கீற்றில் தேட...

குத்துயிரும் குலையுயிருமாக தங்களுடைய வாழ்க்கையைக் கடத்திக் கொண்டு இருக்கும் கீதாரிகளின் வலிகளையும் வேதனைகளையும் அவர்களின் வாழ்வியலையும் தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்கு தம்முடைய எழுத்துகளின் வழியாக வெளிப்படுத்துகின்றார் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன். இவர் தமிழ் எழுத்துலகில் கவிஞராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர். அடிப்படையில், கீதாரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ் எழுத்தாளர்கள் கவனிக்கத் தவறிய கீதாரிகளின் வாழ்வியலையும் அவர்களின் அல்லல்பாடுகளையும் தமிழ்ச் சமூகத்திற்குக் கவனப்படுத்தி வருகிறார். தெய்வம் பார்த்தல், பெட்டையாடு, தெண்டக்காசு, செவகாளி, வானக்கண்ணி, தள்ளுகெடை, அறுத்துக்கட்டி, தண்டுகால், மூளியாடு ஆகிய ஒன்பது கதைகளை செவகாளி நூல் உள்ளடக்கியுள்ளது.

vetriselvan rajendran bookதென்தமிழகத்தில் உள்ள வரத்தாட்டுக் கீதாரிகள் தங்களுடைய ஆடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தைத் தேடிக் காவிரி ஆற்றுப்பாசனங்களான டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பயணம் மேற்கொண்டு வயல்வெளிகளில் கிடை அமர்த்தி மேய்ச்சல் தொழிலில் காலங்காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரிய மேய்ச்சல் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றம், கால்நடைகள் செல்லும் வலசைப்பாதைகள் அழித்தல், இடைமறித்தல் எனப் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

இதனால், பல இழப்புகளைக் கண்ட பலர் இத்தொழிலிலிருந்து வெளியேறித் தங்களுடைய பிள்ளைகளை அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா முதலான வெளிநாடுகளுக்கும் வேலை செய்ய அனுப்புகின்றனர். எழுத்தாளர் வெற்றிச்செல்வனும் சிங்கப்பூரில் பணி செய்யக் கூடியவர். ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அது நாள் வரை வாழ்வளித்து வந்த எல்லா ஆடுகளையும் விற்று, முகவருக்குப் பணம் கட்டி வெளிநாடுகளில் பணிக்குச் செல்கின்றனர். ஆட்டு மந்தைகளோடு நிலத்தை அளந்த கால்கள் ஆடுகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டு வீட்டில் முடக்கிப் போன கீதாரிகளின் மன உணர்வுகளை தெய்வம் பார்த்தல் கதையின் வழியாக வெளிப்படுத்துகிறார்.

கிடையில் உள்ள ஆட்டைக் களவாணிகள் களவுகொண்டு போய்விடுகிறார்கள். அதைத் தேடிச்சென்று களவாணிகளிடம் அந்த ஆட்டுக்கு அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்து ஆட்டை மீட்பர். ஆட்டை மீட்கக் கொடுத்த காசைத் தெண்டக்காசு என்பர்.

அதே போல ஆடுகள் மேய்ச்சலின் பொழுது தவறி வயலில் இறங்கிச் சேதப்படுத்தி விட்டால், வயலின் உரிமையாளருக்கு அபராதமாகக் கொடுக்கும் காசுக்கும் தெண்டக்காசு என்று பெயர். குலதெய்வக் கோவிலுக்கு நேந்து விடப்பட்ட களவுபோன கிடாய்களைத் தேடி அலையும் கீதாரியின் மன ஓட்டத்தைத் தெண்டக்காசு கதையின் வழியாகப் பேசுகிறார்.

ஆம்பள இல்லாத வீட்டில் உள்ள பெண் கிடையை அமர்த்தி இரவில் கிடையைக் களவாணிகளிடமிருந்து எப்படி காவல் காக்கிறார் என்பதைச் செவகாளி நமக்கு உணர்த்துகிறது.

வயல்களில் கிடை அமர்த்தியதற்கான கூலியை விவசாயிகளிடமிருந்து பெறும்போது கீதாரிகள் கிடை அமர்த்திய நாள்களைப் பொருத்து ஓரிரு நாள்களுக்கான கிடைக் கூலியைத் தள்ளிவிடுவர். கூலி வாங்காத கிடைக்குத் தள்ளு கெடை என்பர். சில இடங்களில் வயல்களில் அமர்த்தக்கூடிய கிடைக்குக் கூலியாகப் பேசிய கிடைக்கூலியைத் தராமல் ஏமாற்றுவர். அச்சமயத்தில் அவர்கள் அதைத் தள்ளு கெடை என நினைத்து மறந்துவிடுவர். கூலி கொடுக்காமல் ஏமாற்றும் போது ஏமாற்றியவர்களுக்குப் பாடம் புகட்டும் நோக்கில் கிடை அமர்த்திய ‘வயலின் சனி மூலையில் ஆழமாய்க் குழிதோண்டி அதற்குள் சுடாத மண்பானையைப் புதைத்து வைத்து, சூடத்தைக் கொளுத்திவிட்டு, எலுமிச்சம் பழத்தைப் பானைக்குள் போட்டுப் பின்பு ஆட்டுப்பாலைப் பானை நிறையுமளவுக்கு ஊற்றி மண்னை அள்ளிப் போட்டு மூடி, 'எங்களத் தேடிக் கண்டுபிடிச்சு கெடக் கூலியக் குடுத்து வாக்குத் தீத்துக்கிர்ற வரைக்கும் வெள்ளாம, புல்லு பூண்டு எதுவும் மொளக்காம பொட்டலாப் பெயிறணும். இந்தக் கொல்லயில அருவும் அத்தமிச்சிப் பெயிறணும்’ என்று வாக்குக் கொடுக்கக் கூடிய வழக்கம் கீதாரிகளிடம் உண்டு. பண்ணையார் வயலில் கிடை அமர்த்தி கிடைக் கூலி தராமல் ஏமாற்றப்பட்ட கீதாரிகளின் மனக்குமுறலைத் தள்ளு கெடை கதையின் மூலம் பேசுகிறார்.

திருமணமான பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண்ணிற்கு மறுமணம் செய்யக்கூடிய வழக்கம் இடையர் சமூக மக்களிடம் உண்டு. இதை அறுத்துக்கட்டி சிறுகதை வாயிலாக தெரியப்படுத்துகிறார். “மூளியாடு முழு வாழ்வு” என்பது கிடைப்பழமொழி. நூறு ஆடுகளில் ஒரு மூளி ஆடாவது இருந்தால் கிடை பலுகும் என்பது நம்பிக்கை. கிடையில் இருந்து தொலைந்து போன மூளி ஆட்டின் நினைவில் உழலும் கீதாரியின் மனநிலையை மூளியாடு கதையின் வழியாக வாசகனுக்குக் கடத்துகிறார்.

தென்தமிழக வரத்தாட்டுக் கீதாரிகளின் இனக்குழுத் தடயங்களையும், கால்நடைகளின் வலசைப்பாதைகளையும், உலகமயமாக்கல், நகரமயமாக்கல், நுகர்வுக் கலாசாரம் முதலான சூழ்நிலைகளால் கீதாரிகள் அனுபவிக்கக் கூடிய பிரச்சினைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் எனக் கீதாரி இனக்குழுப் பண்பாட்டைத் தமிழ்ச் சமூகத்திற்குத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றார் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன். மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் சமூக சர்வதேச ஆண்டாக – 2026-ஐ ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் அவர்களின் ‘செவகாளி’ நூல் தமிழ்நாட்டின் மேய்ச்சல் வாழ்வைத் தமிழ்ச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த நூலாக அமைகிறது.

கோ. அசோகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை 30.