வேலூர் நண்பர்கள் வட்டம் மற்றும் தலைமுறைப் பேரவை இணைந்து, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மாலை வேலூர் கண்ணா ஓட்டல் அரங்கில் திரு.வெ.இறையன்பு எழுதி, ‘நியூ செஞ்சுரி’ வெளியிட்ட ‘என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!’ என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நூலை அறிமுகம் செய்து சிறப்புரை நிகழ்த்தியவர், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம். அவர் பேசுகையில், திரு இறையன்பு. இவர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம். எப்படிப் பேச வேண்டும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். ‘என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!’ என்பதற்கு அடுத்து ‘எங்கே பேசுவது!!!’ என்பதையும் தலைப்பில் சேர்த்து விடுங்கள்!” என்று நான் இறையன்புவிடம் சொன்னேன். இந்த ஒரு புத்தகம் 100 புத்தகங்களுக்குச் சமமானது; ஒரு நூலகத்துக்குச் சமமானது.” என்று குறிப்பிட்டார்.iraiyanbu book releaseமுன்னிலை வகித்துப் பேசிய ‘சன்பீம் குழுமப் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஹரிகோபால் பேசினார்: “இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம். ஆயிரம் பேருக்கு அதிகமான மாணவர்கள் பிஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான தகவல்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன. எஃகு போன்ற மொழி வளம், வார்த்தைகளைத் தேடிப் பிடித்துத் தந்திருக்கிற நேர்த்தி என்று இந்த நூல் பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. பிராணிகள் மொழி, எழுத்து, அச்சு, தகவல் பரிமாற்றம், வரலாறு, உரையாடல் முறை, மேடையில் சிறக்க வழி என்று ஏராளத் தலைப்புகள் நூலில் கொட்டிக் கிடக்கின்றன. மனித குலம் மாண்படைய வழிகாட்டும் நூல் என்றே இதைச் சொல்ல வேண்டும்!”

ஏற்புரை நிகழ்த்திய வெ. இறையன்பு உரை: ‘இப்போதெல்லாம் மின்னணு சாதனங்கள் வாயிலாகப் படிப்பது இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. அப்படிப் படிப்பது அவசரக் கோலத்தில் படிப்பதாக இருக்கிறது. அப்போதைக்கு படித்தவை நினைவிலிருந்து, வெளியே வந்ததும் மறந்து போய் விடுகிறது என்பது தான் உண்மை.

எனவே, புத்தகங்களை வாசிக்க வேண்டும். படித்தவற்றில் முக்கியமானவற்றை அடிக்கோடிட வேண்டும். சிலவற்றைத் தாளில் அல்லது நோட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பு எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும் என்பனவற்றை யெல்லாம் இளைஞர் சமுதாயத்திற்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இது மிகவும் முக்கியமான ஒன்று.

கடந்த 10 ஆண்டுகளில் மின்னணு சாதனம் மூலம் படித்தவர்களையும், அதற்கு முன்பு புத்தகம் மூலமாகப் படித்தவர்களையும் ஒப்பிடுகிறபோது ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். மின்னணு சாதனம் மூலம் நாம் படிக்கிறபோது, நம் கவனம் சிதறிக் கொண்டே இருக்கிறது. ஒன்றை நாம் ஆழமாகவும் அதிக நேரமும் வாசிக்க முடியாமல் போகிறது. அதிலும் மிடுக்குப் பேசியில் நாம் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு குறுஞ் செய்தி வந்தால் நம்முடைய கவனம் அந்தக் குறுந்தகவலின் மீது சென்று விடுகிறது. ஆனால், புத்தகத்தை வாசிக்கிறபோது புத்தகமே உலகமாகி விடுகிறது.

நாம் அந்த நேரத்தில் யாராவது பக்கத்தில் வந்து நம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும்கூட திரும்பிப் பார்க்காமல் புத்தகப் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறோம். புத்தகங்கள் வழியாக ஓர் மனிதன் அந்தப் புத்தக ஆசிரியரின் ஆன்மாவைத் தொட முடியும்.

மின்னணு சாதனம் மூலமாக படிக்கும்போது சிலவற்றை மட்டுமே வாசிக்கிறோம். பழத்தைச் சாப்பிடாமல் சாறைப் பருகுவது போல. கரும்பைச் சாப்பிடாமல், சாறைக் குடிப்பதைப் போல. கரும்பைச் சாப்பிடும்போதுதான் பற்கள் உறுதியாக இருக்கும். சாறைப் பருகுபவர்களுக்கு ஈறு கூட உறுதியாக இருக்காது.

புத்தகமாக வாசிக்கிறபோதுதான் நம்முடைய செயல்திறன் அதிகமாகும். நம்முடைய மொழிவளம் அதிகரிக்கும். இந்தக் காரணங்களால்தான் இளைஞர்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று சொல்லுவது நம் கடமையாகிறது.

‘என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!’ என்ற புத்தகத்தை நான் ஏன் எழுதினேன் என்று சொல்லியாக வேண்டும். ஒரு காலத்தில் உலக அரங்கில், நண்பர் திரு ஜி. வி. செல்வம் குறிப்பிட்ட மாதிரி, பேசுவது என்பது மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்று நேற்றல்ல; 2600 ஆண்டுகளுக்கு முன்பாக புத்தர், பேசுவதைத்தான் தன்னுடைய மார்க்கமாகக் கொண்டிருந்தார். பெரிய அரங்கத்திலே அமர்ந்து அவர் பேசவில்லை. மரத்தடியில் அமர்ந்து அவர் 3 மணி நேரம் ஆற்றிய ஓர் உரைக்கு ‘சிங்கத்தின் முழக்கம்’ என்ற பெயர் உண்டு. புத்தர் 10,000 சீடர்களுக்குத் தன் கருத்துகளையெல்லாம் கூறுவார்.

நடந்து செல்லும்போது, போகிற இடங்களில் தங்கி அங்கிருந்தவர்களிடமெல்லாம் பேசிப் பேசி அவர்களுடைய மனத்தை மாற்றி, வன்முறையற்ற, அன்பு மயமான சமுதாயத்தை, அவதூறு அற்ற, வேட்கை அற்றதோர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். பேச்சு என்பதைத் தன்னுடைய ஆயுதமாகக் கொண்ட முதல் மனிதராகப் புத்தர் திகழ்ந்தார். அவர் ஏற்படுத்தியது அசாதாரணமான ஒரு மாற்றம்.

அதற்குப் பிறகு கிரேக்கத்தில் சாக்ரடீஸ் என்ற ஓர் மாபெரும் அறிஞர் நடு வீதிகளில் நின்று இளைஞர்களிடம் பேசுவார். அவர் அந்த இளைஞர்களைப் பார்த்து ‘எனக்கு எல்லாம் தெரியும். நான் சொன்னதைக் கேட்டு விடுங்கள்’ என்று ஒருபோதும் பேசியதில்லை. அவர்களைப் பார்த்து, “இளைஞர்களே, நீங்கள் படித்தவர்கள். நான் படிக்காதவன். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் சொல்லுவதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை அதில் உண்மை இல்லையென்றால் அதை நிராகரியுங்கள். நீங்கள் மெத்தப் படித்தவர்கள். நான் படிக்காதவன் என்று தான் தன்னுடைய பேச்சைத் தொடங்குவார். அதைக் கேட்கிறவர்கள் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று கேட்க முற்படுவார்கள். அவருடைய பேச்சில் சொற்கள் யாவும் உண்மையாக வந்து விழுகிறபோது இரவெல்லாம் யோசித்துவிட்டு மறுநாள் அவர்கள் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு வருவார்கள். பெரும் கூட்டம் வீதிகளில் சாக்ரடீஸுக்காக உருவாகத் தொடங்கியது. அவரைச் சிறையில் அடைத்தார்கள்.

அவருடைய நண்பர்களும் சீடர்களும் சாக்ரடீஸ் சிறையிலிருந்து தப்பிப் போக உதவுவதாகச் சொன்னார்கள். ஆனால், சாக்ரடீஸ், “நான் எங்கு சென்றாலும் இப்படித்தான் பேசுவேன். வேறு எப்படியும் பேச முடியாது. எங்கு சென்றாலும் உண்மையைத்தான் பேசுவேன். அப்போது எனக்கு மரண தண்டனை கிடைக்கத்தான் செய்யும். அந்த மரணத்தை நான் இங்கேயே தழுவிக் கொள்கிறேன்” என்று மரணத்தை அணுஅணுவாக ரசித்துத் தழுவினார் சாக்ரடீஸ் என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அற்புதமான பேச்சாற்றலுக்கு சாக்ரடீஸ் ஓர் அசைக்க முடியாத முன்னோடி...”

இப்படி அற்புதமானதொரு உரையை நிகழ்த்தி அரங்கத்தை அசர வைத்தார்.

எழுத்தாக்கம்: ஜே.வி.நாதன்

Pin It