lingam jayanthiஓர் எளிய குடும்பத்தின் ஊடாக வாழ்வை எழுதும் முயற்சி ‘லிங்கம்’. இது விண்ணனு மின்னியல்யுகம். அறிவியல் தொழில்நுட்பமும், வசதி வாய்ப்புகளும், கார்ப்பரேட் அரசியல் பொருளியலும், நுகர்வியமும் வாழ்க்கையைச் சந்தையாக்கிக் காட்சிப்படுத்தும் சூழல். எண்களில், அட்டைகளில், கண்ணுக்குத் தெரியாதக் கம்பி அலைகளில் மனித ஊனும் உயிரும் உறவுகளும் தம்மை ஒட்டவைத்துக் கொள்ளும் காலம்.

பரும அளவில் இவை சிறிதுதான். உலகின் முகமாகிப் போனது விந்தை. காரணம் பொருளே வாழ்வு. பொருளிலார்க்கு இவ்வுலகு இல்லை. இரைதேடிச் செல்லும் பறவைகள்போல் அன்றாடங் காய்ச்சிகளாக இம் மண்ணில் அலைவுறும் மனிதர்கள் பெருங்கூட்டம். அவர்கள் குரல்களும், முகங்களும் பொதுச் சமூக வெளியில் மௌனமாக்கப் பட்டுவிடுகின்றன. அப்படியான ஒரு வாழ்வின் பிழிவு இந்நாவல்.

தஞ்சாவூருக்கும் திருவையாறுக்கும் இடையில் உள்ள திருக்கண்டியூர்தான் கதைக்களம். தாயின் வளர்ப்பில் மூன்று சகோதரிகளுடன் போராடி, ஒரு பழைய தையல் இயந்திரத்துடன் வாழ்க்கை நடத்துபவர் லிங்கம். திருக்காட்டுப்பள்ளியில் சற்று வசதியான குடும்பத்தில் ஒரு அண்ணன், இரண்டு தங்கைகளுடன் பிறந்தவள் வேணி. இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

ஒரு துண்டு நிலத்தில் இருக்கும் குடிசை வீடுதான் சொத்து. லிங்கத்தின் தாயும் சகோதரிகளும் விலகிக் கொள்கிறார்கள். கையை ஊன்றி கரணம் போடும் வாழ்வு. கண்டியூர் கடைத் தெருவில் நவீனமாய் தையல்கடைகள் இருந்தன. லிங்கம் ஒரு பழைய இத்துப்போன தையல் மிஷினுடன் வீட்டில் வேலை செய்தார். பெரும்பாலும் பழைய துணிகள். கிழிசல்களைத் தைக்கும் வாழ்வு. பெண்கள் ‘ஜாக்கெட்’ தைப்பதில் கை தேர்ந்தவர்.

மிஷின் மிதிக்கும் கால்களுக்கும் நூல் பிடிக்கும் கைகளுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது வறுமை வாழ்வு. பக்கத்து ஊர்களுக்கு ஒரு பழைய சைக்கிளில் சென்று துணிகளை வாங்கி வந்து தைத்துக் கொடுப்பார். கடைகளில் கொடுக்கும் கூலியைவிட இவருக்குக் குறைத்துதான் கொடுப்பார்கள். ஆனால் லிங்கத்தின் உயர்குணத்தால் ‘மாஸ்டர்’ என்றே மரியாதை தந்தார்கள்.

வெளி வாழ்வு கரடுமுரடுதான் என்றாலும் உள் வாழ்வு கனிரசமாய், லிங்கமும் வேணியும் பொங்கிப் பூரித்தார்கள். இரண்டு ஆண்கள். ஐந்து பெண்கள். எட்டாவது பிரசவம் சிக்கலாகி உயிர் பிழைத்தால் போதும் என்று மீண்டு வெட்கத்துக்கும் மரியாதைக்கும் கட்டுப்பட்டு நிறுத்திக் கொள்கிறார்கள்.

குமார், ஆனந்த், கலை, ராணி, சுந்தரி, லதா, ராதி, கடைசி தனம். குமார் குடியில் விழுந்து தெண்டச்சோறாகி குடும்பச் சுமையாகி விடுகிறான். ஒரு நிலையில் வீட்டை விட்டும் வெளியேறுகிறான். அவனைத் தேடிச் சென்ற அப்பா லிங்கமும் வீடு திரும்பவில்லை. துணி தைக்கக் கொடுத்தவர்கள், கடன் கொடுத்தவர்கள் வீட்டை மொய்க்கின்றார்கள். வீட்டில் உலை எரிய வழியற்றுப் போகிறது.

வேணி, அதுவரை வீட்டுக்குள்ளேயே லிங்கத்துக்கு ‘பாப்பா’வாக வலம் வந்தவள் நெருக்கடிக்கு உள்ளாகிறாள். இரண்டாவது மகன் ஆனந்த், படிப்பு வராமல் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தவன் குடும்ப நிலையை உணரும் தருணம். அப்பாவின் தையல் மிஷினை கையில் எடுக்கிறான். தேங்கிய துணிகளைத் தைத்துக் கொடுக்கிறான்.

கடைத் தெருவில் உள்ள தையல் கடை நண்பர்களிடம் நுட்பம் கற்று இன்னொரு மிஷின் வாங்கி தொழில் செய்யத் தொடங்குகிறான். மகள் கலை பத்தாம் வகுப்பு திருவையாறு சென்று படிக்கிறாள். வேணி தெருப் பெண்களுடன் சேர்ந்து கூலிவேலைக்குச் செல்கிறாள். முதலில் கதிர் அடிப்பு - பின்னர் கயிறு தொழிற்சாலையில் கயிறு திரிக்க. பிள்ளைகள் பெருத்தக் குடும்பம்.

உணவுக்கும், அன்றாடத் தேவைகளுக்குமே அல்லாடல். தெருப்பிள்ளைகளுடன் வேப்பங்கொட்டைப் பொறுக்கப்போகும் ‘லதா’ ஒரு நாள் காலில் ஏதோ தீண்ட வீட்டில் படுக்கையாகிறாள். வேணி வேலை விட்டு வந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் வழியில் செத்துப் போகிறது குழந்தை. கலை படிப்பை நிறுத்தி அம்மாவுடன் வேலைக்குச் செல்கிறாள். தொடர்ந்து ராணியும், சுந்தரியும் கூட கூலி வேலைக்குச் செல்கிறார்கள்.

ஒரு அதிகாலை இருட்டில் லிங்கம் வீட்டுக்கு வருகிறார். தான் செய்ததற்கு கூனிக்குறுகி வீட்டோடு ஒன்ற முடியாமல் தவிக்கிறார். என்றாலும் நான்கு வருடப் பசியில் லிங்கமும் வேணியும் தின்று தீர்க்கிறார்கள். லிங்கம் இயல்புக்கு வரமுயற்சிக்கிறார்.

ஆனந்த் தொழில் செய்வது, வேணியும் பிள்ளைகளும் வேலைக்குச் செல்வது சந்தோஷமாகவும், துக்கமாகவும் இருக்கிறது. தன்னை நம்பி யாரும் இல்லை என்ற நிலையில் தவிக்கிறார். வெளியே சென்று தங்கை சந்திராவைப் பார்க்கிறார். அவள் வேணியைப் பற்றி பொறாமையால் வத்தி வைக்கிறாள். லிங்கம் தடுமாறுகிறார். பின்னர் தன் மகள் லதா இறந்தது, குடும்பத்தைக் கடன்காரர்கள் இழிவுபடுத்தியது, தனது தாயும் சகோதரிகளும் கண்டு கொள்ளாதது, வேணியைச் சிறுமைப்படுத்தியது எல்லாம் அறிந்து நெகிழ்ந்து, வேணியிடம் மன்னிப்புக் கோருகிறார்.

இன்னொரு அதிகாலையில் மூத்த மகன் குமார் வீட்டுக்கு வருகிறான். காய்ச்சலும் அம்மை நோயும் உள்ளது. வேணியும் பிள்ளைகளும் பணிவிடை செய்து காக்கிறார்கள். உடம்பு சரியாகிறது. ஆனால் அவன் சரியாகவில்லை.

தெருவிலுள்ள பேச்சியம்மாள் வழி மன்னார்குடியிலிருந்து கலைக்கு ஒரு மாப்பிள்ளை வருகிறது. செய்வினை வேண்டாம். பெண் கொடுத்தால் போதும் என்கிறார்கள். நல்ல வசதி. விவசாயம். இரண்டு மகன்கள். மத்த பிள்ளைகள் சூழல் கருதியும் பெண், மாப்பிள்ளை பிடித்தம் கருதியும் திருமணம் உறுதியாகிறது. இடையில் மாப்பிள்ளையின் உறவினர் என்று ஒருவர் வந்து ‘சிறுவயதில் விபத்து பெரும் பாதிப்பு, விசாரித்துச் செய்யுங்கள்’ எனச் சூசகமாகச் சொல்கிறார். என்றாலும் குடும்பம், பிள்ளைகள், கொடுத்த வாக்கு கருதி திருமணம் நடக்கிறது.

வேலையற்றுத் திரிந்த மூத்த மகன் குமார், இத்தனைப் பெண்களைக் கரையேற்றித்தான் திருமணம் என்றால் நான் கிழவனாகி விடுவேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஊரில் ஒரு பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ளுகிறான்.

கலையின் திருமண வாழ்வு பொய்த்துப் போகிறது. அம்மா வேணியும் தந்தை ராணியும் பார்க்கச் செல்கிறார்கள். வசதியான வாழ்க்கை. குழந்தைதான் இல்லை. வரும் அவளாவது நல்லா இருக்கட்டும் என வருகிறார்கள். ஆனால் அங்கு நிலைமையோ வேறு.

கலையின் கணவன் இளம் வயதில் ஏற்பட்ட விபத்தில் பாலுறவில் ஈடுபட முடியாதவனாக இருக்கிறான். இதை மறைத்தே திருமணம் செய்திருக்கிறர்கள். கணவனின் தம்பி இராஜலிங்கம் தினவெடுத்து திரிபவன். கலையை அடைய முயல்வதுடன் அவள் தங்கை ராணியைத் திருமணம் செய்யவும் துடிக்கிறான்.

இந்நிலையில் மூத்த மகன் குமார் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்ட பெண் வீட்டார் சாதி காரணமாக லிங்கத்தையும், இரண்டாவது மகன் ஆனந்தையும் அடித்துப் போடுகின்றனர். லிங்கம் படுகாயமடைகிறார். மருத்துவ மனையில் அரசு டாக்டர்களின் முயற்சியால் காப்பாற்றப்படுகிறார். இத்தகவல் அறிந்து அப்பாவைப் பார்க்க வரும் கலை ஒரு வாரம் தங்கிவிட்டுப் பின் கணவன் வீடு செல்கிறாள்.

அங்கு மாமியாரும் கணவனும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறாள். கொழுந்தன் இராஜலிங்கம் எனும் மிருகம் நினைவில் அச்சம் கொள்கிறாள். யாருமற்ற இரவில் தூங்கும்போது அவள் நினைத்தமாதிரியே ராஜலிங்கம் அவளை அடக்கி ஆட்கொள்கிறான்.

ஒரு நிலையில் தன்னிலை பெற்று கலை அவனை உயிர்த்தலத்தில் உதைத்து உதறித் தள்ளுகிறாள். குடி போதையில் இருந்த அவன் அடிபட்டு வீழ்கிறான். த்தூ.... எனக் காறித் துப்பிவிட்டு கண்டியூர் வந்துவிடுகிறாள் கலை. இதுதான் கதை.

‘நான் பார்த்த மனிதர்களை வைத்தே பாத்திரங்களை லிங்கம் நாவலில் படைத்து உயிரூட்டியிருக்கிறேன்’ என்கிறார் என்னுரையில் ஜெயந்தி கார்த்திக். மொழி நடையும்கூட தஞ்சை வட்டாரத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. பெரும்பாலும் பொது மொழியோடு ஒன்றுபடும் கிளைமொழி அது.

காவிரி தீரத்தின் புதிய படைப்புக்கங்காக ஜெயந்தியை உணரமுடிகிறது. பாசாங்கற்ற மொழிதலும் வாழ்வை அதன் மூச்சுக்காற்றுப் படும் அளவில் அறிதலும் இந்த எழுத்தின் இயல்பை சாத்தியப்படுத்துகின்றன. எந்த இடத்திலும் குரல் உயராமல் அதே நேரத்தில் மௌனித்தும் விடாமல் எச்சரிக்கையாக எழுதிச் செல்கிறார்.

வாழ்வைப் போலவே இந்நாவலிலும் பெண்கள் தான் மையம். வேணி, கலை, சந்திரா, அமுதா, பானு, பேச்சியம்மா, பாக்கியம், கலிப்பா என்று விதவிதமாய் பெண்கள், ஆண்களில் லிங்கம், குமார். ஆனந்த், மரியதாஸ், பட்டாமணியார், ராஜலிங்கம் என்றெல்லாம் இருந்தாலும் லிங்கம் மட்டுமே முழுமையாய் மென்மையாகவும் அதே நேரம் உறுதியாகவும் பெண் தன்னை உணர்த்தும் தருணங்கள் அநேகம்.

லிங்கம் வேணியைத் திருமணம் செய்வதற்கு முன் திருப்பந்துருத்தி எனும் ஊரில் ஒரு பெண்ணை மணமுடிக்க உறுதி செய்தார்கள். அவள் தந்தை பெரிய நோயாளி எனச் சொல்லி அதை முறித்து வேணியைத் திருமணம் செய்கிறார்கள். திருமணத்தன்று மாலை லிங்கம் ஊரான கண்டியூருக்கு வேணியை அழைத்துச்செல்லும்போது திருப்பந்துருத்தி வந்ததும் அவள் தலையை காருக்குள் அமுக்கி விடுகிறார்கள்.

வேணிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் ஒரு நாள் லிங்கத்திடம் கேட்க, அவர் அப்பெண் அன்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறார். வேணி மனதுக்குள் குமுறுகிறாள். “கணவன் என்று கூடப் பார்க்காமல் எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது வேணிக்கு. பாவி மவனே ஒரு புள்ளய காவு வாங்கிபுட்டு எங்கழுத்துல தாலி கட்டிருக்கியா நீயி...... ஒன்னையெல்லாம் வெசம் வச்சுக் கொல்லனும்யா”. (ப.22)

ஆண் துணை இன்றி பெண் வாழ்ந்து விடமுடியாது என்பதை மரபும் சூழலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே உள்ளது. ஊர்ப் புறங்களில் இன்றும் இதுதான் நியதி. லிங்கம் போன பின்பு வேணிக்கு நேர்ந்தவற்றை பானு சொல்கிறாள்: ‘ஒரு நாளு பக்கத்து வூட்டுக்கு திருடவந்த பய, தப்பிச்சி ஓடும்போது ஒங்க வூட்டு சுவரேறி குதிச்சிருப்பான்போல. வரிசையா பொம்பள புள்ளைவுக படுத்திருக்கும்போது நைட்டு நேரத்துல ஏறி குதிச்சா என்னாவும்? எல்லாம் சேந்து கத்த ராவு நேரத்துல தெருவே ஒன்னுகூடி நின்னுடுச்சி.

பக்கத்து வூட்டுக்காரி, அவ வூட்டுக்கு திருட வந்தத சொல்லாம, ஆம்பள இல்லாத வூடுனு வரச்சொல்லிட்டா போலன்னு ஜாடைபேச, அந்த நேரத்துல தெரு சனங்களும் அவ புரியாம சொல்றத வேதவாக்கா எடுத்துக்கிட்டு கொஞ்சம் நஞ்சம் பேச்சில்ல, அண்ணிய பேசிப்புட்டாளுவ. வயசுக்கு வந்த புள்ளைவுக இருக்கறப்ப இப்படியான ராவுல ஆம்புள தொண கேக்குது. புருசன் என்னா செத்தா போயிட்டான்... ஒருத்தர் கூட என்ன நடந்துச்சுன்ன ஒம் பொண்டாட்டியை கேட்கல, அவ்வளவு ஏ, ஓந் தங்கச்சியும்தான் போறவக வரவக கிட்ட எல்லாம் கட்டு கதைய கட்டிவுட்டா.., (பக்.-111-112)

காதலித்து திருமணம் செய்து கொண்ட அமுதா எனும் பெண் கைவிடப்பட்டு தீவைத்து தற்கொலை செய்து கொள்கிறாள். அப்போது வேணி மனதுக்குள்: “பெத்தவுக பாத்தாலும் தானா தேடிக்கிட்டாலும் கண்ணாலத்துக்கு பெறவு குடும்பத்த நடத்துறதுக்குள்ள இவனுங்ககிட்ட செத்து சுண்ணாம்பா ஆயிடனும். எதுத்து கேட்டா பொட்டச்சிக்கு என்ன துணிச்சல்னு சாகடிக்குறானுவுக.

அமுதாவுக்கும் இன்னைக்கு அதுதான் நடந்திருக்கு. புளுவு புளுத்த பயலுவுகளா இந்த ஒடம்ப நீங்க மட்டும் எத்தன வருசத்துக்குடா காப்பாத்தபோறீக நாசமா போனவனுகளா. ஆயி அப்பனுக்கு பொறவு ஒங்கல நம்பி வந்தா இப்படி எங்களை சமாதிகட்டி அனுபுரீங்களா” (ப.130) இக் கூக்குரல் ஆதிப் பெண்ணினத்தின் குரலாக வியாபிக்கிறது. “ஏ வாள்கையிலே இருட்டு என்ன புதுசா ” (ப.120) என்கிறாள் வேணி.

சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுநாதரைப் பார்க்கும் போதெல்லாம் கலைக்கு தன் அம்மாவின் ஞாபகம்தான் வரும். அப்போதெல்லாம் “பொம்பளைங்க பாதிபேரு இன்னைக்கு இதுபோலத்தானே இருக்காவுக” என நினைப்பாள்.

இப்படியான பெண்களின் இருப்பையும் வெளியையும் பேசுகிறது நாவல்.

கலையின் சூழலைக் கொழுந்தன் ராஜலிங்கம் பயன்படுத்த முனைகிறான். அவன்கூட கலையை ‘வைத்துக்’ கொள்வதாகவும், அவள் தங்கை ராணியைக் கட்டிக் கொள்வதாகவும்தான் கூறுகிறான். இது வழி வழி நடப்பது. ராஜலிங்கத்தின் கோரம்: “என்னடி எப்பப் பார்த்தாலும் பசப்புற. இன்னைக்கு ஒன்னைய ஓக்காம வுடமாட்டேன். ஒந் தங்கச்சிய கட்டி கொடுன்னு கேட்டா அதயும் செய்யமாட்டங்குற. நீயும் பெரிய பத்தினி மாதிரி நடக்குற.

நீயும் சங்கர கட்டிக்கிட்டு வந்த நாளா கன்னி கழியாமாதான இருக்க. அவனுக்கு குடும்பம் நடத்த துப்பு கிடையாதுன்னு எனக்கு தெரியாதா இல்ல எங்காத்தாவுக்குதா தெரியாதா? ஏ இந்த ஊருக்கே தெரியுமே. எங்களுக்கு இருக்கிற வசதிக்கு ஒன்ன மாதிரி அன்னாடங்காய்ச்சியவா கட்டுவோம். இதெல்லாம் ஒனக்கு புரியல. பேசாம என்னைய அனுசரிச்சு போனா ஒன்ன மகாராணி மாதிரி வச்சுப்பன். ஒந்தங்கச்சி ராணிய ராணி மாதிரி வச்சுப்பன்” (ப.198) இது ஆனாதிக்கத்தின், அராஜகத்தின் உச்சம். ஆயிரமாயிர ஆண்டுகளின் மரபின் வீச்சம். தன்னியல்பில் ஒரு பெண் எப்படி இதை எதிர்கொள்வாள்?

“நீ ஒரு நல்ல அப்பனுக்கு பொறந்திருந்தா எம்மேல கைய வச்சிருப்பியா நாயே. நீங்க எல்லாம் கூட்டு களவாணிகதானே. ஒங்க ஆத்தாக்காரியும் ஒங்க அண்ணனும் ஏ வாள்க்கைய பாளாக்குனது பத்தாதுண்னு, நீ வேற எங்குடிய கெடுக்க பாக்குறியடா நாயே. ஒங்கண்ணந்தான் பொட்டப்பய. அதுக்காவ நானும் ஊரு மேய்வேன்னு நெனச்சியாடா? த்தூ.. சத்தேரி. இந்தா ஒங்கண்ணன் கட்டுன தாலி” (ப.199) வீறிட்டெழுகிறது பெண்ணின் சுயம்.

“ஒங்காத்தாக்காரியும் அண்ணனும் வந்தா நடந்தத சொல்லு. அண்ணங்கார பேடி தம்பிக்காரன் பொறிக்கிப்பய. ஆத்தாக்காரியோ மாமாக்காரி. த்தூ.. சுத்த மானங்கெட்ட குடும்பம்...” ஆவேசமாய் கத்திய கலை மறுபடியும் அவன் அருகில் சென்று தன் பலங்கொண்ட மட்டும் வலது காலை உயர்த்தி அவனுடைய உயிர்த்தலத்தில் உதைத்தாள். பிறகு அவன் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு வெளியேறினாள்”. (ப.199)

கலை பத்ரகாளியாகிவிடுகிறாள். எல்லாவற்றையும் பெண், குடும்பம், வறுமை, வழியில்லை என்று சகித்துக் கொண்டவள்தான். அடக்கி ஒடுக்கப்படுகின்ற ஏதொன்றும் பீறிட்டு வெளியேறத்தானே தருணம் பார்க்கும்? இங்குதான் எழுத்தாளர் ஜெயந்தி கார்த்திக் வெற்றி பெறுகிறார். பெண்ணுரிமை, பெண்ணியம் எதுவும் அறியாத கலை மிக இயல்பாக தன்னையும் தன்வழியே பெண்ணின் இருப்பையும் அடையாளம் காணுகிறாள்.

‘மலட்டுத்தன்மை’ இன்றையச் சமூகத்தின் பெரும் சிக்கல். நவீன வாழ்முறையின் கொடுங்கொடை. கருத்தரிப்பு மையங்கள் கார்ப்பரேட் கொள்ளைகள். நூறு திருமணங்களில் இருபத்தைந்து இப்படி. இது தனியே விவாதிக்க வேண்டியது.

இணைவிழைச்சு - பாலின்பம் உயிர் அடிப்படை. குடும்பம் என்கிற மரபுக்குள் இறுகமூடி மூச்சுமுட்டச் செய்து விடுகிறோம். இயற்கையாகவோ, செயற்கைநோய், விபத்து காரணமாகவோ ஆண்/பெண் இயலாநிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இது நிச்சயம் அந்த நபர்கள், குடும்பம், உறவுகள் அறியாமல் சாத்தியம் இல்லை.

இதை மூடி மறைத்து திருமணம் செய்து வைப்பது, அதனால் ஏற்படும் சிக்கல்கள் சொல்லி மாளாது. இது இன்று வசதிபடைத்த, படித்தப் பிரிவினரிடையே அதிகம் நடக்கிறது. ஊர்ப் புறங்களில் சொல்லவே வேண்டாம். இதன் வகை மாதிரிதான் இந்நாவலில் ‘கலை’ எழுத்தின் ஊடாக சமகால வாழ்வை ஊடுருவி அதன் மீதான ‘இடைமறிப்பை’ ஜெயந்தி சத்தமில்லாமல் செய்துவிடுகிறார்.

நாவலின் தலைப்பு ‘லிங்கம்’. ஆண்குறி. ஆண்மையம். கதை நாயகன் பெயர் ‘லிங்கம்’. எட்டுப் பிள்ளைகளின் தந்தை, லிங்கமும் வேணியும் ததும்பத் ததும்பத் தாம்பத்தியம் நடத்துகிறார்கள். ஏழை பாழைகளின் துய்ப்பு (enjoy) இந்த இணையின்பமும், உணவும்தானே? போகட்டும். வேணியும் இதர பெண்களும் படும்பாடுகள் காலகாலமாகப் பெண்களின் கண்ணீர்த் தொடர்ச்சி.

எட்டுப் பிள்ளைகளுடன் பிறந்த கலை ‘மலடி’ ஆக்கப்படுகிறாள். அவள் கணவன் சங்கர் தன்னை வெளியே தெரியாமல் மறைத்துக்கொள்கிறான். அவள் கொழுந்தன் முரடன், வெறியன். அவளை பெண்டாளத் துடிப்பவன். அவன் பெயர் ராஜலிங்கம்.

கலை கடைசி கடைசியாக ‘ராஜலிங்கத்தைப்’ பதம் பார்த்து விடுகிறாள். ஆண்மையம் தகர்கிறது. வீழ்கிறது. அடடா.. பெண்மை வாழ்கவென்று கூத்தாடத் தோன்றுகிறது. ஆண்மையச் சமூகம் மீதான எளிய கல்லெறிதல், கனல்பொறி. த்தூ... என்ற கலகவீச்சு, எழுத்துக் கலையின் சாதிப்பு.

தஞ்சை வட்டார வாழ்வு ஓரிரு இடங்களில் துலக்கமாகப் பதிவாகின்றது. சிறுவர்கள் புளியங்கொட்டைப் பொறுக்கி எடைக்குப் போட்டு பலகாரம் வாங்கிச் சாப்பிடும் வழக்கம். கல்யாண முருங்கை இலையை அரைத்து அரிசி மாவுடன் அடைசுடுதல், பிள்ளைப் பெற்றப் பெண்ணுக்குப் பூண்டு, கருவாட்டுக் குழம்பு கொடுத்தால் பாலூறும் எனும் நம்பிக்கை போன்றவை போகிற போக்கில் சுட்டப்பெறுகின்றன.

பெரும்பகுதி பிள்ளைப்பேறு வீடுகளில்தான். ஊர்ப்புறங்களில் மருத்துவம் பார்க்கும் கைராசி மகராசிகள் உண்டு. இந்நாவலிலும் பேச்சியம்மாள் “வெறுந் தரையில் மல்லாக்கப்படுத்துக் கொண்டிருந்த வேணியின் அருகில் சென்றவள் அங்கிருந்தவர்களை வெளியேறச் சொன்னாள். வேணியின் கையைப் பிடித்துப் பார்த்தாள். அவளின் வயிற்றைப் பார்த்தாள் வயிறு இறங்கியிருந்தது.

பாவாடையை விலக்கி பிறப்புறுப்பை சோதித்தாள். பனிக்குடம் உடைந்திருக்கவில்லை. கையை உள்ளே நுழைத்து விரல்களால் துலாவிப் பார்த்தாள். குழந்தையின் தலை சரியாக திரும்பியிருந்ததை உணர்ந்து கொண்டாள்... பேச்சியம்மாள் பக்குவமாக பனிக்குடத்தை உடைப்பதற்கு விளக்கெண்ணையைத் தடவி விரல்களால் கர்ப்பப் பையின் முகத்துவாரத்தை நசுக்கினாள். பனிக்குடம் உடைந்தது. சிறிது நேரத்தில் வேணிக்கு எட்டாவதாக பெண்குழந்தை பிறந்தது” (ப.26).

இப்படியான மருத்துவம் நம்பிக்கையாக மட்டுமல்ல எளிய மக்களுக்கான வாய்ப்பும் இதுதான். அதே நேரத்தில் ஏழைகளின், ஊர்மக்களின் துயர் போக்குபவையாக அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களும் திகழ்வதை, ஜன்னி கொண்ட வேணியின், படுகாயமுற்ற லிங்கத்தின் மருத்துவ சிகிச்சை வழி உணர்த்துவது சிறப்பு. அதேபோல மஞ்சள் காமாலை நோய்வந்த மகள் ராதியை, கீழாநெல்லி கொடுத்து சரிசெய்யும் கண்டியூர் நாட்டு வைத்தியர் பஞ்சநாதன் வழியாக நாட்டு மருத்துவம் சுட்டப்படுகின்றது.

ஊர்ப்புறங்களைக் கெடுக்கும் குடி, ஏமாற்று அரசியல் செய்யும் எத்தர்கள், வழமையான மாமியார், நாத்தனார் பகைமைகள் நாவலில் இடம்பெறுகின்றன. வறுமையும் ஏழ்மையும் இதைத்தாண்டி வாழத் துடிக்கும் நம்பிக்கையும் நாவலின் நற்செய்தி.

ஊருக்கெல்லாம் துணி தைத்துக் கொடுக்கும் தீவாவளி இரவில் விடியவிடியக் கூட லிங்கம் தன் பிள்ளைகளுக்கு புதுத்துணி தைக்க முடியாத நிலை. ஊரே பொங்கல் கொண்டாட, இன்றைக்காவது ரேஷன் அரிசி நாற்றமில்லா சோறுக்கு ஏங்கும் வேணியின் பிள்ளைகள்... இது விடுதலை இந்தியாவின் இலட்சணம்.

குடும்பமே ஒரே நேரத்தில் உட்கார்ந்து அம்மா சோற்று உருண்டைகளை உருட்டித்தர எல்லோரும் வாங்கிச் சாப்பிடும் வாஞ்சை, நலிந்தோருக்கு உதவும் பாயம்மாக்கள், வேணிக்கும் பிள்ளைகளுக்கும் அரணாக சதா உதவிடும் தெரு மனுஷிகள், முன் கடன் தரும் கயிறு முதலாளி, லிங்கத்தையும் வேணியையும் காப்பாற்றும் அரசு மருத்துவமனை... இப்படி நல்லியல்புகள், மனிதமாகப் பொழிகிறது நாவல் நெடுகிலும்.

தஞ்சை வட்டாரத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கை இது. உதிரி உழைப்பாளிகளின், அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்க்கை. இந்திராகாந்தி சுடப்படுவது சுட்டப்படுகிறது. அது 1985 ஆக, 1960 தொடக்கம் 1990வரையான முப்பது ஆண்டுகளில் நாவல் தொழில்படுகிறது.

நாவல் தொடங்கும் அதிகாலையில் இரத்தச் சிவப்பில் ரோஜா மலர் மலர்ந்திருக்கும். நாவலின் முடிவில் மஞ்சள் வண்ண ரோஜா பூத்திருக்கும். இது குறியீடுதான். நம் நிலத்தில் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. பல வண்ணங்களில், வடிவங்களில். பட்டாம் பூச்சிகள் வந்தமரும் என்றோ, யாரின் கூந்தலிலாவது சென்றமர்வோம் என்றோ பூக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதானே?

குறிப்பு:

இந்நாவல் குறித்து விரிவாக எழுதியதற்கு காரணமுண்டு. வண்டல் படைப்பில் வறண்டு விட்டது என்ற பேதைகளின் குரலை மறுதலித்து இற்றை இளையர் எழுதிய நாவல் இது. கல்விப் புலம் படைப்பை ஜென்மப் பகையாக்கிவிட்டச் சூழலில் அங்கிருந்து கிளம்பியுள்ள அரும்பு இது. கவிதைகளையே ஆளும் மனுஷிகள் நடுவே புதினப் பரப்பை தேர்ந்தெடுத்த புதுமை இது. கடைசிக் குறிப்பு, இந்நூலாசிரியரை இதுவரை பார்த்து, பேசி அறிந்ததில்லை. இது இப்படைப்பின் சிறப்பு நோக்கியே!.

- இரா.காமராசு

Pin It