தமிழ்ப் பண்பாட்டுச் சொல்லாடல்களில் காட்டு மிராண்டித்தனம், நாகரிகம் என்ற கருத்தாக்க எதிர்வுகள் வரலாற்று நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உடல், சாதி, சமயம், சடங்கு, மொழி, கல்வி, தொழில், உணவு, வாழ்விடம், உணர்வு வெளிப்பாடு, பொருளாதார நிலை ஆகியவை தொடர்பான அதிகாரச் சொல்லாடல்களில் இவ்வெதிர்வுகள் வெளிப்படுகின்றன.

தீண்டத்தகாதவர் என்று சொல்லப்படுபவர்கள், உயிர்ப்பலி கொடுத்து வழிபடுவோர், உடலை வருத்திச் சடங்கு செய்வோர், நியாயத்துக்காகக் கலக மொழியைப் பயன்படுத்துவோர், படிப்பறி வற்றோர், வினைவலர், அடிமைகள், புலால் உண்ணுவோர், கொள்கைத் தீவிரவாதி, உடல் உழைப் பாளர், நாட்டுப்புறக் கலைஞர்கள், நாட்டுப்புறப் பண்பாட்டிற்கு உரியோர் போன்றோர் வரலாறு நெடுகக் காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். புனித உடலுடையோராகக் கருதப்படுபவர்கள், சைவப் பூசை செய்வோர், மென்மையான சடங்குகள் எனக் கருதப்படுகின்ற சடங்குகளை நிகழ்த்துவோர், கர்நாடக இசை போன்று மென்மையான உணர்வுகளைக் கொடுப் பதாகக் கருதப்படும் கலைஞர்கள், சகிப்புத் தன்மை யுடையோர், படிப்பறிவுடையோர், பண்ணையார், முதலாளிகள், சமரசவாதிகள், மிதவாதிகள், மூளை உழைப்பாளர் போன்றோர் நாகரிகமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமூக, பண் பாட்டு அதிகார அரசியல் சார்ந்த சொல்லாடல் களோடு அறிவியல்-அறிவியலற்ற சிந்தனை மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டும் காட்டுமிராண்டித்தனம் - நாகரிகம் என்ற எதிர்வுகள் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய கருத்துக் கட்டமைப்புகள் அவை சார்ந்த செயல்பாடுகளின் அரசியல் பற்றி இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.

காட்டுமிராண்டித்தனம்- நாகரிகம் என்ற எதிர்வுகள் தொடர்பான கருத்துக் கட்டமைப்பு முறை பண்டைய தமிழ் இலக்கியங்களிலேயே தொடங்கிவிட்டதைக் காணலாம். சங்கக் கவிதை களில் எயினர்கள் காட்டுமிராண்டிகளாகவும் (கல்லா இளையர்) கொலைகாரர்களாகவும் புலவர்களால் காட்டப்பட்டுள்ளனர் (வம்பலர் கலன் இலர் ஆயினும் கொன்று புள்ளூட்டும் கல்லா இளையர்: அகநானூறு: 375) புலையர் என்ற பிரிவினர் இழிசினர் என அழைக்கப்பட்டார்கள் (புறநானூறு: 170, 287, 289) போருக்குச் செல்லும் வீரர்களுக்கு வெறியூட்டு வதற்காக உதட்டை மடித்துக்கொண்டு துடியை முழக்குபவர் புலையன் என்றும் இழிசினன் என்றும் அழைக்கப்பட்டார். இங்கு இழிசினன் என்பதும், புலையன் என்பதும் நாட்டுப்புறக் கலைஞன் என் பதும் காட்டுமிராண்டி என்ற அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பிரிவினர்க்கு நேர் எதிர்மறையாக வேறு சில பிரிவினரும் சமூகத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் நாகரிகமானவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். ‘அறிவுடை அந்தணர், நான்மறை முதல்வர், கேள்வி அந்தணர், மறை காப்பாளர், மாசற விளங்கிய யாக்கையர்’ என்றெல்லாம் பத்துப்பாட்டு இலக் கியங்களில் உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்தணர்கள் மட்டுமின்றி வேளாளர்களும் வணிகர் களும் நாகரிகமானவர்களாகக் கருதப்பட்டனர்.

அக்காலச் சமூக அமைப்புகளில் ஒவ்வொரு சாதி அடுக்கிற்கும் ஒரு வகைச் சமூக மதிப்பு உரு வாக்கப் பட்டிருந்ததையும் இதனைக் கேள்வி கேட் காமல் படைப்பாளிகளும் கலைஞர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் மேலே எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அரசர்களையும் பிற உடைமையாளர் களையும் சார்ந்து (யானே பெறுக அவன்தாள் நிழல் வாழ்க்கை: புறநானூறு: 379) தங்கள் வாழ்க் கையைப் புலவர்களும், பாடகர்களும், கூத்தர் களும் நகர்த்திக் கொண்டிருந்ததால் சமூக நிலைமை களை அப்படியே வெளிப்படுத்தினார்களே தவிர அவை குறித்த எவ்வித எதிர்ப்பையும் மாற்றுக் கருத்தையும் வெளியிடவில்லை. புலவர்கள் சிலர் நிலக்கிழார்களாக (சிறுகுடிகிழான், கோவூர் கிழார்) இருந்ததால் அவர்கள் அரசர்களுக்கு மென்மையாக அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். அரசனாகிய சோழன் கிள்ளிவளவன் புலவனாகிய சிறுகுடிகிழானைப் பாடியுள்ளான் என்பதிலிருந்து கிழார்களின் சமூக அதிகாரத்தை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய புலவர்களும் கூட சமூகப் படிநிலைகள் குறித்தோ, அரசர்களின் மேலாதிக்கம் குறித்தோ தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியதில்லை. இழிசினன் (காட்டு மிராண்டி), அறிவுடை அந்தணர் (நாகரிகமானவர்) என்ற பிரிவினரைப் புலவர்கள் அங்கீகரிக்கவே செய்தனர்.

சங்க இலக்கியங்களில் மட்டுமின்றிப் பிற இலக்கியங்கள், கல்வெட்டுப் பனுவல்கள் போன்ற வற்றிலும் பார்ப்பனர்களும் வேளாளர் மற்றும் வணிகர்களும் மதிப்புமிக்கவர்களாகவும் நாகரிக மானவர்களாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரானவர்கள் காட்டுமிராண்டி களாகக் கருதப்பட்டுள்ளனர். இந்த நிலையை 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் சித்தர்கள், குறிப்பாக, சிவவாக்கியர் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறார். சிவவாக்கியர் “சாத் திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே” என விளித்து “வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ” எனக் கேட்டுப் பார்ப்பனரின் புனிதத்தையும் அவர்கள் தாங்கிப் பிடிக்கும் வேதத்தின் புனிதத்தையும் உடைக்கிறார். சாதி, கடவுள், வேதம், சடங்கு ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு மிராண்டித்தனம், நாகரிகம் என்ற எதிர்வுகளைச் சித்தர்கள் உருவாக்குகிறார்கள். சாதியை மறுப்பவர் களைச் சித்தர்கள் நாகரிகமானவர்களாகவும் அதனை விரும்புபவர்களைக் காட்டுமிராண்டிகளாகவும் கருதுகிறார்கள். “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டு வோம்” என ஆவேசப்படுகிறார்கள். “பறைச்சியாவது ஏதடா? பனத்தியாவது ஏதடா? / இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?” எனக் கேள்வியைக் கனலாக்குகிறார்கள். கடவுளை மையப்படுத்துபவர்களைச் சித்தர்கள் காட்டு மிராண்டிகளாகக் (பேதைகளாக) கருதுகிறார்கள். “பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள் / ஓசையுள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய்ச் செய்துமே/ வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் / பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்” என ஒரே கல்லை இரண்டாக உடைத்து ஒன்றை ஒரு சூழலில் கடவுளாக வழிபடுவோரே இன்னொரு சூழலில் அதே கல்லை வீட்டின் படிக் கல்லாகப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்டவர் களை நாகரிகமானவர்களாகச் சித்தர்கள் கருத வில்லை. கடவுள் தனித்து இல்லை என்பதும் மக்களின் கூட்டு மனச் சாட்சியே கடவுள் என்பதும் சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் கருத்து. கடவுளும் கோயிலும் ஒவ்வொரு மனித மனத்திலும் (கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே) குடிகொண்டிருப்பதாகக் கருதுபவர்களே நாகரிக மானவர்கள் என்கிறார்கள்.

இக்கருத்தோடு 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எமிலி தர்கீம் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞரின் கூட்டு மனச்சாட்சி (collective conscience) என்ற கருத்தும் மக்கள் சமயம் (civic religion) என்ற கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கன. அதே நேரத்தில் அடித்தள மக்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய தவறான புரிதலும் சித்தர்களிடம் காணப்படுகிறது. அதாவது ஒரு கல்லையோ கருவியையோ தனித்து வைத்துப் பூசை செய்வோரும் வழிபடுவோரும் எந்தப் பிரிவினராக இருந்தாலும் அவர்கள் காட்டு மிராண்டிகளாகவே (பேதைகளாகவே) சித்தர் களால் பார்க்கப்படுகிறார்கள். “பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ” இவ்வாறு மொத்தப்படுத்திப் பார்க்கும் பார்வை சரியானது இல்லை. ஒரு கல்லையோ கருவியையோ தனியாக அமைத்து வழிபடுவதால் மட்டுமே அவ் வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமானது எனச் சொல்ல முடியாது. நிறுவன சமயக் கோவில்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி வழிபட்டாலும் கூட அவ்வழிபாட்டைக் கூட்டு வழிபாடு எனச் சொல்ல இயலாது. அங்கு ஒவ்வொரு மனிதரும் தனிமனித ராகவே இருந்து அவரவர் வாழ்க்கைக்காக வழி படுகிறார்கள். அவர்கள் பார்ப்பனப் பூசாரித் தனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இவர்களை இந்து சமயத்தினர் நாகரிகமானவர்கள் என்றும் மேட்டுக்குடியினர் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால் சிவவாக்கியர் போன்றோர் இவர்களை நாகரிகமற்றவர்கள் என்கிறார்கள். இந்த வகையில் இந்து சமயக் கருத்தைச் சித்தர்கள் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்கள் அல்லது அடித்தள மக்கள் ஒன்றுகூடி ஒரு கல்லை வழிபட்டாலும் அவர்கள் அனைவரும் கூட்டு மனிதராகத் (collective being) தங்களை வெளிப்படுத்து கிறார்கள். எல்லோருக்குமான மழை, எல்லோர் வயல்களிலும் பயிரினச் செழிப்பு, அனைவர்க்கும் நோயற்ற வாழ்க்கை எனத் தங்கள் விருப்பங்களைக் கூட்டாக வெளிப்படுத்துகிறார்கள். சாதி முரண் பாடுகள் அல்லது மோதல்கள் இன்றைய பல கிராமங் களில் தலைகாட்டிய போதிலும் மரியாதை முறை மைகள் போன்ற உயர்வு தாழ்வு வெளிப்பாட்டு முறைகள் நடைமுறையில் இருந்தபோதிலும் ஊர்த் தெய்வ வழிபாடுகளிலும் குலதெய்வ வழிபாடு களிலும் கூட்டு விருப்பங்களை வெளிப்படுத்து வதும் வேண்டுதல்களை முன்வைப்பதும் தொடரத் தான் செய்கின்றன. வேளாண்மை உற்பத்திமுறை கிராமங்களில் மூச்சிரைத்துக்கொண்டாவது பயணிக்கும் வரை இத்தகைய கூட்டு விருப்பங் களை வெளிப்படுத்துவது தொடரவே செய்யும்.

பல்வேறு சமூக, பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள் அடித்தள மக்களின் வழிபாட்டு மரபையும் நிறுவனச் சமய வழிபாட்டு மரபையும் ஒன்றாகக் கருதிக் கண்டிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இத்தகைய தவறான புரிதலுக்கு வேறு காரணங்கள் உள்ளன. அக்காரணங்களை மே.து.ராசுகுமார் தம் கட்டுரை ஒன்றில் விளக்கியிருக்கிறார். அவருடைய கருத்துக்கள் தொகுத்துத் தரப்படுகின்றன:

1.     “சோழர் காலத்தையடுத்து நில உற்பத்தி வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமை, புதிய ஏரிகளையும் குளங்களையும் அமைத்து உற்பத்திப் பகுதிகளை விரிவாக்கம் செய்ய இயலாமை, உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டிருந்த இறுக்கம் ஆகியன தொடர்ந்தன.

2.     விசயநகர ஆட்சிக் காலத்தில் பார்ப்பனரின் ஆதிக்கம் வலுப்பட்டது. உள்ளூர் அமைப்பு களிலும் கோயில்களிலும் வேளாளர் மேலாண் மை ஓரளவு தொடர்ந்தாலும் ஆட்சி அதி காரத்திலும் படைப் பிரிவுகளிலும் பார்ப்பனர் மற்றும் வேற்று மொழியினர் செல்வாக்கு மிகுந்தது. இந்த நிலைகள், சாதி அமைப்புகள் மேலும் வலுப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தன. குறிப்பாக நில உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள், சிறு அளவில் நில உரிமை கொண்டிருந்த வேளாளர்கள் தங்கள் நிலங்களை இழக்கும் நிலைமைகளை ஏற்படுத்தின. பிற் காலச் சோழர் காலத்திலேயே தொடங்கி யிருந்த இந்த நிலைமைகள், விசயநகரக் காலத் தில் மேலும் மேலும் பரவலாக ஏற்படக்கூடிய சூழல்களை உருவாக்கின.

3.     வேளாளர் நிலையிலிருந்து கீழிறங்கி, குத்தகைக் குடிகளாகவோ, உழைப்பை மட்டும் நம்பி யிருக்கும் நாள் ஊதியப் பணியாளராகவோ மாறிவிட்ட பகுதியினரின் குரல்கள்தாம் சித்தர் பாடல்களில் எதிரொலிக்கின்றன.

4.     வேளாளராகத் தொடரமுடியாத நிலையில், அவர்கள் உடைமைப் பிரிவினரின் கோயில் களில் இருந்த உரிமைகளை இழந்து விட்டார் கள். ஆனாலும், உடனடியாக உடைமையற்ற பிரிவினரோடும் அவர்களால் ஒன்றிணைந்து கொள்ளமுடியவில்லை. இதனால், தங்கள் நிலை தாழ்வதற்குக் காரணியாக இருந்த பார்ப்பனர்களையும் வேத சாஸ்திரங்களையும் எதிர்த்தார்கள். பார்ப்பனர்களின் சடங்குகளை எதிர்த்தார்கள். கைவிட்டுப் போன சமய உரிமைகள் காரணியாகக் கோயில்களுக்குள் ஏற்கப்படாததால் அந்தக் கோயில்களில் இருந்த கடவுள் உருவங்களை மறுத்தார்கள்.

5.     உடைமையாளர் நிலையிலிருந்து உடைமை களற்ற நிலைக்குத் தாழ்ந்தாலும் அதை முழுமை யாக உள்வாங்கிக் கொள்ள முடியாத நிலை, ஏற்க முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் தான் கீழ்த்தட்டு மக்களின் வறுமையைச் சில பாடல்களில் சுட்டிக்காட்டினாலும் கீழ்த் தட்டு மக்களோடு சித்தர்கள் இணைந்து விட வில்லை. நாட்டார் கடவுளர்களை ஆங் காங்கே கடிந்து இருப்பதும் இதனை உறுதிப் படுத்துகிறது.” (நாவாவின் ஆராய்ச்சி 51: சனவரி 2007- 80-81)

மேலே எடுத்துக்காட்டிய விளக்கத்திலிருந்து சித்தர்கள் அடித்தள மக்களின் வழிபாட்டுச் சடங்கு களையும் காட்டுமிராண்டித்தனமானவையாகக் குறிப்பிட்டதற்கு உரிய காரணங்களை அறிந்து கொள்ளமுடிகிறது.

தமிழகப் பண்பாட்டுச் சொல்லாடல்களில் காட்டுமிராண்டித்தனம் - நாகரிகம் என்ற எதிர்வுகள் பழமையானவை என்றாலும் இவை காலனிய ஆட்சி யாளர்களால் புதிய முறையில் கையாளப்பட்டன. நிறுவன சமயத்தவரின் கடவுள் நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் அவர்கள் அறிவியல் பார்வைக்கு உட்படுத்தியதில்லை. மூடநம்பிக்கை களாகக் கருதியதில்லை. அவற்றை நாகரிகமான நடவடிக்கைகளாகத்தான் கருதினார்கள். ஆனால் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு நடவடிக்கை களை, குறிப்பாக, வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் அறிவியல் பார்வைக்கு உட்படுத்தி னார்கள். அவற்றை மூடநம்பிக்கைளால் ஆனவை என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தனர். அவர் களுடைய வழிபாட்டு முறைகளைக் காட்டுமிராண்டித் தனமானவை எனக் குறிப்பிட்டனர். அவற்றைத் தடை செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இவை தொடர்பான சில தகவல்கள் கீழே தரப்பட்டு அதன் பின்னர் அவை தொடர்பான விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.

தீ மிதித்தல் அல்லது பூக்குழி இறங்குதல் சடங்கானது மாரியம்மன், திரௌபதியம்மன் தெய்வங்களோடு தொடர்புடையது. உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களிடமும், குறிப்பாக இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மொரி ஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர் களிடமும், இந்தச் சடங்கு வழங்குகிறது. இந்தச் சடங்கை முஸ்லிம்கள் கஞ்சம், சேலம், திருநெல் வேலி, நெல்லூர், கிருஷ்ணா, சிவகாசி ஆகிய ஊர்களில் மொகரம் நாளின்போது நிகழ்த்தி யதாக எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston: 1989) குறிப்பிடுகிறார். அனந்தப்பூர் மாவட்டத்தில் கூகூடு கிராமத்தில் மொகரம் சிறப்பு நாளில் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட தீ மிதிச் சடங்கில் “இந்துக்கள்” மிகுதியாகக் கலந்து கொண்டதுபற்றி காலனி அரசின் அதிகாரி தார்ஸ்டன் விவரித் துள்ளார். (2009-ஆம் ஆண்டு மொகரம் சிறப்பு நாளின்போது சிவகங்கை மாவட்டம் முதுவன் திடலில் உள்ள பாத்திமா நாச்சியார் பள்ளி வாசலின் முன்பு இந்துக்கள் தீ மிதித்ததாகத் தமிழ் நாளிதழான தினத்தந்தி (29.12.2009) செய்தி வெளியிட்டுள்ளது இங்குச் சுட்டிக் காட்டத் தக்கது.)

இந்தச் சடங்கு காட்டுமிராண்டித்தனமானது எனக் குறிப்பிடப்பட்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளரால் தடை செய்யப் பட்டது. இந்தத் தடையை ஒரு சந்தோஷமான சீர்திருத்தம் எனத் தஞ்சாவூர் ஆட்சியாளர் குறிப் பிட்டதாக எட்கர் தர்ஸ்டன் சுட்டிக்காட்டுகிறார் (Edgar Thurston: 1989:484). மேலும் இந்தச் சடங்கைத் தடை செய்ததற்கான காரணத்தை அன்றைய (1854 ஆம் ஆண்டின்) மதராஸ் அரசாங்கத்தின் அறிக்கையொன்று (Edgar Thurston: 1989:484) “பல்வேறு மாவட்டங்களின் அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிக்கைகளிலிருந்து தீ மிதித்தல் என்பது குறைவாகவே காணப்படுகிறது” எனவும் “இந்தச் சடங்கு நேர்த்திக் கடனாகச் சில இடங்களில் செய்யப்படுகிறதே தவிர சமயச் சடங்காகச் செய்யப்படவில்லை” எனவும் “இதனால் இதனை மேட்டுக்குடி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது” எனவும் தெரிவிப்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது” (Edgar Thurston: 1989:484)

மேலும் எட்கர் தர்ஸ்டன் வடஆற்காட்டில் நிகழ்த்தப்பட்ட தீமிதிச் சடங்கைப் பார்த்த பின்னர் அது பற்றிக் கூறிய பின்வரும் கருத்தும் இங்கு முக்கிய மாகக் கவனத்தில் கொள்ளத்தக்கது. “விழாவின் இறுதி நாளில் அரை அடி ஆழமுள்ள குழி தோண்டப் பட்டு எரியூட்டப்பட்ட மரக்கட்டைகளைப் போடு கிறார்கள். தீ மிதிச் சடங்கில் கலந்துகொள்கிறவர்கள் பெரும்பாலும் புத்திக் குறைவான சூத்திரர்கள்தான். இவர்களோடும் இவர்களுடைய சடங்கோடும் பிராமணர்களுக்கு எவ்விதத் தொடர்பும் அக்கறையும் இல்லை” (1989: 485)

தீமிதிச் சடங்கைச் செய்தவர்கள் புத்திக் குறை வானவர்கள் அல்லது காட்டுமிராண்டிகள் என்றும் அச்சடங்கோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத பிராமணர்கள் புத்திசாலிகள் அல்லது நாகரிக மானவர்கள் என்றும் எட்கர்தர்ஸ்டன் கருதுவதை மேற்சுட்டிய அவருடைய குறிப்பிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பிராமணியம் சார்ந்த சடங்குகள் அனைத்தும் மூடநம்பிக்கையற்றவை என்பது போலவும் நாகரிகமானவை என்பது போலவும் கருத்துக்கள் உருவாக்கப்பட்டிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.

தீமிதிச் சடங்கைப் போன்றே பறவைக் காவடிச் சடங்கும் அன்றைய ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. 1854-ஆம் ஆண்டில் மதராஸ் அரசு, பறவைக் காவடிச் சடங்கு பற்றித் தெரிவித்த கருத்தும் காட்டுமிராண்டித்தனம் - நாகரிகம் என்ற இருமை எதிர்வுகளை அடிப்படை யாகக் கொண்டதே. “இந்தச் சடங்கு செய்யப் படுவது குறைந்துகொண்டே வருகிறது. இந்தச் சடங்கை நிகழ்த்துபவரின் சமயத்துக்கும் இந்தச் சடங்குக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவே இந்தச் சடங்கை நிகழ்த்துகிறார்கள். சில நேரங்களில் இதை நிகழ்த்துபவர் உயிரிழக்க நேரிடுகிறது. இப்படிப் பட்ட நிகழ்வுகளால்தான் நீதிமன்றம் இதில் தலையிட்டுத் தடை செய்ய வேண்டியுள்ளது. அரசு ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளில் அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் பறவைக் காவடி போன்ற கொடூரமானதும் கலகத்தன்மை வாய்ந்ததுமான சடங்குகளை நீதிமன்றம் தடை செய்வதற்குத் தேவையான ஆதரவை இச்சடங்குகளோடு தொடர்பில்லாத செல்வந்தர்கள் மற்றும் அறிவாளர் வர்க்கங்கள் நீதிபதி களுக்கு வழங்க வேண்டும்” என அன்றைய மதராஸ் அரசு கருத்துத் தெரிவித்தது (Edgar Thurston: 1989: 487)

இந்தக் கருத்திலிருந்து காலனிய ஆட்சியாளர்கள் அனைவரும் இந்து, இசுலாமிய, கிறித்தவ சமயங்கள் போன்ற நிறுவன சமயங்களையே சமயங்களாக அங்கீகரித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இப்படிப்பட்ட சமயங்கள் தொடர்பான வழிபாட்டு முறைகளில் செல்வந்தர் களும் சாதி நிலையில் உயர்ந்தவர்கள் எனச் சொல்லப் படுபவர்களும் ஈடுபட்டதால் அவற்றை நாகரிக மானவை எனக் கருதினர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. செல்வந்தர்களும் உயர்ந்த சாதியினரும் பறவைக் காவடி போன்ற நாட்டுப்புறச் சடங்குகளைச் செய்யும் வழக்கம் இல்லை; நிறுவன சமயம் சார்ந்தவை அல்ல என்பதால் அவற்றை நிகழ்த்துபவர்களை அறிவற்றவர்களாகவும் அவர்களுடைய சடங்கு களைக் கொடூரத்தன்மை உடையவையாகவும் கருதி அவற்றைத் தடை செய்யத் துணிந்தனர் என் பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தீமிதிச் சடங்கைப்பற்றி அறிக்கை தந்த ஆங்கிலேய அதிகாரிகளும் (Mr. Sonnerat: Voyage to the East Indies and China, 1774 and 1781) மிஷனரிகளும் (Mr. Elijah Hoole: 1820-1828) மீண்டும் மீண்டும் ஒரு கருத்தைப் பதிவு செய்துகொண்டே வந்தார்கள். அதாவது பார்ப்பனர்கள் இந்தச் சடங்கை மேற்கொள்ள வில்லை என்பதால் அதை அங்கீகரிக்கவில்லை என்பதாகும். ஆக, பார்ப்பனர்கள் அங்கீகரிக்காத சடங்குகளை ஐரோப்பிய காலனிய அரசுகள் தடை செய்தது என்பது கவனிக்கத்தக்கது.

நாட்டுப்புற மக்களின் சடங்குகளை ஐரோப்பிய காலனிய அரசுகள் தடை செய்ததற்கான கருத்தியல் நிலைப்பாடுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஐரோப்பிய மையவாதம் என்பது ஐரோப்பியர்களை அறிவார்ந்தவர்களாகவும், நாகரிகமானவர்களாகவும், உயர்ந்த இனத்தின ராகவும் கட்டமைக்கும் சிந்தனை முறையாகும். ஐரோப்பியர் அல்லாத பிற இனங்களைச் சேர்ந்த வர்கள், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், கருப்பின மக்கள், ஆசியர்கள் ஆகியோர் நாகரிகமற்றவர்களாக, இழிவானவர் களாகக் கருதப்பட்டார்கள். அறிவாளர்களாகக் கருதப்படும் ஐரோப்பியர் மூன்றாம் உலக நாட்டு மக்களை நாகரிகமானவர்களாகவும் படிப்பறி வுடை யவர்களாகவும் மாற்றுவதே தங்களுடைய கடமை என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளை அடிமைப்படுத்தினார்கள். அந்நாடுகளின் பண் பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகவல் களைச் சேகரித்து வெளியிட்டும் அவை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டும் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தனர். இத்தகைய புரிதலின் ஊடாக ஐரோப்பியர்களின் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்கான வெளிகளைப் பண்பாட்டு அமைப் பிற்குள் கண்டறிந்தனர். இதற்குத் தடையாக இருந்த அடித்தள மக்களின் சடங்குகளைக் காட்டுமிராண்டித் தனமானவை என்று குறிப்பிட்டு அவற்றிற்குத் தடை விதித்தனர். இந்தியச் சூழலைப் பொருத்த வரையில் இந்து சமயக் காவலர்களாகக் கருதப் படும் பார்ப்பனர்களும் பொருளாதார வசதி உடை யவர்களும் அங்கீகரிக்காத சடங்குகளைக் காட்டு மிராண்டித்தனமானவை என்றனர். ஆனால் நிறுவன சமயங்களின் சடங்குகளை, அவ்வாறு முத்திரை குத்தியதில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஐரோப்பியர் களின் நிறுவன சமயமான கிறித்தவ சமயத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் ஐரோப் பியர்கள், குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்களுடைய ஆட்சிக்கும் அரசின் சட்ட விதிமுறை களுக்கும் கட்டுப்படாத, காலனிய முதலாளி களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பழங்குடி மக்கள், கள்ளர், ஒட்டர், குறவர் போன்ற அடித்தள மக்கள், உழைப்பாளர்கள் போன் றோரை அச்சத்துடன் பார்த்தனர். அவர்களுடைய சடங்குகளுக்குள்ளேயே எதிர்ப்பு உணர்வுகளும் அச்சமின்மையும் புதைந்திருப்பதை உணர்ந்தனர். எனவேதான் அவர்களைக் காட்டுமிராண்டிகளாக முத்திரை குத்தி அவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இப்படிப்பட்ட மக்களின் வழிபாட்டுச் சடங்குகள் போன்ற பண்பாட்டு அடையாளங் களையும் காட்டுமிராண்டித்தனமானவை என முத்திரை குத்தினர். அதே நேரத்தில் தங்களுக்கு ஒத்துழைப்புத் தந்தவர்களை நாகரிகமானவர்கள் எனப் பாராட்டி அவர்களின் பிரதிநிதிகளுக்கு மதிப்புறு பட்டங்களையும் (“ஸர், ராவ்பகதூர் போன்ற பட்டங்களை) வழங்கிச் சிறப்பித்தனர்.

அடித்தள மக்களின் பண்பாட்டு நடைமுறைகள் மீதான ஒடுக்குமுறைகளும் தடைகளும் காலனிய ஆட்சியோடு நின்றுவிடவில்லை. விடுதலை பெற்ற இந்திய நாட்டில் மக்களால், அதுவும் பெரும்பான் மையாக உள்ள அடித்தள மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் அவர்களுடைய பண்பாட்டு நடைமுறைகளை நாகரிகமற்றவை, மூடநம்பிக்கை சார்ந்தவை, கொடூரமானவை என்ற கருத்து வன்முறைகள் மூலம் ஒடுக்கவும் தடை செய்யவும் செய்தன. இதற்குத் தமிழ்நாட்டுச் சூழலி லிருந்து பல சான்றுகள் தரலாம். மிக அண்மைக் காலமாக இத்தகைய தடைகள் அதிகரித்து வருகின்றன.

2002-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ஆம் நாள் பேரையூரில் முத்துக்குழி மாரியம்மன் கோயில் வழிபாட்டு விழாவின்போது குழி மாற்றுச் சடங்கு நிகழ்த்தப்பட்டது. குழந்தையை மஞ்சள் துணியில் சுற்றி அதனைக் கோயிலுக்கு முன்பு சுமார் இரண்டடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியில் படுக்க வைத்து மண்ணால் மூடி ஐந்து நிமிடங்கள் கழித்து மண்ணை நீக்கிக் குழந்தையை வெளியில் எடுக் கின்ற சடங்கு குழிமாற்றுச் சடங்கு என அவ்வூர் மக்களால் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சடங்கு தொடர்பான நிகழ்வுகள் அதே ஆண்டு 24-ஆம் நாள் சின்னத்திரைகளில் வெளி யிடப்பட்டன. சின்னத்திரையில் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர், பிற பாராளுமன்ற சனநாயகக் காவல் கட்சியினர், தொலைக்காட்சிப் போதகர்கள், மனித நேய வழக்கறிஞர்கள், மனித உரிமைக் காவல் அமைப்புகள், வடபழனிச் சித்தர்கள், சைவ வைணவத் துறவிகள், வைணவப் பேராசிரியர்கள் எனப் பலரும் தோன்றிக் குழி மாற்றுச் சடங்கு நிகழ்வு தொடர்பான தங்கள் கருத்துக்களை அறைந்தனர். தொலைக்காட்சியில் பேட்டி அளித்த வர்கள் அனைவரும் குழிமாற்றுச் சடங்கின் மீது துப்பிய சொல் ‘barbaric’ (காட்டுமிராண்டித்தனம்) என்பதாகும். இது தொடர்பாக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் அனுப்பிய அசோக் அகர்வால், அரபிந்தோ கோஸ் ஆகிய இரு வழக்கறிஞர்களும் குழிமாற்றுச் சடங்கின் மீது பாய்வதற்குப் பயன் படுத்திய சொற்கள் “Criminal, irrational, inhuman, and undoubtedly criminal and barbaric acts reminiscent of archaic superstitious religious practices” ஆகியனவாகும். நெற்றியில் தொடங்கி உடல் முழுவதும் நாமம் வரைந்திருந்த வைணவப் பேராசிரியர் வெங்கடகிருஷ்ணன் அவர்கள் சன் தொலைக் காட்சியில் ‘யெசயெசiஉ’ என்ற சொல்லை அழுத்தமாக உச்சரித்தது முரணாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. மேலும் அவர் பேட்டியின் போது “காட்டுமிராண்டித்தனம், மூடநம்பிக்கை, மனித உரிமைக்கு எதிரான செயல்” என மொழிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். வைணவக் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்த பேராசிரியர் மட்டு மின்றிப் பகுத்தறிவாளர்களும் கம்யூனிஸ்டு கட்சி யினரும் கூட குழிமாற்றுச் சடங்கைக் காட்டு மிராண்டித்தனமானது என்று சான்றிதழ் அளித்த தோடு அரசு இச்சடங்கைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். இக் கோரிக்கை ஜெயலலிதா அவர்களின் தலைமையில் உருவான அரசுக்கு ஊக்கம் தந்தது போலும். இச் சடங்கை உடனே தடை செய்ததோடு அச்சடங்கில் கலந்துகொண்ட அமைச்சர் திரு.துரைராஜ் அவர் களின் பதவியும் பறிக்கப்பட்டது. இச்சடங்கு தொடர்பான விரிவான கட்டுரை “ஏர்” என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. (இ.முத்தையா: ஊடகக் குழிகளில் குழிமாற்றுச் சடங்கு: ஏர் (காலாண்டிதழ்) அக்டோபர், 2002: பக்-28-31). மேலும் இந்தக் கட்டுரை “அடித்தள மக்களின் குறியீட்டுப் பயண வெளிகள்” (இ.முத்தையா : 2010 : 135-149) என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தச் சடங்கின் அரசியல் பற்றிய விரிவான விளக்கம் இங்குத் தவிர்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டது போன்ற தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு

28-ஆம் நாள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் வழிபாட்டில் 500 எருமைமாடுகள் பலி யிடப்பட்ட செய்தியை அறிந்தவுடன் தமிழ்நாடு முழுவதிலும் உயிர்ப்பலிச் சடங்குகளை அப் போதைய அரசின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தடைசெய்து ஆணை பிறப்பித்தார். இச்சட்டத்தின்படி வழிபாட்டுத் தலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளைப் பலியிட்டு வழிபடுவோருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தடைச்சட்டம் ஒன்றும் புதிதன்று. 1950 ஆம் ஆண்டு சனவரி 2-ஆம் நாளில் உயிர்ப்பலித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1957-ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் மற்றும் பறவைகள் பலித் தடைச்சட்டம் (பிரிவு 3-5) தமிழகத்துக் கோவில் களில் விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடு வதைத் தடை செய்தது. இந்தத் தடைச் சட்டங்கள் தான் மீண்டும் 28.08.2003 அன்று புதுப்பிக்கப் பட்டது.

உயிர்ப் பலித் தடைச்சட்டத்தை இந்து சமய இயக்கங்களும் பார்ப்பன சமூகமும் மகிழ்ச்சியோடு வரவேற்று அதற்கு ஆதரவுக் குரல் எழுப்பின. உயிர் களைப் பலியிடுதல் என்பது காட்டுமிராண்டித் தனமான செயல் என்றும் இப்படிப்பட்ட சடங்கை அரசு தடை செய்தது சரியே என்றும் கருத்துத் தெரிவித்தன. இதோடு மட்டும் நிற்கவில்லை. உயிர்ப் பலி என்பது இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் எனச் சுட்டிக் காட்டி பக்ரீத் சிறப்பு நாளில் ஆடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளின் இறைச்சி உணவைப் பயன்படுத்துவதால் அவ்விலங்குகளைக் கொல் வதையும் தடைசெய்ய வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் அவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தபோது வலியுறுத்தியதாக அச்சு ஊடகங்கள் தெரிவித்தன. இந்தத் தடைச்சட்டம் தெய்வங்களை வழிபடுவதைத் தடை செய்யவில்லை என்றும் சாத்வீக பூசை முறை களைப் பயன்படுத்தி நாகரிகமாக வழிபடலாம் என்றும் இந்து சமய இயக்கத்தினர் எடுத்துக் கூறினர். இவர்களுடைய கருத்தை மறைமலை யடிகள் அறுபதுகளிலேயே கடுமையான சொற் களையும் தொடர்களையும் பயன்படுத்தி வெளிப் படுத்தினார். புலால் உண்ணாதவர்களாகிய சைவ சமயத்தவர், சீவகாருண்யர், வேளாளர் ஆகியோரை நாகரிகமானவராகவும் கடவுள் நம்பிக்கையற்றவர், புலால் உண்ணுபவர், நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்குபவர் ஆகியோரைக் காட்டுமிராண்டி களாகவும் அவர் கருதினார். (அறிவுரைக் கொத்து : 1970). அவர் தம்முடைய மொழியில் காட்டு மிராண்டித் தனம், நாகரிகம் என்பவற்றை எவ்வாறு சொல்லாடுகிறார் என்பதை இனிக் காணலாம். புலால் உண்ணுவோரையும் நாட்டுப்புறத் தெய்வங் களுக்கு உயிர்ப்பலிச் சடங்குகளைச் செய்வோரை யும் “உயிர்க் கொலையாகிய புலைத் தொழிலைச் செய்யும் தாழ்ந்த வகுப்பார்” (1970: 25) என்றும் “அறிவில்லாத மாந்தர்கள்” (1970 :28) என்றும் “கீழ் மக்கள்” (1970 :31) என்றும் அவர்கள் வணங்கி வரும் தெய்வங்களைச் “சில்லறைத் தெய்வங்கள்” (1970 :28) என்றும் மறைமலையடிகள் குறிப்பிடுகிறார். ஆனால் புலால் உண்ணாத சைவசமயத்தவரை “முழுமுதற் கடவுளான சிவத்தை வழிபடும் நல் லோர்” (1970 : 29) “சைவராய்ப் பிறந்த மேன் மக்கள்” (1970 :31) என்றும் குறிப்பிடுகிறார். ஆக, சாதி, தெய்வ வழிபாட்டு முறைகள், உணவுப் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காட்டு மிராண்டித்தனம் ஓ நாகரிகம் என்ற எதிர்வுகள் மறைமலையடிகளால் உருவாக்கப் பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

மறைமலையடிகள் போன்றவர்களால் காட்டு மிராண்டித்தனமானவை என்று சொல்லப்படும் சடங்குகளைச் சிவனடியார்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் முறையாகச் செய்தார்கள் என் பதைத் திருத்தொண்டர் புராணம் பெருமையாகத் தெரிவிக்கிறது. கண்ணப்ப நாயனார் என்ற சிவனடி யார், தான் வேட்டையாடிக்கொண்டுவந்த பன்றி இறைச்சியைச் சிவனுக்கு வழங்கியதையும், இயற் பகை நாயனார் தன்னுடைய மனைவியையே சிவனுக்கு உரிமை யாக்கியதோடு அதனை எதிர்த்த தன் சுற்றத்தாரை வெட்டிக்கொன்று தன் பக்தியை வெளிப்படுத்தியதையும், மண்ணால் திருக்கோயில் உருவாக்கி அதில் லிங்கத்தை அமைத்து அதற்குக் குடங்குடமாகப் பாலை ஊற்றி வழிபாடு செய்த விசாரசருமன் என்ற இளம் சிவபக்தனை அவனுடைய தந்தையான எச்சதத்தன் பசுவின் பாலை வீணடிக்க வேண்டாம் என்று சொல்லிக் கண்டித்ததால் தந்தையையே விசாரசருமன் வெட்டிக்கொன்று பலி கொடுத்ததையும் பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியும் நரப்பசுவின் (பெற்றோருக்கு ஒரே மகனாக இருப் பவனை அவனுடைய பெற்றோரே கொன்று பெற்ற இறைச்சி) இறைச்சி கேட்ட சிவனுக்குத் தங்களுடைய ஒரே மகனைக் கொன்று கறி சமைத்துக் கொடுத்துத் தங்கள் பக்தியை வெளிப் படுத்தியதையும் பெரிய புராணம் பெருமையுடன் விவரிக்கிறது. பெரிய புராணத்து எடுத்துரைப்பு களின் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இக் காலத்தில் நாட்டுப் புற மக்களின் சடங்குகளைக் காட்டுமிராண்டித்தனமானவை என்றும் மூட நம்பிக்கை சார்ந்தவை என்றும் கண்டிக்கின்ற சைவ சமயப் பற்றாளர்களும் இந்து சமய இயக்கத்தினரும் பெரிய புராணம் குறிப்பிடுகின்ற சடங்குகளைக் கண்டித்ததில்லை என்பதும் அதற்கு மாறாகப் பக்தர்களைச் சிவன் சோதித்துப் பார்ப்பதற்கான புனித நிகழ்வுகளாகவே அவை அர்த்தப்படுத்தப் படுகின்றன என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது.

இன்றைய நிலையில் இந்து சமய இயக்கங் களையும் பார்ப்பன சமூகத்தையும் பொருத்தவரை உயிர்ப்பலிச் சடங்கு மூட நம்பிக்கையில் செய்யப் படுவதாகவோ பகுத்தறிவுக்குப் புறம்பாகச் செய்யப் படுவதாகவோ அறிவியல்பூர்வமற்றதாகவோ கருதப் படவில்லை. தெய்வத்தை வழிபடக்கூடாது என்பதும் அவர்களுடைய கண்டனத்திற்கான காரணம் இல்லை. விலங்குகளின் மீதான கருணை என்பதும் காரணம் இல்லை. உயிர்ப்பலிச் சடங்கு என்பதைப் படிப்பறிவில்லாத் தாழ்ந்த சாதியினரின் வழிபாட்டு முறையாகவும் சைவப் பூசை முறைகளைப் படிப் பறிவுடைய உயர்ந்த சாதியினரின் வழிபாட்டு முறையாகவும் காட்டுவதோடு பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணும் முறை காட்டுமிராண்டிகளுக்கு உரியதாகவும் பூசையில் பயன்படுத்தப்பட்ட சைவ உணவுகளை உண்ணும் முறை நாகரிகமானவர்களுக்கு உரியதாகவும் காட்டுவதோடு உயிர்ப்பலிச் சடங்கை சைவப் பூசையாக மாற்றி விட்டால் நாட்டுப்புற மக்களின் தெய்வங்களை இந்து சமயத்தில் ஐக்கியமாக்கி விடலாம் என்பதும் காரணங்களாகும். மேலும் உயிர்ப்பலிச் சடங்கை முன்வைத்துப் பிற சமயத் தினர், குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சமயத்தினரின் சடங்குசார் அசைவ உணவுப் பண் பாட்டைச் சுட்டிக்காட்டி அவர்களின் உணவுப் பண்பாடும் காட்டுமிராண்டிகளுக்கு உரியதுதான் என்ற கருத்தை உணர்த்துவதும் மற்றொரு காரண மாகும். இவ்வாறு இந்து சமய மற்றும் உயர்சாதி உணவுப் பண்பாட்டு அதிகார அரசியலை இக் கால உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் இந்து சமயத்தினர் வெளிப்படுத்தினர்.

இந்தியச் சூழலில் இந்து சமயத்தவர்கள் நாட்டுப்புற மக்களின் பலிச் சடங்குமுறைகளைக் கண்டிப்பதைப் போல இலங்கைச் சூழலிலும் சைவ சமயச் சார்புடைய தமிழர்கள் பிற தமிழர்களின் வழிபாட்டு முறைகளை, அதாவது விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் முறைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தகவலை இணையத்தளம் தெரிவிக்கிறது (இத்தகவலை மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவஞானம் ஜெயசங்கர் கவனப்படுத்தினார்). சைவத் தமிழர்கள் மட்டுமன்றிப் புத்த சமயச் சார்புடைய சிங்களர் களும் தமிழர்களின் விலங்குப் பலிச் சடங்கு முறைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர் என்ற செய்தியை சண்டே லீடர் (ஆகஸ்டு 2010) என்ற இலங்கைப் பத்திரிகையின் மூலம் அறிய முடிந்தது. இலங்கையில் உள்ள சிலா (Chilaw) என்னும் ஊரில் முன்னீஸ்வரம் காளியம்மன் கோவிலில் தமிழர்கள் ஆடுகளையும் கோழிகளையும் பலி யிட்டு வழிபட்டபோது அதைத் தடுப்பதற்காகப் புத்த பிக்குகள் ஊர்வலமாகச் சென்றதை “சண்டே லீடா” பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. இத் தகைய பலிச் சடங்கு முறைகளைப் பற்றி 87 பேர் இணையத்தளத்தின் வழித் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களுள் புத்த சமயம் சார்ந்தவர்கள் விலங்குகளின் மீதான தங்களுடைய கருணைப் பார்வையை வெளிப்படுத்தியிருந்தனர். பலிச் சடங்குமுறைகளை ஆதரித்தும் பலர் கருத் துரைத்திருந்தனர். “சண்டே லீடர்” என்ற பத்திரி கையில் வெளியிட்டிருந்த நிழற்படங்கள் தமிழர்கள் பற்றிய தவறான கருத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டு, உயிர்ப்பலிச் சடங்கு என்பது மக்களின் கூட்டுக் குலவிருந்து (Clan feast) போன்றது என்றும், எனவே உணவுக்காகத்தான் விலங்குகள் பலியிடப் படுகின்றன என்றும், உருளைக் கிழங்கையோ தாவரங்களின் வேர்களையோ (பெரும்பாலும் கிழங்கு வகைகள்) கூட சிலர் உணவாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால் இவற்றை உணவுக் காகப் பறித்தெடுக்கும்போது அதை உயிர்க்கொலை எனச் சொல்ல இயலாது என்றும், இப்படி விலங்கு களையும் தாவரங்களையும் உணவுக்காகக் கொல் வதைப் பார்த்து இரக்கப்படுபவர்கள் 30 ஆண்டு களாக ஈழப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அழிக்கப்பட்டதைப் பார்த்தும் அதற்காக வருத்தம் தெரிவிக்கவில்லையே என்றும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஆக, இலங்கையில் உயிர்ப்பலிச் சடங்கைச் செய்யும் தமிழர்கள் காட்டுமிராண்டிகளாகக் கருதப்படு வதையும் சைவத் தமிழர்களும் சிங்களப் பௌத்தர் களும் நாகரிகமானவர்களாகக் கருதப்படுவதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இதன்வழி உணவுப் பண்பாட்டு ஆதிக்க அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வகையில் தமிழகச் சூழலும் இலங் கைச் சூழலும் ஒன்றுபடுவதை உணர முடிகிறது.

தமிழகத்தில் உயிர்ப் பலிச் சடங்கு அரசியலைப் பல்வேறு சமூக, அரசியல் இயக்கங்களும், கட்சி களும், சிந்தனையாளர்களும் அவரவர்கள் கருத்தியல் நிலைப்பாடுகளில் அவரவர்களுடைய மொழி களில் வெளிப்படுத்தினார்கள்.

பார்ப்பனியத்திற்கு எதிரான அரசியலில் ஈடுபட்டு வரும் திராவிடர் கழகமும் உயிர்ப்பலிச் சடங்கு மூடநம்பிக்கையில் செய்யப்படுவதாகவும் காட்டுமிராண்டிகளுக்கு உரியதாகவும் கருதியது. இருபதாம் நூற்றாண்டுச் சமூகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் தன்னுடைய பண்பாட்டுச் சொல்லாடல்களில் காட்டுமிராண்டி என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் பார்ப்பனர்களை நாகரிகமானவர்கள் என ஏற்றுக்கொண்ட தில்லை. பார்ப்பனர்களை மட்டுமல்லாமல் பார்ப்பனியக் கடவுளர்களை வழிபடுபவர்கள் எந்தச் சாதியினராக இருந்தாலும் அவர்களை நாகரிகமானவர்களாக ஏற்றுக்கொண்டதில்லை. “இந்துக்கள் என்னும் காட்டுமிராண்டிகளுக்குக் கடவுள்கள் கந்த புராணத்தில் வரும் கந்தன், விநாயக புராணத்தில் வரும் கணபதி, பாகவதத்திலும் பாரதத்திலும் வரும் கிருஷ்ணன்” (கி. வீரமணி (தொ.ஆ) : 1994: 272) எனக் கடவுளர்களையும் வழிபடுபவர்களையும் காட்டுமிராண்டிகள் என்கிறார். இதே போன்றே தமிழ்மொழியில் உள்ள அனைத்து இலக்கியங் களும் நாட்டுப்புற மக்களின் தெய்வத்தையோ பிற நிறுவன சமயத் தெய்வங்களையோ விவரிக்கின்றன என்றும் இதனால் தமிழ்நாட்டுக்கோ தமிழர்க்கோ எந்தப் பயனும் இல்லை என்றும் பெரியார் கருதிய தால்தான் தமிழ் மொழியைக் ‘காட்டுமிராண்டிக் காலத்து மொழி’ எனக் குறிப்பிட்டார் (வே.ஆனை முத்து (ப.ஆ): 1974 : பக்-976-978,985). பெரியாரைப் பொருத்தவரையில் கடவுள் ஏற்பு என்பது பார்ப் பனரிடம் இருந்தாலும், பார்ப்பனரைத் தம் சடங்கு வெளிக்குள் வரவேற்கும் பிற சமூகத்தவராக இருந் தாலும், பார்ப்பனிய சமயம் சார்ந்த கடவுளன்றி கிறித்தவ, இஸ்லாமியக் கடவுளர்களாக இருந் தாலும், அக்கடவுளர்களை வழிபடும் அனை வரையும் காட்டுமிராண்டிகளாகவே கருதுகிறார்கள். இதைப் போலவே நாட்டுப்புற மக்களின் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும் காட்டுமிராண்டித் தனமானவை என்கிறார். பார்ப்பனர்கள் கடவுளைத் துணையாகக் கொண்டு சமூக, அரசியல், பண் பாட்டுத் தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைத் தெளிந்துகொண்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை உடைப்பதற் காகவே ஒட்டுமொத்தக் கடவுள் மறுப்புக் கொள் கையைப் பின்பற்றினார். கடவுள் மறுப்பு என்பது சடங்கு மறுப்பாகவும், வெளிப்பட்டது. சிவவாக்கி யரும் ஈ.வெ.ரா. பெரியாரும் பார்ப்பனிய சமயம், பார்ப்பனியப் பூசை முறை, நாட்டுப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறை ஆகியவற்றை எதிர்ப் பதிலும் மறுப்பதிலும் ஒன்றுபடுகின்றனர். ஆனால் கடவுள் தொடர்பான கருத்தில் வேறுபடுவது போலத் தோன்றுகின்றது. அதாவது அவர்களுடைய மொழிதான் வேறுபடுகின்றதே தவிர கருத்து வேறு படுவதாகத் தெரியவில்லை. ஈ.வெ.ரா. பெரியார் மனிதரை நம்பச் சொல்கிறார். மனிதரின் ஆற்றலைப் போற்றுகிறார். சமூக மாற்றங்கள் அனைத்துக்கும் மனிதர்களே காரணம் என்கிறார். சிவவாக்கியர் இக்கருத்துக்களை வேறு மொழியில் சொல்கிறார். அதாவது, கடவுள் என்ற ஆற்றல், வெளியில் இல்லை என்றும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது என்றும் சொல்கிறார். மனிதர்களின் ஆக்கபூர்வமான ஆற்றலையே கடவுள் ஆற்றல் என்கிறார். மொத்தத்தில் மனிதர்தான் உண்மை; மனித ஆற்றல்தான் உண்மை என்ற புரிதலையே சிவவாக்கியர் அவருடைய மொழியில் வெளிப் படுத்துகிறார். ஆக, சிவவாக்கியரும் ஈ.வெ.ரா. பெரியாரும் மனித ஆற்றலை மதிப்பவர்களையே நாகரிகமானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் சிந்தனைத் தொடர்ச்சியாகவே இன்றைய திராவிடர் கழகத்தைத் தலைமை ஏற்று இயக்கி வரும் கி.வீரமணி அவர் களின் கருத்தும் விளங்குகிறது. அதாவது, ஜெயலலிதா அவர்களின் அரசு பிறப்பித்த உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை ஆதரிப்பதன் வாயிலாக அந்தச் சிந்தனைத் தொடர்ச்சியைக் காட்டினார். இவ்வாறு ஆதரித்த தற்குக் காரணமாக அன்றைய காலச் சூழலில் ஜெய லலிதா அவர்களின் கட்சியோடும் அரசோடும் திராவிடர் கழகம் நட்புறவு கொண்டிருந்ததைச் சிலர் சுட்டிக்காட்டினார்கள். இப்படிப்பட்ட ஆதரவு நிலைப்பாடு பற்றி மார்க்சிய, பெரியாரியச் சிந்தனைகளைக் கறாராகப் பின்பற்றுபவராகக் கருதப்படும் எஸ்.வி. ராஜதுரை அவர்களின் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது. “அரசாங்கச் செலவில் யானை தானம் செய்கிற, யாகம் வளர்க்கிற, நரேந்திர மோடியைப் போற்றுகிற, அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டியே தீர வேண்டும் என்கிற தொழிலாளர் தியாகத்தால் விளைந்த உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிற, மகராசன் குழு பரிந்துரைகளுக்கு நேர் முரணான வகையில் வேதாகம கல்லூரியை நிறுவிய ஒரு ஜெயலலிதா, ஆடு-கோழி விசயத்தில் மேற்கொண்ட நிலைப் பாட்டை முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கை என விளம்பரப்படுத்தும் அசாத்திய துணிச்சல் கி. வீரமணிக்கு மட்டுமே சாத்தியம்” (வல்லினம் - காலாண்டிதழ்: இதழ் 6-7; 2003: பக்.105)

இவ்வாறு கி.வீரமணி அவர்கள் ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கையை முற்போக்கான சீர் திருத்த நடவடிக்கை என்று சொன்னதைத்தான் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் கிண்டல் செய்கிறாரே தவிர, தடைச் சட்டத்திற்கு ஆதரவான கி.வீரமணி அவர்களின் கருத்தை அவர் மறுக்கவில்லை. ஏனெனில் அவரும் உயிர்ப்பலித் தடைச்சட்டத்தை வேறொரு கோணத்தில் ஆதரிக்கவே செய்கிறார். அதாவது, அவருக்கும் உயிர்ப்பலிச் சடங்கு மூட நம்பிக்கை சார்ந்ததாகவும் காட்டுமிராண்டித் தனமானதாகவும்தான் தோன்றியது. இந்தக் கருத்தை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் பின்வருமாறு அவர் சொல்லுகிறார்: “கோயில்களில் உயிரினப் பலிகளைத் தடை செய்யும் சட்டத்திற்கு எதிர்ப்புக் காட்டுபவர்களின் பட்டியலில் சேர்ந்து கொள்ள எனக்குத் தயக்கம் உள்ளது. உயிர்ப் பலியி லிருந்து நெய்ப்பலிக்குப் பார்ப்பனர்கள் மாறி சாதிப் படிநிலை அமைப்பின் உச்சிக்குச் சென்று விட்ட பிறகு அவர்கள் பார்ப்பனரல்லாதவர் களின் தலித்துகளின் மரபான சடங்குகளை, தமிழ், திராவிடப் பண்பாட்டை இழிவுபடுத்துகின்றனர் என நமக்குச் சொல்லப்படுகிறது. இந்தப் பண் பாட்டில் மனிதர்களுக்கான மீட்சி உள்ளதா? விலங்கு உரிமைகள் என்பதை ஏற்றுக் கொள்ளாத வர்கள் கோவில்களில் உயிர்ப் பலிகளை எவ்வாறு எதிர் கொள்வது?... ஒரு ஜனநாயக உரிமை என்ற வகையில் மக்களின் வழிபாட்டு உரிமைகளை அங்கீகரிப்பதும் அதே சமயத்தில் ஒரு அடிப் படையான சமூக மாற்றத்துக்காகப் போராடும் சக்தி என்ற வகையில் எல்லா வகையான கடவுள், மதக் கொள்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்வதும் ஒரு பொதுவுடைமை வாதியின் கடமை என்றார் லெனின். பெரியாரைப் பொறுத்தவரை திருநள்ளாறில் தீட்டுக் கழிப்பதும் திருப்பதியில் மொட்டையடித்துக் கொள்வதும் பழனிக்குக் காவடி எடுப்பதும் அம்மன் கோயிலில் தீ மிதிப்பதும் இவை எல்லாமே மூடநம்பிக்கைகள் தான்” எனக் குறிப்பிட்டு உயிர்ப்பலிச் சடங்கு மூட நம்பிக்கை சார்ந்தது எனப் பூடகமாக உணர்த்தி அதனால் அச்சடங்கைத் தடை செய்ததை எதிர்ப்பது சரியில்லை என உணர்த்துகிறார். (வல்லினம் - காலாண்டிதழ்: இதழ் 6-7: ஆகஸ்டு 03-ஜனவரி 04, 2003: பக். 105-106)

உயிர்ப்பலிச் சடங்குகள் மூடநம்பிக்கை சார்ந் தவை என்பதாலும் அவற்றை அரசு தடை செய்தமை யாலும் அந்நடவடிக்கையை முற்போக்கான சீர் திருத்த நடவடிக்கை என கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகிறார். ஆனால் எஸ்.வி.இராஜதுரை அவர்கள் ஒரு பக்கம் பகுத்தறிவற்ற பல செயல் பாடுகளில் ஈடுபடும் ஜெயலலிதா அவர்களையும் அவரின் தலைமையில் செயல்பட்ட அரசையும் கண்டிப்பதோடு இப்படிப்பட்டவர்க்கு நாட்டுப்புற மக்களின் உயிர்ப்பலிச் சடங்கைத் தடைசெய்வதற்குத் தகுதியில்லை எனச் சுட்டிவிட்டு இன்னொரு பக்கம் உயிர்ப்பலிச் சடங்கு பகுத்தறிவுக்குப் புறம்பானது என்றும் குறிப்பிடுகிறார். ஆக, நாட்டுப்புற மக்களின் உயிர்ப்பலிச் சடங்குகளானாலும் பார்ப்பன சமயச் சடங்குகளானாலும் கி.வீரமணி, எஸ்.வி. இராஜ துரை ஆகிய இருவருக்கும் அவை காட்டுமிராண்டித் தனமானவைதான்.

பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் பொது வுடைமைச் சிந்தனையாளர்களும் சமூக அரசியல் தந்திரமாகவே உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்த்தார்கள். எதிர்த்து வரு கிறார்கள். அத்தடைச் சட்டத்தின்வழி இந்துத்துவ அதிகார அரசியல் செயல்படுவதைத் தெளிவாக உணர்ந்தார்கள். அடித்தள மக்களின் சடங்குகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களை இந்து சமயச் சடங்கு வெளிக்குள் திணித்து விடலாம் என்ற இந்துத்துவத் தந்திரத்தைப் புரிந்துகொண்டார்கள். இந்து சமய நிறுவனம் ஆதிக்கம் பெற்றுப் பார்ப் பனர்களை உயர்த்திப் பிடிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை எதிர்த்தார்கள். இவர்கள் யாரும் நாட்டுப்புறச் சடங்குகள் பகுத்தறிவு சார்ந்தவை என்று சொல்ல வில்லை. அடித்தள மக்களின் சடங்குகள் மூட நம்பிக்கையில் உருவாக்கப்பட்டவை என்ற ஒற்றைப் பார்வை இருபிரிவினரிடமும் குடியிருக்கிறது. இந்தப் பார்வையும் ஒரு மேட்டிமைத்தனமான பார்வைதான். அடித்தள மக்களின் சடங்குகளை, முன்னரே குறிப்பிட்டதுபோல், பன்மை நோக்கில் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கவேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நரேந்தரநாத் பட்டாச்சார்யா போன்ற மார்க்சியச் சிந்தனை யாளர்கள் நாட்டுப்புறச் சடங்குகளை இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வு செய்து அவற்றின் சமூகப் பங்களிப்பையும் பண்பாட்டுப் பொருண்மைகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களின் பார்வை தமிழ்நாட்டுப் பெரியாரியச் சிந்தனையாளர்களிடம் காணப்படவில்லை. மார்க்சியச் சிந்தனையாளர் களிலும் ஒரு சிலர் தவிரப் பெரும்பான்மையோர் நாட்டுப்புறச் சடங்குகளை மூடநம்பிக்கை சார்ந் தவையாகவும் காட்டுமிராண்டித்தனமானவை யாகவுமே கருதுகிறார்கள்.

ஜெயலலிதா அவர்களுடைய தலைமையிலான அரசால் உயிர்ப்பலிச் சடங்கு தடை செய்யப்பட்ட போது எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மௌனம் காத்தது. நாட்டுப்புறச் சடங்குகள் பற்றி அக்கட்சியின் தலைவரும் பகுத்தறிவாளரு மாகிய கருணாநிதி அவர்கள் கடுமையான கருத்துக் களைத் தெரிவித்திருக்கிறார். சத்திய மங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் நிகழ்ந்த தீ மிதிச்சடங்கில் கலந்துகொண்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்ததோடு அந்தச் சடங்கைக் காட்டுமிராண்டித்தனமானது எனவும், கடுமை காட்டினார். இக்காலத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் பெரும் பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்ற போதிலும் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் தாக்கத்தைப் பெற்ற ஒரு சில தலைவர்களும் தொண்டர்களும் தான் பார்ப்பனியச் சமயம் சார்ந்த சடங்குகளை ஒதுக்கி வருகிறார்கள். ஆனாலும் கூட இந்து சமயச் சடங்குகளைக் காட்டுமிராண்டித் தனமானவை எனச் சொல்வதற்கு அவர்களுக்குத் தைரியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இந்து அறநிலையத் துறையை அமைத்துப் பார்ப்பனியச் சடங்குகளைப் பாதுகாத்தே வந்திருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் நாட்டுப்புற மக்களின் சடங்குகளைப் பார்ப்பனியச் சமயச் சடங்குகளைப் போல நாகரிகமானவையாக மாற்றிவிடலாம் எனக் கருதியோ என்னவோ 2001-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 மற்றும் 11 ஆம் நாட்களில் மதுரையில் சங்கராச்சாரியார் அவர்களால் கூட்டப்பட்ட கிராமப் பூசாரிகளின் நான்காவது மாநாட்டில் அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு:

தொடரும்...

Pin It