மேட்டூர் அணை கட்டுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர். திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக (அமைச்சராக) இருந்த, சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்களேயாவர்.

கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் (தென்மேற்குப் பருவமழை) ஆகிய மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் (அப்போதைய மைசூர் மாநிலத்தில்) பெய்த வெள்ளநீரைத் தேக்கி வைப்பதற்கு, அணை இல்லாததால், காவிரியின் வெள்ளப் பெருக்குக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதனால், பல வயல்கள் மணல் மேடிட்டு, விவசாயத்துக்குப் பயனின்றிப் போனது. மேலும் வெள்ளத்தினால் மனிதர்கள், கால் நடைகள் பலியாவதும் தொடர்கதையாக இருந்தது.

அப்போது காவிரியின் குறுக்கே கர்நாடகா (மைசூர்) மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைமட்டுமே கட்டப்பட்டிருந்தது. கர்நாடகத்தில் காவிரியின் உபநதி களாகிய சோழங்கி, ஹேமாவதி, சொர்ணாவதி, கபினி ஆகிய நதிகளில் அணைகள் கிடையாது.

இதனால், கர்நாடக மாநிலத்தில் (மைசூர் மாநிலத்தில்) தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்தக் காலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடும். இந்த வெள்ள நீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன.

வெள்ளப் பாதிப்பு மற்றும் தண்ணீர் வீணாவதை ஆராய, அப்போதைய பிரிட்டிஷ் திட்டக்குழு ஒன்றை அமைத்தது. அதில், சர்.சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் உறுப்பினராக இருந்தார். இக்குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தது. சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்களைச் சந்தித்த பெரும்பாலான விவசாயிகள், வெள்ளத்தால் ஆண்டுதோறும் ஏற்படும் சேதம் பற்றி மனு கொடுத்தார்கள்.

இது பற்றி, சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள் அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டார். 1923-ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 30ரூபாய் விற்ற அக்காலத்தில் காவிரியின் வெள்ளப் பெருக்கால் ரூ30இலட்சம் சேதம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

காவிரிநதியில் வரும் வெள்ளத்தைத் தடுப்பதற்கு சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்கள் அப்போது தீவிர ஆலோசனை செய்தார். காவிரிநதி பாயும் பகுதிகளில் எந்த இடத்தில் அணை கட்டலாம் என ஆராய்ந்தார். இதை யடுத்து மேட்டூரில் அணை கட்டலாம் என முடிவு செய்தார். உடனே அப்போதைய மைசூர் சமஸ்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது மைசூர் சமஸ்தானத்தின் திவானாக (அமைச்சராக) இருந்தவர் விஸ்வேஸ்வரய்யா அவர்கள் ஆவார்.

கிருஷ்ணராஜசாகரில் இருந்து தண்ணீர் விடுவதால் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ30 இலட்சம் இழப்பு (அப்போதைய மதிப்புப்படி) ஏற்படுகிறது. எனவே இதை நட்ட ஈடாக ஆண்டுதோறும் மைசூர் சமஸ்தானம் வழங்கவேண்டும். இல்லையெனில் மேட்டூரில் அணையைக் கட்ட அனுமதி வழங்கவேண்டுமென்று அந்த வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

மேட்டூரில் அணைகட்ட அனுமதி

அதனால், தமிழகத்திற்கு நட்ட ஈடு கொடுப்பதைவிட, மேட்டூரில் அணைகட்ட அனுமதிப்பதே சிறந்தது என்று கருதிய மைசூர் சமஸ்தானம் (இன்றைய கர்நாடக மாநிலம்) மேட்டூரில் அணை கட்ட அனுமதி வழங்கியது.

மேட்டூர் அணைகள் நீர்த்தேக்கத்தினுள் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்

மேட்டூர் அணையில் நீர்இல்லாத காலங்களி லெல்லாம், கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராட்டிர கூட மன்னன், கன்னிதேவன் முதலாம் கிருஷ்ணன் காலத்தில் ஜலகண்டேஸ்வரர் கோயில் காணப்படுகிறது.

இராட்டிடகூட மன்னன், கன்னிதேவன் முதலாம் கிருஷ்ணன். பராந்தக சோழனின் சமகாலத்தவனாவான். இந்தக் கோயில் அந்தக் காலத்தில் நட்டிஸ்வரர்கோயில் என்றழைக்கப்பட்டது.

இந்தக் கோயிலின் கோபுரத்தின் உச்சியில் பெரிய நந்தியைக்கொண்ட மண்டபம் ஒன்றுஉள்ளது. அதனை அடுத்து, கருடகம்பம், கொடிமரம், கல்லால் செதுக்கப் பட்ட நந்தி, பலிபீடம் போன்றவை உள்ளன.

அதனை அடுத்து 20 தூண்களைக் கொண்ட ஒரு மகாமண்டபம் உள்ளது.

இந்தக் கோயில் மேட்டூர் அணையின் சேற்றிலும் தண்ணீரிலும் 85 ஆண்டுகளாக மூழ்கியிருந்தாலும் கோயில் இன்னும் அப்படியே அழகாக இருக்கிறது.

மேட்டூர் அணையில் தண்ணீர் மேலும் குறைந்தால், ஜலகண்டேஸ்வரர் கோயில் நுழைவுவாயிலின் இருபுறமும் துவாரபாலகரின் கல்லால் ஆன அழகிய பெரிய சிலைகள் காணப்படும்.

கோயிலைச் சுற்றிச் சிலைகள்

மேலே குறிக்கப்பட்ட சிலைகளைத் தவிர,

ஜலகண்டேஸ்வரர் கோயிலைச் சுற்றி, நாகக்கன்னி, தட்சிணா மூர்த்தி, மூலவிநாயகர், சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் காட்சி, திருமால், பயிரவர் போன்றவர்களின் கோயிலும் தெரியும். அதில் திருமாலும் பயிரவரும் படுத்த நிலையில் இருக்கிறார்கள்.

படித்துறை

இந்தக் கோயிலின் வெளிச்சுற்று மதில் உயர்ந்த மதிலாகும். இந்தக் கோயிலின் சேவைக்கு காவிரியிலிருந்து நீர் எடுப்பதற்கு, இந்தக் கோயிலில் படித்துறை இருந் திருக்கிறது.

காவிரிப்பட்டணம்

இந்தக் கோயிலின் தென்மேற்குப் பகுதி அக்காலத்து, கோவை மாவட்டம், பவானி தாலுக்காவைச் சேர்ந்ததாகும். இந்த நகரத்திற்கும் இதன் உள்ளே மூழ்கிய சாம்பள்ளிக்கும் முக்கிய சாலை வசதியிருந்தது.

இக்கோவில்களில் இருந்த மூலபஞ்சலோக விக்ரகங்கள் அனைத்தும் இப்போது இருக்கும் காவிரிப் புரத்தின் அருகில் உள்ள பாலவாடி சிவன் கோயிலில் காணப்படுகிறது.

சிவன்ராத்திரி விழா

எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த ஜலகண்டேஸ்வரர்கோயிலில் சிவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கொளத்தூரில் இருந்து நேர் வடக்காக, 2 கி.மீ. சென்றால் அங்குப் பண்ணவாடி கிராமம் உள்ளது. அதற்கு வடப்புறமாக காவிரி நதிக்கரையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால், மேட்டூர் அணையில் முழுமையாக நீர் இல்லாதபோது, மாதேஸ்வரன்

மலைக்குச் செல்வதும் பக்தர்கள், சிரமமின்றி, இந்த ஜலகண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம்.

கல்வெட்டுகள்

ஜலகண்டேஸ்வரரின் கோயிலில் சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டில் இக் கோயிலின் சொத்தை சிதைத்தாலோ, அல்லது திருடினாலோ, ஏழு ஏழு ஜென்மத்திற்குச் சந்ததிகளற்றுப் போவார்கள் என்று குறிப்பிடுகிறது.

அதன்படி இக் கோயிலின் கற்களை எடுத்துத் தனது சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திய குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன.

மேட்டூரிலிருந்து அரசு நகரப் பேருந்து மூலம் பண்ண வாடிக்கோ அல்லது பக்கத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்து பரிசல் மூலம் தண்ணீரில் சுமார் 3 கி.மீ. சென்றால்தான் இந்தக் கோயிலைக் காணமுடியும்.

மேலணை

இந்த அணை திருச்சி மாவட்டத்தில் கொம்பு என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

இது, 48தூண்களையும் சுட்ரஜ்களையும் கொண்ட அணையாகும்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரில், இந்த அணையில் 1 கோடி கன அடி வரையில் நீரைத் தேக்கலாம்.

கொள்ளிடம் (வட காவிரி)

மேலணையிலிருந்து வடக்கில் பிரியும் ஆறுதான் கொள்ளிடமாகும். அது வட காவிரியாகும்.

கல்லணை வரலாறு

கல்லணை கரிகால் சோழனால் கட்டப்பட்டது. முதன்முதலில் கொள்ளிடத்தை ஒட்டியுள்ள பகுதியைத் தான் கரிகாலன் கட்டினான் என்பார் ஒருசாரார். சிலர், வெண்ணிப்பறந்தலையில் கரிகால் சோழனுக்கும் மற்றைய சேர, பாண்டியன் மற்றும் ஏழு வேளிர்க்கிடையில் சண்டை நடக்கும்போது, வெண்ணாற்றில் தண்ணீர் வராமல் இருக்கச் செய்து, அதனால் பகையரசர்கள் பாதிக்கச் செய்வான்வேண்டி, கரிகால் சோழன் கல்லணையிலுள்ள காவிரியின் வடகரையை வெட்டி, தண்ணீரைக் கொள்ளிடத்தில் சேரவைத்தான் என்பார். கல்லணையில் தண்ணீர் எவ்வளவு வேகமாகக் காவிரியில் வந்தாலும், அதனைப் புரட்டிச் செல்லாமல் இருக்க வைக்கிற வகையில் பெரிய பெரிய கருங்கற்களைக் கொண்டு அந்த அணையைக் கரிகால் சோழன் ஏற்படுத்தினான். அதில் உள்ள அடைப்புக்கதவுகள் (ளாரவ-னடிடிசள) ஒவ்வொன்றும் 10 டன் எடையுள்ளது. அதனை ஒரு மனிதரே இயக்க முடியும். அணையின் நீளம் 1200அடி பாம்பு வடிவ அமைப்பில் உள்ளது. வெண்ணாறுபண்டுதொட்டே தனியாகவே பிரிந்து செல்கிறது. அதனைக் கரிகால்சோழனே வேறு எவருமோ இடையில் வெட்டிவிடவில்லை.

வெண்ணாறு இப்போது பிரியும் இடத்திலிருந்து பிரியவில்லை. கல்லணையிலிருந்து 3 கி.மீ. மேற்கில் திருவெறும்பூருக்கு அருகில் பிரிந்தது. பாரத மிகு மின்நிலைய நீரேற்று இடத்தின் உள்ள இடத்திற்கு அருகிலிருந்து பிரிந்தது.

கொள்ளிடம்

முக்கொம்பிலிருந்து பிரிவதுதான் உண்மையாகக் கொள்ளிடம் பிரிந்த இடமாகும்.

கல்லணைக்கால்வாய்

பிற்பட்ட காலங்களில் வெட்டப்பட்டதாகும். இது புதால என்றும் அழைக்கப்படுகிறது.

தொடரும்...

Pin It