kannappa nayanarபெரிய புராணம் என்னும் பழந்தமிழ் நூலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் கதையினை நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் கட்டவிழ்க்க சில காரணங்கள் இல்லாமல் இல்லை.

1

கண்ணப்ப நாயனாராகப் போற்றப்படும் திண்ணனார் எப்போது தோன்றியவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கண்ணப்ப நாயனார் தொடர்பான செய்திகள் கதையாகவே வாய்வழியாகப் பயின்று வந்திருக்கின்றன.

சுந்தரர் எழுதிய திருத்தொண்டத்தொகை தொகை நூலெனவும், பெரிய புராணத்தை விரிநூலெனவும் சைவர்கள் சொல்வார்கள். (திருத்தொண்டத்தொகையில் கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)

எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினைச் சேர்ந்த மாணிக்க வாசகரும் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்' என்று நெகிழ்கிறார். தேவாரத்தில் கண்ணப்பனார் குறித்து ஒரு குறிப்பு வருகிறது. இதைக் கொண்டு தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. அதாவது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னால்...

காலத்தால் முற்பட்ட காரைக்கால் அம்மையாரின் பாடலில் வல்வேடனான வடிவு என்பது கண்ணப்பன் தொடர்பான குறிப்பே என்று கொள்வாரும் உள்ளனர். இதையொட்டி காரைக்காலம்மைக்கு முந்தியவரெனில், காலத்தால் முற்பட்டவரான கண்ணப்பனையல்லவா திருத்தொண்டத் தொகையில் முதன்மையாகச் சொல்லியிருக்க வேண்டும்? காரைக்காலம்மையாருக்குப் பிந்தியவர்தான் என வாதிட்டால் காரைக்காலம்மையாரை முதலில் சொல்லி இரண்டாமவராக அல்லவா கண்ணப்பரைச் சொல்லியிருக்க வேண்டும்? பத்தாமிடத்தில் கண்ணப்பர், இருபத்தைந்தாவது இடத்தில் காரைக்காலம்மையார். முதலிடத்தில் தில்லைவாழ் அந்தணர் புராணம்!

சில நூற்றாண்டுகள் கடந்து, ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஒருவரின் வாழ்வைப் பற்றி நூல்களின் வழி அறிந்து இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் 12 ஆம் நூற்றாண்டில்தான் பெரிய புராணத்தை... இக்கதை குறித்து கேள்விப்பட்டவற்றைக் கொண்டே எழுதுகிறார் சேக்கிழார். அதுநாள் வரையிலும் நாட்டார் கதையாக தொடர்ந்து வந்திருக்கிறது.

இரண்டு பேருக்கிடையில் நடந்த உரையாடல்களிலேயே சிறிது நாள் கழித்து நினைவு கூரப்படுகையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட இதில் உள்ளது உள்ளவாறே இருக்கும் என நம்புதல் எதிர்பார்க்கக் கூடாதவொன்றே. சேக்கிழாரும் இப்புராணத்தைப் பற்றிக் கேட்டவரே ஒழிய கண்ணால் கண்டவரில்லை

இவை ஒருபுறமிருக்க, வேதத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத வேடரான கண்ணப்ப நாயனார் புராணம் எழுதுகிற சேக்கிழார், வேதவாய்மைக் காவலர் திருக்காளத்திக் கண்ணப்பர் திருநாடென்பர் என்று தொடங்குவது வைதீக அரசியலே.

2.

திருக்காளத்தி மலையின் வேட்டுவனான திண்ணன் வேட்டைக்குப் போகிறபோது, தன் நண்பன் நாணன் சொல்லிய ஒரு தெய்வத்தைக் காணப் போகின்றான். அக் காட்டின் மலைப் பகுதியில் அத்தெய்வச் சிலையைக் கண்டவன், பித்தேறி தன் கண்ணினை அப்பி கண்ணப்பன் என்னும் பெயர் பெற்றதாக அப்புராணம் கூறுகிறது.

முதலில் திண்ணன் வாழ்ந்த சூழலை அணுகுவோம். அவன் ஒரு வேடன். காட்டில் வேட்டுவர் தலைவனின் குடும்பத்தில் பிறந்து அக் குழுவின் நம்பிக்கைகள், வழக்கங்களைப் பின்பற்றி இருந்தவன். வேத முதலான எக் கல்வியும் இல்லாதவன். அவர்கள் வழமைகளின்படி தலைவனாகப் பொறுப்பேற்ற நாளன்று வேட்டைக்குக் கிளம்புகிறான். பன்றி ஒன்றினை விரட்டிச் செல்கின்றனர் திண்ணனும் காடனும் நாணனும்.

பன்றி வேட்டை முடிந்து களைத்த வேளையில் அனைத்துப் பகுதிகளையும் அறிந்த நாணன் அருகிலிருக்கும் சாமி குறித்துச் சொல்லவும், அதைக் காணச் செல்கிறார்கள். சாமிச் சிலை காட்டில் பொன்முகலி ஆற்றங்கரையில் ஒரு மலையில் இருக்கிறது. நாட்டார் வழக்காற்றியல் தெய்வங்களின் அடிப்படையான பண்பே இதுதான். அவை எங்கு வேண்டுமானாலும் இருக்கும். மேலும் சிலை இருந்ததா, வேறு ஏதேனும் கல் இருந்ததா? சிலை இருந்ததெனில் அச்சிலை யாரால் நிறுவப்பட்டது என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை. குடுமித்தேவர் சிலை இருக்கிறது. அவ்வளவுதான். கண்ணிலிருந்து குருதி வடிந்ததாகச் சொல்லப்படுவதில் இருந்து, அங்கு இருந்த குடுமித்தேவர் சிலை, கண், காது, மூக்கு வைத்த மனித தோற்றத்தோடு இருந்திருக்கிறது எனக் கருத இடமிருக்கிறது..

திண்ணன் பன்றியை வெட்டி அதன் கறியைச் சுட்டு கடித்துப் பார்த்து சுவையானவற்றை சிலை முன் வைக்கிறான். அதற்கு முன்பு அவன் பித்தேறியவனாக இருக்கிறான். இவற்றை எல்லாம் அப்புராணம் கூறுகிறது.

நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளில் இவ்வாறு பித்தேறுதலை மருள் வருதல் என்பார்கள். பித்தேறிய கண்ணப்பன் இங்கும் அங்கும் அலைகிறார். சிலையின் அருகில் நிற்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கிறார். கண்ணப்பன் என்னும் திண்ணன் இயல்பாய் இல்லை. இதை உணர்த்தும் பாடல் இதுதான்…

போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப்போவார்/காதலின் நோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்/நாதனே அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே / கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன் என்பார். (கண்ணப்பநாயனார் புராணம் 761)

திண்ணன் சாமியிறங்கி இருந்தான் என்றுதான் அவனது நண்பர்கள் கருதினர்.

இதனை

தேவுமால் கொண்டான் இந்தத் திண்ணன் மற்றிதனைத் தீர்க்கல்/ ஆவதொன்றறியோம் தேவராட்டியை நாகனோடு மேவிநாங்கொணர்ந்து தீர்க்கவேண்டும்…

என நாணன் சொல்வதாக அமைந்த பாடலடிகள் மூலமும் உறுதிப்படுத்தலாம்.

சிறுதெய்வ வழிபாடுகளில் என்னைக் கையெடுக்கவில்லை, கிடா வெட்டவில்லை என்று குறை சொல்லப்படுவதைப் போலவே,

இவர்தம்மைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே/ இவர்தமக்கமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை/இவர்தம்மைப் பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனியான்சால/இவர்தமக்கு இறைச்சிக் கொண்டிங்கு எய்திட வேண்டும் என்று. (கண்ணப்பநாயனார் புராணம் 760)

இப்பாடல் வரிகளில், யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும், பலி கொடுக்கவில்லை என்பதும் குறைகளாகக் கூறப்படுகின்றன.

மருள் வந்தவர்கள் இறங்கிய சாமியாகவே கருதப்படுவார்கள். சாமிக்குப் படைக்கும் யாவும் அவர்களுக்குப் படைக்கப்படும். தன் தலைப்பூவைச் சூட்டுதல், வெந்த பன்றிக்கறியை சுவைத்துவிட்டு சிலை முன் வைத்தல் முதலானவை அவர்கள் இயல்பாகச் செய்யக் கூடியவை. அதோடில்லாமல் யார் வேண்டுமானாலும் பூசித்தல் என்பதும் நாட்டார் வழக்காற்றியல் வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று.

இவ்வழிபாட்டு முறை தொன்றுதொட்டு அம்மக்களிடம் காணப்பட்ட ஒன்றுதான் என்பதற்கும் அப்புராணமே குறிப்புகளை வைத்திருக்கிறது.

குழந்தை பிறக்கவேண்டி நாகனும் அவனது மனைவியும் ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட்டோடும் ஆன அத் திங்கள் செல்ல முருகன் அருளால் திண்ணன் பிறக்கிறான். அவனது பிறப்பே நாட்டார் வழக்காற்றியல் வழிபாட்டோடு தொடர்பு கொண்டிருக்கிறது.

முதல் வேட்டைக்குப் போகையிலும் கூட நெடுங்கானில் கன்னிவேட்டை மகன் போகக் காடுபலி மகிழவூட்டித் தலைமரபின் வழிவந்த தேவராட்டிதனை அழைமின் என்று அழைத்து வரப்பட்ட தேவராட்டியிடம் காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடுபலி ஊட்டென்றான் நாகன். இப்படி நாட்டார் வழிபாடு அம்மக்களோடு தொடர்புடையதாகவே கூறப்பட்டு வந்துள்ளது.

நீர்த் தாகம் எடுத்த திண்ணனை நாணன் ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்கிறான். அருகிலிருக்கும் மலைக்குப் போகலாம் என்று திண்ணன் கேட்கும்போது நாணன்தான் சொல்கிறான், அங்குக் குடுமித் தேவர் இருப்பர் கும்பிடலாம் என்று. அம்மக்களுக்கு அங்கிருக்கும் தெய்வங்கள் தெரிந்திருந்ததற்கு இது சான்று. எதிர்பாராமல் கண்ணில் படவில்லை. அக்கோயில் பற்றித் தெரிந்த நாணன் அத் தெய்வம் பற்றிச் சொல்கிறான். பச்சிலை பூ ஈரம் இவற்றைப் பார்த்து இது யார் செய்தது என்று திண்ணன் கேட்கும்போதும் கூட, உன் அப்பாவுடன் வேட்டைக்கு வந்தபோது பார்ப்பான் ஒருவன் இலைப்பூச் சூட்டி படையல் போட்டதைப் பார்த்தேன் அவன்தான் செய்திருப்பான் என்று சொல்கிறான். இவற்றிலிருந்து அம்மக்களின் புழக்கம் அங்கு இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. அது அம்மக்களின் நிலம்.

3.

நாட்டார் தெய்வங்களில் சிலவற்றிற்கு பன்றி வெட்டுதல் இப்போதும் நடைமுறையில் உள்ள ஒன்றே, பன்றிகள் திரியும் மலைப் பகுதியில் அமைந்த அக்கோயிலுக்கு, அதுவும் வேடுவர்கள் வாழும் பகுதியில் அத் தெய்வத்திற்கு பன்றிப் படையல் போட்டுத்தான் இருப்பார்கள்.

கொல்லிமலை முதலான பகுதிகளில் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திலும் பன்றிக்கறி முதன்மையான மிக உயர்ந்த உணவாக இருக்கிறது.

இன்றளவும் ரத்தபலி கொள்ளும் சிறுதெய்வங்கள் ஊர்தோறும் இருக்கின்றன. இன்றிலிருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் பழங்குடிகளான அம்மக்களின் மத்தியில் இருந்த அத் தெய்வத்திற்குப் பன்றிப் படையல் மிக உயர்ந்த பலியாகும்.

அச்சிலை முன் சைவ உணவு படைக்கப் பட்டிருப்பதைக் கண்டு வெகுண்டெழுந்து, அவற்றைத் துடைத்து சுத்தம் செய்து தன் படையலை இடுகிறான் அவ் வேடன். இது அம்மக்களின் வழிபாட்டு முறையினையும் உரிமையுணர்வினையும் குறிக்கிறது.

அதேபோல் அவ்விடத்திற்கு நாணன், திண்ணன் ஆகிய வேடுவர்கள் இருவர், திண்ணனின் தந்தை முதலானோர் வருகின்றனர். ஒரே ஒரு வேற்றாளான அந்தணர் சிவகோச்சாரியார் (அவர் வந்து பூசித்துப் போவதைத் தவிர வேறெந்தத் தகவலும் அந்நூலில் இல்லை.) தவிர பெரும்பாலும் காட்டுவாசிகள் அங்கு அதிகம் வந்துள்ளனர் என்பது அப் புராணமே குறிப்பிடும் செய்தி.

அதிலும் சாமி பார்க்கும் மூதாட்டி ஒருத்தியும் கூட அவ்விடத்திற்கு வருகிறாள். இதெல்லாம் நாட்டார் தெய்வ வழிபாட்டின் பண்புகள்.

திண்ணன் செய்த வழிபாட்டைத் தீட்டெனக் கருதி அந்த வேதியர் சுத்தம் செய்கிறார். விதிப்படி பூஜை செய்கிறார். இவற்றுள் எவ்வழிபாடு முந்தியது, எது பிந்தியது?

கண்கள் தோண்டிக் கொண்ட அல்லது தோண்டப்பட்ட கதை குறித்து விட்டுவிட்டு இதற்குள் இருக்கும் அரசியலைக் கண்ணுறுவோம்.

4.

அயலாரான சிவகோசாரியார் பழங்குடிகளின் பகுதிக்குள் நுழைகிறார். ஆக திண்ணன் அங்கேயே இராப் பகலாக வில்லேந்தி நிற்பது எவரிடமிருந்து அப்பகுதியைப் பாதுகாப்பதற்காக? அயலாரான பார்ப்பனர் கண்ணப்பன் இல்லாத நேரத்தில் அங்கு வருவதும், மறைந்து நின்று பார்ப்பதும் இருவேறு பண்பாட்டு மோதல்களே. எப்படியோ இதில் அப்பகுதியின் வேடன் கண்ணிழந்து பாதிக்கப் படுகிறான் என்பதிலிருந்து நிலத்தின் மக்கள் மீதான வன்முறை வெட்ட வெளிச்சமாகிறது..

இப்படித்தான் பன்றிப் படையல் வாங்கிய குடுமித்தேவரென்னும் சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில் பெருந்தெய்வக் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது. இன்றைய காமாட்சி அய்யனார் போல் அன்றைக்கு அந்தச் சாமி. காளத்திமலையின் அப்பனான அத் தெய்வம் அம்மக்களிடமிருந்து தூரம் போனதும் தூரப் போக்கப்பட்டதும்தான் விளிம்புநிலைவாதப் பார்வை..

திண்ணன் பூஜை செய்வதும், சிவகோசாரியார் பூஜை செய்ததும் என இரு பூசைகள் அங்கு குறிப்பிடப்படுகின்றன. ஒருவர் செய்வது நாட்டார் வழக்காற்றியல் ரத்தபலி படையல். இன்னொருவர் செய்வது வேத முறைப்படியிலான பூசை. இருவருமே தன்னுடைய பூசைதான் சிறந்தது என்று கருதுகின்றனர். இந்த இருவேறு பண்பாட்டு உரசல்கள் நிகழ்ந்து அதில் அதிகாரம் மிக்க வலியதே நிலைக்கிறது. வைதீக சிந்தனைக் கோட்பாடு அப்பகுதியில் கால்கொண்டு எளிய மனிதர்களை அவர்களின் வாழ்விலிருந்து அயன்மைப் படுத்தி வைதிக நெறிமாற்றும் போக்கை இப்புராணம் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. அக்காட்டின் பாமர மக்களுடைய பண்பாட்டு ஒழிப்பைத்தான் இப்புராணம் வெம்மை மாறாமல் தன்னுள் கொண்டிருக்கிறது.

காளத்தி மலையின் சிறுதெய்வத்திற்குப் பன்றிப் படையல் ஒழிக்கப்பட்டு பெருந்தெய்வமாக மாற்றம் பெற்ற குறிப்பே இதனுள் மறைந்து கிடக்கிறது. அதெல்லாம் இல்லை என்று மறுப்பவர்கள் எனில் ஒரு கேள்வி.. அந்நூல் சொல்வதுபோல் பார்த்தால் கண்ணப்பனின் பூசையே அந்த இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம் என்றும் சிவகோசாரியார் கனவில் இறைவனே சொல்லுவதாக இருக்கும்போது இறைவனுக்குப் பிடித்த பூசைதானே அங்கு தொடர்ந்திருக்க வேண்டும். எனில் இன்றைக்கு அக்கோயிலில் இறைவனுக்கு பன்றிக்கறி படையல் இடுவதுதானே நியாயம்? நமக்கேன் இந்த வம்பெல்லாம்...? மேன்மை கொல் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!

- பொ.முத்துவேல்

Pin It