பிளவுபடுமாறு இறங்கிய வேரும், பெரிய கிளைகளும் உடைய விளா மரத்தின் அடிமரம் உடும்பின்மேல் உள்ள செதில்கள் போல் காட்சி அளிக்கும். அந்த உயர்ந்த விளாமரத்தில் உள்ள விளாம்பழம், காம்பு இற்று, ஆடுதல் விடுத்த பந்துபோல் கீழே விழுந்து கிடக்கும்; அத்தகைய விளாம்பழங்களை உணவாக உட்கொள்ளும் பாலை வழியே பிரியும் தலைவனுக்கு அது நல்லதொரு செயல் என்று விருப்பத் தோடு கூறினாய்! ஆடவர் பொருளுக்காகப் பிரிந்து செல்லும் இயல்பினர். அவ்வாறு செல்லும்போது தடுத்து நிறுத்தாமல் விடுத்தலே நல்ல பண்பாகும்’ என்று தோழியின் செயலைக் கண்டு இல்லறப் பெண் மகிழ்ந்து கூறுகிறாள். விழுந்து கிடக்கும் விளாம்பழம் விளை யாடப் பெறாத பந்திற்கு உவமையாக்கப் புனையப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் பல்வேறு வகையான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்துள்ளனர். மகளிர் விளையாட்டுக்களாக வண்டலிழைத்தல், புனல் விளையாட்டு, வட்டாடுதல், ஊசலாட்டம், பந்தாடுதல், கழங்காடுதல், ஓரையாடுதல் ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் பந்து விளையாட்டு பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

விளையாடுகின்ற பந்தை ‘ஆடு பந்து’ என்றும் விளையாடப்பெறாமல் கிடக்கும் பந்தை ‘ஆட்டொழி பந்து’ என்றும் இரு சங்கப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது நம் கவனத்தை ஈர்க்கும் சொற்குறிப்புகளாகும். இவ் வகைச் சொல்லாடல்கள் பண்டைத் தமிழர்களிடமிருந்த பந்து விளையாட்டு குறித்த இடத்தைத் தெளிவுபடுத்து கின்றது.

துணைநின்ற நூல்கள்

1.  தமிழண்ணல்; அண்ணாமாலை, சுப. (ப. ஆ.). 2003. நற்றிணை (உரையாசிரியர்: கதிர் மகாதேவன்), கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

2. பரிமணம், அ.மா.; பாலசுப்பிரமணியன், கு.வே. 2011(4ஆம் பதிப்பு). நற்றிணை மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) பிட்.

3.தமிழண்ணல்; அண்ணாமாலை, சுப. (ப. ஆ.). 2002. நற்றிணை (உரையாசிரியர்: தமிழண்ணல்), கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

4.சாமிநாதையர், உ. வே. (ப. ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு) பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

5.திரிகூடராசப்பக் கவிராயர். 2006. திருக்குற்றாலக் குறவஞ்சி, சென்னை: யாழ் வெளியீடு.

பின் குறிப்புகள்

 (சங்கத் தொகை நூல்களில் பந்து எனும் சொல் பயின்றுவரும் பாடல் குறிப்புகள்)

1.  வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் - நற்.12:6

2. ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு - நற். 24:3

3. பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி - நற்.140:7

4.  பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி - நற்.179:2

5.  பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ - நற். 249:7

6. வரி அணி பந்தும் வாடிய வயலையும் - நற். 305:1

7.   ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி - நற். 324:7

8. பாலும் உண்ணாள் பந்து உடன் மேவாள் - குறு. 396:1

9. பந்து ஆடு மகளிரின் படர்தரும் - ஐங். 295:5

10.பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே - ஐங். 377:4

11.  கோதை வரிப் பந்து கொண்டு எறிவார் - பரி. 9:47

12. பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி - பரி.10:107

13.  விண் தோய் வரைப் பந்து எறிந்த அயாவிடத்து - கலி. 40:22

14.  கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி - கலி. 51:3

15. இளமையான் எறி பந்தோடு இகத்தந்தாய் கேள் இனி - கலி. 57:7

16.வளம் கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும் - அக.17:1

17. கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் - அக. 49:1

18. பந்து புடைப்பு அன்ன பாணிப் பல் அடி - அக.105:9

19. பந்து வழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி - அக.153:3

20. ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் - அக. 219:2

21.  பந்தர் வயலைப் பந்து எறிந்து ஆடி - அக. 275:3

22. மலரா மாலைப் பந்து கண்டன்ன - புற. 33:13

23.வரிப் புனை பந்தொடு பாவை தூங்க - திரு. 0:68

24. வான் தோய் மாடத்து வரிப் பந்து அசைஇ - பெரு. 0:333

Pin It