captain bridgeகாப்டன் ஸ்விங்
எரிக் ஹாப்ஸ்பாம் & ஜியார்ஜ் ரூட் (2001)
சென்ற இதழின் தொடர்ச்சி

நில உடைமையாளர்களுக்கு எதிரான கலகச்செயல்கள் காப்டன் ஸ்விங் என்பவரது பெயரால் நிகழ்ந்தன என்பதையும், இது ஒரு கற்பனைப் பெயர் என்பதையும் சென்ற இதழில் அறிந்துகொண்டோம்.

இச் செயல்களில் ஈடுபட்டோர் குறித்து ஜியார்ஜ் ரூட் இந் நூலின் பன்னிரண்டாவது இயலில் ஆராய்ந்துள்ளார். இவர்களில் பெரும்பாலோர் பண்ணையாரின் ஊழியர்களாகவோ அல்லது அவருக்கு அருகில் வசிப்பவர்களாகவோ இருந்துள்ளனர் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் காவல் துறை, சிறைத்துறை ஆவணங்களின் துணையுடன் மேலும் சில செய்திகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

1830ஆவது ஆண்டின் குளிர்காலம் தொடங்கி 1831 கோடைகாலம் வரை நிகழ்ந்த தீ வைப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டோராக தொண்ணுற்றாறு பண்ணையாட்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்கள்.அவர்களில் யாரும் அந்நியரல்லர்.

இவர்களில் எழுவர் பெண்கள். எஞ்சியோரில் ஒருவர் காப்பீடு செய்திருந்த தம் வீட்டைத் தாமே கொளுத்திப் பணம் பெற முயன்றுள்ளார். இருவர் விவசாயிகள். தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள ஒருவர் தீ வைத்திருக்கிறார், அய்ந்துபேர் நெசவாளர்கள்.

எஞ்சியோரில் சிலர் பண்ணையாட்கள், சிலர் உழவுசெய்வோர், உடல் உழைப்பாளிகள், வண்டியோட்டுவோர், ஒருவர் ஊர்சுற்றி. பயமுறுத்தும் கடிதங்கள் எழுதிய நாற்பத்தாறு பேர்களில் அய்ந்துபேர் பெண்கள். இவர்கள் தவிர ஆலைத்தொழிலாளிகள், தோட்டக்காரர், பள்ளி ஆசிரியர்கள், வழக்கறிஞரின் எழுத்தர், பயணியாக வந்த தையற்கலைஞர், வைக்கோலால் கயிறு திரிப்பவர் என்போரும் இடம் பெற்றிருந்தனர்.

கலகக்காரர்கள் பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்களாகவே இருந்தனர். மொத்தத்தில், இது குடியானவர் கலகம் என்றழைக்கப்பட்டாலும் வேறு பல பிரிவினர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர். கலகம் செய்ததாகக் கைதானவர்களில் ஆலைத் தொழிலாளி, சாலைப் பணியாளர்களை மேற்பார்வையிடுவோர், நாடோடி, வீட்டு உரிமையாளர், காகிதம் செய்பவர், படைஅதிகாரி, கூடை முடைவோர், புகைபோக்கி சுத்தம் செய்வோர், ஊசி செய்பவர், முன்னாள் காவலர் என்போர் இடம்பெற்றிருந்தனர். விவசாயிகளின் எண்ணிக்கை குறைவுதான். நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்துவந்த கைவினைத் தொழிலாளர் எண்ணிக்கையே அதிகமிருந்தது. செங்கல் செய்வோர், தச்சர், கொல்லர், சாயம் தோய்ப்போர், காலணி செய்வோர், கூரை வேய்வோர், தோல் தொழில் செய்வோர் என விவசாயிகள் அல்லாதாரின் பங்களிப்பு அதிகமிருந்துள்ளது; பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்துள்ளது.

கலக நிகழ்வுகள்

அறுவடை எந்திரங்களைத் தாமே கொளுத்தி விடும்படியும், அவ்வாறு கொளுத்தாவிடில் எங்களது தொழிலாளர்கள் அதைக் கொளுத்திவிடுவார்கள் என்றும் எச்சரிக்கை அடங்கிய கடிதங்கள் காப்டன் ஸ்விங் பெயரில் பண்ணையார்களுக்குச் சென்றன. இதை எதிர்கொள்ளும் வகையில் குற்றவியல் நீதிபதிகள், மதகுருக்கள், நில உரிமையாளர்கள், வேளாண் தொழிலாளிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினர்.

சொத்துக்களையும், உற்பத்திப் பொருள்களையும் அழித்த ஸ்விங் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தொடக்கத்தில் அறுவடை எந்திரங்கள் ஒன்றிரண்டு மட்டுமே எரியூட்டி அழிக்கப்பட்டன. இக்கூட்ட முடிவுக்குப் பின் அனைத்து எந்திரங்கள் மீதும் எதிர்ப்புணர்வு திரும்பியது, காகித ஆலை எந்திரங்கள் நொறுக்கப்பட்டன.

எந்திரங்களின் பயன்பாடு எதிர்ப்புக்கு ஆளானது. கூட்டத்தை அமைதிப்படுத்தும் வழிமுறையாக நீதிபதி, ஆயுதப்படையைத் திருப்பி அனுப்பினார்.

அரசின் செயல்பாடு

இவ்வாறு இங்கிலாந்தில் நிகழ்ந்த கிராமப்புறக் குடியானவர் எழுச்சியை ஒரு கலகச்செயலாகவே அந்நாட்டு அரசு பார்த்தது. இதனால் இராணுவம், நீதித்துறை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற வழிமுறைகளைக் கையாண்டு இதை ஒடுக்கியது.

சில நேரங்களில் கைது செய்வித்தலையும் மேற்கொண்டது; சில இடங்களில் தானாகவே குடியானவர் எழுச்சி ஒடுங்கியது. கைது செய்யப்பட்டவர்கள், சிறைத் தண்டனைக்கு மட்டும் ஆளாகவில்லை; மரணதண்டனை, நாடுகடத்தல், சவுக்கடி போன்ற கடுமையான தண்டனைகளுக்கும் ஆட்பட்டனர்.

அரிதாக சிலருக்குப் பணவடிவில் தண்டம் விதிக்கப்பட்டது. இவற்றில் கப்பல் ஏற்றி நாடு கடத்தப்பட்டவர்களின் நிலை மிகவும் அவலமான ஒன்றாகும். திருடர்கள், சட்டத்தை மீறியவர்கள் ஆகியோருடன் நூறுநாட்களுக்கும் மேலாகக் கடற்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குடியானவர் எழுச்சிக்கு முன் இங்கிலாந்தில் நிகழ்ந்த லடைட் இயக்கம், சாசன இயக்கம், தொழிற்சங்க இயக்கம் என்ற இயக்கங்களில் ஈடுபட்டவர்களைவிடக் கடுமையான பாதிப்பை இக் குடியானவர் இயக்கத்தில் பங்கேற்றோர் எதிர் கொண்டனர்.

இயக்கத்தின் விளைவு

குடியானவர் எழுச்சியானது, சட்டம், அரசின் அடக்குமுறை அமைப்புகள் துணையுடன் ஒடுக்கப்பட்டாலும் அதன் தாக்கம் பல்வேறு நிலைகளில் வெளிப்பட்டது. வேளாண் பொருட்கள் மீதான காப்பீடு செய்வதற்கான பிரிமியம் தொகை உயர்ந்தது.

தாம் ஆங்கிலேயர் அல்லர் அடிமைகள் என்ற கருத்து தொழிலாளர்களிடம் தோன்றியது. பணக்காரர்கள் வாழப்பிறந்தவர்கள், ஏழைகள் நாய் போன்று பட்டினியால் சாகப்பிறந்தவர்கள் என்ற கருத்தும் அவர்களிடம் உருவானது.

ஏழைகளின் நலம் குறித்தும், சமயக்குருக்கள் வரிவாங்குவது குறித்தும் சட்ட அடிப்படையில் ஆராயும் நிலைக்கு அரசு ஆளானது. விக்டோரியா மகாராணி காலத்தில் அறிமுகமான ‘வறியோர்’ சட்டத்தில் 1834 ஆவது ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. ‘தித்தி’ என்ற பெயரிலான வரி தொடர்பான சட்டத்திலும் 1836இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இப்போராட்டம் ஒடுக்கப்பட்ட போதிலும் அறுவடை எந்திரங்கள் முன்போல் செயல்படவில்லை. இது, அமைப்பாக ஒன்று திரட்டப்படாத திக்கற்ற பண்ணையாட்களின் சாதனையாகும்.

அறுவடை எந்திரங்கள் அறிமுகமான போது மூர்க்கமாக எதிர்த்த பகுதிகளில் போராட்டம் முடிந்த பின்னரும் எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. 1850ஆவது ஆண்டிற்குப் பின்னரே எந்திரமயமாதல் நாடு முழுவதும் பரவலாக நடைமுறைக்கு வரலாயிற்று.

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It