'சிதம்பரம் பிள்ளை எளிதில் கொள்கையை மாற்றிக் கொள்பவர் அல்லர். காற்று எப்படி வீசுகிறதோ அப்படித் திரும்பும் நீர்மை பிள்ளையவர்களின் பிறவியில் அமையவில்லை. வீரர் சிதம்பரம் பிள்ளைக்கு ராஜதந்திரம் தெரியாது. சூழ்ச்சியும் கரவும் அவரை அறியா. அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியதில்லை. இகல் எரி முதலியன அவர் தம் நெஞ்சில் நெடிது நிலவா' (ப.29, வாராது வந்த மாமணி) என்று நவசக்தியில் திரு.வி.க. எழுதிய இரங்கலுரை வ.உ.சியின் மாண்பை உணர்த்திற்று. இம்மாண்பே அவரின் உயிரியல்பாய் இருக்க, பின்வந்த அரசியல் நீரோட்டத்தில் அவரும் அவர் பணிகளும் எவ்வாறு மறக்கப்பட்டன என்பதைச் சான்றுகளோடு விளக்கி, நம்மைப் புதிய வெளிச்சத்திற்கு இட்டுச்செல்கிறது வாராது வந்த மாமணி நூல்.
பாரதியால் போற்றப்பட்ட வ.உ.சி., ஏன் இந்திய தேசியத் தலைவர்களின் வரிசையில் வைத்து எண்ணப்படவில்லை... தென்னாட்டுத் திலகர் என்றும் தென்னாட்டுத் தந்தை என்றும் திரு.வி.க.வால் சுட்டப்பட்ட வ.உ.சி. ஏன் இந்தச் சமூகத்தின் மறதி நோய்க்கு ஆளானார். சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி சுயராஜ்ஜியம் என்ற பெருங்கனவை இந்திய மண்ணில் விதைத்தவர்களில் தலையாய ஒருவரின் பணிகளும் அவரால் உருவான எழுச்சியும் வரலாற்றில் ஏன் சில காலத்திற்குள்ளாகவே, மறக்கப்பட்டன... சிறைவாசத்திற்குப் பிறகு மைய நீரோட்ட அரசியலில் இருந்து வ.உ.சி முற்றிலும் விலகிக்கொண்டதான தோற்றத்தை ஏற்படுத்திய திட்டமிட்ட ஒதுக்கலை எவ்வாறு புரிந்துகொள்வது... இந்நூல் அந்தக் காரணங்களுக்கான தரவுகளைத் தருவதன் மூலம் வரலாற்றின் பேசப்படாத பக்கங்களை நம்முன் வைக்கிறது.
வ.உ.சி. சிறைக்குச் சென்று மீண்டபிறகு, அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதான கூற்றை மறுக்கும் விதமாக அவரின் அரசியல் சமூகப் பணிகள், இலக்கியப் பணிகள், செயல்பாடுகள் எத்தகையதாக வெளிப்பட்டன என்பதைத் தரவுகளோடு முன்வைப்பதன் மூலம் இந்நூல் வ.உ.சி. என்ற ஆளுமையின் இடையறாத சமூகப் பணிகளை உறுதிப்படுத்துகின்றது.
வ.உ.சி. இரட்டைத் தண்டனை பெற்று கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலுமாக செக்கிழுத்து, கல்லுடைத்து மிகக் கொடுமையான தண்டனையைப் பெற்று மீண்டபோது, அவரை வரவேற்கப் பெருந்திரள் மக்கள் கூட்டம் கூடும் என்று காவலைத் தீவிரப்படுத்திய ஆங்கில அரசின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்படியாக வ.உ.சி.க்கான வரவேற்பு இருந்தது... வக்கீல் தொழில் செய்வதற்கான உரிமமும் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்ட நிலையில் அரிசி வியாபாரமும் நெய் வியாபாரமும் செய்து ஜீவிதத்தை நடத்தி வந்த வ.உ.சி. என்னும் ஆளுமைமிக்க மனிதரைக் காங்கிரஸ் கட்சியும் அதன் முக்கியத் தலைவர்களும் கண்டுகொள்ளாத வகையில் என்ன நிகழ்ந்தது என்ற வரலாற்று இடைவெளியை நாம் உணர்ந்துகொள்ளப் போதுமான ஆதாரங்களை இந்நூல் வழங்குகின்றது.
சிவகாசிக் கலவரம், கழுகுமலைக் கலவரம் போன்ற எண்ணற்ற கலவரங்கள் தமிழ்ச் சமூக வரலாற்றில் இருந்தபோதும், திருநெல்வேலி எழுச்சி என்பது அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது; அந்த எழுச்சி சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளைக் கடந்ததாக இருந்தது; வங்காளத்தைப் போன்று பெரும் எழுச்சி தமிழகத்தில் நிகழ்ந்திடாத சமயத்தில்தான் தூத்துக்குடியில் சுதேசிய உணர்வுக்கான வித்து வ.உ.சி, சுப்பிரமணிய சிவா என்னும் இரு பெரும் தேசத் தொண்டர்களால் ஊன்றப்பட்டது. வ.உ.சியின் பெயருக்கு இருந்த மதிப்பையும் சுதேசியம் பற்றிய அவரது கொள்கைகள்மீது மக்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் தெளிவுபடுத்தும் சான்றுகள் இந்நூலில் ஏராளம். மருத்துவ சகோதரர் ஒருவர் ஐயங்கார் ஒருவருக்கு முடி திருத்தும் பணியில் இருக்க ஐயங்காரோ, வ.உ.சியின் சுதேசிய முயற்சிகள் பற்றி ஏளனமாகப் பேச, அந்தச் சகோதரரோ அரைகுறையாக அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். இந்த மருத்துவ சகோதரனைப் போல எண்ணற்ற எளியவர்கள் சுதேசிய எழுச்சி பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதே.
தமிழகத்தில் தேசிய இயக்கம் என்பது கற்றறிந்த மேல்தட்டு வர்க்கத்தினர்க்கானதாக இருந்த நிலை, திருநெல்வேலி எழுச்சியில் பங்குகொண்டோர் பற்றி நாம் அறியும்போது முற்றிலும் மாறிவிட்டது. எழுச்சியில் ஈடுபட்டதாகக் கைதானவர்கள் எளியவர்கள். வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் தரப்பினர். வ.உ.சி, சுப்பிரமணிய சிவாவின் சொற்பொழிவுகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்து பெருந்தாக்கத்தை உருவாக்கியிருந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்தத் திwzருநெல்வேலி எழுச்சியில் பெருந்திரள் பங்கேற்பு சாத்தியமானதும் ஆங்கில அதிகார மையத்தை அச்சம் கொள்ளச் செய்யதும் நிகழ்ந்தது.
சூரத் காங்கிரஸிற்குப் பிறகு தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் சுதேசியம் குறித்த விழிப்பு பெரும் தீயெனப் பரவிய நிலையில் இருண்ட மாகாணம் என்று விடுதலைப் போராட்ட காலத்தில் குறிப்பிடப்பட்ட மதராஸ் மாகாணம், எழுச்சிப் பிரதேசமாகப் பெருங்கவனம் பெற்றதை இந்நூல் விவரிக்கின்றது.
கோரல் மில் தொழிலாளர்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் அவர்களின் உரிமைகளுக்காகப் பேசிய வ.உ.சி., சுதேசியத் தொழில் சார்ந்த முன்னெடுப்புகளைத் தேசிய விடுதலையின் ஒரு கூறாகக் கருதி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய துணிவை நிர்மூலமாக்க ஆங்கிலக் கப்பல் நிறுவனங்கள் கையாண்ட மோசமான தந்திரங்களை, ஒரு பெருங்கனவின் சாட்சியை அழித்தொழித்த வரலாற்றை எடுத்துரைக்கிறது.
சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அவரது பெரும் முயற்சிக்கு நாமும் உறுதுணை செய்ய வேண்டுமென்று எழுதினார் பாரதி. வாங்கிய கப்பல்களில் ஒன்று பழுது. வாங்கி வரும் பொறுப்பை ஏற்ற வேதமூர்த்தி முதலியாருக்கும் வ.உ.சிக்கும் இடையில் எழுந்தது மன வேறுபாடு. பின்னாளில் வ.உ.சி. சிறை சென்றபோது அவர் மீது கொண்ட பெரும் பற்றினால் அவர் வாழ்வும் தியாகமும் குறித்து இத்தமிழ்ச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டுமென்று முனைந்து வ.உ.சி. குறித்த நூல் ஒன்றை எழுதிய வேதமூர்த்தி முதலியார், அப்புத்தகத்தில் தன் பெயரை வெளியிட்டுக்கொள்ளவில்லை என்ற செய்தியை, பரலி சு. நெல்லையப்பர் மூலமாகத் தான் அறிந்ததாகக் கூறும் பி.ஸ்ரீயின் குறிப்பைத் தருகிறார். பின்னாள்களில் வ.உ.சி. வரலாறு எழுதிய (ஜீவிய சரிதம்) எம்.கிருஷ்ணசாமி ஐயருக்கு அடிப்படையாய் முதலியார் எழுதிய நூலே அமைந்திருக்கலாம் என்பதையும் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்றார் நூலாசிரியர்.
திலகர் இந்து சமய ஆச்சாரங்களில் வ.உ.சியினின்று முற்றிலும் மாறானவர் என்றபோதும் சுதேசிய எண்ணத்தால் அவரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார் வ.உ.சி. அன்னிபெசண்ட் அவர்களின் அரசியல் பார்வையில் தனக்குப் பெரும் முரண் இருக்க, பொதுவெளியில் அதைத் திலகருடன் விவாதிக்கும் உரனுடையவராயிருந்தார் வ.உ.சி..
காந்தியின் எழுச்சியும், திலகரின் அரசியல் சீடர்களின் பாதையைப் பாரிய அளவில் பாதித்தன. திலகரின் மறைவிற்குப் பிறகு அவரின் வட நாட்டு சீடர்கள் இந்து சபை உறுப்பினர்களாயினர். தமிழ்நாட்டு சீடர்கள் காந்தி சார்ந்திருந்த காங்கிரஸைச் சேர்ந்தனர். பாரதி காந்தியை 'வாழ்க நீ எம்மான்' என்று பாட, சுப்பிரமணிய சிவா ஸ்ரீ திலகர் காந்தி தரிசனம் என்ற கற்பனை நாடகத்தை இயற்ற, கிருஷ்ணசாமி சர்மா, திலகரும் காந்தியும் என்ற தனி இயலைப் படைக்கிறார்.
பட்டாபி சீத்தாராமைய்யா எழுதிய காங்கிரஸ் வரலாற்றில் ஒரு இடத்தில் கூட வ.உ.சி. பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த நீரோட்டத்தில் இணையாததனாலே வ.உ.சி.யைக் காங்கிரஸ் புறக்கணித்தது. வ.உ.சியின் சிலையைக் காங்கிரஸ் நிறுவத் தயங்கியதையும் பின் அது நிறுவப்பட்டு அமங்கலமாக ஒரு தீ விபத்து நேர்ந்ததைக் காரணம் காட்டி அப்புறப்படுத்தப்பட்டதையும் ம.பொ.சியின் தகவல்களைக் கொண்டு சுட்டிக்காட்டுகின்றது இந்நூல். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரும் விழிப்பை ஏற்படுத்தியது வ.உ.சி. வழக்கு. விடுதலைப் போராட்டத்தோடு, தொழிலாளர் இயக்கம், பிராமணர் அல்லாதார் இயக்கம், சமயச்சீர்திருத்தம், தமிழ் மறுமலர்ச்சி என வ.உ.சி. செயலாற்றிய களங்களை விரிவாகச் சுட்டிக்காட்டும் ஆதாரங்களையும் அவர் காலத்தில் வந்த பதிவுகளையும் அவர் இறப்புக்குப் பின் வெளியான இரங்கலுரைகளையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.
வ.உ.சி. பற்றி ரகசிய போலீஸார் எழுதிவைத்த குறிப்பு, தமிழிலும் ஆங்கிலத்திலும் எம்.கிருஷ்ணசாமி ஐயரால் எழுதப்பட்ட வ.உ.சி. வரலாறு, சிஐடி அறிக்கை, பரலி சு. நெல்லையப்பர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம், இதழ்களில் வ.உ.சி.யின் மறைவுக்கு வெளியான இரங்கலுரைகள், தீர்மானங்கள், பிற்சேர்க்கைகள் என முக்கிய சான்றாதாரங்களைத் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம், வ.உ.சி. என்னும் பெரும் ஆளுமை குறித்து வரலாற்றின் பக்கங்களில் விடப்பட்ட சில இடங்களை நிறைவுசெய்யும் சாத்தியம் கொண்டது.
என் மனைவியையும் புத்திரனையும் கடவுள் கையில் ஒப்புவித்திருக்கிறேன். அவர் எங்களுக்கு எது நன்மை என்பதை என்னைவிட நன்குணர்வார் என்று தேசத் தொண்டைத் தன் முதற்கடனாகக் கொண்டு செயல்பட்ட வ.உ.சி., சுதேசிக் கப்பல் கம்பெனியின் செயலாளர் நிலையிலிருந்து இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த பங்குதாரார்களால் பணியாளர் நிலைக்குத் தள்ளப்பட்டதையும், சிறை சென்ற பின் சுதேசிக் கப்பல்கள் யாருக்கு எதிராக இந்தக் கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டதோ அந்த பிரிட்டீஷ்காரர்களிடமே விற்கப்பட்டது என்ற அவலத்தையும் வானமாமலை எழுதிய வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி என்ற நூல் வழி அறியலாகின்றது.
வ.உ.சி. சிறையில் பட்ட துன்பங்களைப் பற்றியும் சிறையிலிருந்து மீண்ட பிறகு தேசிய இதழ்கள் அவர் எதிர்கொண்ட வறுமையையும் பேசிய அளவிற்கு அவர் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கப் பணிகளையோ, அரசியல் செயல்பாடுகளையோ, சமூக சீர்திருத்தப் பணிகளையோ, இலக்கியப் பணிகளையோ பேசவில்லை. பொது வாழ்விலிருந்து அவர் விலகிவிட்டதைப் போன்ற தோற்றத்தையே பதிவுசெய்தன என்று குறிப்பிடும் இந்த நூல், 'காந்திய யுகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அவரை ஒதுக்கியதையோ நீதிக் கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் 1920களின் பிற்பகுதியிலிருந்து அவர் ஆர்வம் செலுத்தியதையோ மறைத்தன அல்லது இடைப்பிறவலாகவும் சூசகமாகவும் மட்டுமே உணர்த்திச் சென்றன. கடைசி மூச்சு வரை அவர் காங்கிரஸில் இருந்ததாகவே சாதித்தன'. (ப.31,வாராது வந்த மாமணி) வ.ரா., 'அரசியல் உலகில் சாதாரணமாய்க் காணப்பெறும் உபாயங்களை பிள்ளையவர்கள் கைக்கொண்டு வாழ்ந்திருப்பாரானால், அவர் இன்றைக்கும் தலைவர் என்று மதிக்கப்பட்டு பிரசங்க முழக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டே வந்திருப்பார். வேஷம் போடத் தெரியாததனால் யோக்கியராய் அவர் அக்ஞாத வாழ்வு வாழ்ந்துவருகிறார்' என்று மணிக்கொடியில் எழுதியதை இங்கு நினைவுகூரலாம்.
1918 முதல் 1924 வரை தீவிரமாகத் தொழிலாளர் இயக்கத்தில் பணியாற்றிய வ.உ.சி, 1928இல் கோவில்பட்டி சதி வழக்கில் காங்கிரஸ் தொண்டர்களுக்காக இலவசமாக வாதாடினார். ஆனால், வ.உ.சி.யின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சென்னையில் ஒரு அனுதாபக் கூட்டத்தைக்கூட நடத்தவில்லை என்பதையும் சத்தியமூர்த்தி போன்றவர்களால் வகுப்புவாதி என்ற வ.உ.சி. 'கடுஞ்சொற்களால் பழிக்கப்பட்டதாகவும் எனது போராட்டம் நூலில் ம.பொ.சி. பதிவுசெய்ததை ஆசிரியர் இங்கு எடுத்தாண்டிருக்கிறார்.
வ.உ.சி. ஐயராக இருந்திருந்தால் தேசிய இதழ்கள் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் என்று குடியரசு பதிவுசெய்ததையும் கொழும்பின் வீரகேசரி இதழ் சிறப்பான அஞ்சலி செலுத்தியதையும் தன்னாடு, தன்தேயம், தன்னரசு என்ற பாலை முதலில் திருநெல்வேலி ஜில்லாவுக்கு ஊட்டிய தேசியத்தாய் சிதம்பரனார் என்று ஊழியன் எழுதியதையும் பதிவுசெய்வதன் மூலம் மைய நீரோட்ட அரசியலுக்கு ஏதுவாகச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் எவ்வாறு வ.உ.சி.யின் மறைவைப் புறக்கணித்தன அல்லது வெளியிட்ட செய்திகளில் எவ்வளவு ஓரவஞ்சனை கொண்டிருந்தன என்னும் தெளிந்த பார்வையை நமக்கு வழங்குகின்றது இந்தத் தொகுப்பு.
வீரகேசரியில் தான் வ.உ.சி. தன் அரசியல் குருவான திலகரின் வரலாற்றை அதன் ஞாயிறு வாரப்பதிப்பில் தொடராக எழுதி வெளியிட்டார். நிதி திரட்டுவதற்கான அறிக்கை, இறுதி ஊர்வலக் காட்சியின் ஒளிப்படம், வாசகர் கடிதங்கள், கையறுநிலைப் பாடல்கள் எனப் பலவற்றை எழுதி வெளியிட்டது வீரகேசரி. செந்தமிழ், கலைமகள் போன்ற இதழ்கள் எழுதவில்லை. காந்தி, நேரு, ராஜாஜி போன்றவர்கள் யாரும் இரங்கல் குறிப்பு வெளியிடவில்லை என்பதையும் அறியத்தருகிறது இந்த நூல். தரவுகளை முயன்று சேகரித்தல், தொகுத்தல், கால வரிசைப்படி முறைப்படுத்தல், தகுதி அறிதல், மதிப்பிடுதல், திறனாய்தல் அதன் மூலம் வரலாற்றுப் பூர்வமான மெய்மைத் தன்மையை வாசிப்போர் அறியச் செய்தல், வாசகர்களே அதன் தரங்களை மதிப்பிட்டுக்கொள்ளும்படியான தெளிவை வழங்குதல், புதிய தேட்டத்திற்கான ஆர்வத்தை உருவாக்குதல் என வரலாற்று ஆய்வுக்கான சிறந்த அடிப்படைகளைக் கொண்டிருக்கும் இந்த நூல் வ.உ.சி. போன்ற மாபெரும் ஆளுமையின் வரலாற்றைப் பதிவுசெய்ததில் மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது.
- முனைவர் ந.கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.