மனித வாழ்க்கையில் நூற்றெட்டுக் கோணங்கள். அவற்றிலே உன்னுடையது எது? வக்கிரமும் பொறுக்கித் தனமும் சோரமும், மனிதாபிமானமற்ற சேட்டையும், பேமாளித்தனமும்... என்று இப்படியாகப்பட்டதா? அல்லது இப்படியாகப்பட்டது மட்டுமா உன் வாழ்க்கை? இருக்கலாம் என்பது உன்னைப் படைத்த எழுத்தாளனின் முடிவு என்றால், அதுதான் முடிவு. நானாவித மக்களின் நடமாட்டமும் போக்குவரத்தும் சுறுசுறுப்பும், பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலும், புரிதலும், கொஞ்சம் கொண்டாட்டமும், கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் எக்களிப்பும் கொண்டு நீ இருந் திருக்கிறாயா? வாழ்க்கையின் அந்தப் பொழுதுகளும் அந்தப் பக்கங்களும் வேண்டாம் என்று படைப்பாளி ஒதுக்கம் காட்டினால் உன்மேல் விழும் அவருடைய பார்வைக்கோணமே அதுதான் என்றால், அதுதான் அவருடைய நியாயம். கச்சடாக்கள் மட்டுமே வியாபாரச் சரக்குகளாக இருக்குமானால், வியாபாரியின் பாடு, சரளமாக நடக்குமானால், திருவனந்தபுரம் சாலைக்கம்போளம் என்றால் என்ன, திருநெல்வேலி சாமிநெல்லையப்பர் கோயில் வீதி என்றால் என்ன? அதுவே உனக்கு அடையாளமாகிவிடுமா என்ன?

a madhavanபதினோரு கதைகளாக, ஒரு இருநூறு பக்கங்களில் ஒரு கடைவீதி சமைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் நகரத்தின் இதயமாகக் கருதப்படும் பத்மநாபசுவாமி ஆலயத்தின் எதிரேயுள்ள ‘சாலைக்கம்போளம்’ எனும் சாலைக் கடைவீதியை ஒரு வரலாற்றுப் பதிவாகப் புவியியல் வரைவின் சுவாரசியத்தோடு ஆ. மாதவன் கொண்டு வந்திருக்கின்றார். வியாபாரம் நடக்காத பொழுதுகளில், திறக்காத கடைகளின் வெளிப்புறத்தே ஒதுங்கியும் ஒளிந்தும் கிடக்கும் வாழ்க்கையை அந்தக் கடைவீதியின், மங்கல்களிலிருந்து கவனிக்கிறார்; கடைத் தெருக்கதைகள் என விவரிக்கிறார் (1975). இதனைத் தவிர ‘கிருஷ்ணப்பருந்து’ என்ற நாவல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார்.

இவர் காட்டுகின்ற கடைத்தெருவில் நாம் எதிர் கொள்ளும் மனிதர்கள் பெரும்பாலும் எல்லோருமே விளிம்புநிலை மாந்தர்களே. விளிம்புநிலை என்பது சமூக, சாதி அடுக்குகளின் விளிம்பு நிலையைச் சொல்ல வில்லை; பொருளாதார இடுக்குகளில் சிக்கிக் கீழே விழத் தயாராகிக்கொண்டிருப்பவர்களைத்தான் சொல்லு கிறோம். உதிரிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்தக் கதைகளில் நிரம்பிக் கிடக்கிறார்கள். சரக்குகளைத் தூக்கிப்போடும் (ஆனால் அந்த உழைப்போடு அவர்கள் இணைத்துக் காட்டப்படவில்லை) சுமட்டுக்காரர்களே அதிகம். இவர்களில் பெரும்பாலோர், குடும்பப் பின்னணிகள், பிணைப்புக்கள் - இல்லாதவர்களே. நிரந்தரமற்ற வாழ்க்கைப்பாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டவர்கள்; ஆனால் அது பற்றிய உணர்வோ சிந்தனையோ இல்லாதவர்கள். விழுமியங்கள் வாழ்க்கை மதிப்புக்கள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லாதவர்கள். வருங்காலம் பற்றிய கனவுகள் என்று எதுவும் இல்லாதவர்கள். நிகழ்காலத்தின் அயர்வுகளி லிருந்து எழுந்துபோகத் தெரியாதவர்கள். நியதிகளற்ற வாழ்க்கைநிலைகள், வெகுளித்தனங்கள், அலைக் கழிப்புகள், ஏமாறுதல்கள் என்று பழகிப்போனவை. இவர்களின் வாழ்க்கைத் தடங்களில் சோரம்போதல்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால், இந்தச் சோரம் போதல்களில் முன்கை எடுத்துக்கொள்பவர்கள் பெண்களே; ஆண்கள் அல்ல.

இந்த வகைப்பட்ட உலகம்தான் ஆ.மாதவன் காட்டும் கடைத்தெரு உலகம். இப்படியாகப்பட்ட உலகத்தை விமரிசனமோ, மாற்றுச் சிந்தனையோ இல்லாமல், இப்படி வாழ்வதற்குத்தான் இவர்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாகிய ஒரு கோணத்தில் நின்று அதனுடைய இயல்பு நவிற்சியாக எடுத்துரைப்புச் செய்வதிலே ஆசிரியர் கவனம் காட்டுகின்றார். இது ஒரு முனைப்பு. வாழ்க்கையின் இந்த ஒரு பக்கம், மிகவும் குரூரமானது - வக்கிரம் நிறைந்தது - அபத்தமானது - என்று சொல்லுகிறதன் வலிமை ஆ. மாதவனின் தனித் தன்மை.

இந்தக் கதைகளிலே பெரியது என்று சொன்னால், அது, “எட்டாவது நாள்”. ஓரளவு மற்றக் கதைகளின் சாரமாகவும் இது கருதப்படக்கூடியது. இது, செய்யது பட்டாணி என்பவனின் வரலாறு. இவனுடைய எழுபது வயதுக்காரத் தந்தைக்கு வேறொரு பெண்ணுடன் (இத்தனைக்கும், இவள் தாயில்லாத இந்தப்பட்டாணி யிடம் தாயின் பாசத்தைக் காட்டுகிறவள்) - தொடர்பு இருப்பதைக் கண்டு அந்தத் தந்தையையும் இரண்டு அக்காமார்களையும் அப்படியே விட்டு (ஏதோ மனித மதிப்பை முன்னிறுத்துவது போன்று) ஓடிவந்து விடுகிறான். அப்போது அவனுக்குப் பதினான்கு வயது. பின்னர், இந்தக் கடைத்தெருவிலே சுமட்டுக்காரனாக இருக்கிறான். திண்ணைகளிலும், திறந்துகிடக்கும் கருமடத்திலும் படுத்துறங்குகிறான். வலது கையிலே ஆனைக்கால் வியாதி. சாலைக்கம்போளத்தின் நடு வீதியிலே சிறு பையன்களின் தொந்தரவிலும் கல்லெறி யிலும் சேதப்பட்டுச் செத்துப்போகிறான். அவனுக்குச் சில அனுபவங்கள்; முக்கியமாகப் பெண்களுடன். அதுதான் இந்தக் கதை. பெண்களுடைய சோரம் போதல்களையும் தெருவில் திரியும் சிறுபையன்களின் காரணமும் மனிதாபிமானமும் அற்ற வக்கிரமான சேட்டைகளையும் காட்டுவதற்காக அமைந்த ஒரு கதை, இது.

செய்யதுபட்டாணிக்கு இருபத்தைந்தாவது வயதில் ஒரு அனுபவம். அந்த வீதியில் உள்ள ஒரு மேல் வீட்டிற்கு ஒரு இரவில், மழையில், சாமான்கள் கொண்டு போய் வைக்கப் போகிறான். கொல்லைப்புறம் வழியாக வந்த அவனை, மழை பெய்கிறதே என்று சொல்லி இருந்து விட்டுப்போகச் சொல்லுகிறாள் அந்த வீட்டின் தம்புராட்டி. சரி என்று இருக்கிறான். மழையோடு கூடிய அந்த இருட்டில், வலியப்போய் அவனைத் தொட்டிழுத்துக் கற்பழிக்கிறாள் அந்தத் தம்புராட்டி; பசியாறுகிறாள். முதலாவது அனுபவம், முதலாவது பெண். இரண்டாவதாக இன்னொரு பெண். இவள், நாகர்கோவிலிலிருந்து இரவு கடைசி பஸ்ஸில் திருவனந்தபுரம் வருகிறாளாம். இவன், ‘சொமடு உண்டோ’ என விசாரிக்கிறான். உடனே இவள், தாகத்திற்குத் தண்ணீர் தேடி அலைந்தவள் போல, அவனிடம் சொல்லுகிறாளாம். “சொமடு ஒண்ணும் இல்லே. நான் தன்னே ஒரு சொமடாணு. என்னெக் கொண்டு போவாமெங்கில் கொண்டு போய்க்கோ...” தன்னுடைய தாராள மனதைத் திறந்துவிடுகிறாள். பணத்திற்காகவா? இல்லை. வெறும் உடல் பசிக்காகவா? அதற்காக, நாகர்கோயிலில் ஆம்பளைகளே இல்லையாக்கும் என்று நினைக்கிற மாதிரியாகவோ அல்லது எப்படியிருந்தாலும் நம்முடைய ஆளுகள் மாதிரி வருமா என்று நினைக்கிற மாதிரியாகவோ பஸ்ஸ§க்குப் பணம் செலவழித்துத் திருவனந்தபுரம் வருகிறாள். முன்பின் தெரியாத பட்டாணியிடம் கேட்கிறாள். இவனும், தாராள மனதுடன், இவளுக்குச் சலுகை செய்கிற விதத்தில், இன்னும் ஒரு இரண்டு பேரைக் கூட்டிவருகிறான். கருமடத்தின் மூலையில் மூன்று பேராக அவள் உடலைக் கிளறியெடுக்கிறார்கள். இந்தப் பட்டாணிக்கு இரண்டாவதாகவும் வாய்ப்புக்கிட்டுகிறது. ஆகக்கூடி, நாலு தடவை. “சங்கதியெல்லாம் முடிஞ்சு... பெண்ணை எழுப்பினா... அவ்வளவுதான். ஆள் இல்லே. குளோஸ்”. ஒரு “குழுப் பாலியல்” நிகழ்ச்சி. அதில் ஏற்பட்ட ஒரு மனிதப்பலி. குரூரமான இந்தச் செயல் பற்றி எந்த மன அசைவும் எந்தக் கிலேசமும், எந்தச் சமூகஉணர்வும் இல்லாமல் ஆசிரியர் குளோஸ் பண்ணிவிடுகிறார். ஆசிரியரின் உளவியலும் நோக்கமும் என்ன? புரியலாம்; தெரியலாம்; போதும். பெண்ணுடலை வெறும் சடப் பொருளாக அல்லது சதைப்பொருளாக ஆக்கியது போதும்.

பெண்கள் சோரம்போகிற நிகழ்ச்சி. இந்தப் பட்டாணிக்கதையில் மட்டுமல்ல; உம்மிணி எனும் இன்னொரு கதையிலும் உண்டு. அவன் திண்ணையிலே படுத்துறங்குபவன். ஒருநாள், அவன் அங்கு இருக்க, அதனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், அதே திண்ணையின் இன்னொரு ஓரத்தில் ஒரு பெண், இன்னொரு ஆம்பளையைக் கூட்டி வந்து அவனோடு சேர்ந்துபடுத்துப் போகிறாள். பாவம் - இதற்குப் பிறகுதான் இந்த உம்மிணிக்குத் தான் ஒரு ஆண் என்ற ஆசை அவிழ்கிறது. போகட்டும். ‘பறிமுதல்’ என்ற ஒரு கதை. இதுவும், முன்பு சொன்னோமே, பட்டாணிக் கதை. அதுபோல ஒரு ‘குழு-பாலியல்’ கதைதான். இங்கும் ஒரு பெண்ணின் உடலுக்கு நாலுபேர் கூட்டுச் சேர்கிறார்களாம். அப்புக்குட்டன், அந்தச் சாலை வீதியில் தமிழ்ப்பள்ளிக்கூடத்துத் திண்ணையிலே படுத்திருக்கிறான். ‘அட்ரஸ் இல்லாத’ பொம்பளை ஒருத்தி அங்கே வருகிறாள். ஏற்கனவே நாலு கச்சடா ஆளுகளோடே அவளுக்குப் பேரம் முடிந்திருக்கிறது. ‘முன்பேறா’ (முன்தொகையாக) ஒரு இருபத்திரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் யார் அவளிடம் முதலில் போவது என்று அவர்களுக்குள் சிறு சச்சரவு அப்படியிருக்க வேலை முடிந்தவுடன் அந்தப் பணத்தை அந்த ஆளுகள் பறித்துக்கொண்டால் என்ன செய்வது? பாதுகாப்பு எனக் கருதி முன்பின் தெரியாத இந்த அப்புக்குட்டனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைக்கிறாளாம். அது சரி. அந்தக் ‘குழு-பாலியலினால்’ இவளுக்குக் கடைசியில் என்ன ஆயிற்று? தெரியாது.

தெரியாமல் கிடக்கிற கடைத்தெரு சாமானியர் களை, ஆசிரியர் இப்படி மட்டுமே காட்டுகிறார் என்று முடிவு பண்ணிவிட வேண்டாம். இது பெரும்பான்மை, அவ்வளவுதான். இவர்களிடையே நேயத்தோடும், அன்போடும் உள்ள சிலர் சேர்க்கப்படாமல் இல்லை. அத்தகைய ஒருவன், கோவிந்தன். அந்தத் தெருவில் சாக்கடையாக ஓடும் ஓடையை வாரிச் சுத்தம் செய்கிற ஓடைக்காரன் கட்டை கோவிந்தன் - அவன். மனைவி யோடும், மகனோடும் குடும்பமாக வாழும் அந்தத் தொழிலாளிதான் செய்யது பட்டாணியிடம் பாந்தமாக நடந்து கொள்கிறவன். இந்தக் கதையில் மட்டு மல்ல, உம்மிணி, பாச்சி முதலிய வேறுசில கதைகளிலும் வருகிறான். கதைகளுக்குள் ஒரு சங்கிலித்தெடர் இருக்கிறது என்ற தோற்றத்தை அவனுடைய படைப்பு காட்டுகிறது.

கடைத்தெருக் கதைகளை இவற்றின் முனைப்பும் ஒளிவீச்சும் கொண்டு பார்த்தால் மூன்று பாகுபாடுகளை இனம் காணலாம். முதலில் - ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய கதைகள். இவையே பெரும்பான்மை. அடுத்து - ‘பதினாலு முறி’, ‘ஈடு’, ‘காளை’, ‘விசுவரூபம்’, ‘தூக்கம் வரவில்லை’ ஆகியவை. இவற்றிலே ஏமாற்றப்படுதல், போலீசின் அடாவடித்தனம், முதிர்கன்னியின் ஏக்கம், கருணைக்கொலை முதலிய தருணங்கள், தார்மீக உணர்வுடன் சித்திரிக்கப்படுகின்றன. ‘பதினாலு முறி’யில் வருகின்ற பார்வதி, ஏற்கனவே நாம் காட்டிய பெண்களிலிருந்து வித்தியாசமானவள். மானம், மதிப்பு, சுத்தம் என்று வளர்ந்தவள்; அப்படியே இருந்தவள். குன்னையன் எனும் மறவன் இவளைப் பலவந்தப் படுத்திக் கற்பழித்துவிட, இவள் மானம் போயிற்றே என்று தூக்கில் தொங்கிவிடுகிறாள். போலீசின் அடாவடித்தனத்தில் கணவன் சலித்துப் போகிறான். ‘ஈடு’ கதையிலும் மனிதாபிமானமற்ற போலீசாரின் அடாவடித்தனம்தான். காளை என்னும் கதையில் பாப்பி எனும் முதிர்கன்னி உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் எழுந்து துரத்தப் பக்கத்துவீட்டுச் சின்னக் கொல்லனால் தீண்டப்பட்டு சாம்பிப் போகிறாள். இந்தப் பெண்ணுடைய மறைந்து கிடக்கும் உணர்வுக்கு இவளுடைய தங்கையின் வெளிப்படையான அலங் காரங்களும், சேட்டைகளும் முரண்பாடாக இயங்குவது, கதையின் எடுத்துரைப்புக்கு வலுச்சேர்க்கிறது. ‘தூக்கம் வரவில்லை’யில் எண்பது வயதுக்கு மேல் சாகவும் முடியாமல் மகனை வாழவும் விடாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த தாயை மகன் மாடசாமி யாருக்கும் தெரியாமல் மூட்டைப்பூச்சி மருந்து கொடுத்துக் கொன்றுவிடுகிறான். அந்தக் குற்றஉணர்வு, அவனைத் தூங்கவிடாமல் அரித்துக்கொண்டிருக்கிறது.

இப்படி, இங்கே, இரண்டாவது கோணமாக நாம் அறிகிற கதைகள், மனித சமூக உணர்வுகளையும், நிகழ்வு களையும் நடப்பியலோடு எடுத்துரைப்புச் செய்கின்றன. சொல்லுகின்ற முறைமையிலும் மொழியிலும் நடை யிலும், இந்த நடப்பியல், பளிச்சென்று நம்முன் நிற்கிறது. இனி, மூன்றாவதுதான் கோணம், அன்பு, நேசம் இவற்றின் மையத்தில் நின்று விலங்குகளை, மனிதவயப்படுத்தி வரைந்து காட்டுவதைக் குறிக்கிறது. பாச்சி, கோமதி என்ற கதைகள் இவ்வாறு அறியப் படுகின்றன.

கோமதி, ஒரு பசு. அந்தக் கறுப்பியை ஒரு மனித உயிராகவே மதித்துக் கதையைப் பின்னுகிறார் மாதவன். கோமதி சுதந்திரமானவள். அவளுடைய கம்பீரமான தோற்றமும், சுதந்திரமான நடையும் ஆட்டமும் மற்றவர்களுக்கு உபத்திரவம்; ஆனால், கண்டன் வாசுவுக்கும் ஜானிமணியனுக்கும் அவள் இஷ்டதோழி. சில சமயம் அதன் மடிமேல் தலைவைத்துப் படுத் திருப்பான் மணியன். கடைசியில் சில மக்களும் போலீசும் அதனைச் சிறைபிடிக்க முயலுகிறார்கள். முடியவில்லை. படுத்துவிட்ட அந்தப் பசுவை இழுத்துக் கொண்டு போகவந்தவன், கவனம் குறைந்து நிற்கும் போது பெருமூச்சுடன் மணியனைப் பார்த்துக் கொண்டே அது எழுந்து குளம்பு தெறிக்க ஓடுகிறது. கதை இத்தோடு முடியவில்லை. ஜானிமணியனும் பின்னாலேயே ஓடுகிறான். கதை, இப்படி முடிகிறது. “பிறகு, கோமதியையும், ஜானி மணியனையும் பழவங்காடி வட்டாரத்திலே யாரும் பார்க்கமுடியவில்லை”. ஏதோ காதலியும் காதலனும் தப்பித்து ஓடிவிட்டதைப் போன்ற ஒரு எடுத்துரைப்பு. மனிதனுக்கும், விலங்குக்கும் இடையில் சுத்தமான ஒரு நேசம் - ஒரு புரிதல் - மனித வயப்பட்ட உணர்வுகளோடு எடுத்துரைப்புச் செய்யப் படுகிறது.

அந்தக் கதை, இப்படித் தொடங்குகிறது: “கோமதி நல்ல கறுப்பி. ஆனால், மதமதத்த உடம்புக்காரி”. அது அப்படியென்றால், ‘பாச்சி’ என்ற கதை, இப்படித் தொடங்குகிறது. “பாச்சி, செத்துப்போனாள். வாழ்வு, அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப்போவாள் என்று கனவில் கூட நினைத்த தில்லை”. இப்படித் தொடங்குகிற கதை, இப்படி முடிகிறது; “பாச்சி செத்துப்போனாள். நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக்கொண்டிருந்தது”.

எங்கிருந்தோ வந்த பாச்சியிடம் இவனுக்கு அப்படி ஒரு ஒட்டுதல்; பாச்சிக்கும்தான். “இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் இருக்கிற அன்பும் சிநேகிதமும் விசுவாசமும் மனுஷப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது... சொந்தமா, பந்தமா, யார் இருக்கிறா? ஒருத்தருமில்லே... அப்படியே நாள்போறது. இந்த ஜென்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு... ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக்கிடக்குது. காலை நக்குது. முகத்த எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம்... பற்றுதல்... மறக்க முடியமாட்டென் என்குது”. அப்படிப்பட்ட ஒட்டுதல், இந்த நாயுடனான ஒட்டுதல். அப்படிப்பட்ட பாச்சியின் சாவு, நாணுவுக்குப் பெரும் இழப்பு; வெறுமை.

இந்த ஆற்றாமையை ஒரு கவிதை போல இந்தக் கதை விவரிக்கிறது. இது ஒரு இரங்கற்பா (elegy); கையறுநிலை. மில்டனுடைய லிசிடாஸ் (Lycidas) ஷெல்லியினுடைய அடோனைஸ்யிட் (Adonais), டென்னி சனுடைய ஒரு நினைவஞ்சலி (In Memorium) போன்ற இரங்கற்பா தான் இதுவும். சோகத்தையும், வெறு மையையும் அங்கலாய்ப்பையும் பகிர்ந்துகொள்ளுவதில் உணர்வுடைய மொழியும், நடையும் எடுத்துரைப்பின் நளினமும், கச்சிதமாகத் துணை நிற்கின்றன. நிகழிடம். பொருத்தமான தளமாகவும், ஒரு வரைபடத்தின் பிரதியாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. மிகையாக இல்லாமல், உண்மையாகச் சொல்லப்போனால் மாதவனின் கதைகளில் இதற்கு ஒரு மகுடம் சூட்டலாம். மு. வரதராசனின் “குறட்டை ஒலி” என்ற கதைக்கும் இத்தகைய சிறப்பு உண்டு.

இப்படி ஆ. மாதவன், அவர் வியாபாரம் பண்ணிய சாலைக் கம்போளத்தில் ஓரம்சாரம் ஒதுங்கிக் கிடந்த சாமானியர்களை ஒரு உயிர்த் துடிப்போடு கொண்டு வந்து நிறுத்துகிறார். அதன்போது நாம் பார்த்த சொற் சித்திரங்கள் இத்தன்மையன என்று சொல்லுவோம். இதுவும், இதனோடு, முதலில் அந்தச் சாலைத் தெருவின் அமைப்பும் ஒழுங்கும் கவனிக்கக்கூடியதாகவும் புவியியலின் மீதுள்ள அக்கறை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகியிருக்கிறதாகவும் உள்ளது என்பதையும் கவனிக் கிறோம். எல்லாக் கதைகளிலும் இது பதிவாகியுள்ளது. இரண்டாவதாக, மொழியும் துள்ளலோடு கூடிய சீரான நடையும் எடுத்துரைப்பின் பிரத்தியேகமான பாணியும் எழுச்சியோடு கூடியதாகவும் இயல்பாகவும் உள்ளன. மலையாளத் தமிழ், கொஞ்சு தமிழாக நிரவிப் பாய்கிறது. இந்த மொழி, மொழியியலில் ஆர்வமுள்ளோர்க்குப் பாடம் நடத்துகிறது.

அடுத்து, இந்தக் கதைகளில் மூன்று கோணங்கள், மூன்று பகுதிகளாகப் பதிவாகியுள்ளன. ஒன்று மவுனமும் உக்கிரமும் கூடியதாகவுள்ள ஒரு வக்கிரம், மனிதாபி மானமற்ற நடத்தை, சோரம் பெண்மையின் மீதான ஒரு உதாசீனம், சமூக விழுமியம் பற்றிய கண்மூடல் - இவை வலுவான கோடுகளாக வனையப்பட்டிருக்கின்றன. இரண்டு - இந்தப் பெரும்பகுதிப் போக்கிலிருந்து மாறுபாடாக, மனித வாழ்க்கையின் முரண்நிலையும் சோகமும் நடப்பியலின் நீர்மத்தோடு வெளிப்பட்டு நிற்கின்றன. இது நடப்பியல் என்றால், இன்னொரு கோணம் ஒன்று உண்டு. அன்பு, பாசம், நேசம் முதலிய சமூக விழுமியங்கள், விலங்குகளை மையமிட்டுத் தூலப்படுத்தப்படுகின்றன. இது, இப்படிக் கொஞ்சமாக என்றாலும் இந்த எழுத்துக்கள், பருமனாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. ஒரு மொத்தமாக ஆ. மாதவன் கொஞ்சமாக எழுதியிருந் தாலும் சமூக, பொருளாதார ரீதியிலான விளிம்பு நிலையில் ஒதுங்கிக் கிடக்கும் மனிதர்களை மட்டுமே கதை மாந்தர்களாக ஆச்சி, அவர்களையும் வக்கிரங்கள் கொண்டவர்களாகவும், மனித விழுமியங்களைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் அல்லது அறியாதவர்களாவும் தமக்கு விதிக்கப்பட்ட எல்லைகளில் அரவமில்லாமல் வாழ்ந்து தீர்ந்து போகிறவர்களாகவும் கலாம் செய்யாமல் காட்டுகிறவிதத்தில் ஆ. மாதவன், தனக்கென அப்படி யாகப்பட்ட ஒரு அடையாளத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்.

Pin It