வார்த்தாமாலை, ஸ்ரீவசன பூஷணம் நூல்கள் வைணவ உலகினில் கீர்த்தி பொலிந்த ஆவணங்கள். நாதமுனிகள் (9-ஆம் நூற்றாண்டு) தொடங்கி நம்பிள்ளை (1147-1217) வரையான நானூறு ஆண்டு காலப் பகுதியில் தமிழக வைணவப் பெரியோர் உரைத்த வார்த்தைகளைத் தத்துவ முறையியலில் தொகுத்துக் கூறுவது வார்த்தாமாலை. தொகுத்தவர் பின்பழகிய ஜீயர். பிள்ளை லோகாச்சாரியர் (1264-1369) வரைந்தது ஸ்ரீவசன பூஷணம். இதற்கு மணவாள மாமுனி (1390-1470) வியாக்கியானம் உரைத்தார். இந்த இரண்டு நூல்களும் தேகாத்ம வாதம் குறித்து அடிப்படை நிலையில் பேசுகின்றன. தேகாத்ம வாதமானது உலகாயதத்தினது சமூக வாழ்வுக் கண்ணோட்டம்.

தேகாத்ம வாதமானது சம்சாரிகளது வாழ்க்கைப் பண்பு என அந்த வைணவ நூல்கள் சுட்டுகின்றன. சம்சாரிகள் சுதந்தரம் உடையவர்கள் (வசன. 7). அநாதி காலமாகவே இப்படி. (வார்த்தை. 431). நெடுநாட்களாய் சுதந்தரனாய (வசனம்- 156) உள்ள சம்சாரியை கடவுளுக்கு அடிமையாக ஆக்க வேண்டும் என அந்த வைணவ ஆவணங்கள் (மற்றும் முறைப்படுத்தப்பட்ட ஆன்மீக நூல்கள்) மெய்யியல் நெறியினில் விழைகின்றன.

சம்சாரிகள் தேகம், பிள்ளை, வீடு, மனை, மாடு, வயல், பணம் (வார்த்தை--225, 263) ஆகியனவற்றைத் தம்முடையவை என்பர். சப்தம் (இசை) முதலான ஐம்புல விஷயங்களில் இனிமையை நுகர்வர். இவை அனைத்தையும் உண்மை என நிலைநாட்டுவர். இதனைத் தேகாத்ம வாதம் என்று அந்த வைணவ நூல்கள் சுட்டுகின்றன. (எல்லா இந்திய ஆன்மிக நூல்களும் இப்படியே). இப்படிச் சுட்டுவதுடன் நில்லாது, சம்சாரிகளைப் பொருள் பற்று, தேகப் பற்று கொண்ட அஞ்ஞானிகள் எனவும் விமர்சித்தன. இப்படி விமர்சித்ததன் மூலம் சம்சாரிகளால் கைக் கொண்டு நிலவிய சுதந்தரத்தையும் நிராகரித்தன. ஆனால், உலகாயதமானது வாழ்வியல் நிலையில் தேகாத்ம வாதம், சப்தம் ஆகிய விஷயங்களின் இனிமையில் ஆழ்வது ஆகியனவற்றோடு சுதந்தரம் என்பதனையும் போற்றியது (வார்த்தை. 315).

உலகாயதம் என்பதை லோகே-- ஆயதம் என ஜீயர் அரும்பத ஈட்டின் அவதாரிகை பகுக்கிறது. இதன் அர்த்தமானது, உலகில் பரவலாக நடப்பினில் உள்ளது என்பதாகும். அழகிய மணவாளப் பெருமாள் உலக மற்றும் நாட்டு இயல்பு எனச் சுட்டினார் (ஆச்சாரிய ஹிருதயம்--93, 94). வடக்குத் திருவீதிப் பிள்ளை இவர்களை நாத்திகர் எனக் குறிப்பிட்டார் (திருவாய்மொழி 1- 3-3). (ஆயுதம் = கருவி, ஆயுதபூஜை. ஆய்தம் = ஃ எழுத்து).

சம்சாரி என்பவர் தேகம் சம்பந்தப்பட்ட நிலம், மனை, மாடு, மனைவி, மக்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, கடவுளை விட்டு விலகுவதையே இயல்பெனக் கொண்டவர் என அழகிய மணவாளரும், அருளாளப் பெருமாள் எம் பெருமானும், வேதாந்த தேசிகரும் விவரிக்கின்றனர் (ஆசாரிய ஹிருதயம். 94, ஞானசாரம்- 19, 42. பகவத்கீதை. 1-18). இதன் பொருட்டு உலகப் பொருள்கள், உடல் ஆகியனவற்றை உண்மை எனப் போற்றுகின்றனர். இவை எதனுடைய சார்புக்கும், ஆணைக்கும் உட்படாது நிலவுவதாக சுதந்தரமாக நிலவுவது.

உலகாயதம் போற்றிய தேகாத்ம வாதமும் (பொருள், உடல் உண்மை) உலக, சமூக வாழ்வியல் இன்பங்களும், சுதந்தரமும் ஆகியன ஒன்றுடன் ஒன்று கைபிணைந்தவை. இதில் சுதந்தரம் என்பதானது சிறப்பாகச் சுட்டுவதற்கு உரியது. தமிழக வைணவ நூல்கள், உலகாயதமானது சம்சாரிகளிடம் சுதந்தரமாக நிலவியதாகச் சுட்டியது இந்திய அளவிலும் சிறப்பு உடையது.

Pin It