tamil school07.12.1956இல் தமிழகச் சட்டப் பேரவையில் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தை அவையில் தாக்கல் செய்த அன்றைய கல்வி அமைச்சர், சி.சுப்பிரமணியம் “சட்ட சபையின் முன்னிலையில் தமிழ் மக்கள் சார்பாக இந்த மசோதாவைத் தமிழன்னையின் மலரடியில் சமர்ப்பிக்கிறேன். தமிழனாய்ப் பிறந்த பிறவிப் பயனைப் பெற்றுவிட்டதாகவே கருதுகிறேன்” (துரை சுந்தரேசன், 1986:340) என்று குறிப்பிட்டார்.

ஆட்சிமொழிச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஜீவா தமிழில், கலைச்சொல் அகராதிகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்று எம்.கல்யாணசுந்தரம் பேசினார்.

மேலும் பாளையம் தியாகராசன், இராமமூர்த்தி, முத்தையா செட்டியார், கருத்திருமன் முதலியோரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டனர். ஆட்சி மொழித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, தமிழ் ஆட்சி மொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.

தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவதே இக்குழுவின் நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக 26.01.1959ஆம் நாள் சென்னை அரசு, தமிழ் வளர்ச்சி ஆய்வுக் குழுவை நிறுவியது. அதன் தொடக்க விழாவில், “தமிழைப் போதனை மொழியாக்க வேண்டுவது இன்றியமையாதது. ஆயினும் பல இடர்பாடுகள் உள்ளன. தமிழிலேயே பாடம் போதிக்க முடியாது என்று சிலர் பேசினர். அதில் உண்மையில்லை” (செ.செ. 1959:296) என்று சி.சுப்பிரமணியம் கூறினார்.

காமராஜர் உரையாற்றும் போது “படித்தவர்களின் மனப்பான்மை மாற வேண்டும். தமிழ் போதனை மொழியாக உள்ள பள்ளிக்கே தம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும். இதனைச் செய்தால் தமிழில் பாடப் புத்தகங்கள் தானே வெளிவந்து விடும்” (செ.செ.1959:296) என தம் கருத்தைத் தெரிவித்தார்.

கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் வரலாற்றுப் புகழ்மிக்க ஆணையை அரசு 14.04.1959இல் வெளியிட்டது (G.O.No.748 Education). இதற்குக் காரணமானவர் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆவார்.

இத்துடன் திட்டத்தால் ஏற்படும் விளைவுகளை மதிப்பிட ஒரு குழுவையும் நிறுவினார். பயிற்று மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாகக் கலைச்சொற்கள், பாடநூல்கள், பாடத்திட்ட செயல்முறைகள் ஆகியவற்றைத் தயாரிக்க கல்லூரிக்குத் தமிழ்க்குழு என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இக்குழுவில் கோவை ஜி.ஆர்.தாமோதரன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் உட்பட ஆறு பேர் இடம் பெற்றனர்.

இக்குழு 1960-61ஆம் ஆண்டில் பல துறைகளுக்கான கலைச்சொல் பட்டியலையும் பாடநூல்களையும் தயாரித்து வெளியிட்டது. இக்காலகட்டத்தில் தென்னிந்தியத் துணைவேந்தர்கள் மாநாடு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 9.11.1961 ஆம் நாள் நடைபெற்றது.

இதில் தமிழ் பயிற்றுமொழிக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்லூரிகளில் தமிழ்: ஆதரவும் எதிர்ப்பும்

சி.சுப்பிரமணியத்தின் தமிழ் பயிற்று மொழித் திட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அன்றைய மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுப்பராயன் சி.சுப்பிரமணியத்தின் இத்திட்டத்தை மறைமுகமாக எதிர்த்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1966ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த பாரதி விழாவில் “கிராமணியார் தமிழைப் படிக்கச் சொல்கிறார். தமிழன் சிலப்பதிகாரத்தையும் புறநானூற்றையும் படித்துவிட்டால் அவனுக்கு உத்தியோகம் கிடைத்துவிடுமோ?” (ம.பொ.சி. 1974:888) என சுப்பராயன் கேள்வி எழுப்பினார். இக்கருத்து விழாவில் பெரும் குழப்பத்தை விளைவித்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ம.பொ.சி. தமிழ் பயிற்று மொழி ஆவதற்கும், தமிழை மொழிப் பாடமாகப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கினார். இக்கூட்டம் ஆபட்ஸ்பரி தங்கும் விடுதியில் நடந்தது. எனவே இக் குழப்பம் ‘ஆபட்ஸ்பரி குழப்பம்’ என வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில், அறிஞர்கள் கல்வியாளர்களிடையேயும் பயிற்று மொழி ஆதரவு, பயிற்று மொழி எதிர்ப்பு என இரு அணிகள் உருவாகின.

பயிற்றுமொழி ஆதரவு அணியில் பாவேந்தர் பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் முதலிய பெருமக்களும்; ஆங்கில ஆதரவு அணியில் ஏ.இலட்சுமணசாமி முதலியார், ஏ.இராமசாமி முதலியார் முதலியோர்களும் மற்றும் தேசியத்தின் பேரால் போலித்தனம் புரிவோரும் அணிவகுத்து நின்றனர் (த.சுந்தரராஜன் 1988:84).

இவ்வாறு தமிழ் பயிற்று மொழித் திட்டம் ஆதரவு, எதிர்ப்பு அணிகளால் அரசியலாக்கப்பட்டது.

தமிழ் பயிற்று மொழி முன்னோடித் திட்டத்தின் செயல்பாடுகள்

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.கல்லூரி, பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்வழிக் கல்வி தொடங்கப்பட்டது.

இது தவிர இத்திட்டம் சென்னை ராணிமேரி கல்லூரியில் வரலாறு, பொருளாதாரம், புவியியலும்; சென்னை அரசுக்கல்லூரியில் வரலாறு, பொருளாதாரமும்; கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பொருளாதாரமும் தமிழ் வழியில் நடைபெற அரசு அனுமதித்தது.

தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு கருத்துக்கள் பரவியதைத் தொடர்ந்து 1963-64ஆம் கல்வியாண்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழை பயிற்று மொழியாக்கத் திட்டமிட்டது. இத்திட்டத்திற்குப் பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தரப்பட்டது.

தமிழில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு 1963, மே, ஜூன் மாதங்களில் கோவை அரசுக் கல்லூரியில் ஐந்து வாரம் தொடர்ந்து நடைபெற்றது.

கல்லூரித் தமிழ்க் குழு செயல்நிலை அறிக்கைகளின்படி, “பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த பதில்கள் உற்சாகமூட்டக் கூடியவையாக இருக்கின்றன. தமிழ்ப் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்கள் ஊக்கம் காட்டுகின்றனர்.” ஓரளவேனும் தயக்கம் இருக்கக்கூடும் என்று நினைத்த குழுவினருக்கு இந்த மகிழ்ச்சியான முடிவு எதிர்பாராததாக அமைந்தது (சட்டமன்ற நடவடிக்கை. 1.4.1963:437) என்றவாறு அறிக்கை, பயிற்று மொழிக்கு வரவேற்பை அளிப்பதாக அமைந்திருந்தது.

காங்கிரசில் குழு மனப்பான்மை

தமிழ் பயிற்றுமொழி ஆக்குவது தொடர்பான கருத்தில் தமிழகக் காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு குழுக்கள் செயல்பட்டு வந்தன. பயிற்றுமொழிக்கு ஆதரவாக சி.சுப்பிரமணியம் கு.அருணாசலம், தி.சு.அவினாசிலிங்கமும்; எதிர்ப்புக் குழுவில் சுப்பராயன், பக்தவத்சலம் ஆகியோரும் இருந்தனர்.

இதற்கிடையில் 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சி.சுப்பிரமணியம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மைய அரசு அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து புதிய கல்வி அமைச்சராக பக்தவத்சலம் பதவி ஏற்றார்.

தொடக்கத்தில் பயிற்று மொழிக்கு ஆதரவு தெரிவித்த இவ்வமைச்சர் காலப்போக்கில் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதை, “தமிழை பயிற்சி மொழியாக்கக் கட்டாய முறையை நாம் கையாள முடியாது. தமிழுக்காகப் பரிந்து பேசுவோர் அதனைப் பயிற்சி மொழியாக்குவதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

வருகின்ற கல்வியாண்டில் தமிழ் பயிற்சி மொழித் திட்டம் விரிவுபடுத்தப்பட மாட்டாது. நன்கு யோசித்து பின்னரே அது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும்” (ம.பொ.சி.1974:891) என்ற அவரின் கூற்றால் அறிகிறோம்.

இந்நிலையில் தமிழ்வழிக் கற்கும் மாணவர்களுக்கு ரூ.30 உதவித்தொகை அளித்ததோடு முன்னோடித் திட்டத்தில் பங்கு பெற்றவருக்குக் கல்விக் கட்டண விதிவிலக்கும் அளிக்கப்பட்டது.

இச்சமயத்தில் தமிழ்வழி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதன் எதிரொலி சட்டமன்றத்தில் ஒலித்தது. “ஒரு இடத்தில் ஆங்கிலம் பயிற்சி மொழியாக வைத்துவிட்டு இன்னொரு இடத்தில் தமிழ் பயிற்சி மொழித் திட்டத்தை வைத்திருப்பதன் காரணமாகத்தான், மாணவர்கள் வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது.

பயிற்றுமொழியாகத் தமிழ் எடுத்துப் படித்தவர்களுக்குத்தான் உத்தியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்றால் தானாகவே இதற்கு முக்கியத்துவம் வந்துவிடும். ஆகவே நம்முடைய தமிழ் மொழியை உயர்நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் அமைச்சர் அவர்களுக்கு இருக்குமானால்; ஒரு பாதுகாப்பு உறுதிமொழியை அமைச்சர் கொடுக்க வேண்டும்” (சட்டமன்ற நடவடிக்கை. 1963:300) என்ற புலவர் சி.கோவிந்தனின் கருத்து வழி என்ன தேவை என்பதை அறிகிறோம்.

தமிழ்வழிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்குக் கண்டனங்கள் எழுந்தன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.நெடுஞ்செழியன் பயிற்று மொழித் திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கக் கூடாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

இச்சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் மதியழகன் தமிழ்வழிக் கல்லூரிக் கல்விக்கான ஆணையைப் படிக்க ஆரம்பித்தார். அந்த ஆணை வரிகள் வருமாறு: In order to commence the change over during the year 1963-64... ஆணையை படித்துக் காட்டிய பிறகு மதியழகனுக்குப் பதில் அளித்த கல்வி அமைச்சர் பக்தவத்சலம் “அது 1962-1963இல் துவங்குவது பற்றி “In order to commence’ என்று இருக்கிறது. Adopt என்று இல்லை” என்றார். திரு.கே.ஏ.மதியழகன் குறுக்கிட்டு இன்னொரு..... என்று ஆரம்பித்த பொழுது அமைச்சர் பேஜைப் படித்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.

இதிலே கமென்ஸ் என்றுதான் இருக்கிறது (சட்டமன்ற நடவடிக்கை. 1963: 470) என்றார். பக்தவத்சலத்தின் இப்பேச்சு, தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பின்னடைவுக்குக் காரணமாக அன்றைய காங்கிரஸ் அரசு இருந்துள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாக்குகிறது.

writer subramaniyan1966ஆம் ஆண்டு அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகளில் தமிழ்வழித் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறிய அரசின் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது அதைப் பற்றி விவாதிக்காமல் காலம் கடந்து நடைமுறைப்படுத்தப்பட்ட புதுமுக வகுப்பு அறிமுகத்தை சாதனையாகக் காட்டிய அன்றைய கல்வி அமைச்சரின் பேச்சு தமிழ்வழிக் கல்லூரிக் கல்வித் திட்டம் தோல்வி அடைந்ததை உறுதிப்படுத்துகிறது.

இவர் காலத்திலேதான் ஆங்கில வழிக் கல்வி ஏற்றம் பெற்றது. எப்படி என்றால் 3ஆம் வகுப்பிலிருந்து மீண்டும் ஆங்கில வகுப்புகளைத் தொடங்க ஆணை பிறப்பித்தார். மேலும் உயர்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்புகளிலிருந்து 10ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புகளிலும், ஒரு பிரிவு, ஆங்கிலம் பயிற்று மொழியாக வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

இக்காலகட்டத்தில் “பயிற்றுமொழி பிரச்சனை” என்ற புத்தகம் பக்தவத்சலத்தால் எழுதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வாயிலாக வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

“திருமுருகாற்றுப் படையை இயற்றிய நக்கீரரும் அந்த நூலின் தொடக்கத்தில் ‘உலகம் உவப்ப’ என்று தொடங்கிப் பாடியதன் மூலம் அவருடைய உலக கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக உலகம் பொது மொழியாகவும், வியாபாரத்திற்கும், விஞ்ஞானப் படிப்பிற்கும் மிகமிக இன்றியமையாத மொழியாகவும் உள்ள ஆங்கிலத்தைப் பயில வேண்டும்....!

பிராந்திய மொழிகளோடு ஆங்கில மொழியும் கல்லூரியில் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மட்டும் பயிற்சி மொழியாக இருந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படும், நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம் தனித்தனி ஸ்தாபனங்களாகிப் பிரிவு மனப்பான்மை வளர இடம் ஏற்பட்டு விடும்” என்றார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அமைச்சர் ஆங்கில வழிப்படிப்புக்கு மட்டும் ஆதரவு தெரிவித்ததை அறிய முடிகிறது.

- டாக்டர். சு.நரேந்திரன்

Pin It