நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து கடந்த 01-04-2017 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில், “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” நூலின் முன்வெளியீட்டு விழா பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தஞ்சை இலக்கிய வட்ட எழுத்தாளர் செ.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர்கள் எஸ்.எஸ். இராஜ்குமார், களப்பிரன், வெ.ஜீவக்குமார், திருஞானம், இரா.காமராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

1925 முதல் 1973 வரை மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, தத்துவம் குறித்த பெரியார் எழுத்துகளின் தொகுப்புகளான “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” என்ற நூலின் ஐந்து தொகுதிகள் குறித்த பரப்புரையைத் தோழர்கள் பசு. கவுதமன் அவர்கள், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களும் மேற்கொண்டார்கள். நூல் பரப்புரையின் போது தோழர் பசு. கவுதமன், இந்நூல் தொகுப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி, நூல் முன்பதிவுக்கு ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தோழர் கொளத்தூர் மணி அவர்கள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பெரியார் எழுத்துகளைச் சிறப்பாகத் தொகுத்து வெளியிட முன்வந்திருப்பது மிகுந்த பாராட்டுதற்குரியது என்றும், இந்த நூலைத் தோழர்கள் அனைவரும் கட்டாயம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் பொதுவுடைமைச் சமூகம் அமைக்கப் பெரியார்தான் வழிகாட்டி என்றும் பேசினார்.

தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். அச்சிறப்புரையில், “இந்தியாவின் மிகச்சிறந்த இரண்டு தலைவர்கள், சுய சிந்தனையாளர்கள் தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் ஆவார்கள். அவர்களின் சிந்தனைகள் இன்றைய இந்துப் பாசிச சக்திகள் ஆதிக்கம் பெறத் துடிக்கும் இன்றைய சூழலில், மீண்டும் படிக்கத் தகுந்தவை. ஆதலால்தான் பெரியார் எழுத்துகளை இதுவரை யாரும் வெளியிடாத வகையில், தொகுத்து வகைப்படுத்தியுள்ள தோழர் பசு.கவுதமனின் நூலை வெயிடுகின்றோம். பசு.கவுதமனின் வேண்டுகோள்படி மேலும் முன்பதிவுக்கு ஏப்ரல் 15 வரை கால நீடிப்பு செய்யப்படும்” என்று பேசினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன தஞ்சை மண்டல மேலாளர் எஸ். குமார் நன்றி நவில, பரப்புரை விழா இனிதே நிறைவுற்றது.

Pin It