உழைக்கும் மக்களின் விடுதலைக்காகச் செயல்படத் தொடங்கிய அண்ணல் அம்பேத்கர், 1936இல் ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பைத் ‘தாழ்த்தப்பட்டோர் கட்சி’ என்ற நோக்கத்தில் தொடங்கினாலும், அதற்குத் ‘தொழிலாளர் கட்சி’ என்று பெயரிட்டார். தொழிலாளர் என்ற வரையறைக்குள், தொழிற்சாலைகளில் வேலைபார்ப்போர் ஒரு பிரிவினர் உட்படுகின்றனர் என்றாலும், விவசாயம் போன்ற துறைகளில் உழைக்கும் மக்களும் இச்சொல்லிற்குள் அடங்குவதாக அம்பேத்கர் கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் அக்கட்சியில் பிற உழைக்கும் மக்களையும் சேர்த்துக் கொள்வதாகவும் அம்பேத்கர் கூறியுள்ளார். "தொழிலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்க வேண்டுமென்று கட்சி முயற்சி செய்யுமோ அதே சலுகைகள் வேளாண் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்குக் கட்சி பாடுபடும்.” (தொ.96 : பக்.27) என்பதை சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் குறிக்கோள் என்று அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். இந்த வகையில் முதன்மையாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர் உள்ளடங்கிய அமைப்பாக அம்பேத்கர் உருவாக்கிய “சுதந்திரத் தொழிலாளர் கட்சி” செயல்பட்டது.
1936இல் உருவான சுதந்திரத் தொழிலாளர் கட்சி, 1937இல் இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது; அக்கட்சியின் வேட்பாளர்கள் பதினேழு பேர் வெற்றி பெற்றனர். மும்பையில் அம்பேத்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1942 ஏப்ரல் மாதத்தில், என். சிவராஜைத் தலைவராகவும் பி.என்.ராஜ்போஜைப் பொதுச்செயலாளராகவும் கொண்டு அகில இந்தியப் பட்டியலின மக்கள் பேரவையை அம்பேத்கர் உருவாக்கினார். அந்த ஆண்டு ஜூலை மாதம், பிரித்தானிய அரசின் அரசப் பிரதிநிதி அவையில் தொழிலாளருக்கான உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இது பிரித்தானிய அரசின் கீழ் இயங்கும் அரசமைப்பில், இன்றைய ஓர் அமைச்சருக்குரிய அதிகார மற்றும் நிருவாக வரம்புகளுடன் கூடியது. பிரித்தானிய அரசில் தொழிலாளர் துறை அமைச்சர் என்ற புரிதல் பொதுவெளியில் உருப்பெற்றது. 1936 முதல் 1942 வரை விவசாய மற்றும் தொழிற்சாலை சார்ந்த தொழிலாளருக்கான அமைப்பை அம்பேத்கர் நடத்தியதால், இப்பதவியைப் பிரித்தானிய அரசு அம்பேத்கருக்கு வழங்கியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். இந்தப் பதவியில் 1942 முதல் 1946 வரை அம்பேத்கர் செயல்பட்டார். இந்தப் பதவியில் அம்பேத்கரின் செயல்பாடுகளை ஆறு தொகுதிகளாகத் தொகுத்துள்ளோம். அந்தத் தொகுதிகளைப் புரிந்துகொள்ளும் நோக்கத்தில் இப்பகுதி எழுதப்படுகிறது.
தொழிலாளர்களின் எழுச்சி
தொழிலாளர்களின் எழுச்சி என்பது இந்தியாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவசாயத் தொழிலாளர் எழுச்சியாகத்தான் உருவானது. வங்காளம், பீகார், ஆந்திரா முதலிய பகுதிகளில் அவ்வகையான விவசாயத் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் உருப்பெற்றன. இந்தியாவில் 1920களில் அமைப்பு ரீதியான தொழிற்சங்கங்கள் உருப்பெற்றன. “அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்" (AITUC) உருவானது. இதன் தலைவராக தோழர் டாங்கே செயல்பட்டார். இச்சங்கம் மீரட் சதிவழக்கு (1929) முதலிய கொடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டது. டாங்கே அவர்களுடன் அம்பேத்கர் தொடர்புடன் இருந்தார். இந்தப் பின்புலத்தில்தான் அம்பேத்கர் 1936இல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கிச் செயல்பட்டார் என்று புரிந்துகொள்ளலாம். அந்த வகையில் அமைந்த அவரது செயல்கள், தொகுதி 96இல் விரிவாகப் பதிவாகியுள்ளன. இங்கு (தொகுதி 49-54) பிரித்தானிய அரசு சார்ந்து தொழிலாளர்களுக்காக அம்பேத்கரின் செயல்கள் மட்டும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த அடிப்படையில் அம்பேத்கரின் செயல்களைக் கீழ்க்கண்டவாறு பாகுபடுத்தி உரையாடலுக்குட்படுத்த இயலும்.
- தொழிலாளர்களுக்கான அமைப்புகள் உருவாக்கம், மாநாடுகளை நடத்துதல், பன்னாட்டு மரபில் தொழிலாளர் நலன் குறித்த அக்கறைகள், வேலைவாய்ப்புகள், வீட்டுவசதி போன்ற நலத்திட்டங்கள், தொடர்வண்டி நிறுவனம் போன்ற அமைப்புகளில் சங்கம் உருவாக்குவதன் அவசியம் ஆகியவற்றில் அம்பேத்கர் கவனம் செலுத்தினார். பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தும் பல்வேறு செயல்களில், ‘தொழிலாளர்களின் நலன்’ எனும் கருத்தாக்கத்தை முன்னிருத்திய செயல்களை உரையாடலுக்குட்படுத்தலாம்.
- அதிகாரம் உடைய நிருவாகியாகச் செயல்படும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கான எண்ணற்ற சட்ட முன்வரைவுகளை அவர் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கான பல சட்டங்களை இயற்றச் செய்தார். அவ்வகையான செயல்கள் குறித்து இத்தொகுதிகளில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கவனப்படுத்தும் தேவையுண்டு.
- அம்பேத்கர் செயல்பட்ட காலம், இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் (1939-1945). தொழிலாளர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடையதாக போர் இருந்தது. போருக்கும் தொழிலாளருக்குமான உறவுகள், விளைவுகள் ஆகியவை குறித்து அம்பேத்கர் விரிவாகப் பேசியுள்ளார். அவை குறித்தும் பேச வேண்டும்.
- பிரித்தானியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல், இந்தியாவை முழு அதிகாரத்துடன் ஆட்சி புரிந்தனர். அவர்கள் நடைமுறைப்படுத்திய பல்வேறு புதிய திட்டங்கள், இந்திய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்கின. இந்தியாவைச் சுரண்டுவதற்கான அவர்களது திட்டங்கள், வேறு கோணங்களில் இந்திய மக்களின் கல்வி, பண்பாடு நிகழ்வுகள் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தன. இந்தப் பின்புலத்தில் அம்பேத்கர் முன்னெடுத்த பொதுத் திட்டங்கள் முதன்மையானவை. அவ்வகையான திட்டங்களின் வழியாக இந்தியத் தொழில் வளர்ச்சிக்கு அவர் அடித்தளமிட்டுள்ளார். அவை குறித்தும் பேச இயலும்.
முத்தாப்பு மாநாடுகள்
அண்ணல் அம்பேத்கர், தொழிலாளர் நலனுக்காக, தமது பதவியைப் பயன்படுத்திச் செயல்படத் தொடங்கினார். தொழிலாளர்களுக்குச் சங்கம் உருவாக்குதல், தொழிலாளர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்துதல், அரசாங்கத்தில் தொழிலாளர் நலத்துறை என்ற அமைப்பை உருவாக்குதல், வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர் நலம் பேணுதல், சமவேலைக்குச் சமஊதியம் ஆகிய பல்வேறு செயல்களை அம்பேத்கர் முன்னெடுத்திருப்பதை அவரது சட்டமன்ற மற்றும் மேலவை உரையாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.
1943 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தொழிற்சங்கப் பயிற்சி முகாமில், தொழிலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற சனநாயகம் குறித்துப் பேசிய உரை, உழைக்கும் வர்க்கம் குறித்த அவரது புரிதலைக் காட்டுவதாக அமைகிறது. இந்தியத் தொழிலாளர் அமைப்பு குறித்து தான் நீண்ட காலம் சிந்தித்து வருவதாகவும் அவர் கூறுகிறார். நாடாளுமன்ற சனநாயகம் நிலவும் நாட்டில் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதன்மையானப் பாத்திரம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் பேசுகிறார். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள், தொழிலாளர் நலம் கருதி உள்ளனவா? என்றும் கேள்வியை முன்வைக்கிறார். “சுதந்திரம், சொத்துரிமை, சிறந்த வாழ்வுக்கான உரிமை முதலியவற்றை நாடாளுமன்ற சனநாயகம் உறுதி செய்யத் தவறிவிட்டது" என்றும் கூறுகிறார் (தொ.49 : பக்.190) பொருளாதார சனநாயகமும் சமூக சனநாயகமும் இணைந்து செயல்படுவதில் முரண்கள் இருப்பதாகவும் கருதுகிறார். “சனநாயகம் என்பது சமத்துவத்துக்கு மற்றொரு பெயர்.” (தொ.49 : பக்.190) என்றும் பதிவு செய்கிறார். இந்தப் பின்புலத்தில், தொழிலாளர் கூட்டமைப்பின் பயிற்சி முகாமில், அம்பேத்கர் பதிவு செய்துள்ள பின்கண்ட பகுதி முக்கியமானது:
"வரலாற்றைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விளக்கும் கருத்துநிலையை மார்க்ஸ் முன்வைத்தார். இதன் தகைமை குறித்து காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. மார்க்ஸ் இதனை ஒரு கருத்துநிலையாக அன்றி, தொழிலாளர்களுக்கு ஓர் அறிவுரையாகக் கூறினார் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடைமை வகுப்பினரைப் போன்றே உழைக்கும் வகுப்பினரும் பொருளாதார நலன்களுக்குத் தலையாய முக்கியத்துவம் அளிப்பார்களேயானால், வரலாறானது வாழ்வின் பொருளாதாரக் கூறுகளை இப்போதைவிட அதிகம் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். வரலாற்றைப் பொருளாதார நோக்கில் விளக்கும் இந்தக் கருத்துநிலை முழு அளவுக்கு உண்மையாக இல்லை. கூட்டுச் சமூக வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதாரக் கூறுகளுக்கு உரிய முக்கியம் அளிக்க உழைக்கும் வகுப்பு தவறியதே அதற்குக் காரணமாகும்.
மானுடத்தை ஒழுங்குபடுத்துவது பற்றித் தெரிந்துகொள்ள உழைக்கும் வகுப்புகள் தவறிவிட்டன. உழைக்கும் வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொருவரும் இக்காலச் சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் முதலிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம்..” (தொ.49 : பக்.194)
இவ்வகையில் ரூசோ, பதின்மூன்றாம் போப்பாண்டவர், மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் பேசிய வர்க்க அமைப்பு, அதில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை, குறிப்பாக தொழிலாளர்களுக்கான இடம் ஆகியவை குறித்தப் புரிதலோடு அம்பேத்கர் செயல்பட்டிருக்கிறார் என்றே கருத முடிகிறது. இந்தப் பின்புலத்தில்தான், தொழிற்சங்க மாநாடுகளை நடத்துவதிலும் அக்கறையுடன் செயல்பட்ட, சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர் அம்பேத்கர் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
தொழிலாளர் மாநாடுகள் குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் செய்திகள் பின்வருமாறு அமைகின்றன:
"இதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கமும் குறிக்கோளும் ஆகும். இம்மாநாட்டின் நமது நிகழ்ச்சி நிரல் மிகச் சுருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதலாம். பேச வேண்டிய உட்பொருள் அதில் நிறைய இல்லையென்றும் நினைக்கலாம். இத்தகைய ஒரு மாநாட்டைப் பற்றிய திட்டத்தையும், அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் உடன்படுகிறோமா? இந்த அடிப்படைச் சிக்கல் தொடர்பாக ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதுவரை நாம் இப்போது முன்வைத்துள்ள நிகழ்ச்சி நிரலைவிட வேறு விரிவான எதையும் உங்கள் முன் நாங்கள் வைத்திருக்க முடியாது. நிலைமை இதுதான். எனவே, நான் இப்போது வேண்டுவது கீழ் உள்ளவற்றைப் பற்றி முடிவு எடுக்கும்படி உங்களிடம் கேட்டுக் கொள்வதுதான்:
1. தொழிலாளர் மாநாட்டை, குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறை கூடும் நிரந்தர அமைப்பாக உருவாக்குதல்.
2. மாநாட்டில் பரிந்துரை நிலைக் குழுவை அமைத்தல். எப்போதெல்லாம் அரசாங்கம் அழைக்கிறதோ அப்போதெல்லாம், இந்தப் பரிந்துரைக்குழு அதன்முன் வைக்கப்படும் பொருண்மைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரை வழங்குதல்.
3. இந்த அமைப்புகளை நிறுவுவதற்கான வழிமுறைகளைப் பொதுவான முறையில் வகுத்தளித்தல்.
இந்த அமைப்புகளை நிறுவுதல் குறித்து, இம்மாதிரியான முத்தரப்பு மாநாட்டிற்கு மிகவும் பொருத்தமானதென்று நாங்கள் கருதுகிற திட்டத்தை உங்கள்முன் வைக்க விரும்புகிறோம். இரு அமைப்புகளை நிறுவ வேண்டுமென்று நாங்கள் முன்மொழிகிறோம்:
1. ஒரு தொழிலாளர் பொது மாநாடு
2. ஒரு பரிந்துரை நிலைக் குழு
பொது (Plenary) மாநாடு, மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள், சமஸ்தான அரசாங்கங்கள், முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் சார்பாளர்களைக் கொண்டதாக இருக்கும்.” (தொ.49: பக்.45-46)
இந்த மாநாடுகளின் மூலமாக பரிந்துரை நிலைக் குழுவில், இந்திய அரசாங்கத்தின் சார்பாளர்கள், சமஸ்தானங்களின் சார்பாளர்கள், முதலாளிகளின் சார்பாளர்கள், தொழிலாளர்களின் சார்பாளர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பின் அதன் தலைவராக இருப்பார் என்றும் அம்பேத்கர் பதிவு செய்கிறார் (தொ.49 : பக்.47) தொழிலாளர் பொது மாநாட்டின் முதல் கூட்டத்தொடர் 1943இல் நடைபெற்றது. அதில் அம்பேத்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த உரையில் பின்கண்டவாறு பேசினார்:
“நீண்ட காலமாகவே பின்வரும் கருத்து நிலவி வந்தது: அரசாங்கம், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் முதலிய முத்தரப்பினருமே ஒருவர் மீது ஒருவர் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு செயலாற்ற வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் தொழில்துறை தொடர்பான சிக்கல்களுக்கும் தொழிலாளர் நலன் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வுகாண முடியாது என்ற கருத்து மேலோங்கி வந்தது. ஆனால், இந்த முத்தரப்பினருமே ஒன்றுகூடி மனம்விட்டுப் பேசினாலொழிய இத்தகையப் பொறுப்புணர்வும் ஒருவருக்கொருவர் மதிப்புணர்வும் வளர்ந்தோங்குவதற்கு அதிக வாய்ப்பு இல்லை. எனவே, இந்த நோக்கத்தோடு இவர்களை ஒன்றுகூடச் செய்வதும், அவர்கள் தத்தமது சிக்கல்களை முன்வைத்து உரையாடச் செய்வதும் அவசியம் என்பது உணரப்பட்டது.
இத்தகைய ஒரு முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் பரிந்துரை நீண்ட காலமாகவே இருந்து வந்தபோதிலும், தொழிலாளர்களின் மன உறுதியையும் முனைப்பையும் விடாமுயற்சியையும் வளர்த்து வலுப்படுத்துவதைப் போர் அவசர அவசியமாக்கி இருக்கவில்லையென்றால், இந்தப் பரிந்துரை இவ்வளவு விரைவாக வடிவம் பெற்றிருக்குமா என்பது ஐயமே. முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் பணியைப் போர் மற்றொரு வகையிலும் விரைவுபடுத்திற்று..” (தொ.49 : பக்.176-177)
அம்பேத்கரின் தொழிலாளர்களுக்கான முத்தரப்பு மாநாடுகள் நிகழ்ந்த முறைகளை அறிய முடிகிறது. இந்த மாநாடுகளில், தொழிலாளர் வேலைநீக்கம், சமுதாயப் பாதுகாப்பு, குறைந்த அளவு ஊதியம், முத்தரப்பு அமைப்பை உருவாக்குதல், சேமநல நிதிக்கான முன்மாதிரி விதிகளை உருவாக்குதல் ஆகிய பலவற்றை அம்பேத்கர் நிகழ்ச்சி நிரலில் முன்வைத்தார். முதலாளித்துவத் தொழில்துறை அமைப்பும் நாடாளுமன்ற சனநாயகமும் நிலவும் நாட்டில் முதன்மையாகச் செயல்படும் முரண்பாடுகளை விரிவாகப் பேசுகிறார். இந்தப் பின்புலத்தில்தான் தொழிலாளர் குறித்த சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அம்பேத்கர் முன்வைக்கும் முரண்பாடுகள் பின்கண்டவாறு அமைகின்றன:
"முதலாளியத் தொழில்துறை அமைப்பிலும், நாடாளுமன்ற சனநாயகம் எனப்படும் அரசமைப்பிலும் வாழ்ந்து வருபவர்கள் தமது அமைப்புகள் இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை ஏற்க வேண்டும். மலைமலையாகக் குவிந்துள்ள செல்வத்துக்கும் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல் கொத்தியெடுக்கும் கோர வறுமைக்கும் இடையே உள்ள படுபாதாளம் முதல்முரண்பாடாகும். அதிலும், இந்த முரண்பாடு எளிய வடிவில் இல்லை. இது மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் கேடான விளைவாக இன்று நாம் என்ன பார்க்கிறோம்? ஒரு சொட்டு வியர்வைகூடச் சிந்தி உழைக்காமல் உல்லாசபுரியில் வாழ்பவர்கள் கோடீஸ்வரக் கோமான்களாக இருப்பதையும், அதேநேரம் நெற்றி வியர்வை நிலத்தை நனைக்க மாடாக உழைத்து ஓடாகத் தேய்பவர்கள் கொடிதினும் கொடிதான வறுமையில் வாடுவதையும் காண்கிறோம்.
இனி அடுத்து, இரண்டாவது முரண்பாடு அரசியல் அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் இடையிலானது. அது என்ன? அரசியலில் சமத்துவம், பொருளாதாரத்திலோ சமத்துவமின்மை. ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு - இது நமது அரசியல் கோட்பாடு. ஆனால், பொருளாதாரத்தில் நமது கோட்பாடு அரசியல் கோட்பாட்டை மறுதலிக்கிறது. இந்த வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பது தொடர்பாக மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற முரண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு எள்ளளவும் இடமில்லை.
இந்த முரண்பாடுகள் கண்ணை உறுத்தும்படியாக, முனைப்பானவையாக இருந்தபோதிலும், கடந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்த அவலத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், இன்று நிலைமை அடியோடு மாறிவிட்டது. மிகவும் கூரறிவு படைத்தவர்கள் கூட முன்னர் ஏனோ தானோவென்று நோக்கிய இந்த முரண்பாடுகள் இப்போது மிகவும் மந்தமானவர்களுக்குக் கூட வெட்ட வெளிச்சமாகிவிட்டன.
இரண்டாவதாக நான் கூறவிரும்பும் கருத்து இதுதான். சமூக வாழ்க்கைக்கான அடித்தளமானது சமூகத் தகுதிநிலையிலிருந்து சமூக ஒப்பந்தத்துக்கு மாறியுள்ளது. அதிலிருந்தே வாழ்க்கையின் பாதுகாப்பு ஒரு சமூகச் சிக்கலாகிவிட்டது. மனித வாழ்வின் உய்வில், மேம்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரது சிந்தனைகளுமே இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணுவதில் ஈடுபட்டு வருகின்றன. மனிதனுக்குள்ள உரிமைகளையும் அவனுக்குள்ள பல்வேறு சுதந்திரங்களையும் வரையறுத்துக் கூறுவதற்கு மிகப்பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவை யாவும் அவனுடைய பிறப்புரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மிக மிக நல்லது. இவற்றைப் பற்றி அனைத்தையும் அறியவரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்ளம் உவகை அடைகிறது. ஆனால், இங்கு முக்கியமானதைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். பசிபிக் உறவுகள் மாநாட்டின் பொருளாதாரக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது போல், இந்த உரிமைகள் அனைத்தும் எளிய மனிதனுக்கு அமைதியான வாழ்க்கையாக, குடியிருக்கும் இல்லமாக, உடுத்தும் உடையாக, கல்வி வசதியாக உருவெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, உலகின் அகல்பெரும் நெடுஞ்சாலைகளில் தடுமாறி விழுந்துவிடுவோம் என்ற அச்சமின்றி, தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரமாக நடைபோடும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும். இவை அனைத்தும் இல்லையென்றால் சமூகப் பாதுகாப்பு என்பது முற்றிலும் பொருளற்றதாக, வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். (தொ.49:பக்.183-184-185)
இவ்வகையில் தொழிலாளர்களுக்கான அரசாங்கம், தங்கள் கட்டுப்பாட்டில் அரசாங்கத்தை தொழிலாளர்கள் வைத்துக் கொள்வது ஆகியவை குறித்தும் அம்பேத்கர் பேசுகிறார். தொழிலாளர்கள் முத்தரப்பு மாநாட்டை தான் உருவாக்கியது குறித்துப் பதிவு செய்கிறார்:
“முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டை உருவாக்கியதில் எனக்கும் பெரும்பங்குண்டு என்பதைப் பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறேன். நாங்கள் அதிகம் எதுவும் செய்யாவிட்டாலும் குறைந்தது ஒரு நல்ல செயலைச் செய்திருக்கிறோம். முதலாளிகளின் சார்பாளர்களைச் சந்தித்து மிகுந்த முதன்மை வாய்ந்த சிக்கல்களைப் பற்றி உரையாடும்படி தொழிலாளர்களின் சார்பாளர்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் தூண்டி ஊக்குவித்திருக்கிறோம்.” (தொ.50 : பக்.35)
பின்னர் 1944இல் முத்தரப்புத் தொழிலாளர் பொது மாநாட்டை உருவாக்கி அதில் உரையாற்றினார். தொழிலாளர் மாநாட்டுக்கு தனித் தலைமையகம் அமைக்க வேண்டும் என்னும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புக் கோட்பாட்டை நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த அம்பேத்கர் விரும்பினார். இதன் மூலம் உலகம் தழுவிய அளவில் செயல்பட்ட தொழிலாளர்கள் தொடர்பான அமைப்புகள் குறித்து விரிவாக அறிந்தவராகவே அம்பேத்கர் செயல்பட்டார். இவ்வகையான அணுகுமுறை சார்ந்து, “தொழில் தகராறுகளுக்குத் தீர்வு காணுதல், தொழிலாளர் நலன், தொழில்துறைத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கீடு, அரசாங்க ஒப்பந்தங்களில் நியாயமான ஊதியங்களை வரையறுத்தல், தொழில் நிலையங்களில் தொழிலாளர் அலுவலர்களை நியமித்தல், வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்துறைப் புள்ளிவிவரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், தொழிலாளர் சார்பாண்மை, சமூகப் பாதுகாப்பு, அகவிலைப்படி, தொழில்நிலையச் சிற்றுண்டிச் சாலைகள்.” (தொ.50 : பக்.105) ஆகியவற்றை விரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டில் அம்பேத்கர் பேசும்போது வெளிப்படுத்தியதை அறிகிறோம்.
பெண் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்கள்
அம்பேத்கர் இந்தியாவில் நிலவிய சமூகப் பொருளாதாரப் பின்புலத்தில், தொழிலாளர்களுக்கான அமைப்புகள், அவற்றின் செயல்களான மாநாடு போன்றவற்றை நடத்துவது தொடர்பாக அவரது செயல்களை மேலே பதிவு செய்தோம். பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்து அவர் பேசினார். அதில் சுரங்கத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் குறித்துச் செய்துள்ள பதிவு பெரிதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
சுரங்கங்களில் பெண்கள் பணியாற்றுவது தடைசெய்யப்பட்டிருந்தது. போர்ச் சூழலில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்தத் தடையை நீக்குவதாக பிரித்தானிய இந்திய அரசு முடிவு செய்தது. இந்தச் சிக்கல் குறித்து அவையில் உரையாடல் வந்தபோது, அம்பேத்கரின் பதிவு பின்வருமாறு அமைகிறது:
“இந்த அவை ஆய்வு செய்ய வேண்டிய மேலும் இரண்டு சிக்கல்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், முதலாவதாக, இந்தச் சிக்கல் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்ற நோக்கோடு அவசரப்பட்டுக் கண்மூடித்தனமாக இப்படியொரு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த முன்னெச்சரிக்கையோடுதான் அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்தத் தடை நீக்கம் முதலில் மத்திய மாகாணத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது; நிலக்கரிப் பகுதிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இந்த அறிவிப்பை வங்காளத்துக்கும் பீகாருக்கும் விரிவுபடுத்துவது அவசியம் என்று நவம்பர் மாதத்தில்தான் அரசாங்கம் கருதிற்று. பிறகு டிசம்பர் அறிவிப்பில் ஒரிசாவுக்கு விரிவாக்கப்பட்டது.
ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். இது மிக முக்கியமானதாகும். பாலினப் பாகுபாடின்றி சமவேலைக்குச் சமஊதியம் என்னும் கோட்பாடு இந்தத் தொழிலில்தான் முதல் முறையாக நிலைநாட்டப்பட்டது எனக் கருதுகிறேன்.
ஐந்தரை அடிக்குக் குறைவான சுரங்கப்பாதையில் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்தோம்.” (தொ.50 : பக்.18)
அம்பேத்கர் அரசப் பிரதிநிதி அவையில் தொழிலாளருக்கான உறுப்பினர் (அமைச்சர்) பதவியை வகித்த காலங்களில், தொழிலாளர் நலன் கருதி செயல்பட்டதை அவரது உரைகள் வழி அறிய முடிகிறது. தொழிலாளர் நலன், என்பது அவர்களுக்கான அமைப்பு, அதன் கூடுகைகளான மாநாடுகள் போன்றவை, குறிப்பிட்ட துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அம்பேத்கர் செயல்கள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு நல உதவித் திட்டம், பட்டியல் பிரிவு தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம், முகமதியர்களுக்குத் தனியான வேலைத்திட்டம், வேலைவாய்ப்புத் திட்டம், மறுவாழ்வுத் திட்டம், வீட்டுவசதித் திட்டம், விலை உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தோடு இணைத்து மிகையைக் கொடுத்தல், வேலைநேரத்தைக் கட்டுப்படுத்தல், அச்சக ஊழியர்களின் வேலை நேரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிக்கவனம் வழங்கல் ஆகிய பல்வேறு திட்டங்கள் குறித்தும் அம்பேத்கர் பேசியுள்ளார். விரிவு கருதி அவை குறித்த விவரணங்களைப் பதிவு செய்யவில்லை.
மேற்குறித்த அடிப்படைகளில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழிலாளர்கள் நலனுக்காக அம்பேத்கர் உழைத்த வரலாற்றை அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட, தீண்டாமையை அனுபவிக்கும் மக்களுக்கு மட்டுமே அம்பேத்கர் இயக்கங்களை நடத்தினார் என்பது அடிப்படையற்றது. அவரது தொழிலாளர் தொடர்புடைய செயல்கள், ஒரு சமூக சனநாயக மனிதராக அம்பேத்கர் செயல்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.
அம்பேத்கர் கொண்டுவந்த சட்ட முன்வரைவுகள்
அம்பேத்கர் பங்கேற்றிருந்த அரசப் பிரதிநிதி அவை என்பது அடிப்படையில் பல்வேறு சட்ட முன்வரைவுகள், சட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முதன்மையான பங்கு வகித்த அரங்கம் ஆகும். அனைத்துச் சட்டங்களும் அவையின் ஒப்புதல் பெற்றே நடைமுறைப்படுத்தப்படும். இந்தப் பின்புலத்தில் அம்பேத்கர் தமது ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்கள் தொடர்பாக உருவாக்கிய சட்டங்கள் தொடர்பான விவரணங்களை உரையாடலுக்குட்படுத்துவது இங்கு நோக்கமாகும்.
அம்பேத்கர், தொழிலாளர் உறுப்பினராக இருந்த காலத்தில் உரையாடலுக்குட்படுத்தப்பட்ட சட்ட முன்வரைவுகள் பலவற்றைக் கொண்டு வருவதன் தொடக்கமாக, 1942 ஆகஸ்டு 7இல் புதுடெல்லியில் நடைபெற்ற தொழிலாளர்கள் பொது மாநாட்டில் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் குறித்துப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“இந்த மாநாட்டின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பற்றி ஓரிரு சொற்கள் இப்போது சொல்லப் போகிறேன். முந்திய மாநாடுகள் குறித்து அறிந்திருக்கும் உங்களில் சிலர் அந்த மாநாடுகள் கூட்டப்பட்டதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றை அறிந்திருப்பீர்கள். அதாவது, மாகாணங்களுக்குத் தனித்தனியான சட்டமியற்றும் அதிகாரம் கிடைத்ததன் விளைவாக, தொழிலாளர் சட்டங்களில் ஏற்படக்கூடிய வேறுபாடுகளும் குழப்பங்களும் நாட்டிற்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய ஆபத்தைத் தவிர்க்கும் வலுவான விழைவுதான் அந்தக் காரணம்.
இந்திய அரசாங்கம் ஒன்றிணைந்த அரசாங்கமாக இருக்கும்வரை தொழிலாளர் சட்டங்கள் ஒருமித்தத் தன்மை கொண்டவையாக இருந்தன. அப்படிச் செய்வதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. ஆனால், கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திய இந்திய அரசாங்கச் சட்டம் 1935, தொழிலாளர் தொடர்பான சட்டங்களை மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் இயற்றலாம் என்று வரையறுத்தது. இது மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியது. மத்தியச் சட்டம் இல்லையென்றால், ஒவ்வொரு மாகாணமும் தனக்கு விருப்பமான சட்டத்தை இயற்றலாம். அது அடுத்துள்ள மாகாணங்களின் சட்டங்களிலிருந்து மாறுபடலாம் என்று அஞ்சப்பட்டது. பொதுவான, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்திற்குப் பதிலாக மாகாண நலன்கள் ஆதிக்கம் செலுத்துவதை இது ஊக்குவிக்கும் என்றும் கருதப்பட்டது.(தொ.49: பக்.42)
இவ்வகையில் தொழிலாளர்களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் உள்ள அடிப்படையான சிக்கல்களை அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார். இதன் அடிப்படையில், பல்வேறு சட்ட முன்வரைவுகளை அவையில் விவாதத்திற்குட்படுத்துகிறார். முன்னரே இருக்கும் சட்டங்கள் அவையில் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்கான உரையாடல் நிகழ்த்துவது சட்ட முன்வரைவாக அமைகிறது. இந்தப் பின்புலத்தில் அவையில் கலந்துரையாடப்பட்ட சட்ட முன்வரைவுகள் பின்வருமாறு அமைகின்றன.
- போர்க் காலத்தில் தாள் தட்டுப்பாடு உருவானது. இதனால், தாள்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக தாள் கட்டுப்பாட்டு ஆணை கொண்டு வரப்பட்டது.
- தேயிலைத் தோட்டங்கள் தொடர்பான சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது. அதில் காணப்படும் வாசகங்கள் பின்வருமாறு அமைகின்றன.
“தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக ஐந்து பரிந்துரைகளைப் பேரரசு ஆணையம் கொடுத்தது.
- முதலாவது பரிந்துரை, அசாம் தொழிலாளர் குடிப்பெயர்வுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
- இரண்டாவது பரிந்துரை, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை வரையறுக்க ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும்.
- மூன்றாவது பரிந்துரை, குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் வடிகால் வசதி, மருத்துவ வசதிகள், குடியிருப்பு முதலியவை தொடர்பான விதிமுறைகளை வகுத்தளிக்கும் அதிகாரம் கொண்ட தொழிலாளர் நலனுக்கான ஒரு சுகாதார அமைப்பு வாய்ப்புள்ள வட்டாரங்களில் அமைக்கப்பட வேண்டும்.
- நான்காவது பரிந்துரை, தொழிலாளர்களுக்குக் காலம் தவறாமல் ஊதியம் கொடுப்பது, கொடுக்கப்பட்ட முன்பணத்தைப் பிடிப்பது முதலியவை பற்றிய விதிமுறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வகுக்கப்பட வேண்டும்.
- கடைசிப் பரிந்துரை, தோட்டங்களுக்குப் பொதுமக்கள் சென்றுவர வழி செய்யும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.” (தொ.49 : பக்.121)
- பம்பாயில் கொதிகலன் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதற்கான காரணங்களை அறிந்து இந்தியக் கொதிகலன் (திருத்த) சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது.
- மோட்டார் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பாக முன் வரைவுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் கொண்டு வந்த திருத்தங்கள் பின்காணும் வகையில் அமைகிறது.
“இந்தத் திருத்தத்தின் நோக்கங்கள் மூன்று தன்மைகளைக் கொண்டவை.
1. அரசாங்கத்தால் ஓர் ஓட்டுநரின் சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் கட்டாயக் கடமை முதலாளிக்கு இருப்பதை இந்தத் திருத்தம் அறிவிக்கிறது.
2. முதலாளியின் இந்தப் பொறுப்பு தொடர்பாக எழக்கூடிய சிக்கல்களுக்குத் தீர்வு காணுவதற்கான வழிமுறைகளை வகுக்கிறது. மாகாண அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்படும் அமைப்பு பற்றி இந்தச் சட்ட முன்வரைவு குறிப்பிடுகிறது.
3. அந்த அமைப்பு பிறப்பிக்கும் ஆணையை நிறைவேற்றாததற்காகத் தண்டம் விதிப்பது பற்றியும் இதில் கூறப்பட்டிருக்கிறது.
ஒரு மோட்டார் வாகன ஓட்டுநருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமையின் வரம்புகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்ற சட்ட முன்வரைவின் பிற பிரிவுகள் இரு தன்மைகள் வாய்ந்தவை. முதலாவதாக, மீண்டும் வேலைக்குச் சேர்க்கப்படும் உரிமையைக் கோருவதற்கு, அவர் ஆறுமாத காலத்திற்குத் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, நாட்டுக்கான பணியிலிருந்து விடுபட்ட இரண்டு மாதங்களுக்குள் அவர் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். இந்த வரையறைகள் பின்பற்றப்பட்டால், நாட்டுப் பணிக்காகக் கோரப்பட்ட மற்றவர்களின் நிலையில் இவரையும் இந்தச் சட்ட முன்வரைவு வைக்கிறது..” (தொ.49 : பக்.120)
- சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) சட்ட முன்வரைவு மூன்று முறைகளுக்கு மேல் அவையில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது. மகப்பேறு கால விடுமுறை, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் ஆகியவை குறித்து இந்த முன்வரைவு பேசுவதைக் காண்கிறோம். அதன் பகுதி வருமாறு.
“சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941 என்பதைத் திருத்துவதற்கான சட்ட முன்வரைவை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விழைகிறேன்.”
இந்தத் திருத்தம் ஏன் அவசியமாகியுள்ளது என்பதை அவைக்கு நான் விளக்கிக் கூறுவது விரும்பத்தக்கது. சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டத்தின்கீழ், சுரங்கத்தில் வேலை செய்யும் ஒரு பெண் 8 வார காலத்திற்கு நாள் ஒன்றுக்கு 8 அணா வீதம் மகப்பேறு நல உதவிபெற தகுதிபெறுகிறார். இந்த 8 வார கால அளவு, ஒரு பகுதி மகப்பேற்றுக்கு முந்தியும், மற்ற பகுதி மகப்பேற்றுக்குப் பின்பும் என ஒவ்வொன்றும் 4 வாரங்கள் கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. மகப்பேற்றுக்கு முந்திய 4 வாரங்கள் பகுதி விருப்ப ஓய்வுக்கான கால அளவாகும். அந்தக் காலத்தில் ஒரு பெண் வேலை செய்து முழு ஊதியத்தையும் பெறலாம். அல்லது வேலைக்கு வராமல் இருந்து பேறுகால நல உதவியைப் பெறலாம்.” (தொ.49 : பக்.151)
- மகப்பேறு நலச்சட்டத் திருத்த சட்ட முன்வரைவுகள் 1945, மார்ச்சிலும் 1945 ஏப்ரலிலும் கலந்துரையாடப்பட்டதை அறிகிறோம்.
- தொழிற்சாலைகள் (திருத்த) சட்ட முன்வரைவுகளும் கொண்டு வரப்பட்டன. 1934ஆம் ஆண்டுத் தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தும் சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் இரண்டாவது திருத்தச் சட்ட முன்வரைவு 1945 மார்ச்சில் கொண்டு வரப்பட்டது.
- நிலக்கரிச் சுரங்கங்கள் பாதுகாப்பு (பராமரிப்பு) திருத்தச் சட்ட முன்வரைவும் கொண்டு வரப்பட்டது. 1939இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் திருத்த முன்வரைவு இதுவாகும்.
- ஊதிய வழங்கீடு (திருத்த) சட்ட முன்வரைவும் கொண்டு வரப்பட்டது. இது 1936ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அவர் பதவியில் இருந்த காலத்தில், முன்னரே உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் இன்ன பிற சட்ட விதிகளை, கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு வந்தார். இதன் மூலம் தொழிலாளர்களுக்குக் கிடைத்த பயன்கள் சிறப்பானவை. இதற்குமுன் என்ன இருந்தது? அம்பேத்கர் என்ன மாற்றங்களைச் செய்தார்? என்ற விவரணப் பட்டியல் ஒன்றை உருவாக்குவதன் மூலம், அம்பேத்கர் தொழிலாளர்களுக்குச் செய்த அரும்பணிகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
இரண்டாம் உலகப் போரும், தொழிலாளர்களும்
அம்பேத்கர் அரசப் பிரதிநிதி அவையில் தொழிலாளர்களுக்கான உறுப்பினராகச் செயல்பட்ட காலம் என்பது இரண்டாம் உலகப் போர் (1939-1945) நிகழ்ந்த காலம் ஆகும். போருக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. அவ்வகையான தொடர்புகள் குறித்த உரையாடலை அம்பேத்கர் வெகுவாக முன்னெடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரை "வளங்களுக்கான போர்” என்று அம்பேத்கர் வரையறை செய்கிறார். போரைச் சிறப்பாக முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டுமெனில், அப்போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆயுதங்கள், உணவு, எரிபொருள், மூலப்பொருள் ஆகியவை அடிப்படைத் தேவையாக அமைகின்றன. இவற்றை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்களே முதன்மையானவர்கள். இந்த வகையில் போர்ச்சூழலை வரையறை செய்கிறார் அம்பேத்கர். இது குறித்த அவரது பதிவு பின்வருமாறு அமைகிறது:
"இப்போதைய போர், வழங்கல் தொடர்பான போராகும். வழங்கலின் தேவையை நிறைவேற்றல் என்பது தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவதைப் பொறுத்துள்ளது. தொழிற்சாலைகளில் அமைதியை ஏற்படுத்துவது இன்று நம் முன் உள்ள ஓர் அவசரமான சிக்கலாகும். தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவது இரு பொருண்மைகளைப் பொறுத்தது. அப்படிச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
- முதலாவதாக, தொழில்தகராறுகளை விரைவாகத் தீர்த்து வைப்பதற்கான ஓர் அமைப்பு இருப்பதைப் பொறுத்துள்ளது.
- இரண்டாவதாக, தொழில்துறையில் வேலை செய்பவர்களிடையே பதற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய அனைத்து நிலைமைகளையும் நேரம் தவறாது போக்குவதைப் பொறுத்துள்ளது.
தொழிற்சாலைகளில் தொழில் தகராறுகளுக்கு இட்டுச்செல்லாத சிறிய சிக்கல்கள் நிறைய உள்ளன. ஆனால், அவை பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குப் பெரியவை. பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியவற்றில் பெரும்பான்மையானவை, சமூக நலனைப் பாதிக்கக் கூடியவை. இத்தகைய சிக்கல்களைக் கையாள்வதற்கு நம்மிடம் எந்த ஏற்பாடும் இல்லை. இதுபோன்றவற்றை அமைதியாகவும் மனநிறைவாகவும் தீர்த்து வைப்பதற்கு ஆட்சியாளருக்குப் பரிந்துரை வழங்க ஓர் அமைப்பை உடனடியாக ஏற்படுத்துவது அவசியம். இதுதான் இந்த மாநாட்டைக் கூட்டியதற்கான முதன்மையான காரணம்.” (தொ.49:பக்.45)
மேற்குறித்த பின்புலத்தில்தான், தொழிலாளர்களுக்கும் போருக்குமான உறவைப் பற்றிய உரையாடலை அம்பேத்கர் முன்னெடுக்கிறார். இந்தியாவை ஆட்சி புரியும் பிரித்தானியர்கள் நாஜிக்களை அழித்து, போரில் வெற்றி பெறவே இந்தியத் தொழிலாளர்கள் விரும்புவதாக, அதில் இந்திய பம்பாய் வானொலி நிலையத்திலிருந்து 1943இல் ஓர் உரை நிகழ்த்தினார். அவ்வுரையில் தொழிலாளர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போருக்குமான உறவுகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார்:
“தொழிலாளர்கள் விரும்புவது என்ன?
போரின்போது, பல நன்மைகளைத் தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். இன்னும் பலவற்றை அடைவர் என்பது உறுதி. நான் அண்மையில் எடுத்துக்காட்டியது போல, தொழிலாளர்கள் சட்டத்தின் மூலம் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். தொழிலாளர் நலன்களுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலாளிகளை மத்திய அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம், தொழிலாளர்கள் பாதுகாப்பையும் பராமரித்தலையும் கவனத்தையும் பெற்றுள்ளனர்.
போர் முயற்சியைத் தீவிரப்படுத்த அனைத்தையும் செய்ய தொழிலாளர் உறுதிபூண்டிருப்பதற்கு இத்தகைய உடனடி நன்மைகளைப் பெற்றிருப்பது மட்டுமே காரணமல்ல. இந்த உறுதிக்கு அடிப்படையாக அமைந்துள்ள நல்ல சூழ்நிலைகளைப் பெற்றுக் கொள்வதோடு தொழிலாளர்கள் மனநிறைவடையவில்லை. தொழிலாளர்கள் விரும்புவது, நல்ல வாழ்க்கை நிலைமைகளை. நல்ல வாழ்க்கை நிலைமைகள் என்று தொழிலாளர்கள் கருதுவது என்ன என்பதை விளக்குகிறேன்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
தொழிலாளர்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர். இதில் எதுவும் புதியதாக இல்லாமலிருக்கலாம். சுதந்திரம் பற்றிய தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் புதியது என்ன? கட்டுப்பாடு இல்லாதது என்ற எதிர்மறையான கண்ணோட்டமல்ல சுதந்திரம் பற்றிய தொழிலாளர்களின் கண்ணோட்டம். வாக்களிக்கும் உரிமையை மக்களுக்கு வழங்குவதோடு சுதந்திரம் பற்றிய தொழிலாளர்களின் கண்ணோட்டம் முடிவடைந்து விடுவதில்லை. அவர்களது கண்ணோட்டத்தில் சுதந்திரம் என்பது நேர்முறையானது.
மக்களாலான அரசாங்கம் என்ற கருத்தை அது உள்ளடக்கியுள்ளது. மக்களாலான அரசாங்கம் என்பது, தொழிலாளர்களின் கருத்துப்படி, நாடாளுமன்ற சனநாயகம் இல்லை. நாடாளுமன்ற சனநாயகம் என்பது ஓர் அரசு வடிவம். அதில் மக்களின் பங்கு தங்களின் ஆண்டைகளுக்கு வாக்களித்து, ஆட்சி செலுத்துவதை அவர்களிடம் விட்டுவிடுவதாகும். அத்தகைய அரசாங்க அமைப்பு, தொழிலாளர்களின் கருத்தில், மக்களாலான அரசு என்பதைக் கேலிக்கூத்தாக்குவதாகும். மக்களாலான அரசு, பெயரளவில் மட்டுமன்றி நடைமுறையிலும் இருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.
இரண்டாவதாக, தொழிலாளர்களின் கருத்துப்படி சுதந்திரம் என்பதில் சமவாய்ப்புக்கான உரிமையும், ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பாட்டுக்கான முழு வாய்ப்புகளையும் வழங்குவதற்கான அரசின் கடமையும் அடங்கும்..” (தொ.49 : பக்.78-79)
இவ்வகையில் பிரெஞ்சுப் புரட்சியோடு, பல்வேறு செய்திகளை இணைத்து இந்தியத் தொழிலாளர்கள் போர் பற்றிக் கொண்டுள்ள கண்ணோட்டத்தைப் பேசுகிறார். போரில் ஈடுபட்ட காயம் பட்ட தொழிலாளர்களுக்கான சட்ட முன்வரைவை 1943 இல் கொண்டு வருகிறார். நடைமுறையில் இருக்கும் போர் தொடர்பான சட்டங்கள். தொழிலாளர்களுக்குப் பெரிய அளவில் நலம் புரிவனவாகக் கருத முடியவில்லை. எனவே தொழிலாளர்கள் போரால் பெறும் காயங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கும் சட்டதிருத்த முன்வரைவை பின்காணும் முறையில் கொண்டு வந்தார். அப்பகுதி பின்வருமாறு அமைகிறது.
“போர்க் காயங்கள் குறித்த ஒழுங்குமுறையின் விதிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் ஏறத்தாழ 24 ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், அந்த ஒழுங்குமுறையின்கீழ் வழங்கப்பட்ட தொகைகள் உதவியாக மட்டும் இல்லாமல், இழப்பீடாகவும் அமைந்தன என்று கண்டறியப்பட்டது. எனவே, 24 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான தொகை கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த அதிகப்படியான தொகை இழப்பீட்டுத் தொகையாகும். அதாவது, அவசரச் சட்டத்தின்கீழ் பெறும் தொகையுடன் இந்த அதிகப்படித் தொகையையும் சேர்ப்பது இழப்பீட்டுத் தொகையாக ஆகிறது. இந்தச் சட்டம் ஒரு துணைச் சட்டமாகும். இது 1941ஆம் ஆண்டின் போர்க் காயங்கள் ஒழுங்குமுறையின் வழிவகைகளுக்குக் கூடுதலாக அமைந்துள்ளது.” (தொ.49 : பக்.131)
போர்க்கால நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகள் குறித்து அம்பேத்கர் விரிவாகப் பேசுகிறார். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் போர்க் காலங்களில் பல்வேறு தனித்த நிகழ்வுகள் உருப்பெறுவதாகவும் அதில் முதலாளிகளுடன் தொழிலாளிகள் சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவலம் நிகழ்ந்துவிடுவதாகவும் அம்பேத்கர் பேசுகிறார். போருக்குப் பின் உருவாகும் நெருக்கடிகளுக்கும், தொழிலாளருக்குமான தொடர்புகள் குறித்து, கல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசியுள்ளார். தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி, அரசாங்கம், தொழிலாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் அம்பேத்கர் உரை அமைந்துள்ளது (தொ.50 : பக்.82)
இவ்வகையில், தான் அதிகாரமிக்க ஒரு பதவியில் இருந்தபோது, சமகாலத்தில் நிகழ்ந்த போர் என்பது தொழிலாளர்கள் எனும் சமூகத்தோடு எந்தெந்த வகைகளில் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் புரிந்து அதற்கான நடைமுறைகளைக் கட்டமைத்தார்.
பிரித்தானியர் நடைமுறைப்படுத்திய திட்டங்கள்
காலனிய ஆட்சி மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் முக்கியமானவை. அம்பேத்கரின் பிற்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தப் புரிதலுக்கு, பிரித்தானியர் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்து அறிவது தேவை.
- 1889இல், புயல், சூறாவளி ஆகியவற்றிலிருந்து கப்பல்களைப் பாதுகாக்கும் அறிவியல் முறை நடைமுறைப்படுத்தினர். இதனால் இறக்குமதி, ஏற்றுமதி அளவுகள் பெரிய அளவில் கூடின.
- 1876இல் பல்வேறு திசைகளில், தொடர்வண்டி செயல்படுவதற்கான தண்டவாளங்கள் உருவாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் தொடர்வண்டிகள் ஓடத் தொடங்கின. இருப்புப் பாதை உருவாக்குவதோடு 1873இல் பெரம்பூரில் தொடர்வண்டிப் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையையும் உருவாக்கினர்.
- 1895இல் சென்னை நகருக்குள் டிராம் பாதை உருவாக்கப்பட்டது. சென்னையில் முதலிலும் பின்னர் தொடர்ந்து இந்திய நகரங்களில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின.
- 1931இல் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை மின்சாரத் தொடர்வண்டி ஓடத் தொடங்கியது. இது பின்னர் மும்பாய், கல்கத்தா நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.
- 1908இல் ‘மதராஸ் எலக்ட்ரிக்’ கார்ப்பரேஷன் உருவானது. இதனால் மின்சார உற்பத்தி நடைமுறைக்கு வந்தது.
- 1893இல் தொலைபேசி வசதி உருவானது 1855இல் சென்னையை மும்பாய், கல்கத்தாவுடன் இணைக்கும் விரைவுத் தந்தி நடைமுறைக்கு வந்தது.
- 1899 – பெட்ரோல் – எண்ணெய் விநியோக நிறுவனங்கள் உருவாயின.
- 1711இல் சென்னையில் முதல் அச்சகம் உருவானது. பின்னர் இந்தியா முழுதும் அச்சகங்கள் உருவாயின.
மேலே குறித்த அனைத்தும் தொழில்துறை தொடர்புடையவை. இதில் புதிய தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உருவாயினர். இப்படியான வளர்ச்சிக் காலங்களில்தான் அம்பேத்கரின் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றைப் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
- இந்தியாவில் மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனம் உருவானது. இதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த அம்பேத்கர் திட்டமிட்டார். மண்ணியல் ஆய்வு நிறுவனங்களின் பணிகளைப் பின்கண்டவாறு அம்பேத்கர் பட்டியலிடுகிறார்:
“1. மேவாரில் உதயப்பூர் சமஸ்தானத்திலுள்ள ஸாவர் ஈயம் மற்றும் துத்தநாகச் சுரங்கங்களை மீண்டும் திறப்பது
2. இராஜபுதனத்தின் மைக்காச் சுரங்கங்களை மேம்படுத்துவது
3. பலுச்சிஸ்தானின் கந்தகப் படிமங்களைப் பயன்படுத்திக் கொள்வது
4. வங்காளத்திலும் மத்திய மாகாணங்களிலும் உலோக வகைகளைத் தரும் தாதுப் பொருட்கள் பற்றி ஆய்வு செய்வது
5. பீகாரிலுள்ள படிவுகள் பற்றி ஆய்வு செய்வது
6. தாதுக்கள், கற்கள், உப்புகள், இவை போன்ற பிற பொருள்களைக் கண்டறிவது.” (தொ.49 : பக்.70-71)
இவ்வகையில் இந்தியக் கனிம வளங்கள் குறித்த அக்கறை அம்பேத்கரிடம் இருந்ததைக் காண்கிறோம். 1943இல் நடைபெற்ற அவை உரையாடல்களில் ஈயம், கந்தகம், வெள்ளியம், தாமிரம் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியக் கனிமவளங்கள் குறித்து, அரசாங்கத்தின் கொள்கை என்ன? என்பதையும் விளக்கியுள்ளார். அப்பகுதி வருமாறு:
“இந்திய அரசாங்கத்தின் கனிமவளக் கொள்கையும் அந்தக் கொள்கையைச் செயல்படுத்த அது மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நடவடிக்கையும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை.
முதலாவதாக, அரசாங்கத்தின் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக இந்திய மண்ணியல் ஆய்வுத் துறையை முன்னிலும் ஆற்றல்மிக்க சாதனமாக மாற்றுவதற்கு அதனை மறுசீரமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது, நிருவாக அடிப்படையில் ஏற்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அமைக்க எண்ணியிருக்கும் மண்ணியல் ஆய்வின் புதிய கிளைகள் பொறியியல் சார்ந்த மண்ணியல், கனிமவளங்களைத் தொழில் துறைகளுக்குப் பயன்படுத்துதல், மத்திய கனிமவள வளர்ச்சி, புவிசார்இயற்பியல் பணி, எண்ணெய் வள மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும். இவ்வகையில் என்ன செய்யப்படுகிறது என்பதைப் பொதுமக்கள் அறியும் பொருட்டு ஓர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தையும், தகவல் நிறுவனத்தையும் அமைப்பதும் இதில் அடங்கும்.
எங்கள் கனிமவளக் கொள்கையின் இரண்டாவது பகுதியில் கனிமவளங்களின் மீது கட்டுப்பாடு செலுத்தும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கம் இயற்றத் திட்டமிட்டிருக்கும் சட்டங்கள் இடம்பெறும். கனிமவளங்கள் மீது சட்டப்படியான கட்டுப்பாட்டின் வரையறைகளைத் திட்டமிடுவதில் பின்வரும் கூறுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்:
- ஒன்று, அகில இந்தியக் கனிமவளத்தின் முக்கியம்.
- இரண்டு, கனிமவளத்தின் தொழில்நுட்ப இயல்பு.
- மூன்று, கனிமவளம் பயன்படுத்தப்படும் நோக்கம்.
- நான்கு, கனிமவளத்தின் அல்லது கனிமவளத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் மதிப்பு..” (தொ.50 : பக்.173)
தாமோதர் அணைத் திட்டத்தின் கீழ், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்து கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் விரிவாகப் பேசினார். மீண்டும் கல்கத்தாவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் பற்றிய அம்பேத்கர் பதிவுகள் பின்வருமாறு.
"தாமோதர் ஆற்று நீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தைப் பற்றி உரையாடுவதற்காக நாம் இரண்டாவது முறையாக இங்கே கூடியுள்ளோம். இது குறித்த முதல் கூட்டம், 1945ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் நடைபெற்றது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 1944ஆம் ஆண்டில் வங்காள அரசாங்கம் நியமித்த தாமோதர் ஆற்று வெள்ள விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து அப்போது ஆராய்ந்தோம்.
இத்திட்டத்தை ஆற்றில் அணைகட்டி வெள்ளச் சேதத்தைத் தடுக்கும் திட்டமாக உருவாக்குவதா? பாசனம், மின் உற்பத்தி முதலிய நோக்கங்களையும் உள்ளடக்கிய, பல்நோக்குத் திட்டமாக விரிவாக்குவதா? இவையே, அன்று நம்முன் எழுந்த வினாக்களாகும். அம்மாநாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து பல்நோக்குத் திட்டமே. அதற்கேற்றவாறு தேவையான தகவல்களைத் திரட்டி பல்நோக்கு திட்டத்தை வரைவதற்கு ஏற்பாடு செய்ய மாநாடு தீர்மானித்தது. இப்பணிக்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை முழுமையாகத் தருவதென்று இந்திய அரசாங்கத்தின் சார்பில் நான் கூறினேன்.” (தொ.51 : பக்.12)
இத்திட்டத்தால், கிராமங்களைக் காலி செய்யும் தேவை உருவானது. அப்படி நேரும் போது எவ்வளவு பேர் காலி செய்கிறார்கள்? அவர்களது நிலங்கள் எவ்வளவு? அவர்கள் உரிமைகள் என்ன? ஆகியவற்றைக் கண்டறிய உள்ளோம். அது தொடர்பாக அரசாங்கம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார் (தொ.54 : பக்.95-96). தொழிலாளர்களோடு தொடர்புடைய இத்திட்டங்களில் அம்பேத்கர் அக்கறை செலுத்தினார். மேலும், ஒரிசாவில் ஆறுகளை உருவாக்கும் திட்டம், மின்விசை உற்பத்திக்கான நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அம்பேத்கர் அக்கறை செலுத்தினார்.
1942-1946 காலங்களில் பிரித்தானிய ஆட்சி சார்பில் நிருவாகத் துறையில், தொழிலாளர்கள் நலம் கருதி பல பரிமாணங்களில் அம்பேத்கர் செயல்பட்டார். இரண்டாம் உலகப் போரின் போது தொழிலாளர்களின் மீது அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட்டதாகக் காண்கிறோம். அரசப் பிரதிநிதி அவையில், தனக்குரிய அதிகாரத்திற்குச் சரியாகப் பயன்படுத்தி, தொழிலாளர்களுக்கான ஏராளமான, சட்ட முன்வரைவுகளை, அதாவது பல ஆண்டுகளாக மாற்றம் செய்யாத சட்டங்களைத் திருத்தம் செய்து, நவீன தேவைக்கேற்ப கொண்டு வந்தார். இந்திய வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை செலுத்தினார். இவ்வகையில், பின்னர் உருவான இந்தியா என்ற சனநாயக நாட்டிற்கு முன்னரே திட்டங்களை, சட்டங்களை உருவாக்கிய அரும்பணியை அம்பேத்கர் நிறைவேற்றியுள்ளார்.
நூல்கள்: அண்ணல் அம்பேத்கர் மக்கள் பதிப்பு தொகுதிகள் 49-54 வரை
- வீ.அரசு