சமகாலத் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத வரலாற்றாய்வாளர், 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் குடியாத்தத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். 9-ஆம் வகுப்புவரை CBSE பள்ளியில் படித்தவர், அம்மாவின் அழுகைக்கும் அடிபணியாமல் பிடிவாதமாகக் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்கு பாரதியையும் பாரதிதாசனையும் படித்துவிட்டு அரசுப் பள்ளியில் படிக்கும் ஆர்வம் ஏற்படும் என்று தெரியவில்லை, சலபதி துணிந்துள்ளார்.

salapathy 30017 வயதிலேயே வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். 1984-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வ.உ.சி. கடிதங்களைத் தேடிச் சேகரித்துத் தொகுப்பாக வெளியிட்ட சிறுவன் தன்னுடைய 57 வயதில், ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் 1908’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’, 'வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா', ‘திலக மகரிஷி: வ.உ.சி’, 'வ.உ.சியின் சிவஞானபோத உரை', 'வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்', 'வ.உ.சி: வாராது வந்த மாமணி' என வ.உ.சி பற்றி மட்டும் தமிழில் 7 புத்தகங்களை எழுதியும், தொகுத்தும் வெளியிட்டுள்ளார். வ.உ.சி பற்றி ஆவணச் சுரங்கங்களில் இருந்து 40 ஆண்டுகளாகத் தோண்டி எடுத்த தகவல்களுடன் ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வ வரலாறாக வெளிவந்திருக்கும் முதல் புத்தகம் என ‘Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime’ நூலைச் சொல்லலாம்.

திருநெல்வேலி எழுச்சி ஏற்பட காரணகர்த்தாவாகத் திகழ்ந்த வ.உ.சி பற்றிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற ஆய்வுநூல்தான் அவருக்குச் சாகித்திய அகாதமி விருதை பெற்றுத்தந்துள்ளது. “ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?” என்று வ.உ.சி பற்றி பாரதி எழுதிய வரிகளுக்குச் சலபதி உயிரூட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போக வேண்டும் என்பதே ஒரு சிறுவனாகச் சலபதியின் விருப்பமாக இருந்துள்ளது, படிக்கவும் எழுதவும் நிறைய நேரம் கிடைக்கும் என்பதால் அப்படியான முடிவை அவர் எடுத்துள்ளார். ஆனால் வாழ்க்கை அவருக்காக வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.

தமிழக ஆய்வுலகில் தனக்கான இடத்தை அவர் இடையறா ஆய்வின் மூலமும் உழைப்பின் மூலமும் உருவாக்கிக் கொண்டார். ‘பானை ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்து விட்டது’ என்ற பழமொழியை அவரைப் பற்றிய தன்மதிப்பீடாகச் சலபதி சொல்வார். பானையில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதான் இப்போது சொல்லத் தோன்றுகிறது.

1994-ஆம் ஆண்டு ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ நூலை எழுதி வெளியிட்டபோது அவருக்கு 27 வயது, அந்நூலை இன்றைக்கு படிப்பவர்கள் இத்தனை இளம்வயது ஆய்வாளரா இதை எழுதினார் என்று வியப்பார்கள். அந்நூல் ‘முகம்’ மாமணிக்கும் த.கோவேந்தனுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். சலபதியை உருவாக்கி நெறிப்படுத்தியதில் இவர்கள் முக்கியமானவர்கள், அவரைக் கண்டெடுத்தவர்கள் என்று சொன்னாலும் தகும்.

வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைத் தனது பதிப்பு நேர்த்தியால் மீட்டெடுத்த காரணத்தால் சலபதியை ‘குட்டி உ.வே.சா’ என்று சில பத்திரிகைகள் எழுதின. அதற்கான நியாயத்தைத் தனது ஆய்வுகள் மூலம் இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார், இன்றைக்கும் மெட்ராஸ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் உ.வே.சா புகைப்படத்தின் கீழே அமர்ந்துதான் தட்டச்சு செய்கிறார். சலபதியின் ஆய்வு வாழ்க்கையைப் போலவே அவர் அலுவலகத்தில் வலப்புறச் சுவர் முழுக்க வ.உ.சி. ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்.

தமிழில் எழுதியவை, பதிப்பித்தவை, மொழிபெயர்ப்பு, ஆங்கிலப் புத்தகங்கள் என மொத்தம் அவர் பெயரில் 47 படைப்புகள் அடங்கும். (அண்மையில் வெளியாகி இருக்கும் Swadeshi Steam V.O. Chidambaram Pillai and the Battle Against the British Maritime Empire வரை). கோட்டோவியமாக நின்று போன புதுமைப்பித்தன், பாரதி, வ.உ.சி, உள்ளிட்ட பல தமிழ்ச்சமூக ஆளுமைகளை முழுமைச் சித்திரங்களாக மாற்றி இருக்கிறார் சலபதி. எல்லிசு, ஜி.யு. போப், ராமானுஜாச்சாரியார், டி.வி சாம்பசிவம் பிள்ளை, ராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், சி.எஸ். சுப்பிரமணியம், தே.வீரராகவன் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகள் மீதும் அடர்த்தி நிறைந்த கட்டுரைகளின் மூலம் ஒளிபாய்ச்சி உள்ளார்.

ஆங்கிலத்திலும் தமிழ்ச் சமூகம் குறித்தும் ஆளுமைகள் குறித்தும் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தகவல் திரட்சியும் மொழி வளமும் அபாரமானவை. கடின உழைப்பும், தொடர்ச்சியான வாசிப்பும் தேடலும், எழுத்தின் மீதான தீராக் காதலும் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அவரால் மட்டும்தான் காப்பி, புகையிலை உள்ளிட்டவை குறித்து ஒருபுறமும் சுதேசிக் கப்பல், தமிழ்க் கலைக் களஞ்சியம் போன்றவை குறித்து மறுபுறமும் சம அளவில் கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல் - பண்பாடு - இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் பொதுச் சமூக வாசிப்புக்கென நேர்மையாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறைவுதான். தற்போது ஓரளவுக்கு தமிழ்நாட்டின் அரசியலை தேசிய ஊடகங்களும் அறிவுஜீவிகளும் பேசத் தொடங்கியுள்ளார்கள். தமிழ்நாடு என்றாலே ஏதோ குறுகிய எண்ணம் கொண்ட மொழிவெறியர்களும், சினிமா மோகம் கொண்டவர்களும் நிரம்பிய மாநிலம் என்ற பிம்பம்தான் இயல்பாகப் பதிவு செய்யப்படுகிறது. சலபதியின் ஆங்கிலக் கட்டுரைகள் இவற்றுக்கெல்லாம் நேரெதிரானவை. தமிழ்நாட்டின் பெருமிதங்களை அவர் ஆங்கில உலகத்திற்குச் சாய்வுகளற்ற பார்வையுடன் அறிமுகம் செய்திருக்கிறார்.

அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஜெ.ஜெயலலிதா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களாக இருக்கட்டும்; சி.எஸ்.சுப்பிரமணியம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவராக இருக்கட்டும்; புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பெருமாள் முருகன், சோ.தர்மன், ம.இலெ.தங்கப்பா போன்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் ஆகட்டும்… ஆங்கிலத்தில் அவர் தீட்டிய கட்டுரைகள் அனைத்தும் இவர்களின் ஆளுமையை அசலாகப் பிரதிபலிப்பவை.

தமிழ்நாட்டைப் பற்றிய ஆய்வுகளையெல்லாம் வெளிநாட்டார் அதிகம் செய்து வந்த காலம் மெல்ல உதிர்ந்து நம்முடைய வரலாற்றைத் தேடி துலங்கி நம்மால் எழுத முடியும் என்ற ஊக்கத்தைச் சலபதியின் ஆய்வுகள் நமக்கு வழங்குகின்றன.

சலபதியிடம் தென்படும் முக்கியமான பண்புகளாக சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். பாராட்டுக்குரியோரை பாராட்டத் தயங்க மாட்டார். வயதில் இளையவர்களையும் மரியாதையுடன் நடத்துவார். அவரது அணுகுமுறையில் ஆறுதலும் ஊக்கமும் இயல்பாக இடம் பெற்றிருக்கும். இளம் தலைமுறையினரைத் தன்மையோடு நடத்துவார், அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்து விசாரிப்பார், சில நேரம் ஆலோசனைகள் வழங்கி அறிவுரைப்பார்.

திராவிட இயக்கத்தவர் கூட தயங்காமல் கே.கே நகர் எனத் தயங்காது கூறும்போது, கலைஞர் கருணாநிதி நகர் என்று விரித்துக் கூறும் வரலாற்றுணர்வு அவரது மற்றுமொரு தனித்துவம். சாகித்திய அகாதமி விருது வென்றமைக்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்துப் பெற்று, பேட்டி அளித்தபோது, திருநெல்வேலி எழுச்சி நடந்ததன் அடையாளமாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பக் கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு முதலமைச்சர் உடனடியாக இசைந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த வரலாற்றோர்மை எத்தனை பேரிடம் காணவியலும்!

எந்த இடத்தில் அவர் உரை நிகழ்த்தினாலும் அதற்கான தயாரிப்பு கச்சிதமாக இருக்கும். தகவலோடு சேர்த்து நகைச்சுவையும், சிந்தையைத் தூண்டிவிடும் பல சிறு குறிப்புகளையும் ஆங்காங்கே உதிர்த்துவிட்டுச் செல்வார். நேரம் தவறாமையில் மிக கறாராக இருப்பார். 30 நிமிட உரை என்றால் தொடங்கும்போது கழட்டி வைக்கும் கைக்கடிகாரத்தை 29-ஆவது நிமிடத்தில் எடுத்து மாட்டி உரையை நிறைவு செய்து கொள்வார். உரையாடலில் கேட்கப்படும் கேள்விகளின்போது அதன் தன்மை குறித்து அவர் முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. மேம்போக்கான கேள்விகளுக்கும் அவரிடம் கருத்தாழம் மிகுந்த பதில் இருக்கவே செய்யும்.

ஒருமுறை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடந்த நிகழ்வொன்றில் தியோடர் பாஸ்கரனுடனான நெருக்கத்தைக் குறிப்பிடும்போது "நான் அடுத்த ஜென்மத்தில் உங்கள் வீட்டில் நாயாகப் பிறக்க வேண்டும்” என்றவர் அதைத் தெடர்ந்து "அப்படி நடந்தால் எனக்கு நீங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும்" என்றார். நிறைந்து இருந்த அரங்கம் சிரிப்பொலியால் மேலும் நிரம்பியது. தனிப்பட்ட உரையாடலில் அதிகம் வெளிப்படும் அவருடைய நகைச்சுவை உணர்வு பொதுமேடைகளில் அரிதாக வெளிப்பட்டாலும் வியப்பினை ஏற்படுத்தும்.

ஜே.என்.யு-வில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு சலபதிக்கும் அவருடைய ஆசிரியர் பணிக்கருக்கும் இடையே நடைபெற்ற ஓர் உரையாடலைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போற’’ என்று பணிக்கர் கேட்டுள்ளார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார் சலபதி. ‘‘விளங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்று பணிக்கர் சொன்னதும், சற்றும் தயங்காமல், ‘‘அப்ப, அங்கதான நான் போக வேண்டும்?’’ என்று கேட்டதுக்கு இன்று வரை நியாயம் செய்து கொண்டிருக்கிறார் சலபதி.

அ.கௌதம்ராஜ்