சங்க இலக்கியங்களில் தமிழர் சிந்தையைக் கவர்ந்த இலக்கியம் அகநானூறு. அகமாந்தர்களின் கூற்றுகளின் எண்ணிக்கை குறித்துத் தொல்காப்பியம் கூறுவதாக இரா. ஜெகதீசன் பின்வரும் பட்டியலை எடுத்துக்காட்டுகிறார்.
1. தலைவன் - 85
2. தலைவி - 72
3. தோழி - 61
4. நற்றாய் - 23
5. செவிலி - 17
6. கண்டோர் - 07
7. பரத்தை - 08
8. பார்ப்பான் - 09
9. கூத்தர் - 10
10. பாணர் - 02
11. அறிவர் - 02
12. இளையோர் - 07
13. வாயில்கள் - 02
இந்த அகப்பொருள் வரையறையின்படி அகநானூற்றில் தலைவன் முதலியோர் பேசிய இடங்களையும் ஜெகதீசன் பட்டியலிடுகிறார். அதன்படி அகநானூற்றில் கூற்று நிகழ்த்தும் மாந்தர்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்படுகிறது:
1. தலைவன் - 103
2. தலைவி - 98
3. தோழி - 160
4. நற்றாய் - 07
5. செவிலி - 19
6. பரத்தை - 03
7. பாணன் - 01
சங்க இலக்கியக் களவுப் பாடல்கள் 882. அவற்றில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர் கூட்டம் மூன்றும் சேர்த்து 40 பாடல்கள் உள்ளன. ஏனைய 842 பாடல்களும் பாங்கியற் கூட்டம் எனப்படும் தோழிக் கூற்றாகவே அமைகின்றன. அப்படியென்றால், அந்த 842 பெண் பேசும் கவிதைகளில் ஆண்கவிஞர்கள் எத்தனை பேர் பாடியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. சங்கப் பெண் கவிஞர் பாடிய அகப் பாடல்களாக ஏறத்தாழ 94 பாடல்கள் உள்ளன. அவற்றில் 22 பாடல்கள் அகநானூற்றில் உள்ளன. 94 பாடல்களில் தோழிக் கூற்றுப் பாடல்களாக 80 பாடல்கள் இருத்தல் கூடும் எனில் 842 தோழிக் கூற்றுப் பாடல்களில் ஏறத்தாழ 760க்கும் மேற்பட்ட பாடல்களை ஆண் கவிஞர்களே பாடியிருக்கின்றனர் எனத் தெரிகிறது. அகநானூற்றைப் பொருத்தஅளவில் ஒக்கூர் மாசாத்தியார், பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்ற இருவரைத் தவிர ஏனைய பெண்கள் ஆணின் இடத்தில் நின்று ஆண்மொழி பேசும் பாடல்களைச் செய்யவில்லை என்கிறபோது, ஆண் கவிஞர்கள் பெண்ணின் மொழியை உள்வாங்கிப் பேசுவது ஏன்? இன்றைய புதுக்கவிதையில் ஆண் கவிஞர்கள் பெரும்பாலும் ஆண்மொழியே பேசுகின்றனர். பெண்கவிஞர்கள் பெண்மொழியே பேசுகின்றனர். என்னும்போது சங்கக் கவிதைகளில் மட்டும் ஆண் கவிஞர்கள் பெண்போல பாடுவதன் நோக்கத்தைத் தனியே ஆராய வேண்டும்.
அகநானூற்றில் ஆண்மொழி
அகநானூற்றில் 103 இடங்களில் ஆண் பேசுகிறான். அவனது பேச்சுகளை 101 இடங்களில் ஆண் கவிஞர்களே பதிவு செய்கிறார்கள். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர் கூட்டம், பாங்கியர் கூட்டம், சேட்படை, இருவகைக் குறிகள், உடன்போக்கு, மலிபு, ஊடல், பிரிவிடம், இடைச்சுரத்து அழுங்கல், வினையிடம், வினைமுடித்து மீளல், இனிதிருத்தல் எனக் காட்டப்படும் அகத்துறைகள் பலவற்றில் ஆண் பேசுகிறான். இவற்றைக் கணக்கில் கொண்டு அவன் பேசும் இடங்களை வகைப்படுத்தினால் அவனது ஆண்மொழிச் செயல்பாடு என்பன:
1. அழகிய உவமைகளைக் கூறுதல்,
2. நல்ல நயமான தொடர்களைக் கூறுதல்,
3. வரலாற்றுச் செய்திகளைப் பாடலுக்குள் கொண்டுவருதல்,
4. அன்றாட பழக்க வழக்கங்கள், பண்பாட்டுத் தொடர்பான நிகழ்வுகளைப் பதிவு செய்தல்,
5. செல்லும் வழியின் கடுமையைக் காட்சிப் படிமமாக விவரித்தல்.
இப்படியாகத் தலைவனின் ஆண்மொழி அமைகிறது. இவை உண்மையில் தலைவனின் மொழிகளே அல்ல. தலைவனை உளப்படுத்தி ஆண் கவிஞர்கள் பேசும் மொழிகளே அனைத்தும் என்று மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் ஆண் உணர்வுகளையும் ஆண் கவிஞர்களே பாடுகிறார்கள். பெண் உணர்வுகளையும் ஆண் கவிஞர்களே பெரும்பாலும் பாடுகிறார்கள். பெண் கவிஞர்கள் ஓரிரு பாடல்களைத் தவிர பெரும்பாலும் பெண் உணர்வுகளை மையப்படுத்தியே பாடுகிறார்கள். ஆண் கவிஞர்கள் போலவே பெண் உணர்வுகளைப் பாடும் பெண் கவிஞர்களும் உவமைகளைக் கூறுகிறார்கள்; அழகிய தொடர்களை எழுதுகிறார்கள்; வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்கிறார்கள்; பண்பாட்டுச் செய்திகளைப் பதிவு செய்கிறார்கள் என்றாலும் அடிப்படையில் அவை மிகப் பெரிய வேறுபாடுகளோடு இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.
உவமைகளும் தொடர்களும்
அகநானூற்றில் உவமைகள் என்பதைச் சிறு கட்டுக்குள் அடக்கமுடியாது. 'உப்புச் சிறை நில்லா வெள்ளம்' போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி,
நல்கினள்” (அகம் 208)
என்ற உவமை ஒரு சான்று. இப்பாடலுக்குப் பரணர் காட்டும் அகுதை நன்னன் போர்க்குறித்த வரலாற்றுக் காட்சி விவரணையும் மிக அழகானவை. வெள்ளம் வரும்போது உப்பால் கரை கட்டமுடியாது என்ற இந்தக் கருத்தினைச் சங்க இலக்கியத்தில் அகம் 206 இல் மதுரை மருதன் இளநாகனாரும் காட்டுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். காமம் பற்றிய ஆணின் உணர்வுகளை வெளிப்படுத்த சம காலத்தில் ஒரே உவமையைப் பலர் சிந்தித்திருக்கிறார்கள் என்றே இதைக் கொள்ள வேண்டும். உவமைகளைப் போலவே தொடர்களும் மிகவும் புகழ் பெற்றவை:
நெல்லின் நேரே வெண்கல் உப்பு (அகம் 140)
வண்டுபடு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி (அகம் 262)
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய (அகம் 124)
இப்படியாக நூற்றுக்கணக்கில் அகநானூற்றிலிருந்து நல்ல தொடர்களை எடுக்க முடியும். ஆண் கவிஞர்களின் உவமையும் தொடர்களும் அடிப்படையில் வலிமையையும் அச்சத்தையும் பேணுபவையாக இருக்கின்றன. பெண் கவிஞர்களின் பெண்மொழிகள் மென்மையும் வலியையும் கொண்ட உணர்வுகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
வரலாறு
அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்துத் தரும் பணியை ஏராளமான ஆசிரியர்கள் செய்துள்ளார்கள். ஆண்கவிஞர்கள் காட்டும் வரலாற்றுச் செய்திகள், பெண் கவிஞர்கள் காட்டும் வரலாற்றுச் செய்திகள் என இரண்டாகப் பிரித்து ஆராய்ந்து பார்க்க நிறைய இடமுள்ளன. மேலோட்டமான பார்வையில் ஆண் கவிஞர்கள் வரலாற்றைச் சொல்வதில் அதிக விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். ஆண் கவிஞர்கள் அளவிற்குப் பெண் கவிஞர்கள் வரலாற்றுச் செய்தியோடு உவமை கூறுவது மிகக் குறைவாகக் காணப்படுகிறது. அகப்பாடல்களில் புறப்பொருள் கூறும் உத்தி என்பது ஆண்மொழியின் தன்மையாகவும், அதை உள்வாங்கிப் போலச் செய்தல் என்பது பெண்மொழியின் தன்மையாகவும் அகநானூற்றைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
அகம்196
சமைக்கும் பானையைத் தொட்டு சூளு உரைப்பது பெண்ணுக்குரிய இயல்பாக அக்காலத்தில் இருத்தல் வேண்டும். ஆனால் இக்கவிதை பெண் கூறும் சூள் மொழியை நகைச்சுவையாக அல்லது ஊடல் இன்பமாகத்தான் பதிவு செய்கிறது. அந்தச் சூள் மொழியைத் தொடர்ந்து பதிவு செய்வது எல்லாம் ஆணின் அடிப்படை மகிழ்வு உணர்வாகும். அன்னி மிஞிலி என்பவளுக்காகத் திதியன் செய்த வீரச்செயலைப் பதிவு செய்து மகிழ்வது ஒன்றே இப்பாடலைப் பாடிய பரணரின் மனவோட்டமாக இருக்க வேண்டும்.
மேல் பெண் பேசுவதுபோல பதிவு செய்த அதே வரலாற்று நிகழ்வை, ஆண்மொழியிலும் பதிவு செய்கிறார் பரணர். ஒரே வரலாற்று நிகழ்வு ஒரு கவிஞரால் பெண் பேசுவதுபோலவும், ஆண் பேசுவதுபோல பதிவாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் (அகம் 262)
ஒரு பெண்ணை அடைந்து இன்பம் கொண்ட ஆண் ஒருவனின் இன்ப அளவு என்பது, அன்னிமிஞிலி தந்தையை இழந்து, திதியன் மூலமாகக் கோசர்களைக் கொன்று பழிதீர்த்தபின் கோபம் அடங்கிய நிகழ்வோடு ஒப்பிடப்படுகிறது. அன்னிமிஞிலியின் கோபம் பெண்மொழியின் சூளாகவும் (சத்தியமாகவும்), அவர் கோபம் தீர்ந்த நிகழ்வு ஆண் இன்பம் பெற்று காம தாகம் தீர்ந்ததோடும் ஒப்புமை காட்டப்படுகிறது. எனில், பரணரது நோக்கம் பெண்மொழி பேசுவது இல்லை. இரண்டு இடங்களிலும் அவர் ஆணாக இருந்து ஆண்மொழியில்தான் பேசுகிறார். வீரச் செயலைப் புனைவாக்கும் ஆணின் மொழியாகவே சங்க இலக்கிய ஆண்கவிஞர்களின் பெண் கூற்றுப்பாடல்கள் அமைகின்றன.
பரணரது அகநானூறு 208 ஆம் பாடலும் இதேபோல ஆண் காம தாகம் தீரும் உணர்வை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிடுவதைக் காணமுடிகிறது. பரணரைப் போலவே நக்கீரரும் வரலாற்று நிகழ்வைப் பாடுகிறார். இதில் கொடித் தேர்ச் செழியன் முசிறையை வீழ்த்தியபோது எதிரிகள் வருந்திய நிகழ்வோடு காதலியின் நிலை ஒப்பிடப்படுகிறது (அகம் 57).
ஆண்கவிஞர்கள் பெண் கூற்றுக்களாகப் பாடும்போது புனைவு படுத்துவதில்தான் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். அந்தப் புனைவில் இயல்பாகவோ அல்லது வலிந்தோ ஆணின் வீரம், கொடை முதலியவைகளைப் பதிவு செய்கிறார்கள். ஓர் ஆண் கவிஞர், ஆண்மொழியில் பேசும்போது பெண்ணிடம் தனக்குக் கிடைத்த மகிழ்வைப் பேசுகிறார். அவை வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்வதாகவும் பண்பாட்டு நிகழ்வுகளைப் பதிவு செய்வதாகவும் இருக்கின்றன.
வழியின் கடுமை
அகநானூற்றில் ஆண்மொழியின் உச்சத்தைக் காட்டும் பகுதிகளாகப் பாலைநிலப் பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலுமான பாலைத்திணைப் பாடல்களைப் பகுத்துப் பார்க்கும்போது பின்வரும் பொருண்மைகளை அதிகமாகப் பார்க்க முடிகின்றன:
1. பாலை நில வழியில் நிலவும் கோடை காலத்தின் கொடுமை
2. அஃறிணை உயிர்கள்கூட படும் துயரங்கள்
3. வறண்ட நிலத்தின் காட்சிகள்
4. காதலி குறித்த ஏக்கங்கள்
5. மரணத்தை அருகில் காணும் நிகழ்வுகள் தரும் அச்சங்கள்
6. ஆறலைக் கள்வர்கள் தரும் அச்சங்கள்; அவர்களது கொடிய வாழ்நிலை
7. உமணர் படும் துன்பங்கள்
8. வறுமை நிறைந்த ஊர்கள்
9. மக்கள் புலம்பெயர்ந்துபோனபின்பு சிதலனமான ஊர்கள்
10. அச்சம் தரும் வழிநடைப் பயணங்கள்
11. வறிய வாழ்க்கை
12. போரால் அழிந்த ஊர்கள்
இப்படியான அச்சம்தரும் கொடிய வறுமையான நிகழ்வுகளையும், அதற்கிடையே பொருளின் இன்றியமையாமையைத் தன் நெஞ்சிற்குச் சொல்லிக்கொண்டு தலைவன் பொருளீட்டச் செய்யும் பயணங்களையும் சங்ககாலப் பாலைத்திணைக் காட்சிகளில் மிக அதிகம் காணமுடிகிறது. ஓர் ஆண் ஏன் இந்தக் கடுமையான வழியிடைக் காட்சிகளை விவரிக்க வேண்டும்? அவன் யாரிடம் விவரிக்கிறான்? சங்க இலக்கியத் துறைக் குறிப்புகள் எல்லாம் பொருள் கடைகூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் கூறியதாகப் பேசுகின்றன. தலைவியிடம் பாலைநிலக் காட்சிகளைத் தலைவன் விவரிப்பதாகவும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. உண்மையில் தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறுவது, தலைவியிடம் தலைவன் கூறுவது இரண்டுமே பெண்ணிடம் கூறுவதுதான். பாடல் எழுதும் ஆண் மனம் இயல்பாகவே அச்சம் நிறைந்த பயணங்களைக் கடக்கும் ஆணின் செயலைச் சாகச மனத்தோடும், அதை ஆச்சர்யமாகக் கேட்கும் பார்வையாளர்களைப் பெண்களாகவும் நினைத்துக்கொண்டு பாடிய பாடல்களே பாலை நிலப் பாடல்களாக இருக்கின்றன(அகம் 57 - நக்கீரர்).
இதுபோல அகம் 191, 245, 327, 377, 77, 167 ஆகிய பாடல்கள் எல்லாம் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியவையாக வருணிக்கப்படுகின்றன. வழியின் கடுமை, வறண்ட நிலம், அச்சம் தரும் விலங்குகள், மயங்கிய பறவைகள் எனப் பாலையை வருணித்து இறுதியாகத் தன் நெஞ்சிடம் அப்படியான வழியில் பொருளீட்டப் போகிறேன் எனச் சொல்வதோ அல்லது அந்த வழியில் பொருளீட்டப் போகிறாயா என நெஞ்சிடம் கேட்பதோ பெண்ணிடம் ஆண் பேசும் மொழிகளே. "நான் உனக்காக எவ்வளவு துன்பப்படுகிறேன் தெரியுமா?” எனக் காட்டிக்கொள்ளும் மொழியின் வெளிப்பாடுகளே. ஆனால் இதேபோன்ற பாலை நிலத்தின் கடுமையை வருணிக்கும் பெண் கவிஞர் ஔவையார் பாடல்களின் தன்மை வேறுபட்டு இருக்கின்றது.
நெஞ்சிடம் பாலை நிலத்தின் கடுமையைச் சொல்வதுபோலவே தலைவியிடமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாலை நிலத்தின் கடுமையைச் சொல்லும் பாடல்களும் இருக்கின்றன. அகம் 335, 39, 29 ஆகியவை. அகநானூற்றுப் பாடல் 335-இல் தலைவியும் உடன் வருகிறேன் எனச் சொல்லியிருக்கக் கூடும். அவளை அழைத்துச் செல்வது சாத்தியமற்ற ஒன்று என்றாலும் அவளை அழைத்துச் செல்லப்போவதில்லை என்று சொல்லாமல் “பனை நுங்கு போன்ற பற்களைப் பெற்றவளே உன்னை அழைத்துச் சென்றால் சுகமாக இருக்கும்” என உண்மைக்கு மாறான மொழியை அவளிடம் கூறுகிறான். அகநானூற்றுப் பாடல் 121 முதன்மையான கவனத்தைப் பெறுகிறது. அங்கே தலைவி ஒருத்தி “நானும் உன்னுடன் வருகிறேன்” எனச் சொல்கிறாள். அதைக் கேட்ட தலைவன் "நாம் நகை உடையம்” என்கிறான். அந்த ஆண்மொழி என்பது பெண்ணுக்கு அந்த வழிநடைப் பயணத்தில் துன்பம் நேரும் என்பதைத் தெரிவிப்பதைவிட, “பெண்ணெல்லாம் அதைச் செய்யமுடியுமா?" என்ற தொனிதான் அவன் சிரிப்பில் தெரிகிறது.
ஆண்மொழி இவ்வாறு இருக்க இனி, பாலைத்திணை உள்ளிட்ட ஐந்திணைகளில் பெண் கவிஞர்களின் பெண் மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
சங்க இலக்கியத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் பாடல் புனைந்திருப்பதாக அறிய முடிகிறது. அவர்களில்
1. அச்சியத்தை மகள் நாகையார் - 352
2. ஔவையார் 11. 147, 273, 303
3. அள்ளூர் நன்முல்லை - 46
4. ஒக்கூர் மாசாத்தியார் – 324, 384
5. கழார் கீரன் எயிற்றியார் -163, 217,235, 294
6. குமிழிநாழல் நாப்பசலையார் - 160
7. நல்வெள்ளியார் - 32
8. பொதும்பில் புல்லாளங்கண்ணியார் - 154
9. போந்தலைப் பசலையார் - 110
10. முள்ளியூர் பூதியார் - 173
11. வெள்ளி வீதியார் 45, 362
12. வெறிபாடிய காமக்கண்ணியர் 22, 98
ஆகிய பன்னிரண்டு பெண்களின் 21 பாடல்கள் பெண்கவிஞர்கள் பாடிய அகநானூற்றுப் பாடல்களாக இருக்கின்றன. ஆண்கவிஞர்களைப் போலவே வரலாற்றைப் பேசுதல், உவமைகளையும் தொடர்களையும் மனங்கவரும்படி கையாளுதல், நிலக் காட்சிகளை வருணித்தல் எனப் பன்முகத் தன்மையோடு இயங்குகிறார்கள். நானூறு பாடல்களில் பெண்கவிஞர்கள் பாடிய 21 பாடல்கள் என்பது மிகவும் குறைவுதான். அதிலும் ஒக்கூர் மாசாத்தியார், பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்ற இரண்டு பெண் கவிஞர்கள் ஆண் மொழியில் பாடல் புனைந்துள்ளார்கள். இவற்றை நீக்கிவிட்டால், வெறும் பத்தொன்பது பாடல்கள்தான் பெண் கவிஞர்கள் எழுதிய பெண் மொழிப் பாடல்களாக இருக்கின்றன. ஆனால் அந்தப் பத்தொன்பது பாடல்களில்,
1. வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுதல்
2. நயமான உவமைத் தொடர்களைப் பயன்படுத்தல்
3. பழமொழிகளைப் பயன்படுத்தல்
4. மனித உறவின் வலிமையைப் பாடுதல்
5. பெண்ணுக்கு நடந்த துன்ப நிகழ்வைப் பகிர்தல்
6. தன் ஊரைப் பெருமைப்படுத்தல்
எனப் பல்வேறு சிறப்புகளைப் பெண்மொழியில் பாடியோர் படைத்துச் செல்கிறார்கள். பாலை நில வருணைனையை பெண்மீதான அச்சமாக ஆண் கவிஞர்கள் பாடியிருக்கும்போது, அதே பாலையை ஔவையார் வேறுவகையில் பதிவு செய்கிறார்.
1. அவர் என்னைப் பிரிந்து பாலை நிலத்துவழிச் செல்கிறார். செல்லும்போது என்னையும் அழைத்துச் சென்றிருக்கலாம். அப்படி அழைத்துச் சென்றிருந்தால், அவருக்கு முயங்கும் இன்பத்தைத் தந்திருப்பேன்
மெய்புகுன அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே (அகம் 11)
2. தண்ணீரின்றி அழியும் குளத்திலிருக்கும் மீன்களை தண்ணீருள்ள இன்னொரு குளத்தில் விட்டதுபோல என்னை அவர் இருக்கும் இடத்தில் கொண்டுசேர்த்தால் நன்றாக இருக்கும்
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே (அகம் 303)
3. வெள்ளிவீதி என்பவள் தன் கணவனைத் தேடிச் சென்றதுபோல நானும் என் கணவனைத் தேடிச் செல்லப் போகிறேன்
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே (அகம் 147)
என்று ஔவையார் பாடுவதில் புனைவு தாண்டிய பெண்ணின் உணர்வு பதிவாவதைக் காணமுடிகிறது. இதுதான் ஆண்மொழிக்கும் பெண்மொழிக்கும் உள்ள வேறுபாடு. பாலைநிலத்துக் கடுமையான காட்சியைக் காட்டும்போதுகூட (அகம் 147), பெண்புலி மூன்று குட்டிகளை ஈன்று பசியோடு இருக்க, தன் துணைக்கும் குருளைகளுக்கும் உணவிட வேண்டி மான் குரல் வரும் திசையை ஓர்ந்து இருக்கும் புலியைப் பாடுகிறார் ஔவையார். பாலை நில வருணனை உண்மையில் இப்போதுதான் பயமிகுந்த ஒன்றாக மாறுகிறது. பொருள் தேடிச் செல்லும் மனிதருக்கு இருக்கும் அறம், காட்டில் வசிக்கும் புலிக்கும் இருக்கிறது என்று சொல்லி அச்ச உணர்வை பெண்மொழி அறமாக்குகிறது.
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினை இலனே
எனப் பெண் மொழியில் ஏக்கத்தைக் காட்டுகிறார் ஔவை. கணவன் இல்லாது வாழ ஏதாவது மருந்து இருந்தால் அதைத் தின்று வாழ்ந்துவிடுவேன், ஆனால் அப்படி ஒன்று இல்லாதபோது நான் எப்படி வாழ முடியும் எனப் பெண்மொழி கேட்பதுபோல் பெண் குரலில் பாடும் ஆண்மொழி கேட்கமுடியாது.
ஔவையாரைப் போலவே நுட்பமான உணர்வுகளைப் பதிவு செய்யும் அகநானூற்றுப் பெண் கவிஞராக கழார் கீரன் எயிற்றியனார் இருக்கிறார். வாடைக் காலத்துப் பனித்துளிகளைப் பற்றி உவமைக்கூறுமிடத்து ‘களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை’ ( அகம் 163) (யானை மூச்சுவிட்டார்போன்ற பனித்தூறல்) ‘எஃகு உறு பஞ்சித் துய்ப்பட் டன்ன’ (217) ( இருப்புக் கோலால் பஞ்சை அடிக்கும்போது பறக்கும் பஞ்சுபோன்ற பனிக்காலம்) என உவமை கூறி நம் சிந்தையைக் கவருகிறார். வாடைக் காற்றை இன்னொரு பெண்போல நினைத்து அவர் சொல்லும் பெண்மொழி நயம் வாய்ந்தது.
வெறிபாடிய காமக்கண்ணியார், "புலி ஒன்று ஒளிந்திருந்து மிகச் சரியான தருணத்தில் யானையைத் தாக்குவதுபோல, தலைவன் நறுமண மலர்களை அணிந்துவந்து எல்லோரும் வெறியாட்டு நிகழ்வில் இருக்கும் அந்தத் தருணத்தில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி வந்து தலைவியைப் புணர்ந்து செல்கிறான். விடிந்ததும் வெறியாடல் நிகழ்த்தியதால்தான் தலைவிக்கு நோய் தீர்ந்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதைக் கேட்டுத் தலைவி சிரிக்கிறாள்." என்று குறிப்பிடுகிறாள்.
இதில் தலைவியின் சிரிப்புதான் பெண்மொழி. காலம் காலமாக பெண்ணைப் புரிந்துகொள்ளாத, காதலைப் புரிந்துகொள்ளாத இந்தச் சமூகத்திற்கெதிராகப் பெண்கள் இப்படித்தான் மொழி பேசுகிறார்கள். சமூகம் எவ்வளவு இறுக்கமாக இருக்கிறதோ அவ்வளவு நுட்பமாக அந்த மொழி இருக்கும். இரண்டாயிரம் வருடங்களாகக் கடந்துவந்து இன்றும் வாழும் இந்த மொழியை ஆணால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது என்பதுதான் நகைமுரண்.
- முனைவர் நா. சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர், சிந்திக் கல்லூரி, சென்னை - 77.