கே.ஏ.ஜி.யின் நாட்டுப்புற இசை மேடை 1990களில் அவர் பாடிய அம்மா பாவாட சட்டை கிழிஞ்சு போச்சுதே, ஆக்காட்டி ஆக்காட்டி, முக்காமொழம் நெல்லுப் பயிரு முப்பது கஜம் தண்ணிக் கெணறு.

ஆடு வயித்துக்கு மேஞ்சிருக்கு பசும்மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு, வந்தனமுன்னா வந்தனம் வந்த சனங்கள்லாம் குந்தணும், மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா....

k a gunasekaran 372என்ற சில பாடல்களைப் பாடி, கைத்தட்டல்களும் பேரும் புகழும் பெறாத தமிழ்நாட்டு, நாட்டுப்புற இசைக் கலைஞர்களே இல்லை எனலாம்.

அந்த அளவிற்கு நாட்டுப்புற இசைக்கலைகளுக்கான முத்திரையாகவும் நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கான வித்தாகவும் விளங்கிய மாபெரும் நாட்டுப்புற இசைக்கலை மேதை கே.ஏ.ஜி. ஆவார்.

இத்தகைய தமிழ்நாடு நாட்டுப்புறக் கலையியல் வரலாற்றை, கே.ஏ.ஜிக்கு முன்பு, கே.ஏ.ஜி.காலம், கே.ஏ.ஜி.க்குப் பின்பு என மூன்று கூறுகளாகப் பிரித்துக் காண்பது பொருத்தமானதாகும்.

கே.ஏ.ஜி.க்கு முன்பு பல்வேறு ஆளுமைகள் குறிப்பிடத்தக்க தொடக்கநிலைப் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். கே.ஏ.ஜி.க்குப் பின்பும் குறிப்பிடத்தக்க பல ஆளுமைகள் இத்துறையில் ஏராளமான பங்களிப்புகளை ஆற்றி வருகின்றனர்.

கே.ஏ.ஜி.யின் சமகாலத்தில் அறிஞர்கள் சரஸ்வதி வேணுகோபால், ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவம், ஆறு இராமநாதன், சு.சண்முக சுந்தரம், தே.ஞானசேகரன், கு.முருகேசன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க ஆளுமைகளைப் பட்டியலிட முடியும். இந்த முப்பெரும் காலத்தில் இசைக்கலை, நிகழ்த்துக்கலை, நாடகக்கலை, ஆய்வுக் கலை எனும் நாற்பெரும் குப்புகள் தனித்தனியேயும் இருகலை, முக்கலை வல்லமைகளோடும் பணிபுரிந்தவர்களும் உண்டு. இதில் நான்கு கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்த ஒரேயொரு ஆளுமை கே.ஏ.ஜி. எனில், அது மிகையில்லை. அதிலும் இயக்கத்தத்துவக் கொள்கை சார்போடு இயங்கிய கல்வியாளர் கே.ஏ.ஜி. ஒருவரே என்பது இன்று எண்ணத்தக்க உண்மையாகும். பொதுத்தளத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சமூகக் கொள்கை கொண்ட மாபெரும் கலையியல் ஆளுமை கே.ஏ.ஜி. ஆவார்.

பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் என எந்த இடத்திலும் கலைப்பணியையும் இணைத்துக்கொண்டே பயணித்தவர். இத்தகைய பொதுத்தன்மை கலந்த தனித்தன்மையோடு இன்றுவரை வேறுயாரும் உருவாகி நிலைகொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டு, நாட்டுப்புறக் கலையியல் வரலாறு சொல்லும் செய்தியாகும்.

இவ்வாறான நோக்குநிலையில் நாட்டுப் புறப்பாடல் ஆட்டம், இசைக்கருவிகள், மேடையேற்றம், நாடகம், நாடக இயக்கம், நாடகம் நடித்தல், திரைப்பட இசைப்பாட்டுப்பாடி நடித்தல், ஆய்வு நூல்களைப்படைத்தல் என்பவற்றோடு, முதல் பறையிசைக் கருவியை மேடையேற்றுநர் முதன்முதலில் நாட்டுப்புறப்பெண் பாட்டுக் கலைஞர்களை மேடை ஏற்றுநர்

முதல் நாட்டுப்புற தன்னானே பாடல்களை மேடையேற்றுநர்

முதல் நாட்டுப்புற மரபிசை நிகழ்த்துக்கலைகளை மேடை ஏற்றுநர்

முதல் தலித் தன்வரலாற்றாசிரியர்

முதல் தலித் உரையாசிரியர் (சங்க இலக்கியம்)

முதல் தலித்தியல் அரங்கின் தந்தை

முதல் தலித் நாடகத்தின் தந்தை

தமிழக நாட்டுப்புற இசையை உலகரங்கில் கொண்டு என்ற முதல் கலைஞர்.

முதன்முதலில் நாட்டுப்புற ஆட்ட அடவுகளை ஆய்வு செய்தவர்.

தமிழகத்தில் முதன்முதலாக நாட்டுப்புற ஆட்டக் கலைப் பண்பாட்டை, ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர். (இராமநாதபுர மாவட்டம்)

என்றவாறு பல்வேறு முதல் முன்னெடுப்புகளைச் செய்த மாபெரும் ஆளுமை கே.ஏ.ஜி. என்பதை யாவரும் அறிவர்.

சாவுக்கு அடிக்கப்பட்டு வந்த பறையிசைக் கலையை உரிய ஆட்ட அடவுச் சீரமைப்போடு முதன்முதலில் மேடையேற்றிய வரலாற்றுப் பெருமை கே.ஏ.ஜி.யைச் சாரும்.

அதேபோல, கரகாட்டக் கலைஞர்களின் உடை சீரமைப்பை உருவாக்கி மேடைக் கலையாக்கினார் கே.ஏ.ஜி.

பொதுவுடைமை இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பொது மக்கள் அமைத்த மேடைகள், தமிழ்ச் சங்கங்கள் அமைத்த மேடைகள், உலக நாடுகளில் மேடைகள், உலகச் செம்மொழி மாநாடு, சென்னை சங்கமம், அரசின் விழிப்புணர்வு இயக்க மேடைகள் என எல்லா மேடைகளுக்கும் தன் பாடல்களால் பொலிவும் வலிவும் விழிப்புணர்வும் புரட்சியுணர்வும் ஊட்டியவர் கே.ஏ.ஜி.

இத்தனை மேடைகளிலும் கே.ஏ.ஜி.யால் வளர்க்கப்பட்ட இசைக்கலையும் நிகழ்த்துக்கலைகளும், இசைக் கலைஞர்களும் பரிணமித்த மேடை என்றால் சென்னை சங்கம மேடையாகும்.

சென்னை சங்கமம் மேடைகளுக்கு நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கித் தந்த வரலாற்றுச் சிறப்பு கே.ஏ.ஜிக்கு உண்டு.

கலைஞர்களை நாட்டுப்புறவியல், சேரிப்புறவியல், மானிடவியல், நாட்டுப்புறக் கலையியல், நாட்டுப்புற இசையியல், நாடகவியல், சமூக நாடகவியல், தலித் அரங்கியல், அரங்கக் கலையியல், நாடகப் பனுவல் ஆக்கம், நாடக மேடை ஆக்கம், நாடக இயக்கம், நாடக இசை ஆக்கம், மேடை இசைப்பாடல் ஆக்கம், தன் வரலாறு, கவிதை, சிறுகதை, சங்க இலக்கிய உரையாக்கம் எனத் தமிழின் பன்முக ஆளுமையாக மிளிர்ந்து இத்துறைகளின் பொருண்மைகளில் 34 நூல்களைத் தமிழ் ஆய்வுலகுக்கும், தமிழ்ச் சமூகத்திற்குமாகப் படைத்தளித்த பேராளுமைப் பேராசிரியர் கே.ஏ.ஜி.

தன் கலையியல் ஆளுமைகளால் தமிழக கலைமாமணி விருது, புதுச்சேரி கலைமாமணி விருது, தமிழ்க் கலைச்செம்மல், மக்கள் கலைக் காவலர், தமிழ் இசைக் குரிசில், நாட்டுப்புற அரங்கக்கலை ஆளுமை விருது (அமெரிக்கா), சிறந்த நூலாசிரியர் விருது எனப் பல்வேறு விருதுகளோடு, தன்னானே பாடல்கள், மண்ணில் பாடல்கள், மனுசங்கடா பாடல்கள் இசைத் தட்டு, திரைப்பட நடிப்பாளுமை பங்கெடுப்பு என கே.ஏ.ஜி.யின் வாழ்வியல் பங்களிப்பு மகத்தானதாகும்.

கே.ஏ.ஜியின் ‘பலியாடுகள்' என்னும் நாடகமானது நூற்றுக்கணக்கான மேடையேற்றம் கண்டது என்பது சமகால வரலாறு. இவரின் இசைக்குரல், தமிழகம், அயல்நாடுகள் என ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒலித்தது. இன்றும் அவரின் கலை நினைவலைகளைத் திசையெட்டும் சுமந்துகொண்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல் அணிந்துரைகள், பன்னாட்டுச் சொற்பொழிவுகள், சிந்தனைகள் ஆய்வுலகில் எண்ணிப்பார்க்கப்படுகிறது என அவரது ஆய்வு; 2010இல் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடலான கலைஞரின் "செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலில் ‘அதுவே' என்ற தேற்றேகாரச் சொல்லை ஏற்றேகாரச் சொல்லாக மாற்றி அத்தனைக் கலைஞர்களின் கூட்டு இசை மலர்வில் அந்தப் பாடலின் உயிர்ப்புக்கே உயிர்ப்பு தந்தவர் கே.ஏ.ஜி. எனலாம்.

இவ்வாறு பள்ளிக்கூடத்தில் பாட்டு மாணவனாக நின்று தமிழ் வணக்கப் பாடல் பாடிய கே.ஏ.ஜி. கல்லூரிப் பருவம் தொடங்கிய போது இசைக்கச்சேரி குழுக்களில் நாட்டுப்புறப் பாடல் பாடத் துவங்கியவர். அவரது கணீரெனும் மண்வாசனை மாறாத இசைக்குரலைப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரவேற்றனர்.

இயக்க மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்கள் நள்ளிரவுகளிலும் முழங்கி ஒலித்தன. பொதுவுடைமை இயக்கத்தில் மலர்ந்து சமூகத்தின் பொதுத்தளத்தில் வளர்ந்து, தலித் இயக்கத்தில் மிளிர்ந்து, திராவிட இயக்க மேடைகளில் ஒளிர்ந்தவர் என்பது அவருக்கே உரிய பன்மைத்துவத் தனித்துவப் பண்பாகும்.

வயலோரங்களில் தேங்கிக் கிடந்த நாட்டுப்புற இசையையும், இசைக் கலைஞர்களையும் தமிழ்நாடெங்கும் மதிப்போடு உலவச் செய்த மேடைக் கலையறிஞர். ஒதுக்கப்பட்ட வயலோர நாட்டுப்புற இசைக்கருவிகளை மரபுத்தன்மை மாறாமல் மேடைகளில் ஒலிக்கச் செய்தவர். அவ்வாறே தன்னானே இசைக் கலைஞர்களை மேடைகளில் உயர்த்தி மதிப்புறு கலைஞர்களாக்கியவர். சடங்குகளில், திருவிழாக்களில் நடந்த ஆட்டங்களை அதன் தன்மை மாறாமல் ஆனால், எல்லோரும் மதிக்கும் மாண்புறு நிகழ்த்துக் கலைகளாக உலகில் பரப்பியவர். தன்னானே கலைக்குழுவை உருவாக்கியவர்.

உலக நாடுகள் எங்கும் மரபுக்கலைகளைக் கொண்டு சேர்த்தவர் கே.ஏ.ஜி. இன்று தமிழினத்தின் மரபுக் கலைப் பண்பாட்டைப் பரப்பிய பணி இவருடையது.

இத்தகைய தமிழ்க் கலை ஆளுமையான 'கலைமாமணி டாக்டர் கே.ஏ.குணசேகரன்' அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பை உலகறியச் செய்யும் வகையிலும் அவருக்கு முந்தைய, பிந்தைய, இன்றைய கலைஞர்களால் மேடையேற்றப்பட்ட கலைக் கருவிகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும் விதமாகவும், கீழடி அருங்காட்சியகம்போல, பொருநை அருங்காட்சியகம்போல, தமிழக நாட்டுப்புறக் கலையறிஞர் கலைமாமணி டாக்டர் கே.ஏ. குணசேரகன் நினைவு மணிமண்டபம், 'நாட்டுபுறக் கலை அருங்காட்சியகம்' ஒன்றை அவர் பிறந்த மாவட்டமான சிவகங்கை மண்ணில் அமைத்திட வேண்டுமென தமிழ்நாட்டுக் கலை அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள் அனைவர் சார்பிலும் தமிழக அரசிடம் வேண்டிக் கோருகிறோம்.

அத்தோடு, கே.ஏ.ஜி.யின் தங்கை முனைவர் கே.ஏ.ஜோதிராணியின் முன்னெடுப்பில், உருவாக்கப்பட்டுள்ள, 'கே.ஏ.குணசேகரன் நினைவுக் கலை அறக்கட்டளை' யின் வாயிலாக அவரது நினைவாய் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விருதுகள் வழங்கிப் பாராட்டவும் தமிழ்நாடு அரசு உதவிடவும் வேண்டுகிறோம்.

மேலும், கே.ஏ.ஜி., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராய் உயரக் காரணமான 'திராவிட வழிகாட்டி அரசு' அவரது நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி அவரது கலைச்செயல் சிந்தனைகள் நடைமுறைக்கு வந்து எந்நாளும் நின்று நிலவத் துணைபுரிய வேண்டும் என்பது நாட்டுப்புறக் கலைஞர்களின் கோரிக்கை மட்டுமல்ல தமிழறிஞர்களின் தமிழார்வலர்களின் விருப்பமும் ஆகும்.

- முனைவர் சு.மாதவன், தமிழ்ப் பேராசிரியர், துறைத் தலைவர், இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி, செங்கல்பட்டு