முன்னுரை

ஒரு மொழியைப் பேசுவோரின் பழம் பண் பாடு, வரலாறு, விஞ்ஞான அறிவு போன்றவற்றை அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் தெற்றெனப் புலப்படுத்துவனவாகும். புழம் பெருமைவாய்ந்த மொழிகளின் சொற்களுக்கே இந்த இயல்பு மிகுதி. தமிழ் மக்கள் தம் நாட்டின் திசைகளுக்கு இட்டு வழங்கிய பெயர்கள் அவர்களுடைய பெயரிடும் ஆற்றல் முதலியனவற்றை விளக்குவனவாக உள்ளன.

தமிழில் திசைப் பெயர்கள்:

வடக்கு, தெற்கு, குணக்கு, குடக்கு என்பன தமிழில் நாற்றிசைகளின் பெயர்களாம். குணக்கைக் குறிக்கக் கிழக்கும், குடக்கைக் குறிக்க மேற்கும் பிறகு தோன்றிய மாற்றுப்பெயர்கள். இவை தோன்றிய பின்னரே நூல்கள் உருவாயிருத்தல் வேண்டும். நூல்களில் இந்த ஆறு பெயர்களும் காணப்படுகின்றன. தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்த பிறகு தான் திசைப் பெயர்களின் தோற்றம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கின் பழமைக்கு இது சான்று பகருகிறது.

வடக்கு:

தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் பழங்காலத்தில் அரணாக இருந்தது. எனவே, ஊடுருவல்கள் எல்லாம் நாட்டின் வடக்கிலிருந்தே ஏற்பட்டன. ஊடுருவல்களில் போர்கள் நிகழ்ந் திருக்கலாம்; வடவரின் குடியேற்றங்களும் தமிழ் நாட்டு வடபகுதி வரைப்புகளில் ஏற்பட்டிருக்க லாம்.

தெற்கே தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கையிலிருந்தும் ஊடுருவல்கள் பாரதத்துள் இருந்தன என்பது இராமாயணத்திலிருந்து தெரிகிறது. தாடகை, சுபாகு, மாரீசன் ஆகிய இவர்களின் தலை மையில் வட பாரதத்தில் அரக்கரின் குடியேற்றம் ஒன்றிருந்தது. தண்டகாரணியத்தில் சூர்ப்பனகையின் கண்காணிப்பில் கர தூடணர் முதலியோரின் குடியேற்றங்களும் இருந்தன. எனினும் அரக்கரின் துன்புறுத்தல் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ இருக்கவில்லை. அகத்திய முனிவர் இராவணனைக் காந்தருவத்தால் பிணித்து அவனைத் தமிழ்நாட்டை அணுகாதவாறு ஒப்பந்தம் செய்துகொண்டமை பழம் நூல்களால் தெரிகிறது. எனவே, தமிழர் வடநாட்டு ஊடுருவல்களையே வெறுத்தனர்.

நாற்றிசைகளிலிருந்து வீசும் காற்றுக்கும் தமிழில் வேறு வேறு பெயருண்டு. அவையும் காரணப்பெயர்களே. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை. தமிழ் மக்களுக்கும் விலங்கு, புள் முதலிய வற்றுக்கும் ஒவ்வாத குளிர் காற்று இது. நூல்கள் இதன் துன்பத்தை விளக்குகின்றன.

ஊடுருவல்கள், வாடைக்காற்று இவை இரண்டின் காரணமாகத் தமிழ் மக்கள் வட திசையை வெறுத்து வந்தனர். அவர்கள் விரும்பாத திசை அது என்பதனை வடக்கு என்னும் சொல்ல மைப்பே கூறும்.

‘வட்’ என்னும் வேர்ச் சொல்லின் வழியே வடி, வடு, வாடை, வடக்கு, வாடு, வாட்டு, வட்டு போன்ற சொற்கள் தோன்றியுள்ளன. ‘வடு’ என்பது ஆறாத தழும்பு. பயிர்கள் உயிர்கள், முதலியவற்றை வாடச் செய்வது வாடை. ‘அவர்களின் வாடையே இனி நமக்கு வேண்டாம்’ என்னும் தொடரில் வாடை இழிசொல்லே. ‘வாட்டு’ என்பது துன் புறுத்தலைக் குறிக்கும். ‘வடி’ என்பது கூர்மை; வடிவாள் என்பதனைக் காண்க. வற்றிப்போன உலர்ந்து திரங்கிய பொருள் வட்டு. “கல்லாச் சிறுவர் நெல்லி வாட்டாடும்” என்பது ஒன்று. சூதாடும் கருவியும் வட்டே.

பழங்காலத்தில் வாழ்ந்த சான்றோர் மேற் கொண்ட வழக்கு ஒன்று வடக்கிருத்தல் எனப் படும். மானம் அழியவரும் காலத்தில் அதனை நிறுத்தி உயிரை விடத் துணிந்த மேலோர், தாம் வாழ்ந்த ஊருக்கு வடபால் ஓரிடத்திலமர்ந்து பட்டினி கிடந்து மாண்டனர். உயிர் விடுதற்குத் தமிழர் தமக்கு ஏலாத வடதிசையைத் தேர்ந்தெடுத் தமை ஈண்டு நோக்கர்பாலது.

தமிழ்நாட்டில் துர்க்கைகளின் ஆலயங்கள் ஊருக்கு வடக்கேயமைந்திருக்கின்றன. ஆயுதங் களையேந்திய அம்மை வடபுரம் நோக்கியவாறு நாட்டைக்காக்க அமைந்துள்ளாள். செல்லி யம்மன் கோயில்கள் இதற்குவோர் எடுத்துக் காட்டு.

‘வாழ்ந்தவன் வடக்குப் போகான்

தேய்ந்தவன் தெற்குப் போகான்’

என்பது பழமொழி. தமிழர் விரும்பாத திசை வடக்கு என்பதனைக் காட்டவே இவ்வளவும் கூறப் பட்டது.

தெற்கு:

தமிழ் மக்கள் மிக விருப்புடன் ஏற்றுக் கொண்ட திசை தெற்கு. ‘தென்’ என்னும் வேர்ச் சொல்லடியாகத் தோன்றியது தெற்கு (தென்+கு). இனிமை என்ற பொருளது தென், தேன், தென்னை, தேங்காய், தேம் என்பவற்றின் வடிவங்கள் தென் என்பதிலிருந்தே கிளைத்துள்ளன.

தெற்கேயிருந்து வீசும் காற்று தென்றல்; இனிய காற்றுயென்பது இதன் பொருள். பரந்த தென்கடல் நீர்ப்பரப்பின் வழியே சந்தனமரம் முதலிய தண்ணறும் பொழில்களின் ஊடே மெல்லெனத் தவழ்ந்து வீசும் காற்று இது ‘மலையாமாருதம், மந்தமாருதம், மலாய நிலம்’ என்று வடமொழி நூலாரும் புகழ்வதிது. தமிழ் நாட்டாருக்கு இனிய பருவமாகிய இளவேனிற் காலத்தில் இனிய நுகர்ச்சிக்கேதுவான பல செயல்கள் அவற்றுக்குரிய பொருள்கள் தமிழ் நாட்டில் காணப்படும். இன்ப நுகர்ச்சியின் உருவகம் மன்மதன். அவர் ஊரும் தேர், தென்றல்.

தமிழ்நாடு தென்கடல் வழியே தன் கடல் வாணிகத்தைப் பெருக்கிக் கொண்டது. தென்கடல் தமிழ்நாட்டின் சிறப்புக்குக் காரணமாகிய முத்தை ஈன்று தந்தது. பல வகைகளில் செல்வம் பழுநிய திசையை - இனிய திசையைத் தமிழர் தெற்கு என்றனர்.

குணக்கு:

தமிழ்நாட்டின் கீழ்பால் எல்லை கடல். கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பூட்டியது. ‘ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும். குண்டு என்பது ஆழம். தெலுங்கிலும் இச் சொல் ‘குண்ட்ட’ என்றுள்ளது. இவற்றின் வேர்ச் சொல் ‘குண்’. தமிழில் ழகர ணகரங்களும் ளகர ணகரங்களும் வேறுபாடின்றிச் சொற்களில் ஆட்சி பெற்று உள்ளன. எனவே, ‘குண்’ பிறகு ‘குழ்’ ஆயிற்று. குழி (குழ்+இ) ஆழமான நீர்க்குட்டையை உணர்த்தும்.

“கனமணி வாங்கிக் கடல் கொடுத்த தென்னத்

தினமணி வந்து தயம் செய்ய”

(திருவாரூர் உலா)

என்பதில் கடலாம் ஆழ்நீர்ப் பகுதியிலிருந்து கதிரவன் தோன்றுவது கூறப்பட்டது. குண் என்ற வேர்ச் சொல் வழியது குணக்கு.

குணக்கு என்பதன் மறுபெயர் கிழக்கு. இதுவும் மேலே கூறிய பொருள் பற்றித் தோன்றிய சொல்லே. ‘கீழ்’ என்பது வேர்ச் சொல். மண்ணி லிருந்து ‘கீண்டு’ வருவது கிழங்கு. கதிரவன் கடற் பரப்பைக் கீண்டு புறப்படுந்திசை கிழக்கு.

‘கீழ்’ என்பது ‘கீண்’ என்றும் வழங்கியிருத்தல் வேண்டும். இவ்வழக்கு தனிச் சொல்லில் இல்லை. வேர்ச்சொல் அளவில் ழகர ணகரங்கள் பயன் பட்டன. “கிணறு” என்பதன் வேர்ச் சொல் ‘கீண்’. நீர்கீண்டு வருவது கிணறு.

எள், எண் - பெள், பெண் - ஆள், ஆண் - மள், மண் போன்ற ளகர ணகரங்கள் சொற்களில் வேறு பாடின்றிப் பயின்றமையைக் காட்டும். பெட்புக் குரியவள் பெண்; ஆண்மை மிகுந்தவன் ஆண்; மள் என்பது மண். மண்ணில் வேளாண்மை செய்வோர் மள்ளர். குண், குழ், கிண், கிழ், கிள் போன்றனவும் இங்ஙனம் வேறுபாடின்றிச் சொற்களில் ஆட்சி பெற்றனவாகும். ‘கிள்’ என்பதும் தோண்டு என்ற பொருளதே.

மேகங்களின் தொகுதி கடலிலிருந்து கீண்டு வந்து தமிழ்நாட்டுக்கு மழையைத் தரும் காலம் கார்காலம். கிழக்குக் கடல்வழியேதான், இக் காலத்தில் மழை மேகங்கள் கீண்டெழும் திசையைத் தமிழர் கிழக்கு என்றலும் பொருந்தும். தெலுங்கில் ‘தூருபு’ என்பது கிழக்கின் பெயர். ‘தூர’ என்பது அம்மொழியில் தூற்றல் (நீர்த் துளிகள்) என்ப தாகும்.

மேகங்கள் கீழ்க் கடலிலிருந்து எழுவதனால் கீழ்த்திசையிலிருந்து வீசும் காற்றைத் தமிழர் ‘கொண்டல்’ என்றனர். கொண்டல் என்பது கார் மேகம். கார்மேகங்களைத் தரும் காற்று கொண்ட லாகும்.

குடக்கு:

அரபிக்கடலை எல்லையாகவுடைய தமிழ் நாட்டு நிலப்பரப்பைத் தமிழர் குடக்கு என்றனர். கரை ஓரம் குடம் போல் குழிந்தும் அருகில் தென் வடலாக மேற்கு மலைத் தொடரும் உள்ள நிலப் பரப்பு இது. மேற்கு நோக்கிப் பாயும் சிற்றாறு களும் கிழக்கு நோக்கியும் பாயும் பெரிய ஆறுகளும் தோன்றும் மலை மேற்குத் தொடர்.

குடல், குடில், குடவை, குடல், குடங்கை, குடிசை, கூடு, குடை, குடி, குட்டை போன்ற சொற்கள் எல்லாம் ‘குட்’ என்னும் வேரிலிருந்து கிளைத்தனவே.

எனவே, குடம்போல் நீர்வழிந்து நிரம்பு வதற்கும் காரணமாக உள்ள திசை குடதிசை யாயிற்று. மேற்கேயிருந்து வீசும் மழைக்காற்று இம் மொழியில் கோடையெனப்படும். இந்த மழை மலையாளக் கரைக்கே மழைக்காலமாகும். ஏனைய பகுதிகளுக்கு மழைக்காலம் கொண்டலால்தான். ஆயினும் கோடை மழை நீரை மிகுதியாக வழங்கி எல்லா ஆறுகளும் பெருக்கெடுக்கக் காரணமாக இருக்கிறது. இம்மழையின் கோடையினால் (வள்ளண்மையினால்) ஆறுகளின் பெருக்கு வேளாண்மைக்கு மிகவும் உதவுகிறது. வளத்தைக் கொடுக்கும் காற்று நம் நாட்டுக்குக் கோடை யாயிற்று. ‘கொடு’ என்பதன் வழியே தோன்றிய பெயர் கோடை.

தெலுங்கரும் மேற்குத்திசையை, ‘படமர’ என்பர். தமிழிலுள்ள ழகரம் தெலுங்கில் டகர மாகும். நாழி-நாடி; சோழா - சோட; பழுக்கவை - படவேயி. பழுநிய திசை (வளம் மிகுதிக்குக் காரண மாகிய திசை) படமர எனப்பட்டது போலும்.

மேற்கு என்பது மற்றொரு பெயர். மேல் என்பது பகுதி. (மேல்+கு) - மேலான- உயர்வான திசை தமிழ்நாட்டுக்கு ஆற்றுப் பெருக்கு மழை இவற்றால் மேலான வளத்தைக் கொழித்தலாலும், மேல் கடல் வாணிகத்தால் மேலான செல்வங் களை ஈட்டித் தருவதாலும் தமிழர் குட திசையை மேலான திசை (மேற்கு) என்றனர்.

கால்டுவெல் அவர்கள் தம் திராவிட மொழி ஒப்பிலக்கணத்துள், “மேற்கு என்பது மேட்டு நிலம்; கிழக்கு என்பது தாழ்வான கீழ் நிலம்” என்று காரணம் காட்டியிருக்கிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்கும் அப்பால் தாழ்வான நிலப்பரப்பு இருக்கிறதே, அதனை மலையாளம் பேசுவோரின் நிலமாகக் கொண்டு மேற்கு என்பதற்குத் தமிழில் பொருள் விரித்திருக் கிறார் அவர். அந்நிலப்பரப்புத் தமிழகமாக இருந்த போதே மேற்கு என்ற சொல் தோன்றிவிட்டது.

அல்லதும் கால்டுவெல் அவர்களின் கருத்துப் படி மேல் கீழ் என்பன உயரம் தாழ்வுகளை உணர்த்த வில்லை. மேட்டு நிலம் மேட்டூர், மேட்டாங்காடு, மேடை போன்றனவே உயரமான நிலப்பகுதியை உணர்த்தவல்லன. தெலுங்கிலும் மிட்டபூமி, மிட்டசேனி, மேட என்பனவே மேட்டு நிலத்தை உணர்த்தும். மேற்கும் என்பது மேலான திசை என்பதையே உணர்த்தும்.

‘உன்மேல’, ‘மேலைக்கு’ என்பவற்றில் மேல் இடத்தையும் காலத்தையும் உணர்த்தவரும் ஏழன் உருபுகளாகும் அல்லது சொற்களாகும்.

மேலோர் - கீழோர், மேல் தோல், கீழ்வயிற்றுக் கழலை, அவன் கீழ் வேலை செய்வோர் என்பன வற்றில் மேல், கீழ் என்பன மேடு பள்ளம் என்னும் பொருளை உணர்த்தவில்லை.

முடிவுரை

மேற்கூறிய செய்திகளை ஊன்றிப் படிக்கு மிடத்து, தமிழ் மக்களின் சொல்லாக்கத் திறனை உணரலாம்.

Pin It