குடிக்க நீரின்றி

குதிரை மயங்கிச் சரிய

வீர நாராயண ஏரியின்

கானல் அலையும் கரையில்

குப்புற விழுந்தான் வந்தியத்தேவன்

நீரின்றி பொய்க்கவில்லை-காவிரி

நீதியின்றி பொய்த்துவிட்டது

புழுதியாற்றை இனியும்

பொறுக்க முடியாதென....

பொது ஆவுடையார் கோயிலில் கிடந்த

ஒற்றை வாளை உருவிக்கொண்டு

புறப்பட்டுவிட்டான்

பொன்னியின் செல்வன்

விவசாயிகள் போராட்டம் தானே என

நீங்கள் வீட்டுக்குள் இருப்பதெல்லாம்

அண்ணாச்சி கடையில்

அரிசியும் பருப்பும்

இருப்பு உள்ளவரைதான்.....

எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்

பசிக்கு சோறு வேண்டுமென

நீங்கள் உணரும்போது......

எல்லா நிலமும் பிளந்துகிடக்கும்

எல்லா உழவனும் இறந்துகிடப்பான்

 

பித்தம் தெளிய

காவிரி தீர்ப்பெழுதும்

காகிதத்துக்கு

மூங்கில் காடு

முந்நூறு அழித்தும்

தவணைப்படி

தண்ணீர் திறக்காமல்

திரும்பத் திரும்ப

தீர்ப்பெழுதும் திருநாட்டில்

நதிகளை இணைத்தால்

நாலு போகம் விளையும் என்போர்

பித்தம் தெளிய

சித்த மருத்துவம்

சிறந்ததெனக் கொள்க

Pin It