கான்ஸ்டான்சோ பெஸ்க்கி, எனும் வீரமாமுனிவர் இத்தாலி நாட்டுக் கிறித்தவ மத போதகர். 1710ஆம் ஆண்டு தனது 30ஆவது வயதில் தமிழகத்துக்கு வந்து 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளைத் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப தேம்பாவணி என்ற பெரும் காப்பியத்தை எழுதி 'தமிழர் அல்லாத ஒருவர் இயற்றிய' என்ற பெருமையைப் பெற்றார். இத்துடன் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் - லத்தீன் அகராதி, நிகண்டுக்கு மாற்றாகச் சதுரகராதி, திருக்குறள்-இலத்தீன் (அறத்துப்பால், பொருட்பால்) மொழிபெயர்ப்பு, பரமார்த்த குருவின் கதை என்ற நகைச்சுவை நூல், உரைநடை நூல்கள் தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம் ஆகியவைகளை உருவாக்கியவர் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு தெரிந்தவைகள். இது தவிர வீரமாமுனிவரின் மற்றொரு சிறப்பு, சித்த மருத்துவத்தைக் கற்று நூல்களை எழுதி உள்ளார் என்பது ஆகும். ஆனால் இந்நூல்கள் இவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்று கூறுவோரும் உண்டு.

veeramaamunivarவீரமாமுனிவரின் மருத்துவ நூல்கள்

நசகாண்டம், நவரத்தின சுருக்க மாலை, மகாவீரிய சிந்தாமணி, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, பூவரசங்காய் எண்ணெய் (கலிவெண்பா), மேகநாதத் தைலம் (கலிவெண்பா), பஞ்சாட்சர மூலிகை எண்ணெய் (ஆனந்தகளிப்பு), சத்துரு சங்கார எண்ணெய் (நொண்டிச் சிந்து), வீரமெழுகு, முப்பு சூத்திரம் (நொண்டிச்சிந்து), அனுபோக வைத்திய சிகாமணி, வீரிய சிந்தாமணி இரண்டாம் பாகம், குணவாகடம், நிலைக் கண்ணாடி ஆகிய நூல்கள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை.

நூல்களின் சிறப்பு

வயிறும் வாதமும்

“வாதி வழுவி வைத்தியன் ஆனான்' என்பர்.

வாத வித்தையிலும் முயன்றுள்ளார் என்பது அவர்தம் நூலால் தெரியவருகிறது. வாதம் படித்தாலின்றிப் பாசனங்களின் இயல்புகளைத் தெரிந்து கொள்ள இயலாது.

இயங்களில் (இணைப்பு)

உடலிலுள்ள ஓர் உறுப்போ சில உறுப்புகளோ இயங்க வேண்டிய முறையில் இயங்காமல் தடைபடும் போது வாத நோய்களாக ஏற்படுகின்றன. எனவே வாய்வு வயிற்றில் தங்காமல் பாதுகாப்பது முக்கியமாகும். வயிற்றினைத் தூய்மையாக வைப்பதற்கு வீரமாமுனிவர் தரும் சிறப்பான மருந்து 'மலபந்த நிவாரணி' ஆகும் (வைத்திய சிந்தாமணி, ப,45).

சுரம்

சுரம் என்பது தனியாக ஏற்படக்கூடிய நோயன்று. அது நோய்களின் வெளிப்பாடே ஆகும்.இச்சுரம் வயிற்றில் ஏற்படும் மாற்றங்களினாலும் ஏற்படலாம். இதற்காக, சுரமஞ்சரி என்னும் நூலைப் படைத்துள்ளார். அதிலுள்ள கௌரி மாத்திரை, விஷ சுரக் குளிகை, பூபதி மாத்திரை, ஆனந்த பைரவன் போன்றவை, பல்வேறு சுரங்களுக்கும் சிறந்த பலன் தருவதாய் அமைந்துள்ளன. வீரமாமுனிவரின் தமிழ்-இலத்தீன் அகராதியில் காய்ச்சல், விடுங் காய்ச்சல் (விட்டு விட்டு வருவது), விடாக் காய்ச்சல் (தொடர்ந்து வருவது), குளிர்க்காய்ச்சல், சுரக் காய்ச்சல், உட்காய்ச்சல், பித்தக் காய்ச்சல், மந்தக் காய்ச்சல், கடுங்காய்ச்சல், தோஷக் காய்ச்சல், பெருவாரிக் காய்ச்சல், (கொள்ளை நோய்) என 15 வகையான காய்ச்சலைக் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்துமா

இந்நோய்க்கு வீரமாமுனிவர் குறிப்பிட்டுள்ள “சுவாசக் குடோரி'என்னும் மாத்திரை நல்ல பயன் தருகிறது (வைத்திய சிந்தாமணி,ப.14).

வீரமெழுகு

பதினான்கு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் வீரமெழுகு பற்றி வீரமாமுனிவர் உரைத்துள்ளார். உடம்பின் அளவறிந்து இதனை அளவுப்படி உண்டுவரக் கைகால் குடைச்சல், சூலை, கால் பிடிப்பு, கால் முடக்கு, புண்வகைகள், சிலந்திப் புண்கள் தீரும் என்கிறார்.

வீரமாமுனிவர் நசகாண்ட வெண்பா நூறு, உரையாசிரியர் மாங்காட்டு வடிவேலர் நோய்களை நீக்கும் மருத்துவ நூல் என்று விளக்கம் வழங்கியுள்ளார். இறுதி ஆறு வெண்பாக்கள் நோய்வினை நீக்கம் பற்றிப் பேசுகின்றன. நாகச் செந்தூரம் முதல் வாத நீக்க உருண்டை வரை முப்பது மருந்து செய்முறைகள் மொழியப்பட்டுள்ளன.

விஷசஞ்சீவி மருந்து

இம்மருந்து புகையிலை, பனைவெல்லம் ஆகியவைகளைப் புடமிட்டுச் சாம்பலாக்கிப் பயன்படுத்தப்படுகிறது. இது நாகப்பாம்பு விஷங்களையும் குறைத்து ஆளைப் பிழைக்கச் செய்யும். இது மலிவானது. எளிதாய் செய்யக் கூடியது.

தமிழ் மருத்துவம்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழ்நாட்டுச் சித்த மருத்துவ மரபினையொட்டிப் பிற நூல்களில் கூறப் பெற்றுள்ள மருந்தினையும் மருந்து செய்முறையினையும் வீரமாமுனிவர் கூறியுள்ளார். நசகாண்டம் நூலின் மூன்றாம் பாடல் காப்புச் செய்யுளில் வீரமாமுனிவர் இம்மருத்துவத்தைச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

“தாதறிந்தோ னாகிற் றனைப் பயந்த தாயாக

மாதா வென் றெண்ணி மகிழுவார்-வேதநெறி

பக்திக்கு மாதிப் பரனைப் பணிவோர்க்குச்

சித்திக்கு மிந்நூல் திறம்" (நசகாண்டம் பாடல்.3)

மாதா மற்றும் ஆதி பரனை வேதநெறியின் அடிப்படையில் பணிவோர்க்கு இந்நூல் கைவரப்பெறும் என்று குறிப்பிடுகிறார்.

வீரமாமுனிவர் - நூலில் தன் பெயரை வெளியிடுகிறார்

“பார்த்திடு வீரமாமுனிவன்-சொன்ன

பழுதில்லாத் தயிலத்தின் பாகமதனை

ஆர்க்கும் வீணாக விடாமல்-இங்கே

யமைதியுடையவர்க் காராய்ந்து உதவவே"

இப்பாடலில் தமது பெயரை வெளியிடுகிறார் வீரமாமுனிவர். மேலும் சத்துரு சங்கார எண்ணெய் சொல்லப்படும் பாடல்கள் அன்னை மரியைப் பணிந்து என்ற வரியும் “வீரமாமுனியென்றன் முறையிதுவே' என்று கூறும் சொற்றொடரும் கிறித்துவராகிய வீரமாமுனிவர் இந்நூற்களை இயற்றினார் என்பதற்குச் சான்றாகும்.

வீரமாமுனிவரின் மருத்துவச் சிறப்பு

'வீரமாமுனிவர் வாகடத்திரட்டு' என்ற பெயரில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வீரமாமுனிவரின் மருத்துவ நூற்கள் பக்கீர் பா.மு.அப்துல்லா சாயபு அவர்கள் முதன்முதலாக வெளியிட்டுள்ளார். பதிப்புரையில் இந்நூலானது ராஜரிஷியும், மகா சாதுவும் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதலியவைகளில் மிகவும் தேர்ச்சியுற்று தமிழில் பல நூற்கள் இயற்றி கீர்த்தி பெற்றவருமாகிய வீரமாமுனிவரால் செய்யப்பட்டது என்றும், நசகாண்டம், நவரத்தினச் சுருக்கமாலை, மகாவீரியச் சிந்தாமணி என்னும் மூன்றினையும் ஒருங்கு சேரத் திரட்டிய காரணத்தால் வாகடத்திரட்டெனும் திருநாமம் பெற்று விளங்கும் பெருமை வாய்ந்தது என்றும் அப்துல்லா அவர்கள் குறிப்பிடுகிறார்.

வீரமாமுனிவர் வாகடத்திரட்டின் இரண்டாம் பதிப்பின் ஆசிரியர் இராமச்சந்திரன் அவர்கள் இந்நூலின் பெருமையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். வீரமாமுனிவர் வாகடத்திரட்டு என்னும் இந்நூல் அளவுகடந்த சிறப்பினையுடையதாகும். இதை டாக்டர் பக்கீர் பா.மு.அப்துல்லா அவர்கள் பதிப்பித்துள்ளார்கள் என்பதே தனிச்சிறப்பை விளக்கும். அப்துல்லா அவர்கள் வீரமாமுனிவரின் பாடல்களுக்கு விரிவான விளக்கம் எழுதியதோடல்லாமல் ஒவ்வொரு மருந்துக்கும் அனுபவப்பூர்வமான செய்முறை விளக்கத்தையும் எழுதியுள்ளார். அது எவ்வளவு அற்புதமாகப் பலன் அளிக்கிறது என்பதையும் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரமாமுனிவர் நசகாண்டம் மூலமும்-உரையும் கோவிந்தசாமி என்பவரால் 1980இல் வெளியிடப்பட்டது. இதற்கு அந்நாள் புதுவை அரசின் வருவாய்த்துறைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாமி என்பவர் வழங்கிய அணிந்துரையில் புதுவையில் வீரமாமுனிவரின் வைத்திய முறைகள் வழங்கி வந்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சித்த வைத்தியத்தைக் கடைப்பிடித்து வந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வீரமாமுனிவரைக் குருவாகக் கொண்டு, வைத்தியத்தைச் செய்து வந்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீரமாமுனிவரே பொதியில் புத்தோளான அகத்திய முனிவரையே தம் குருவாக முதற்பாட்டிலேயே கூறியுள்ளார் என்று குறிப்பிடுகிறார்.

வீரமாமுனிவர் வாகடத்திரட்டின் இரண்டாம் பாகத்தை வெளியிடும்போது அச்சிடுவோரின் கடவுள் வணக்கம் என்ற தலைப்பின் கீழ்

“பூதலத்தில் வாழ்வோர் புதிய நலமெய்துதற்கு

மாதவத்தோராம் வீரமாமுனிவர்-ஆதரத்தால்

வெய்தவுயர் நன்முறைகள் சேர்ந்தபன் நூலச்சிடவே

துய்யவொருவன் றுணை"

என்ற பாடல் மூலம் வீரமாமுனிவரே இந்நூலைச் செய்தார் என்று அப்துல்லா சாயபு அவர்கள் கூறுகிறார்.

இந்த மருத்துவ நூற்களைச் செய்த விதம் பற்றிக் கூறும் போது முனிவர் தாமே பின்வருமாறு கூறுகிறார்.

“திசைமேவுந் தென்கிரியிற் சேருமுனி நூலாய்ந்து நசகாண்ட மென்று நவில'

பக்கீர் முகமது பா.மு.அப்துல்லா சாயபு வீரமாமுனிவரின் நூலை வெளியிட்டு, தக்க ஆதாரங்களை முன்வைத்தாலும் சித்த மருத்துவ நூல்களை எழுதியிருக்க வாய்ப்பில்லை என முனைவர் மறைதிரு இராசமாணிக்கம் “வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்' என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை அவர் கூறுகையில் “நூற்களின் நடையும், கருத்தும் பிற்காலத்தவையாக உள்ளது. இல்லறத்தில் ஈடுபட்ட புலவர்கள் கூடப் பயன்படுத்த விரும்பாத சில மகடூஉ முன்னிலைகள் இங்கு வருகின்றன. கருத்துக்கள் முற்றிலும் முரண்பட்டு, கருத்துக்கள் மேல்வாரியாகவும் விளம்பரமாகவும், சிற்றின்பப் போக்கிலும் அமைந்துள்ளன. மற்ற நூல்களைப் போல முனிவரும் அவர்தம் கூட்டாளிகளும் இம்மருத்துவ நூல்களில் சான்று பகரவில்லை' என்று கூறி இறுதியாக இந்நூல்களையும் முனிவர் எழுதிய பிற நூல்களையும் ஊன்றிப்படிப்போர் மேற்கூறிய கருத்துக்களைக் கண்டுணரலாம்' என்று விளக்கம் அளிக்கின்றார். ஆனாலும் இன்றைய நிலையில் மதுரையில் உள்ள “தேம்பாவணி' என்ற மருத்துவமனையில் வீரமாமுனிவரின் சித்த மருத்துவம் கையாளப்பட்டு, பல நூறு பேர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்