ஸ்தல ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் ஜில்லா, தாலூக்கா போர்டுகள், முனிசிபாலிட்டி, யூனியன், கிராம பஞ்சாயத்து ஆகிய ஸ்தாபனங்களைப் பற்றி நம்முடைய அபிப்பிராயம் யாவரும் அறிந்ததேயாகும்.

இவைகளைப் பற்றி சுமார் 20, 25 வருஷகாலமாகவே நமக்கு நேரிட்ட அனுபோகம் உண்டு என்பதையும், அதன் பயனாகவே ஸ்தல ஸ்தாபனங்களில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுக்குள்ள அதிகாரங்களையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டு பொறுப்புள்ள சம்பள ஆட்களிடம் அவைகளை ஒப்புவிக்க வேண்டுமென்றும் பேசியும், எழுதியும் வந்ததோடு இப்போதும் அது போலவே பல காரியங்கள் நடந்தும் வந்திருக்கின்றன.

periyar 424தாலூகா போர்டுகள் ஏற்பட்டு விட்டன. முனிசிபாலிட்டிகளில் சேர்மென்களின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு அவர்களை நகரும் யந்திரங்களாக ஆக்கப்பட்டு விட்டனர். சட்டத்தில் சேர்மன் என்று இருந்த இடங்களிலெல்லாம் கமிஷனர் என்று போட்டாய் விட்டது. சில கமிஷனர்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களா யிருக்கலாம். சில சமயங்களில் தவறுதல்கள் செய்து விடலாமென்று வைத்துக் கொண்டாலும் 10 கமிஷனர்களின் யோக்கியப் பொறுப்பற்ற தன்மையையும், 10 கமிஷனர்களின் ஒழுங்குத் தவறுதலான காரியங்களும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சேர்மெனின் யோக்கியப் பொறுப்பற்ற தன்மைக்கும், ஒரு சேர்மெனின் ஒழுங்குத் தவறுதலான காரியங்களுக்கும், இணையாகாதென்பது இன்னமும், இன்றும் நமது அபிப்பிராயமாகும்.

ஒரு முனிசிபாலிட்டி சிப்பந்திகள் 32 கௌன்சிலர்களுக்கும், ஒரு சேர்மெனுக்கும் அடிமையாயிருந்து தவறுதல் செய்வதைவிட ஒரு ஸ்பெஷலாபீசருக்கு அடிமையாயிருந்து தவறுதல் செய்து விடுவதால், முனிசிபல் நிர்வாகம் அதிகமாய்க் கெட்டுவிடாது என்றுதான் சொல்லுவோம்.

அது போலவே ஒரு சேர்மெனும், 19 கவுன்சிலர்களும் சேர்ந்து கொள்ளையடிப்பதின் மூலம் ஒரு முனிசிபாலிட்டியின் சொத்து கொள்ளை போவதை விட, ஒரு ஸ்பெஷல் ஆபீசர் கொள்ளை அடிப்பதில் முனிசிபல் சொத்து அதிகம் கொள்ளை போய்விடாது என்றே சொல்லுவோம். கமிஷனர்கள் புதியவர்களானதாலும் சிலருக்கு அவர்களது தகுதிக்கு மேற்பட்ட அதிகாரம் வகித்துப் பழக்கமில்லாத தாலும் சில தவறுதல்கள் தற்காலம் ஏற்படக்கூடும் என்றாலும் பொது நோக்குடைய கவுன்சிலர்களும், சேர்மென்களும் அவர்களைத் திருத்தி ஒழுங்கான முறையில் நடத்தி ஸ்பெஷல் ஆபீசர்களின் தன்மையை வெற்றிபெற உதவி செய்வது கடமையாகும். "ஸ்பெஷல் ஆபீசர்களுடன் கலகங்கள் ஏற்படுமாகில் கவுன்சிலுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் பறிக்கப்பட்டு விடுமேயொழிய ஸ்பெஷல் ஆபீசர்கள் பதவி குறைந்தது இன்னம் 10, 15 வருஷ காலங்களுக்கு மாற்றப்பட முடியாது" என்று கூறுவோம்.

இது நிற்க, இன்றைய ஜில்லா போர்டுகளின் யோக்கியதைகளைப் பற்றி சிலது குறிப்பிட வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டதற்கு வருத்துகிறோம்.

முனிசிபாலிட்டிகளின் நிருவாகம், ஆயிரக்கணக்கில் ஒன்று, இரண்டு லக்ஷக்கணக்கில் ரூபாய்களை வரும்படியாகக் கொண்டது. ஜில்லா போர்டுகள் அப்படிக்கில்லாமல் 10 லக்ஷம் 20 லக்ஷம் கணக்கில் வரவு செலவுகளைக் கொண்டவைகளாகும்.

தாலூகா போர்டை எடுத்துவிட்டு முனிசிபாலிட்டிகளுக்குக் கமிஷனர்களை நியமித்த அரசாங்கம் புத்திச்சாலித்தனமுடையதாய் இருந்தால், முதல் முதல் ஜில்லா பேடுகளை எடுத்திருக்க வேண்டும். அல்லது அவைகளுக்கு கமிஷனர்களைப் போட்டிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஜில்லா போர்டுகளில் லக்ஷக்கணக்கான ரூபாய்கள் பாழாக இடம் தாராளமாய் விட்டு விட்டு, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குப் பாதுகாப்பு அளித்திருப்பது எருமை போவது தெரியாமல் விட்டு விட்டு எறும்பு போவதைக் கண்டுபிடித்த வீரனுக்கே ஒப்பாகும்.

ஜில்லா போர்டு தேர்தல் காலங்களில் நாம் முரசடிப்பது போல் கூப்பாடு போட்டோம். ஜில்லா போர்டு மெம்பர் ஸ்தானங்களுக்கு 5000, 10000 செலவு செய்கிறார்கள் என்றும், பிரசிடெண்டு ஸ்தானங்களுக்கு 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் ரூபாய்கள் கூட செலவு செய்கிறார்கள் என்றும் கூப்பாடு போட்டோம். இதை அறிந்த அரசாங்கத்தார் இப்படிச் செலவு செய்கின்றவர்களைப் பயித்தியக்காரர்கள் என்று நினைத்து "அவர்கள் செலவு செய்தால் நமக்கென்ன" என்று இருந்து விட்டார்கள். இருந்தும் வருகிறார்கள்.

இப்படி நினைத்தது சுத்த வடிகட்டின முட்டாள்தனம் என்பதை சர்க்காருக்கு சில ஜில்லா போர்டுகள் நன்றாய் அறிவுறுத்தி விட்டதென்றாலும், சர்க்கார் தெரியாதது போல் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றது.

இன்று சென்னை மாகாணத்தில் 100க்கு 75 ஜில்லா போர்டு கண்ட்றாக்டுகள் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளுக்கும், மெம்பர் களுக்கும், அவர்கள் சிப்பந்திகளுக்கும், சொந்தக்காரர்கள் பேராலும், சினேகிதர்கள் பேராலும் இருந்து வருவது உலகமறிந்த ரகசியமாகும். பல கண்ட்றாக்டுகள் லக்ஷம், ஐம்பதினாயிரம் ரூபாய்கள் எஸ்டிமேட்டுகள் உள்ளது. 100க்கு 10 விகிதமும் 15 விகிதமும் குறைவாய் டெண்டர்கள் கொடுத்திருந்தும், அவர்கள் பெரிதும் பரம்பரை அனுபோகம் பெற்ற கண்ட்றாக்டர்களாய் இருந்தும், பணப் பொறுப்புள்ளவர்களாய் இருந்தும், அப்படிப்பட்டவர்களுக்குக் கண்ட்றாக்டு கொடுக்கப்படாமல் புதுக் கண்ட்றாக்ட் தாரர்களுக்கு ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலைக்காரரின் சொந்தக்காரர்களுக்கு மெம்பர் வேலைக்காரர்களின் சொந்தக்காரர்களுக்கு பொருளாதார நிலைமையில் திருப்தி யில்லாதவர்களுக்கு எஸ்டிமேட் தொகைக்கு மேல் 100க்கு 10, 15 ரூபாய் வீதம் அதிகம் சேர்த்துக் கண்ட்றாக்ட் கொடுக்கப்படுகிறதென்றால் இதற்கு என்ன பேரிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

இந்தப் பணங்களை யார் அடைந்தார்கள்? இதை மெம்பர்கள், பிரசிடெண்டுகள் அடைந்தார்களா? என்பது விவகாரத்துக்கு இடமாயிருந்தாலும், ஒரு சமயம் ருஜு விட முடியாததாய் இருந்தாலும், இந்தப் பணங்கள் ஜில்லா போர்டுக்கு நஷ்டமாகிவிட்டதென்று சொல்வதில் ஏதாவது விவகாரமோ, ருஜுச் செய்ய வேண்டிய பொறுப்போ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.

மதுரை ஜில்லா போர்டைப் பற்றி மெம்பர்கள் பெரியதொரு மகஜர் அனுப்பினார்கள்; பல ஊழல்களை எடுத்துக் காட்டினார்கள். கடைசியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. கவர்ன்மெண்டும் இனிமேல் அப்படி வேறு பிரசிடெண்டுகள் நடக்கக் கூடாமல் இருக்கும்படி செய்யவு மில்லை. மற்றும் சில ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொடுத்தார்கள். அதற்கும் ஒன்றும் செய்யவில்லை.

திருச்சி முனிசிபாலிட்டியில் கவுன்சிலர்கள் கையாடினார்கள் என்றோ, சேர்மென் கையாடினாரென்றோ கண்டுபிடிக்கவும் இல்லை. முனிசிபல் பணம் இம்மாதிரி ஏதாவது சந்தேகத்துக்கு இடமாயாவது வீணாக்கப்பட்டதா என்றும் தீர்ப்புக் கூறவுமில்லை. ஏதோ சர்க்கார் மரியாதையைக் காப்பாற்ற வேண்டியென்று அடியோடு கலைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் பரிதாபங்கூடக் காட்ட வரவில்லை. இன்னும் கடினமுறை எடுத்துக் கொண்டாலும் சரி, எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்தான் என்று கூடச் சொல்லுவோம். ஆனால் அதை விட மோசமான ஸ்தல ஸ்தாபனங்களை ஏன் விட்டுக் கொண்டிருக்க வேண்டு மென்பதுதான் நமது கேள்வி.

ஆடிட்டர்கள் ரிபோர்டுகளின் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். மேல் கண்ட மாதிரி 10, 15 பெர்சண்டு கம்மியாய் கேட்ட கண்ட்றாக்டுகளை 10, 15 பெர்செண்டு அதிகம் கூட்டி அதாவது 100க்கு 30 ரூபாய் பிரத்தியார் கேட்டதற்கு மேல் அதிகம் கூட்டிக் கொடுக்கும் கண்ட்றாக்டுகளைப் பற்றி இஞ்சீனியர்கள் ஏன் கவர்ன்மெண்டுக்குத் தெரியப்படுத்தாமலும் உள் உளவாயும் இருந்தார்கள் என்பதைப் பற்றி இஞ்சீனியர்கள் மீது நடவடிக்கை நடத்தவும் தக்க பொருப்புகள் இருக்கும்படி செய்யவும் வேண்டும்.

ஸ்தல ஸ்தாபன சுயாட்சியென்று பேர் வைத்துச் சில அதிகாரங்கள் கொடுத்து அதை இந்தப்படி கேவலமாகவும், பண நஷ்டமாகவும் கையாடுதல் செய்யவும் முதலிய காரியங்களுக்கும் தலைமறைவாய் இடம்கொடுத்து அதற்காக ஊரில் உள்ள பணக்காரர்களையெல்லாம் வியாபாரம் போல் போட்டி போடவிட்டுக் கக்ஷி பிரதிகக்ஷிகள் ஏற்பட்டு இதன் பயனாய் சர்க்கார் முறையைத் திருத்த எவரையும் நெருங்க லாயக்கில்லாமல் ஆக்குவதில் குடிகளுக்கு என்ன லாபமென்று கேட்கின்றோம்.

பொப்பிலி ராஜா சர்க்கார் நாணையமானது, கண்டிப்பானது என்பதில் நமக்கு இதுவரை சந்தேகம் கூட ஏற்பட்டதில்லை.

ஆகையால் ஸ்தல ஸ்தாபன விஷயத்தில் இது சமயம் நமது நாட்டிலிருந்து வரும் ஊழல்களை யொழிக்க ஜர்மன் ஹிட்லரைப் போல் சிறிது ஹிட்லரிசத்தைப் பயன்படுத்தினாலல்லது முடியா தென்றே தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எது எப்படியிருந்தாலும் இந்த வருஷக் கடைசிக்குள்ளாகவாவது ஜில்லா போர்டுகளுக்கும் கமிஷனர்களை நியமித்து விடுவது அனேக ஜில்லா போர்டுகளுக்கு லக்ஷக் கணக்கில் ரூபாய்கள் லாபமென்று நினைக்கின்றோம். தாலூக்கா போர்டுகளை எடுத்து விட்டதின் பயனாய் ஏதாவது நன்மையேற்படக் கூடுமென்றிருந்து வந்த எண்ணம் கனவாகி தாலூக்கா போர்டு தவறுதல்களும் சேர்ந்து ஜில்லா போர்டுகளில் நடந்து வருவதாயிருக்கிறது. ஆதலால், இப்போது நமக்குத் தோன்றுவதென்ன வென்றால் இந்திய மக்கள் இன்னம் கொஞ்சம் காலத்துக்காவது "சுயாட்சி"க்கு லாயக்கில்லை யென்று முடிவு செய்துவிட்டு இப்போது இரண்டு தாலூக்காக்களை ஒரு ரிவினியூ டிவிஷனாக்கி அவற்றிற்கு ஒவ்வொரு ரிவின்யு டிவிஷனல் ஆபீசர் (டிப்டி கலைக்ட்டர்கள்) போட்டிருப்பதை மாற்றி ஒரு தாலூக்காவுக்கு ஒரு டிப்டி கலைக்டர் வீதம் போட்டு அவர்கள் வசமே இந்த முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து, தாலூக்கா ஜில்லா போர்டு இலாக்காக்களை விட்டு விடுவது மேலென்று தோன்றுகின்றது. இதனால் சர்க்காருக்கு லாபமிருக்காதென்றாலும் ஏழை மக்களுக்கும், வரிப் பணங்களுக்கும் இப்போது இருப்பதை விடப் பல மடங்கு நன்மையும், லாபமும் உண்டென்று சொல்லுவோம். குறைந்த அளவு ஒரு ஜில்லாவில் பரீக்ஷõர்த்தமாய் ஒரு மூன்று வருஷ காலத்துக்காவது செய்து பார்த்தால் போதுமென்று கூடத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

(பகுத்தறிவு தலையங்கம் 14.10.1934)

Pin It