இன்று இளம் வயதில் இருந்தே பலரும் பலவகையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

பீடி, சிகரெட், போதை தரும் பாக்கு வகைகள், உடல் மற்றும் மூளையினை மயங்கிய நிலைக்குக் கொண்டு செல்லும் மதுபான வகைகள் சிறிது சிறிதாக நமது உடலை மயக்கத்தில் ஆழ்த்தி, கடைசியில் நிரந்தர மயக்க நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். பிறகு ஆழ்ந்த மயக்கத்துடன் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி, உள்ளுறுப்புகளும் சோர்வுற்று செயல்பாடு இழந்துவிடும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என்று அவ்வை பிராட்டியார் கூறியிருக்கிறார்கள். ஆனால் நல்ல நிலையில் பிறந்த நாம், நம் தவறான பழக்கவழக்கங்களால் நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

அளவுக்கு மீறிய போதைப் பொருட்களைச் சிறு வயது முதல் பயன்படுத்தும் நபர்களுக்கு திருமண வயது வரும் சமயத்தில் ஒரு விதமான அச்சமும் பயமும் ஏற்படுவதுடன், ஆண்மைக் குறைவு, விந்தணுக்கள் குறைவு, சோர்வான விந்தணுக்கள், நரம்புத் தளர்ச்சி, உடல் நடுக்கம் போன்றவை உண்டாகிறது. இதன் விளைவு திருமணம் ஆனாலும் கூட இல்லற வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக ஆகி விடுவதுடன் அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தையும் பிறவி ஊனத்துடனோ, கடுமையான மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாகவோ அல்லது எதிர்ப்பு சக்தியற்ற குழந்தையாகவோ பிறக்க வாய்ப்பு அதிகம்.

ஆகவே நம் உடலியக்கம் நன்றாக நடை பெறுவதற்கு நம் நல்ல பழக்க வழக்கங்களே காரணமாக அமையும் என்றால் அது மிகையல்ல. நமது உணவு பழக்கவழக்கங்களில் அதிக காரம், புளிப்பு, மசாலா கலந்த உணவுகள், எண்ணெயில் பொறித்த பலகாரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், விரைவு உணவுகளால் கூட பல்வேறு வகையான வியாதிகள் மற்றும் காரணம் கண்டறிய இயலாத நோய்கள் வருகின்றன.

மேலும் பார்வைக் குறைவு, உயர்ந்த மற்றும் குறைவான இரத்த அழுத்த நோய், குடற்புண், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினைகள், மூலவியாதி, மூட்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, ontentpane">குதி கால் வலி, மணிகட்டுகளில் ஏற்படும் வலி, நாட்பட்ட எலும்பு நரம்பு சம்பந்தப்பட்ட வலிகள், முடக்கு வாதம், ஒரு கை வாதம், ஒரு கால் வாதம், பக்க வாதம், சர்வாங்க வாதம், தண்டுவட வலிகள், உடல் சோர்வு, மனச் சோர்வு, சர்க்கரை நோய், கருப்பை கோளாறுகள், மன அழுத்தம், மன இறுக்கம், உற்சாகமின்மை, மன அமைதியின்மை, தூக்கமின்மை, பசியின்மை, மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நம்மை எளிதில் பாதித்துக் கொண்டிருக்கின்றன.

இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மூலிகைகளும், மூலிகை உடலியக்க மருத்துவமும் இன்றியமையாதது.

அந்த வகையில் வயிற்றுப் புண்ணை ஆற்றும் பிரண்டைத் துவையல், வாதத்தைத் தடுக்கும் வாதமடக்கி துவட்டல், இரும்புச்சத்தைத் தரும் முருங்கைக் கீரை சூப், மூட்டுவலியைக் குணமாக்கும் முடக்கற்றான் தோசை, பசி தூண்டி மலச்சிக்கலைச் சரி செய்யும் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சட்டினி மற்றும் புளிச்சக்கீரை துவையல், ஆவாரம்பூ கூட்டு, செம்பருத்திச் சாறு போன்றவை சிறந்த மூலிகை உணவு வகைகள்.

இன்றைய கால கட்டத்தில் சரியான முறையில் தண்ணீர் குடிக்காததாலும், நிதானமாக உணவு உட்கொள்ளாததாலும், வயிற்றில் புண் ஏற்படுகிறது. அதற்கு மணத்தக்காளி மற்றும் வெந்தயம் போன்றவை மிகவும் சிறப்பாகப் பயன்படுகிறது. நெருஞ்சில், நீர்முள்ளி, சிறு பீளை போன்ற மூலிகை கசாயத்தால் சிறுநீரகம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாது, சிறுநீரக கல், சிறுநீரக அடைப்பு, சொட்டுச் சொட்டாக வரும் சிறுநீர், சிறுநீரக தாரையில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பல்வேறு சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு மேற்கண்ட மூலிகைகள் மிகச் சிறந்த அற்புதமான மருந்தாகும்.

பார்வைக் குறைவு மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வள்ளலார் அருளிய கரிசலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கன்னி கீரைகளை உணவாகவும், தலைக்குத் தேய்க்கும் தைலத்திலும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

குழந்தை முதல் பெரியவர் வரை நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளான சளி, இருமல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவை இருந்து வருகிறது. அதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், தூதுவளை, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, ஆடாதொடை, அக்ரஹாரம் போன்ற மூலிகைகள் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் பல்வேறு வகையான நோய்களைப் போக்கும் தாமரை பூ, ரோஜா பூ, செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, சுக்கு, மிளகு திப்பிலி, ஏலக்காய், நன்னாரி, பனங்கற்கண்டு ஆகியவை கலந்த மூலிகை டீ அருந்துவது மிகவும் நல்லது.

நம்மைச் சுற்றி எளிதில் கிடைக்கும் இதுபோன்ற அரிய மூலிகைகள் அன்றாட உணவில் சேர்த்து நோயில்லாத வாழ்க்கை வாழ வேண்டும்.

- மருத்துவர் தெட்சிணாமூர்த்தி

 

Pin It