சிகரம் செந்தில்நாதன் அவர்கள் வழக்குரைஞர் மட்டுமல்ல, சிறந்த இலக்கியவாதி. அவர் செயல்பட்ட மக்கள் எழுத்தாளர் சங்கம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களில் எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார். புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும், புதிய இலக்கியங்களின் ஆக்கத்திற்கும் அவர் தூண்டுகோலாகத் துணை நின்றார்.
அவர் 'சிகரம்' என்ற இலக்கிய இதழை நடத்தி வந்த பத்திரிகையாளர். தமது வாழ்க்கையில் மட்டுமல்ல, படைப்புகளிலும் அநீதிகளை எதிர்த்து உரிமைகளுக்காகத் துணிவுடன் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்டுரைகள், திறனாய்வுகள், சமய நூல்கள், புதினம் என்று பல துறைகளிலும் அவரது படைப்பாற்றலைக் காணலாம். அவர் இளமை முதலே வாசிக்கவும், எழுதவும் தொடங்கி விட்டார்.
அவரது நூல்களில் ஒன்றுதான் 'நீதிமன்றமும் நானும்' என்பதாகும். அவர் எடுத்துக் கொண்ட சில வழக்குகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறார். அதற்கு முன் நீதிமன்றம், நீதிபதிகள், வழக்கறிஞர் அவர்களுடைய சமுதாயக் கடமைகளைப் பற்றியும் கூறுகிறார்.
சமுதாயத்தோடு மிக நெருக்கமாக இருப்பவர்கள் வழக்கறிஞர்கள்தான். இவர்கள் நீதிபதியாக மாறும்போது, சுய கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன. என்றாலும் சமுதாயத்திலிருந்து தங்களை முழுவதும் துண்டித்துக் கொண்டு அவர்கள் இருக்க முடியாது. எத்தொழில் சார்ந்தவர்களையும் விட நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் சமூகக் கடமை உண்டு என்று ஆசிரியர் நினைவு படுத்துகிறார்.
"சித்தாந்த சைவத்தில் உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு பற்றிப் பேசும் போது, இறைவன் உயிர்களில் ஒன்றாகவும், வேறாகவும், உடனாகவும் இருக்கிறான் என்பார்கள். நீதிபதிகளும் இறைவன் போல்தான். இவர்கள் ஒன்றாகவும், வேறாகவும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் உடனாகவும் இருந்து இயக்க வேண்டும்...'' என்று முன்னுரையில் (ஒரு சொல்) கூறுகிறார்.
நீதியரசர்களுக்கும், இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகிறார். வேதநாயகம் பிள்ளை தமிழ்நாட்டில் முதல் முன்சீப்பாகத் தேர்வு செய்யப்பட்ட இந்தியர். இவரே தமிழில் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' எழுதியவர்.
"இந்திய சமூகத்தில் முதலில் விழிப்புணர்வு பெற்றவர்கள் வழக்கறிஞர்கள்தான். இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறே இதற்குச் சான்றாகும். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அனைவரும் வழக்கறிஞர் தொழிலைச் சார்ந்தவர்களே. வழக்கறிஞர்களுக்கு மிகப் பெரிய சமூகக் கடமை இருக்கிறது. மக்களாட்சியையும், மனிதத்தையும் காப்பது இவர்களின் ஒப்பற்ற பணியாகும்'' என்கிறார் ஆசிரியர் சிகரம் செந்தில்நாதன்.
நீதியரசர் என்.கிருஷ்ணசாமி ரெட்டியார், நீதியரசர் சத்தியதேவ் ஆகிய இருவரைப் பற்றிய சிறப்புகளை முதலில் குறிப்பிடுகிறார். நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் காங்கிரஸ் மீதும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மீதும் பற்றுள்ளவர். அவருடைய நீதிமன்றம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். உரத்த குரலில் பேசுவார். அடிக்கடி தமிழில் பேசுவார். கறாராகச் சட்டத்தைப் பார்க்காமல், சமூகச் சூழலை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வார் என்று ஆசிரியர் அழகாக விவரிக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் போற்றுதலுக்கு உரியவராக நீதிபதி சத்தியதேவைக் குறிப்பிடக் காரணம் என்ன? நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அன்று மாலையே அரசு கொடுத்த காரை திரும்ப ஒப்படைத்துவிட்டு, வீட்டிலிருந்து தன் சொந்தக் காரை வரவழைத்து தன் வீட்டிற்குச் சென்றவர். உடனே அரசு பங்களாவையும் காலி செய்து கொடுத்தவர் என்று அவரைப் பாராட்டிக் கூறுகிறார்.
திரைப்பட உலகில் இயக்குநர் சிகரம் என்று போற்றப்பட்ட கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' என்ற படம் தொடர்பான வழக்கினை ஆசிரியர் நடத்தினார். இந்தப் படத்தின் கதை தன் கதை என்று எழுத்தாளர் என்.ஆர்.தாசன் உரிமை கொண்டாடினார். என்.ஆர்.தாசன் 'காலக்கல்லறை' என்ற சிறுகதை எழுதினார். அக்கதை 1961இல் 'விடிவெள்ளி' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.
அதே சிறுகதையை எட்டு ஆண்டுகள் கழித்து நாடகமாக்கி 'வெறும் மண்' என்ற பெயரில் 'கண்ணதாசன்' இதழில் வெளியானது. இந்தக் கதையைத் திருடியே கே.பாலசந்தர் 'அபூர்வ ராகங்கள்' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இளம் வழக்கறிஞரான நம் ஆசிரியருக்கு வாய்ப்பாக வந்து கிடைத்தது.
இந்த வழக்கில் இயக்குநர் கே.பாலசந்தர் விரிவாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். 'உச்சநீதிமன்ற வழிகாட்டும் தீர்ப்பின் அடிப்படையில் எழுத்தாளர் என்.ஆர்.தாசனின் காப்புரிமை பாலசந்தரால் மீறப்பட்டிருக்கிறது' என்று தீர்ப்பு கிடைத்தது. இவ்வாறு, 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் என்.ஆர்.தாசனின் 'வெறும் மண்' நாடகத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டதுதான் என்று கூறிய நீதிமன்றம், இழப்பீடாகக் கோரியிருந்த தொகையைப் பொருத்தவரை அக்கோரிக்கை நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.
இதேபோல டி.ராஜேந்தர் திரைக்கதை வசனம் எழுதி, இசையமைத்து இயக்கிய திரைப்படம் 'ரயில் பயணங்களில்' என்பதாகும். இந்தப் படம் 28.5.1981இல் வெளியானது. 'ஒருதலை ராகம்' வெற்றிக்குப் பிறகு மிகவும் பேசப்பட்ட இயக்குநர் இவர். அப்படம் வெளியான பிறகு, அப்படத்தைப் பார்த்துவிட்டு அது என் நாடகமான 'பத்து நாள் பந்த'த்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட படம் என்று மணியம் ராஜம் என்ற நாடகாசிரியர் ஆசிரியரிடம் வருகிறார்.
இந்த வழக்கு அவர்களுக்கு வெற்றியாக அமையவில்லை. இந்த நாடகம் புத்தகமாக வந்த நாடகம் அல்ல. மேடையில் நடிக்கப்பட்ட நாடகம். மேடை நாடகத்தை டி.ராஜேந்தர் பார்க்கவில்லை. எழுத்து வடிவத்தை அவரது உதவியாளர் மூலம் பார்த்தார் என்பதே வழக்கு.
அடுத்ததாக புதுமைப்பித்தன் கடிதங்களுக்கான வழக்கு. கவிஞர் இளையபாரதி புதுமைப்பித்தனின் பரம ரசிகர். அவர் புதுமைப்பித்தனைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்க விரும்பினார். அதனால் புதுமைப்பித்தன் குடும்பத்தோடு நெருக்கமாய் நட்புடன் பழகினார். அப்போது புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவிற்கு எழுதிய கடிதங்கள் அவரிடம் இருப்பது தெரிந்தது.
ஆவணப்படம் எடுப்பதற்கு முன், கடிதங்களைத் தொகுத்து வெளியிடலாம் என்று இளையபாரதி நினைத்தார். 'கண்மணி கமலாவுக்கு' என்ற பெயரில் நூலாக வெளியிட, புதுமைப்பித்தனின் மனைவியும் ஒப்புதல் அளித்தார். 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. மறுபடியும் 2000இல் இரண்டாம் பதிப்பும் வெளியானது. இந்நிலையில் 'காலச்சுவடு' பதிப்பகம் தன்னை திரைமறைவில் நிறுத்திக் கொண்டு, புதுமைப்பித்தன் மகள் தினகரி சொக்கலிங்கத்தை முன்நிறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இறுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 28.8.2021இல் இரு தரப்பார் உடன்படிக்கை அடிப்படையில் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனை ஆசிரியர் விரிவாக விவரித்துள்ளார். புதுமைப்பித்தன் படைப்புகள் நாட்டுடைமையாக்க நடந்த முயற்சிகளை எல்லாம் விளக்கியுள்ளார்.
சமுத்திரமும், திலகவதியும் நாடறிந்த எழுத்தாளர்கள். இந்த இரண்டு பேரின் மோதல் நீதிமன்றம் சென்றது. 'போலீஸ் செய்தி' என்ற வாரப் பத்திரிகையில் 6.3.1993 இதழிலும், தொடர்ந்து சில இதழ்களிலும் உயர் காவல் அதிகாரியாகப் பணியாற்றிய திலகவதியைப் பற்றி எழுதி வந்தார்.
தன் புகழுக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டு விட்டதாக, திலகவதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் திலகவதியை சமுத்திரம் அவதூறு செய்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் மேல்முறையீடு செய்தார். இறுதி விசாரணை முடிவதற்குள் சமுத்திரம் விபத்தில் காலமானார்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' என்ற புதினத்துக்கு எதிராக சாதி மத அமைப்புகள் போராடி, அவரது கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் 12.1.2015 அன்று ஓர் ஒப்பந்தத்தைப் போட்டன. இந்தக் கட்டாய ஒப்பந்தம் பற்றியும், பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைக் கண்டு எண்ணற்ற எழுத்தாளர்களைப் போலவே ஆசிரியர் செந்தில்நாதனும் அதிர்ந்து போனார். பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு 5.7.2016இல் தீர்ப்பளித்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அமைதிப் பேச்சின் முடிவு ரத்து செய்யப்பட்டது.
மறைமலை அடிகளாரின் இயக்கத்தை இன்று தமிழ்நாட்டில் தொடர்பவர் யார்? இந்தக் கேள்விக்கு விடையாய் வந்து எதிரே நிற்பவர் சத்தியவேல் முருகனார் தான். பிராமணியப் பிடியில் சிக்கி முடங்கும் தமிழ்ச் சைவத்தை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்; போராட்டக் களத்தில் நிற்கிறார் என்று ஆசிரியர் செந்தில்நாதன் கூறுகிறார்.
அவருக்காக பல வழக்குகளை ஏற்று நடத்தியுள்ளார். சத்தியவேல் முருகனாரை் குறி வைக்கும் நோக்கம் அவர் தமிழ் வழிபாட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதால்தான். அதற்காகவே, ஆசிரியரும் அவரோடு நிற்கிறார்.
நீதிமன்றத்தைப் பற்றிய அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகளை, 'முன்னோட்டமாய் சில சொற்கள்' என்னும் தலைப்பில் அழகாக நிறைவாக எடுத்துத் தருகிறார். சென்னை உயர்நீதிமன்றம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? 1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு தலைமை நீதிபதி மற்றும் 5 நீதிபதிகளுடன் உயர்நீதிமன்றம் செயல்பட ஆரம்பித்தது. நீதிபதிகள் எல்லாம் வெள்ளைக்காரர்கள்; இங்கிலாந்தில் படித்து இங்கே வந்தவர்கள்.
"என்னுடைய நீதிமன்ற அனுபவங்களைத் தொகுத்து எழுத வேண்டும் என்று பல நண்பர்கள் கேட்டார்கள். அந்தக் கோரிக்கையின் விளைவுதான் இந்த நூல். இதை முதல் தொகுப்பாகக் கொள்ள வேண்டும்'' என்று ஆசிரியர் கூறுகிறார்.
கலை இலக்கியம் சார்ந்த வழக்குகளே இதில் மிகுதியும் பேசப்பட்டுள்ளன. மறைந்த நீதிபதிகளைப் பற்றி மட்டுமே அவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உயிரோடு இருப்பவர்களைப் பற்றி எழுதுவது சரியாக இருக்காது என்று அவர் எண்ணுகிறார். என்றாலும் அவரது இதர அனுபவங்களைத் தொகுத்து எழுதுவது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
நீதிமன்றமும் நானும் | சிகரம் செந்தில்நாதன் | வெளியீடு: சந்தியா பதிப்பகம் | விலை ரூ.110
- உதயை மு.வீரையன்