புதினம் அல்லது பரவலாக அறியப்பட்ட அளவில் நாவல் என்ற இலக்கிய வடிவத்திற்கு அதற்கேயுரிய சாதக-பாதக அம்சங்கள் உண்டு. சொல்ல வந்த விஷயத்தை அல்லது கதையின் மையப் பொருளை அகல்விரிவாகப் பேச முடியும். அதற்கான ‘வெளி’யும் காலமும் புதினத்தில் உண்டு. ஆனால், அதுவே அந்த மையப்பொருள் குறித்த கவனம் குலைந்து ‘வாழ்க்கை என்ன நம்மைக் கேட்டுக்கொண்டா வழிசெல்கிறது?’ என்ற பாணியில் எதையெதையோ பேசிச் செல்வதும் உண்டு. புதினத்தின் வெளியும் காலமும் தரும் உத்வேகம் அல்லது பதற்றம் இது என்று சொல்லலாம். இன்னொன்று, கதைக்கரு குறித்துப் படைப்பாளிக்கு உள்ள நம்பிக்கையும் பரிச்சயமும் அந்தப் படைப்பிற்கான வலுவையும் நம்பகத்தன்மையையும் கொண்டு வந்து சேர்க்கும்.

‘தோழர்’ என்ற படைப்பில் மேற்குறிப்பிட்ட வெளியும் காலமும் நம்பிக்கையும் பரிச்சயமும் சீரான அளவில் பொருந்தியிருக்கின்றன என்பதால் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் இந்தப் புதினம் படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக பழனி என்ற, இடதுசாரித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்துக் களப்பணி ஆற்றிவரும் இளைஞனும் அவனுக்குப் பரிச்சயமாகும் சில பிரெஞ்சு தேச சமூக சேவகர்களும், முக்கியமாக அவர்களைச் சேர்ந்த ஷபின்னா என்ற அறிவும் அழகும் நிறைந்த யுவதியும் இடம்பெறுகிறார்கள். அவர்களுக்கிடையே நடைபெறும் சமூகப்பிரக்ஞை மிக்க விவாதங்கள், கருத்துமோதல்கள் புதினத்தை முன் நகர்த்திச் செல்கின்றன. அவற்றின் மூலம் ஆசிரியர் இந்தியச் சமூகத்தில் நிலவும் சமூக சீர்கேடுகளையும், போலித் தனங்களையும், கம்யூனிஸ சித்தாந்தமே உலக மக்களைச் சுரண்டல்களிலிருந்து விடுவிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அழுத்தமாக முன்வைக்கிறார்.

ஆசிரியரின் கருத்தோட்டங்களுக்கு அவர் வாழும் சமூகத்தில் கிடைக்கக் கூடிய, கிடைத்து வரும் எதிர்வினைகளோடு அவருக்குள்ளாகவே இருந்து வரும் கேள்விகளையும் இந்த நூல் முன் வைக்கிறது. இது ஒரு சுயசரிதைத்தனமான புனைவு என்று கூறுவதற்கு ஏதுவாகப் புதினத்தில் இடம் பெறும் பிரதான கதாபாத்திரமான ஷபின்னாவுக்குத் தான் புதினம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்பதோடு பதிப்புரையும், “மு.வ. அவர்கள் தனது நாவலில் ஒரு பாத்திரமாக நின்று பேசுவதுபோல் தோழர் நாவலில் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நின்று பேசுகிறார்”, என்று சுட்டுவதால் இதை ஆங்கிலத்தில் ஆநஅடிசைள தோழர் என்ற வகைமையை ஒத்ததாய் சுயசரிதைத்தனமான புனைவு என்று பகுத்துக் கொள்ளலாம்.

கதையின் களனும் பின்புலமும் ஆசிரியர் தனது சமூக சிந்தனைகளையும், கம்யூனிஸச் சித்தாந்தங்களையும் இடைச்செருகலாக, வழி விலகலாகத் தரத் தேவையில்லாமல் செய்துவிடுவது இந்த நூலுக்கு வலு சேர்க்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டும் கதை நெடுக உறுதியான அடிச்சரடாய்ப் பின்னிப் பிணைந்திருக்கிறது. இந்தியாவின் கிராம வாழ்க்கையைப் பற்றி நகரவாசிகளுக்குத் தெரிந் திராத பல அவலங்களை இந்த நூல் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, நூலின் அத்தியாயம் 16 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகள் சுரண்டப்படும் விதத்தை வலிக்க வலிக்க விரித்துக் காட்டுகிறது. கதையில் வரும் பிரெஞ்சுக்காரர் கொஷெ பின்வருமாறு மனவலியொடு விவரிக்கிறார்:

“சகிக்க முடியாத காட்சி அது.... பன்னிரண்டு வயதுச் சிறுமியர் மட்டுமல்லாது ஆறு ஏழு வயதுக் குழந்தைகளும் அந்த பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் அலுமினியம் அல்லது எவர்சில்வரால் ஆகிய, கையில் பிடித்துக் கொள்ள வளையத்தோடு கூடிய ஊஞ்சல் போல ஆடும் சிலிண்டர் வடிவமான ஒரு பாத்திரம் இருந்தது.”

அந்த டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட சில தகவல்கள்:

1) அந்தக் குழந்தைகள் எல்லாம் 19 மைலுக்கு அப்பாலுள்ள புதூர் என்ற ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.

2) மிகச் சின்ன குழந்தையின் வயது 6, பெரிய பெண்ணின் வயது 36.

3) இவர்கள் ஊரிலே காலை மூன்று மணிக்கே மேச் பாக்டரி ஏஜெண்டுகளால் எழுப்பிவிடப்பட்டு அந்தக் கொடிய அதிகாலைப் பொழுதிலேயே அவர்கள் காலை உணவை உண்டு காத்திருந்தார்கள்.

4) இனி மாலை 6 மணிக்கு மேல் கிளம்பி இரவு 8 மணிக்குப் போய்ச் சேருவார்கள்.

5) குழந்தைகள் சிலர் 80 அல்லது 90 காசு முதல் இரண்டு ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பெரிய பெண்கள் நான்கு அல்லது ஐந்து ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். திறமையானவர்கள் ஆறு அல்லது ஏழு ரூபாய் கூட சம்பாதித்து விடுவது உண்டாம்.

இன்று மேற்காணும் தினக்கூலியில் வேண்டு மானால் ஒரு சிறு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் இன்றும் சுரண்டப் பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

அங்குக் குழந்தைகள் சுரண்டப்படும் விதம் குறித்த, கொஷெ கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியரின் இன்னுமொரு பதிவு:

“ஒரு குள்ளமான வேன் வந்தது. அப்படிப் பட்ட வாகனத்தை பிரான்ஸ் நாட்டு கிராமத் தெருக்களில் மட்டுமில்லை, மியூஸியத்தில்கூடக் காண்பது அரிது. அது ‘டொடடொட’வென்று மிகுந்த வேதனையோடு பலமாக முணகிக்கொண்டு கரும்புகையை வாந்தி எடுத்துக்கொண்டு வந்து நின்றது. அந்த வாகனத்திற்கு என்று ஒரு நிறம் இருப்பதாகக் கூறமுடியாது. டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறங்கிவந்து பின்புறக்கதவைத் திறந்துவிட்டார். அவ்வளவுதான். மனிதப்புழுக்கள் பொதுபொதுவென வந்துகொட்டியது சகிக்க முடியாத காட்சி.... குழந்தைகள் வந்து குதித்துக் கொண்டே இருந்தனர்.

வண்டி காலியான பின் வண்டிக்குள் எட்டிப் பார்த்தேன். பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஒரே நாற்றம்.... மூத்திர நாற்றம்.... அடிவயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது..... நீங்கள் எங்கள் நாட்டோடு ஒப்பிட்டுக் கூறச்சொன்னதால் இப்படிக் கூற நேர்கிறது. உங்கள் மனம் புண்பட்டால் அன் போடு என்னை மன்னிக்கவேண்டும். பிரான்ஸ் தேசத்தில் மட்டுமில்லை. எந்த ஐரோப்பிய நாட்டுக் கக்கூசும்கூட இவ்வளவு நாற்றத்தோடும் ஆபாச மாகவும் இருக்கவே முடியாது. வண்டியில் உட்கார சீட்டே கிடையாது. கீழே வைக்கோல் பரப்பப்பட்டிருந்தது. அதுவும் கசங்கி, குலைந்து கூழாகி, குப்பையாகி இருந்தது. எத்தனை மாதங் களுக்கு முன் போட்டு வைத்தார்களோ.... பின் கதவில் இருந்த மிகச் சிறிய இரண்டு ஜன்னல்கள் தவிர வேறெந்த ஜன்னல்களும் கிடையாது. நாலடி உயரமுடையவர்கள்கூட நிமிர்ந்து நிற்க முடியாத அளவு குட்டையானது. அந்த வேனுக்குள் அழுக்குத் துணிமூட்டைகளைத் திணித்துவைத்துக்கொண்டு வருவதைப்போல இருட்டில் காற்றோட்டமில்லாத படி கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அதிகாலை யிலேயே வீட்டிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இடையில் சிறுநீர் கழிக்கவேண்டி வந்தால் என்ன செய்வார்கள்.....? எங்கள் நாட்டில் செம்மறியாடு களைக் கூட நாங்கள் லாரிகளில் பாதுகாப்போடும் சுகாதார முறைப்படியும்தான் ஏற்றிச் செல்கிறோம்..... எங்கள் நாட்டுத் தொழிற்கூடங்களையும் இங்குள்ள கொட்டடிகளையும் எவ்வகையிலும் ஒப்பிட்டுப் பேச முடியாது....”

சில சமயங்களில் கதாநாயகன் பிரெஞ்சுக்காரர் களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விடுவதுபோல் தோன்றினாலும் எந்தத் தருணத்திலும் தன்னுடைய கருத்துகளை முன்வைக்க அவன் தவறுவதேயில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் வறியவர் களுக்கு சேவை செய்வதுபற்றி அவன் வெளியிடும் ஆணித்தரமான கருத்துக்களை உதாரணங்காட்டலாம். அதே போல், லட்சியவாதி என்பதால் எதிர்ப்பாலினரின் அழகிய தோற்றத்தால் கவரப்பட மாட்டான், அது குறித்துக் கிளர்ச்சியடைய மாட்டான் என்பதான தேவையற்ற ‘அலவா’ ம் இந்தக் கதையில் இடம் பெறவில்லை. சுயசரிதைத் தனமான நூல் என்பதால் ஆசிரியர் காந்தீயவாதியாகவும் இருந்து பின் கம்யூனிசத்தில் நம்பிக்கைகொண்டவராக நிலை கொண்டவர் என்ற அளவில் அவர் காந்தீயத்தைப் பற்றி முன்வைக்கும் எதிர்க்கருத்துக்கள் பொருட் படுத்தத்தக்கவை என்றாலும்கூட ‘காந்தீயம் என்றேனும் முழுமையாக இந்திய அரசியலில் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்ன’ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாமல் எழுகிறது. ‘ஹரிஜன்’ என்ற வார்த்தையை வேண்டுமென்றே, உள்நோக்கத் தோடு பிரயோகித்தார் என்று ‘சிலரை’ப் போல் கூறுவதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. மேலும், எல்லாவகைச் சித்தாந்தங்களையும், சமூக நோக்கங்களையும், நடைமுறையில் அவற்றின் குறைபாடுகளையும் அகல்விரிவாக அலசும் ஆசிரியர் இடதுசாரித் தத்துவத்தையும் அத்தகைய ஆய் வலசலுக்கு - iவேசடிளயீநஉவiடிn- உட்படுத்தியிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. அதேபோல், தன்னுடைய கருத்துக்களையே அவர் முடிந்த முடிவாகக் கொள்ளும் போக்கையும் காணமுடிகிறது.

இந்தப் புதினத்தின் ‘நடை’ பற்றிக் குறிப்பாக எதுவும் சொல்ல இயலவில்லை யென்றாலும் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் எளிய நடையில் எழுதப் பட்டிருக்கும் இந்த நூலில் கிராம வாழ்க்கை, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த சில விவரிப்புகள் அற்புத மாக, ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந் துள்ளன என்பதைச் சொல்லியாகவேண்டும். (எ.கா) அரைஞாண் கயிறு தவிர வேறெதுவுமே இல்லாமல் நிர்வாணமாகக் கரிசல்காட்டில் தத்தித் திரியும் குச்சிப்பூச்சிகளைப்போல இருந்த அவளைத் தொத்திக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்த குழந்தைகளை....’ (பக்.22)

இந்த நூல் எழுதப்பட்டதற்கும் பிரசுரமானதற்கும் இடையே நிறைய வருடங்கள் ஓடிவிட்டனவா எனத் தெரியவில்லை. ஆனால், சில தகவல் பிழைகள் இருப்பதாய்த் தோன்றுகிறது. (எ.கா) அரசு ஊழியர் களுக்கு போனஸ் வழங்கும் ஒரே அரசாங்கமும் அதுதான் (மேற்குவங்கம்) (பக். 202)

நூலின் தொடக்கத்தில் பதிப்புரையில் நூலின் முக்கியத்துவம் மிகச் செறிவாகத் தரப்பட்டுள்ளது. என்றாலும், முழுக்கதையும் அதில் வெளிப்பட்டு விட்டது தவிர்க்கப்பட்டிருந்தால் கதாநாயகனான இலட்சியத் தமிழ் இளைஞனும், கதாநாயகியான பிரெஞ்சு யுவதியும் இறுதியில் இணைவார்களா, மாட்டார்களா என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் வாசிப்போருக்கு ஏற்பட்டிருக்கும் - நூலின் நோக்கம் அதுவல்ல என்றாலும்!

ஒரு நல்ல நூல் அடுத்து வரும் எத்தனையோ தலைமுறைகளால் வாசிக்கப்படும் என்னும் நிலையில் இன்றுள்ளவர்களுக்கு எத்தனை பரிச்சயமானவராக இருந்தபோதிலும் ஆசிரியரைப் பற்றிய முழுநிறை வான விவரக்குறிப்பு ஒவ்வொரு நூலிலும் மிக இன்றியமையாதது. அத்தகைய ஆசிரியர் குறிப்பு இந்த நூலில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அடுத்துவரும் பதிப்புகளில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும். 300 பக்கங்களில் ஒரு நல்ல, ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் நூலை வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இதை ஒரு எளிய வாசக வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

Pin It