நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில் மலாட்டையை (வேர்க்கடலை) போட்ட பின்னரும் (கூடை அல்லது பாத்திரத்தில் மலாட்டைப் பயிரை வைத்துக்கொண்டு ஏர் உழவில் ஒவ்வொன்றாகப் போடுதல்) உளுந்து, சோளம், கம்பு போன்ற தானியங்களை விதைத்து உழுதுவிட்ட பின்பும் விதைப்பு நன்றாகவும், சீராகவும் முளைக்கும்பொருட்டு உழவால் மேடு பள்ளமாகச் சமனற்றுக் கிடக்கும் நிலத்தை உழவர்கள் சமன்செய்வர். துரிஞ்சை, காட்டுவா போன்ற நன்கு தழையுள்ள மரங்களிலிருந்து சிறு சிறு கிளைகளை வெட்டியெடுத்து ஒன்றாகப் பிணைத்து, ஏர் உழும் கலப்பை, பரம்பு போன்ற நன்கு கனமுள்ள பொருட்களுள் ஒன்றைப் பாரத்திற்காக அதன் மேல் போட்டுச் சேர்த்துக் கட்டிய பின்னர் மாட்டைக் கொண்டு விதைத்த நிலம் முழுவதும் இழுத்துச் செல்லச் செய்வர். விதைகள் நிலத்தின் மேலிருந்து வீண்போகாமல் இருப்பதற்காக உழவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம். அவற்றைப் ‘படலடித்தல்’என்பார்கள். உழவுத் தொழிலில் நவீன இயந்திரங்கள் ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில் இவ்வழக்கம் அற்றுப்போய்விட்டது; அச்சொல்லும் வழக்கிலிருந்து மெல்ல மறைந்து வருகின்றது.

மூங்கிலின் சிறு சிறு கிளைகளை வெட்டியெடுத்து நன்றாகச் சீர்செய்து ஒன்றாகப் பிணைத்துக் கட்டி வீட்டை மூடிவைப்பர். இதைப் ‘படல்’என்பார்கள். குடிசை வீட்டில் ‘படல்’வேலியாக இருக்கும். இன்றைக்கும் சில கிராமத்து வீடுகளில் படல்கள் இருக்கின்றன. பனையோலையிலும் இவற்றைச் செய்து வைப்பார்கள். ஆடு, மாடுகளை மந்தையாக ஓரிடத்தில் இருத்தி வைப்பதற்கும் முள்ளாலாகிய ‘படல்’பயன்படுத்தப்படும். இந்தப் படல் எனும் சொல் ‘படலை’என்னும் சொல்லிலிருந்து வந்துள்ளது.

padalai 600

மனிதச் சமூகம் வேட்டைத் தொழில்செய்து காடுகளில் வாழ்ந்து வந்த காலத்திற்குப் பின்னர், ஓரிடத்தில் நிலையாக நிலைத்திருக்கக் கருதியபோது வெயில், மழை ஆகிய இயற்கைச் சூழலிலிருந்து தற்காத்துக் கொள்ள தங்குவதற்கு ஏற்ற இடத்தை உருவாக்கி இருக்கின்றது. தம் நிலப்பகுதியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தங்கும் இடத்தை ஆதி மனிதர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தங்குவதற்கான இடத்தை ஏற்படுத்திய பின்னர், உள்ளே வந்து செல்லும் வகையில் திறந்து மூடத்தக்க நிலையில் மறைப் பொன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டைத் தமிழர் இவற்றைப் ‘படலை’எனக் குறித்திருக்கின்றனர். இந்தப் படலை நன்கு தழையுள்ள சிறு சிறு கிளைகளைக் கொண்டு பிணைக்கப்பட்டு தட்டையாக அமைக்கப் பட்டிருக்கின்றது. வீடுகளில் அமைக்கப்படும் இன்றைய கதவுகளுக்கு ஆரம்ப வடிவமாக இது இருந்திருக்கின்றது. இன்றைக்குக் கிராமங்களில் பரவலாக வழங்குகின்ற இச்சொல் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களில் பயின்றுவந்துள்ளமை நம் கவனத்தை ஈர்க்கின்றது.

“தினையைக் காய வைத்திருக்கும் சிறிய வீட்டின் முற்றத்தில் ‘படலை’க் கட்டப்பட்டிருந்தது”என்ற குறிப்புப் புறநானூற்றுப் பாடலொன்றில் வருகின்றது.

 ‘படலை முன்றில் சிறுதினை உணங்கல்’ (புறம் 319: 5)

மற்றொரு புறநானூற்றுப் பாடல் ‘உடும்பின் தசையை அறுத்துக் கூறுபோடும் வேட்டுவரின் சிறிய மனை முற்றம், ஒடு மரத்தில் வலிய கழிகளாற் செய்யப்பட்ட படலையால் சாத்தப்பட்டிருந்தது’என்ற குறிப்பைத் தருகின்றது.

.............. .............. ................ ஆடவர்

உடும்புஇழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்

சீறில் முன்றில் கூறுசெய்திடுமார் (புறம் 325: 6-8)

இந்த இரு புறநானூற்றுப் பாடல்களும் வீட்டு வாயிலில் திறந்து மூடத்தக்க அமைப்பிலிருந்த படலையைச் (கதவை) சுட்டுகின்றது.

வினையின் காரணமாகப் பிரிந்து சென்ற ஆடவன், வினை முடிந்து இல்லம் திரும்பும் பொழுது வழியின் இடையில் மனைவியை நினைத்து வருந்தும் தம் நெஞ்சிற்குச் சொல்வதாக அமைந்த அகநானூற்றுப் பாடலொன்றில் ‘படலை’என்னும் சொல் பயின்று வருகின்றது.

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்

கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்

படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை (அகம். 87: 1- 3).

‘படலால் (தழைப் பரப்பால்) ஆகிய பந்தரின் கீழ் உள்ள சிற்றூர் குடில்களின் முற்றத்தில், இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து, கன்று தன் நாவினால் சுவைத்திடும்படி தொங்கிக் கொண்டிருந்தது’என்பது இப்பாடலடியின் பொருளாக அமைகின்றது. படலை என்பது இங்குத் ‘தழைப் பரப்பு’எனும் பொருளில் பயின்றுவந்துள்ளது.

‘நடுகல்லில் நின்ற மறவன் ஒருவனுக்கு, பனை யோலையில் வேங்கைப் பூவையும் தழையையும் விரிவித் தொடுத்து அலங்கரிக்கப்பட்ட படலையைச் சூட்டி கோவலர் வழிபட்டனர்’என்ற குறிப்பு வேறொரு புறநானூற்றுப் பாடலில் வருகின்றது. இப்பாடல், நிரை (பசு) மீட்டல் போரில் உயிர்துறந்து, நடுகல்லெடுக்கப் பட்ட ஒரு வீரனின் புகழை எடுத்துரைக்கின்றது. படலையைச் சுட்டும் பாடலடி,

ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறுவீப்

போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,

பல் ஆன் கோவலர் படலை சூட்ட,

கல் ஆயினையே............... (புறம். 265: 1- 5)

என வருகின்றது.

‘காட்டில் உள்ள கோட்டுப் பூ, கொடிப்பூ முதலிய பலவகைப் பூக்களையும் விரவித் தொடுத்த கலம்பமாகிய படலையை இடையன் அணிந்திருந்தான்’என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் (172 -174) வருகின்றது. இங்குப் படலை என்பது பூக்கள் விரவித் தொடுத்த மாலையைக் குறிக்கின்றது.

‘கார்ப்பருவத்தில் தழைவிரவின படலையில் இடையிடையே முல்லைப் பூவையும் வைத்துத் தொடுத்துக் கோவலர் அணிந்து கொள்வர்’என்ற குறிப்பை ஐங்குறுநூற்றுப் பாடலொன்று (476) தருகின்றது. தலைவன் பரத்தை ஒருத்திக்குத் தன் அன்பின் அடையாளமாகப் பூச்சூட்டினான் என்ற செய்தி குறித்துத் தலைவி ஊடிக் கேட்கின்றபோது, தலைவன் அதனை மறுத்துரைக்கின்றான். பின்னர், தலைவனை நோக்கி தலைவி இப்படிக் கேட்டிருக் கிறாள்.

வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை

இருஞ் சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப

நீ நயந்து உறையப் பட்டோள்

யாவளோ? எம் மறையா தீமே (ஐங். 370)

வளப்பமுடைய கிளைகளைக் கொண்ட மணம் வீசும் கோங்க மலரின் மாலையினை (படலையை)க் கருஞ்சிறகுகளை உடைய வண்டுகள் மொய்க்குமாறு

நீ விருப்பம் கொண்டு அணியப்பட்டவள் யார்? என்னிடம் உண்மையை மறைக்காதே! என்று கேட்கிறாள் தலைவி. ‘கோங்க மலராலான மாலையை (படலையை)ஆடவன் பரத்தைக்குச் சூட்டினான்’என்ற செய்தியை இந்த ஐங்குறுநூற்றுப் பாடல் தருகின்றது.

பெரும்பாணாற்றுப்படையில் (59 - 60) ‘உப்பேற்றின வண்டிகளை ஊர்கள்தோறும் உப்பு விற்பதற்காக ஓட்டிச் செல்லும் உப்பு வணிகர், வேப்பம் பூங்கொத்துக்களோடு வேப்பிலையையும் இடை யிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட படலையை அணிந்திருந்தனர்’என்ற குறிப்பொன்று வருகின்றது. நெடுநல்வாடையில் (31) ‘ஆறு கிடந்தாற் போன்று கிடக்கும் நகரத் தெருக்களில் இறுகின தோளினையும் முறுக்கேறிய உடலினையும் உடைய மிலேச்சர்கள் தழைவிரவித் தொடுத்த படலையைத் தலையில் அணிந்துகொண்டு மாலைப் பொழுதில் திரிந்தனர்’என்றொரு செய்தி வருகின்றது.

மேற்கண்ட சங்க இலக்கியத் தரவுகள் ‘படலை’என்பது வீட்டிற்குப் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் ‘வேலி’, பல வகை மலர்கள், தழைகள் விரவித் தொடுக்கப்பட்ட ‘மாலை’ஆகியனவற்றைச் சுட்டு கின்றது. சிறுசிறு கிளைகளைச் சேர்த்துக் கட்டி வீட்டிற்கு வேலியாக அமைக்கப்படுவதும், பலவகை தழைகள், பூக்களைக் கொண்டு தொடுத்துத் தலையில் சூடிக் கொள்ளப்படுவதும் ‘படலை’என்று சங்க இலக்கியத் தரவுகள் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. பலவகைப் பூக்களையும், தழைகளையும் ஒன்றாக இணைத்து, தொடுத்து செய்யப்படுவது ‘படலை’என்று சுட்டுவது சங்ககால வழக்காக இருந்திருக்கின்றது.

நம் காலத்தில் குடிசை வீடுகளுக்குக் கதவாக மூங்கில், பனையோலையால் பிணைத்து வைக்கப்படு வனற்றைப் ‘படல்’எனும் வழக்கம் மட்டுமிருக்கின்றது. உழவுத்தொழிலில் தழையுள்ள கிளைகளைக் கொண்டு ‘படலடித்தல்’எனும் வழக்கம் அரிதாக வழங்கி வருகின்றது. சங்க காலத்தில் தழை, பூக்களைத் தொடுத்துத் தலையில் சூடிக்கொள்வதைப் ‘படலை’என்று சுட்டும் வழக்கம் இருந்தது; இன்றைக்கு இல்லை. பூச்சூடிக்கொள்ளும் வழக்கம் மட்டும் இருக் கின்றது; அதைச் சுட்டும் சொல்வழக்கு இன்றைக்கு அற்றுப்போய்விட்டது.

துணைநின்ற நூல்கள்

1. பரிமணம், அ. மா. பாலசுப்பிரமணியன், கு.வெ. (ப.ஆ). 2007 (3ஆம் பதிப்பு). அகநானூறு மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்.

2. பரிமணம், அ.மா. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); செயபால் (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும் (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3.      துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

4.      சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Pin It