குழந்தை பிறந்ததிலிருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பள்ளிப்படிப்பு பற்றிய ஆர்வத்தால் குழந்தைக்கேற்ற நல்ல பள்ளியைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளிக் கல்வி 6 வயது முடிந்த பிறகுதான் ஆரம்பிக்கிறது. அதற்கேற்றவாறு குழந்தையை ஆரம்பப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தயார்படுத்தும் நோக்கத்துடன் நர்சரி, கிண்டர் கார்டன், அங்கன்வாடி எனப் பல்வேறு அமைப்புகள் உருவாகி விட்டன. ஆரம்பப் பள்ளிக்கும் முன்னதான இந்த அமைப்புகளில் சேர்க்கக் குழந்தை தயாராக உள்ளதா என்பதைப் பற்றி விவாதிக்கும் கட்டுரை இது.
பெற்றோர்களின் கவலை
என் குழந்தைக்கு சாப்பிடத் தெரியாதே? டாய்லெட் போய்விட்டு ஒழுங்காகக் கழுவக்கூட தெரியாதே? சட்டையைப் போட்டுவிட்டு பட்டனை நான்தானே போட வேண்டும்? மற்றக் குழந்தைகள் என் குழந்தையை அடித்துவிடுவார்களோ? என் குழந்தை தொட்டால் சிணுங்கியாச்சே? புது இடத்தில் பயம் தொற்றி கொள்ளுமோ... என்ன செய்வது? போன்ற பலப்பல கேள்விகள் பெற்றோர்கள் மனதில் வந்து நிற்கும்.
குழந்தையைப் பள்ளியில் சேர்த்த பிறகு பெரும்பாலான பெற்றோர்களுக்கு, குழந்தையைப் பிரிந்து சில மணி நேரங்கள் தினமும் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்துவிடும். அதே நேரத்தில் குழந்தைக்கும் பெற்றோரை பிரிந்துவிட்டு வந்து விட்டோமே என்ற கவலை. பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் ஏற்படும் இந்தப் பயமும் கவலையும் கலந்த நிலையை SEPARATION ANXIETY என்று சொல்கிறோம்.இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. உங்கள் குழந்தை புதிய சூழலில் எப்படி மற்றக் குழந்தைகளுடன் பழகி, உரையாடி பயிலப்போகிறான் என்பதுதான் முக்கியம். மருத்துவரீதியில் உங்கள் குழந்தைகள் மூன்று வயதுக்கான உடல் மற்றும் மன வளர்ச்சியுடன் இருக்கிறார்களா என்று பாருங்கள். ஆரம் பகாலத்தில் குழந்தையின் மூளையின் வளர்ச்சி விகிதம் மிக வேகமாக இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் உடலும் மனமும் ஒரே சீராக வளருவதில்லை. குழந்தைகளுக்கு வீட்டிலும் சமூகத்திலும் கிடைக்கும் ஆரம்ப கால அனுபவங்களும் நுகர்வுகளும்தான் அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
நிறைய குழந்தைகள் போதுமான உடல், மன வளர்ச்சியில்லாமலும், சமூகத்தோடு சேர்ந்து பழகும் தன்மை இல்லாத நிலையிலும்தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுகிறார்கள். நாம் அம்மாதிரியான குழந்தைகளை முன்னரே அடையாளம் கண்டு அதற்கான மருத்துவத் தேவைகளைச் செய்த பிறகு பள்ளிக்கு அனுப்பினால் அந்தக் குழந்தையின் வாழ்க்கை வளம் பெறும்.
குழந்தைகளின் பொதுவான வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?
மூன்று வயது குழந்தைக்கு எனர்ஜி அளவில்லாமல் இருக்கும். எப்போதும் துறு துறுதான். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் ஓய்வும் தூக்கமும் தேவை. இவர்களுக்குத் தேவையில்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் மிக வேகமாக ஆறு வயது வரையிலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. தினமும் புதுப்புது நியூரான்களும் அவைகள் ஒன்றோடொன்று தொடர்பில் இருக்க டென்ட்ரைடிக் கனெக்ஷன்களும் ஏராளமாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த வயதில் மூளையும் எளிதில் கற்றுக்கொள்ளும்படியாக, ஈரமான சிமென்ட்டைப் போல, எளிதில் வார்த்தெடுக்கும்படி நெகிழித்தன்மையுடன் இருக்கிறது. மூன்று வயதில் இவர்களின் பொதுவான உடல், மன வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
இந்த வயது குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறும்போது, ஒரு படியில் ஒரு கால் மட்டும் வைத்து எளிதில் ஏறுவார்கள். ஆனால், இறங்கும்போது ஒவ்வொரு படியிலும் இரண்டு கால்களை வைத்துதான் இறங்குவார்கள். நான்கு வயது முடிந்தவர்கள், ஒரு கால் மட்டுமே வைத்து எளிதாக இறங்கும் அளவுக்கு முன்னேறி இருப்பார்கள். கடைசிப் படி வந்ததும் டக்கென்று குதித்துவிடுவார்கள். ஒரு காலில் நிற்கச் சொன்னால் முயற்சிப்பார்கள். மூன்று சக்கர சைக்கிள் எல்லாம் மிக எளிதாகக் கற்றுக் கொள்வார்கள். அம்மா சொல்லும் சிறு சிறு வேலைகளை ஆர்வமாகச் செய்வார்கள்.
பேப்பரில் வட்டம் போட்டுக் கொடுத்தால் அதன் மேலேயே பென்சிலால் போட்டுக் காண்பிப்பார்கள். மூன்று வயதில் பெருக்கல் குறியையும், நான்கு வயதில் சதுரத்தையும், ஐந்து வயதில் டயமண்டையும் போடத் தெரியும். தானாகவே சட்டையைப் போட்டுக் கொள்வார்கள். அப்பா அம்மாவை வரைகிறேன் என்று பேப்பரும் கிரையானையும் எடுத்துக்கொண்டு அவர்களின் உருவம் வரைய முயற்சிப்பார்கள். வீட்டில் கற்றுக்கொண்ட ஒரு சில நர்சரி பாடல்களைப் பாடுவார்கள். நீங்கள் பையனா பெண்ணா என்றால் சரியாகச் சொல்லுவார்கள்.
மேலே சொன்ன வளர்ச்சிப் படிகளை எல்லாம் உங்கள் குழந்தை தாண்டிவிட்டது என்றால், பள்ளிக்கூடம் போகத் தயார் என்றே சொல்லலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது குழந்தையின் உடல் அமைப்பும் செயல்பாடுகளும் மற்றக் குழந்தைகளைப்போல் இருந்தாலும் ஒரு சில வளர்ச்சிப் படிகளை பெற்றோர்கள் சற்று உற்று நோக்கினால்தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே அவைகளைப் பற்றியும் கீழே பார்ப்போம்.
குழந்தைக்கு காது நன்றாகக் கேட்கிறதா?
காது கேட்பது இயல்பாக இருந்தால்தான் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது பற்றி முடிவு எடுக்கலாம். காது மந்தமாகவோ அல்லது முழுதும் கேட்காத நிலையிலோ இருக்கும் குழந்தையை ரெகுலர் பள்ளியில் சேர்க்கும்போது, குழந்தை எதுவும் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும். குழந்தையின் வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்று விழிப்புடன் இருந்தால் குழந்தைக்குக் காது நன்றாகக் கேட்கிறதா என்று அறிந்துகொள்ள முடியும். ஒரு சில மருத்துவக் காரணங்களினால் காதுகளின் வெளிப்புற அமைப்பு நன்றாக இருந்தாலும் கேட்கும் திறன் குறைவாகவும் அல்லது திறனற்றும் இருக்கலாம்.
எப்போது செவித்திறன் பற்றி சந்தேகிப்பது?
பெற்றோர்களின் உடன் பிறந்தோர் அல்லது முன்னோர்கள் யாருக்கேனும் காது மந்தமாகவோ அல்லது பிறவியிலேயே வாய் பேசாதவர்களாகவோ, காது கேளாதவர்களாகவோ இருந்தால் பெற்றோர்களுக்கு அது ஒரு எச்சரிக்கை மணி. குழந்தை குறை மாதத்தில் பிறந்திருந்தாலோ அல்லது பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அதிகமான அளவு மஞ்சள் காமாலையினால் மூளை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலோ அவைகளும் எச்சரிக்கைகள்தான்.
முதல் மூன்று மாதங்களில், குழந்தைகள் சத்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் தூக்கிப் போடும். ஆறு வாரங்களில் குழந்தையிடம் தாய் பேச்சுக் கொடுக்கும்போது குழந்தை தாயின் முகம் பார்த்து சிரிக்க வேண்டும். ஒன்பது மாதத்தில் குழந்தைகள் தானாகவே சத்தம் போட்டு ஓசை எழுப்பிக் கொண்டு இருப்பார்கள். ஒரு வயது முடிந்தாலே ஒரு வார்த்தை பேசும் அளவுக்கு முன்னேறி இருப்பார்கள். இவ்வாறு உங்கள் குழந்தையிடம் நீங்கள் பார்க்கவில்லை என்றால் முதலில் காது கேட்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
இரண்டு வயதுக்குப் பிறகு நாம் குழந்தையிடம் பேச முயலும்போது, பதில் ஏதும் சொல்ல முயற்சி செய்யாமல் நம் முகத்தையே குழந்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் அல்லது எதிர்வினை ஏதும் இல்லாமல் இருக்கும்போதும் பெற்றோர்கள், உடன் மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும் தெளிவில்லாமல் பேசுவது, மிகவும் தாமதமாகப் பேச ஆரம்பித்தல், சொன்ன வேலையைச் செய்யாமல் முழிப்பது, தொலைக்காட்சிப் பெட்டிக்கு மிக அருகில் உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் போன்றவைகள் இருந்தாலும் நாம் குழந்தையின் செவித்திறன் பற்றி சந்தேகப்பட வேண்டும்.
குழந்தைக்குப் பார்வைக் கோளாறு உள்ளதா?
அடுத்து, குழந்தைக்கு உள்ள பார்வைக் கோளாறுகளும் எளிதில் வீட்டில் உள்ளவர்களால் கண்டுபிடிக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் இருந்தால் குழந்தையை ஒருமுறை கண் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு பள்ளியில் சேர்க்க வேண்டும்.
1. பிறந்த குழந்தையின் கருவிழியின் மத்தியில் வெள்ளையாக உள்ளதா?
2. நீங்கள் குழந்தையிடம் பேசும்போது உங்கள் முகம் பார்த்து பதில் பேசுவதில்லயா?
3. கண்களின் அமைப்பில், அசைவில் வித்தியாசம் உண்டா?
4. பொருள்களை மிக அருகில் வைத்துப் பார்க்கும் பழக்கம் உண்டா?
5. நீங்கள் சைகையால் சொல்லும் கட்டளையைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறதா?
6. உங்கள் பரம்பரையில், முன்னோர்களுக்கு மரபுவழி பார்வைக் கோளாறுகள் உண்டா?
மேற்கண்ட அறிகுறிகள் இல்லையென்றால் குழந்தை பள்ளிக்கூடம் போக ரெடி!
குழந்தையின் வாய், பற்கள் ஆரோக்கியமாக உள்ளதா?
உங்கள் குழந்தை சோர்வான முகத்துடன் சாப்பிட முடியாமல் பல் வலியால் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கும்போது பள்ளி சென்று படிப்பில் கவனம் செலுத்த முடியாது. குழந்தைகளின் வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்களால் உணவை மென்று சாப்பிடுவதற்கும், பேசவும், சிரிக்கவும், படிப்பில் கவனம் செலுத்தவும் முடியும். அவர்களும் மகிழ்ச்சியாக உணருவார்கள்.
மேலை நாடுகளில், பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் மூன்று வயதுக்குள் ஒரு முறையாவது பல் டாக்டரைப் பார்த்துவிடுகிறார்கள். அதுவே நம் நாட்டில் குழந்தைகள் முதல் முறையாகப் பல் மருத்துவரைப் பார்க்க ஆறிலிருந்து பதினொன்று வயது ஆகி விடுகிறது. முதல் பல் வந்தவுடனேயே பல் டாக்டரைப் பார்க்க வேண்டியதுதான் முறை. பிறகு, வருடத்திற்கு இரண்டு முறை பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் பல் மற்றும் வாய் சம்பந்தமான வியாதிகளைத் தவிர்த்து விடலாம். பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கும் முன்னர் ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகு அனுப்ப வேண்டும்.
பற்கள் முளைக்க ஆரம்பித்த பிறகு பாட்டிலில் பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். குழந்தை தூங்கப் போகும்போது வாயில் பால் பாட்டிலுடன் இருந்தால், பல் சொத்தை மிக எளிதில் வந்துவிடும். கை சூப்புதல், வாயில் எப்போதும் ரப்பர் சூப்பானுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் நாளடைவில் பல் வரிசையும் முக அமைப்பும் மாறிவிடும். சிறு குழந்தைகள் இயல்பாகவே ஒவ்வொரு பொருளையும் வாயில் வைத்து அறியும் பழக்கம் உள்ளவர்கள். நாமும் நம் பங்குக்கு இனிப்புகளும் பற்களில் ஒட்டிக்கொள்ளும் தின்பண்டங்களும் வாங்கிக் கொடுக்கிறோம். அதன் தொடர்ச்சியாக வாய், மற்றும் பற்களில் கிருமிகள் சேர்ந்து பல் சொத்தையாவதற்கு வழி வகுக்கிறது.
குழந்தைக்கு வாய் மற்றும் பற்களைப் பராமரிப்பது பற்றி பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல் விளக்குதல், வாய் கொப்பளித்துத் துப்புதல், வாயில் விரல் போடாமல் இருத்தல், அடிக்கடி கைகழுவும் பழக்கம் என கொஞ்சம் அடிப்படைச் சுகாதாரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். புளோரைடு கலந்த பற்பசை உபயோகித்து, முதல் பல் வந்ததிலிருந்தே பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையும் இரவு தூங்கப்போவதற்கு முன்னரும் பல் தேய்க்கச் சொல்ல வேண்டும்.
எழுத்து மயக்கம் அல்லது டிஸ்லெக்சியா (DYSLEXIA) உள்ளதா?
இது ஒரு பிறவியிலேயே வரும் கற்றல் குறைபாடு என்று சொல்லலாம். மன வளர்ச்சி குறைபாடு என்று கொள்ளுதல் கூடாது. இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் படிப்பைத் தவிர மற்றவைகளில் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் புத்திக் கூர்மை அனைவரும் பாராட்டும்படி இருக்கும்.
இந்த டிஸ்லெக்சியா என்று சொல்லப்படும் எழுத்து மயக்கம் உள்ள குழந்தைகள், ஒவ்வொரு எழுத்தின் வரி வடிவத்தையும் அதற்கான ஒலி வடிவத்தையும் புரிந்துகொள்ள முடியாது. இவர்களுக்கு இந்த எழுத்துக்கு இந்த மாதிரி ஒலி எழுப்ப வேண்டும் என்ற அடிப்படைக் கருத்து தெரியாது. அதனால் மொழி கற்றுக்கொள்வதில் நிறைய தடுமாற்றம், எழுத்துக்களைப் புரிந்துகொள்ள முடியாது. எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாது. எழுத்துக்களையும் எண்களையும் இடம், வலம் மாற்றி எழுதுவார்கள். ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் கோர்வையாக எழுதத் தெரியாது. கூடிய மட்டும் மனப்பாடம் செய்தே சமாளிப்பார்கள். எழுதச் சொன்னால் தடுமாற்றம்தான்.
இந்தக் குழந்தைகள் பேச ஆரம்பிப்பது மிகவும் தாமதமாக இருக்கும். அவர்களின் வார்த்தை வீச்சு, மற்றும் பேசும் முறை முதிர்ச்சியில்லாமல் இருக்கும். மிகவும் படபடப்புடன், எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தாமல், அமைதியில்லாமல் இருப்பார்கள். பெற்றோர்கள் சொல்லும்படி நடக்கவோ, அவர்களைப் பின்பற்றிச் செல்லவோகூட முடியாது. சிறு சிறு வேலைகளைக்கூட புரிந்துகொண்டு செய்ய முடியாமல் தடுமாற்றம் காணப்படும். நுணுக்கமான வேலைகளான எழுதுதல், படம் வரைதல் முதலியனவற்றில் தடுமாற்றம் அதிகமாக இருக்கும். எந்த வேலையிலும் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இருக்காது.
பள்ளியில் சேர்ந்த பிறகுதான் மிகுந்த சிரமப் படுவார்கள். இவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே கண்டுபிடித்து, தக்க மருத்துவ ஆலோசனைகள் மூலம் அவர்களுக்கென்று சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், பயிற்சிகள் என்றுதான் பயணிக்க முடியும். இவர்களின் ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, ஊக்குவித்துக்கொண்டிருந்தால் விளையாட்டு, கலை, ஓவியம், நடனம், பாட்டு என்று மற்ற துறைகளில் சிறந்து விளங்க ஆரம்பித்து விடுவார்கள்.
பள்ளிக்கூடம் போக ரெடியாகி விட்டார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
குழந்தைகளின் பொதுவான உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் இயல்பாக உள்ளதா?
ஐம்புலன்களின் திறன்களும் சரியாக உள்ளதா?
வீட்டில் உள்ளவர்களிடமும், வெளியில் உள்ளவர்களிடமும் கூச்சமின்றி பேசத் தெரியுமா?
அடிப்படை சுகாதாரமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்களா?.
இவைகளுடன் பெற்றோர்களின் முன்னெச்சரிக்கைச் செயல்களும் இருக்கும்போது குழந்தை பள்ளி செல்லத் தயாராகி விட்டது என்றே சொல்லலாம்!
- மருத்துவர் ப.வைத்திலிங்கம்