ஓர் இலக்கியப் பனுவலில் இடம்பெறும் சொல் அல்லது சொற்றொடருக்கு வேறான பாடம் அதே இலக்கியத்தின் வேறொரு பனுவலில் இடம் பெறுவதே பாடவேறுபாடாகும். இதனைப் பாடபேதம், ரூபபேதம், பிரதி பேதம் என்றும் குறிப்பர்.

நம் பழைய இலக்கியங்களும், இலக்கணங்களும் தொடக்கத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது நாம் அறிந்ததே. இவ்வாறு எழுதப் பட்ட ஓலைச்சுவடிகளை மூலச்சுவடி, வழிச்சுவடி என இரண்டாகப் பகுப்பர். ஒரு குறிப்பிட்ட நூலாசிரியர் தம் கையால் எழுதிய சுவடியும் அவர் கூறக் கூறக் கேட்டெழுதிய சுவடியும் மூலச்சுடி எனப்படும். ஒரு மூலச்சுவடியை அடிப்படையாகக் கொண்டு படியெடுக்கப்படும் சுவடி வழிச்சுவடி எனப் படும். காலப்போக்கில் வழிச்சுவடிகளே ஏனைய வழிச்சுவடிகளுக்கு மூலச்சுவடியாகிவிடும். வழிச்சுவடிகளில் பாட வேறுபாடுகளும் பிழை களும் ஏற்பட்டு படிப்போரை மயங்கச் செய்கின்றன. இவை உருவாவதற் கான காரணத்தை "ஏடு எழுதியவர்களில் சிலர் போதிய அளவு கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்; சிறிதளவே கற்றுக் கூலிக்கு எழுதியவர்கள். அதனால் ஏடுகளில் பிழைகள் ஏற்பட்டன. கற்றறிந்தவர்களும் விரைவு, கவனக்குறைவு, உடற்சோர்வு, மறதி ஆகியவை காரணமாகப் பிழை செய்திருத்தலுங் கூடும். ஒருவர் மூல ஏட்டைப் படிக்க மற்றொருவர் கேட்டு எழுதியதும் உண்டு. படிப்பவர் தவறாக படித்தாலும் அதைக் கேட்டு எழுதுபவர் அப்படியே எழுதிவிடுவார்"  என்று  மு.வை.அரவிந்தன் (1986 ) குறிப்பிடுவார்.

பாடவேறுபாடு :

அரவிந்தனின் இப்போதுமான கூற்றை விரிவுபடுத்தி, பாடவேறுபாடு என்பது குறித்தும் அவற்றின் வகை குறித்தும் பூ.சுப்பிரமணியம் (2004;44-45) பின்வருமாறு விளக்கம் தருகிறார். "பாடம் வேறு படுவது பாடவேறுபாடு எனப் பெறுகிறது. பாடம் என்பது மூலப் பாடம். நூலாசிரியர் உரையாசிரியர் ஆகியோர் நிறுவிய உண்மைத் தொடரே மூலப்பாடம் எனப்பெறுகிறது. அந்த உண்மைத்தொடர் சொல்வோரா லும் படிப்போராலும் எழுதுவோராலும் வேறுபட்டு வழங்கப் பெறுமே யானால் அது பாடவேறுபாடு என்னும் பெயரைப் பெறுகிறது"

"இந்த வேறுபாடுகள் நூலின் தலைப்பு உட்தலைப்பு போன்ற இடத்தால் வேறுபடுவதும், மூலபாடத்தின் கருத்திலேயே வேறுபடும் பொருளால் வேறுபடுவதும், சுவடிகள் படியெடுக்கப் பெற்ற அடிப்படையில் காலத்தால் வேறுபடுவதும், சொற்களில் அமையும் எழுத்துகளால் வேறுபடுவதாகிய வடிவத்தால் வேறுபடுவதும், தோன்றலும் திரிதலும் வேறுபடுதலுமாகிய தன்மையால் வேறுபடுவதும், பாடல் எண், இயல் எண் போன்றவை வேறுபட்டு நிற்பனவாகிய எண்ணால் வேறுபடுவதும் ஆகிய பலவகையில் வேறுபட்டுள்ளன"

மற்றொரு பக்கம் தம் உலகக் கண்ணோட்டம் அல்லது சார்பு நிலைக்கு ஏற்ப வேண்டுமென்றே பாடவேறுபாடுகளை உருவாக்குவதும் உண்டு. சார்புநிலையென்பது முன்னர் சமயச் சார்பாகவேயிருந்தது. இலக்கியங்களைப் படியெடுப்போரும் உரை எழுதுவோரும் தம்தம் சமய நோக்கில் பாடவேறுபாடுகளை உருவாக்கியுள்ளனர். சான்றாக சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது உ.வே.சா.வுக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பிடலாம். சிந்தாமணியின் உரையடங்கிய சுவடியொன்றைப் படித்து வரும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங் களை அவர் எழுதியுள்ளார். அதில் ஓர் அனுபவம் வருமாறு : "ஓரிடத்திலே, திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்ரமாகிய மந்திரத்தைக் கொடுத்த படியும் என்று இருந்தது. இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்து கொண்டது? என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில் ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும் என்று இருக்கிறது. அமிர்து என்பதற்கு பஞ்சாட்சரமாகிய மந்திரம் என்பது உரையாக இருந்தது. மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்; யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதிவிட்டார் என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து வருகையில் ஐம்பத வமிர்த முண்டால் (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமகார மந்திரமென்பது தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித் தேன். அவர்கள் மிகவும் எளிதில், அருகர், ஸித்தர், ஆசாரியார், உபாத்தி யார், ஸாதுக்களென்னும் பஞ்சபரமேஷ்டிகளை வணங்குவதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமகாரமென்று சொல்வது ஸம்பிரதாயம் என்று தெளிவுறுத்தினார்கள்." சங்க நூல்களில் பாடவேறுபாடுகள்
இப்போக்குகளுக்குச் சங்க இலக்கியங்கள் விதிவிலக்காக அமைய வில்லை. மேலும் நமக்குக் கிட்டிய சங்க இலக்கியச் சுவடிகள் மூலச் சுவடிகளல்ல. படியெடுக்கப்பட்ட சுவடிகளே இதனால் சங்க இலக்கியச் சுவடிகளிலும் அறிந்தும் அறியாமலும் உருவாக்கிய பாட வேறுபாடு கள் இடம்பெற்றுள்ளன.

சங்க இலக்கியப் பனுவல்கள் சுவடிகளில் எழுதப்பட்டு பயின்று வரப்பட்ட தும், சுவடிகளில் இருந்தே அவை ஒன்றொன்றிற்கும் இடையே ஆங்காங்கே பாடவேறுபாடுகள் காணப்பட்டன. சங்க நுல்களைப் பதிப்பித்த உ.வே.சா., தாமோதரம் பிள்ளை, பின்னத்தூர் நாராயண சாமி அய்யர் போன்றோர் தம் பதிப்புகளில் ஆங்காங்கே பாடவேறு பாடுகளையும் குறிப்பிட்டுள்ளனர். குறுந்தொகையை முதன்முதலாக 1915 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்ட திருக்கண்ணபுரம் திரு மாளிகை சௌரிப் பெருமாளரங்கனார் இடக்கரடக்கல் என்று தாம் கருதிய சொற்களை திருத்தி வெளியிட்டுள்ளார்.

மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிடாது ஏட்டுச்சுவடிகளில் எழுதும் வழக்கம் இருந்தமையால் மெய்யெழுத்தை உயிர்மெய் எழுத்தாகவும் கொள்வதால் ஏற்படும் பாடவேறுபாடும் உண்டு. சங்க செய்யுள்களின் பதிப்பாசிரியர்கள், உரையாசிரியர்கள் ஏற்றுக் கொண்ட பாடத்தையும், ஏற்றுக்கொள்ளாத பாடவேறுபாட்டையும் ஒப்பிட்டு ஆராய்வது அவசிய மான ஒன்று. ஏனெனில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பாடங்களில் சில பொருத்தமற்றதாகவும் ஏற்றுக் கொள்ளாத பாடம் பொருத்தமுடையதாக வும் காண முடிகிறது.

குரவரும் பார்ப்பாரும் :

புறநானூற்றில் 34வது செய்யுள் ஆலத்தூர் கிழார் என்ற கவிஞரால் பாடப்பட்டது. பாடாண்தினையில் அமைந்த இச்செய்யுளில் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற சோழ மன்னனை வாழ்த்திப் பாடியுள்ளார். இச்செய்யுளில், ஒருவன் செய்த நன்றியை மறப் போருக்குக் கழுவாயில்லை என்பதைக் கூற வரும்போது, வேறு சில அறமற்ற செயல்களைச் செய்தோருக்காவது கழுவாயுண்டு என்கி றார். அப்பகுதி வருமாறு : ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருசிதைத் தோர்க்கும் பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென்  (1-4)

இவ்வரிகள் உ.வே.சா. வின் பதிப்பில் இடம் பெற்றவை. ஔவை துரை சாமி பிள்ளையின் உரையுடன் வெளியான சை.சி.நூ.ப கழக பதிப்பில் இப்பாடலின் மூன்றாவது அடியில் இடம்பெறும் "பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்'  என்ற அடி "குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்' என்று இடம் பெற்றுள்ளது.

உ.வே.சா பதிப்பில் இடம்பெறும் பார்ப்பார் என்ற சொல்லிற்கு மாறாக குரவர் என்ற சொல் கழகப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது. இங்கு பார்ப்பார், குரவர் என்ற இருபாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் பாடவேறுபாடு ஒன்று உருவாகியுள்ளது. பார்ப்பார், குரவர் என்ற இரு சொற்களில் எது பொருத்தமான பாடம் என்பதை இனிக் காண்போம்.

இச்செய்யுள் வலியுறுத்த வரும் கருத்திற்கு இணையான கருத்து இதற்குப் பிந்திய காலத்தான திருக்குறளில் (110) எந்நன்றி கொன்றார்க் கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்நன்றி கொன்ற மகற்கு என்ற குறளில் வெளிப்படுகிறது. உ.வே.சா மேற்கூறிய புறநானூற்று அடி களுக்கு எழுதிய குறிப்புரையில் இக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய பின் வரும்  உரைப்பகுதியைக் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு: "பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை யறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத்தலும் பார்ப்பார்த் தப்புதலும் முதலிய பாதகங்களைச் செய்தல்'. ஆலத்தூர் கிழாரின் பாடல் அடிகளின் பொழிப்புரையாக பரிமேலழ கரின் உரைப்பகுதி அமைந்துள்ளது. குரவர் என்பதற்கு மாற்றாக பார்ப்பார் என்ற பாடத்தையே பரிமேலழகர் இங்கு பயன்படுத்தியுள்ளார். கழகப்பதிப்பிற்கு உரை எழுதிய ஔவை துரைசாமிபிள்ளை, விளக்கம் என்ற தலைப்பில் "குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கின்றது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தையே செய்யப்பட்டுள்ளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.' என்று எழுதியுள்ளார். இது உ.வே.சா மேற்கோளாகக் காட்டும் பரிமேலழகர் உரைப்பகுதி சரியானதுதான் என்பதை உறுதி செய்கிறது.

அதேநேரத்தில் சை.சி.நூ.ப கழகமும் திருப்பனந்தாள் மடமும் வெளி யிட்டுள்ள திருக்குறள் பதிப்பில் பார்ப்பார் தப்புதலும் என்பதற்கு மாற் றாக குரவர்த் தப்புதலும் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. உ.வே.சா.குறிப்புரையில் இடம்பெறும் பரிமேலழகரின் உரையி லேயே பாடவேறுபாடு காணப்படுகிறது. எனவே முதலில் இச்சிக் கலைத் தீர்க்க வேண்டியுள்ளது. இதன் முதற்படியாக பரிமேலழகரின் உலகநோக்கை காண வேண்டும். இது கட்டுரையின் எல்லையை விரிவுபடுத்திவிடும் என்ற அச்சத்தால் அவரது உரைப்பாயிரம் பகுதியில் இடம்பெறும் பின்வரும் பகுதிகளை மட்டும் காண்போம்.

"அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக் கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசாரியம் முதலிய நிலைகளினின்று, அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்."

மேலும் அறம் என்பதை விளக்கும் போது "நால்வகை நிலைத்தான் வருணந்தோறும் வேறுபாடு உடைமையின்' என்று கூறிச் செல்கிறார். மனுதர்ம சாஸ்திரத்துடன் பரிமேலழகருக்கு இருக்கும் நெருக்கமான உறவைக் காட்ட இப்பகுதிகளே போதும். தனிச் சிறப்புரிமை பெற்ற பிரிவாக மனுதர்மம் பிராமணரைச் சுட்டுவது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் அடிப்படையில் நோக்கும்போது பார்ப்பார்த் தப்பிய என்பதே பரிமேலழகர் ஏற்றுக்கொண்ட பாடம் என்பது தெளிவு. அவருடைய மநுதர்ம ஆதரவு நோக்கில் குரவர்த் தப்பிய என்ற சொல்லைவிட பார்ப்பார்த் தப்பிய என்ற பாடமே பொருத்தமானதாகப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இனி ஆலத்தூர் கிழாரின் செய்யுளுக்கு வருவோம். பெற்றோர் என்ற பொருளைத் தரும் குரவர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதை ஆராயத் தொடங்கும் போது பின்வரும் சங்க இலக்கியச் சொற்களஞ்சியங்களில் இச்சொல் இடம் பெறவில்லை என்பது தெரிய வருகிறது.

1. பழந்தமிழ் நூற் சொல்லடைவு  (பிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், புதுச்சேரி)  2.கி ஷ்ஷீக்ஷீபீ மிஸீபீமீஜ் திஷீக்ஷீ சிணீஸீளீணீனீ லிவீமீக்ஷீணீக்ஷீமீ (மிஸீவீமீ ஷீயீ கிவீணீஸீ ஷிபீவீமீ, சிலீமீஸீஸீணீவீ) 3. சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் (தமிழ்ப்பல்கலைக்கழகம்)
ந.சுப்பிரமணியத்தின் றிக்ஷீமீ-றிணீறீறீணீஸ்ணீஸீ ஜிணீனீவீறீ மிஸீபீமீஜ் என்ற அகராதி பெற்றோர் என்ற பொருளில் இரட்டைக் காப்பியங்களில் குரவர் என்ற சொல் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகிறது. பிரெஞ்சு இந்தியக் கழ கத்தின் அகராதி இத்துடன் பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களில் இச்சொல்லாட்சி இடம்பெறுவதைக் குறிப்பிடுகிறது. மொத்தத்தில் இச்சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை என்பதை மேற்கூறிய அகராதிகள் வாயிலாக அறிய முடிகிறது. அதே நேரத்தில் பார்ப்பார் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பார்ப்பார் தப்பிய என்ற பாடமே சரியானது என்ற முடிவுக்கு வருவதற்கு இடமுள்ளது.

நன்னடையும் தண்ணடையும் :

ஈன்றுபுறந் தருத வென்றலைக் கடனே/ சான்றோ னாக்குத றன்தைக்குக் கடனே/ வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே/ நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே/ ஒளிறுவா ளருஞ்சம முருக்கிக்/  களிறெ றிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - என்று புறநானூற்றுப் பாடல் (312) பரவலாக அறிமுகமான ஒன்று. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் எவை என்பதை இச்செய்யுள் விவரிக்கிறது. உ.வே.சா பதிப்பில் சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே என்ற இரண்டாவது அடிக்கு "தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு அதற்குரிய  செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகச் செய்தல் தகப்பனுக்குக் கடமையாம்" என்று உரை எழுதப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை, "அவனை நற்பண்பு களால் நிறைந்தவனாக்குவது தந்தைபால் உள்ள கடமையாகும்" என்று இவ்வடிக்கு உரை எழுதியுள்ளார்.

இவ்வுரை வேறுபாட்டில் எது பொருத்தமானது என்பதை உறுதி செய்ய இச்செய்யுளின் நான்காவது அடியில் இடம் பெறும், தண்ணடை என்ற பாட வேறுபாடு  துணை நிற்கிறது உ.வே.சா.வின் பதிப்பில் நன்னடை என்ற பாடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தண்ணடை என்ற பாட வேறுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணடை என்ற சொல் மருதநில ஊர்களைக் குறிக்கும். இனி தண்ணடை என்ற பாடம் இப்பாடலில் இடம்பெறும் பொருத்தத்தைக் காண்போம். இரவலர்களுக்கும் போரில் வீரம் காட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கும் மருத நில ஊர்களைக் கொடையாக வழங்குவதைப் பின்வரும் புறநானூற்று அடிகள் வாயிலாக அறிய முடிகிறது. (அரவிந்தன் 1968 :614).

அலமரும் கழனித் தண்ணடை ஒழிய (285:15) (கதிர்கள் அசையும் நெல்வயல் கொண்ட மருத நிலத்து ஊர்களை இரவலர்க்குக் கொடுத்த மையால்) நெல்லுடை நெடுநகர்க் கூட்டு முதல் புரளும் தண்ணடை பெறுதல் (287:9-10) (நெல் நிரம்பிய நெற்கதிர்களைக் கொண்ட மனைகளை யுடைய மருதநிலத்தூர்களைக் கொடையாகப் பெறுதல்)

தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி / நெடுவேல் பாய்ந்த மார்பின்/ மடல்லன் போந்தையி னிற்கு மோர்க்கே (297:8-10) (நெடியவேல் தைத்து நிற்கும் மார்புடனே, வலிய பனைமரம் போல் நிற்கும் போர்வீரர்க்கு  மருத நிலத்து ஊர்களைக் கொடையாகப் பெறுவது உரியது).

இச்செய்யுள்கள் மட்டுமின்றி "புண்ணோடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்  தண்ணடை நல்கல் தரும் " என்ற புறப்பொருள் வெண்பாமலைச் (3:12) செய்யுளும் வீரர்களுக்குத் தண்ணடை நல்கல் மரபை எடுத்துரைக்கிறது. நன்னடை என்ற பாடத்தைவிட தண்ணடை என்ற பாடமே இச்செய்யுளில் பொருத்தி வருவதை பாடல் உருவான வீரயுகத் தமிழ்ச் சமூகமும், பாடலின் செய்தியும் உணர்த்துகின்றன.

வீரனைப் பெறுதல், வீரனாகப் பயிற்சி கொடுத்தல், வேல் வடித்துக் கொடுத்தல், போர்க்களத்தில் யானையைக் கொல்லுதல் என்ற செய்தி களோடு இயல்புடையதாக தண்ணடை என்ற பாடமே பொருந்தி நிற்கி றது. நன்னடை என்ற பாடம் பொருந்துவதாக இல்லை. தண்ணடை என்ற பாடத்தை ஏற்கும் போது சான்றோன் என்ற சொல்லிற்கு வீரன் என்ற பொருளே பொருந்தி வருகிறது. நற்பண்புடையோன் என்ற பொருள் பொருந்துவதாய் இல்லை. நன்னடை தண்ணடை என்ற பாட வேறுபாடு குறித்த இச்செய்திகள் நா.மு.வேங்கடசாமி நாட்டார் வாய்மொழியாகத் தந்த விளக்கமாகும். இதை மு.வ.அரவிந்தன் (1968:612-615) எழுத்து வடிவில் பதிவு செய்து அனைவரது பார்வைக்கும் கிட்டும்படிச் செய்துள்ளமை பாராட்டுக்குரியது. கள்வனும் களவனும் தலைவன் ஒருவன் வரைவு நீட்டித்து வந்தபோது தலைமகள் தோழிக்குக் கூறும் கூற்றாக அமையும் "யாரும் இல்லைத் தானே கள்வன் / தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ / தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால / ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் / குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே" - என்ற செய்யுளொன்று குறுந்தொகையில் (25) உள்ளது. இச்செய்யுளின் முதலடியில் ஈற்றில் இடம்பெறும் தானே கள்வன் என்பதற்கு தலைவனாகிய கள்வன் ஒருவன் தான் இருந்தனன் என்று உ.வே.சா 1937இல் வெளியிட்ட தமது பதிப்பில் பதவுரை எழுதியுள்ளார்.

தலைவனைக் கள்வனென்று சுட்டும் மரபுக்குச் சான்றாக குறுந்தொகை 318ஆம் செய்யுளில் இடம் பெறும். பிழையா வஞ்சினர் செய்த கள்வனுங் கடவனுங் புணைவனுந் தானே (315:7-8) என்ற அடியை ஒப்புமைப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். கள்வன் என்ற சொல்லுக்குப் பாடவேறுபாடு எதையும் அவர் குறிப் பிடவில்லை தமது விருத்தியுரையில், "என் நலத்தைப் பிறரறியாதவாறு கவர்ந்த கள்வன் தன் வாய்மொழியின்படி செய்திலன்; நீ இங்ஙனம் கூறினையன்றே; அதனை நிறைவேற்றாதது ஏன்? என்று தொடுத்து வினாவுதற்கு ஏற்ற சான்றும் இல்லை; அங்கே இருந்தது கரிபோதற்குத் தகாத நாரையொன்றே; அஃதும் ஆரன்மீனை நோக்கிய கருத்தின தாலின் அவன் சூளுரையைக் கேட்டிராது. இதற்கு என் செய்வோ னென்பது தலைவியின் கருத்தாகக் கொள்க" என்று எழுதியுள்ளார்.

1946இல் தமது குறுந்தொகை விளக்கம் என்ற நூலில் இச்செய்யுளில் இடம்பெறும் கள்வன் என்ற சொல்லின் உண்மை வடிவம் களவன் என்பதாக ரா.இராகவையங்கார் கொள்கிறார். மெய்யெழுத்தும் உயிர்மெய் எழுத்தும் வேறுபாடின்றி ஏடுகளில் எழுதும் வழக்கத்தின் அடிப்படையில் களவன் என்ற சொல்லை கள்வன் என்று கருதியிருக் கலாம் என்பது அவர் கருத்தாகும். இதன் அடிப்படை யில் அவர் களவன் என்று பாடங்கொள்கிறார். களவன் என்ற சொல் நடுச்சொல்வோன் என்று பொருள்தரும் என்று கருதயிடமுள்ளது. கள்வன் என்ற சொல்லைவிட, களவன் என்று பாடம்கொள்வது பொருத்தமானது என்பதை "கள்வன் பொய்ப்பின் யானெவன் செய்கோ / என்பது இயைபு டைத்தன்று. கள்வன் பொய்த்தல் / இயல் பாதலால் பல்லோர்க்கு நடுச்சொல்லும் / களவனான தலைவன் என்பாற் பொய்ப்பின் /  யானெவன் செய்கோ என்பது இயல்புடை / யதாதல் நன்கு நோக்கிக் கொள்க. - என்று அவர் விளக்கியுள்ளார். கள்வன் என்ற சொல்லின் உண்மை வடிவம் களவன் என்ற இவரது கருத்து செய்யுளின் பொருளுடன் பொருந்தி வருகிறது. மேலும் களன் என்ற சொல் அறம் ஆராயும் அவைக்களன் என்ற பொருளில் குறுந் தொகை 36ஆவது செய்யுளில் நெஞ்சு களனாக (வரி 3) என்று இடம் பெறுவதையும் சான்றாக காட்டுகிறார்.

முட்டுவேன் - மூட்டுவேன்

தன்னைப் பிரிந்து சென்ற தலைவன் விரைந்து வராத நிலையில் தோழியிடம் தலைவி கூற்றாக அமைந்த அவ்வையாரின் குறுந் தொகைச் செய்யுளொன்று (28) உண்டு. இச்செய்யுளில் தலைவி தன் பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் பாங்கு உணர்ச்சிப்பூர்வமானது. என்ன செய்வதென்றறியாது அல்லல்படும் தலைவியின் கூற்றாக அமைந்த இப்பாடலில் தன் நிலையை "மூட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்/ ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட் /  டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்/ அலமர லசைவளி யலைப்பவென்/  உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே"  என்று தலைவி வெளிப்படுத்துகிறாள். இப்பாடலில் முதற்சீரில் இடம்பெறும் மூட்டுவேன் என்ற பாடம் உ.வே.சா பதிப்பிலும், சமாஜப் பதிப்பிலும் முட்டுவேன் என்று இடம் பெற்றுள்ளது. ரா.இராகவையங்கார் முட்டுவேன் என்ற பாடத்திற்கு மாற்றாக மூட்டுவேன் என்ற பாடத்தைக் கொண்டுள்ளார். மூட்டுவேன் என்ற பாடத்தை தாம் கொண்டமைக்கு அவர் தரும் விளக்கம் வருமாறு ; மூட்டுதல் - நினைவு மூளச் செய்தல். தாக்குதல் - பாய்தல். உடம்பால் விரையத் தீண்டுதல். கூவல் - வாயாலரற்றல். இவற்றால் மனம் மெய் வாக்கு மூன்றாலும் முயலத் தொடங்கியவாறு கூறினாள். முட்டுதலும் தாக்குதலும் ஒன்றாய் உடம்பின் வினையேயாதலின் முட்டுவேன் என்பது பாடமின்மையறிக. பாடலில் இடம்பெறும் சூழலும், பாடல் வெளிப்படுத்தும் உணர்ச்சியும் மூட்டுவேன் என்று பொருத்தமானதே என்பதை உணர்த்தி நிற்கின்றன.

கொலிஇ - கொரீஇ

முல்லைத் திணையில் அமைந்த கபிலரது பாடலொன்று நற்றிணை யில் (54) இடம் பெற்றுள்ளது. தலைவி வாழும் காட்டகத்து மூதூர் குறித்து, தேர்ப்பாகனிடம் தலைவன் கூறும் செய்திகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. தலைவியின் மூதூரில் உடும்பு என்ற விலங்கைக் கொல்வதும், ஈசல் சேகரிப்பதும் முயல் வேட்டையாடுதலும் நிகழ் வதைத் தலைவன் குறிப்பிடுகிறான். உடும்பு கொல்வது "உடம்பு கொலீஇ'  என்று சமாஜப் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. நற்றிணைக்கு உரை எழுதிப் பதிப்பித்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் கொலிஇ என்ற பாடத்திற்கு மாற்றாகக் குற்றுதல் என்ற பொருளில் கொரீஇ என்ற பாடத்தைக் கொண்டுள்ளார். கொரீஇ என்ற பாடத்தை தாம் பயன் படுத்தியமை குறித்து தம் உரையில் "கொரீஇ என்பது இக்காலத்து அருகிய சொல்; பொருள் விளங்கவில்லை. கன்றுகளுக்குப் போடும் இருப்புமுள்ளாலாகிய வாய்க்கூட்டுக்குக் கொரி என்று திருநெல் வேலியை அடுத்த ஊர்களில் வழங்கப்படுகிறது; மாட்டுத்தட்டியில் ஊட்டச்சென்றால் அம்முள் மடியில் குத்துந் தன்மையாயிருத்தலால் அந்தப் பொருளைக் கொண்டு குத்திப் பிடிப்பதாக உரையெழுதினேன் " என்று விளக்கமளித்துள்ளார். இன்றும்கூட உடும்பு குத்துதல் என்ற சொல்லாட்சியுண்டு. உடும்பு கொல்லுதல் என்பதைவிட உடும்பு குத்துதல் என்பதே பொருத்தமானது என்ற நிலையில் கொரீஇ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளது பொருத்தமாகவேயுள்ளது.

பாடவேறுபாடு குறித்த ஆய்வின் தேவை

தமிழ் இலக்கியம் கற்பித்தலில் பாடவேறுபாடு இடம்பெறவில்லை. ஏதேனும் ஒரு பாடத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் போக்கே உள்ளது. பல்வேறு பாடவேறுபாடுகளை ஆய்வு செய்து சரியான பாடத்தை ஏற்றுக் கொண்ட செம்பதிப்புகள் சங்க இலக்கியத்திற்கு இன்னும் வெளிவரவில்லை. சங்ககாலக் கவிஞனின் பாடவேறுபாடு குறித்த ஆய்வின் வாயிலாகவே சங்ககாலக் கவிஞனின் உண்மைத் தன்மையை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். தம் பண்டைய இலக்கிய உரைகள் திறனாய்வுக் கலையின் முன்னோடி என்று கூறுவதுண்டு. மூலபாடத்தை நிலைநிறுத்தும் தன்மை வாய்ந்த பாடவேறுபாடு குறித்த ஆய்வு பண்டைய இலக்கியத் திறனாய்வுக்கு துணை ஏற்கும் தன்மையது.

துணை நூற்பட்டியல் :

அரவிந்தன்.மு.வை. (1968) உரையாசிரியர்கள்
சாமிநாதையர்.உ.வே (1962) பதிப்பாசிரியர் , குறுந்தொகை

துரைசாமிப்பிள்ளை ஔவை, உரையாசிரியர்
புறநானூறு முதல்தொகுதி (1964) , இரண்டாம் தொகுதி (1962)

சாமிநாதயைர்.உ.வே (1971) பதிப்பாசிரியர்
புறநானூறு மூலமும் பழைய உரையும்    சென்னை.
சாமிநாதையர். உ.வே., என் சரித்திரம்

சுப்பிரமணியம்.பூ, உரையாசிரியர்
சுவடிப் பதிப்புக்கலை வழிகாட்டி டாக்டர் உ.வே.சா,
முதற்பதிப்பு (2004), சென்னை.

சோமசுந்தனார்.பொ.வே (1965), குறுந்தொகை

திருக்குறள் மூலமூம், பரிமேலழகர் உரையும் (1953)
நாராயணசாமி அய்யர் பின்னத்தூர் (1967) உரையாசிரியர்
நற்றிணை நானூறு

ராகவையங்கார்.ரா (1958), குறுந்தொகை விளக்கம்

வையாபுரிப்பிள்ளை.எ(1967),
சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், இரு தொகுதிகள்

Pin It