கவிஞர் பேனா மனோகரன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து, இங்கு கல்லூரி படிப்பை முடித்து, காவல்துறை சார் ஆய்வாளராக பதவிஏற்று, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக சமீபத்தில் பணி நிறைவு பெற்று அரசுப் பணியிலிருந்து விட்டு விடுதலையானதும் "கற்றறிந்த காக்கைகள்" என்னும் கவிதைத் தொகுப்பினை தமிழ்கூறும் நல்லுலகிற்கு சமர்ப்பித்துள்ளார். 

காவல்துறைப் பணியிலிருந்த போதும் எங்கெங்கு முற்போக்கு படைப்பாளிகளின் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறதோ, அங்கு சென்று தனது மனதின் ஆழமான எண்ணங்களுக்கு வடிகாலைத் தேடிக் கொள்வதுண்டு. அங்கு பலரிடம் தன்னை அறிமுகப்படுத்தி நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வதோடல்லாமல், அவர்களுக்கு தன்னாலான உதவியினை செய்ததுண்டு.இப்படியான கவிஞர் தனது அனுபவத்தை "கவிதைச் சட்டை ஆகும் காக்கிச் சட்டை" என்னும் கவிதையில் பதிவு செய்கிறார் பேனா மனோகரன். 

பொதுவாக கவிதை - தேங்காய் உடைப்பது போல் வெளிப்படையாய் சொல்வது ஒரு ரகம்; பூடகமாய் குறிப்பால் உணர்த்தி வாசகனை யோசிக்க வைப்பது இன்னொரு ரகம்; சொல்ல விரும்புவதை இருண்மையாய்ச் சொல்லி வாசகரை திணறடிப்பது மூன்றாவது ரகம்.கவிதையில் யதார்த்தம் வெளிப்பட நேர்படச் சொல்லும் கவிஞர் பேனா மனோகரன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் என்று அவரது "கற்றறிந்த காக்கைகள்" தொகுப்பு வெளிப்படுத்துகிறது. 

"... கபடமுள்ளவைகள் என்றா 

காக்கைகளை சுட்டுகிறீர்கள்?

இல்லை; கிடைக்கும் உணவை 

கமுக்கமாக அமுக்கக் 

கற்றுக் கொள்ளவில்லை 

அவை இன்றும்!" - என்று அழுத்தமாகச் சொல்லும் கவிஞர், காக்கைகள் கற்றுக் கொண்டது என்ன என்பதை "கோழிகளும் நாய்களும் கொண்டது போகச் சிந்திச் சிதறியதை -அணில்கள் வந்து -அள்ளிச் செல்வதை எட்ட இருந்தே அமைதியாகப் பார்த்து பறக்கின்றன. கற்றறிந்த காக்கைகள்" என்று காக்கையின் உயர்ந்த குணத்தினைச் சொல்லி மனிதரிடம் இத்தகைய குணம் இல்லை என்பதை சொல்லாமல் வாசகனுக்கு உணர்த்துகிறார். "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்ற பாரதியின் வரிகளுக்கு மேலே பறிக்கிறார். 

புங்கை மரக்கிளையில் 

பூங்கா ரயில் ஓட்டி மகிழும் 

அகதி அணில் குஞ்சுகள் 

மரணபயம் இல்லாமலே...! (பக்.5)

என்ற கவிதையில் குழந்தைகள் தமது அகதிநிலையை மறந்து மரணபயமின்றியும் விளையாடும் சூழலை அணில் மூலமாக உணர்த்துகிறார். ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உணர்த்தும் தமிழ்க் கவிதை மரபு இங்கே மிளிர்கிறது. 

புதிதாகக் கட்டி குடிபுகுந்த வீட்டின் பார்வை மறைக்கும் புங்கை மரத்தின் கிளைகளை வெட்டச் சென்ற மகன், அதில் குருவியின் கூடு இருப்பது கண்டு வெட்டாமல் திரும்பும் மகனின் ஜீவகாருண்யத்தை 'வீடும் கூடும்' கவிதையில் தர்சிக்கும் மழலை ஒலிக்கும் 'சுட்டபழமும் சிறுகை அளாவிய கூழும் (பக்.8) என்ற கவிதையை வாசிக்கையில் மனசெல்லாம் சிலிர்க்கிறது. 

"சூர்ப்பனகை நிலைகண்ட ராவணனைப் போல கலங்கி வேப்பமரத்தை விசாரிக்கச்சென்ற கவிஞனை வேப்பமரம் விசாரணைக்கு உட்படுத்தும் கவிதை வாசகமனதை உறுத்துகிறது. இந்தக் கவிதை அசாமில் அகில இந்திய வானொலி நடத்தும் 'கவிசம்மேளன்' நிகழ்ச்சியில் வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இக்கவிதையின் வீச்சினை உணர்த்தி வாழ்த்தத் தோன்றுகிறது. 

"எப்போதும் வருகிற/தபால்காரரிடம் இருந்த சினேகிதம். 

எப்போதாவது வந்து போகிற/கூரியர்காரரிடம் இல்லை" என்னும் உறவுகள் கவிதை வரிகள் வாசகமiதை பிசைகின்றன. இக்கவிதை பொதுத்துறை நிர்வாகத்திற்கும் தனியார்மயத்திற்கும் உள்ள வேறுபாட்டை அற்புதமாக குறிப்பால் உணரச்செய்கிறது. 

வலைகள்கூட /மீன் குஞ்சுகளைப் 

பிழைத்துப்போ என்று / வழி விடுமே 

அலைகளே... நீங்கள் எங்கள் பிஞ்சுகளுக்கு 

இழைத்தது பெருத்த அரக்கத்தனம்!" என்று 

ஆழிப்பேரலை சுனாமியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கவிஞரின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது. 

இத்தொகுப்பின் கவிதைகள், புலம் பெயர்ந்தோர் பிரச்சனைகள், தனியார்மயம், உலகமயத்தால் ஏற்படும் பண்பாட்டுச் சிதைவுகள், இவற்றையும் மீறி மிளிரும் மனிதாபிமானம் போன்றவற்றை கருக்கொண்டுள்ளன. மொழிநடையிலும் எடுத்துரைப்பிலும் முன்னைய பழமைக்கும் பின்னைய புதுமைக்கும் ஊடு சரடாய் மரபின் கண்ணிகளாய் இக்கவிதைகள் முற்போக்கு திசை நோக்கி நகர்கின்றன. 

- ஜனநேசன்

வெளியீடு:

நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை 600 098

விலை : ரூ.35/- 

Pin It