நான் அதிகாலை நடைபயணம் செய்யும்போது சந்திக்கும் மனிதர்களின் செயல்பாடுகளை வியந்து பார்ப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் என் சிந்தனையில் தோன்றுவது காந்தியின் கருத்துக்கள்தான். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் செய்ய வேண்டிய முதல் பணி என்ன என்று கேட்டபோது, நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு அவர்களின் சுயமரியாதையை மீட்டெடுத்துத் தருவது என்றார். ஒரு மனிதன் சக மனிதனால் மதிக்கப்படல் வேண்டும். அதற்கான சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு சமத்துவம், சமப்பார்வை பற்றி புரிந்தவர்களாக மக்களைத் தயாரிக்க வேண்டும். ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை. 75 ஆண்டுக்கால மக்களாட்சி, அதன் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான சமத்துவம், சுயமரியாதை என்பவனவற்றைக்கூட மக்கள் மத்தியில் நம்மால் பின்பற்ற வைக்க முடியவில்லை என்றால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எவரையும் சார்ந்து எதிர்பார்த்து வாழாமல் தன் உழைப்பை நம்பி வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது அவர்கள்மேல் எனக்கு ஒரு பெரும் மரியாதை ஏற்படும்.
ஆனால், அந்த மனிதர்களுக்கு சமூகத்தில் என்ன மரியாதை இருக்கிறது என்று யோசித்துப் பார்ப்பேன். காரணம், பணம் வைத்திருப்போர், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் என மேற்கூறிய அனைவரையும் சமூகம் மதிக்கிறது. இவர்கள் அனைவரும் எவ்வளவு அறமற்று செயல்பட்டாலும் இவர்களை மதிக்கத் தவறாது நம் சமூகம். அந்த மரியாதை என்பது உள் உணர்விலிருந்து வருகிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதுதான் உண்மை.இருந்தாலும் மதிப்பதுபோல் நடிக்கவாவது செய்வார்கள் மேற்கூறியவர்களைப் பார்க்கும்போது. காலை மூன்று மணிக்கு எழுந்து பால் கறந்து இருசக்கர வாகனங்களில் வீடுவீடாகச் சென்று பால் ஊற்றுபவர்களின் உழைப்பு, நான்கு வழிச்சாலையில் பனிபடர்ந்த புல்லை; தான் வளர்த்துவரும் மாடுகளுக்கு அறுத்துக்கொண்டிருக்கும் ஒரு வயதான முதியவர், இந்தப் பனியிலும் ஒரு சாக்கில் அடுப்பெரிக்க சுப்பிகளைப் பொறுக்கிக் கட்டிக் கொண்டு அந்த நான்கு வழிச்சாலையைக் கடப்பதற்கு பக்கத்தில் நிற்போரை, நான் சாலையைக் கடக்கலாமா என்று கேட்டு அவருடன் சாலையைக் கடக்கும் மூதாட்டி, அதிகாலை நகரத்திற்குச் சென்று காய்கறிகள் மொத்தமாக வாங்கி வீடுவீடாகத் தலையில் சுமந்து விற்கும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணி, முதல் நாள் மாலையே கிராமங்களுக்குள் சென்று அங்குப் பயிரிட்ட கீரையை வாங்கி இரவில் பனியில் துணிபோட்டு மூடிவைத்து மறுநாள் காலையில் தன் தலைச் சுமையாக வீடுவீடாகச் சென்று விற்கும் வயதான மூதாட்டி, தோட்டங்களில் அதிகாலை பூக்கள் வாங்கி வீடுவீடாகச் சென்று உதிரிப்பூக்கள் காய்வதற்குள் விற்கும் பெண்கள், அதிகாலை எழுந்து, குழந்தைகளுக்கு ஏதாவது ஓர் உணவு தயாரித்து வைத்துவிட்டு வீட்டு வேலை செய்ய ஓடிக் கொண்டிருக்கும் நடுத்தர வயதுப் பெண்கள், நிறுவனங்களுக்கு பாதுகாப்புப் பணிக்கும், வீதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்கும், கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கும் செல்ல, ஓட்டமும் நடையுமாய் ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும், நான்கு மணிக்கு எழுந்து தேனீர் கடையைத் திறந்து தேனீர் தயாரிக்க தூக்கத்தைக் கலைத்துவிட்டு கடைக்குள் பணியாற்றும் டீக்கடைக்காரர்கள், அதிகாலை வரும் புகை வண்டி மற்றும் பேருந்துகளிலிருந்து வரும் பயணிகளை அவரவர் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோக்காரர்கள், ஐந்து மணிக்கு எழுந்து காலை தன் அழகு நிலையத்தைத் திறந்து வைத்து முடிதிருத்தம் செய்யத் தயாராகும் அழகுக் கலைஞர்கள் என அனைவரையும் பார்க்கும்போது அவர்களின் அன்றாட உழைப்பு, அதை நம்பி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள். தங்கள் உழைப்பைத் தவிர வேறு சிந்தனையற்று செயல்படுவதைப் பார்க்கும்போது நாம் மதித்துப் போற்றப்பட வேண்டியவர்கள் இந்த உழைக்கும் மக்கள்தான். ஆனால், இவர்கள் யாருடைய மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. நாமும் அவர்களைப் போற்றுவதும் இல்லை, பாராட்டுவதும் இல்லை. அறமற்றுச் செயல்படும் மனிதர்கள் கையில் இருக்கும் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை. இதை எண்ணும்போது நாம் எவ்வளவு முரண்பாடுகளோடு அறமற்றுச் செயல்பட்டுக்கொண்டுள்ளோம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஓர் அரசியல்வாதியைவிட, ஓர் ஆசிரியரைவிட, ஓர் அதிகாரியைவிட, ஓர் அலுவலரைவிட, ஒரு பெருவணிகம் செய்பவரை விட, ஒரு மருத்துவரை விட, ஒரு பொறியியல் வல்லுநரைவிட எனக்கு மேற்கூறிய அனைவரும் மேலானவர்களாகவே தெரிகின்றார்கள். காரணம், நான் மேற்கூறிய சாதாரண மனிதர்களால் சமூகத்திற்கு எந்தவிதத் தீங்கும் கிடையாது. ஒரு மாடு மேய்க்கின்றவரோ அல்லது ஆடு மேய்க்கின்றவரோ இந்தப் புவிக்கு எந்தக் கெடுதலையும் விளைவிக்கவில்லை.
ஆனால், அவர்களின் பெருந்தன்மையை நாம் என்றும் போற்றியதில்லை. அவர்களுக்கு சமூகத்தில், அரசியலில், ஆட்சியில் நடக்கும் அவலங்கள் அனைத்தும் தெரியாமலில்லை. அவர்களுக்கு அந்த அவலங்களைப் பற்றி சிந்திக்க, செயல்பட நேரமில்லை. தங்களுடைய முழு நேரமும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவே படுகின்ற பாடு கொஞ்சமல்ல. அவர்களின் எல்லையற்ற பொறுமையில்தான் அறமற்றுச் செயல்படும் அத்தனை பிரிவினரும் அமைதியாக வாழ முடிகிறது. அவர்களின் மனக்குமுறல்களுக்குத் தீனிபோட நம்மிடம் கோவில்களை, சினிமாக் கொட்டகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருக்கின்றோம். எனவே, அவர்கள் அவைகளில் கரைந்துவிடுவார்கள். அரசு அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு திட்டங்கள் தீட்டி கோடிகளில் செயல்படுத்துவார்கள். மக்களின் வறுமையை ஒழிக்க செயல்பட்டவர்கள் வசதியுடன் வாழ்கின்றனர்.
ஆனால், வறுமை நீடிக்கின்றது. அவர்கள் அரசாங்கத்தைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ, ஆளுகை பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எதற்கும் கவலைப்படுவதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்கள் வாழ்வது வாய்க்கும் கைக்கும்தான். ஆனால், அவர்கள் சந்தைக்கு நுகர்வோராகத் தேவைப்படுகிறார்கள், அரசாங்கத்திற்கு பயனாளியாகத் தேவைப்படுகிறார்கள், கட்சிகளுக்குத் தொண்டர்களாகவும், வாக்காளர்களாகவும் தேவைப்படுகிறார்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு மனுதாரராகத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் அனைவரின் மேம்பாட்டுக்கு, இந்த ஏழை எளிய மக்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை வைத்து சுரண்டி வாழ்வோர் அரசின் தயவால் அதிகாரமிக்கவர்களாகப் பவனி வருகிறார்கள். ஏழை மக்களால் எந்தச் சமூக விழுமியமும் பாதிக்கவில்லை. சாதாரண மனிதர்களிடம் இருக்கும் நியாய உணர்வு, சமூகக் கரிசனம், மனிதப்பற்று இவைகளைப் பெரிய மனிதர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் மனிதர்களிடம் பார்க்க முடியவில்லை. அரசியலில் நுழைந்து மக்கள் பணத்தை கோடிகோடியாகக் கொள்ளையடித்துவிட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை இவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களின் மேன்மை நமக்குப் புலப்படும்.
மனித குலத்தைக் காக்க மருத்துவப்படிப்பு படித்த மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு நோய்களைத் தீர்க்கும் கடவுளாகச் செயல்படுவதற்குப் பதில் கோடிகளைக் குவிக்கும் இலக்கு வைத்து நோயாளிகளைக் கடனாளியாக்குவதும், அவர்களை தொடர் நோயாளிகளாகக் கட்டமைப்பதையும் செய்யும் அரக்கர்களாக மாறி பணம் பறிக்கும் ஈட்டிக்காரர்களாகச் செயல்படும் மருத்துவர்களுடன் இந்தச் சாதாரண மனிதர்களை ஒப்பிடும்போது, மெத்தப் படித்த மருத்துவரைவிட சாதாரண மனிதர்கள் பன்மடங்கு உயர்ந்தவராகவே தெரிகின்றார்கள்.
ஆசிரியப்பணி புனிதமானது, அந்தச் சேவையைச் செய்ய லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து பணியினை பள்ளிகளிலும் கல்லூரிகளில் பெற்றுக் கொடுத்த பணத்தை எடுக்க ஏதாவது ஒரு தொழிலையும் தொடங்கி வைத்து ஆசிரியப் பணி துணைப்பணியாக்கிக் கொண்டு செயல்படும் ஆசிரியர்கள், உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்விமான்கள் அலங்கரித்த துணைவேந்தர் பதவிகளைச் சந்தையில் விலை கூறி விற்றவர்கள், வாங்கியவர்கள், நீதி தேவனிடம் நீதி பெற்றுத் தரும் முகவர்களாகச் செயல்படும் வழக்கறிஞர்கள், நியாயம் அநியாயம் பற்றி எந்தப் பார்வையும் அற்று சத்தியத்தையும், தர்மத்தையும், நியாயத்தையும் என் வாதத்திறமையால் மிதித்துத் துவைத்து கொலைகாரனையும், கொள்ளைக்காரனையும் என்னால் பாதுகாத்துத் தரமுடியும் என மார்தட்டிச் செயல்பட்டு கோடிகளில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்கள், ஓர் அளவுக்குமேல் பணம் ஈட்டும் அனைவரும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்த அளவை எப்படி எல்லாம் மாற்றி அரசுக்குச் சேர வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நான் உங்களுக்கு உபாயம் தருகிறேன், உங்கள் வருமானக் கணக்கை என்னிடம் தாருங்கள் எனக்கூறி அரசுக்கு வரவேண்டிய வருவாயை இழக்க தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் அனைவருடனும் இந்த சாதாரண மக்களை ஒப்பிட்டால், மதிக்கத்தக்கவராகத் தெரிவது இந்த சாதாரண மனிதர்கள்தான்.
எனவே இன்று படித்தோர், ஆட்சியாளர், அதிகாரி, பெரும் தொழிலதிபர், கல்வியாளர், செல்வந்தர், பெருவணிகர் எனக்கூறும் மனிதர்களின் முறையற்ற செயல்களால்தான் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுக்காலம் மக்களாட்சியில் நாம் வாழ்ந்தும் 80 கோடி மக்களுக்கு பொது வினியோகத் திட்டத்தில் 2லு ஆண்டுக் காலமாக விலை இல்லா கோதுமையும், அரிசியும், பருப்பும் கொடுத்து உணவுப் பாதுகாப்புக் கொடுத்து பட்டினி இல்லா இந்தியாவாக வைத்துள்ளோம் என ஐ.நா. மன்றம் ஒன்றில் கூறுவது நமக்கு பெருமை தருவதுதானா? 9% பொருளாதாரம் வளர்ந்துவிட்டது, நாம் பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்துவிட்டோம் என்று கூறியபோது, இன்றைய பிரதமர் அன்று ஒரு கேள்வி கேட்டார், இத்தனை ஆண்டு மக்களாட்சியில் நாம் இருந்தும் ஆண்டுக்கு ரூ.45000 கோடியை செலவிட்டு பட்டினியோடு யாரும் படுக்கைக்குச் செல்லக்கூடாது எனக்கூறி மக்களை மண்வெட்ட ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது இந்தியாவின் சாதனை அல்ல வேதனை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்றார். அவரும் இத்திட்டத்தினை கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்துகின்றார். இந்த நிகழ்வுகள் நமக்குக் கூறும் செய்தி ஒன்றுதான். பொருளாதாரம் வளர்கின்றது. ஆனால், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை.
பலமுறை பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி திரும்பத்திரும்ப கேட்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளை இந்த அரசாங்கங்கள் செய்து கொடுத்துவிட்டனவா? என்பதுதான் அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்கு இன்றுவரை எந்தப் பிரதம அமைச்சரும் ஆம் செய்தாகிவிட்டது என்று கூறமுடியவில்லை. எவை அந்த அடிப்படை வசதி, குடியிருக்க ஓர் இடம் மற்றும் வீடு, மரியாதையுடன் வாழ ஒரு கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரத்திற்கான பாதுகாப்பு, கல்விக்கான பாதுகாப்பு, மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகள்தான்.
இவை அனைத்தும் சிறிய நாடுகளில் 3% பொருளாதார வளர்ச்சி அடைகின்ற நாடுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் செய்துகொடுத்து விட்டனவே. 8% பொருளாதார வளர்ச்சியில் நம்மால் ஏன் செய்துகொடுக்க முடியவில்லை. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்தது உண்மைதான். ஆனால் ஏழைகளின் வாழ்வு மேம்படவில்லையே! உணவு உற்பத்தி பெருகியது. பால் உற்பத்தி பெருகியது, குடோன்களில் உணவு தானியம் இருக்கிறது, பாதுகாப்பின்றி வீணாகிக்கொண்டிருக்கிறது, ஆனால். அது ஏழைகளுக்கு எட்டவில்லையே. பால் ஆண்டவனுக்கு குடம் குடமாக ஊற்றுகிறோம், ஊட்டச்சத்து பாதித்த குழந்தைகள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நம்மிடம்தானே இருக்கின்றார்கள்.
இந்தச் சூழலிலும் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி அன்றாடம் அலையும் மக்களின் வாழ்வு என்பது சிக்கலுக்கு உள்ளானபோதும், அமைதியாக உழைப்பதைச் சுதர்மமாக ஏற்று செயல்படுகின்றார்களே. ஆகையால்தான் காந்தி ஏழைகளுக்குத் தேவை சுயமரியாதை, அதையாவது செய்து தாருங்கள் என்றார். ஏழையாக வாழ்வது பாவமல்ல. ஆனால், அவர்கள் வறுமையில் வாடக்கூடாது, பசியுடன் இருக்கக்கூடாது, பிணியுடன் இருக்கக்கூடாது, அறியாமையில் இருக்கக்கூடாது. எனவே. முதலில் உழைக்கின்ற மனிதர்களைப் போற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் மரியாதையுடைய வாழ்வை வாழ வழிவகை செய்து தரவேண்டும். அவர்களைப் பணக்காரர்களாக ஆக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். அவர்களை அவமதிக்காது, உழைத்து வாழ்க்கை நடத்துவோரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றார். உண்மை, உழைப்பு, நேர்மை இவைகளை கடவுளாகச் சித்திரித்தார் மகாத்மா காந்தி. இந்தச் சிந்தனை எவரிடமும் இல்லை.
ஆனால், சாதாரண மனிதர்களிடம் இருக்கிறது. சில சாதாரண மனிதர்களின் பெருந்தன்மை நம்மை வியக்கவைக்கும். அந்த அளவுக்கு வாழ்கின்றார்கள். ஆனால், அதை நமக்கு பார்க்கத் தெரியவில்லை. இதைப் புரிந்துகொள்ள ஒரு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டால் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் பகிர்ந்துகொள்கிறேன்.
கிராமங்களில் பிணம் எரிக்கும் பணியைச் செய்வோர் பற்றி ஒரு சிறு ஆய்வு மேற்கொண்டபோது பிணம் புதைப்பதையும் எரியூட்டுவதையும் காலகாலமாக கிராமங்களில் செய்கின்றவர்களைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று கேட்டேன். அப்பொழுது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அதன் பிறகு “அதற்கு என்ன கூலி! அது ஒரு புனிதச் செயல்தானே, நாங்கள் செய்கின்றோம். அதற்கு ஏன் நாங்கள் கூலி கேட்க வேண்டும். அவர்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தருவார்கள். அதில் நாங்கள் எந்தப் பேரமும் பேசுவதில்லை. கொடுப்பதை நாங்கள் வாங்கிக்கொள்வோம்” என்றனர்.
அப்பொழுது நான் குறுக்கிட்டுக் கேட்டேன், அந்தப் பணி அவ்வளவு எளிதானதா? நீங்கள் என்ன வசதி படைத்தவர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் என்னை வியக்கவைத்தது. பிணம் எரியூட்டுபவர் பணி என்பது ஒரு தொடர்பணி, அது பதினாறு நாட்கள் செய்யும் பணி. அதில் முதல் இரண்டு நாள் அதாவது இறந்த நேரத்திலிருந்து சிதை எரியூட்டி, எரியூட்டப்பட்ட இடத்திலிருந்து எரிந்த சாம்பலை அள்ளுகின்றவரை பல பணிகள் எங்களுக்கு உண்டு. அத்தனையும் நாங்கள் செய்து கொடுத்து விடுவோம். அந்தச் சடங்குகள் அனைத்தும் நாங்கள் முன்னின்று நடத்தி விடுவோம். அந்தப் பணியை எந்த நாளிலும் வேண்டா வெறுப்பாகச் செய்தது கிடையாது. முறைப்படி, வழக்கப்படி, சாதிக்குத் தகுந்தவாறு செய்து கொடுத்துவிடுவோம்.
அது மட்டுமல்ல. எப்படி அந்தணர் கோவிலில் இறைவனுக்கு பூஜை புனஸ்காரம் செய்கின்றாரோ அதே போல் இறந்தவர்களுக்கு நாங்கள் செய்து விடுவோம். அதில் எவரிடமிருந்தும் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. கோவிலில் அர்ச்சகருக்குத் தருவது போல், எரியூட்டியதற்கும் புதைத்ததற்கும் பணம் தருவார்கள். அப்படியே நாங்கள் வாங்கிக் கொள்வோம்” என்றனர். “அங்கு துக்கம் விசாரிக்க வருகின்ற உறவினர்கள் பலர் எங்களுக்குப் பணம் தருவார்கள்; சிலர் மது வாங்கித் தருவார்கள். அவைகளை நாங்கள் அன்பின் அடையாளமாகப் பெற்றுக் கொள்வோம். எவ்வளவு சிரமம் இருந்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாது அந்தப் பணி எங்களுக்கு இறைவனால் விதிக்கப்பட்டது என்று எண்ணிச் செய்துவிடுவோம். அன்றைய நாள் கூலி என்று நாங்கள் பார்ப்பதும் கிடையாது, அதேபோல் ஒரு பிணத்திற்கு எவ்வளவு என்று பார்ப்பதும் கிடையாது.
இறந்த பிணத்தில் பணம் பார்ப்பது என்பது எவ்வளவு கீழ்மையானது, அதை எப்படி நாங்கள் செய்ய முடியும்?” என்று எனக்கு பதில் அளித்தார். அவர்களின் பெருந்தன்மையைப் பாராட்டினாலும், அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். அது என்ன கோவிலில் அர்ச்சனை செய்வது போன்ற எளிமையான பணியா என்றேன். “அது ஒரு சிக்கலான பணிதான்” என்று தன் சட்டையை கழற்றிக் காண்பித்தார். கையைக் காண்பித்தார். எங்குப் பார்த்தாலும் வடு. சில தீக்காயங்களாகவே இருந்தது. “பிணம் எரித்த பிறகு எங்கள் உடல்நிலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும். பிணம் எரிக்கும்போது எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் இந்தப் பணியினைச் செய்கின்றபோது என்னவெல்லாம் நடக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
அதைக் கேட்பதற்கும் நாதி இல்லை, அதற்கு தீர்வு காண்பதற்கும் யாருமில்லை. நாங்கள் என்ன சங்கம் வைத்து போராடியா எங்கள் கூலியை நிர்ணயம் செய்கின்றோம்” என்று விளக்கினார். அவரின் கதை முழுக்க ஒரு சோக வரலாறு. அதை ஒரு மிகப் பெரிய ஆய்வுக் கட்டுரையாக ஆராய்ச்சிச் சஞ்சிகையில் வெளியிட்டிருந்தேன். அதை அரசுக்கும் அனுப்பினேன். எந்த விவாதமும் அதில் இல்லை. சமீபத்தில் அதே ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்படி அங்குச் சென்றபோது, என்னுடன் அன்று உரையாடிய மனிதர்களில் ஒரு சிலரைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் மரித்துவிட்டதாகக் கூறினார்கள். ஏன் என்றேன். அவர்கள் “இந்த பெரும் தொற்றுக் காலத்தில் பிணங்களை எரியூட்டினார்கள் அப்பொழுது அவர்கள் எரியூட்டிய பிணங்களில் பல கோவிட் பாதிப்பால் கொண்டுவரப்பட்டவை.
இவர்களுக்கு எந்த உண்மையும் தெரியாது. இவர்கள் இறந்தபோதுதான் தெரிந்தது, இவர்களும் கோவிட்டினால் இறந்தார்கள் என்று. பிணத்தைக் கொண்டுவரும்போது எந்த உண்மையும் பிணத்தைப்பற்றி எங்களுக்குத் தெரிவிப்பது கிடையாது. நாங்களும் கேட்பது இல்லை, அவர்களும் கூறுவது இல்லை. எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இன்றி இந்தப் பணி செய்ததால் இவை நேர்ந்தது” என்று கூறினார்கள். அப்பொழுது இன்னொரு செய்தியையும் கூறினார்கள். “எங்கள் ஊரில் மட்டும் அல்ல, இதேபோல் பல ஊர்களிலும் இந்தத் தொழில் செய்வோர் பலர் இறந்துள்ளனர். இதைப் பற்றி கவலை கொள்ள எங்களுக்கு யார் இருக்கின்றார்கள்” என்று கேட்டபோது, காந்தி சொன்ன வரிகள் என் ஞாபகத்திற்கு வந்தது" என்று கடைக்கோடி மனிதனின் கேள்விக்கு பதில் கிடைக்கிறதோ அன்றுதான் இந்திய நாடு விடுதலை பெற்று சுதந்திரமாகச் செயல்படும் நாடு என்று நம்மை அழைத்துக்கொள்ள முடியும் என்றார். இன்று நாம் பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதத்தைத் தொடராமல் வாழ்வியல் பற்றி விவாதிக்க முயல வேண்டும். அப்படி விவாதிக்கும்போதும் மிக முக்கியமாக சுயமரியாதையைப் பாதுகாக்க விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.
- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)