சங்க இலக்கியத்தில் ஒரு வேந்தனின் சிறப்பைப் பாடுவதற்கான முதன்மைப் பாடுபொருள்களாக வீரமும் கொடையும் திகழ்ந்துள்ளன. வேளிர், வேந்தர் காலங்களில் வழங்கப்பட்ட பல்வேறு கொடைப் பொருள்களில் தவிர்க்க முடியாத இடத்தைக் களிறு பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இரவலர்களாகிய புலவர், பாணர் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் தம் வறுமையையும் வயிற்றுப் பசியையும் போக்கிக் கொள்வதற்காகவே புரவலரைத் தேடிச் சென்றுள்ளனர். இரந்து வருவோருக்கு உணவு, உடை வழங்குவதிலும் பொன்னால் ஆன பொருள்கள் வழங்குவதிலும் பயனும் ஒரு பொருளும் உண்டு. உணவு உடனடித் தேவையையும் பொன்னால் ஆன பொருள்கள் வரும் நாட்களுக்கான தேவையையும் நிறைவு செய்வனவாகும். ஆனால், இரவலர் வாழ்வியலோடு தொடர்பற்ற களிறு ஏன் வழங்கப் பெற்றது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. இரவலருக்குக் களிறுகள் கொடையாக வழங்கப்பட்ட செய்திகள் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவலர் வாழ்வியலோடு களிற்றுக்கான உறவு என்ன? களிற்றை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்ற செய்திகள் சங்க இலக்கியங்களில் எங்கும் இடம்பெறவில்லை.elephant 464சங்க இலக்கிய காலத்தில் புரவலரால் இரவலருக்குக் களிறுகள் ஏன் வழங்கப்பட்டன. களிற்றுக் கொடையினால் இரவலர் பெற்ற பயன் என்ன என்பதனை மானிடவியல் நோக்கில் ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

புரவலன் வழங்கிய களிற்றுக் கொடைகள்

சங்க இலக்கியத்தில் மொத்தம் “இருபத்தொன்பது இடங்களில் களிற்றுக் கொடை குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக” (கைலாசபதி.க., 2021: 317) கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஔவையார் (புறம்.140:2-7), நாங்கள் மனையின் பக்கத்தில் பறித்த கீரைக்கு மேலே தூவுவதற்காகச் சிறிது அரிசி வேண்டினோம். புரவலன் எங்கள் வறுமையைப் பார்க்காமல், தன்னுடைய மேன்மை நோக்கி மலைபோன்ற யானையை எங்களுக்கு அளித்தான் எனப் பாடியுள்ளார். இப்பாடலில் புரவலன் தன்னுடைய மேன்மையினால் அன்றைய தேவைக்கான அரிசியை மட்டும் வழங்காமல் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு மலைபோன்ற யானையை வழங்கியிருக்கிறான் என எண்ணத் தோன்றுகிறது.

கண்டீரக் கோப் பெருநள்ளி தான் முயன்று சேகரித்த நல்ல அணிகலத்தைக் களிற்றொடு வழங்கினான் என வன்பரணர் (புறம்.148:1-4) பாடியுள்ளார். இப்பாடலில் களிறு என்னும் சொல்லோடு ‘ஒடு’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்ந்து ‘களிற்றொடு’ என வருகின்றது. ஆதலால் அணிகலங்களைவிட களிற்றுக்கு முதன்மை அளிக்கப்படுகிறது.

அஃதை எனும் இனக்குழு தலைவனும் (அகம்.113:3-4), நன்னன் எனும் வேளிர் தலைவனும் (அகம்.152:11-12) ஆகிய புரவலர்கள் இருவரும் யானையை இரவலருக்கு அளிப்பதனால் இன்புறுகின்றனர் எனப் பாடப்பட்டுள்ளது. இவற்றையும் விட உயர்வாக, பாடுகின்ற இரவலர்கள் வேண்டினால் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் வெள்ளிய கொம்பினையுடைய தனது தலைமை யானையை வழங்கி மகிழ்வான் எனப் பரணர் (அகம்.208:1-5) பாடியுள்ளார்.

முற்கூறிய இரண்டு பாடல்களிலும் களிறுகளை வழங்குவதால் புரவலன் மகிழ்வான் எனப் பாடப்பட்டுள்ளது. ஆனால் இப்பாடலில் தனது தலைமை களிற்றினையே ஆய் வழங்கி மகிழ்வான் எனப் பாடப்பட்டுள்ளது. புரவலர்களே மகிழ்கிறார்கள் எனில் இரவலர்களுக்கு இக்கொடையினால் ஏற்படும் மகிழ்வு என்னவாக இருக்கும் என்ற வினா ஏற்படுகிறது.

புரவலன் போரில் புண்பட்ட யானைகளின் புண்களை ஆற்றி அவற்றின் துயர் நீக்கினான். அந்த யானைகளை இரந்தவர்களுக்கு வறுமை நீங்கி வாழுமாறு கொடுத்தான். பொதுவாகக் களிற்றுக்கொடை உயர்வாகவும், புரவலன் சார்ந்தும் பாடப்பட்டுள்ளன. ஆனால், பதிற்றுப்பத்தில் (பதிற்.76:6-8) யானைகள் இரவலர்கள் வாழ்வதற்காக வழங்கப்பட்டதாக நேரிடையாகப் பாடப்பட்டுள்ளது.

இரவலன் விரும்பிய களிற்றுக் கொடைகள்

உயர்வான கோடினையுடைய கொல் யானையைப் பெறினும் நேராகப் பார்க்காமல் தரும் பரிசிலைக் கொள்ளேன் எனப் பெருஞ்சித்திரனார் (புறம்.159:22-23) பாடியுள்ளார். இப்பாடலில் கோடுடைய யானை உயர்ந்த பரிசாகப் புலவரால் பாடப்பட்டுள்ளது. மற்றொரு பாடலில், மேகம் எவ்வாறு கடலிலிருந்து நீரை முகறாமல் மீளாதோ, அவ்வாறே தேருடன், களிறு இன்றிப் பரிசிலர் கூட்டம் பெயறாது எனப் பெருஞ்சித்தனார் (புறம்.205:11-14) பாடியுள்ளார்.          

போர்க்களத்தில் வெற்றிபெற்ற யானையைப் பாவலர்க்கு மிகக் கொடுப்பவனாகக் குமணனைப் பெருஞ்சித்திரனார் (புறம்.165:6-9) பாடியுள்ளார். வெற்றி பெற்ற யானை போரில் காயம் அடைந்திருக்கும்; அது மீண்டும் போரில் ஈடுபடுத்த இயலாத நிலைக்கு மாறியிருப்பதால் புரவலன் இரவலனுக்கு வழங்கியிருக்கக்கூடும். பதிற்றுப்பத்தில் (பதிற்.76:6-8) இருந்தும் இக்கருத்தினையே பெறுகிறோம். இவ்வாறான யானைகள் இரவலனின் பயணத்திற்கும் பாதுகாவலுக்கும் பயன்பட்டிருக்கலாம்.

சேரன் செங்குட்டுவன் பகைவரை வேரோடு பொருதழித்தும் அதனோடமையானாயினான். அதனால் அவன் பகவரை நாடிச் சென்று பொருந் தோறும், பரிசில் மாக்கள் களிறு பல பரிசிலாகப் பெற்றும் அமையாது அவன் போர்ச்சிறப்பைப் பாடுதலே செய்வாராயினர். போர்ச் சிறப்பை மீண்டும் மீண்டும் பாடுதல் என்பது பரிசிலரின் மிகுதியான தேவை களிறு என்பதைப் பதிற்றுப்பத்துக் (பதிற்.47:1-2) காட்டுகிறது.

போர்க்களத்தில் எதிரிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதும், அதோடு வேண்டுந் தொழில்களைச் செய்தற்கு விரும்பும் விருப்பத்தினை உடையதுமான யானைகள் பலவற்றை நார்முடிச் சேரல் (பதிற்.40:21-31) போர்க்களத்தின் வழங்குவன். ஆதலால் செல்வாயாக எனப் பாணன் விறலியை ஆற்றுப்படுத்துகிறான். அதாவது போர்க்களத்தில் பகைவர்களை அழிப்பதனையும், சொல்வதனையும் கேட்பதாகிய இரு செயல்பாடுகளையுடைய களிறுகளைப் புரவலன் வழங்குவான் எனப் பாடப்பட்டுள்ளது.

இரவலனின் முதல் விருப்பம் களிறு என்பதை உணரமுடிகிறது. களிறு வேண்டுந் தொழில்களைச் செய்யும் வல்லமையுடையது. இதனால் காடு மலைகளைக் கடந்து பயணிக்கும் அலைகுடிகளாகிய இரவலர்களுக்குப் பாதுகாப்பாகவும் பொருள்களைச் சுமந்து செல்வதாகவும் யானைகள் இருக்கும் என்பதனால் யானையைப் பரிசில் பொருளாக அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புறநானூற்றுப் (புறம்.164:1-8) பாடலில் இரவலர் பெருஞ்சித்திரனார் தன்னுடைய குடும்ப வறுமை நிலையைப் பாடியுள்ளார். தன் வறுமையைப் பாடிய பெருஞ்சித்திரனாரே, மற்றொரு புறநானூற்றுப் (புற.162) பாடலில் கொடை வழங்காத புரவலனின் காவல் மரத்தில் களிற்றைக் கொடையாகக் கட்டி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இவரின் இச்செயல் வழி இரவலனின் வாழ்வியலுக்குக் களிற்றுக்கொடை இன்றியமையாததாக இருந்ததனையும் களிறு வழங்குதலே பெருவழக்காக இருந்ததையும் காணமுடிகிறது.

குடிமக்களின் பண்டமாற்றில் யானைத் தந்தம்

வேடுவர்களோ மறவர்களோ போர் வீரர்களோ யானைக் கன்றுகளையும், பெரிய யானையின் கோடுகளையும் பண்டமாற்றாகப் பயன்படுத்திய செய்தி சங்க இலக்கியத்தில் (குறுந்.258:3-5), (அகம்.83:3-9), (அகம்.61:7-13), (அகம்.245:8-13), (குறுந்.100:3-5), (பதிற்.30:10-13) பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இச்செய்திகள் யானையும் யானைத் தந்தங்களும் மானிடர்களின் வாழ்வியலுக்குப் பயன்பட்டிருக்கின்றன என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

இரவலர் பண்டமாற்றுக் குறிப்புகள்

இரவலர்கள் தூண்டிலில் பிடித்த மீன்களை விற்றுப் பிழைத்துள்ளதாகச் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. இரவலர்கள் மீனுக்கான பண்டமாற்றுப் பொருள்களாகப் பருப்பு (ஐங்.47:1-3), வெண்ணெல் (ஐங்.48:1-3), நெல் (ஐங் 49:1-2), மற்றும் பழையநெல் (அகம்.126:7-12) போன்றவைகளைப் பெற்றதாகச் சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன.

தாமான் தோன்றிக்கோனைப் பாடிய ஐயூர் முடவனார் தூண்டிலாற் பிடித்த மீனை விற்று கிணைமகள் சமைத்த புளிங்கூழ் உணவையுடையேன் (புறம்.399:15-17) என இரவலன் நிலையைப் பாடுகிறார். இரவலன் என்பவன் தன் வறுமையையும், புரவலனின் கொடை மற்றும் வீரத்தையும் மட்டுமே பாடக் கூடியவனாகவே சங்க இலக்கியம் முழுமையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். இரவலர்கள் பண்டமாற்று செய்யக் கூடியவர்கள் என்பதனை மேற்கூறிய பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவர்கள் கொடையாகப் பெற்ற களிறுகளை என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இரவலர்கள் பெற்ற களிறுகள் அல்லது பெற விரும்பிய களிறுகள், ‘ஏந்திய கோடு, வெண்கோடு, உயர்ந்த மருப்பை உடைய யானை, குன்று போன்ற யானை, கொல் களிறுஞ்ஞ்’ எனச் சுட்டப்படுகின்றன. ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே இளங்களிறுகள் (அகம்.113:3-4), (புறம்.135:10-13) வழங்கியதாகப் பாடப்பெற்றுள்ளன. இதே போன்றுதான் வேடர்கள், மறவர்கள், போர் வீரர்கள் பண்டமாற்று செய்த யானைகள், யானைக் கோடுகள் (அகம்.83:3-9), (அகம்.61:7-13), (அகம்.245:8-13), (குறுந்.100:3-5), (பதிற்.30:10-13), (பதிற்.68:9-11) குறித்தும் பாடப்பட்டுள்ளன. இதனால், இரவலர்களும் களிறுகளைப் பண்டமாற்றினாலோ விற்றோ தங்கள் வாழ்வியலுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனக் கூறமுடிகிறது.

இரவலர்கள் புரவலர்கள் வழங்கிய களிறுகளைப் பண்டமாற்று செய்ததற்கான பாடல்கள் சங்க இலக்கியத்தில் எங்குமே இல்லை. காரணம், இரவலர்கள் தங்கள் வறுமை நிலையையும், புரவலர்களின் பெருமைகளையும் பாடுவதற்கு உரிமையுடையவர்கள். புரவலர்கள் வழங்கிய களிற்றுக் கொடையைப் பண்டமாற்றியோ விற்றோ பிழைப்பு நடத்தினோம் எனப் பாடுவது புரவலர்களை இழிவு படுத்துவதற்கு சமமாகும். எனவே, இரவலர்கள் பெற்ற கொடைப் பொருள்கள் குறித்தான பண்டமாற்றுப் பாடல்கள் சங்க இலக்கியங்களில் எங்கும் இடம்பெறவில்லை எனலாம்.

முடிவுரை

சங்க இலக்கியத்தில் புரவலர்கள் வழங்கிய கொடைகளிலும், இரவலர்கள் விரும்பிய கொடைகளிலும் களிறு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்துள்ளதைக் காணமுடிகிறது. இளம் யானைகளும், யானைகளின் உயர்ந்த கோடுகளும் பண்டமாற்றுப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பண்டமாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ள இளம் யானைகளும், யானைகளின் உயர்ந்த கோடுகளுமே புரவலன் வழங்கிய, இரவலன் விரும்பிய களிற்றுக் கொடைகளில் கூறப்பட்டுள்ளன. எனவே, இரவலர்களும் தாங்கள் பெற்ற களிற்றுக் கொடைகளை பண்டமாற்றுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அதோடு தங்களின் வழித்துணையாகவும் பொருள்களைச் சுமந்து செல்வதற்காகவும் யானைகள் பயன்பட்டிருக்கிறன என்பதைச் சங்க இலக்கிய பாடல்களின் வழி உணரமுடிகிறது.

துணை நின்ற நூல்கள்

1.          அகநானூறு, துரைசாமிப்பிள்ளை. ஔவை சு. (உ.ஆ.), தமிழ்மண் அறக்கட்டளை,சென்னை - 17.

2.          ஐங்குறுநூறு, துரைசாமிப்பிள்ளை. ஔவை சு. (உ.ஆ.), தமிழ்மண் அறக்கட்டளை,சென்னை - 17.

3.          குறுந்தொகை, சோமசுந்தரனார். பொ.வே. (உ.ஆ.), 2007, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18.

4.          தமிழ் வீரநிலைக் கவிதை, கைலாசபதி.க., பாலசுப்பிரமணியன். கு.வெ. (மொ.பெ.), 2021, குமரன் புத்தக இல்லம், கொழும்பு - 6.

5.          நற்றிணை, துரைசாமிப்பிள்ளை. ஔவை சு.(உ.ஆ.), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை - 17.

6.          பதிற்றுப்பத்து, துரைசாமிப்பிள்ளை. ஔவை சு. (உ.ஆ.), தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 08.

7.          புறநானூறு, துரைசாமிப்பிள்ளை. ஔவை சு. (உ.ஆ.), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை- 17.

- இரா.சுசில்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.