உலகிலுள்ள ஒவ்வொரு மொழியும் ஒரு சிறப்பான தன்மையைப் பெற்றிருக்கும். அச்சிறப்பு மக்கள், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இதே வகையான நிலை தமிழுக்கும் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோர் சிந்தித்ததைவிடப் பழந்தமிழர் மேலும் அதிகமாகச் சிந்தித்துள்ளார்கள். இதனாலேயே மற்றைய உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருக்கின்றது. இதனாலேயே உலக அளவில் அறிஞர் பெருமக்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பாராட்டுகின்றார்கள்.

ira venkatesan 330தமிழுக்கு அந்தப் பெருமை வருவதற்கான காரணம் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்ததேயாகும். பொதுவாக, உலகிலுள்ள பழமையான மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. மொழியின் எழுத்து, சொல், தொடர் பற்றியே அவை விளக்குகின்றன. இம்முறை தொல்காப்பியம் முதலான எல்லாத் தமிழ் இலக்கணங்களிலும் காணப்படுகின்றது. கூடுதலாகப் பழந்தமிழ்ச் சான்றோர் அவர்கள் வாழ்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளனர்.

தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழ்மொழிக்குத் தற்போது கிடைத்துள்ள தரவு அடிப்படையில் பார்க்கும்போது ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. தொல்காப்பியமே தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகும். பத்துப்பாட்டு, எட்டுத் தொகையும் தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இந்நூல்கள்வழி ஒரு செழுமையான இலக்கண - இலக்கிய மரபை அறிந்துகொள்ள முடிகின்றது, இவ்வகையான ஒரு செழுமை கிடைத்துள்ள நூல்களில் இருப்பதற்குக் காரணம் அவற்றுக்கு முன் ஒரு செழுமையான மரபு இருந்ததேயாகும்.

தமிழ் இலக்கியங்கள் வழியும் தொல் பொருட் சான்றுகள் வழியும் ஆழிப் பேரலையால் பழந் தமிழகத்தின் தெற்கிலும் கிழக்கிலும் நிலப்பகுதி கடல் கொண்டதை அறிய முடிகின்றது. பழந்தமிழர் மூன்று சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார்கள். முதல் இரண்டு சங்கங்கள் இருந்த பகுதி கடல் கோளால் அழிய அக்காலங்களில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அழிந்து விட்டன. தொல்காப்பியத்தில் என்ப, மொழிப, என்மலர் எனக் குறிக்கப்படும் சொற்களைக் கொண்டே தமிழில் இப்போது கிடைத்துள்ளவற்றுக்கு முன்னுள்ள மரபை அறிந்துகொள்ளலாம்.

தொல்காப்பியத்தின் காலம் பற்றி அறிஞர் களிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. கி.பிக்கு முந்தையது என்று பல அறிஞர்களும் பிந்தையது என்று சிலரும் குறிப்பிடுகின்றார்கள். காலக் கணக்கில் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தோராயமாகத் தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் காலந்தோறும் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாய்மொழி மரபாகவும் சுவடிகள் வழியாகவும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றது. உரைகள் தோன்றிய பிறகு தொல்காப்பியத்தின் பெருமை மேலும் பரவலாக்கப்பட்டுள்ளது. அச்சுக்கலை வளர்ந்தபிறகு தமிழறிஞர்கள் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கிய, இலக்கணங்களையும் ஆர்வத்தோடு பதிப் பித்துள்ளனர். இவ்வகையான ஆன்றோர்களின் அரும் பணியாலேயே தமிழ் இன்று உலகோர் அறிந்து போற்றப்படும் நிலையைப் பெற்றுள்ளது.

தொல்காப்பியம் பற்றிய ஆய்வுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மேன்மேலும் வளரும். இவ்வகையான ஆய்வு வளர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படையான முந்தைய நிலையை ஆய்வாளர் இரா. வெங்கடேசன் அரிதின் முயன்று தொல்காப்பியம் தொடர்பான கருத்துகளைத் தொகுத்துத் ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இந்த அரிய நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (2014) வெளியிட்டுள்ளது.

தொல்காப்பிய உரைகள், பதிப்புகள், ஆய்வாளர் களின் கருத்துக்கள் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து தொல்காப்பியத்தை ஆய்வு செய்வோருக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் மேலும் உதவும் வகையில் உள்ளது என உறுதியாகக் கூறலாம்.

தொல்காப்பியர் வரலாறு, காலம், பதிப்புக்கள், உரையாசிரியர் என எதையும் ஒதுக்கிவிடாமல் பதிப்பாசிரியர் இரா. வெங்கடேசன் எல்லாவற்றையும் தொகுத்து ஒருமுகப்படுத்தியுள்ளார். பின்வருமாறு ஐந்து பகுதிகளாகப் பகுத்துக் கொள்கின்றார்.

1.            தொல்காப்பியர் வரலாறு

2.            தொல்காப்பியர் காலம்

3.            தொல்காப்பியப் பதிப்புரைகள்

4.            உரையாசிரியர்கள் வரலாறு

5.            உரையாசிரியர்கள் உரைத்திறன்: ஏற்பும் மறுப்பும்

தமிழ்ப்புலமை மரபில் தொல்காப்பியம் என்னும் இந்நூல் தொகுப்பாக இருப்பதால் தம்முடைய கருத்தை ஆங்காங்கே சொல்லவில்லை; இருப்பினும் இருபத்தைந்து பக்க அளவில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைத் ‘தமிழில் இலக்கண உருவாக்கம்’ என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

1. தொல்காப்பியர் வரலாறு

இப்பகுதியில் புன்னைவனநாத முதலியாரும் சி.கணேசையரும் கூறியுள்ள கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் என்றும், காப்பியக் குடியில் பிறந்ததால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்றும் இறையனார் களவுரை காலத்திலிருந்து கூறப்படும் கருத்தாகும். நச்சினார்க்கினியர் இன்னொரு கருத்தைக் குறிப்பிடுகின்றார்: தொல்காப்பியரின் இயற் பெயர் திரணதூமாக்கினி என்றும், தந்தை பெயர் சமதக்கினி என்றும், தொல்காப்பியருடன் உடன் பிறந்தவர் பரசுராமர் என்றும் குறிப்பிடுகின்றார். நச்சினார்க்கினியரின் கருத்தை அனைவருமே ஐயங் கொண்டே பார்க்கின்றார்கள். உண்மையான வரலாறு இல்லாமையால் தொல்காப்பியரைப் போலப் பல சங்க காலப் புலவர்களும் கற்பனைக் கடலில் மிதக்கின்றார்கள்

2. தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் வரலாற்றைப் போன்றே அவருடைய காலமும் இன்னும் ஆய்வுக்கு உரியதாகவே திகழ்கின்றது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து கொண் டிருக்கும். அறிஞர்கள் அவரவர் சிந்தனைக்கு ஏற்பக் குறிப்பிடுகின்றார்கள். அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; ஒதுக்கிவிடவும் முடியாது. தொல்காப்பியம் தமிழுக்கும் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல்; தொல்காப்பியரின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். அறிஞர்கள் குறிப் பிடும் தொல்காப்பியரின் காலத்தைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

புன்னைவனநாத முதலியார்   12000 ஆண்டுகளுக்கு முற்பட்டது

கா. சுப்பிரமணிய பிள்ளை      கி.மு.700ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டது

மயிலை சீனி. வேங்கடசாமி   கி.மு.800

எஸ் வையாபுரிப்பிள்ளை                   கி.பி.500

க.வெள்ளைவாரணர்               கி.மு.5000

3.தொல்காப்பியப் பதிப்புரைகள்

தொல்காப்பியம் தோன்றிய காலத்திலிருந்து செல் வாக்குப் பெற்று விளங்கியதை அதற்குத் தோன்றிய உரைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலர் தொல்காப்பியத் திற்கு உரை எழுதி இருக்கின்றார்கள். நன்னூல் தோற்றிய காலத்தில் தொல்காப்பியம் அதிகமாகக் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்ததை அறிய முடிகின்றது. அச்சுக்கலை வளர்ந்த பிறகு பல சான்றோர் பெருமக்கள் தொல்காப்பியத்தை உரைகளோடு பதிப்பித்தார்கள். பொருளதிகாரம் அனைவரின் கவனத்திற்கு வந்தபிறகு அதன் சிறப்பு மேலும் பரவலாகியது. இராபர்ட் கால்டுவெல் (1856) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வெளியிடுவதற்கு முன்பே தொல் காப்பியம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைப் பார்க்கும் வாய்ப்பை அவர் பெறவில்லை. தொல் காப்பியத்தை அறிந்திருந்தால் மேலும் தமிழில் பல சிறப்புக்களை இராபர்ட் கால்டுவெல் வெளிப்படுத்தி இருப்பார்.

தொல்காப்பியத்தைப் பலர் பதிப்பித்து வெளி யிட்டுள்ளார்கள். தொடக்க காலப் பதிப்பாசிரியர்களின் பதிப்புரைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மகாலிங்கையர் மழலை, தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை, 1848

தாமோதரம் பிள்ளை சி.வை; தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - சேனாவரையர் உரை, 1868

1858 ஆம் ஆண்டில் சாமுவேல் பிள்ளை தொல்காப்பியம் - நன்னூல் இரண்டையும் ஒத்த நூற்பாக்கள் அடிப்படையில் பதிப்பித்துள்ளார்

இப்பதிப்புக்களுக்குப் பிறகு பலர் தொல்காப்பி யத்தை விரிவாக ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு இருக்கின்றார்கள். வ.உ.சிதம்பரனார், ரா.இராக வையங்கார், உ.வே.சாமிநாதையர், கா.நமச்சிவாய முதலியார், கா.சுப்பிரமணியபிள்ளை P.S. சுப்பிரமணிய சாஸ்திரி, சி.கணேசையர், ச.சோமசுந்தர பாரதியார் என இன்னும் பலரின் பதிப்புரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், இவற்றின் உரையாசிரியர்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.

4.உரையாசிரியர்களின் வரலாறு

தொல்காப்பியத்திற்கு உரைகள் மட்டும் இல்லை என்றால் இந்த அளவிற்குத் தொல்காப்பியத்தைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. மேலும் புரிதலுக்கு இக்கால ஆய்வுகள் பெரிதும் பயன்படுகின்றன. கிடைத் துள்ள உரைகளில் இளம்பூரணர் உரை காலத்தால் முந்தையதாகும். 13 ஆம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர் உரை காணப்படுகின்றது.

சேனாவரையர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் காணப்படுகின்றது. வடமொழிப் புலமை மிக்க சேனாவரையர் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இதே நூற்றாண்டைச் சார்ந்த தெய்வச் சிலையாரின் உரையும் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே காணப்படுகின்றது.

நச்சினார்க்கினியர் உரை எழுத்து, சொல், பொருளதிகாரத்தில் முன்னுள்ள ஐந்து இயல்களுக்கும் காணப்படுகின்றது. இவரது காலமும் 14 ஆம் நூற்றாண்டாகவே கருதப்படுகின்றது. இதே காலக் கட்டத்தில் தோன்றிய பேராசிரியரின் உரை பொருளதி காரத்தில் பின் நான்கு இயல்களுக்கு மட்டுமே காணப் படுகின்றது. கல்லாடர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் காணப்படுகின்றது. முழுமையாகக் கிடைக்க வில்லை. இவர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரையும்விடக் காலத்தால் பிற்பட்டவர் ஆவார். பொதுவாக, காலம் பற்றிய கணிப்பில் தொல் காப்பியருக்கு ஏற்பட்ட நிலையே உரையாசிரியர் களுக்கும் காணப்படுகின்றது.

5. உரையாசிரியர்கள் உரைத்திறன்: ஏற்பும் மறுப்பும்

இறுதி இயலாகிய இப்பகுதியில் பதிப்பாசிரியர், இரா. வெங்கடேசன் உரையாசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணும் உரைகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.

தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப் பல்வேறு நிலையில் பரிந்து இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. எல்லா நூல்களுக்கும் அடிப்படையாக அமைவது தொல்காப்பியமே ஆகும். பொதுவாக, முன் தோன்றியவற்றை விடப் பின் தோன்றியவை மேலும் செப்பம் பெற்று அமையும். இக்கால இலக்கியங்களில் இந்த நிலையைக் காணலாம். தொல்காப்பியம் இதற்கு விதிவிலக்காகும். பிற்காலத்துத் தோன்றிய எந்த நூலும் அதனை விஞ்சி நிற்கவில்லை. இதனாலேயே இன்று வரை அறிஞர்களால் விரும்பி ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியம் தொடர்பான பதிவுகளைத் தொகுத்துப் பதிப்பித்துள்ள முனைவர் இரா. வெங்கடேசனைப் பாராட்ட வேண்டும்.

ஆய்வுக்கு நல்ல நூல்களை வெளியிடும் நியூ செஞ்சுரி நிறுவனத்தாரையும் பாராட்ட வேண்டும். ஆய்வாளர் களுக்கு ‘தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்’ ஒரு சிறந்த வழி காட்டும் நூலாகும்.

தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம்
பதிப்பாசிரியர்: முனைவர் இரா.வெங்கடேசன்
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை: ` 340/-

 

Pin It