ஜெயகாந்தன் சிந்தனைகள்

தொகுப்பு: திலகவதி

பக்: 184

ரூ. 70/-

வெளியீடு:

அம்ருதா பதிப்பகம்

சென்னை -114

ஒரு மரபை உடைப்பதற்கு அதைவிடவும் பலமான ஒரு புதிய மரபைக் கைகொள்ளுதல் வேண்டும். இலக்கியம் காலத்திற்கு ஏற்ற மனிதனை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஜெயகாந்தனின் பல்வேறு தலைப்புகளில் எழுதிய 32 கட்டுரைகள் அடங்கிய நூல்.


தமிழக வரலாற்றில் தடம்
பதித்த தோழர்கள் (பாகம்-2)

வ. மோகன கிருஷ்ணன் வெளியீடு:

தியாக தீபங்கள்

சென்னை - 89

பக்:208 ரூ. 60/-

பொதுவுடைமை இயக்க வரலாற்றில் தலைமறைவுக் காலங்களில் பணியாற்றிய பத்தொன்பது தோழர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த நூல்.

கடவுள் ஒரு மார்க்சிய பார்வை

ஜீயென்பி

பூங்குயில் வெளியீடு, வந்தவாசி-8

பக். 128 விலை. ரூ. 60/_

‘கடவுளை மற....மனிதனை நினை’ என்று தந்தை பெரியார் முழங்கினார். ஏனெனில் கடவுள் மனித எலும்புகளை மாலையாக கேட்டது. மனித இனத்தில் பாகுபாடுகள் பல செய்து ரத்தத்தால் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டது. சாதி வெளியேறி சாமியாடியது......மார்க்சியம் இந்த விஷயத்தை தர்க்க ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் அணுகுகிறது. கடவுள் உண்டா...எனும் நேரடி கேள்விக்குள் மார்க்சியர்கள் செல்வது கிடையாது....ஆனால் மார்க்சிய பொருள் முதல்வாதம் கடவுளை மட்டுமல்ல.....அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் எத்தகைய சுரண்டலையும் இழித்தெரிகிறது. இந்தப் புத்தகம் அதற்கு சாட்சி.

முதலில் ரொம்ப ஆழமாக ஓர் அறிவுஜீவித கட்டுரையில் தொடங்கும் ஜீயென்பியின் எழுத்து ஒரு முப்பது பக்கம் கடந்துபோனதும் ரொம்ப நெருக்கமாகி இருபக்க விவாதங்களையும்.....‘கோவிச்சிக்கிட்டு போவாதீங்க.....ஒரு நிமிசம் இருங்க’ எனும் மொழியில் சரளமாய் அலசுகிறது.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் திராவிட நாகரிகத்தின் மீது படையெடுத்த ஆரியர்கள் _ குதிரை உள்ளிட்ட புதிய விலங்குகளோடும்....வேதங்களோடும் கலாசார கலப்பு செய்ததை மார்க்சிய வழியில் மீதி நூல் விளக்குகிறது.....வெறும் இந்துமத எதிர்ப்பு வரட்டு பிரச்சாரமல்ல......அனைத்துவகை கடவுள்களின் தோற்றம் வளர்ச்சி மதங்களின் சமுக அறிவியல் என பரந்துபட்டு விரியும் ஒரு புத்தகம். இன்றைய ஆன்மிக பிசினஸிற்கு எதிராக நமக்குக் கிடைத்த முக்கிய ஆயுதம். இளைஞர்களுக்கு நாம் இதை நூற்றுக்கணக்கில் வாங்கித்தர வேண்டும்.

புவியியலை புரிந்து கொள்வோம்

கேத்தரின்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை _ 18

பக்: 48 விலை : ரூ. 20/-

அனைத்து அறிவியலுக்கும் புவியியலே மூத்த தாயாக இருக்கிறது. அரிஸ்டாட்டிலில் இருந்து ஆரம்ப அறிவியல் பிதாமகர்கள் புவியை ஆய்வு செய்யவே களத்தில் குதித்தார்கள். இன்று காலநிலை _ மாறுபாடும் புவி வெப்பமேற்றமும், திடீர் இயற்கை பேரழிவுகளும் _ மனித தொழில் வளர்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசும் புவியை அழிவை நோக்கி மிக வேகமாய் இழுத்துச் செல்கின்றன.

இன்றையச் சூழலில் புவியியல் முக்கிய அறிவியல் துறை ஆகிறது. அதன் அடிப்படைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உணர உரைக்க தமிழில் புத்தகங்கள் இல்லை. அக்குறை நீக்கவந்த புத்தகம் இது. கேத்தரின் கவனத்தோடு அதே சமயம் எளிய நடையில் நூலை நகர்த்தி செல்கிறார். புவியியல் ஆசிரியர்களுக்கு இந்தப் புத்தகம் பாடத்தை எளிமைப்படுத்தி சுவைகூட்ட பயன்படும்.

சுனாமிப் பேரலைகள் முதல் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை, இந்திய கனிம வளம் என இந்த 48 பக்கங்களில் பல புதையல்கள் மறைந்துள்ளதை இதை வாசிப்பவர்கள் உணர முடியும். அறிவியல் ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

மானுட வீதி

கமலாலயன்

இயற்கை வெளியீடு, சென்னை-94

பக்: 140 விலை: ரூ. 65/_

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழில் முக்கிய இலக்கிய தேடலை மேற்கொண்டவர் கமலாலயன். தீவிரமான வாசகர். மார்க்சிய சிந்தனையாளர். ஆங்கிலம், ரஷ்யா, பிரெஞ்சு, மலையாளம், வங்காளம், ஹிந்தி உட்பட பன்முக இலக்கியம் மொழி கலாசாரம் என தேடலை விரிவுபடுத்தி தமிழில் ஒரு புதிய சகாப்தம் கண்டவர்.

கமலாலயனின் விமர்சனங்கள் மயிலிரகால் அடிப்பது மாதிரி முதலில் வலி இல்லாமல் இருந்து ஆனால் ஒரு சைலன்சர் போல மாரை துளைத்து எதிரியை வீழ்த்தும் வீரியமிக்கவை. அவ்வகையான அவரது கட்டுரைகள் கணையாழி உட்பட சீரியஸ் இதழ்களில் வெளிவந்து தீவிர வாசகபரப்பை சென்றடைந்தவை. அவற்றின் தொகுப்பாக இந்தப் புத்தகம்.

பதினோறு முக்கியக் கட்டுரைகள் இந்தத் தொகுதியில் இடம் பெறுகின்றன. மாஜிக்கல்ரியலிஸத்திலிருந்து லாசாரா வரை கமலாலயன் தனது மயிலிறகு விமர்சன பார்வைக்கு உலக விஷயங்கள்......அரசியல்....இலக்கியம் என பலவற்றை போட்டு சாத்துகிறார். ஒரு எளிய வாசகனை ஒற்றையடி பாதை வழியே காட்டுமலை வழியே மனம் பதைக்கவைக்கும் முரட்டு மொழியின்றி எளிய சொற்பிரவாகம் வழிகாட்ட அழைத்து செல்வதுதான் அவரது சிறப்பு..... ‘காலம்’ நாவல் தமிழில் வந்த சூழலும் லாசாரா குறித்த விமர்சனமும், கியூப புரட்சிகர எழுத்தாளன் ஹோசமார்த்தியின் வாழ்வை முன்வைக்கும் அற்புதக் கட்டுரையும் உள்ளது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அம்சங்கள்.

வளர்பிறைகள் தேய்வதில்லை

 ப. ஜீவகாருண்யன்

மணியம் வெளியீடு, குறிஞ்சிப்பாடி

பக் : 152

விலை : 80/-

சீறிய படைப்பாற்றலுடன் வீரியமிக்க வேகத்துடன், எளிய அதேசமயம் இலக்கிய சுரணையுடன் செயல்படும் தமிழ் எழுத்தாளர்களின் முதன்மை பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டால் அதில் கட்டாயம் இடம்பெற வேண்டியவர் ப. ஜீவகாருண்யன். ‘ஒரு நதியைப் போல, வேட்டைக்கு தப்பிய விதைகள், உயிர்க்கும் மனிதம்’ மற்றும் வசந்தம் வரும் ஆகிய சிறுகதை தொகுதிகள் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைந்தவை......இப்போது அவரது ஐந்தாவது கதை தொகுதியாக ‘வளர்பிறைகள் தேய்வதில்லை’ பத்தொன்பது கதைகளோடு வெளிவந்துள்ளது. எல்லாமே மணியான தோழமை கதைகள்.

இசுலாமிய பொம்மை ஜோடி, கண்ணாடி விற்கும் ராம்கோபால், ராமானுஜ பட்டர், எறும்பு மிக்சர் மீசைக்காரர் என வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் நம்மையும் நமது நாகரிக வாழ்வின் அபசுரங்களை பிரகாசிக்கின்றன ஜீவகாருண்யாவின் கதைகள். ‘பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து பல தலைமுறைகளாக கடப்பம் தூக்கு சிரைத்து திருவிழா காலத்தில் நாதசுரமும் வாசிக்கும் வேலை வாய்க்கப்பட்ட குட்டியப்பன்’ குடும்பம் போல குலத் தொழிலில் சிறையிட்ட மனிதர்களும் வலம் வரும் தமிழ் சூழலிய அடைப்புகளைத் திறந்துவிட்டு நம்மை நெகிழ வைக்கும் இது போன்ற கதை தொகுதிகளை தமிழ் வாசகபரப்பு ஆராதித்து பத்திரப்படுத்த வேண்டும்.

இளைய தலைமுறையின் கடமைகள்

இ.எம்.எஸ். தமிழில்:

வி.கெ. பாலகிருஷ்ணன்

ஈரிஸ் வெளியீடு, சென்னை-92

பக் : 31

விலை : 12/_

உலகப் படையெடுப்பு என்பதன் அர்த்தம் பொருளாதார படுத்தப்பட்டுவிட்ட நிலையில் ஹிட்லரை விட பல மடங்கு பயங்கரமான ரத்தக் காட்டேரிகளாக இன்று உலக நிதிநிறுவன எஜமானர்கள் வலம் வருவதை பார்க்கிறோம். மூன்றாம் உலக நாடுகளை ஒட்டச் சுரண்டி இஷ்டப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் ஏகபோக நாடுகள் ஏதோ இது ஒரு நிரந்தரமான நிலையாக பிரச்சாரம் செய்வதும் தொடர்கிறது. இ.எம்.எஸ். இதை முன் உணர்ந்து 1992_இல் எழுதி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிட்ட சிறு பிரசுரம் இது.

இந்த நூலில் அவர் சுட்டிக்காட்டும் விஷயங்கள் பல. குறிப்பாக இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி தோன்றி, 1934_லிலிருந்து அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக எப்படி மலர்ச்சி அடைந்தது என்பதை தனக்கே உரிய ஆணித்தரமான எழுத்து வழியே அடுக்கிச் செல்வதிலிருந்து..... ‘நாற்றமில்லா நகரம், வறுமை இல்லா கிராமம்’ என்பது நோக்கி இளைஞர்கள் எப்படி ஒன்றிணைய வேண்டும் என்பது வரை நாம் அவரோடு உட்கார்ந்து ஒரு மணிநேரம் எழுச்சியோடு உரையாடிய திருப்தியை இந்த பிரசுரம் நமக்குத் தருகிறது.

லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக இப்போதாவது இது தமிழில் வெளிவந்தது நமக்கு மகிழ்ச்சி. இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்.

Pin It