சங்க இலக்கியப் பிரதிகளை நுட்பமாக வாசிக்கும் போது பண்டைத் தமிழர், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்ததை அவதானிக்க இயலும். கடவுளையும் இயற்கையாகக் கருதிய தமிழர், இயற்கையைச் சூழல் என அறிந்திருந்தனர். இயற்கையில் இருந்து பிரித்து அறிந்திட இயலாதவாறு, சங்கப் பாடல்கள், இயற்கைப் பின்புலத்தில் தோய்ந்து எழுதப் பட்டுள்ளன. சூழலைப் போற்றுவதன்மூலம் தங்களுடைய இருப்பினை அறிந்திட முயன்றது, சங்ககாலத் தமிழரின் தனித்துவம். சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு விழுமியங்கள் இயற்கையை முன்வைத்துச் சங்கப் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. அவை பண்டைத் தமிழர் வாழ்க்கை பற்றிய பல்வேறு போக்குகளைப் பதிவாக்கியுள்ளன. இன்று தமிழகத்து நிலவெளியானது, கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாகியுள்ள சூழலில், நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம் சந்தைக்கானதாக மாறியுள்ளது.

வளமான குறிஞ்சி நிலம் அழிக்கப்பட்டு, வணிகப் பயிர்கள் விளைகிற எஸ்டேட்களாகி விட்டன. முல்லைக் காடுகள் என எதுவும் இல்லை. வண்டல் படிந்த மருத நிலமானது, வீட்டடி மனைகளாக உருமாறிக் கொண்டிருக்கிறது. நெய்தல் நிலமானது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், சங்ககாலச் சூழலியல் சார்ந்த விழுமியங்கள் பற்றியும், அவற்றின் எச்சங்கள் நவீன வாழ்வியலில் தொடர்வது பற்றியும் ஆராய்ந்திட வேண்டியுள்ளது.

சமூகமாகக் கூடி வாழ்கின்ற நிலையில், பன்னெடுங்காலமாக மக்கள்  தங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பின்பற்றிய ஒழுங்குகள் அல்லது நெறிகளை விழுமியம் என வரையறுக்கலாம். தனிமனித உறவு, குடும்பம், சமூகம், சூழல் எனப் பல்வேறு நிலைகளில் காலந்தோறும் தொடர்ந்து உருவாக்கப்படும் விழுமியங்கள், பூமியில் மனிதர்கள் இயங்கிட வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்துகின்றன. குறிப்பாகச் சூழல் குறித்த விழுமியங்கள், அடிப்படையில் மனிதர்கள் இயற் கையின் அங்கம் என்ற கருத்தியலை முன்வைக்கின்றன.

பண்டைத் தமிழரின் சூழல் பற்றிய விழுமியத்தை அறிந்திடச் சங்க இலக்கியப் படைப்புகளும், தொல் காப்பியமும் அடிப்படையானவை. சூழலின் பருப் பொருட்கள் அனைத்தும் ஐம்பெரும் பூதங்களால் உருவானவை என்ற கருத்தியல், சங்கத் தமிழரிடம் ஆழமாக ஊடுருவியிருந்தது. பூதவியல் என்ற சொல் உலகினை ஆராய்வதாகத் தமிழர் மரபில் இடம் பெற்றுள்ளது. சங்க இலக்கியத்திலும், தொல்காப்பி யத்திலும் உலகம் எவற்றால் உருவானது என்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

நீரு நிலனுந்தீயும் வளியு

மாக விசும்போடு ஐந்தும் உடனியற்ற

(மதுரைக்காஞ்சி:453-454)

மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புவதைவரு வளியும்

தீமுரணிய நீருமென்றாங்கு

ஐம்பெரும் பூதத்தியற்கை  (புறநானூறு:12)

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்

(தொல்.பொருள். மரபியல்:644)

உலகமானது நிலம், தீ, நீர்,  வளி, விசும்பு என்னும் ஐந்து  பூதங்களும் கலந்தது என்பது என்ற பார்வையின் மூலம், பண்டைத்தமிழரின் இயற்கை பற்றிய புரிதல் தொடங்கியுள்ளது. விசும்பு என்பது வெற்றிடம் என்று கருதப்பட்டது. மலையில் பொழிந்த மழைநீர், காட்டில் அருவியாகிச் சமவெளியில் ஆறாகப் பரந்து பாய்ந்து, கடலில் கலக்கிற இயற்கைச் செயல்பாடுதான், நிலப் பாகுபாட்டிற்கான ஆதாரம். மலை, காடு, வயல், கடலோரம் என்ற நான்கு வகையான நிலங்களே உலகம் எனக் கண்டறிந்த சங்கத் தமிழர் நானிலம் என வகைப் படுத்தினர். திணைக் கோட்பாடு உருவாவதற்கு நானிலம் தான் அடிப்படை. நான்கு நிலங்களுடன் தொடர் புடைய தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய வற்றுடன் இயைந்த சூழல் தொகுப்புகள்

(Eco system) இன்றளவும் முக்கியமானவை. காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது நிலங்களை உள்ளடக்கிய சூழல் தொகுப்புகள்தான். நான்கு திணை நிலங்களும், அந்நிலத்தில் சிறந்து விளங்கிய பூக்களின் பெயர்களால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அழைக்கப்பட்டன. சூழல் சிதை வடையும்போது உருவான நிலம் பாலை என்று குறிப்பிடப்பட்டது. நிலத்தின் அடிப்படையில் ஐந்து வகையான சூழல் தொகுதிகளை உருவாக்கியதுடன், குறிப்பிட்ட நிலத்திற்கென முதல் பொருள், கருப் பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை வரையறை செய்தது பண்பாட்டுச் சூழலியல் (Cultural Ecology) சார்ந்தது. உயிரின வளத்தின் (Biodiversity) சிறப்புகளாக அறிவியலாளர் குறிப்பிடுகிற அம்சங்கள், சங்ககாலத் தமிழகத்தில் நிலவியுள்ளதைத் தொல்காப்பியம் மூலம் அறிய முடிகிறது.

மலையும் மலை சார்ந்த நிலமானது குறிஞ்சிச் சூழல் தொகுப்பு எனவும், காடும் காடு சார்ந்த நிலப்பரப்பானது முல்லை சூழல் தொகுப்பு எனவும், வயலும் வயல் சார்ந்த நிலவெளியானது மருதம் சூழல் தொகுப்பு எனவும், கடலோரம் சார்ந்த பெருமணல் நிலப் பரப்பானது நெய்தல் சூழல் தொகுப்பு எனவும், முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து உருவான வன்மையான நிலப்பரப்பு பாலைச் சூழல் தொகுப்பு எனவும் குறிக்கப்பட்டது, பண்டைத்தமிழரின் சூழல் பற்றிய புரிதலின் வெளிப்பாடாகும். அன்றைய கால கட்டத்தில் தமிழக நிலப்பரப்பில் நான்கில் மூன்று பங்களவில் தாவரங்களும், விலங்குகளும் நிறைந் திருந்தன. குறிப்பாக இயற்கையான தாவரங்களின் வளரிடங்கள் வளமுடன் செழித்திருந்தன. சங்கத் தமிழர் அன்றாட வாழ்வியலில் பயன்பாட்டு நிலையிலும் குறியீட்டு நிலையிலும் தாவரங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தனர். தாவரங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அடையாகவும் உவமையாகவும் சங்கப் புலவர்கள், பாடல்களில் பதிவாக்கியுள்ளனர். சங்கப் பாடல்களில் இடம் பெறுள்ள தாவரங்களின் வருணனைகள், இன்றைய பயிர்நூல் வல்லுநர்களின் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. தமிழர்கள் தாவரங்களையும், அவற்றின் பூக்களையும் இன்றளவும் பயன்படுத்துகிற முறையானது, பெரிதும் உணர்ச்சிப்பெருக்கானது. தாவரங்களுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தினால்தான்,  சங்கத் தமிழர்கள், தங்களுடைய வாழ்வியலில் ஒவ்வொரு நிலையிலும் தாவரத்துடன் தங்களை இணைத்து நினைத்தனர்.

விதை - நல்ல பண்பு, முளை - தொடக்கம், தளிர் - மழலை, மலர் - பெண் குழந்தை, பிஞ்சு - குழந்தை, பூத்தல் - பெண் வயதுக்கு வருதல், கொடி - இளம் பெண், முள் - வேண்டாதது, கனி - பலன், அரும்புதல் - மனதில் உணர்வு தோன்றுதல், கிளை - சுற்றம், சினை - கருவுறுதல், பட்டுப்போதல் - அழிவு போன்ற சொற்கள் தமிழரின் வாழ்க்கையில் தாவரங்கள் பெற்றுள்ள முதன்மையிடத்திற்குச் சான்றுகள். குழந்தைப் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தமிழர்களின் வாழ்க் கையில் ஒவ்வொரு நிலைகளிலும் பூக்கள் பெற்றுள்ள இடம் வலுவானது. சோலை எனப்படும் காடு வழிபாடு, மர வழிபாடு, குன்று வழிபாடு, நீர்நிலை வழிபாடு, மழை வழிபாடு, பாம்பு வழிபாடு என இயற்கையை வழிபட்ட சங்கத் தமிழரின் பாரம்பரியம் இன்றளவும் தொடர்கிறது.

திணை மரபு அறிந்த சங்கப் புலவர்களின் இயற்கை பற்றிய சித்தரிப்புகள் உருவகம், உவமை, இறைச்சி எனக் கவித்துவச் செழுமையுடன் பாடல்களில் வெளிப்பட்டு உள்ளன. இளம் பெண்ணின் மனதில் அரும்பியுள்ள காதலின் ஆழத்தைக் குறிப்பிடச் ‘சிறுகோட்டுப் பெரும் பழம்” என்ற உவமை பயன்பட்டுள்ளது. சின்னப் பெண்ணின் காதல் உணர்வு, மரத்தின் சிறிய கிளையில் தொங்குகிற பெரிய பழம் போன்றது என்ற உவமையில் புலவரின் இயற்கை சார்ந்த மனம் தோய்ந்துள்ளது. சங்கத் திணைச் சூழல் சார்ந்த வாழ்க்கையுடன், தமிழர்கள் தங்களைப் பொருத்திக் காண்பது இயல்பாக நடந்தேறி யுள்ளது. தான் சிறுமியாக இருந்தபோது செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தனது உடன்பிறந்தவளாகக் கருதி, அம் மரத்தின் அருகில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கிறாள் இளம்பெண் (நற்றிணை:172). தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலனை நினைந்து வருந்துகிற இளம்பெண், Ôஇரவு நேரத்தில், தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம்கூடவா தூது சொல்லக் காதலன் மறந்துவிட்டான்’ என ஆதங்கப்படுகிறாள் (குறுந்தொகை:266). இயற்கையுடன் தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் பிரிவினால் வாடுகிற மனதைத் தேற்றுவது இவ்விரு பாடல்களிலும் பதிவாகி யுள்ளது. பொதுவாகச் சங்கப் பாடல்கள் மரம், செடி, கொடி, விலங்குகள் என இயற்கைப் பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ளன. காதல் விழைவு, துக்கம், பிரிவு, இழப்பு, கொண்டாட்டம் போன்ற அடிப்படையான உணர்வுகளைச் சித்திரித்திடப் புலவர்கள், பெரிதும் இயற்கை சார்ந்த சூழலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். இன்றைய தமிழகத்தில் சூழல் தொகுப்புகள் சிதிலமாகி யுள்ள நிலையில், கவிதையாக்கத்தில் இயற்கைக்கான முக்கியத்துவம் மிகக்குறைவு. இயற்கையை நேசித்தல், கொண்டாடுதல், புரிந்துகொள்ளுதல் போன்ற விழுமியங்கள் நவீன கவிதையில் பழமலய், வெய்யில், தமிழச்சி, ஃபஹீமா ஜஹான் போன்றோரிடம் தொடர்கின்றன.

சங்க காலத்தில் பல்வேறு இனக்குழுக்களின் தனித்துவமான சமூக அமைப்புகள் சிதைக்கப்பட்டு உருவான மருத நிலம் சார்ந்த வாழ்க்கைமுறையில், மனிதர்கள், இயற்கைமீது ஆளுகை செலுத்த முயன்றனர். இயற்கையின் அதியற்புத ஆற்றல்கள், மனிதர்களால் விளங்கிட இயலாத சவால்களாக விளங்கின. இயற்கையின் பேராற்றல் ஒருபுறம், பேரழிவுகள், மரணம் இன்னொரு புறம் எனத் திண்டாடிய சூழலில் ஏதாவது செய்து, அதியற்புத ஆற்றல்களை அமைதிப்படுத்த முயன்ற போது, கடவுள் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைக்கும் தங்களுக்குமான உறவினைப் புரிந்து கொள்ள விழைந்த தமிழர்கள், ஏதோவொரு மாய ஆற்றல் எல்லாவற்றையும் இயக்குவதாகக் கண்டறிந்தனர். சங்க காலத்தில் மனிதர்கள் பெரும் வெள்ளம், புயல், மழை, நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகள் ஒருபுறமும், கொடிய வேட்டை விலங்குகளிடமிருந்து உயிரைத் தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டம் இன்னொரு புறமும் தொடர்ந்தன. இயற்கையில் இருந்து தன்னை அந்நியப்படுத்தி அறிந்திடும் அறிவு வளர்ச்சியடைந்த போது, இயற்கையையே கடவுளாகக் கருதி வழிபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவேதான் ஐந்திணை நிலப்பரப்பில் மலை, கடல், காடு, நீர்நிலைகள் சார்ந்து வாழ்ந்து வந்த சங்க காலத்து மக்கள் மரங்கள், மலைமுகடுகள், சுனைகள், கடற்கரை, ஆள் புழக்கமற்ற காடுகள், இரவு நேரம் போன்றவற்றில் கட்புலன்களுக்குத் தென்படாத சக்திகள் உறைந்திருப்பதாக நம்பினர். அவற்றை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம் என நம்பினர்.

கடவுள் என்ற கருத்தியல், தொடக்கத்தில் உருவமற்ற பேராற்றலையே குறித்தது. சூர், அணங்கு, சூலி, முருகு போன்ற கடவுள்கள் இயற்கை சார்ந்த இடங்களில் தங்கியிருப்பதான நம்பிக்கை, சங்க காலத்தில் வலுவாக நிலவியது. அணங்கு, வரையர மகளிர், சூர் போன்ற பேராற்றல்கள், குறிப்பாகப் பெண்களைப் பிடித்துக்கொண்டு அவர்களுடைய உடலினை மெலிவித்துக் கேடு செய்கின்றனவாகக் கருதப்பட்டன. அச்சம், வருத்தம் என்று பொருள் தருகின்ற வகையில் அணங்கு, பேய், சூர் போன்ற பெயர்களால் கடவுள்கள் குறிக்கப்பட்டாலும், அவற்றின் பேராற்றல் காரணமாக வணங்கப்பட்டன. புராதன சமய நெறிப்படி அச்சம்தான் கடவுள் பற்றிய கருத்தியலுக்கு மூலமாக விளங்குவதைச் சங்கப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. மனிதனுக்கு நன்மை செய்யும் பேராற்றலைவிடக் கெடுதல் செய்யும் பேராற்றல் பற்றிய சிந்தனைதான் முதன்முதலாகச் சடங்குகள் செய்யத் தூண்டின. ஏதோவொரு மாய சக்தியினால் ஏதாவது கேடுகள் விளையும் என்ற நம்பிக்கைதான், சங்கத்தமிழரின் சமயம் உருவாவதற்கான அடிப்படை. தாக்கு அணங்கு என்னும் கடவுள் தம்மை எதிரில் வருகின்றவர்களைத் தாக்கும்; அதிலும் இளம் பெண்களைப் பற்றித் துன்புறுத்தும். அணங்கைப் போலவே அச்சம் தருகின்ற இன்னொரு கடவுளான சூர், பொதுவாக மலைப்பகுதியில் செல்கிறவர்களுக்கு வருத்தம் அளித்தது. சூர் என்பது சூர்மகள் எனப்பட்டது. சூரானது மலைச்சுனை, மலைத்தொடர், மலை ஆகிய மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் உறைந் திருந்தது. சூர் குடியிருக்கும் மலையில் முளைத்துள்ள தழையினைத் தீண்டினாலும், வாடச் செய்தாலும், அது வருத்தும். அதனால் வரையாடுகள்கூட சூர் உறைந்திடும் மலையிலுள்ள தழையினை உண்ணாமல் ஒதுங்கு கின்றன (நற்றிணை:359).

நீர்நிலைகளான ஆறு, சுனை, குளம், கடல், கழிமுகம், ஆற்றின் நடுவில் அமைந்திருக்கும் திட்டு போன்றவற்றில் கடவுள் உறைவதாகக் கருதி வழிப்பட்ட நிலை, சங்க காலத்தில் நிலவியது. துறை எவன் அணங்கும் (ஐங்குறுநூறு:53), அருந்திறற் கடவுள் அல்லன் பெருந் துறைக் கண்டு இவள் அணங்கியோளே (ஐங்குறுநூறு: 182) என்ற வரிகள், பெண்களைத் துன்புறுத்தும் நீர்க் கடவுள்களைச் சுட்டுகின்றன. சூர்ச்சுனை (அகம்:91) என்ற வரி சுனையில் இருக்கும் சூர் கடவுளைக் குறிக்கிறது. அணங்குடை முந்நீர் (அகம்:220), பெருந் துறைப்பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ (நற்றிணை: 155), கடல்கெழு செல்வி(அகம்:370) போன்ற வரிகள் கடல் சார்ந்த கடவுளைக் குறிக்கின்றன. பிரமாண்டமான கடல் ஏற்படுத்திய அச்சம் காரணமாக அது வழிபடும் கடவுளானது.

சங்கத் தமிழர்களின் கடவுள் பற்றிய நம்பிக்கை யானது, தொல் பழம் சமயக்கூறுகள் அடிப்படையி லானது. மனித இருப்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட தத்துவம், அதியற்புதப் புராணக்கதைகள், சொர்க்கம்/நரகம் பற்றிய புனைவுகள், உருவத்தை முன்னிறுத்திய தெய்வங்கள் போன்றனவற்றுக்குப் பழங்குடியினர் முக்கியத்துவம் தருவதில்லை. இத்தகைய போக்கானது சங்ககாலத் தமிழரின் கடவுள் பற்றிய கருத்தாக்கத்தில் முன்னிலை வகித்தது. இன்று வைதிக சமயம் முன்னிறுத்தும் நால் வருணப் பாகுபாடு உள்ளிட்ட பிறப்பு, பால் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கிற போக்கு தமிழர்களிடையே வலுவடைந்துள்ளது. தமிழர்கள் எல்லோரும் சாதி, மத அடிப்படையில் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வான மனதுடன் வாழ்கின்றனர். யாகத் தீ வளர்த்து, வேதம் ஓதுகிற பார்ப்பனியச் செயல் பாடு, விளிம்புநிலையினரின் வீடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டது. தீண்டாமையின் ஆதிக்கம் எல்லா மட்டங் களிலும் ஆழமாக ஊடுவியுள்ளது. பால் அடிப்படையில் பெண்களை இரண்டாம் நிலையினராகக் கருதுகிற கருத்து வலுவடைந்துள்ளது. சங்கத் திணைச் சூழல் உருவாக்கிய சமயம் பற்றிய விழுமியங்கள், தனிமனித உருவாக்கத்தில் சிதிலமாகியுள்ளன. குறிப்பாகச் சமயத்தின்  மூலம் இயற்கையுடன் எப்படி ஒத்திசைந்து வாழ்வது என்ற விழுமியம், இன்றைய வாழ்க்கையில் அறுபட்ட நிலையில் உள்ளது. சூழல் குறித்த அக்கறை இன்மையினால், தமிழர்களின் இன்றைய வாழ்க்கை, அரசியல் ரீதியாகப் புதிய பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.

சங்க காலத்தில் நிலத்தை முன்வைத்து உருவாக்கப் பட்ட சூழல் தொகுப்பில் வாழ்ந்த மக்கள், குறிப்பிட்ட மண்ணிற்குரிய தாவரங்களையும், விலங்குகளின் இறைச்சியையும் உண்டு வாழ்ந்தனர். கடலோரம் வாழ்கின்ற மக்களின் உணவில் மீன் இறைச்சியும், மலை சார்ந்த மக்களின் உணவில் வேட்டை விலங்கின் இறைச்சியும் தினமும் இடம்பெறுவது தவிர்க்க வியலாதது. பெரும்பாணாற்றுப்படை நிலவெளிக் காட்சிகளின் தொகுப்பினை நுணுக்கமாகப் பதிவாக்கி யுள்ளது. புரவலரான திரையனைக் காண்பதற்காகச் செல்கிற வழியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலவெளியின் இயல்பு, அங்கு வாழ்கிற மக்களின் உணவு, குடியிருப்பு, பழக்கவழக்கம், உயிரினங்கள், தாவரங்கள் பற்றிய விவரிப்புகள் சூழலியல் நோக்கில் முக்கியமானவை. ஒருவகையில் மக்களின் வாழ்க்கைமுறையை மண் தீர்மானித்தது. அந்தப் போக்கின் நீட்சியாக மலை சார்ந்த குறிஞ்சி நிலமெனில் காதல் எனப் புலவர்கள் வரையறுத்தனர். சூழல் சார்ந்து உருவாக்கப்படும் விழுமியங்கள் நிலந் தோறும் வேறுபடும் இயல்புடையன, ஆநிரை கவர்தல் என்பது பாலை நிலத்தில் வாழ்கின்ற மக்களின் தொழில் என்ற நிலை, சூழல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் இயற்கையுடன் அங்கமாகி வாழ்கிற போக்கு, சங்க இலக்கியத்தில் சூழல் பற்றிய விவரிப்பில் வெளிப் பட்டுள்ளது. இன்றைய தமிழகத்தில் சூழல் என்பது முழுக்க நசிந்து விட்டது. ஒவ்வொரு நிலத்திற்குரிய தாவரம் என்பது புறக்கணிக்கப்பட்டு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மேலைநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் விதைகள் நிலத்தில் விதைக்கப்படுகின்றன. வேதியியல் உரங்களும் பூச்சிக்கொல்லியான நஞ்சுகளும் தூவப்பட்டு வளர்கின்ற செடிகளில் விளைகிற தானியங்களையும் காய்கறிகளையும் உண்ணுகிற மக்கள் நீரிழிவு, ரத்தப் புற்றுநோய், அல்சர் போன்ற தீராத நோய்களால் அவதிப்படுகின்றனர். ஹார்மோன் மருந்தினால் ஊட்டம் பெற்ற பிராய்லர் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிற வர்கள் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்பிற்குள்ளாகின்றனர். இளைஞர்கள் அஜினோமோட்டா கலந்த சீன உணவுகள், பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை விருப்பத்துடன் உண்ணு கின்றனர். இந்நிலையில் குதிரைவாலி, வரகு, தினை போன்ற சிறுதானியங்களை உண்ண வேண்டும் என்ற  கருத்து, பரவலாகியுள்ளதற்குக் காரணம், பண்டைய உணவு விழுமியம் மீண்டும் செல்வாக்குப் பெற்றிருப்பது தான். இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும் என்ற குரல் இன்று தமிழகத்தில் ஒலிப்பது, சூழலியல் சார்ந்த விழுமியங்கள் புத்துயிர் பெற்றிருப்பதன் அடையாளம்.

ஆண்-பெண் உறவின் அடிப்படையாக விளங்குகிற காதலையும் சுழலுடன் பொருத்திக் காண்பது, சங்கப் பாடல்களில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.  சங்கக் காதல் பாடல்களில் பெண் மொழியில் அமைந்த அள்ளூர் நன்முல்லையாரின் பாடல் தனித்துவமானது; சிறிய காட்சி மூலம் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலை உயிரோட்டமாக வெளிப்படுகிறது.

குக்கூ என்றது கோழி; அதன் எதிரே

துட்கென் றன்று என்தூஊ நெஞ்சம்

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே

(குறுந்தொகை : 157)

கோழி கூவிய ஒலி கேட்டு, என் தோளுடன் பொருந்தியுள்ள காதலரைப் பிரிக்கவிருக்கும் வைகறைப் பொழுது வரப்போகிறதே எனப் பதற்றமடையும் பெண்ணின் மனத்துடிப்பு, நுட்பமான கவிதை வரிகளாகியுள்ளன. இங்கு பெண், உறவு கொண்டுள்ள காதலனுடனான தொடர்பு ஒருவேளை அவள் சார்ந்துள்ள சமூகமும் சுற்றமும் அறியாதது அல்லது அவளுடைய தோளுடன் பொருந்தியவன் நேசத்திற் குரிய கணவனாக இருக்கலாம். எவ்வாறாயினும் பொழுது விடியப் போவதானால், இருவரும் ஒன்றாக இருந்த சூழல் மாறிப் பிரிய வேண்டிய நிலையேற் படுகிறது. காதலனாக இருந்தால் மீண்டும் எப்பொழுது எங்கே கூடல் என்பது அறிய இயலாதது. கணவனாயின் அடுத்த நாள் இரவு வரும்வரை காத்திருக்க வேண்டும். ஆண் பெண் உறவினைக் காதல் இழையோட்டத்தில் ஏக்கமாகச் சொல்லியுள்ள வரிகள், காதலின் ஆழத்தைச் சித்தரிக்கின்றன. கோழி கூவுதல், வைகறை என அதிகாலைப் பொழுதினில் பின்புலத்தில் முல்லை நிலத்தின் ஒழுக்கமான பிரிவு விவரிக்கப்பட்டுள்ளது. சூழல் உருவாக்கும் பெண் மனப்பதிவுகள், திணைசார் வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ளன.

ஐவகை நிலப்பாகுபாட்டில் காதலை மையமிட்ட குறிஞ்சிப் பாடல்கள்தான் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானவை. அதனையடுத்துக் காடும் காடு சார்ந்த முல்லை நிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் தரைப்பகுதியில் காடு செழிப்புடன் விளங்கியது. காட்டில் வளர்ந்திருந்த தாவரங்கள் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஆதாரமானவை. இயற்கை வளமான சூழலில் ஆநிரை வளர்த்தல் மூலம் மனித வாழ்க்கை வளர்ச்சியடைந்தது. முல்லை நிலத்தின் உரிப் பொருளான Ôகாத்திருத்தல்Õ முழுக்கப் பெண்ணுக்கானது. போர் அல்லது பொருள் தேடிப் பிரிந்துபோன தலைவனை நினைத்துப் பெண் காத்திருத்தல், பெண்ணுக்கான அடையாளம் என்பது குடும்ப நிறுவனம் பற்றிய விழுமியமாகும். வினையின் காரணமாக ஆணின் உலகம் வெளியெங்கும் விரிந்து கொண்டிருக்கிறது. ஆண் எங்கு சென்றான்? எப் பொழுது வருவான்? என எதுவும் அறிந்திராத சூழலில் கார்காலத்தில் நிச்சயம் அவன் திரும்பி வருவான் எனப் பெண் காத்திருத்தல், ஒருவகையில் பெண்ணுக்கு மன அழுத்தமும் சோகமும் தரக்கூடியன.

ஒக்கூர் மாசாத்தியாரின் முல்லைப் பாடல், இயற்கைப் பின்புலத்தில் பெண் மனதின் நுட்பங்களைப் பதிவாக்கியுள்ளது.

இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்

இவணும் வாரார் எவணரோ என

பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்

தொகுமுகை இலங்கு எயிறுஆக

நகுமே தோழி நறுந்தண் காரே     (குறுந்தொகை.126)

இன்பமளிக்கும் கொண்டாட்டத்தினைக் கருதாமல் பொருள் தேடிப் பிரிந்து சென்றவர் எங்கு சென்றாரோ? இன்னும் அவர் இங்கு வரவில்லை. குளிர்ச்சியான கார்காலத்தில் மழை பொழிகிறது. முல்லைப் பூங் கொடியில் ஒளிர்கின்ற முல்லை அரும்புகள், அக் கொடியின் பற்களாக என்னைக் கண்டு நகைக்கின்றன. என்ன செய்வேன் தோழி எனத் தலைவி புலம்புகிறாள். முல்லைப் பூக்கள் பூக்கின்ற இயற்கையான நிகழ்வைக் கூடத் தன் நிலையைப் பார்த்து அவை சிரிப்பதாகக் கற்பிதம் செய்கிறாள். இயற்கையுடன் சார்ந்த பெண்ணின் மனநிலை கவிதை வரிகளாகியுள்ளன. ஒருக்கால் கார்காலம் வருவதற்கு முன் வந்துவிடுவேன் எனத் தலைவன் அவளுக்கு வாக்குக் கொடுத்திருக்கலாம். திணை சார்ந்த வாழ்க்கையில் பெண்ணின் உலகமானது, வீடு, குழந்தைகள் எனக் காத்திருத்தல் ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டது, குடும்பம் பற்றிய விழுமியத்தில் முதன்மையானது. இன்று வரையிலும் ஆணின் உலக மானது வீட்டிற்கு வெளியே விரிந்து கொண்டிருக் கையில் பெண் வீட்டில் காத்திருத்தல் தொடர்கிறது. சூழல் சார்ந்த ஒழுக்கமாகச் சங்கக் கவிதை சித்தரித்த குடும்ப உறவானது, இன்றும் தொடர்கிறது.

வளமான வாழ்க்கைக்குக் குறியீடான பறம்பு மலையானது மூவேந்தரால் கைப்பற்றப்பட்ட நிலையில், பாரி மன்னரின் இழப்பு ஏற்படுத்தும் வலியைக் கண்ணீருடன் பாடியுள்ள ஒளவையாரின் பாடல் வரிகளில் துயரம் கசிகிறது.

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர்: ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே      (புறநானூறு:187)

ஆடவர் நல்லவராக விளங்குமிடத்தில் நிலமும் நன்முறையில் விளங்கும் என்ற ஒளவையாரின் கருத்து, ஆண் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது. வன்முறையும் ஆதிக்கமும் மிக்க அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஆண்களில் உலகம் பற்றிய ஒளவையாரின் விழுமியம், இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளது. திணைசார் மரபிலான தமிழக நிலப்பரப்பையும் நீர் வளத்தையும் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கிற கார்ப்பரேட்டுகளின் பின்னால் இருக்கிற அரசியல் வாதிகள் தான் சூழலின் நசிவினுக்குக் காரணம் என ஒளவையின் வழியில் யோசிக்கலாமா?

இன்று இயற்கை, மனிதர்களுக்கு எதிராகச் செயல் படுகிறதா என்ற கேள்வி முக்கியமானது. மனிதன், தான் ஓர் இயற்கைஜீவி என்ற புரிதல் இல்லாமல் நடத்துகிற அத்துமீறல்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அளவற்றவை. கி.பி.16-ஆம் நூற்றாண்டு முதலாக ஐரோப்பியரின் காலனிய அதிகாரத்துவ ஆட்சியில், தமிழகத்தின் சூழல் நாசமாகத் தொடங்கியது. ஆண்டு முழுக்க மழை பொழிந்திடும் மழைக்காடுகள் எனப்படும் சோலைகள் நிரம்பிய மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், மொட்டையாக்கியது, இன்றளவும் தமிழகத்தின் சூழலியத்திற்குக் கேடு விளைவித்துள்ளது. நீருற்றுகள் வறண்டதால் வருஷம் முழுக்கத் தண்ணீர் பாய்ந்த ஓடைகள் காணாமல் போயின. வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வையை என்னும் குலக்கொடியானது, எழுபதுகளில்கூட மணல் பரப்புடன் மதுரைக்காரர்களின் பயன்பாட்டில் இருந்தது. இன்று வையை, இன்னொரு கூவம் ஆறு போல மாறி விட்டது. நொய்யல் ஆறு சாக்கடையாகி விட்டது. மக்களுக்கு உணவளித்த அருமையான நஞ்சை நிலத்தைக் கடந்த முப்பதாண்டுகளில் தமிழகமெங்கும்  பிளாட்டுகளாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பரந்த நிலப்பரப்பின் வழியே காலங்காலமாகப் பாய்ந்து கொண்டிருந்த வாய்க்கால்களை மறைத்துக் கட்டடங்கள் எழுப்பத் தொடங்கியது, இயற்கையைக் குறைத்து மதிப்பிட்ட செயலாகும்.  அண்மையில் சென்னை மாநகரம் எதிர்கொண்ட பேரவலத்திற்கான முதன்மைக் காரணம், இயற்கையின் பேராற்றலை மறந்ததுதான். கெடுப்பதும், கெட்டவர்க்குச் சார்பாகப் பொழியும் மழையின் இயல்பை திருவள்ளுவர் சொல்லியிருப்பது, இன்றைக்கும் பொருந்தும், நடுத்தர வர்க்கத்தினரின் கனவான சென்னையில் வீடு என்பது, ஓரிறவில் பெருக் கெடுத்த வெள்ளத்தினால் சிதைந்து போனது. வீடு முழுக்கச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் அழிந்தன.  குடிநீர், மின்சாரம், உணவு, அலைபேசி இல்லாமல் இருப்பதா இறப்பதா எனப் போராடிய சென்னை வாசிகளின் அனுபவங்கள் கொடுங்கனவாகப் பல்லாண்டு களுக்குத் துரத்திக் கொண்டிருக்கும். பெரும் மழை யினால் கடலூர் நகரம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்கள் எதிர்கொண்ட பேரழிவுகளினால் மக்களின் வாழ்வதாரம் சிதிலமானது. விவசாயம் முழுக்க அழிவுக் குள்ளானதால் விவசாயிகள் பட்ட துயரம் தீராதது.

சங்கச் சூழலியல் சார்ந்த இயற்கையான வாழ்க் கைக்கும் இன்றைய தமிழகத்தின் நிலவெளிக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது. இயற்கைக்கும் தமிழர்களுக்குமான உறவு பெரிதும் சிதிலமாகியுள்ளது. மழைக்காடுகள், சோலைகள் அழிக்கப்பட்டது, கானகத்தில் வாழும் உயிரினங்கள் வேட்டையின்மூலம் கொல்லப்பட்டது எனச் சூழலின் பல்லுயிர்ப் பெருக்கம் நாசமாகி விட்டது. தமிழகத்தில் இன்று செயல்படுத்தப் படுகிற கூடங்குளம் அணு உலைகள், மீத்தேன் திட்டம், நியூட்ரினோ, கார்பன் ஹைட்ரோ திட்டம்  போன்ற பிரமாண்டமான அறிவியல் திட்டங்கள், கார்ப்பரேட்டு களின் ஆதாயத்திற்காக அமல்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறம் சூழலியலின் சீர்கேட்டினால் நீருற்றுகள் அற்றுப்போய், ஆறுகள் வறண்டு போய் விட்டன. பூச்சிக்கொல்லி நஞ்சு, வேதியியல் உரங்கள் காரணமாக வளமான மருத நிலங்கள் மலடாகிவிட்டன. பாலிதீன் பைகள், சாயக் கழிவுகள், ஆலைகளின் புகைகள், தோல் தொழிற்சாலைச் சுத்திகரிப்புக் கழிவுகள், வேதியியல் தொழிற்சாலைகளின் மாசுகள் எனத் தமிழகத்து நிலமும் காற்றும் சீரழிந்து விட்டன. இன்னொருபுறம் பெரிய நகரங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பிதுங்கி வழியும் மக்கள் கூட்டம் என மனித வாழ்க்கையே இயற்கையிலிருந்து முழுக்க அந்நியமாகியுள்ளது. சூழலியல் சார்ந்து வாழ்ந்த  சங்கத் தமிழர்களின் ஐந்திணை நிலமானது, இன்று கனவாக மாறியுள்ளது. என்றாலும் சூழல் உருவாக்கிய சக உயிரினங்களை நேசித்தல், இயற்கையுடன் இயைந்து செயல்படல், குடும்ப உறவில் காதல் போன்ற விழுமி யங்கள், இன்றளவும் தமிழர் வாழ்வில் எச்சங்களாகத் தொடர்கின்றன. அவை குறித்த புரிதலை இளந்தலைமுறை யினருக்கு உருவாக்கிட வேண்டியது அவசியமாகும்.

'நீர் இன்றி அமையாது உலகம்’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்திட்ட பாரம் பரியத்தில் வந்த தமிழர்கள், இன்று கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. பண்டைத் தமிழர் சூழலைப் போற்றி வாழ்ந்திட்ட முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயலுவது அவசியமாகும்.  தொழில்நுட்பரீதியில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன என்றபோதிலும், இயற்கையின் சீற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்பது இன்று தமிழர்கள் எதிர் கொண்டிருக்கும் காத்திரமான சவால். சங்க காலத் தமிழர்கள் தகவல்தொடர்பு, போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும், தங்களைச் சுற்றிலும் காட்சி யளிக்கும் சூழலைப் புரிந்துகொள்ள முயன்றனர்; சூழலுடன் ஒத்திசைந்து வாழ்வது அடிப்படையானது என்ற நிலையில் வாழ்க்கை பற்றிய விழுமியங்களை உருவாக்கினர். அறிவியல்ரீதியில் வளமாக வாழ்வதாக நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர், சூழலில் இருந்து விலகுதல் துரிதமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இயற்கையோடு இயைந்து வளமான வாழ்க்கை வாழ்ந்திட சங்கத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்ள விழுமியங்கள் இருப்பதுதான் உண்மை.  

உதவிய நூல்கள்

1.            கிருஷ்ணமூர்த்தி,கு.வெ. தமிழரும் தாவரமும். திருச்சி: பாரதிதாசன் பல்கலைக் கழகம், 2011.

2.            முருகேசபாண்டியன்,ந. மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்.  சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2016.