பிரதிபாரே ஒரிஸா கொண்டாடும் படைப்பாளி. 1943-ல் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹஅலாபோல்’ கிராமத்தில் 1943 வது வருடம் பிறந்தவர். தன்னுடைய 12 வது வயதில் இருந்து எழுதி வருபவர். 1968-ல் ஆசிரியையாக தன்னுடைய பயணத்தை துவக்கிய இவர் சுயமுயற்சியினால் மேலும் மேலும் படித்து 1982-வது ஆண்டு கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தான் படித்த கல்வியிலேயே பேராசிரியராகப் பணிபுரிந்தார். இரண்டு மகன்களும் இந்துஸ்தானி சங்கத்தில் புகழ்பெற்றவராகிக் கச்சேரிகள் செய்து வரும் அத்யாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

மனைவியின் படைப்புகளிலும், புகழிலும் பெருமிதம் கொள்ளும் இவருடைய கணவரான பொறியாளர் அக்ஷயா சந்திரா ரே இவருடைய பதிப்பாளரும் ஆவார். பிரதிபா 2000-ஆம் ஆண்டில் தம்முடைய சிறுகதைத் தொகுதிக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். பாரதிய ஞானபீட விருது அமைப்பாளர்கள் வழங்கும் மூர்த்திதேவி விருது 1991-ல் ‘யக்ஞசேனி’க்காக இவருக்கு வழங்கப்பட்டது. 90-ல் இவருக்கு வழங்கப்பட்டது. 90-ல் ‘சரளா விருது’ம் கதா பரிசும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருதும் என்று மதிப்புக்குரிய பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். (9 நாவல்களும் 300 சிறுகதைகளைக் கொண்ட 20 சிறுகதைத் தொகுதிகளும், எட்டு பயண நூல்களும், குழந்தைகளுக்காக 9 நூல்களும், முறை சாரா கல்வி பயில்பவர்களுக்காக 10 நூல்களையும் எழுதி இருக்கிறார்.

செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் சாகித்ய அகாதெமி நடத்திய, ‘இந்திய மொழிகளில் நவீன இலக்கியத்தின் தொடக்கம்' குறித்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கட்டுரை வாசிக்கச் சென்றிருந்த நான், ஏற்கனவே எனக்கு எங்களுடைய சீனப் பயணத்தின் போது நெருக்கமான சிநேகிதியாகிருந்த திருமதி. பிரதிபா ரேயை அவருடைய இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போதுதான் பயமுறுத்தி விட்டுப் போயிருந்த புயலின் எச்சங்கள்... ஆங்காங்கே மழைத்தண்ணீர் தேக்கங்கள்... என்றிருந்த புவனேஸ்வர் நகரத்திலிருந்து சற்றே தள்ளியிருந்த பங்களாக்கள் அடர்ந்த நகர விரிவாக்க பகுதியில் அமைந்திருக்கிறது பிரதிபாவின் வீடு. சிறிய மாளிகை. அரண்மனை வாசல் போன்ற கதவுகள். கதவைத்திறந்ததும் விரைந்து வந்து வரவேற்பு முகமன் சொல்கிறார்கள் பிரதிபாவின் கணவரும், மகளும்.

Pradeeba Ray

வீட்டுக்கு முன்னால் இரு புறங்களிலும் மரகதப்பச்சை விரிப்பாக புல்வெளி. ஆங்காங்கே செயற்கை குளங்களில் அபூர்வமான வண்ணங்களில் பூத்;துச்சிலிர்க்கும் தாமரைகளும், மொட்டாய் குவிந்த அல்லி மலர்களும். கணவரும், மனைவியுமாக ஒவ்வொரு பூந்தொட்டியையும் மொட்டையும், மலரையும் இது குஜராத் போனபோது கொண்டு வந்தது, இது கேரளாவில் இருந்து கொண்டு வந்தது, அந்த வகைச் செடி பஞ்சாபில்தான் அதிகம் என்று ததும்பினார்கள்;. தோட்டத்தின் மூலையில் ஓங்கி உயர்ந்திருந்த மரத்தின் கீழ் உட்கார்ந்து பேச வட்டத்திண்ணை, இன்னொரு மரத்தினடியில் ஊஞ்சல். ஆங்காங்கே ஆளுயர சிலைகள். குழலூதும் கண்ணன் ராதை. அடர்பச்சை துளசிப்புதரை தலைச்சுமையாகச் சுமந்து முழந்தாளிட்டபடி இருக்கும் நாலடி உயரப் பெண்சிலை.

அவற்றைக் கடந்து வரவேற்பறைக்குள்... அறையல்ல... பெரிய ஹால் - நுழைந்ததும் ஒரு குட்டி மியூசியத்துக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு. ஒரிசாவுக்கே உரியவைகளான மென்கல் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் பட்டச்சீரா ஓவியங்கள்...

மேல் மாடியில் பிரதிபா ரேவின் நூலகமும், படிப்பறையும். அமைதி கனிந்த சூழல்... ஈரக்காற்று... அவ்வப்போது ஜலதரங்கம் வாசிக்கும் மழைச்சத்தம்... அறுபதைக்கடந்தவர் என்று சொல்லமுடியாத இளமைத் தோற்றம் நெருப்புக்கங்குகளை வீசும் எழுத்தும், யாரையும் எதிர்க்கும் அபார மனவலிமையையும் மறைக்கும் இனிய சுபாவம், கலகல வென்ற பேச்சு, உபசரிப்பு, நகைச்சுவையுணர்வு, சிரிப்பு... கோபமே வராது போலிருக்கே என்று அடுத்தவரை எண்ண வைக்கும் நடவடிக்கைகள். பிரதிபா ரேவைக் கோபப்படுத்த விரும்பினால் இப்படிக் கேட்கவேண்டும், பெண் எழுத்தாளர்கள் என்பவர்கள்... அவ்வளவுதான். அதென்ன பேச்சு பெண் எழுத்தாளர் என்று ஆரம்பித்துவிடுவார் சீறலாக... இவற்றிக்கிடையே அவருடன் உரையாடியதில் சில பகுதிகள்...

வாசிப்பதில் நீங்கள் ஆர்வமுடையவர் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவள். வரலாறு, தத்துவம் மானுடவியல், மதநூல்கள், சமூகவியல், இலக்கியம், ஏன்? விஞ்ஞான நூல்களைக் கூட நான் படிப்பதுண்டு.

நீங்கள் படித்தவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று எவற்றைச் சொல்லுவீர்கள்?

எனக்கு மிகவும் பிடித்தமான மூன்று நூல்கள் முதலாவதாக, வியாசரின் மகாபாரதம். உலகத்துக் காவியங்களில் தலை சிறந்தது மகாபாரதம் தான் என்பது என் கருத்து. இதுவரை மகாபாரதத்தை விஞ்சக்கூடியதான நூலை யாரும் படைத்துவிடவில்லை. இரண்டாவதாக, டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, மூன்றாவதாக தாஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.

இப்படி நிறையப்படிப்பது ஒரு எழுத்தாளரின் சிந்தனையிலும் நடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யுமல்லவா?

மற்ற எழுத்தாளர்களின் தாக்கத்திற்கு கொஞ்சம் கூட ஆளாகாமல் ஒருவர் எழுதமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எழுத்து என்பது ஒரு வெற்றிடத்தில் நிகழ்வதோ தன்னிச்சையாக மட்டும் நிகழ்வதோ இல்லை. கடந்த காலம், கலாசாரம், மரபு, வரலாறு முன்னோர்களால் எழுதப்பட்ட இலக்கியம் ஆகியவற்றிலிருந்து ஒரு எழுத்தாளர் தான் எழுதுவதற்கான உத்வேகத்தை பெறுகிறார். எழுத்தாளன் ஸ்வீகரித்துக் கொள்ளும் கலாசார மரபு அவனுடைய படைப்பாளுமையை வடிவமைக்கிறது. என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய அறிவறிந்த நிலையில் மாபெரும் கதை சொல்லியாகிய வியாசதேவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளரும் என் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.

நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது?

பள்ளி நாட்களில் இருந்தே எழுதி வருகிறேன். என்பதாவது வயதில் நான் இயற்கையின் அழகை ரசித்து, சூர்யோதத்தின் அழகையும் எங்கள் கிராமத்து வீட்டில் தோட்டத்தில் படர்ந்திருந்த பனித்துளிகளையும் கண்டு எழுதிய கவிதை தான் என்னுடைய முதல் கவிதை. நான் 6 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ‘காலை வந்தது” என்ற என்னுடைய கவிதை ஒரிஸாவின் புகழ்பெற்ற செய்தித்தாளான ‘பிரஜாதந்த்ரா’வில் குழந்தைகள் பகுதியில் வெளிவந்தது. என்னுடைய அப்பாவும் ஒரு கவிஞர்தான் தவிர, அவர் ஒரு காந்தியவாதி. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். என்னுடைய கவிதையை பார்த்துவிட்டு பாரு, என் மகள் கவிஞராகி விட்டாள் என்னு பெருமையோடு சொல்லி, அதை எல்லோரிடமும் காட்டினார். அது தான் என்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு அடிக்கல்லாக அமைந்தது. பிறகு நான் தொடர்ந்து எனது பள்ளி பருவம் முழுவதும் அந்த பத்திரிக்கைக்கு எழுதிக் கொண்டே இருந்தேன். பிறகு, நான் கல்லூரி படிப்புக்காக ஒரிஸாவின் பெயர் பெற்ற ரவென்ஷா கல்லூரியில் சேர்வதற்காக கிராமத்தை விட்டு புறப்பட்டேன். அறிவியல் பட்டப்பிடிப்பில் சேர்ந்தேன். பிற்காலத்தில் அதே கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டுகள். பேராசிரியையாக பணிபுரிந்தேன். கல்லூரி வாழ்வின் முதலாவது ஆண்டில் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். இரண்டாவது பரிசு கிடைத்தது. என்னுடன் போட்டியிட்ட மற்றவர்கள் எல்லோரும் முதுகலை இலக்கிய மாணவர்கள். இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. நான் அந்த கவிதையை ஒரிஸ்ஸாவின் தலைசிறந்த இலக்கியப்பத்திரிக்கையான ஹஜங்காரு’க்கு அனுப்பி வைத்தேன். அந்த சமயத்தில் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் தான் அந்த பத்திரிகை வெளியிட்டுக்கொண்டிருந்தது. என்னுடைய படைப்பு உடனே ‘ஜங்காரி’ல் வெளியிடப்படும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு முதலாமாண்டுக் கல்லூரி மாணவியின் கவிதை ஜங்கார் போன்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிடப்படுவது ஒரு அபூர்வமான விஷயம் தான். ‘ஜங்காரி’ல் என்னுடைய கவிதையை பார்த்த அன்றைய தினம் ஒரு எழுத்தாளராக ஆவது என்று நான் தீர்மானித்தேன்.

நீங்கள் பணி ஓய்வு பெற்றபின்புதான் முழுநேர எழுத்தாளராக ஆகியிருக்கிறீர்கள். அதற்கு முன்பு வரை உங்கள் மாணவப் பருவம் தொடங்கி கல்லூரிப் பேராசிரியையாகவும் மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும் பணிபுரிந்த காலங்களில் இலக்கியம் படைப்பதென்பது உங்களுக்கு எத்தகைய அநுபவத்தைத்தந்தது.

பள்ளி நாட்களில் தொடங்கி நடனம், பாட்டு, ஓவியம் என்று எனக்கு பல பொழுதுபோக்குகள் உண்டு. ஆனால் எழுத்து அப்படியல்ல. எழுத்து எனக்கு எப்போதும் பொழுதுபோக்காக இருந்ததில்லை. நான் அரசுப்பணியில் இருந்த காலங்களிலும் அப்படித்தான். அது என் வாழ்வின் ஒரு பகுதி. உயிர் வாழ்வதற்கு அடிப்படையான சுவாசத்தைப் போல அது தீவிரமான தேவையாகவும் அதே சமயத்தில் இலகுவான ஒன்றாகவும் இருந்தது. எழுத்தாளராக ஆவதைத் தவிர வேறு எதையும் தேர்வு செய்யும் வாய்ப்பற்றவளாகவே நான் இருந்தேன்.

உங்களுடைய முதல் கதை எப்போது வெளியிடப்பட்டது?

1964-ல் நான் ராவென்ஷா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது.

உங்களுடைய படைப்புகள் வெளியிடப்படுவது சார்ந்த அனுபவங்கள் என்ன? உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்படாமல் மறுக்கப்பட்டதுண்டா? அது பற்றி...

பள்ளி நாட்களில் ‘பிரஜாதந்திரா’ பத்திரிகையின் குழந்தைகள் பக்கத்துக்குக் கவிதைகளை எழுதி அனுப்பி விட்டு பரபரப்போடு காத்திருப்பதில் ஒரு சுகம் இருந்தது. பிரசுரமாகாமல் என் படைப்புகள் திருப்பியனுப்பப்பட்டதும் உண்டு. நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். வாரம் தவறாமல் கவிதைகளை எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு நாள், என் கவிதை, குழந்தைகளுக்கான பக்கத்தில் வெளியிடப்பட்டது. அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் நான் என் கவிதைகளைப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் பல வெளியிடப்பட்டன. சில திரும்பி வந்தன. என்னுடைய ஆரம்பகாலக் கதைகளில் திரும்பி வந்தவை ஒன்றிரண்டு தான். நான் எழுதியவை எல்லாமே கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு விட்டன. எழுதுவது, பத்திரிகைகளுக்கு அனுப்புவது, அவை வெளியிடப்படுவது அல்லது நிராகரிக்கப்படுவது என்ற இந்த செயல்பாடுகளில் வியப்பு, சவால், தாக்குப்பிடித்தல், எழுத்தின் மேல் பிடிப்பு, ஆகிய அம்சங்கள் கலந்திருக்கின்றன. நிராகரிப்புகள் என்னை எப்போதும் ஏமாற்றங்களுக்கு ஆளாக்கியதில்லை. என் படைப்புகள் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

சரி... உங்கள் படைப்புகள் பத்தகங்களாக வெளியிடுவது சார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.

நூல் வெளியீட்டாளர்கள் யாரும் என் படைப்புகளை நிராகரித்ததில்லை. ஒரு முறை என்னிடம் என்னுடைய நாவலின் கையெழுத்துப்பிரதியைப் பதிப்பிப்பதாகச் சொல்லி எடுத்துச்சென்ற ஒரு பதிப்பாளர் அதை இரண்டு வருடங்கள் கிடப்பில் போட்டு விட்டார். பிறகு, நான் அவரிடம் போய் அதை வாங்கி வந்து நானே வெளியிட்டேன். இத்தகைய பதிப்பாளர்களை அணுகும் நிலை கூடாது என்று எண்ணிய என் கணவர், ‘அத்ய ப்ரகாஷன்” என்ற பெயரில் என் படைப்புகளை வெளியிடுவதற்காகவே ஒரு வெளியீட்டகத்தை நிறுவினார். கடவுளின் கருணையால் என்னுடைய நாவல் வாசகர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடைய சிறுகதைத் தொப்பும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாங்கள் உற்சாகமடைந்தோம். எல்லாப்படைப்புகளையும் வெளியிட்டோம். வெளீயிட்டாளர்கள் என்று போயிருந்தால் சில படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடும்.

ஒரு பதிப்பாளர் எப்படியிருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதிப்புப் பணி என்பது பிரதியை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் மட்டுமல்ல. ஒரு நல்ல பதிப்பாளர் நல்ல எழுத்தாளர்களை உருவாக்கலாம். அப்படியில்லாதவர்கள் ஒரு எழுத்தாளரை அழிக்கலாம். நல்ல பதிப்பாளர் நல்ல பொற்கொல்லனைப் போன்றவர். அவர் தங்கத்தை பரீட்சிப்பவர் மட்டுமல்ல. தங்கத்திலிருக்கும் மாசுகளை நீக்கி நல்ல நகைகளை வடிவமைப்பவரும் ஆவார்.

வெளியிடப்பட்ட படைப்புகள் உங்களுக்கு சில சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன அல்லவா? ஜமீன்தாரி முறைபற்றி உங்கள் கருத்து, பூரி ஜகந்நாதர் கோயில் அநுபவம், பூரி சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் வெளியிட்ட கருத்து... இப்படி... அவற்றை நீங்கள் எப்படி எதிர் கொண்டீர்கள்?

நீங்கள் குறிப்பிடுகிற அந்த அனுபவங்கள் பயங்கரமானவையாகத்தான் இருந்தன. 1988-ல் ‘உத்தர் மார்க்’ என்ற என்னுடைய நாவல் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து என்னுடைய பூர்வீகமான கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார் குடும்பத்தவர்கள் சிலர் பலமான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்கள். அந்தப் படைப்பு சுதந்திரப்போராட்டத்தையும் அந்தக்காலங்களில் ஜமீன்தார்கள் அந்தப் பகுதிகளில் கடைப்பிடித்த அடக்குமுறைகளையும் பற்றிப் பேசியது. என்னுடைய நூலை, எதிர்ப்பாளர்கள் பொது இடங்களிலும் சந்தைகளிலும் எரித்தார்கள். தங்களுடைய முன்னோர்களை நான் கேவலப்படுத்தி விட்டதாகவும் என்னை நீதிமன்றத்துக்கு இழுத்துத் தொல்லை தரப்போவதாகவும் மிரட்டினார்கள். கிராமத்து மக்களில் சிலர் என் சார்பாகவும் பேசினார்கள்.

பூரி ஜகந்நாதர் ஆலயப் புரோகிதர்கள் சிலருடன் ஏற்பட்ட சர்ச்சைக்குக் காரணம் 1987-ல் நடந்த ஒரு சம்பவம். வேறு மாநிலத்தைச் சார்ந்தவரான என் சிநேகிதி பூரி ஜகந்நாதரை வழிபட விரும்பினார். நானும் அவருடன் சென்றிருந்தேன். என்னுடைய அந்த சிநேகிதியின் சிவப்பான நிறத்தைப் பார்த்துவிட்டு அவர் வெளிநாட்டவர் என்றும் இந்துவாக இருக்கமாட்டார் என்றும் சில பண்டாக்கள் அவர்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். ஆலயத்துக்குள் அவர் பிரவேசிக்கக்கூடாது என்று தகராறு செய்தார்கள். வாக்குவாதம் பல மணி நேரங்கள் நீடித்தது. நான் விட்டுக்கொடுக்கவில்லை. பண்டாக்கள் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள். நான் மறுத்தேன். என் மகன் வந்து, ‘தகராறு வேண்டாம்மா. போயிடலாம்” என்றான். நான், ’இங்கு நான் உன் தாயாக இந்தப்பிரச்சனையை எதிர்கொள்ளவில்ல. சகமனுஷிக்காக குரல் கொடுக்கிறவளாக இருக்கிறேன்.” என்றேன். ‘என்னம்மா, எழுதுவது போலவே பேசுகிறாயே” என்று சலித்துக்கொண்டு அவன் வெளியேறினான். சற்று நேரத்தில் என் எழுத்துக்களைப் படித்திருந்தவரான மாவட்டக் காவல்துறை அதிகாரி கோயிலுக்குள் வந்து பண்டாக்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு நாங்கள் ஜகந்நாதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டோம்.

இந்தக் கசப்பான அநுபவத்தைக் குறித்து நான் ஹமதத்தின் நிறம் கருப்பு’ என்ற பொருள்பட ‘தர்மரா ரங்கா காலா” என்ற கட்டுரையை செய்தித்தாளில் எழுதினேன். அந்தக் கட்டுரையை எதிர்த்துப் பெருங்கூச்சல் எழுப்பப்பட்டது. மத அடிப்படைவாதிகளும் எதிரணியினருடன் சேர்ந்து கொண்டார்கள். பண்டாக்கள் என்னை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த வழக்கு நீதி மன்றங்களில் பல ஆண்டுகள் நடந்தது. நான் அலைக்கழிக்கப்பட்டேன். இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பூரி சங்கராச்சாரியார், நம்முடைய பாரம்பரியமும் வேதங்களும் பிற புனித நூல்களும் கணவன் இறந்த பின் மனைவி அவன் சிதையில் தானும் எரிந்து உயிர்விடும் ஹசதி’ வழக்கம் கைக்கொள்ளப்படுவதை ஆதரிப்பதால் அம்முறை பின்பற்றப்பட வேண்டும் என்றார். நான் அவருடைய கருத்தைக் கடுமையாக எதிர்த்தேன். ஹசதி பற்றிய விளக்கம்’ எனும் ஹசதிகிபரிபாஷா’ என்ற என்னுடைய கட்டுரையை ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. அவ்வளவுதான். தீ பற்றிக்கொண்டது! மத அடிப்படைவாதிகளின் கடுமையான கண்டனங்கள் ஒருபுறம். ஒருபுறம் படிப்பதற்கே அருவருப்பான கடிதங்கள். நான் கட்டுரையில் சரியான கருத்தைத் தெரிவித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் அமைதியாக இருந்தேன். எனக்கு எதிரான கண்டனங்கள், கடிதங்கள், வசைமாரி ஆகியவற்றுக்கு எவ்விதமான எதிர்வினையும் புரியவில்லை. காலம் அவர்களுக்குத் தக்க பதிலைச் சொல்லும் என்ற நம்பிக்கையுடனே மௌனமாக இருந்தேன்.

உங்களுடைய நூல்களுக்கு வரும் விமர்சனங்கள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன?

என்னுடைய நூல் மட்டுமல்ல பொதுவாக நூல் விமர்சனம் என்ற பெயரில் வெளிவருபவை பலவும் விமர்சனங்களாகவே இருப்பதில்லை என்பதுதான் என் கருத்து. அதிகபட்சமாக நீங்கள் அவற்றை ஒரு அறிமுக உரை என்றோ சமயத்தில் விளம்பரங்கள் என்றோ சொல்லலாம் என்றே நினைக்கிறேன். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் இப்படிப்பட்ட ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் என்ற தகவலை வாசகனுக்குத் தருபவையாகத்தான் இருக்கின்றன. அவை தகுதியுள்ள விமர்சகர்களால் எழுதப்படும் அசலான விமர்சனங்களே அல்ல. விமர்சனம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். விமர்சனம் படைப்பைக் குறித்ததாக இருக்க வேண்டும். எழுத்தாளரைக் குறித்ததாக இருக்கக் கூடாது. ஆக்கபூர்வமான, நியாயமான விமர்சனம் எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் நன்மை செய்யும். நல்ல விமர்சகர்களின் கருத்தை நான் கூர்ந்து கவனிப்பேன்.

என்னைப் பொறுத்த அளவில் சுயவிமர்சனம்தான் வலிமையான விமர்சனம். எல்லா எழுத்தாளர்களுக்குள்ளேயும் படைப்பாக்கம் எனும் நிகழ்வின் முன்னும் பின்னும் ஊடாகவும் விழிப்புணர்வு மிகுந்த விமர்சக மனம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. தன் - மதீப்பிட்டை நேர்மையாகச் செய்துகொள்ளாத எந்த எழுத்தாளனும் முதிர்ந்த, தேர்ந்த படைப்பாளியாக ஆவது என்பது ஒருபோதும் இயலாது.

படைப்பு மனத்தின் தனிமை, சமூகத்துடன் இணைந்து இயங்க வேண்டிய தளம் இதன் தேவையும் முரணும் உங்களால் எவ்வாறாக உணரப்படுகிறது? எவ்வாறு கையாளப்படுகிறது?

அடிப்படையில் எழுத்தாளன் என்பவன் தனிமையானவன் என்றே நான் கருதுகிறேன். குழந்தையை ஈன்றெடுப்பதில் ஒரு பெண் தன் சொந்த வலிமையையும் ஆற்றலையும் கொண்டு தன்னுடைய சொந்த சதையோடும் உடலோடுமே போராடுவது போன்ற, வலி நிறைந்த பயணத்தைத்தான் எழுத்தாளன் படைப்பின் ஆக்கத்தில் மேற்கொள்கிறான். பிள்ளைப்பேற்றின் அந்த வலி முழுக்க முழுக்க பெண்ணின் வலியாகவே இருக்கிறது. அதை அவள் யாருடனும் பகிர்ந்து கொள்வதென்பது இயலாது. அதே போலப் படைப்பாளியும் தன் இதயத்து வலியை மனதின் அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளவோ வார்த்தைகளால் விளக்கவோ முடியாது. அதை, அந்தக் குறிப்பிட்ட படைப்பின் அவஸ்தையை ஒரு சக எழுத்தாளனால் கூடப் புரிந்து கொள்ள முடியாது.

படைப்பெனும் நிகழ்வும் என் தனிமையைக் கோருவதாக இருக்கிறது. ஆனால் நான் சமூகத்துடனும், சூழலுடனும் இயற்கையுடனும் இணக்கம் கொண்டவள். இருந்தும் ஒரு விநோதமான வகையில் நான் கூட்டத்தில் தனித்திருப்பவளாகவும் தனிமையைத் தீவிரமாக உணர்பவளாகவும் இருக்கிறேன்.

எழுத்தில் இருக்கும் அரசியல், அதை நீங்கள் கையாளும் விதம் இவை பற்றிக் கூறுங்களேன்?

ஒவ்வொரு எழுத்தாளனும் தான் வாழும் காலம், அந்தக் காலகட்டத்தின் மதம், பாரம்பரியம், கலாச்சாரம் அரசியல், மற்றும் கருத்தியல்கள் சார்ந்து சமூகத்தைப் பாதிக்கிற பல நிகழ்வுகள் ஆகியவற்றை விமர்சிக்கவும், கேள்வி கேட்டாக வேண்டியதுமான கட்டாயத்தில் இருக்கிறான். குறிப்பாக, மத அடிப்படைவாதம் பயங்கரமாக வெடித்துக்கிளம்புவதையும், நிறம், ஜாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் வேறுபாட்டுக்கு ஆட்படுத்தப்படுவதையும் வன்முறையை நியாயப்படுத்தும் அரசியல்சூழலும், நேர்மையற்ற போக்குகள் தோற்றுவிக்கும் நீதியின் சரிவும், இறுதியாக மனிதனை துயரவெள்ளத்தில் ஆழ்த்துவதையும் கண்கூடாகக் காணும் இந்திய எழுத்தாளனுக்கு இந்தக் கடமை கூடுதலாகவே அதிகமாக இருக்கிறது. நிகழ்காலத்தின் அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே எல்லா எழுத்தாளர்களின் கனவுமாக இருக்கிறது. அரசியலில் இருந்து விலகியிருப்பது என்பதே கூட ஒரு அரசியல்தான். சமூக விழப்புணர்வுடன் இயங்கும் எந்தக் குடிமகனால் அரசியலை அலட்சியம் செய்துவிட முடியும்? ஜார்ஜ் ஆர்வெல் சொன்னது போல ஹஅரசியலற்ற செயல்பாடு என்று எதுவுமே இல்லை’.

ஆனால், எழுத்தாளர் என்ற முறையில் நான் ஒரு அரசியல் சார்ந்த நபரும் இல்லை, அரசியலற்றவளும் இல்லை. குழப்பத்தையும் வன்முறையையும் தோற்றுவிக்கும் அரசியலுக்கு எதிராக இந்நாட்டின் குடிமகள் என்ற முறையில் என் கடமைகளும் பொறுப்புகளும் எத்தகையவை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். அரசியல் சூதாட்டத்துக்கு என்னை ஆட்படச் சொல்வதென்பது மனிதாய அரசியல்தளத்தில் இயங்கச் செய்வதாக இருக்கும். ஜனநாயகம் என்பது தேர்தல்கள் தோறும் வாக்குச் சாவடிக்குப் போகும் ஓட்டுப் போடுகிற சடங்குடன் முடிந்து போகிற விஷயமில்லை என்று நான் நினைக்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு ஓருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய அந்தச் செயல்பாடு மட்டும்தான் ஜனநாயகக் கடமை என்று கருதுவது ஜனநாயகம் என்பதன் விரிந்த பொருளை மிகவும் சுருக்குவதாகும். நமக்கு பொருளாதாரத்திலும், கல்வி முறையிலும் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் ஜனநாயகம் தேவைப்படுகிறது.

எழுத்தும் படைப்பும் உங்களுக்குள் உருவாகும் நிகழ்வு பற்றிச் சொல்லுங்கள்?

எழுத்தாளன் வாழும் சமூகச் சூழல்தான் அவனுக்குள் படைப்பைச் செய்வதற்கான உந்து சக்தியை அளிக்கிறது. அந்தச் சூழலுக்கும் எழுத்தாளனுக்குமான உறவு விதைக்கும் மண்ணுக்குமான அதே உறவுதான். ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய படைப்பு மனத்தின் கனவு எழுத்தாக முளைவிட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறான். எந்த எழுத்தாளனும் மேசையின்முன் உட்கார்ந்து உடனே ஒரு வெள்ளைத்தாளை உருவி எழுதத் தொடங்கி மாபெரும் கலைப்படைப்பைக் கொடுத்து விடுவதென்பது முடியாது. ஒரு கதையோ அல்லது நாவலோ உருக்கொள்வதற்கு முன்பு வருடக் கணக்கான உழைப்பைக்கூட அது உள்வாங்கி சீரணித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்று என்னுடைய கலாச்சார சூழலில் நான் அடையாளம் காணப்பட்டிருக்கிற விதம் தற்செயலான நிகழ்வு அல்ல. ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் நான் வாழும் உலகத்துடனும் கலாச்சாரத்துடனும் நான் பல்வேறு விதங்களில் பிணைக்கப்பட்டு இருக்கிறேன். வெளி உலகத்திற்கும், உள் மனதிற்குமான பிணைப்பும் சமூகத்திற்கும், படைப்பாற்றலுக்கும் ஆன பிணைப்பும் நேர் விகிதத்தில் உறவு கொண்டவையாக இருக்கின்றன. தனது சொந்தக் கலாச்சாரத்தில் கூட்டுப்புழுவாக இருந்தபோதும் எழுத்தாளன் என்பவன் பிரபஞ்ச பிரக்ஞை உடையவனாகவும் பிரபஞ்சரீதியாக இயங்கும் சமூகமனிதனாகவும் இருக்கிறான். தான் என்பது இல்லாமல் சமூகம் இல்லை. இலக்கியம் எந்த மண்ணிலும் இருந்து தழைக்கலாம். ஆனால், அதன் தாக்கம் பிரபஞ்ச ரீதியானது. ஒரு எழுத்தாளர் என்னும் முறையில் நான் இந்த சமூகத்திற்கு பெரிதும் கடன்பட்ட சமூகப் பிரஜை இருக்கிறேன்.

உங்களுடைய எழுத்து சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லுங்களேன்?

பொதுவாக நான் என்னுடைய வீட்டில் உள்ள நூலகத்தில் அமர்ந்து வேலை செய்யவே விரும்புகிறேன். ஆனால், என்ற போண்டா இனப் பழங்குடிகளைக் கதைமாந்தர்களாகக் கொண்ட ஹஆதிபூமி’ நாவலை எழுதியபோது மட்டும் நான் அவர்களுக்கிடையிலேயே வாழ விரும்பினேன்.

நான் இரவில் நீண்ட நேரம் வரை எழுதிக்கொண்டிருப்பேன். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் மனம் குவித்து எழுதுவது என்பது எனக்குச் சாத்தியமாகிறது. அதற்குப்பிறகு தான் நான்கு ஐந்து மணி நேரங்கள்தான் நான் எழுதுவேன் அல்லது படிப்பேன். விடுமுறை தினங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னால் படிப்புக்கும், படைப்புக்கும் அதிக நேரத்தை ஒதுக்க முடியும். மேசையின் முன் போய் உட்கார்ந்ததும் என்னால் எழுத முடிவதில்லை. என்னுடைய, படைப்பு மனத்தைத் தட்டி எழுப்பும் முயற்சியில் நான் சூடான தேநீரை மெதுவாக உறிஞ்சியபடி இறுதியாக எழுதி வைத்திருக்கும் பத்துப் பதினைந்து பக்கங்களைப் படிப்பேன். சில சமயங்களில் வேறு பத்திரிகைகளையோ, செய்தித்தாள்களையோ கூட படிப்பது உண்டு. இது, என்னைச் சரியான மனநிலைக்குத் தயார்படுத்தும். இதயத்துக்குள்ளிருந்து எண்ணங்களும், கருத்துகளும் பெருகத் தொடங்கும் போது நான் எழுதத் தொடங்குவேன். அந்த ஓட்டம் தானாக நிற்கும் வரையிலும் எழுதிக் கொண்டே இருப்பேன். என்னுடைய நாவலின் இறுதிப் பகுதியை எழுதும்போது விடியற்காலை நான்கு மணி வரையிலும் கூட நான் எழுதியது உண்டு. நடுநடுவே கண்களை மூடியபடி நான் எழுதியவற்றை மனதிற்குள் காட்சிகளாக ஓட்டியபடி சாய்வு நாற்காலியில் ஆடியவாறு சற்று நேரம் உட்கார்ந்து இருப்பேன். இது தவிர, ஹெமிங்வேயைப்போல எழுதுகிற வேலை முடிகிறவரை பலமணி நேரங்கள் நின்று கொண்டே எழுதுவது போன்ற வினோதமான பழக்கவழக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை.

1974-ல் மழை, வசந்தம், கோடை என்ற ஓரிய வாசகர்கள் மனதை ஈர்த்த நாவலைக் கொடுத்த நீங்கள் ஹஷிலாபத்மா’ நாவலில் புகழ்பெற்ற ஹகோனாரக்’ கோயிலின் தொன்மங்கள் சார்ந்த நாவலைப் படைத்தீர்கள். ஒரிய கிராமப்புற மக்களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துப் பாடுபட்டு, மறக்கப்பட்டு விட்டவர்களான கதாமாந்தர்களை ஒரிய இலக்கியத்தின் மாபெரும் சமகால நாவலாக கருதப்படும் ஹஉத்தர்மார்க்’ நாவலில் படைத்தீர்கள். அதையடுத்து நீங்கள் எழுதிய அகல்யாவின் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘மஹாமோகா’வும் ‘யக்ஞசேனி”யும் இராமயணத்தையும் மகாபாரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அதற்குப்பிறகு 1999-ல் ஓரிஸாவை உருக்குலைத்த ஹசூப்பர் சைக்ளோன்’ எனப்பட்ட பெரும்புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உங்களின் சமீபத்திய நாவலான ஹமக்னமாட்டி’யில் படைத்திருக்கிறீர்கள். இப்படி வேறுபட்ட களங்கள் எவ்வாறு உங்கள் படைப்பு மனதை தூண்டி உருவம் கொள்ளுகின்றன?

ஒரு கருத்து அல்லது காட்சி என்னுடைய படைப்பின் துவக்க விதையாக ஆகிறது. படைப்பு எனும் நிகழ்வில், கணநேர பொறுப்பையும் சுகத்தையும் மட்டுமே அனுபவிக்கும் ஒரு தந்தையாக எந்தப் படைப்பாளியும் இருக்க முடியாது. படைப்பாளி என்பவன் கருவை ஏற்று சுமந்து அதற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து பல்வேறு நிலைகளில் அதை வளர்த்தெடுக்கும் தாயைப்போன்றவன். படைப்பாக்கப்பணி தனிமையையும் அந்தரங்கத்தையும் கோரி நிற்பது.

என்னுடைய படைப்புகள் எழுதப்பட்டதும் நான் அவற்றை உடனே அச்சுக்கு தந்துவிடுவதில்லை. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பிரதி எடுப்பது என்னுடைய வழக்கம். ஹஆதி பூமி’ நாவலை ஐந்து பிரதிகள் எடுத்தபின்னரே அது முழுமைபெற்றதாக நான் உணர்ந்தேன்.

எல்லாப் படைப்புகளும் ஒரே மாதிரியான அனுபவத்தை தருவதில்லை. கதைக்கான வித்து மனதிற்குள் ஊறுகின்ற காலமும் வேறுபடுகிறது. சில கதைகள் ஓரிரு மாதங்களுக்குள்ளே உருப்பெற்று விடுகின்றன. மற்றும் சில பல மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. கடந்த சில வருடங்களில் நான் எழுதிய பல சிறுகதைகள் முப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய ஹநனவிலி’ மனதில் பதிவாகியிருந்த விஷயங்களை கருப்பொருளாகக் கொண்டவை.

இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும். என்னுடைய கதைகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு பிறகு அவை தொகுதிகளாக ஆக்கப்படும் போது நான் மீண்டும் ஒருமுறை அவற்றில் மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்வது உண்டு. ஆனால், அதே தொகுதி மறுபதிப்பு காணும் போது நான் பிரதியில் கைவைப்பதில்லை.

படைப்பாளனுக்கும், பாத்திரங்களுக்குமான உறவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பாத்திரமும் எழுத்தாளரும் வெவ்வேறு நபர்களாக இருக்கும்வரை இருவருக்குமிடையிலான உரையாடல் தொடர்கிறது. எனக்குள் இருக்கும் எழுத்தாளர் பாத்திரத்துடனேயே அந்தக் கட்டத்தில் வாழ்கிறவர் ஆகிறார். பிறகு, ஒரு கட்டடத்தில் எழுத்தாளரும், பாத்திரமும் ஒன்றாக இணையும்போது நான் பாத்திரமாகவே வாழ்கிறேன். பாத்திரமே தன்னுடைய சொந்தக்கதையை சொல்லிக்கொண்டு போகிறது. தன் கதையைத் தானே எழுதிக்கொள்கிறது. பாத்திரங்களோடு வாழ்வது என்ற மனநிலைக்கும் பாத்திரங்களாகவே வாழ்வது என்ற மனநிலைக்கும் இருக்கின்ற வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பாத்திரங்களுக்குள் வாழ்வது என்ற நிலையில் எழுத்தாளன் அந்த பாத்திரத்தின் ஆன்மாவுக்குள்ளே குடிபுகுகிறான். ஆகவே, படைப்பின் பாதையில் எனக்குள் இருக்கும் எழுத்தாளன் பலமுறை பிறந்து பலமுறை இறக்கிறான். என்னைப் பொறுத்த அளவில் இறுதியில் எழுத்து என்பது சுயத்தின் அவதாரம். அது கடைசியில் எல்லையற்றதான பிரபஞ்ச ஆத்மாவில் கலப்பதாகும்.

நாவல் முடிந்த பிறகும்கூட இந்தப் பாத்திரங்கள் படைப்பாளனின் மனதை விட்டு முற்றாக வெளியேறிப் போய்விடுவதில்லை. எங்கே வாழ்ந்தாலும் பெற்றோரை மறக்காத குழந்தைகளாக இருந்து எழுத்தாளனின் ரத்தத்திலும், ஆன்மாவிலும் தங்கியிருக்கும் விலைமதிப்பற்ற பகுதியாக தங்கிப்போய் விடுகிறார்கள். இலக்கிய உலகில் இடம்பிடிக்க அந்தப் பாத்திரங்கள் எடுத்தக்கொள்ளும் முயற்சியை காண்பது ஒரு இனிய அனுபவம். குழந்தைகள் வளர்வதைப்பார்த்து மகிழ்கிற ஒரு தாயின் மனோநிலை அது.

நீங்கள் ராமாயணத்திலிருந்து அகல்யையின் கதையை எடுத்துக்கொண்டு அவளை இந்திரன் ஏமாற்றிப் புணர்ந்ததாக கூறப்படும் கதைக்குப் பதிலாக அவளே அவனை விரும்பி ஏற்றுக்கொண்டதாக படைத்திருக்கிறீர்கள். தான் மகரிஷியாகவும், தேவரிஷியாகவும் உயரவேண்டும் என்பதற்காக தன்னை உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவராக கௌதமர் இருந்ததனால் அவருடைய மனைவியான அகல்யையின் பாலியல் விழைவு இந்திரனின் காதலில் முற்றுப்பெற்றதாக காட்டியிருக்கிறீர்கள். இத்தகைய படைப்பைச் செய்ய உங்களைத் தூண்டியது எது?

இந்திய மரபில், பஞ்ச கன்னிகைகளாகச் சொல்லப்படும் அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ஆகியோரின் பெயரைக் காலை வேளையில் நினைவு கூர்வதே பாவங்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.

‘அகல்யா, திரௌபதி, தாரா, குந்தி, மண்டோதரி ததா பஞ்சகன்யா: ஸ்மரனோ நித்ய மகாபாதக நாசனம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கற்பு, கற்பு பிரழ்தல், அது சார்ந்த பாவம் புண்ணியங்கள் ஆகியவை பற்றிய இந்திய மனத்தின் நம்பிக்கைகள் ஆகியவை என்னைச் சிந்திக்க வைத்தன. மேற்சொன்ன ஐந்து பெண்களில் நால்வர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டிருந்தவர்கள். இது முரணா என்று நான் யோசித்தேன். வேதம் புராணம் துவங்கி மானுடஇயல், சமூகவியல் வரை பலவற்றைப் படித்தேன்.

அகல்யை ஒரு சூக்குமமான விதத்தில் பிரம்மாவின் புதல்வியாகிறாள். கற்றவளும், அறிவுடையவளும், சிந்திப்பவளும், துணிவுடையவளுமான அகல்யை வேதகால நெறிகளின்படி விருந்தாளியாக வந்த இந்திரனுடன் மனம் ஒப்பிய உறவு கொண்டிருக்க வேண்டும் என்று எனக்குப் பட்டது. ஒரு காலத்தின் சூழலும், நியாயங்களும் இன்னொரு காலத்திற்கு ஏற்றப்படும் போது விளைந்த தவறினாலேயே அகல்யை கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு கூட காணத்தெரியாத பேதையாக, அபலையாக சித்தரித்துக் காட்டப்பட்டது. என்னுடைய அகல்யை, சபிக்கும் கௌதமரை நேர் நிறுத்தி, ‘நான் என்பது உடலா? இந்திரன் தீண்;டியதும் என் கற்பு அழிந்து விடுமா? உடல் என்பது நான் அல்லவென்றால், நான் என்பது ஆன்மாவா? அப்படியானால் அது களங்கப்படுத்த முடியாதது என்பதால் நான் கற்பிழந்தவள் இல்லையல்லவா? அப்படியானால், ஏன் இந்தக் கொடிய சாபம்?” என்று கேட்பவளாக இருக்கிறாள். என்னுடைய அந்த நாவலை நான், பாவம், குற்றத்திற்காக வருந்துதல், மாற்றம், முக்தி என்று நான்கு பாகங்களாக ஆக்கி, பாலியல் விழைவு மற்றும் உளவியல் சமூக எதார்த்தங்களை எதிர்கொள்கிற ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லியிருக்கிறேன்.

அப்படிப் பார்த்தால் உங்களுடைய ஹயக்ஞசேனி’க் கூட வீறு கொண்ட பெண்மையின் வெளிப்பாடு தானே?

என்னுடைய பார்வையில், உலக இலக்கியங்களில், உலக வாழ்க்கையில், திரௌபதிக்கு நிகரான ஒருத்தி இன்னும் தோன்றவில்லை. யாருடைய வாழ்விலும் நேராத பல சம்பவங்கள் அவளுடைய வாழ்வில் நேருகின்றன. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகள் அவளுக்கு நேருகின்றன. ஆனால், அவள் அவற்றை கம்பீரம் குறையாத துணிவோடும் அறிவோடும் எதிர்கொள்கிறாள். பாரதப்போரில் அவள் தன் தந்தையையும் தமயனையும் ஐந்து புதல்வர்களையும் இழக்கிறாள். அவற்றையெல்லாம் விட அவளைக் காயப்படுத்துவது அவளுடைய வாழ்வின் இறுதிக் கணத்தில் தருமத்தின் வடிவமாக கொண்டாடப்படும் அவளுடைய கணவன் யுதிஷ்டிரன் சொல்லும் வார்த்தை. மலைச்சரிவில் சரிந்து விழுகிற திரௌபதியை திரும்பிக்கூட பார்க்க வேண்டியது இல்லை என்று அவன் சொல்லுகிறான். தன் சகோதரர்கள் அனைவரும் பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறான். இந்த உச்சக்கட்டமான துயரம் அவளை வேதனைப்படுத்துகிறது.

இந்தக் கட்டத்தில் தான் என்னுடைய நாவல் துவங்குகிறது. தன்னுடைய முழங்கையை ஊன்றிக்கொண்டு அவள் தன் இதயத்தில் இருந்து பெருகும் இரத்தத்தினால் இமயத்தின் முகடுகளில் எழுதிய கதையாக, அவளுடைய மிகச் சிறந்த நண்பனான ஸ்ரீகிருஷ்ணனுக்கு சொல்லப்பட்ட தன் - வரலாறாக நான் இந்த நாவலைப் படைத்திருக்கிறேன். போருக்குக் காரணமானவள் பாஞ்சாலி என்கிற பழியை நீக்குகிறது என் நாவல். ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட அந்தப்பாத்திரம் இன்றுவரை சமூகத்தில் நிலவும் இரட்டை மதிப்பீட்டு முறையையும் பாலின வேறுபாடுகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் நவீன யுகப் பெண்ணான யக்ஞசேனையாக இப்படைப்பில் உருவெடுத்திருக்கிறாள்.

என்னுடைய ‘யஞ்னசேனி’ தனக்கு நேர்ந்த துன்பத்தில் உழல்பவள் அல்ல. பாலின, பூகோள வரையறைகளைக் கடந்து உலகம் முழுவதிலும் இருக்கும் மானிடர்களுக்காக சிந்திக்கிற நவீன மனம் கொண்டவள்.

என்னுடைய கதையை நான் இப்படி முடித்தேன். ‘கிருஷ்ணா! நான் இந்த பூத உடலோடு சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை. இந்த பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க விரும்புகிறேன். மோட்சம் அல்ல, மறுபிறவியே என்னுடைய இறுதி விருப்பம். என் மனதிற்கு மிக நெருக்கமானதும், நான் மிகவும் நேசிப்பதுமான இந்த பாரத நாட்டில், நான் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறேன். போரினால் அழிக்கப்பட்டு மனித மனங்களின் அற்ப வேறுபாடுகளினால் இந்திரபிரஸ்தம் என்றும் ஹஸ்தினாபுரம் என்றும் இரண்டு தலைநகரங்களுக்கு உட்பட்டதாக பிரிந்துகிடக்கும் இந்த பூமி ஒன்றாக இணைந்து ஆரிய வர்த்தமாக ஆகவேண்டும். அன்புக்குரிய கிருஷ்ணா! போர் வேண்டாம். உலகத்துக்கு அமைதி தான் வேண்டும். ‘ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி.”

நீங்கள் அமெரிக்கா, ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், சீனா, நைஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, பங்களாதேஷ், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, எகிப்து ஆகிய பல நாடுகளில் பயணம் செய்திருக்கிறீர்கள். அது குறித்த பயண இலக்கியங்களையும் படைத்திருக்கிறீர்கள். அது பற்றிய உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்?

நான் இதுவரை மேற்கொண்ட பயணங்களில் ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களை எட்டு பயணநூல்களாக ஆக்கியிருக்கிறேன். இந்த நூல்களில் நான் கண்டவற்றை அதே போல எழுத்தில் படைத்து காட்டியிருக்கிறேன். அங்கு நிலவும் மேன்மைகளை மட்டுமில்ல, வறுமையையும், மற்றும் துயரத்தையும் பற்றியும் சொல்லியிருக்கிறேன். முக்கியமாக ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கல்விமுறையைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அந்த நாடுகளில் வரலாறு, கலை, கலாசாரம் ஆகியவை பற்றி எல்லாம் குறிப்பிட்டதைப் போலவே, நான் சந்தித்த தனி மனிதர்களோடு பழகி அவர்களுடைய உளவியல், வாழ்வியல் நிலைகளையும் என்னுடைய நூல்களில் கூறியிருக்கிறேன். என்னுடைய பயண நூல்கள் மேலை நாடுகளின் செல்வ செழிப்பை அண்ணாந்து பார்த்து நான் வியப்படைந்து போகாததே விமர்சகர்களின் பாராட்டை எனக்கு பெற்றுத்தந்திருக்கிறது. எத்தனை நாடுகளில் பயணம் செய்தாலும் அவை செல்வ வளத்தில், இயற்கை வளத்தில் எவ்வளவுதான் மேன்மையுற்று இருந்தாலும் இந்திய பிரஜை என்கிற என்னுடைய பெருமித உணர்வுக்கு அவை எப்போதும் ஈடாகவே ஆகாது.

நீங்கள் சிறுகதைகளையும் படைத்திருக்கிறீர்கள் கவிதை, நாவல், பயணநூல் ஆகியவற்றையும் படைத்திருக்கிறீர்கள். ஒரு படைப்பாளி என்கிற முறையில் சிறுகதை, நாவல் ஆகியவற்றைப்பற்றி உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்?

நான் அடிப்படையில் ஒரு நாவலாசிரியை. சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். என்னுடைய 300 சிறுகதைகளும் 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

எனக்கு கருத்துக்களை விரிவாக சொல்ல வேண்டிய தேவை இருந்தது என்று நான் உணர்ந்தபோது கவிதையில் இருந்து சிறுகதைக்கு மாறினேன். வாழ்க்கை மிக பரந்தது. அது பற்றிய சித்திரங்களைச் சரியாகத் தீட்ட எனக்கு அதைக்காட்டிலும் பெரிய கேன்வாஸ் தேவைப்பட்டது. நான் நாவலுக்கு மாறினேன். இன்னமும் அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். புவனேஸ்வர் வானொலி நிலையம் என்னைப் பாடலாசிரியர் என்று தான் பதிவு செய்து வைத்திருக்கிறது. இலக்கியக் கட்டுரைகளும், இலக்கிய விமர்சனங்களும் எழுதி இருக்கிறேன். கல்வி உளவியல், சமூகவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். எனினும், நான் ஒரு புனை கதையாளர் என்று (கதாகார்) அறியப்படுவதையே விரும்புகிறேன். சிறுகதை நாவல் ஆகிய படைப்புகள் எனக்கு ஒரே விதமான மகிழ்ச்சியையும் நிறைவையும் தான் கொடுக்கின்றன. சிறுகதைகளை எழுதுவது என்பது நாவல்களை எழுதுவதற்கான முதல்படி என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். சுருக்கிச் சொல்லப்படுவதனால் ஒரு நாவல் சிறுகதைகயாகிவிடாது. அதேபோல ஒரு சிறுகதை ஐந்நூறு பக்கங்களுக்கு விரித்து எழுதப்பட்டாலும் அது ஒரு சிறுகதையாகத்தான் இருக்கும். நாவலின் கூறுகளை அதில் காணமுடியாது. எனக்குத் தெரிந்து சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்ற புகழ்பெற்றிருந்த ஆசிரியர்கள் சிலர் தங்களுடைய வயதான காலத்தில் நாவல்களை எழுத முயன்று முடியாமல் போய் தங்கள் முயற்சியை கைவிட்டிருக்கிறார்கள்.

உங்களுடைய படைப்புகள் ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, அஸ்ஸாமி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி, வங்காளி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புகளைப் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்?

என்னுடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவதை நான் ஊக்கப்படுத்துகிறேன். மொழிபெயர்ப்பாளர் மூலப்பிரதிக்கு நூறுசதவீதம் விசுவாசமாக இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதில்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பாகவே மொழிபெயர்க்க முயல்கிறார்கள். மூலப்பிரதிக்கு அவர்கள் அவர்கள் நியாயத்தைச் செய்தால் போதுமானது என்றுதான் நான் நினைக்கிறேன். மொழிபெயர்ப்புகளும் படைப்புகள்தான் என்றே நான் நினைக்கிறேன்.

உங்களுடைய படைப்புகள், தொலைக்காட்சி படைப்புகளாகவோ அல்லது திரைப்படங்களாகவோ வெளிவந்திருக்கின்றனவா? அந்தப் படைப்புகள் உங்களுக்கு நிறைவைத் தந்திருக்கின்றனவா?

என்னுடைய ‘அபரிச்சிதா” என்ற நாவல் திரைப்படமாகி 1980-ல் ஒரிசா அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருதைப்பெற்றது. ஆனால், எனக்கு அந்த ஆக்கம் நிறைவைத் தரவில்லை. கதையின் முடிவில் எல்லா வணிகப்படங்களையும்போல கதாநாயகன், கதாநாயகியை மணப்பதாக இயக்குனர், கதையை மாற்றியமைத்துவிட்டார். என்னுடைய வாசகர்கள் பலர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். எனக்கும் அது பிடிக்கவில்லை. என்னுடைய கதைகளில் சில தொலைக்காட்சி தேசிய ஒளிபரப்பிலும், டெல்லி ஒளிப்பரப்பிலும், ஒரிஸா தொலைக்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இதுவரை தொலைக்காட்சி வடிவம் கொண்ட என்னுடைய படைப்புகளில், இயக்குனர் மான்.யூ.சிங். தயாரித்த ‘ஏக் கஹானி’ (ஒரு கதை) தொடரில் வந்த ‘அப்யக்தா’ (சொல்லப்படாதது) என்னும் படைப்பு மட்டும்தான் எனக்கு ஓரளவு நிறைவு தந்தது.

தற்போது நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

1995-நவம்பரில் நான் எழுத ஆரம்பித்த என்னுடைய சுயசரிதையை நிதானமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக நான் எழுதிய ‘மக்னமாட்டி’ நாவலை 2004-இறுதியில்தான் முடித்தேன். 1999-ல் ஒரிசாவைச் சின்னாபின்னமாக்கிய புயல் எவ்வாறு கிராமங்களை முற்றாக துடைத்தெறிந்தது என்பதையும் அது கரையோர மனித வாழ்க்கையை எப்படிப் பாதித்தது என்பதைச் சொல்லும் நாவல் இது. இந்த நாவலுக்காக நான் பல பயணங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டேன். நான் ஒரிஸாவின் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பயணம் செய்தேன். புயல் ஒரிஸாவின் முதுகெலும்பை முறித்துப்போட்ட அந்த அதிபயங்கரமான புயல் எராசமா, ஜகத்சிங்பூர், பாரதீப் ஏன் பாலாசோரிலிருந்து பாரதீப் வரையிலான கடற்கரைப்பகுதி முழுவதையுமே சீரழித்திருந்தது. அந்த மானுட நம்பிக்கைகளைப் பெயர்த்தெறிந்திருந்ததைக் கண்டேன். புயல் மையங்கொண்ட எராசாமாவின் அபயபூரை என் கதைக்களனாக்கிக் கொண்டேன். இறுதியில் மானுட உணர்வுகள் கடக்கமுடியாத அந்தத் துயரங்களை வென்று, சூறாவளிக்குத் தப்பியவர்கள் அற்ப பேதங்களை மறந்து ஒன்றாகிப் புது வாழ்வைத் துவங்குவதையும் நான் அதில் எழுதியிருக்கிறேன். வரலாற்றில் தேதிகளையும் வருடங்களையும் தவிர மற்றவை எல்லாம் பொய் என்கிறார்கள். நாவலிலும் தேதிகளையும் வருடங்களையும் தவிர மற்றவை எல்லாம் உண்மை. ‘மக்னாமாட்டி’ ஒரு நாவலாக இருந்தபோதிலும் அதில் தேதிகளும் வருடங்களும் மட்டுமல்லாமல் சம்பவங்களும் உண்மைதான். அதாவது உண்மை எனும் களத்தில் எனது கற்பனை விளைவித்த பயிரே அந்த நாவல். 2004-ஜூலையில் நான் அதை எழுதிமுடித்தேன். ஆயினும் அந்த துயர அனுபவங்களில் இருந்து விடுபடுவது எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

Pin It