இயற்கைப் பேரிடர்களாகிய புயல், வெள்ளம், மழை இன்மை, வறட்சி போன்றவை ஏற்படும்போது ‘மண்ணுக்கு மேலே, மானத்துக்குக் கீழே இருந்து கொண்டு மனுசனால என்ன செய்ய முடியும்?’ என்று வயதானவர்கள் இயலாமையை வெளிப்படுத்துவார்கள். பெரும் வெள்ளம் வந்தால் மாடி வீட்டில் மிதக்க வேண்டும். நிலநடுக்கம் வந்தால் அடுக்கு மாடி வீட்டில் இருந்து வீதிக்கு ஓடிவர வேண்டும்.

மனிதனின் ஆறாவது அறிவு ஆற்றல் மிக்கது என்பதில் ஐயமில்லை. அண்டத்தை அலசிப் பார்க்கிறது. வானை முட்டும் கட்டடங்களை எழுப்புகின்றது; மலையைப் பிளக்கின்றது; பூமிக்குள் தோண்டிக் கனிம வளங்களை எடுத்துப் புகை விடுகின்றது; ஓசோன் படலத்தையே ஓட்டை போடுகின்றது.

panaiyadiவளர்ச்சி, பெருக்கம் எனத் தேவைக்கு மேலாக இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுப் புவி மண்டலம், வெப்ப மண்டலம் ஆவதால் வானம் பெய்து அழிக்கின்றது அல்லது பொய்த்து அழிக்கின்றது. பனிமலைகள் உருகி ஓடாய்த் தேய்கின்றன. பூமி சுண்ணாம்புக் காளவாய் போலக் கனன்று கொண்டிருப்பதால் ஊர்பவை, நடப்பவை, பறப்பவை எனப் படிப்படியாக உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கண்ணில் பட்ட புல், செடி, கொடி, மரங்களைத் தற்போது காணமுடியவில்லை.

இயங்கும் இயங்காத அஃறிணை உயிரினங்கள் பூமியில் வாழ எவ்வளவோ முயற்சி செய்கின்றன; முடியவில்லை. குமிழம் செடி ஒன்றைப் பார்க்கும்போது தெரிந்தது. ஆள் உயர அளவிற்குக் கிளை பரப்பி வளர்ந்திருக்கும். எள்ளுப் பூவைப் போன்ற வடிவில் மஞ்சளாக இருக்கும். பூவை மகளிரின் மூக்குக்கு உவமையாகக் கூறுவார்கள். காயைப் பொடுகைப் போக்கத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பார்கள்.

ஒரு குமிழஞ் செடியைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உயர்ந்து வளர வேண்டியது மெலிந்து, சில கிளைகளுடன் பூமியில் படர்ந்து கிடந்தது. இருந்தாலும் பூக்கத் தவறவில்லை. ‘பனையடி' என்னும் ஒரு புதினத்தைப் படிக்கும்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு போலான குமிழஞ் செடி நினைவிற்கு வந்தது. தொழில் செய்வோரில் குறிப்பாகப் பயிர்த்தொழில் செய்வோர் பெரும்பாலும் குமிழம் செடியைப் போலத்தான் குறுகிக் கொண்டே போகின்றார்கள்.

வேளாண் பெருமக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் காதில் பாய்ந்து கொண்டிருக்கும். ‘விவசாயிகளின் வருமானத்தை எதிர் காலத்தில் இருமடங்கு ஆக்குவோம்!’

பொறியில் மாட்டிக் கொண்ட எலி தப்பிக்கத் துடிப்பது போலத்தான் வேளாண் பெருங்குடி மக்கள் அந்தப் பாச வலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றார்கள். பசுமைப் புரட்சி விவசாயிகளிடமிந்து ஈரக்குலை முதற்கொண்டு எல்லாவற்றையும் உருவிக்கொண்டது. கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இயற்கையாகச் செய்யப்பட்ட வேளாண்மை, கார்பரேட்களின் இயந்திரக் கரம், இரசாயன உரக்கரம், பூச்சி களைக்கொல்லிக் கரங்களில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகின்றது. விளைச்சலின் வளர்ச்சி எனப் பெருமையாகப் பேசுகின்றார்கள். விளைச்சலின் வளர்ச்சி இல்லை; அது வீக்கம். நெருப்பைத் தின்றால் கருப்பாகத்தான் வரும் என்பார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை மருந்து, மாத்திரை இல்லாமல் வாழ முடியாது என்னும் நிலையில் பொது மக்களும் மருந்து - மாத்திரைகளின் வன் கரங்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.

விவசாயிகளைச் சும்மா விடமாட்டோம் என்று ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வேறு கொண்டு வந்து ஆயிரத்தை நெருங்கும் உயிர்களை காவு வாங்கிக் கொண்டு தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. யார் யார் எல்லாமோ விவசாயிகளுக்கு அறிவுரை கூற ஆரம்பிப்பதுதான் வேதனையின் உச்சம். பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தவர்களிடம் நெல் மரத்தில் விளையுமா? செடியில் விளையுமா என்று கேட்டாலே குழம்பிப்போய் விடுவார்கள். அவர்களில் எந்த விதத்திலும் குறையாதவர்களே மூன்று வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்கள். நடிகர், விளையாட்டு வீரர் என விவசாயத்தைப் பற்றி அ, ஆ தெரியாதவர்கள் கூட விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்று அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டார்கள்! காலம் போடும் கோலம் என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

எவ்வளவோ குறுக்குச்சால் ஓட்டிப் பார்த்தும் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போராட்டங்கள் உலகெங்கிலும் நிகழ்ந்துள்ளன. ஆனால் முதியோர் உட்படப் பல லெட்சம் வேளாண் பெருமக்கள் தில்லியின் புறப் பகுதியில் கூடி அற வழியில் போராடி வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்குத் தலை வணங்க வேண்டும். உற்பத்தியாளராக மட்டும் இல்லாமல் உணவுப் பொருளை வாங்கி உண்ணும் நுகர்வோருக்காகவும் போராடி உள்ளார்கள்.

எவ்வளவுதான் கெட்டு மலிந்தாலும் கல்விக்கு ஈடு இணையாக எதுவும் இல்லை என்பதை உலகம் முன்பே அறிந்திருந்தாலும் இந்தியா அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நேரத்தில் அறிந்து கொண்டது. குலத்தொழிலால் கல்வி பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்டது.

கல்வி இல்லை என்றால் எல்லா மூதேவிகளும் ஒரு குடும்பத்திற்குள் புகுந்து தாண்டவமாடும். வறுமை பிடித்துக் கொள்ளும்; நோய் உலுக்கி எடுக்கும்; விழிப்புணர்வு இருக்காது. செக்கு மாடு போல வாழ்க்கை சுழன்று கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட சிக்கல்களில் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்த ஒரு சிறுவன் பள்ளிக் கூடத்தில் படித்து, வேளாண் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று, கஜினி முகமது போலப் பலமுறை தோற்று, போராடி ஐந்தாவது முறையாக இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) பெற்ற இரா.செல்வம் என்னும் இளைஞரின் வாழ்க்கைதான் தமிழ் என்னும் கதை மாந்தர் வழிப் புதினமாக விரிகின்றது.

‘பனையடி' என்னும் புதினத்தைப் படிக்கும்போது பல்வேறு களங்களுக்கான செய்திகள், நிகழ்வுகள் மனதிற்குள் வந்து சென்றன. முதலாவதாக தாங்கள் வலுவில்லா முருங்கை மரங்களாக மாறி, சத்து நிறைந்த முருங்கைக்காய், கீரையாகத் தங்கள் பிள்ளைகளை மாற்றிய பெற்றோர்கள் நினைவுக்கு வந்தார்கள். இரண்டாவதாக, கிராமங்கள் நான்கு திசைகளிலும் பிரிந்து கிடந்தாலும் அவற்றிற்கு இடையே உள்ள வாழ்வியல் முறையில் ஒற்றுமை இருப்பதைப் பனையடி புதினத்தின் வழி அறிய முடிந்தது. மூன்றாவதாக, ஒரு கிராமத்தில் பிறந்து பறவைக் குஞ்சு போலக் கூட்டில் இருந்து வெளி உலகம் காணச் செல்லும்போது பெறும் அனுபவங்கள் எப்படி இருக்கும் என்பதை இப்புதினத்தின் வழி ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

  1. முருங்கை மரம்

முருங்கை, அகத்தி போன்றவற்றை எல்லாம் முழுமரமாகக் கொள்ள மாட்டார்கள். ஒப்புக்கு ஒரு மரம் - அரை மரம் என்று கொள்ளலாம். ‘அகத்தி அரை மரம் தான்; வெட்டும் குத்தும் ஒரு முழந்தான்’ என்றொரு சொலவச் சொல் கூட இருக்கின்றது. சக்திக்கு மீறிய பயன்பாடு, இழிவை ஏற்றல் போன்றவற்றுக்காக இப்படிக் கூறுவார்கள்.

பனையடி என்னும் புதினத்தின் கதை மாந்தர் தமிழின் பெற்றோர்களாகிய அம்மா ராசகுமாரி, அப்பா நடுப்புள்ளை (இராமசாமி) இவர்களை நினைக்கும்போது முருங்கை மரமே நினைவுக்கு வந்தது. முருங்கை மரத்தின் காய், கீரையில் இரும்புச் சத்து இருக்கின்றது; அது இருக்கிறது; இது இருக்கிறது என்று பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் அவற்றைக் கொடுக்கும் முருங்கை மரத்தின் நிலையைப் பேச மாட்டார்கள். சமுதாய நிலை போன்றுதான்.

அரைக் காசு வேலையாக இருந்தாலும் அரசாங்க வேலைக்கு வந்துவிட்டால் போதும். ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் என மற்றவர்களைவிடச் சொல்லிக் கொள்ளும்படி வாழலாம். தனியார் நிறுவனங்களிலும் ஓரளவு மன நிம்மதியோடு வாழலாம். பேராசைப் பட்டால் எங்கும் நிம்மதியாக வாழமுடியாது.

ஆனால் வேலிக் கணக்கில் நிலம் வைத்திருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. வேளாண்மை தவிரப் பிறதொழிலைச் செய்பவர்கள் அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு அவர்களே விலை கூறுகின்றார்கள். ஆனால் சாகுபடித் தொழில் விளைபவற்றுக்கு மட்டும் உற்பத்தி செய்பவர்களால் விலை கூற முடியவில்லை என்று வருத்தப்படுவார்கள். காலங்காலமாகவே இப்படித்தான் நடக்கின்றது.

உலகமயம் உலகைக் கவ்விக் கொண்ட பிறகு பெருச்சாளிகளின் வளர்ச்சி இருநூறு, முந்நூறு விழுக்காடு அதிகம் என்கிறார்கள். முன்பெல்லாம் நூறு விழுக்காடு என்பது தான் உச்சம். தற்போது வளர்ச்சிக்கு ஏற்ப விழுக்காடும் வளர்ந்து விட்டது போலும்.

சுற்றுச் சூழலைக் கெடுத்தால் ஊர்பவை, நடப்பவை, பறப்பை, தாவரங்கள் என வேறுபாடு இல்லாமல் ஏறக்குறைய எல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்து விட்டன. ஆனால் எலிகளின் பெருக்கம் மட்டும் குறையவில்லை. பாம்புகளின் அழிவும் எலி பெருகுவதற்கு ஒரு காரணம்.

1970 - 80களில் நெற்பயிரை வெட்டி அழிக்கும் ஓர் எலியைக் கிட்டி வைத்துப் பிடித்தால் கூலி இரண்டு ரூபாய். 2021இல் நாற்பது ரூபாய். விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப உயர்ந்துள்ளது. அதிகம் என்பதற்காகக் குறிப்பிடவில்லை. ஓர் எலியைப் பிடிக்க இரண்டு ரூபாய் என்றும் நாற்பது ரூபாய் என்றும் பெயர் வைப்பவர் - விலை சொல்பவர் அந்த எலி பிடிப்பவர்தான்!

வேளாண் பெருமக்களை விளைபொருளுக்கு விலை வைக்கச் சொன்னால் வாங்கி உண்பவர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். அவர்கள் யானை விலை, குதிரை விலை வைப்பார்கள். விவசாயம் செய்வற்காகத் தண்ணீர் பெற, உழ, உரமிட எனக் கடன் வாங்கிக் கடனில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். அரசாங்கம் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை வைக்கும்போது விவசாயிகளையும் அரசாங்கம் ஒரு வார்த்தை கேட்கலாம்.

தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் புதியவை அல்ல. பழைய மொந்தையில் புதிய கள் தான். இந்தச் சட்டங்கள் வேளாண்மையைக் கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வழி செய்கின்றன; முடியாட்சிக் காலத்தில் நிலங்களைக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் முடியாட்சியில் ஊழியம் செய்பவர்களுக்கும் தானமாகக் கொடுத்தார்கள்.

நிலத்தில் இறங்கி உழைக்காதவர்களிடம் ஏகபோக நிலங்கள் மாட்டிக் கொண்டால் நில உரிமையாளர்கள், உழைக்கும் மக்கள் வலியக்க பண்ணை அடிமைகளாக ஆக்கப்படுவார்கள் என்பதற்குச் சோழ நாட்டின் கீழத் தஞ்சை நல்ல சான்று.

சங்க காலத்திலேயே ஒரு குலத்திற்கு ஒரு நீதி பேசும் கருத்துகள் பழத்திற்குள் இருக்கும் வண்டுகள்போல் புகத் தொடங்கி விட்டன. அப்படியே சமயம், சாதியாகப் பிரிந்துப்போட்டுக் குளிர் காய்ந்தார்கள். சமயங்கள் தமிழை வளர்த்ததாகப் பெருமையாகப் பேசுவார்கள். மக்களை வளர்த்தனவா? வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா? அவர்கள் தான் கூறவேண்டும்.

இப்படிப்பட்ட சூழலின் வழித்தோன்றலே பனையடி புதினக் கதை மாந்தர் தமிழின் பெற்றோரும். பிறகு அவர்கள் மட்டும் எப்படி நிம்மதியாக வாழமுடியும்? பிள்ளைகளைப் படிக்க முடியும்?

பன்றி சாக்கடையில் உழல்வதைப் போன்றுதான் கிராம மக்களும் விவசாயத்தோடு பிணைக்கப்பட்டு உழன்றார்கள். சாக்கடை நீராக இருந்தாலும் பன்றி அதில் விருப்பத்தோடு புரளும். ஆனால் வேளாண் மக்கள் விருப்பம் இல்லாமலேயே காலங்காலமாகப் புரண்டார்கள்.

கல்வி கற்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் நாட்டைச் சுரண்டிய அந்நியர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய கொடை; அவையும் மூடப்பட்டன. மது ஒழிப்பைக் கொண்டு வந்தபோது அந்த வருவாய் இழப்பை ஈடு செய்யப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. எவ்வளவு பெரிய தந்திரம்!

மக்களை மதுவில் இருந்து காக்க மதுக் கடைகள் மூடப்பட்டன; அறிவு பெறாமல் காக்கப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. கிராம மக்களின் வாழ்க்கையையும் வலியையும் அறிந்தவர் காமராசர்; பட்டி தொட்டி எங்கும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அதனால்தான் கர்ம வீரர் எனப் போற்றப்படுகின்றார். அவர் பெயர் ஒரு பல்கலைக் கழகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. சமூக நீதிக்காகப் பாடுபட்டோரின் பெயர்கள் எவ்வித வேறுபாடும் காட்டப்படாமல் தமிழகத்தில் பல்கலைக் கழங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளன.

திராவிட ஆட்சிகள் தமிழகத்தில் நிலை பெற்ற பிறகு ஆயிரக்கணக்கான பள்ளிகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள், பல பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. பெயர் சூட்டப்பட்டுள்ள தலைவர்களைப் பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர்களின் பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தை அவர்கள் சமூக நீதிக்காக எப்படி எல்லாம் குரல் கொடுத்துள்ளார்கள், பணிசெய்துள்ளார்கள் என்பனவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நால்வருணத்தில் அடிநிலையில் உள்ளவர்கள் படிப்பதற்கு எவ்வளவு நெருக்கடிகள்? முதலில் கல்வி மறுக்கப்பட்டது. பிறகு கிடைத்தது. உடனே கல்விக் காவலர்களாகப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார்கள். வருமானம் கிடைப்பதில் முன் நிற்பார்கள். நாய் விற்ற காசு குரைக்கவா போகின்றது? என எல்லாத் தொழிலையும் செய்வார்கள்.

இந்தியத் தரமில்லை; உலத்தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களை நிறுவுகின்றார்கள். தங்கள் பெண் பிள்ளைகளை உலகத் தரத்திற்கு உயர்த்த அரசுப் பள்ளிகளைத் துச்சமாக மதித்துப் பெற்றோர் அங்கே கொண்டு போய்ச் சேர்க்கின்றார்கள். சென்னைப் பகுதியில் இரண்டு, கோவையில் ஒன்று என மூன்று பள்ளிகளில் விலங்கனைய நிர்வாகத்தினர், ஆசிரியர்களால் மொட்டுகள் வேறுபாடு இல்லாமல் கசக்கி வீசப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் வளர்ந்த இளைஞன்தான் இந்தப் புதினத்தின் கதை மாந்தர் தமிழ் - இரா.செல்வம். கிராமப்புறங்களில் மாணவர்கள் மருத்துவர், ஐஏஎஸ், ஐபிஎஸ், பேராசிரியர், பொறியியலாளர் போன்ற உயர்ந்த பட்டம் - பதவிகளைப் பெற்றிருந்தால் அவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள் என்னும் நினைப்பு வரும். தமிழ் - இரா.செல்வத்தையும் அப்படித்தான் நினைக்க வைத்தது.

சத்துள்ள காயையும் கீரையையும் தரும் முருங்கை மரம் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போலக் காட்சிப்படும். மரத்துக்குள் இருக்கும் புழு குடைந்து வெளியே சக்கையைத் தள்ளும்; மரத்தைச் சுற்றிலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பிசின் வடியும். காற்று அடித்தாலும் கிளை முறியும்; மரமும் சாய்ந்து விடும். அந்தக் காலத்தில் முருங்கை மரத்தில் ஏறிக் கிளை முறிந்து முடமானவர்களே அதிகம் இருப்பார்கள்.

கரோனாத் தொற்றுக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வேளாண்மைதான் தூக்கி நிறுத்தியது என்பார்கள். கஜா புயல் அடித்தபோது லெட்சக் கணக்கான தென்னைகள் சாய்ந்து விட்டன. ஆனால் தமிழின் பெற்றோரைப் போன்ற முருங்கை மரங்களைப் புயலால் சாய்க்க முடியவில்லை.

பனையடி கதைமாந்தர் தமிழின் பிறந்த மண் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பநாயக்கன் பேட்டையும் எங்கள் ஒரத்தநாட்டுப் பகுதியும் நெருங்கிய தொடர்புடையவை. அந்தப் பகுதி நிரந்தரமான புன்செய்ப் பகுதி. ‘அண்டையில் காவேரி முழுக மாட்டாளாம் மூதேவி’ என்பதைப் போலக் காவிரியின் புதாறு பாய்ந்தாலும் பெரும்பாலும் புன்செய்ப் பகுதியாகவே ஆகிவிட்டது. காவிரியே கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கும்போது புதாறு எப்படிப் பொழியும்?

பனையடி புதினத்தின் தொடக்கமே கடலை விவசாயத்தில் தொடங்குகின்றது. அரியலூர், ஒரத்தநாடு என்னும் இவ்விரண்டு பகுதிகளிலும் பயிரிடும் காலம் வேறுபடுகின்றதே தவிர, வேளாண் பெருமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஒரே வகையில் உள்ளன. அரியலூர்ப் பகுதியில் இறவைப் பட்டம் ஐப்பசி - கார்த்திகையில் தொடங்குகின்றது. ஒரத்தநாட்டுப் பகுதியில் கார்த்திகை - மார்கழியில் பயிரிடுவார்கள்.

வடகிழக்குப் பருவ மழை குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து விடும். மார்கழி கடைசிக்குள் கடலை போட்டு விடுவார்கள். கை விதைக்கு மடி விதை வித்தியாசம் என்பார்கள். தை பிறந்து பயிரிடப்படும் கடலைக் கொடி மண்டி பொந்தை வேர் விடும்; விழுது அதிகம் இறங்காது. பருவத்தே பயிர் செய்ய வேண்டும் என்பதை முன்னோர்கள் பட்டறிவுடன் அறிந்திருந்தார்கள்.

தமிழின் அப்பா - நடுப்புள்ளையைப் போன்றுதான் கடலைச் சாகுபடி செய்கின்ற அனைவரும் விதையை மண்ணில் போட்டு விட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். ஐப்பசி-கார்த்திகை-மார்கழி மாதங்களில் எப்போது மழை பெய்யும் என்றே தெரியாது,

எல்லோரும் கடலை போட்டு விட்டார்களா? என்று வானம் பார்த்துக் கொண்டே இருக்கும், திடீரென்று குடத்தால் ஊற்றுவது போலக் கொட்டித் தீர்த்து விடும், நடுப்புள்ளையின் நிலையில்தான் கடலை போட்டவர்கள் எல்லோரும் இருப்பார்கள்,

“காலையிலும் மாலையிலும் இரவிலும் தொடர்ந்து பெய்தது பேய் மழை. பெருவௌ¢ளம். இனிமேல் கடலை முளைப்பதற்கு வாய்ப்பில்லை - கடலைச் சரக்கு பூபமியினுள் அழுகிப் போயின. இப்போது அவரது கால்கள் பனையடி நோக்கிப் பயணிக்கவில்லை. அவரது உணர்வுப் பரிமாற்றங்கள் கால்நடைகளுடன் நின்று போயின. காலை மாட்டுத் கொட்டகையைச் சுத்தம் செய்வது. பின், மாடுகளுக்குத் தீனி போடுவது. வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தார்” (ப.29).

இவ்வாறு போட்ட கடலை அழுகிப் போனால் அரசாங்கம் இழப்பீட்டை ஈடுசெய்யவிலை இல்லா விதைக் கடலை கொடுக்கும், விதையைப் பூமியில் போட்டுப் பாதிப்பு அடைந்தவா¢களை விட, விதைபோட்ட, போடாத கட்சிக்காரர்களே பலன் பெறுவார்கள்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்போதும் இப்படித்தான் நடக்கும். வங்கியில் பணியாற்றுபவர்கள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு ஊழியர் நகை அடகு வைக்கும்போது அந்த நிதியில் கடன் கொடுப்பார்கள் - தள்ளுபடி ஆகும்போது அவர்கள் பயனடைவார்கள்.

கார்த்திகை கால் கோடை; கார்த்திகைக்குப்பின் மாயும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை என்பார்கள் - ஐப்பசி - கார்த்திகையில் அரியலூர் பகுதியிலும் கார்த்திகை மார்கழியில் ஒரத்தநாட்டுப் பகுதியிலும் கடலைச் சாகுபடி செய்வதில் ஒரு நன்மை இருந்தது.

மிதமான ஈரத்தில் ஆறு-ஏழு நாட்களில் முளை முட்டிக் கொண்டுவரும். தண்ணீர் பாயாமலேயே மிதமான மழையால் செடி வளரும்; களை எடுப்பார்கள்; பூக்கும் விழுது இறங்கும். அதிகமாகத் தண்ணீர்ச் செலவு இல்லாமலேயே கடலை விளைந்து விடும்.

எல்லாத் தொழிலிலுமே பிரச்சினை இருக்கும், சாகுபடித் தொழிலைத் தவிர, மற்ற தொழில் செய்பவர்கள் முதலை ஒருபொருளில் போடுவார்கள். ஆனால் விவசாயிகள் முதலை நிலத்தில் வீசி விட்டுத் தேடி எடுக்க வேண்டும். மதில்மேல் பூனை போலத்தான். ஒருபக்கம் வௌ¢ளம்; ஒருபக்கம் வறட்சி.

“சொசைட்டியில் வாங்கிய கடன் பல்லிளித்து முன்னே நின்றது, இந்தக் கடன அடைக்கலன்று அடுத்த போகத்துக்கு உரமும் தரமாட்டான். கடனும் தரமாட்டான் செகரெட்டரி. அவங்கிட்ட எத்தனை மொற பல்லக்காட்றதுன்னு தெரியல. வெதக்கல்ல வங்குன கடன வேற திருப்பித் தரணும். தமிழப் படிக்க அனுப்பணும். நெலத்த மூக்கணும். பொண்டாட்டி நகய மூக்கணும். இதுல போர் எறக்கணும். தலை சுற்றியது நடுப்புள்ளைக்கு” (ப.22).

நிலத்திற்கு மட்டுமல்லாமல் கிராம மக்களின் வாழ்க்கையிலும் இதே நிலைதான். படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பொருளாதாரம் குடியானவர்களையும் உழைக்கும் மக்களையும் முண்டவிடாமல் கட்டிப் போட்டுவிடும்.

மண்ணுக்குள் விழுந்த விதை முட்டி, மோதி, பூமியைப் பெயர்த்துக்கொண்டு வெளியே வந்து வளர்வது போன்றே கதை மாந்தர் தமிழின் நிலையும் இருந்துள்ளது. அவரோடு சேர்த்து அவரின் பெற்றோரையும் பாராட்ட வேண்டும். பெற்றோருக்குப் பிள்ளையாக இருந்து, பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஆன அனைவருக்கும் அந்த வலி தெரியும்.

இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு என்பது பெருமைதான். அண்மையில் ஒரு செய்தி. உலக நாடுகளில் வெளிநாட்டுப் பணம் அதிகமாக வரும் இடத்தில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பதுதான். யார் ஈட்டிய பணம்? உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்தியர்கள் - இளைஞர்கள் உழைப்பால் கிடைத்த பணம்!

தேசப்பற்றைப் பெருமையாகப் பேசுகின்றோம். அவர்களுக்கு இங்கேயே உழைக்க, பணிபுரியச் சரியான வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பேரளவில் உயராதா? உலகின் பணக்கார நாடாக, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிச் சீனா முன்னுக்கு வந்துள்ளதாம். கேட்கப் பெருமையாக இருக்கிறது என்று சொல்லப் பயமாக இருக்கிறது. தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி விடுவார்கள் என்பதற்காக!

படைப்பாளர் இரா.செல்வம் விளக்கும் பனையடி புதின அய்யப்பநாயக்கன் பேட்டை போன்று தற்போது கிராமங்களைப் பார்க்க முடியவில்லை. அன்றாடப் பிழைப்புக்காகக் கிராம மக்கள் அருகில் இருக்கும் நகரங்களுக்குச் சாரை சாரையாகப் போகின்றார்கள். வேளாண் தொழிலின் வீழ்ச்சிதான் அடிப்படைக் காரணம்.

காலங்காலமாகவே இந்தியப் பொருளாதாரம் வடக்கு, தெற்கு என்று வேறுபாடு இல்லாமல் அதிகார வர்க்கங்களின் ஆடம்பரத்திற்கும் மதங்களின் வளர்ச்சிக்கும் வீணடிக்கப்பட்டது - படுகிறது - படும்.

கிராம வாழ்க்கை

பனையடி புதினத்தின் கதாநாயகன் தமிழ் இந்திய ஆட்சிப் பணியைப் பெற்றிருந்தாலும் தன் இளமைக் கால இயல்பான கிராம வாழ்க்கையை மறக்கவில்லை. தமிழின் இளமைக் கால நினைவுகள் புதினம் முழுவதும் மண்டிப் பூத்துக் கிடக்கின்றன. தமிழ் கூறும் பல நிகழ்வுகள் புதினத்தைப் படிப்பவர்களின் பசுமையான பழம் நிகழ்வுகளைக் கிளர்ந்து எழச் செய்யும்.

அம்மாவின் புடவையைப் போர்த்திக் கொண்டு தூங்குவது (ப. 20) பெற்ற தாயின் வயிற்றுக்குள் இருக்கும் மன நிறைவை அளிக்கும். நுங்கையும் உப்பு, மஞ்சள் கலந்து அவித்த பிஞ்சுச் சோளக் கதிரையும் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டுத் தின்றாலும் வயிறு கொள்ளும். முத்தின நுங்கை அதிகம் சாப்பிட்டால் வயிறு வலிக்கும் (ப. 13) பனையடி புதினத்தில் படித்தபோது இளமையை நினைவு படுத்தியது. தூக்கணாஞ் சிட்டுகள் கூடுகட்டிக் கும்மாளமிடும் (ப. 13) என்பதைப் புதினத்தில் படித்தபோது பனையிலும் தென்னையிலும் தொங்கிக் காற்றில் ஆடும் கூடும் தூங்கணாங்குருவிக் கூடும் கனவில்போல வந்துபோகின்றன. அழிந்துபோன கோடிக் கணக்கானவற்றுள் இவையும் அடங்கும்.

தட்டாம் பூச்சி கீழ பறக்குறதப் பாத்தா மழ வருமுன்னு தோணுது (ப. 14) என்பதைப் படிக்கும்போது ‘தட்டாம் பறக்குதடி தையலுப் பொண்ணு; ஒன்னத் தாலி கட்ட வாராண்டி சிங்காரப் பொண்ணு’ எனத் தட்டான் பிடிக்கும்போது பாடியது நினைவுக்கு வருகிறது. புறச் சூழல் மட்டுமல்லாமல் புழுக்கம், வியர்வை வழியும் மழை வரப் போவதைக் கணிப்பார்கள். பாதையில் சுடும்போது தழை, பனை மட்டை, காய்ந்த சாணி போன்றவற்றின் மேல் நின்றது கூட நினைவுக்கு வருகின்றது (ப. 44).

நாட்டுப் புற வாடையே தம்மீது பட்டுவிடக்கூடாது என்று எல்லாவற்றையும் அடைத்து வைத்துக் கொண்டு எழுதுவார்கள். தீட்டு என்பார்கள்; ஆபாசம் என்பார்கள், ஆனால் புனிதம் எனப்போற்றும் இடத்திலேயே எல்லாம் செய்வார்கள். இதழ், செய்தித்தாள்களில் ஆடை குறைந்த பெண்ணின் படங்களைப் போட்டுத் தங்கள் மன அழுக்கை வெளிக்காட்டுவார்கள்.

பனையடி புதினத்தில் கிண்டலாகப் பேசிக்கொள்ளும் சில பதிவாகி உள்ளன. உறவுமுறை உள்ளவர்கள் செய்துகொள்ளும் கிண்டலுக்கு அளவே இருக்காது. நினைத்து நினைத்துச் சிரிக்கத் தோன்றும்.

வேலைக்கு வரும் எல்லோரும் இல்லை என்றாலும் சிலரின் கை சும்மா இருக்காது. கத்தரி, மிளகாய், கடலையை ஆய்ந்து மடிக்குள் ஒளிப்பார்கள். ஒளிக்காவிட்டாலும் கிண்டல் செய்வார்கள்.

மந்திரவாதி என்பவர் கூலிக்கு ஏர் உழ நடுப்புள்ளையின் நிலத்திற்கு வந்தவர். மகளிர் இருவர் உழவின்போது படைச்சாலில் கடலை அரிசி போடக் கூலி ஆளாக வந்துள்ளார்கள். வேலை முடிந்ததும் அவர்களின் உரையாடல் இப்படி உள்ளது.

‘மடிய அவுத்து ஒதறிக் காட்டிட்டுப் போங்கடி; மடியில் ஒண்ணும் சரக்குக் கிரக்கு எடுத்துட்டுப் போவலியே” என்றார் மந்திரவாதி.

“இந்தாங்கே... பார்த்துக்குங்க” புடவைக் சுற்றை அவிழ்த்துக் காட்டினார்கள், சுங்குருப் பொண்டாட்டியும் கொளஞ்சியும்.

“உள்மடியில் என்னாடி வச்சிருக்கீங்க?” மந்திரவாதி விடவில்லை.

“எஞ் சாமான் இருக்கு பாக்கிறீயா?”

“காட்னா பாக்கலன்னா சொல்லப் போறேன்” சிரித்தபடி சொன்னார் மந்திரவாதி (பக். 9-10).

தின்பதற்கு நரி, நண்டு பிடிப்பதைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். நரி வளைக்குள் தன் வாலை விட்டவுடன் நண்டு பிடித்துக் கொண்டு வந்துவிடாது. நரி இன்னொரு வேலை செய்யுமாம். கண்டவற்றைத் தின்று வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட காற்றை வளைக்குள் செலுத்துமாம். நண்டு நாற்றத்தைத் தாங்க முடியாமல் மூச்சு முட்ட வாலைப் பிடித்து வெளியே வந்து விடுமாம். பனையடியின் படைப்பாளர் இந்தக் கதையைப் பின்வருமாறு விளக்குகின்றார்.

“நரி தன்னோட வால வளையில வுட்டு ஆட்டும். அப்ப வால நண்டு கொடுக்கால இறுக்கிப் புடிச்சிருக்கும். நரி வால, வெளிய இழுத்து நண்டத் திங்கும்” கதையை முடித்தான் பாவாடை.

“நீ ஏன் அந்த மாதிரி நண்டு புடிக்கக் கூடாது?” கேட்டான் தமிழ்.

“வளைக்குள்ள என்னத்த வுடுறது”

“அதவுடேன்” தமிழ் சிரித்தான் (ப. 31)

பனையடியில் உள்ள சில வழக்காறுகுகள் வேறு பொருள் தரும் வகையிலும் வேறுபட்ட நிலையிலும் இருக்கும். சரக்குப் போடுதல் (ப12) என்பது பொதுவாக மதுகுடிப்பதைக் குறிக்கும் இந்தப் புதினத்தில் நிலத்தில் கடலை போடுதலைக் குறிக்கிறது. கடலை போட்டு நீர் இறைக்க வாய்க்கால் போடுவார்கள். வாய்க்கால் போடுதல் என்பது வாய்க்கால் கிழித்தல் (ப.58) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பனையடி என்னும் புதினம் தவிர, வேறு எந்தப் படைப்புகளிலும் இந்த அளவு பட்டப் பெயர்கள் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. ஒருவருக்கு ஒரு பெயர் இருக்கும். ஆனால் ஒருவரின் தோற்றம், குணம், செயற்பாடு அடிப்படையில் இன்னொரு பெயர் இருக்கும். பட்டப்பெயர் என்பார்கள். பட்டப்பெயர் வைக்கப்பட்டு விட்டால் ஏறக்குறைய அவரின் இயற்பெயரே மறைந்து விடும். அவருக்கே கூட அவரின் இயற்பெயர் சட்டென்று மறந்து விடும். படைப்பாளர் இரா.செல்வம் அவரின் ஊர்ப் பகுதியில் வழக்கிலிருந்த பட்டப் பெயர்களை எல்லாம் பதிவு செய்துள்ளார்!

மந்திவாதி (ப. 9), சுள்ளாணி, ஓட்டைச் செக்கு (ப. 13), பெருச்சாளி, மொளக்குச்சி (ப. 24) செனையன் (ப. 25), சகடை (ப. 26), கூழ்ப்பானை, ரெக்கட்டை (ப. 33), குட்டாரி (ப. 36), குண்டாஞ்சட்டி (ப. 37), தொந்தி (ப. 48), சோவையன் (ப. 49) என இன்னும் சில பெயர்களும் காணப்படுகின்றன.

ஒரத்தநாட்டுப் பகுதியிலும் கைகாட்டி, வால்முறுக்கி, மூக்கு நோண்டி, கோணக்குட்டி, எலியன், நரியன், மொட்டையன், விரச்சீப்பி, கோக்காலி எனப் பல பட்டப் பெயர்கள் காதில் விழும்.

பனையடி என்னும் தன்வரலாறாகிய இப்புதினம் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம். வேளாண் தொழிலை நம்பிய கிராம வாழ்க்கை பல் தேய்ந்த கிழட்டு மாடு வைக்கோலை மெல்வது போன்ற நிலைதான். வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி பெரும் புணைதான். அதனைப் பற்றுவதற்குக் கிராமப் புற இளைஞர்கள் படும் பாட்டிற்குத் தமிழ் என்னும் கதை மாந்தர் சிறந்த சான்று.

கல்வி நிறுவனங்கள், பணிபுரிந்த இடங்களில் ஏற்பட்ட சிக்கல்கள், அனுபவங்கள் கண்முன்னே தெரிகின்றன. ஒரு நிகழ்ச்சியைப் படிக்கும்போது பலதரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜெய்பீம் திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது.

ஒரு திருட்டு தொடர்பாகக் காவல்துறை அதிகாரி ஒருவரை விசாரிக்கின்றார். இருவருக்கும் தமிழ் தெரியும். விசாரிக்கப்படுபவர் இந்தியில் பதில் கூறும்போது தமிழில் பேசு என்று அறைந்து விடுவார். இதனோடு தொர்புபடுத்தும் உரையாடல் பனையடி புதினத்தில் இடம் பெற்றுள்ளது.

“விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்களிடம் நீங்கள் ஏன் உரையாடக் கூடாது?” என்றார் இணை இயக்குநர்.

“சார், அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதை விரும்பவில்லை” என்றார் உமா.

“அப்படி என்றால் நீங்கள் இந்தி கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாடலாமே?”

“சார், அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டு எங்களுடன் ஏன் உரையாடக் கூடாது?

இணை இயக்குநர் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார் (ப. 203).

இந்தி தெரிந்தால் இந்திய முழுவதற்கும் வேலைக்குப் போகலாம் எனச் சில அறிவாளிகள் அறிவுரை கூறுவார்கள். ஒரு மொழியைத் தெரிந்து கொள்வதை யாரும் வெறுக்க மாட்டார்கள்; திணிப்பதைத்தான் வெறுப்பார்கள்.

அந்நியர்கள் இந்தியாவிற்கு வரும்போது இங்குள்ள மொழிகளைக் கற்றுக் கொண்டுதான் வந்தார்களா? இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பிழைக்கப் போனவர்கள் அங்குப் பேசப்படும் மொழிகளைக் கற்றுக் கொண்டுதான் போனார்களா?

கடந்த காலத்திற்குப் போவானேன். இந்தி போன்ற இந்தோ ஆரிய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட வட நாட்டு மக்கள் லெட்சக் கணக்கில் தமிழ்நாட்டுக்குப் பிழைப்புத் தேடி வருகின்றார்கள். அவர்கள் தமிழைக் கற்றுக்கொண்டும் வரவில்லை; யாரும் தமிழைக் கற்றுக் கொள்ளச் சொல்லிக் கட்டாயப் படுத்தவும் இல்லை. அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பே பெரும்பாடு.

உழைப்புத்தான் கஞ்சி ஊற்றுகின்றது; மொழி ஊற்றவில்லை. உழைக்கும் மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் எப்படிக் கடத்துவது என்பது பிரச்சினை. மொழியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தான் குறுக்குச் சால் ஓட்டுவார்கள்.

இந்தி தெரியவில்லை என்றால் இந்தியனாக இருக்கமுடியாது என்று கூலிக்கு மாரடிக்கும் தமிழ்நாட்டில் உள்ளவர்களே பேசுகின்றார்கள். பிழைப்பு தேடிவந்த வடநாட்டு மக்கள் கொரோனாக் காலத்தில் தட்டு முட்டுச் சாமான்கள், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு சுமந்ததைப் பார்க்க வயிறு எரிந்தது.

நாடோடிகளாக வந்த ஆரியர்களுக்கு இங்கு எந்த வரலாறுமே இல்லை. ஏதாவது பேசித் தமிழ் மன்னர்களிடம் அடிவாங்கி இருக்கிறார்கள். சிலப்பதிகாரம், இராமாயணம் - பாரதம் போன்று கட்டுக்கதை அன்று. சங்க காலத்திலும் சரி, காப்பிய காலத்திலும் சரி, ஆரிய மன்னர்களைப் போரிட்டு வென்று கங்கையைக் கடந்து புலி - வில் - கயலை இமயமலையில் பொறித்துள்ளார்கள். கண்ணகிக்குச் சிலைவடிக்க கல் கொண்டு வந்துள்ளார்கள். அதிகாரத்தால் வரலாற்றைத் திரிக்கலாம்; மறைக்கலாம். ஆனால் வரலாறு கல்வெட்டுப் போன்றது. புதைபொருள் போன்றது. (வார்-அல்-வரல் -ஆறு - வரலாறு). உலகம் கடந்து வந்த - வரும் வழியைக் காட்டுவது வரலாறு.

படைப்பாளர் இரா.செல்வம் எழுதியுள்ள ‘பனையடி' புதினம் பயங்கொடுக்கும் ஒற்றைப் பனைமரம் அன்று. பயன் தரும் ஒரு பனந்தோப்பு படித்து முன்னேறத் துடிப்பவர்கள் கண்டிப்பாக இப்புதினத்தைப் படிக்கவேண்டும். படைப்பாளர் மேலும் பல படைப்புகளைத் தமிழ் கூறும் நல்லுகிற்குத் தரவேண்டும் என வாழ்த்தலாம்.

பனையடி | இரா.செல்வம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை ரூ.200/-

ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It