“ராமனைப்பற்றி பணிக்கர் ஓரிருமுறை சொன்னது தான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. அவர் சொல்வார் ‘நாலு காசுக்காக அவன் கால்கள் பூமியில் தரித்திருக்கவில்லை. அதனால்தான் அவனால் நிலவைக் கைப்பற்ற முடிந்தது”

c mohan 400கவிஞர் விமரிசகர் மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் எனப் பன்முகத்தளங்களில் அழுத்தமான கலைமதிப்பீட்டு நம்பிக்கைகளோடு எவ்விதப் பதட்டமும் பரபரப்புமின்றி தன் எளிமையானப் போக்கில் தொடர்ந்து இயங்கிவரும் சி,மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்‘ என்ற நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிறுபிராயத்திலிருந்தே அசாத்தியமான படைப் பாளுமை கொண்டிருந்த ஓவியர் ராமானுஜம் தன் வாழ்வில் எதிர்கொண்ட இயலாமைகளையும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சற்றும் பொருட் படுத்தாது தனது ஓவிய சாதனைகளின் ஊடாக அவற்றைக் கடந்துசெல்கிறார். கலையின் நிறைவான இடத்தைக் கண்டடைந்ததாக உணரும் தருணத்தில் அவரது கலைவெளிப்பாட்டின் உச்சபட்ச சாத்தியமாக சுயமரணத்தையும் ஒரு கலையாக அவர் நிகழ்த்துவதை கவித்துவமான போக்கில் புனைவாக விரித்துச் செல்கிறது இந்நாவல்.

இளம் வயதிலேயே மரணித்த ஓவியர் ராமானுஜத்தைப் பற்றி நண்பர்கள்வழி தானறிந்தவற்றை நிகழ்வும் புனைவுமாக உருவாக்கியிருக்கிறார் சி.மோகன். தமிழ் இலக்கிய வடிவில் தனித்தமைந்த பாங்கினைக் கொண்டுள்ள இந்நாவல் தமிழ் நாவல் படைப்புலகில் புதிய முன்னெடுப்பாகும். இந்நாவலில் ஓவியர் ராமானுஜம், ஓவியர் பணிக்கர், ஓவியர் டக்ளஸ் ஆகியோரோடு சி.மோகனும் கலையுருக் கொண்டு உள்ளார். கதையோட்டம் என்பதான புனைவுகளே பெருமளவில் எழுதிக் குவிக்கப்படும் தமிழ்ச்சூழலில் இலக்கியவடிவம் குறித்த மதிப்பீடுகளைக் கலைத்துப் போட்டு உரையாடல், சந்திப்பு, இடையீடுகளுடன் ராமானுஜம் எனும் அதியற்புதமான ஓவியக் கலைஞரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரத்தை கவித்துவமும் கலை நயமும் மிக்கப் படைப்பாக சி.மோகன் உருவாக்கியளித் திருக்கிறார்.

காலம் கலை கலைஞன் குறித்து மேலதிகப் புரிதலுடனும் அக்கறையுடனும் தொடர்ந்து இயங்கியும் எழுதியும் வரும் சி.மோகன் இந்நாவலில் ராமன் வழியாக கலை ஞானத்தையும் கலை மதிப்பீடுகளையும் கலைப் பெருமிதங்களையும் கவனப்படுத்த முனைவதோடு, கலையின் அழகிய சாத்தியங்களை உணர்ந்து கலைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் கலைஞனின் இருப்பையும் அக்கலைஞன் உருக்கொண்டு நிலைக்கும் புள்ளியையும் காட்சிப்படுத்துகிறார். இதனை இந்நாவல் ‘ஓவியத்தை ஒரு குறியீடாகக் கொண்டு சகல உயர் கலைகளின் உன்னதங்களின்பால் நம் மனம் விழைய இறைஞ்சுகிறது’ என்று யூமா வாசுகி தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது.

சிறுவயதிலிருந்து ராமனுக்குக் கிடைக்காத மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வாழ்வின் எந்த்த் தருணத்திலும் அவனுக்கு வாய்க்கவேயில்லை. பசியும் தவிப்பும் அவமானமும் ஏக்கமும் இயலாமையும் அவனை விட்டு அகலவேயில்லை. சதா கனவுலகில் சஞ்சரிப்பதாகவும் தனிமையும் அவஸ்தையுமாக தொடரும் பொழுதுகளில் கனவுகளும் கற்பனையுமான வெளியில் பிரக்ஞையற்று போதையில் நிலவோடு உரையாடுவதுமான அவனது வாழ்க்கை நகர்வில் எவ்வித சுவாரஸ்யத்தையும் நாவலின் எவ்விடத்திலும் கூட்டிக் கூறப்பெறவில்லை.

முழுமையான ஓவியனாகப் பரிணமித்த பின் திருமணம் செய்யும் ஆசையில் தவிப்பதும் பெண்ணின் தகப்பனால் கேவலப் படுத்தப்படுவதும் எல்லோராலும் நகைப்புக்கும் கேலிக்கும் உள்ளாவதும் அதையட்டிய நண்பர்களின் திட்டமிட்ட அவமானமும் எனத் தீராதவாதையும் பாடுகளுமாக அலைக்கழியும் காலவோட்டத்தில் அவனது கலை மேதைமை சற்றும் சரிவு கொள்ளாமல் மேன்மையை நோக்கி செழித்தோங்கி உச்சத்தை அடைவதனாலேயே அவன் விந்தைக்கலைஞனாகிறான்.

தீவிரமாகக் கலையைக் கைக்கொள்ளும் ஒருவர் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் மிகச் சாதாரணமாக எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்கள் அவரது கலைநுட்பத்தில் எவ்வகையிலும் சேதாரத்தை ஏற்படுத்து வதில்லை எனும் மகத்தான உண்மை நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

‘யதார்த்தத்தை இந்த நாவல் பரிசீலிக்கவில்லை, மாறாக இருத்தலின் சாத்தியங்களைப் பரிசீலிக்கிறது‘ என்று முன்னுரையில் சி.மோகன் குறிப்பிட்டுள்ளபடி கலையைத் தன் வாழ்வாக வரித்துக்கொண்டு எவ்வித சலிப்புச் சலனமுமற்றுக் கடந்துசெல்லும் உண்மைக் கலைஞனின் முன்மாதிரி வடிவமாக ராமனை அடையாளப்படுத்துகிறது இந்நாவல்.

இன்னலுற்ற வாழ்வின் எந்தவிடத்திலும் ராமன் என்கிற விசித்திரமும் விந்தைத்திறனும் கொண்ட ஓவியன் தன் கலைப்புடைப்புகளால் தன்னளவில் எவ்விதப் பெருமையும் கொள்வதில்லை என்பதோடு எத்தருணத்திலும் பிழைப்புக்காக தனது கலையைப் பண்டப் பொருளாகப் பயன்படுத்த அவன் விருப்புக் கொள்ளவில்லை என்பதே இந்நாவல் வழி சி.மோகன் தரும் செய்தி. ராமனைப் பற்றி பணிக்கர் சொன்னதாக சுட்டப்படும் வரிகளும் அதனையே உணர்த்துகின்றன.

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்

ஆசிரியர்: சி.மோகன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ,

அசோக் நகர், சென்னை - 600 083

விலை: ரூ.110/-