இலக்கணமென்பது மொழியின் அமைப்பியல்புகளைப் பற்றிய விளக்கமாகும். இந்த அமைப்பியல் பற்றிய விளக்கமாவது விதிமுறையாகவோ அல்லது வரையறையாகவோ இல்லாமல் மொழியின் பயன்பாட்டுத் தளங்களையும் அதன் இயல்பான போக்குகளையும் விளக்குவதாக அமையும். அவ்வாறான நிலையில் தமிழ் மொழியின் பயன்பாட்டுத்தளங்களோடு இணைத்து மொழியின் அமைப்பியல்புகளை விளக்கும் இலக்கணமாகத் தொல்காப்பியம் இருக்கிறது. அந்தவகையில், தொல்காப்பியம் மொழியின் இலக்கணத்தை அதன் இயல்பான போக்குகளிலிருந்து விளக்கும் இலக்கண நூலாக இருக்கின்றது. தொல்காப்பியம் இவ்வாறு, வழக்கு, செய்யுள் எனும் இருவகைத் தரவுகளினூடாக மொழியைப் பகுப்பாய்வு செய்கிறது. எனவேதான் குறிப்பிட்ட பொருண்மை பற்றி குறிப்பிடும் தொல்காப்பியம் அப்பொருண்மைகளைக் கடந்தியங்கும் முறையியல்கள் குறித்தும் விளக்குகின்றது. உதாரணமாக, வேற்றுமையியல் குறித்துப் பேசும் தொல்காப்பியம், வேற்றுமைகளின் இயல்பைக் கடந்தியங்கும் முறைகளை வேற்றுமை மயங்கியலில் பேசுகின்றது. இவ்வாறான மொழியின் ஒழுங்கமைவுகளைக் கடந்தியங்கும் கூறுகளும் மொழியின் அமைப்பாகவே கருதமுடியும்.

தொல்காப்பியம் மொழியின் இயங்குதளத்தை அதன் போக்கில் பகுப்பாய்வு செய்து விளக்கும் பனுவலாக அமைகிறது. மொழியானது ஒழுங்கமைவுக் கூறுகளும் அவற்றைக் கடந்து இயங்கும் சூழல்களுமாக குறிப்புநிலையில் இயங்குவதைத் தொடர்ந்து வலியுறுத்தும் போக்கிலேயே பொருண்மைப் பகுப்பு விளக்கங்கள் அமைகின்றன. இந்த நோக்கிலேயே சூத்திரங்களின், இயல்களின், அதிகாரங்களின் அமைப்புமுறைகள் உள்ளன. அந்த வகையில் தொல்காப்பியம் குறிப்பிடும் மொழியின் ஒழுங்கமைவுகளைக் கடந்தியங்கும் கூறுகளை இலக்கணநிலை வழுவமைதிகளாகக் கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மொழியமைப்பின் வழுவமைதிக் கூறுகள்

மொழியமைப்பின் இயங்கு தளத்தில் உருவாகும் மயக்கங்களை மொழியமைப்பின் வழுவமைதியென்று கூறலாம். இவ்வாறான மயக்கங்கள் கவிதையமைப்பில் அமைவதென்பது கவிதையின் பண்பை மேலும் அழகியலாகவும் கவித்துவமானதாகவும் மாற்றுகின்றன. அதாவது பொதுமொழியின் இயங்குநிலையில் மிகவும் இயல்பானதாக இருக்கும் இப்பண்புகள் இலக்கியம்/கவிதையில் இடம்பெறும்போது அதன் சிறப்புநிலையில் இயங்குகின்றன என்று கூற முடியும். தொல்காப்பியர் குறிப்பிடும் ‘செய்யுட் போலி, செய்யுள் விகாரங்கள், செய்யுளில் முதலெழுத்து நீண்டு ஒலித்தல், சுட்டுப்பெயர் செய்யுளில் முன்னதாக வருதல், உருபு மயக்கங்கள், எச்சச் சொற்கள்’ போன்ற பல்வேறு கூறுகளை மொழியமைப்பின் இலக்கணநிலையில் உருவாகும் வழுவமைதிகளென்று கூறலாம். இக்கூறுகளனைத்தும் இயல்பான வழக்கிலும் இருப்பதென்பது குறிப்பிடத் தக்கதாகும். இவையே கவிதைநிலையில் வரும்போது கவிதையின் பண்பை மேலும் அழகியலாக்குகின்றன. இவ்வாறாக இலக்கணநிலையில் காணப்படும் வழுவமைதிகளை அவற்றின் பயன்படுநிலையிலிருந்து மொழியமைப்பின் இயல்புக்கேற்றவாறு ஒலிநிலை (எழுத்து), சொல்நிலை, தொடர்நிலை என மூன்றாகப் பகுக்கமுடியும்.

ஆங்கிலக் கவிதை மொழியின் ஒலிநிலையில் காணப்படும் விலகல்களை ஒலிநிலை வழுவமைதியென்றும் சொல், தொடர்நிலையில் காணப்படும் விலகல்களை இலக்கணநிலை வழுவமைதியென்றும் குறிப்பிடுகின்றார் ஜெஃப்ரி லீச். அவரின் மொழிவிலகல் கோட்பாட்டோடு (Theory of language Deviation) மிகவும் நெருக்கமானதாகத் தொல்காப்பியரின் வழுவமைதிக் கருத்தாக்கம் அமைந்துள்ளது. அந்தவகையில் இலக்கணநிலை வழுவமைதிக் கூறுகள் இங்கு முதன்மைபெறுகின்றன. இந்த இலக்கண நிலை வழுவமைதிக் கூறுகள் இலக்கணப் பகுப்பாய்வு நிலையில் அமைந்தாலும் செய்யுளில் இவற்றுக்குத் தனிச்சிறப்புள்ளதைத் தொல்காப்பியத்தின்வழி புரிந்துகொள்ள முடியும். இயல்பான பேச்சு வழக்கிலும் இவ்வாறான மயக்கங்கள் இருப்பது இயல்பானதைப் போலவே கவிதையில்/இலக்கியத்திலும் இடம்பெறும்போது மிகவும் முக்கியத்துவமுடையனவாகின்றன.

ஒலிநிலைக் கூறுகள்

மொழியமைப்பின் ஒலிநிலையில் (எழுத்து) உருவாகும் மயக்க வடிவங்களை ஒலிநிலையின் வழுவமைதிக் கூறுகளென்று கூறமுடியும். ஒலிநிலை வழுவமைதிகளாக லீச் குறிப்பிடும் கூறுகளோடு தொல்காப்பியர் குறிப்பிடும் விகாரங்கள், செய்யுட் போலி, முதலெழுத்து நீண்டு வருதல் போன்ற கூறுகள் மிகவும் நெருங்கியிருப்பனவாக உள்ளன. ஒரு பொருண்மை குறித்த அமைவொழுங்கு முறையைக் கடந்தவற்றை வழுவமைதியாகக் கொள்ள முடியுமென்பதை தொல்காப்பியம் மற்றும் பிற்கால இலக்கண நூல்களின்வழியாக அறிய இயலும். அந்த வகையில் வழக்கு மற்றும் செய்யுளைத் தரவுகளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள தொல்காப்பியத்தில் செய்யுளில் வரும் ஒலிகளுக்கு அவ்வொலிகளின் ஒழுங்கமைவுகளைக் கடந்தியங்கும் இடங்களும் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியத்துவமுடையதாகின்றது. எனவே அம்மாதிரியான கூறுகளான செய்யுட் போலி, செய்யுள் விகாரங்கள், அளபெடை, புணர்ச்சி மாற்றங்கள் போன்ற கூறுகளை மொழியின் ஒலிநிலை­யிலிருக்கும் வழுவமைதிகளாக லீச், தொல்காப்பியர், உரையாசிரியர்களின் கருதுதல்களிலிருந்து அறிய முடியும்.

செய்யுட் போலி

ஒரு சொல்லில் ஒரு எழுத்திற்குப் பதிலாக இன்னொரு எழுத்து வந்து பொருள் திரிபுறாமலிருப்பது போலியாகும். போலியென்பதற்குப் ‘போன்று இருப்பது’ என்பது பொருளாகும். இவ்வாறான போலியெழுத்துகள் செய்யுளின் கவித்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுவதாகக் கொள்ள இயலும். ஐகாரம் மற்றும் ஔகாரத்திற்குப் போலியெழுத்துகளாகத் தொல்காப்பியர், “அகர இகர மைகார மாகும்” (தொல்.எழு.54), “அகர உகர மௌகார மாகும்” (தொல்.எழு.55) என்று குறிப்பிடுகின்றார். அதாவது, அகரமும் இகரமும் இணைந்து ஐகாரமும் (அஇ), அகரமும் உகரமும் இணைந்து ஔகாரமும் (அஉ) பெறப்படுமென்று குறிப்பிடுகின்றார். மேலும், ஐகாரத்திற்கு மற்றொரு போலியெழுத்தாக, “அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” (தொல்.எழு.56) என்பதைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். அதாவது அகரத்திற்குப் பக்கத்தில் யகரப்புள்ளி இடம்பெறுவதும் (அய்=ஐ) ஐகாரத்தின் போலியாகக் கொள்ளவேண்டுமென்பது தொல்காப்பியர் கூற்றாகும். அதைப்போலவே, அகரத்திற்குப் பக்கத்தில் வகரப்புள்ளி இடம்பெற்றால் அது (அவ்=ஔ) ஔகாரத்தின் போலியாகக் கொள்ளவேண்டுமென்பதை உரைகளின்வழியாகப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், இகரவீற்று மொழிக்கண் இகரமும் யகரமெய்யும் விரவி வருமென்பதை, “இகர யகர யிறுதி விரவும்” (தொல்.எழு.58) என்னும் சூத்திரத்தின் மூலம் குறிப்பிடுகின்றார். இதைப்போலவே, “செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும்” (தொல்.எழு.51) எனும் சூத்திரம் செய்யுளின் இறுதியில் ‘போலும்’ எனவரும் சொல்லில் னகாரமும் மகாரமும் ஈரொற்றாக வந்து ‘போன்ம்’ எனமுடியும் என்கின்றது. எனவே மொழியில் ஒரு எழுத்தையோ அல்லது ஒலியையோ குறிப்பிடுவதற்கென ஒரு வடிவம் இருக்க அதே எழுத்தைக் (ஒலி) குறிப்பிட வேறொரு வடிவத்தைக் குறிப்பிடுவதும் மொழியிலிருக்கும் இயங்கியலாகவே கருதும் அதேவேளை அவ்வகையான போலிகள் அவையுணர்த்த வரும் பொருளைத் திரிபுறாமல் கருத்தையுணர்த்துவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற்கால இலக்கண நூல்கள் அவற்றின் வருகையிடம் நோக்கி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படுத்தியுள்ளன. ஒரு சொல்லின் முதல், இடை, கடையாகிய இடங்களில் ஒரு எழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வந்து அச்சொல்லின் பொருள் வேறுபடாதவாறு வருவது போலியாகும். சில அஃறிணைப் பெயர்களின் ஈற்றில் வரும் மகரமெய்க்குப் பதிலாக னகரமெய் போலியாக வருமென்பதை நன்னூல், “மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே” (நன்.எழு.122) என்று குறிப்பிடுகின்றது. உதாரணமாக,

“...மரம்பயி லுறும்பி னார்ப்பச் சுரனிழிபு

மாலை நனிவிருந் தயர்மார்ஞ்..” (குறுந்:155)

எனும் குறுந்தொகைப் பாடலில் சுரன் என்பதில் மகரவொற்றுக்குப் பதிலாக னகரவொற்று வந்து போலியாகவுள்ளது. சுரம் என்பதே அச்சொல்லின் அமைவொழுங்கென்பதால் அதைக்கடந்து போலியாக வரும் சுரன் என்னும் வடிவத்தை வழுவமைதியாகக் கொள்ளமுடியும். மேலும், இதுபோன்று வரும் நிலம் - நிலன், புலம் - புலன், வலம் - வலன் என்று வரும். இவ்வாறான போலிகளை எழுத்துப் போலியென்று இலக்கணங்கள் குறிப்பிடுகின்றன. இப்போலி வடிவங்கள் ஒலிப்புநிலை உறவுடையனவாக அமைந்து கவிதையின் யாப்பிசைக்கு இசைவாகவும் பொருளமைதிக்கு உறவுடையனவாகவும் இருக்கின்றன.

செய்யுள் விகாரம்

செய்யுளீட்டச் சொற்களான இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு சொற்களும் செய்யுளில் அசை, சீர், தளை, அடி, தொடை நோக்கி சிலவிடங்களில் விகாரப்படும் முறை செய்யுள் விகாரமாகும். இவ்வாறான விகாரங்கள் எதுகை முதலிய தொடை நோக்கியும், சீர் அமைதி நோக்கியும் அமைவனவாகும். “வலிக்கும் வழி வலித்தல் முதலிய யாவும் இலக்கணத்துக்கு மாறாக அமைக்கப்படுவன என்பதும் அவை வழுவாயினும் செய்யுளின்பம் நோக்கி அமைக்கப்பட்டன” என்று சிவலிங்கனார் குறிப்பிடுகின்றார் (1988:49). இவ்விகாரங்கள் வலித்தல், மெலித்தல், விரித்தல், தொகுத்தல், நீட்டல், குறுக்கல் என ஆறு வகைப்படுமென்பதைத் தொல்காப்பியம், “...வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழி தொகுத்தலும்...” (தொல்.சொல்.398) எனும் சூத்திரத்தின் மூலம் குறிப்பிடுகின்றது. இதையே நன்னூல், “வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி” (நன்.சொல்.155) என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சொற்கள் விகாரப்பேறு பெறுவது செய்யுளில் ‘குற்றமில’ என்று தெய்வச்சிலையார் குறிப்பிடுகின்றார்.

“.. தண்ணந் துறைவன் கொடுமை

நம்மு னாணிக் கரப்பா டும்மே”  (குறுந்:9)

எனும் குறுந்தொகைப் பாடலில் ‘கரப்பா டும்மே’ என்னும் சொல்லில் வரும் விரித்தல் விகாரம் யாப்பசைப்பண்பிற்காக (டுமே - நிரை, டும்மே- நேர் நேர் - மாச்சீர்) வந்துள்ளது. கரப்பாடுமே என்பதே வழாநிலையாக இருக்க மகரவொற்று இரட்டித்து வந்திருப்பது யாப்போசைக்கானதாக இருப்பதால் இசைப்பண்பின் ஏற்பில் இவ்வாறான விகாரங்களை வழுவமைதியெனக் கொள்ளமுடியும். இவ்வாறு சொற்கள்தம் இயல்பான ஒழுங்கமைவைக் கடந்திசைப்பது வழுவெனினும் செய்யுளின்பம் நோக்கி விகாரப்படுவது செய்யுளில் ஏற்றுக்கொள்ளப்படுமென்பதால் சொற்களின் ஒழுங்கமைவைக் கடந்த விகாரங்களை வழுவமைதியாகக் கொள்ளமுடியும்.

அளபெடை

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் எழுத்துகள் ஒலிக்கும் மாத்திரையளவைக் குறிப்பிட குறிலுக்கு அளவு ஒன்று, நெடிலுக்கு இரண்டு என விதிகூறிய அடுத்த சூத்திரமாக “மூவள பிசைத்தல் ஓரள பின்றே” (தொல்.எழு.5) என்று குறிப்பிடுவ­திலிருந்து மூன்று மாத்திரையளவு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இச்சூத்திரமானது “மாத்திரை பற்றி எழுத்துகட்குப் புறனடை கூறுகின்றது” (2012:87) என்று பாலசுந்தரனார் குறிப்பிடுகிறார். இரண்டு மாத்திரையளவிற்கு மேல் ஒலிக்கக் கூடிய முறையை, “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்” (தொல்.எழு.6) எனும் சூத்திரத்தில் அமைத்து அளபெடையாகக் கொள்ளப்படும். உதாரணமாக,

“...பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ / நாருடை யொசிய லற்றேஞ்.” (குறுந்:112) எனும் குறுந்தொகைப் பாடலில் வரும் படாஅ என்னுல் சொல் அளபெடுத்து வந்துள்ளது. இது இசையை நிறைவு செய்வதற்காக வந்த இசைநிறை அளபெடையாகும். இவ்வாறு எழுத்துகள் நீண்டு ஒலிக்கும் முறை வழுவமைதியாக அமைத்துக்கொள்ளப்படுவதை, “அளபிறந் திசைத்தலும் ஒற்றிசை நீடலும்ஞ்” (தொல்.எழு.33) எனும் நூன்மரபிற்கான இயல் புறனடையாகத் தொல்காப்பியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகரச்சுட்டு நீண்டு வருதல்

அகரச்சுட்டு செய்யுளில் நீண்டு வருவதற்குமுரியது. இருமொழிப் புணர்ச்சிக்கண் அகரச்சுட்டானது தனது அமைவொழுங்கைக் கடந்து நீண்டு ஒலிப்பது செய்யுளிடத்துரியது என்பதைத் தொல்காப்பியர், “நீட வருதல் செய்யுளுள் உரித்தே” (தொல்.எழு.209) எனும் சூத்திரத்தின் மூலம் குறிப்பிடுகின்றார். உதாரணமாக, ‘ஆயிருதிணையி னிசைக்குமன சொல்லே’ (தொல்.சொல்.1), ‘ஆயிருபாற்சொல்’ (தொல்.சொல்.3) எனவரும் தொல்காப்பியச் சூத்திரங்களில் அகரச்சுட்டானது நீண்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது.

புணர்ச்சி மாற்றங்கள்

தொல்காப்பியர் குறிப்பிடும் நிறுத்த சொல்லும் (நிலைமொழி) குறித்துவரு கிளவியுமாகிய (வருமொழி) இரண்டு சொற்களின் சேர்க்கையே புணர்ச்சியாகும். இப்புணர்ச்சிகள் வேற்றுமை மற்றும் அல்வழியில் இயல்பு, தோன்றல், மெய்பிரிதாதல், குன்றல் எனும் நான்கு நிலைகளில் அமைவதாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இவ்வாறான சூழலில் ஏற்படும் புணர்ச்சிகள் பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாக அமைகின்றன. எனவே சூழல் நோக்கிப் பொருள் கொள்ள வேண்டுமென உரையாசிரியர்கள் கூறுவதும் முக்கியத்துவமுடையதாகின்றது. உதாரணமாக, கீரை+கடை= கீரைக்கடை எனவரும் போது விற்பனை நிலையமாகவும் கீரைகடை எனவரும் போது வினைச்சொல்லாகவும் வருவதிலிருந்து புணர்ச்சி மாற்றங்கள் பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாக அமைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், புணர்ச்சி முறைகளைக் குறிப்பிடும் தொல்காப்பியர் கட்டுப்பாடான விதிகளாகக் கூறாமல் பல்வேறு நெகிழ்வுகளுடனும் தளர்வுகளுடனும் அமையுமென்று குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவமுடையதாகின்றது. உதாரணமாக, “யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே” (தொல்.எழு.230) என மெல்லெழுத்து மிகும் முறையைக்கூறி, அடுத்த சூத்திரமே “வல்லெழுத்து மிகினு மானமில்லை” (தொல்.எழு.231) என்று முதலில் மெல்லெழுத்து மிக வேண்டிய சூழலைக் குறிப்பிட்டாலும் வல்லெழுத்து மிகுந்தாலும் குற்றமில்லை எனக்கூறும் முறையானது புணர்ச்சியில் நெகிழ்வுத்தன்மை இருப்பதையே காட்டுகின்றது.

உருபு மயக்கம்

தொடராக்க மரபுகளுள் தம்மரபில் மயங்காமல் வரும் வினை மற்றும் பெயரில் தோன்றும் பாலறிகிளவிகள், வேற்றுமைவழியாகப் புணரும்போது அவை தொகையாகவும் விரியாகவும் அமைகின்றன. இங்குப் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுகளை ஆறாகக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். எட்டு வேற்றுமைகளுள் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளைத் தவிர்த்த ஏனைய வேற்றுமைகளுக்கு ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் உருபுகளைக் குறிப்பிடுவதைத் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” (தொல்.சொல்.62), “விளிகொள் வதன்கன் விளியொடு எட்டே” (தொல்.சொல்.63), “அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி என்னும் ஈற்றே” (தொல்.சொல்.64) என்ற சூத்திரங்களின்வழி அறியலாம். இவ்வாறான வேற்றுமையுருபுகள் ஒன்று வரவேண்டிய சூழலில் அவ்வுருபிற்கு மாற்றாக வேறொரு உருபு வந்து மயங்கும்நிலை உருபு மயக்கமாகும். “பெயருக்குத் தொடரியலிலுள்ள நிலைகளை வேறுபடுத்துவது அல்லது மாற்றுவது வேற்றுமையாகும்” (2011:96). அவ்வாறு வேறுபடுத்துவதற்குக் காரணமான வேற்றுமையுருபுகள் ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வந்து மயங்குவது உருபு மயக்கமாகும். தொல்காப்பியம், “கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை” என இரண்டாம் வேற்றுமை தொடங்கி உருபுகளின் மயக்கத்தை விரிவாகக் கூறுகிறது. இவ்வாறு புணர்மொழிகளில் வேற்றுமையுருபுகள் தாம் வருமிடங்களை வேற்றுமையியலில் குறிப்பிடுகின்றது தொல்காப்பியம்.

சுட்டுப் பெயர் முன் வருதல்

சுட்டென்பது குறிப்பிட்ட பொருண்மையைச் சுட்டிக் காட்டுவதாகும். அவ்வாறு சுட்டுவதற்கான எழுத்துகளாக “அ, உ, அம் மூன்றுஞ் சுட்டே” (தொல்.எழு.31) எனக்கூறுகிறது. இச்சுட்டெழுத்துகள் பெயர்நிலைக்கு மாறும்போது சுட்டுப் பெயரெனப்படுகின்றன. இவ்வாறான சுட்டுப்பெயர்கள் முற்படக் கிளத்தலில்லை என்பது ஒழுங்கமைவாக இருக்க செய்யுளுள் இவை முற்படக்கிளத்தற்குமுரிய என்கிறது தொல்காப்பியம். அதாவது, செய்யுளில் சுட்டுப்பெயர்கள் முதலில் வரும் தன்மையுடைத்தென்பதை, “முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே” (தொல்.சொல்.39) என்னும் சூத்திரத்தின் வழியாக அறியலாம். எனவே இத்தகைய சூழலை வழுவமைதியாகக் கருத முடியும்.

இலக்கணப் போலி

குறிப்பிட்ட ஒரு பொருண்மை குறித்துவரும் ஒரு சொல் எவ்வித மயக்கமுமின்றி இயல்பான ஒழுங்கமைவுடன் வருவதற்கு மாற்றாக அவ்வொழுங்கமைவைக் கடந்து இயங்குவதை இலக்கணப்போலியென்று கருதமுடியும். வழக்கெனப்படுவது மக்களின் இயல்பான பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறையாகும். தொல்காப்பியர் இதனை ‘தகுதியும், வழக்கும்’ என்று குறிப்பிடுகின்றார். அந்த வகையில் இலக்கணம் இல்லாததும் ஆனால் சமூகப் பண்பாட்டுப் பொருண்மையின் அடிப்படையில் காலங்காலமாக வழக்கிலிருப்பதால் இவ்வாறான மயக்கத்தை இலக்கணப்போலியென்று கூறலாம். இம்மயக்கமானது இலக்கண அமைவொழுங்கைக் கடந்ததாக இருந்தாலும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மையின் அடிப்படையில் இதை வழுவமைதியாகக் கருதமுடியும்.

தொடர்நிலைக் கூறுகள்

மொழியில் வரக்கூடிய திணை, பால் வழுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல், இலக்கணநிலையில் காணப்படும் மாற்றங்கள் போன்றவற்றை இலக்கணநிலை வழுவமைதிகளென்று கூறலாம். “பான்மயக்குற்ற ஐயக்கிளவி” (தொல்.சொல்.23), ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி - ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி (தொல்.சொல்.27), ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக்காதல் (தொல்.சொல்.454), முன்னிலைச் சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடிதல் (தொல்.சொல்.455) போன்றன கவிதைமொழி மட்டுமல்லாது இயல்பான பேச்சு மொழியிலும் உள்ள வழுவமைதிகளாகும். “கவிதையின் சொல் மற்றும் தொடரியல் நிலையில் காணப்படும் விலகல்களை இலக்கணநிலை வழுவமைதியென்று லீச் வரையறுக்கிறார். அதாவது எழுவாய் இல்லாமலும் கவிதையின் தொடரமைப்பை மாற்றியமைத்தலுமாகிய விலகல்கள்” இலக்கணநிலையில் தொடர்களில் ஏற்படும் வழுவமைதிகளாகும் (1969:44-46).

வண்ணச்சினைச்சொல்

தொடரமைப்புகளில் மயங்காதனவாய் வரும் பெயரும் வினையுமாகிய இரு சொற்களும் அடைப்பெயர், சினைப்பெயர், முறைப்பெயர் எனும் முறைப்படி வருதலே தொடரமைப்பிற்கான ஒழுங்கமைவாகும். அதுவே வண்ணச்சினைச்சொல் என்று தொல்காப்பியரால் குறிப்பிடப்படுவதை, “அடைசினை முதலென முறைமூன்றும் மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்” (தொல்.சொல்.26) என்ற சூத்திரத்தின்வழியாக அறியலாம். ஆனால் இம்முறையானது செய்யுளில் மாறிவரும் தன்மையையுமுடையது என்பதை உரையாசிரியர்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இவ்வொழுங்மைவானது கவிதையமைப்பில் மாறிவரும் தன்மையிலிருந்து இச்சூழலை வழுவமைதியெனக் கூற முடியும். இவ்வாறு ஒழுங்கமைவைக் கடந்தியங்கும் சூழலைப் பொருள்கோளுடன் தொடர்புப் படுத்தி, “செய்யுள் பொருள்கோளுக்குரியதாகலின் அவை சுன்னம் என்னும் பொருள்கோள் வகையால் மாற்றிக் கொள்ளப்படும் என்க” (2012:29) என்று பாவலர் பாலசுந்தரனார் குறிப்பிடுகின்றார்.

மொழிபுணரியல்பு (பொருள்கோள்)

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் இந்நான்கு சொற்களும் செய்யுளுக்கு உரியனவாக வரும் எனக் கூறும் தொல்காப்பியம் செய்யுளில் அச்சொற்களின் பொருள்புணர்நிலைகளை மொழிபுணர் இயல்பு எனக் கூறுகிறார். தெய்வச்சிலையார், “செய்யுளகத்துப் பொருளுணரச் சொற்றொடுக்குதல் என்றும் பொருள் புணருமென மொழிபுணர்க்கும் இயல்” (2003:250) என்றும் விளக்குகிறார். எனவே மொழி புணர்த்தல் என்பது பொருள்கொள்ளும் தன்மைக்கேற்ப மொழியை அமைக்கும் முறை மொழிபுணரியல்பு என்றாகிறது. இதை, தொல்காப்பியம் “நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று” (தொல்.சொல்.404) என நான்காகக் குறிப்பிடுகிறது. பிற்கால இலக்கண நூலான நன்னூல் எட்டாகக் கூறுகிறது. இந்த எட்டுவகைப் பகுப்புநிலையின் பொருத்தமின்மையைத் தெய்வச்சிலையார், “யாற்றொழுக்கும் அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிபின்றிப் பொருள்படுதலின் இயல்பாம். கொண்டுகூட்டு சுண்ணமொழிமாற்றுள் அடங்கும். பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும். தாப்பிசைப் பொருள்கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின், இது பிரிநிலைவினை எனும் சூத்திரத்துள் அடங்கும்” (2003:253) எனக் கூறுகிறார்.

இந்த மொழிபுணரியல்பாகிய நான்கும் செய்யுளில் பொருள்கொள்ளும் தன்மைக்கேற்க சொற்களின் நிலை மாறுபடும் என்கிறது. செய்யுளில் உள்ள முறையிலிருந்து மாறுபாடுடையதாகக் கொண்டு பொருள்கொள்வதால் இம்மொழிபுணரியல்பை வழுவமைதியெனக் கூறவியலும். ஜெஃப்ரி லீச், தொடர்களில் எழுவா­யில்லாமலும் தொடரமைப்பை மாற்றியமைத்தலுமாகிய இவ்வாறான ஒழுங்மைவைக் கடந்த முறைகளையே வழுவமைதியென்று குறிப்பிடுகின்றார். எனவே தொல்காப்பியம் குறிப்பிடும் மொழிபுணரியல்பை (பொருள்கோள்) வழுவமைதியாகக் கொள்ள முடியும்.

முடிவுரை

மொழியின் இலக்கணநிலை என்பது அதன் பயன்பாட்டுத் தளங்களையும் உள்வாங்கிக் கொண்டதாக இருக்கும்போது மொழியமைப்பும் பல்வேறு நெகிழ்வுடன் கூடியாதாக மாறிவிடுகின்றது. இவ்வாறான நெகிழ்வுகளே மொழியை இறுக்கமான சூழலிலிருந்து விடுவித்து இயல்பான போக்குடன் கூடியதாக மாற்றுகின்றன. அந்த வகையில் தொல்காப்பியமானது தமிழின் மொழியமைப்பை அதன் இயல்பான போக்கில் விளக்குவதாக அமைகின்றது. எனவேதான் ஒழுங்கமைவுடன் கூடிய கூறுகளை விளக்கும் அதே நேரத்தில் அவ்வொழுங்கமைவைக் கடந்தியங்கும் கூறுகளையும் தொல்காப்பியம் விளக்குவது முக்கியத்துவமுடையதாகின்றது. இவ்வாறான கூறுகள் இலக்கண அமைப்பில் வழுவாகக் கொள்ளப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் சூழலை வழுவமைதியாகக் கொள்ளப்படும் சூழலையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. எனவே அவ்வாறு கடந்தியங்கும் கூறுகளை ஒலிநிலை, சொல்நிலை, தொடர்நிலை, பொருண்மைநிலை, வடிவநிலை வழுவமைதி எனும் வகைப்பாடுகளுக்குள் கொண்டுவந்து தமிழின் பல்வேறு காலகட்ட இலக்கியங்களினூடாகப் பொருத்தி அணுகும் போது அவற்றை தமிழின் வழுவமைதிக் கோட்பாடாக வளர்த்தெடுக்க முடியும்.

துணையன்கள்

1.           கணேசையர்.சி (ப.ஆ)., தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை:2007

2.           கணேசையர்.சி (ப.ஆ)., தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை:2007

3.           கணேசையர்.சி (ப.ஆ)., தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும், சுன்னாகம் திருமகள் அச்சகம்:1943

4.           கணேசையர்.சி (ப.ஆ)., தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற் பாகம்) முன் ஐந்தியல்களும் நச்சினார்க்கினியமும், சுன்னாகம் திருமகள் அச்சகம்:1948

5.           கோபாலையர் தி.வே (ப.ஆ), அரணமுறுவல் (ப.ஆ)., தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை:2003

6.           கோபாலையர். தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை: 2005

7.           சாமிநாதையர்.உ.வே (ப.ஆ)., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை: 2020

8.           சிவலிங்கனார்.ஆ (ப.ஆ)., தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை:1988

9.           திருஞானசம்பந்தம்.ச (ப.ஆ)., நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரை, கதிர் பதிப்பகம், திருவையாறு: 2006

10.        துரைசாமிப்பிள்ளை ஔவை.சு (உ.ஆ)., புறநானூறு, கழக வெளியீடு, சென்னை:2007

11.        நாச்சிமுத்து.கி., இலக்கணத்தில் வழுவும் வழுவமைதியும் தொல்காப்பியக் கிளவியாக்க அணுகுமுறையில், பேராசிரியர் கி. நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கோவை:2007

12.        புலியூர்க்கேசிகன் (ப.ஆ)., நன்னூல் காண்டிகையுரை, முல்லை நிலையம், சென்னை:1994

13.        பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை (தொகுதி - 1), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை:2011

14.        மாதையன்.பெ (ப.ஆ)., தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை (பாலசுந்தரனார் உரை), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்:2012

15.        மாதையன்.பெ (ப.ஆ)., தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை (பாலசுந்தரனார் உரை), பெரியார் பல்கலைக்கழகம், சேலம்:2012

16.        Leach Geoffrey N., A Linguistic Guide to English Poetry, Longman Group Ltd, England:1969.

- ஸ்ரீ.மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் - 610 005