பருவங்கள் கடந்து போகிறவைதான். கள்ளமறியாத இளமை அனுபவங்களோ, என்றும் அழியாதவை, தாய்ப் பாலாக உணர்வில் நின்று, கலைஞருக்கு ஆற்றல் ஊட்டுபவை. அந்த ஆற்றலில் காலூன்றித்தான் கலைஞர்களின் சாதனைகள் வளர்ந்து கிளை விரித்துப் பூத்துக் காய்க்கின்றன.

கனவு போல ஒவ்வொருவரும் கடந்து செல்லும் அந்த இளமையை ஆசையோடு அசை போட்டுப் பதிவு செய் திருக்கிறார் கோபால்தாசன் “மக்கா” என்னும் தன் படைப்பின் ஊடாக.

இதில் தத்துவம் தேடுவோருக்கு எதுவும் இல்லை. இலக்கிய “இசக்”கோட்பாடுகளால் அளப்போர்க்கும் எதுவுமில்லை. அதிர்ச்சி தரும் சம்பவங்களைத் தேடு வோருக்கு வட்டம்தான் மிஞ்சும். பின் என்னதான் இருக்கிறது? வாழ்வு இருக்கிறது. அசல் வாழ்வு.

குமரிமாவட்டக் குழந்தைமை வாழ்வு என அதைக் குறுக்கி விட முடியாது. வாழிடப் பின்னணிகள் வேறு படலாம். அதன் ஊடாக அனுபவங்களின் வடிவங்கள் வேறுபடலாம். சாராம்சம் வேறுபட முடியாது. இந்தச் சாரம் குமரி மாவட்டத்துக்குரிய தனிப்பட்ட சூழலில், சின்னஞ்சிறு மலர்களாக மொட்டவிழ்த்திருக்கிறது.

கவிதையை எழுதுவதற்குக் கவிமனம் வேண்டுமென்பது எல்லாருக்கும் தெரியும். எழுதுவதற்குக் கவிமனம் எவ்வளவு தேவையோ, கவிதையை அனுபவிப்பதற்கும் கவிமனம் அவ்வளவு தேவை. வெறும் கவிமனமல்ல, கலையைக் கலையாகப் பார்க்கும் அதில் தன் இன அடையாளங்களைத் தேடி ஏமாந்து போகாமல் கனிந்து விசாலம் கொள்ளும்-கவிமனம் தேவை.

கவிதையின் சமூகப் பின்னணியை உணர்ந்து, வரலாற்றோடு பொருத்தி, சமகாலத்தோடு ஒப்பிட்டு, நெகிழ்ந்து அணுகும் போதுதான் அதுதன் இதழ்களை அவிழ்த்துத் தன் அழகை வாசகருக்கு வெளிப்படுத்தும். அத்தகு கவிமனத்துக்கு இத் தொகுப்பில் அனுபவிக்க அருமையான புள்ளிகள் பல உள்ளன.

இங்குப் பதிவு செய்யப்பட்டிருப்பவை நிஜமான வாழ்க்கை. இவை பெரும்பாலும் விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்க காலக்காட்சிகள், அந்த வாழ்வின் சாரம் நிறைந்த சிறுசிறு அணுக்கள் காட்சிகளாய் விரிகின்றன. “நான்” என்பதாகச் சுருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய சமூகம் இழந்துகொண் டிருக்கும் அன்பு, இணக்கம், வேடிக்கைகள், விளையாட்டுகள், உதவிகள், சின்னஞ்சிறிய ஆசைகள், மென்மையான வெட்கங்கள் எனத் தற்செயலாக வாழ்வு சந்திக்கும் கணங்களில் மின்னும் தவிர்க்க இயலாத வெளிச்சப்புள்ளிகளை, மின்னல் கீற்றுகளை, அழிக்க இயலாத கருப்புத் தழும்புகளை நுட்பமாகப் பதிவு செய்கிறது கவிதை.

பிரபஞ்சத்தை உயிர்ப்பிக்கும் மாபெரும் ஆற்றல் அன்பு. அந்த ஆற்றல் எப்படி ஒரு காலத்தில் வளமாக இருந்தது என்பதைப் பல கவிதைகளினுள்ளே கண்டு வியக்கமுடியும். அம்மாவின் அன்பு, உடன் பிறப்புகளின் அன்பு, நட்புகளின் அன்பு, உழைப்பாளிகளின் அன்பு, என அன்புகளில் பல தினுசுகள் இங்கே பதிவாகியிருக்கின்றன. அந்த அன்பின் கனிந்த ருசி மிக்க இளமை வடிவம் காதல். இந்தக் காதலுக்கு அடியில் கொதித்துச் சூடேற்றிக்கொண்டிருப்பது காமம். சமூகத் தோலுக்கடியில் தோலைக்கீறும் தினவோடு சதா கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் காமத்தின் கீறலும் மீறலும் கூட இங்கே பதிவு செய்யப்படுகிறது. ஆபாச இலக்கியப் பரிமாற்றத்தின் ஊடாக.

கிராமக் கோயில் என்பது வைதீக அதிகாரத்தின் இருப் பிடமாக மாறிக்கொண்டிருக்கிறது இன்று. அதே கோயில் நாம் குழந்தையாக இருந்த போது குதூகலக் கொண்டாட்டத்தின் மையமாக இருந்ததைக் காட்டுகிறது இவர் கவிதை. குழந்தை மையை அனுபவிக்கத் தெரியாத ஆதிக்க அப்பனைத் தோலுரிக்கிறது. முதலாளிக்கு/அதிகாரிக்கு உழைத்துக் கொடுக்கும் நேர்மையான தொழிலாளியின் பரிதாப நிலையைக் காட்டுகிறது.

குளத்தில் கூடிக் குளிப்பது என்பது கிராமப்புற

இளைஞர் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று. குளித்து முடியும் போது குளித்தவர்களின் கண்கள் சிவந்து போய்விடும். கவிஞரோ, குளத்தின் கண்ணைச் சிவக்க வைத்ததாக எழுதுகிறார். இது ஓர் அருமையான உத்தி. இப்படி உத்திகளை அங்கங்கே காண முடிகிறது.

இன்னொரு கவர்ச்சிகரமான விசயம், கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டாரச் சொற்கள் “மயக்கி” என்று ஒரு சொல் குமரிமாவட்டக் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் பல நிறம் கொண்ட சொல். அறிவை “மயக்கி” என்பது ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தறிய முடியாதபடி செய்தல் என்னும் பொருளில் வரும். இங்கேயோ, அது பல உணவுப் பொருட்களைச் சேர்த்து ஒன்றாகச் சமைத்து அகப்பையால் நசுக்கிக்கலந்து ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தறிய முடியாமல் கரைந்து போகச் செய்வது என்பது பொருள். கிட்டும், ஏனம், கறக்கி (சுழற்றி) இப்படிஇப்படி இன்னும் அனேகச் சொற்கள்.

சில அம்சங்களில் எனக்குக் குறைகளாகவும் சில படுகின்றன. சில கவிதைகளின் முடிவில் கவிஞர் படிப்பினை சொல்ல முன் வந்திருக்கிறார். இது கவிதையின் ஆற்றலைக் கெடுத்துவிடும் எனத் தோன்றுகிறது. அடுத்தது, கவிதைகளுக் குள்ளே பயின்று வரும் தேவையில்லாத இலக்கியச் சொற்கள். சர்க்கரைப் பொங்கலில் கல் போல, அவை ருசியைக் கெடுக்கின்றன. சாதம் வடித்தல், அவுங்க, ஊஞ்சல், இப்படிப்பல, இவை போழ்து, இப்படியான சொற்கள் கவிதையின் இயல்புக்கு இடைஞ்சல் செய்கின்றன. கவனித்து நீக்கியிருக்கலாம். மூன்றா வதாக, சில இடங்களை இன்னும் இறுக்கியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இவற்றை நீக்கினால் கவிதையின் தரம் இன்னும் மேம்படும். கவிஞர் கோபால்தாசனை மனமார வாழ்த்துகிறேன்.

மக்கா

ஆசிரியர் : கோபால்தாசன்

வெளியீடு : அறிவுப் பதிப்பகம்

விலை : ரூ.45.00

Pin It